பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 20, 2007

குண்டர்கள் ராஜ்ஜியம்! - கல்கி தலையங்கம்

மதுரை நிகழ்ச்சிகள் பற்றி கல்கி தலையங்கம்

கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள்தான் மதுரை தினகரன் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தி, தீ வைத்து, மூன்று பேர் மரணத்துக்குக் காரணமாகவும் இருந்திருக்கிறார்கள். இவர்களில் ஒருவருமே தங்கள் தலைவரின் ஆசியும் ஆமோதிப்பும் இன்றி இவ்வளவு பயங்கரமாகச் செயல்பட்டிருக்க முடியாது.

காவல்துறையினர் நின்று வேடிக்கை பார்க்க, பகிரங்கமாக இந்தக் கொடுமை அரங்கேறியிருக்கிறது என்கிறபோது, கட்சிக்காரர்களின் ரௌடித்தனத்துக்கு ஆட்சி அமைப்பும் துணை நின்றதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. பத்திரிகைச் செய்திகள் அல்லது விமர்சனங்களை எதிர்க்க உரிய முறைகள் இருக்கின்றன. முறையிட அமைப்புகள் உள்ளன. ஆனால் அவற்றை நாடும் பொறுமையும் பண்பாடும் மாறி, வன்முறை வழிகள் கையாளப்படுவது அபாயகரமான போக்கு.

சம்பவத்தைக் கண்டனம் செய்த முதல்வர், தமது ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்தத் தவறிய மகனைக் கண்டிக்கவில்லை; சி.பி.ஐ. விசாரணைக்கு மட்டும் வழி வகுத்திருக்கிறார். இறந்தவர்களின் நெஞ்சு வேகும் முன் சென்னையில் முதல்வருக்குப் பொன்விழாக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன! அதிலே கூட்டணிக் கட்சித் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பிரதமரும் கூடப் பங்கேற்று, முந்தைய தினம் நடந்த கோரக் கிருத்யத்தைக் குறித்து எதுவும் குறிப்பிடாமல் வாழ்த்திச் சென்றிருக்கின்றனர்! மு.க.அழகிரியோ, காவல்துறை அரவணைத்துக் காக்க,
பொன்விழாவில் பங்கேற்க சென்னை வந்து போயிருக்கிறார்!

கட்சி மட்டத்திலோ, தி.மு.க. தலைமை, மு.க. அழகிரியைத் தட்டிக் கேட்பதற்குப் பதிலாக, தயாநிதிமாறனுக்குக் கல்தா கொடுத்திருக்கிறது! அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒரு நொண்டிக் காரணம் அதற்குச்
சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, என்ன குற்றம் இழைத்தார் என்பது
விண்டு சொல்லப்படவில்லை. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட
பிறகு, சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து ‘அட்டாக் பாண்டியன்’ கைது செய்யப்பட்டிருப்பது பல சந்தேகங்களுக்கு இடங்கொடுத்திருக்கிறது. இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தது போலீஸ் என்பது மில்லியன் டாலர் கேள்வி!

இவ்வளவு கூத்துக்கிடையில் "தினகரனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை; சன் டீ.வி.க்கும் எனக்கும் சம்பந்தமில்லை" என்று தயாநிதிமாறன் சன் டீ.வி.யில் பேட்டி அளிப்பது சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது.

தினகரன் நடத்திய கருத்துக் கணிப்புகள், தயாநிதிமாறன், ஸ்டாலின் ஆகியோரின் இமேஜை வளர்ப்பதற்காக மட்டுமல்ல, அழகிரியின் செல்வாக்கைக் குறைத்துக் காட்டவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டவை என்பது கொஞ்ச - நஞ்சம் சிந்திக்கக் கூடிய யாருக்குமே புரியும்.

பத்திரிகைகள் கருத்துக் கணிப்புகளை நடத்துவதைத் தடைசெய்ய முடியாது. அவ்வுரிமை ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், எது குறித்து, எதற்காகக் கருத்துக் கணிப்பு நடத்துவது என்கிற பொறுப்புணர்ச்சி
பத்திரிகைகளுக்குத்தான் இருக்க வேண்டும். அதைச் சட்டம்போட்டு வரவழைக்க முடியாது. பத்திரிகை தர்மத்தைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, பத்திரிகைச் சுதந்திரத்தை மட்டும் பிரயோகித்தால், விபரீதங்கள்தான் விளையும். பரபரப்புக்காக எதையும் செய்யலாம் என்ற வியாபார நோக்கும் இதற்குக் காரணம்.

மொத்தத்தில், வாரிசு அரசியல் தொடர்பான குடும்பச் சண்டையில், சம்பந்தமேயில்லாத மூன்று உயிர்கள் காவு கொடுக்கப்பட்டுவிட்டன.

சி.பி.ஐ. விசாரணையின் முடிவு, கிடைக்கும் சாட்சிகளின் அடிப்படையில்தான் அமையுமே தவிர, குற்றத்தைத் தூண்டியவர்களையும், அதனை ஆதரித்தவர்களையும் குற்றவாளிக்குப் பாதுகாப்பு அளித்தவர்களையும் குண்டர்படை வைத்திருப்பவர்களை வெளிப்படுத்தாது. இவற்றை ஒரு நீதிபதியின் தலைமையிலான நீதி விசாரணை மட்டுமே அம்பலப்படுத்த முடியும். தனி நீதிபதி நியமிக்கப்பட்டால், பொது மக்கள் அவரிடம் நேரில் சாட்சி சொல்ல முன்வருவார்கள்.

ஒரு பொன் விழாக் காலம் சட்டமன்ற உறுப்பினராக முதல்வர் விளங்கியதற்கு ஏதேனும் அர்த்தம் இருக்க வேண்டுமானால், அத்தகைய விசாரணையை நடத்த தகுதியான ஒரு நீதிபதியை நியமிக்குமாறு அவர் உடனே மத்திய அரசைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
( நன்றி: கல்கி )

3 Comments:

Anonymous said...

அப்பாட கல்கி ஒன்றுக்காவது பத்திரிகை தர்மமும் நியாய அநியாயமும் தெரிந்திருக்கிறதே. ஆனந்த விகடனைப் பாருங்கள் அழகிரியின் வாரிசைப் பற்றி ஸ்பெஷல் கட்டுரை போடுகிறது, அதிலும் அவர் ஆக்சிடெண்டில் படுத்த பொழுது அப்பா அழகிரி அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டாராம், ஏண்டா உங்களுக்கு மட்டும் தான் பிள்ளைகள் இருக்கணுமா ? எரிச்சுக் கொன்ற அந்த மகன்களுக்குப் பெற்றோர் கிடையாதா அவர்களுக்குப் பிள்ளைப் பாசம் இருக்காதா ? இதை எழுதத் துப்பில்லாமல் கொஞ்சம் கூட ஈ வு இரக்கம், மன்சாட்சி மனிதாபிமானம் இல்லாமல் மிகக் கேவலமாக விகடன் பத்திரிகை அழகிரி மகன் பற்றிய கட்டுரையை மூன்று பேர் எரித்துக் கொன்ற நெருப்பு கூட அடங்காத வேளையில் வெளியிட்டு அந்தப் பெற்றோர்களின் வயிறெரிய வைத்திருக்கிறது. இப்படியும் நம் பத்திரிகைகள் மானம் கெட்ட பிழைப்பு நடத்துகின்றன

Anonymous said...

"எரிச்சுக் கொன்ற அந்த மகன்களுக்குப் பெற்றோர் கிடையாதா அவர்களுக்குப் பிள்ளைப் பாசம் இருக்காதா ? இதை எழுதத் துப்பில்லாமல் கொஞ்சம் கூட ஈ வு இரக்கம், மன்சாட்சி மனிதாபிமானம் இல்லாமல் மிகக் கேவலமாக "

ஆமா தெரியாமத்தான் கேக்குறன், கொலை செய்யபட்ட அந்த மூனு பேரோட பெயர், மற்றும் குடும்ப விவரங்களை யாராவது சொல்லுங்களேன்.

தி.மு.க, தயாநிதி நடத்தும் நாடகத்தில்
இந்த விவரங்களை மக்கள் மறந்துவிடக் கூடாது.
தொல்காப்பியன்.

Anonymous said...

Regarding in your biodata image, I noted that the person is eating rice and sambar. Hence, I suggest to change IdliVadai as RiceSambar