பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 25, 2007

வாய்ப்பூட்டு போட முடியாது - ராமதாஸ்

கேள்வி:-பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து தமிழக அரசைப் பற்றி பல்வேறு விமர்சனங்களைச் செய்து வந்த போதிலும், குறிப்பாக உயர் கல்வித் துறையைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்ய என்ன காரணம்?

பதில்:-அந்தத் துறையின் அமைச்சர் அவருடைய மாவட்டம் அல்லவா? அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் நல்ல பெயர் பெற வேண்டும் என்ற பாசத்தோடு தான் டாக்டர் ராமதாஸ் அந்தக் கருத்துக்களை தெரிவித்திருக்கக்கூடும். ஆனால் ஒன்று, எதற்கும் ஓர் எல்லையும் அளவும் உண்டு.

என்று கலைஞர் நேற்று சொல்லியிருந்தார். அதற்கு ராமதாஸ் பதில். :-)

ராமதாஸ் அறிக்கை:
நாட்டில் மக்களை, மாணவர்களை, தொழிலாளர்களை, ஆசிரியர்களை, அரசு ஊழியர்களைப் பாதிக்கின்ற சிக்கல்கள் எத்தனையோ ஏற்படுகின்றன. சில சிக்கல்கள் நேரடியாகவே எங்களுக்குத் தெரிய வருகின்றன. வேறு சில சிக்கல்கள் பாதிக்கப்பட்டவர்களால் எங்களது கவனத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. அப்போதெல்லாம் அவற்றைத் தீர்த்து வைக்கும் பொறுப்பில் இருக்கின்ற காரணத்தினால் அரசின் கவனத்திற்கும், முதல்-அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்கிறேன்.

சிலவற்றை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு நேரடியாகவும், வேறு சிலவற்றை பத்திரிகைகளின் வாயிலாகவும் முதல்-அமைச்சரின் கவனத்தையும், அரசின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றேன். ஜனநாயகத்தில் அப்படிச் செயல்படுவது ஒரு அரசியல் கட்சியின் ஜனநாயகக் கடமை.

இந்தக் கடமையை ஆற்றும் போது வாதாட வேண்டியவற்றுக்காக வாதாடுகிறேன்; போராட வேண்டியவற்றுக்காகப் போராடவும் செய்கிறேன். அரசின் செயல்பாட்டில் பாராட்ட வேண்டிய அம்சங்களை பாராட்டியும் வந்திருக்கிறேன். அப்படி ஜனநாயகக் கடமையை ஆற்றும் எனது செயல்பாட்டில் எல்லை மீறியது என்றோ, அளவுக்கு அதிகமானது என்றோ, வரம்பு கடந்தது என்றோ எதுவும் இருக்க நியாயமில்லை. அதற்கான அவசியமும் எனக்கில்லை.

கடந்த ஆட்சியில் 5 ஆண்டுக் காலமும், இப்போது இந்த ஆட்சியில் ஓராண்டுக் காலமும் மக்களுடைய சிக்கல்களுக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் நான் எடுத்து வைத்துள்ள கருத்துகளிலும், வாதங்களிலும் எல்லை கடந்தது என்றோ, அளவுக்கு மிஞ்சியது என்றோ, வரம்பு மீறியது என்றோ எதையும் சுட்டிக் காட்ட முடியாது.

எதற்கும் ஒர் எல்லையும், அளவும் வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருப்பதை பத்திரிகைகள் தங்களது விருப்பம் போல, எச்சரிக்கை என்றும், அறிவுரை என்றும் வெளியிட்டிருக்கின்றன. முரசொலி பத்திரிகையும் ஒரு விரலைச் சுட்டிக்காட்டும் முதல்-அமைச்சரின் படத்தோடு அந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது.

முதல்-அமைச்சர் மூத்த அரசியல் தலைவர்; ஜனநாயகவாதி. ஜனநாயகத்தில் ஒரு அரசியல் கட்சியின் கடமை என்ன என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பவர். அப்படிக் கடமையாற்றுவதில் எந்த ஒரு கட்சிக்கும் வாய்ப்பூட்டுப் போட முடியாது என்பதையும், வாய்ப்பூட்டு எதுவும் போடக் கூடாது என்பதையும் நன்கு புரிந்தும், உணர்ந்தும் வைத்திருப்பவர்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்த வரையில் ஆளும் கட்சிக்கு நட்புக் கட்சியாக இருந்தாலும், பொறுப்புள்ள எதிர்கட்சியாகவும் செயல்பட்டு வருகிறது. மக்களின் சிக்கல்களுக்காகக் குரல் கொடுக்கும் அதே நேரத்தில் தவறு என்று நாங்கள் கருதுவதையும், தவறு என்று மற்றவர்களால் எங்களது கவனத்திற்குக் கொண்டு வரப்படுபவைகளையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம். அவை பற்றி எங்களது கருத்துகளையும் வெளியிட்டு வருகிறோம்.

மற்றவர்களால் எங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வரும் சிக்கல்களை அரசின் கவனத்திற்காகக் கொண்டு சென்றிருக்கிறோம் என்பதை பத்திரிகைகளின் வாயிலாக மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம். எங்களுடைய அந்த ஜனநாயகக் கடமை தொடரும்; மக்களுக்காக, அவர்களுடைய சிக்கல்களுக்காகக் குரல் கொடுத்துச் செயல்படும் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

( 25/07/07 Update )

கேள்வி:- பொதுமக்கள் பிரச்சினை குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்து வரும் கருத்துகளுக்கு வாய்ப்பூட்டு போடக்கூடாது என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளாரே?

பதில்:- அண்ணா ஒருமுறை சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. அண்ணா தலைமையில் சுதந்திரா கட்சி, சோசலிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளுடன் இணைந்து மகத்தான வெற்றி பெற்றோம். விமர்சனம் செய்யும் போது மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தனர். அண்ணாவிடம் பயின்றவன் நான். அண்ணா தெரிவித்ததாவது... எனது அரசின் குற்றம் குறைகளை எடுத்துச் சொல்வது பூனை தனது குட்டியை கவ்வி எடுத்துச் செல்லும் போது எவ்வளவு மென்மையாக கவ்வி செல்லுமோ அதுபோல் சில கட்சிகள் தெரிவித்தன. சில கட்சிகள், பூனை எலியை பிடிப்பது போல் கண்டிக்கின்றன என அண்ணா சொன்னார்.

கேள்வி:- பாட்டாளி மக்கள் கட்சி பூனைக்குட்டியா? அல்லது எலியா?

பதில்:- பாட்டாளி மக்கள் கட்சி ஒரு புலி. சீண்டினால் புலி என்ன செய்யும் என்பது உங்களுக்கு தெரியும்.

0 Comments: