பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 23, 2007

கேப்டன் பேட்டி

"ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும், ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை - விஜயகாந்த்"

பொன் விழா, மண்டபம் இடிப்பு, சிபிஐ விசாரனை, கூட்டணி, கேப்டன் டிவி பற்றி...


கோயம்பேட்டில் இடிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் திருமண மண்டபத்தை ஒட்டியுள்ள இடத்தில் கீற்றுகொட்டகையுடன் அமைக்கப் பட்டுள்ள தேமுதிகவின் புதிய கட்சி அலுவலகம் இன்றுகாலை திறக்கப்பட்டது. இதையொட்டி நடந்த விழாவில், அலுவலகத்தை அக்கட்சி தலைவர் விஜயகாந்த் இன்று காலை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். முன்னதாக தேமுதிக கட்சிக் கொடி மற்றும் தொழிற்சங்க கொடியை ஏற்றினர்.

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

இன்று முதல் தேமுதிக கட்சி அலுவலகம் தொடர்ந்து இங்குதான் இயங்கும். திருமண மண்டபத்தை இடித்ததை பற்றி நான் கவலைப் படவில்லை. இது திட்டமிட்ட சூழ்ச்சி என்று தான் நான் சொல்வேன். இதற்கு காரணம் சட்டமன்ற தேர்தலுக்கு முன் டி.ஆர்.பாலு ஒரு பேட்டியின் போது விஜயகாந்த் எனது நண்பர் என்றும், அவர் பொது சேவைக்காக தன் திருமண மண்டபம் இடிக்கப்படுவதை விட்டுக் கொடுப்பார் என்றும் கூறியதோடு, மாற்று திட்டம் இருந்தால் அவர் கொடுக்கலாம் என்று கூறினார்.

அதையடுத்து தான் நாங்கள் மாற்று திட்டத்தை கொடுத்தோம். அதை சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் வரை கவனிக்காமல் இருந்தவர்கள் அதற்கு பின்பு டெக்னிக்கல் சரியில்லை என்று கூறினார்கள். ஏனென்றால் சட்டமன்ற தேர்தலுக்கு முன் மண்டபத்தை இடித்தால் எங்களுக்கு அனுதாப அலை வீசிவிடும் என்று அப்போது தவிர்த்து விட்டு இப்போது இடித்துள்ளனர். டெக்னிக்கல் பிராப்ளம் என்று கூறிய தால் தான் நாங்கள் கோர்ட்டுக்கு சென்று அது குறித்து விவரம் கேட்டோம்.

ஆனால் கோர்ட்டுக்கு போன பின்பு தான் அண்ணா சொன்னது போல் "சட்டம் ஒரு இருட்டறை' என்பதை அப்போது நாங்கள் புரிந்து கொண்டோம். இந்த கல்யாண மண்டபம் என் சொந்த உழைப்பில் கட்டியது. ஊர்ப் பணத்தை கொள்ளையடித்து உலையில் போட்டது அல்ல. மேலும், நிறைய பேர் திருமண மண்டபத்தை இடித்து விட்டு மேம்பாலம் வருகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த இடத்தில் தரைவழிப்பாதை தான் வருகிறது. மேம்பாலப் பணி முடிந்த பின்புதான் தரைவழிப்பாதை ஆரம்பிப்பார்கள். ஆனால் இதுவரை மேம்பாலம் அமைப்பதற்காக "ஃபைலிங்' இன்னும் போடவில்லை. இதுதான் சூழ்ச்சி என்பது...

கேள்வி: இதுகுறித்து தாங்கள் சட்டமன்றத்தில் பேசியிருக்கலாமே?
பதில்: சட்டமன்றத்தில் பேசி பிரயோஜனம் இல்லை. அங்கே கடந்த சட்டசபைக்கும், இந்த சட்டசபைக்கும் இடையில் அவர்கள் கொடுத்த அறிக்கையைதான் சபையில் படித்தவண்ணம் இருந்தார்கள். அதனாலேயே நான் சட்டசபைக்கு வருவதை தவிர்த்தேன். சட்டசபையில் பதிவு என்பது முக்கியமல்ல. மக்களிடம் போய் சேருவதுதான் முக்கியம். என் கருத்தை நான் மக்கள் மன்றத்தில் சொல்வேன். உங்களிடம் (நிருபர்கள்) பேசினாலே மக்கள் மன்றத்திற்கு செய்தி சென்று சேரும்.

எனது தொகுதியான விருதாச்சலத்தில் பள்ளிக்கூடங்கள் அருகே விபத்துக்கள் ஏற்படுகிறது என்று அதை தடுப்பதற்காக சாலை தடுப்பு வேலி (பாரிகாட்) அமைத்து கொடுங்கள் என்று பொதுமக்கள் கேட்டதற்கு இணங்க ரூபாய் 1 லட்சம் செலவில் 20 பாரிகாட் செய்து போலீசாரிடம் கொடுத்த போது அதை எடுத்து சென்றவர்கள் திரும்பவும் கொண்டு வந்து எனது அலுவலகத்தில் வைத்து விட்டனர்.

நான் நடிகனாக இருந்த போது பாண்டி பஜாரிலும், சாலிகிராமத்திலும் இதேபோல் பாரிகாட் கொடுக்கப்பட்டு சாலை தடுப்பாக வைக்கப்பட்டுள்ளது. இப்போது நான் எம்எல்ஏ என்பதால் நான் பெயர் எடுக்க கூடாது என்பதற்காக இதுபோல் வாங்க மறுப்பதோடு எனது தொகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ள இடத்திற்கு நான் கொடுக்கும் குடிநீரை கூட அந்த மாவட்ட அமைச்சர், தொகுதி மக்களிடம் தண்ணீர் கூட வாங்கக் கூடாது என்று கூறி வருகிறார்.

கே: முதல்வருக்கு நடைபெற்ற பொன்விழாவில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை?
ப: நான் ஏற்கனவே அவருக்கு கலையுலக பொன் விழா எடுக்கும் போது பலர் வரவில்லை. அது ஏன்? மேலும் சட்டமன்றத்தின் பொன்விழா என்று சட்டமன்றத்தில் இந்த விழா நடத்தியது எந்த விதத்தில் நியாயம்? அதை அவருடைய கட்சி அலுவலகத்தில் அல்லவா நடத்த வேண்டும்? இதேபோல் எனக்கொரு விழா என்று சட்டமன்றத்தில் இடம் கேட்டால் அவர்கள் தருவார்களா? இதேபோன்ற விழா நாடாளுமன்றத்தில் நடந்ததுண்டா?

கே: மதுரை சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
ப:மதுரை சம்பவத்தில் மூன்று உயிர்கள் பலியாகியிருக்கிறது. என்ன விலை கொடுத்தாலும் அந்த உயிர் திரும்ப கிடைக்காது. இந்த சம்பவமே உட்கட்சி பிரச்சனையால் நடந்துள்ளது. ஆனால் அவர்கள் தங்கள் கட்சி பணத்தை கொடுக்காமல் அரசு பணத்தை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? இதில் குற்றவாளி என்று யாரை குறிப்பிட்டார்களோ அவர்கள் தப்பிவிட்டார்கள்.

1980ம் ஆண்டு எம்ஜிஆர், மொராஜி தேசாய் அரசுக்கு ஆதரவாக இருந்தார். அப்போது கருணாநிதி மீது கோதுமை பேரல் ஊழல் வழக்கிலும், பூச்சி கொல்லி மருந்து ஊழல் வழக்கிலும் சிபிஐ விசாரணை நடைபெற்றது. உடனே அவர் (கருணாநிதி) சஞ்சய் காந்திடம் பேசி இந்திரா காந்தியிடம் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என கூறி கூட்டணியில் சேர்ந்தார். சிபிஐயும் கிடப்பில் போனது. அதேபோலத்தான் இதுவும் இருக்கும்.

மனுநீதி சோழனின் மகன் கன்றுக்குட்டி ஒன்றை தேரை ஏற்றி கொன்றதால் பசு அங்குள்ள மணியை அடித்து நியாயம் கேட்ட போது, மனுநீதி சோழன் தன் மகனை தேரில் ஏற்றி கொன்றதாக கதை உள்ளது. நாங்கள் தேர் சக்கரத்தில் ஏற்ற சொல்ல வில்லை. நடவடிக்கை வேண்டும் என்று தான் கேட்கிறோம். சூரியனா? சன்னா என்றும், சன் டிவி முக்கியமா? சன் முக்கியமா? என்ற சூழ்நிலை வந்த போது, எனக்கு சூரியன் (சன் டிவி) முக்கியமல்ல; சன் தான் முக்கியம் என்று முடிவெடுத் துள்ளனர்.

கே: சிபிஐ விசாரணை என்பது கண்துடைப்பு என்கிறீர்களா?
ப: உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் ஒரு நீதி அரசர் வந்து எவ்வாறு தீர்ப்பு கூறினாரோ, அதேபோல் இந்த வழக்கிலும் ஒரு நீதி அரசர் வராமலா இருப்பார்?

கே:வரும் எம்.பி. தேர்தலில் தாங்கள் யாருடன் கூட்டணி?
ப: நான் யாருடனும் கூட்டணி இல்லை. தனியாகத்தான் இருப்பேன். உங்களிடம் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு நாளைய தினம் கூட்டணி வைத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?

கே: அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் டிவி ஆரம்பித்த வண்ணம் உள்ளனர். தங்களுக்கு டிவி ஆரம்பிக்கும் எண்ணம் உண்டா?
ப: டிவி ஆரம்பிக்க பணம் வேண்டும். என் சொத்தை அழிக்கவும், என்னை ஒடுக்கவும் திட்டம் போடுகிறார்கள். அதனால் பணம் வரட்டும் அப்போது டிவியை ஆரம்பிப்பது குறித்து பார்க்கலாம் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், ராமர் பாலம் இருக்கிறதா? இல்லையா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது. அத்துடன் ராமர் பாலம் குறித்து நாசா வெளியிட்டிருப்பதாக கூறுகிறார்கள். உண்மையிலேயே நாசா தான் வெளியிட்டதா என்ற கேள்வியை நிருபர்களிடம் எழுப்பினார்.

4 Comments:

அருண்மொழி said...

இட்லி வடையாரே,

முடிந்தால் இந்த சுட்டியில் உள்ள செய்தியை வெளியிடுங்கள்.

"வில்லனை ஹீரோ என்று நம்பி விட்டோம்"

http://www.tamilanexpress.com/cover/cover.asp

Boston Bala said...

என்னுலகம்: அட்டைக் கத்தி வீரரின் அடாவடி பேட்டி!

முத்துகுமரன் said...

''போட்டுத் தாக்க'' முடியாமல் உங்களையே மூர்ச்சையாக்கிவிட்ட விஜயகாந்திற்கு எனது கண்டணங்கள்.

சதுக்க பூதம் said...

ஜனாதிபதி தேர்தலில் மச்சான் சத்தீசை நிறுத்தி தமிழக மக்களுக்காக போராடலாம்