பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 11, 2007

பொன்விழா அப்டேட்

முதலமைச்சர் கருணாநிதியின் 50 ஆண்டு கால சட்டமன்றப் பணிகளை பாராட்டி சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற அவரது பொன்விழாவை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, அதன் தோழமைக்கட்சியான மதிமுக மற்றும் நடிகர் விஜயகாந்த்தின் தேமுதிக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள், மற்றும் சன் டிவி கட்சியிலிந்து தயாநிதிமாறன் ஆகியோர் புறக்கணித்தனர். அவர்கள் யாரும் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை. முழு அப்டேட் கீழே...


பேரவையில் நடந்த முதல்வரின் சட்டமன்ற பொன்விழாவை அவரது பேரனும், மத்திய அமைச்சருமான தயாநிதிமாறன் புறக்கணித்தார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் வராததால் அவர்களுடைய இருக்கைகளில் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராஜா, ரகுபதி, பழனிமாணிக்கம், வேங்கடபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். ஆனால் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மட்டும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. குப்புசாமி, சுகவனம் உள்ளிட்ட திமுக எம்பிக்களும், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்பி காதர்மொய்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

காங்., பாமக மந்திரிகள் மிஸ்சிங்

காங்கிரஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் யாரும் விழாவில் பங்கேற்கவில்லை. இந்த கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட விழா நிகழ்ச்சிகளுக்கு வரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா இருக்கையில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரனும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் இருக்கையில் அரசு வழக்கறிஞர் இரா. விடுதலையும் அமர்ந்திருந்தனர்.

கருணாநிதி குடும்பம் ஆப்சென்ட்

மானிய கோரிக்கைக்கு பதிலுரை வழங்குவது போன்ற முக்கிய நிகழ்ச்சிகளை காண கருணாநிதி குடும்பத்தினர் வருவது வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக முதல்வரின் சட்டமன்ற பொன்விழாவை காண அவரது மனைவி தயாளுஅம்மாள், மகள் செல்வி, ஸ்டாலின் மனைவி துர்கா மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் இன்று வரவில்லை.

ராஜாத்தி, கனிமொழி வருகை

கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், அவரது மகள் கனிமொழி ஆகியோர் மட்டும் விழாவை காண பார்வையாளர் மாடத்திற்கு வந்திருந்தனர். அவர்களுடன் முன்னாள் அமைச்சர் புலவர் இந்திரகுமாரி, கவிஞர் தமிழச்சி ஆகியோர் அமர்ந்திருந்தனர். திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, தொழிலதிபர் நல்லிகுப்புசாமி, முரசொலி அமிர்தம், திட்டக்குழு துணைத்தலைவர் நாகநாதன், திமுக தலைமைக்கழக நிர்வாகிகள் டி.கே.எஸ். இளங்கோவன், துறைமுகம் காஜா, சபாபதி, முன்னாள் எம்பி திருச்சி சிவா, இயல், இசை, நாடக மன்ற தலைவர் இயக்குனர் ராமநாராயணன், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், திருநெல்வேலி மேயர் சுப்பிரமணியம் ஆகியோரும் பார்வையாளர் மாடத்திலிருந்து பொன்விழா நிகழ்ச்சிகளை கண்டனர்.

கண்கவர் மலர் அலங்காரம்

பொன்விழாவை முன்னிட்டு சட்டப்பேரவை முழுவதும் மல்லிகை, முல்லை, ரோஜா, செவ்வந்தி, தாமரை உள்ளிட்ட பல்வேறு மலர்களால் சிறப்பான முறையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேல் மாடத்திலிருந்து கீழே வரை மல்லிகை, முல்லை மலர்கள் சரம் சரமாக தொங்கவிடப்பட்டிருந்தன. ஆங்காங்கே ரோஜா மாலைகளும் அவற்றின் நுனியில் தாமரை மொட்டுகளும் வைத்து கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. காந்தி, அண்ணா, காமராஜர், முத்துராமலிங்க தேவர், எம்ஜிஆர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் திருவுருவ படங்களுக்கும் ரோஜா மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. மேலும் தலைமைச் செயலக வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் வரவேற்பு வளைவுகளும், வண்ண பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன. தலைமைச் செயலகம் முழுவதும் மின் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

முதல்வருக்கு விசேஷ இருக்கை

பொன்விழா நாயகரான முதலமைச்சர் கருணாநிதிக்கு பிரத்யேக இருக்கை போடப்பட்டிருந்தது. அந்த இருக்கை மல்லிகை மலர்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதே போல சபாநாயகருக்கு ஒதுக்கப்பட்ட பிரத்யேக இருக்கைக்கும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சி உறுப்பினர்கள் அவரவர் விரும்பிய இடத்தில் அமர்ந்திருந்தனர்.

கவர்னருக்கு வரவேற்பு

காலை சரியாக 10.04 மணிக்கு கவர்னர் பர்னாலாவை சபாநாயகர் ஆவுடையப்பனும், பேரவை செயலாளர் செல்வராஜும் அழைத்து வந்து சபாநாயகருக்குரிய இருக்கையில் கவர்னரை அமர வைத்தனர். அதன் பின்னர் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஆவுடையப்பன் வரவேற்று பேசினார். முதல்வரின் சட்டமன்ற பொன்விழா கொண்டாட்டத்தால் தமிழ் கூறும் நல்லுலகமே பூரிப்படைந்திருப்பதாகவும், இந்த வரலாற்று சிறப்பு மிக்க விழாவில் முதல்வரை வாழ்த்துவதற்கு வந்துள்ள கவர்னர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்பதாகவும் சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.

7 Comments:

Hari said...

/* சன் டிவி கட்சியிலிந்து */

?!!!!!

Santhosh said...

உங்க பதிவை fire foxஇல் திறந்தால் hang ஆகி விடுகிறது :(.

IdlyVadai said...

சந்தோஷ் நான் இப்போ சோதித்து பார்த்தேன். சரியாக வேலை செய்கிறது. வேறு யாருக்காவது இந்த பிரச்சனை இருந்தால் சொல்லவும். நன்றி.

PRK said...

எனக்கு இது வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. நான் Firefox 2.0 on Linux use செய்யரேன்.

Anonymous said...

இட்லிவடை பன்றி பதிவு பாத்தீர்களா ?

Geetha Sambasivam said...

என்னாலே நெருப்பு நரியிலே படிக்கவே முடியாது. ரொம்பவே சந்தோஷமான விஷயம் அதான். இந்த மாதிரிச் செய்திகளைப் படிக்கவே வேணாமே! ம்ம்ம்ம், தினமும் வந்து பார்க்கிறேன், இன்னிக்கு உங்க லேட்டஸ்ட் செய்திகளை ரொம்பவே மன வருத்தமா இருக்கு. இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடையணும்னு ரொம்ப சாதாரணமாச் சொல்லிட்டுப் போயிடலாம். இது சாதாரணம் இல்லை. சாதா "ரணம்." ஆறவே ஆறாது.

ஹரன்பிரசன்னா said...

//சன் டிவி கட்சியிலிந்து //

Good One. :)