பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 11, 2007

கூட்டுறவு சங்க தேர்தல்கள் ரத்து - கருணாநிதி

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடந்து முடிந்துள்ளது. ஆனால், நடந்து முடிந்த முதற்கட்டத்தேர்தலிலேயே தமிழகம் முழுவதும் தி.மு.க., வினரின் வன்முறை தலைவிரித்தாடியது. பெரும்பாலான இடங்களில் தோழமை கட்சிகளுக்கு கூட வாய்ப்பளிக்காமல் தி.மு.க., வினரை போட்டியிட்டனர். இதில், கடும் அதிருப்தியடைந்த தி.மு.க., வின் தோழமை கட்சிகளான மார்சிஸ்ட் கம்யூனிஸட் மற்றும் பா.ம.க., ஆகிய கட்சிகள் கூட்டுறவு சங்க தேர்தலுக்கெதிராக கடும் அறிக்கையை வெளியிட்டிருந்தனர். மேலும், இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டுமென வரதராஜன் எச்சரிக்கை விடுத்திருந்தார். திமுகவின் தோழமைக் கட்சியான பாமக நிறுவனர் ராமதாஸ், கூட்டுறவு சங்கத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.ராமதாஸ் அறிக்கை:

கூட்டுறவுத் தேர்தல் நடத்தப்படும் விதம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் என். வரதராஜன் விமர்சனம் செய்திருக்கிறார். இந்த தேர்தலை தமிழக அரசு தான் நடத்துகிறதா என்று சந்தேகம் எழுவதாக அவர் கருத்துக் கூறியிருக்கிறார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை மற்ற தோழமைக் கட்சிகளும் கூறியிருக்கின்றன. இவற்றை எளிதில் ஒதுக்கிவிட முடியாது.

தேர்தல் என்றால் துளியேனும் ஜனநாயக மரபுகள் பின்பற்றப்பட வேண்டும். கூட்டுறவுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக பல பகுதிகளில் இருந்து புகார்கள் வருகின்றன.

அமைச்சர்கள் கூறுவதைப் பார்த்தால் சில இடங்களில் மட்டுமே மறுதேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது. இது ஏற்கத்தக்கது அல்ல.

எனவே, கூட்டுறவுத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பாமகவினர் பங்குபெறாமல் புறக்கணிப்பு செய்வார்கள்.


கலைஞர் அறிக்கை:

கூட்டுறவு அமைப்புகள் நல்ல நோக்கத்தோடு கட்சி சார்பற்று, மக்களின் நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற கருத்தை திமுக வலுவாக நம்புகிறது. ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் இந்த நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியாக உள்ளது.

தற்போது இக் கருத்தை நிலைநிறுத்தும் வகையில் தேர்தல் நடத்த விரும்பி, அதற்கான அறிவிப்பைச் செய்தது. இதன் மூலம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி வாக்குறுதியை நிறைவேற்ற அரசு தீர்மானித்தது.

கடந்த ஆட்சியில் கூட்டுறவு அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெறாமல் அதிகாரிகளின் ஆளுகையின்கீழ் கூட்டுறவு அமைப்புகள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையை மாற்ற முயற்சியெடுத்து, தேர்தல் நடத்துவதற்கான நடைமுறை தொடங்கியது.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் அதன் தோழமைக் கட்சியும் இத்தேர்தலைப் புறக்கணித்தன. புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பதை சட்டப்படி நிறைவேற்ற முடியாததே இதற்குக் காரணம்.

கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள்தான் சேர்க்க வேண்டும் என்ற நீதிமன்ற ஆணையின்படி செயல்பட வேண்டியிருந்ததால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாமல் போனது.

ஆயினும், நடைபெற்ற கூட்டுறவு அமைப்புகளின் தேர்தல்களில் பல இடங்களில் பதவிப் பொறுப்புக்கு வருவதில் ஏற்பட்டுள்ள போட்டிகளில் விரும்பத்தகாத சம்பவங்கள் ஆங்காங்கு நடைபெற்றுள்ளன.

இதுகுறித்து வெளியூரிலிருந்தபோது தோழமைக் கட்சியினரோடு தொடர்பு கொண்டு தேர்தலை சுமூகமாக நடத்த வேண்டும் என்றும், தலைமைக் கழக நிர்வாகிகளிடமும் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் எடுத்த முயற்சிகள் முழு வெற்றியடையாமல் சில கசப்பான நிகழ்ச்சிகள் உருவாகிவிட்டன.

இதைப் பார்க்கும்போது எந்த நோக்கத்துக்காக தேர்தல் நடத்த வேண்டும் என்று நினைத்தோமோ, அதற்கு மாறாக ஆங்காங்கு தோழமை உணர்வு குலைந்து பகையுணர்ச்சி தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கூட்டுறவு அமைப்புகளின் நோக்கத்திற்கே விரோதமானதாக இருப்பதை உணர முடிந்தது.

கூட்டுறவு இயக்கத்தின் தத்துவத்தை உண்மையாக உணர்ந்து செயல்பட வேண்டுமென்ற எண்ணத்தோடு, அந்த அடிப்படையில் இத்தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்பதால், இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் மற்றும் அறிவிக்கப்பட்டுள்ள கூட்டுறவு அமைப்புகளின் தேர்தல்களை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, புதிதாக எல்லா அமைப்புகளின் தேர்தல்களையும் எந்த முறையில் நடத்துவது என்பதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர், புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டு முறைப்படி அனைத்துக் கூட்டுறவு தேர்தல்களும் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.

0 Comments: