பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, July 29, 2007

பாரதிராஜா பேட்டி

சினிமா டைரக்டர் பாரதிராஜா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். படம் ஏன் காலதாமதம், அரசியல், இளையாராஜா-வைரமுத்து கூட்டணி, நானாபடேகருடன் மோதல்....

கேள்வி:- நீங்கள் டைரக்டு செய்து வரும் `பொம்மலாட்டம்' படம் 2 வருடங்களாக தயாரிப்பில் இருக்கிறதே. இந்த காலதாமதத்துக்கு காரணம் என்ன?

பதில்:- இரண்டு வருடங்கள் அல்ல. ஒன்றரை வருடங்கள்தான் ஆகிறது. இந்த படத்தை தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் டைரக்டு செய்வதுதான் காலதாமதத்துக்கு முதல் காரணம். முதலில் இந்த படத்துக்காக இந்தியில் நல்ல நடிகரை தேடினேன். நானா படேகர் `கால்ஷீட்' கிடைப்பதற்கு காலதாமதமானது. அடுத்ததாக மழை ஒரு காரணம். அடுத்து என் மகன் திருமணம் வந்தது. நுணுக்கி நுணுக்கி படம் செய்ததால், இன்னும் காலதாமதம் ஆனது. இப்போது படம் தயாராகி விட்டது. ஆகஸ்டு மாதம் படம் திரைக்கு வரும். இது, சர்வதேச தரம் வாய்ந்த படமாக இருக்கும்.கேள்வி:- இந்த படத்தின் படப்பிடிப்பின்போது உங்களுக்கும், நானாபடேகருக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டதே, உண்மையா?

பதில்:- அவை எனக்கு ஏற்பட்ட வீர தழும்புகள். சரியான ஆளுடன்தான் நான் மோதியிருக்கிறேன். நானாபடேகர், ஒரு புத்திசாலி. அற்புதமான கலைஞன். இரண்டு கத்திகள் ஒரே உறையில் இருக்கக்கூடாது அல்லவா? அதுதான் உரசலுக்கு காரணம். உரசி உரசி இரண்டு பேருமே கூர்மையாகி விட்டோம். இது, ஒரு ஆரோக்கியமான போர்தான். இந்த போரில், என்னிடம் இருந்து பல விஷயங்களை அவரும், அவரிடம் இருந்து சில விஷயங்களை நானும் கற்றுக்கொண்டோம். நானா படேகர், நடிப்பதே தெரியாமல் நடிக்கிற நடிகர். அவர் இந்த படத்தில் தமிழ் பேசி நடித்திருப்பது, ஒரு சிறப்பு.


கேள்வி:- `பொம்மலாட்டம்,' ஒரு சஸ்பென்ஸ்-திகில் படமா?

பதில்:- அது, சஸ்பென்ஸ்.

கேள்வி:- இந்த படம் சர்வதேச தரத்துடன் தயாராகி இருப்பதாக கூறுகிறீர்கள். அப்படியானால், ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்படுமா?

பதில்:- சர்வதேச தரம் வாய்ந்த படம்தான். அதனால் சர்வதேச விருதுகளுக்கு அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்படும்.

கேள்வி:- நீங்கள் எடுத்த அளவுக்கு, இப்போது யாராவது மிக யதார்த்தமாக கிராமிய படங்கள் எடுக்கிறார்களா?

பதில்:- இப்போது கிராமங்கள் தொலைந்து போய்விட்டன. பொருளாதார அடிப்பபடையில், பல கிராமங்கள் நொந்து போய்விட்டன. சமீபத்தில் நான் பார்த்து ரசித்த கிராமிய படங்கள், `காதல்.' சேரனின் `தவமாய் தவமிருந்து. அமீரின் `பருத்தி வீரன்.' இந்த படத்தை பாரதிராஜா படம் போல் இருந்ததாக பேசப்பட்டபோது பெருமைப்பட்டேன். என் முத்திரைகளில் இருந்து இன்னும் அழுத்தமாக, ரத்தமும், சதையுமாக அமீர் சொல்லியிருந்தார். நான் விட்ட இடத்தை அமீர் நிரப்பி இருந்தார்.


கேள்வி:- பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி மீண்டும் இணையுமா?

பதில்:- இமயமலைக்கு மூன்று பேர் சென்றார்கள். கொடியை நட்டார்கள். கொடியை நட்டபின், மீண்டும் கொடி நடப்படுமா? என்று கேட்டால் எப்படி? கொடி நட்டது, நட்டதுதான்.

கேள்வி:- உங்கள் மகன் மனோஜ் டைரக்டர் ஆகப்போகிறார் என்கிறார்களே?

பதில்:- மனோஜ் டைரக்டர் ஆகப்போவது உண்மைதான். ஒரு கதை தயார் செய்து இருக்கிறான். தொழில்நுட்ப ரீதியாக, என்னைவிட நிறைய தெரிந்து வைத்து இருக்கிறான். உலக சினிமா பற்றி அவனுக்கு அத்துப்படி. அவன் டைரக்டர் ஆவதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.


கேள்வி:- அரசியலுக்கு போவதுபோல் போய்விட்டு, மீண்டும் சினிமாவுக்கு திரும்பி விட்டீர்களே, ஏன்?

பதில்:- 15 ஆண்டுகளுக்கு முன்பே நான் பொருளாதார பிரச்சினைகளை முன்வைத்து போராடி இருக்கிறேன். அதற்காக என் பொருளாதாரத்தையும், நேரத்தையும் இழந்து இருக்கிறேன். எனக்கு எப்போதுமே பதவி ஆசை ஏற்பட்டதில்லை. எம்.ஜி.ஆர். என்னை தோளுக்கு மேலே தூக்கிவைத்திருந்தபோதே நான் பதவிக்கு ஆசைப்படவில்லை. அன்று வராதா ஆசையா, இனிமேல் வரப்போகிறது? 1962-67ம் ஆண்டுகளில் நான் மிக சிறந்த பேச்சாளனாக இருந்தேன். கம்யூனிஸ்டு, காங்கிரஸ் இரண்டையும் கலந்து பேசுவேன். காமராஜர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார் என்ற செய்தி கேள்விப்பட்டது முதல், என்னிடம் இருந்து அரசியல் ஈடுபாடு போய்விட்டது. நல்லவேளையாக, சினிமாவுக்கு வந்துவிட்டேன். நான், பாரதிராஜாவாக இருக்கவே விரும்புகிறேன்.''

0 Comments: