பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 18, 2007

மதுரை சம்பவம் பற்றி - துக்ளக் தலையங்கம்

மதுரை சம்பவம் பற்றி துக்ளக் தலையங்கம். 'இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் அல்ல !' என்ற தலைப்பில் + ஒரு எச்சரிக்கை பகுதி..


இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் அல்ல !
ஒரு பத்திரிகை அலுவலகத்தின் மீது இவ்வளவு பெரிய தாக்குதல், இதுவரை தமிழகத்தில் நடந்ததில்லை – என்று கூறுகிற அளவிற்கு ஒரு பயங்கரமான தாக்குதல், "தினகரன்' பத்திரிகையின் மதுரை அலுவலகத்தின் மீது நடந்திருக்கிறது.

"கலைஞரின் வாரிசு யார்?' என்ற கேள்வியை கேட்டு, ஒரு கருத்து கணிப்பை நடத்தி, "ஸ்டாலினுக்கு 70 சதவிகித ஆதரவு; மற்றவர்களுக்கு 20 சதவிகித ஆதரவு; அழகிரிக்கு 2 சதவிகித ஆதரவு' என்பதே தமிழக மக்களின் கருத்து – என்று ஒரு செய்தியை "தினகரன்' பத்திரிகை வெளியிட்டது. இதையடுத்து, மதுரையில் "தினகரன்' அலுவலகத்தின் மீது தாக்குதல்; பெட்ரோல் குண்டு வீச்சு; அலுவலகம் எரிப்பு; உடைப்பு... என்றெல்லாம் நடந்து; அதன் விளைவாக மூன்று அப்பாவிகள்
உயிரிழந்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலை, முதல்வர் மகன் அழகிரிதான் தூண்டிவிட்டு நடத்தியிருக்கிறார்
– என்று சன் டி.வி. மற்றும் தினகரன் அதிபர் கலாநிதி மாறன் குற்றம் சாட்டியிருக்கிறார். சன் டி.வி.யின் குற்றச்சாட்டு எடுத்த எடுப்பில் அலட்சியப்படுத்தி விடக் கூடியது அல்ல; தாக்குதலில் ஈடுபட்டவர்களின் அடையாளம் தெரியும் என்றும் சன் டி.வி. பலமுறை செய்திகளில் அடித்துக் கூறியுள்ளது. அழகிரியின் ஆதரவாளர்கள்தான் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று அநேகமாக எல்லா செய்திகளும் கூறுகின்ற நிலையில் – இவை எல்லாமே, விசாரணைக்கும் நிரூபணத்திற்கும் உரியவை.

ஒரு பத்திரிகை மீது தாக்குதல் நடந்திருப்பதால், அதுவும் ஒரு கருத்து கணிப்பின் விளைவாக அந்தத் தாக்குதல் நடந்திருப்பதால், "இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்' என்று கூறி பத்திரிகையாளர்களின் சங்கங்கள், இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

நடந்த வன்முறை, முழுமையான கண்டனத்திற்குரியது. மூன்று பேர் கொலை செய்யப்படுகிற அளவுக்கு ஒரு பயங்கரத் தாக்குலை நடத்தியவர்கள் சட்டத்தின்
முன் நிறுத்தப்பட்டு, தாங்கள் செய்த கொடுமைக்கான தண்டனையைப் பெற வேண்டியவர்கள். இவர்களை யார் தூண்டினார்களோ, அவர்களும் தண்டனைக்குரியவர்களே. வன்முறை நடந்தபோது, போலீஸார் வேடிக்கை பார்த்திருக்கின்றனர். அவர்களும் கண்டனத்திற்குரியவர்களே! இதிலெல்லாம்
சந்தேகத்திற்கோ, மாற்றுக் கருத்திற்கோ இடமில்லை.

ஆனால், நடந்ததை "பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்' என்று சொல்ல முடியுமா? நடந்த நிகழ்ச்சிகளின் பின்னணியைக் கொஞ்சம் பார்ப்போம்:

ஸ்டாலின்தான், கலைஞரின் "அரசியல் வாரிசு' என்பது நடைமுறையில் பிரகடனமாகி விட்ட விஷயம்; தி.மு.க.வும் ஏற்றுக் கொண்டு விட்ட நிலை; மக்களும் புரிந்து கொண்டு விட்ட அரசியல். இதில் யார் கருத்தையும் கேட்டறிய ஒரு கருத்து கணிப்பு நடத்தத் தேவையே இல்லை. அதுவும், இப்போது "அடுத்தது யார்?' என்ற கேள்வி அவசரமாக எழுந்து விடவும் இல்லை.

இது தவிர, ஏற்கெனவே, "தமிழகத்தைச் சார்ந்த மத்திய அமைச்சர்களில் யார் திறமைசாலிகள்?' என்ற கேள்வியைக் கேட்டு, "தினகரன்' வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவு, முதல்வருக்குப் பிரச்சனையைத் தோற்றுவித்தது. தயாநிதி மாறனுக்கு 64 சதவிகிதம்; சிதம்பரத்திற்கு 27 சதவிகிதம்; ராமதாஸின் மகன் அன்புமணிக்கு 1 சதவிகிதம் என்று கூறிய அந்த கருத்து கணிப்பு முடிவை, ராமதாஸ் வன்மையாகக் கண்டித்தார். இது வேண்டுமென்றே பரப்பப்படுகிற பொய்க் கருத்து என்று கூறிய அவருடைய கண்டனத்தில், இதற்கு முதல்வரையும் பொறுப்பாக்குகிற வகையிலான போக்கும் இருந்தது.

இதனால் கலைஞருக்கு பிரச்சனை ஏற்பட, அவர் இந்த மாதிரி கருத்து கணிப்பிற்கு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்; இது நம்பகத்திற்குரியது அல்ல என்றும் அவர் கூறினார். இது தவிர, "இந்த மாதிரி கருத்து கணிப்புகளை வெளியிட வேண்டாம்' என்றும் அவர் "தினகரன்' அதிபரைக் கேட்டுக் கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்லாமல், வாரிசு விஷயம் பற்றி "தினகரன்' கருத்து கணிப்பு முடிவு வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்ட பிறகு, முதல்வர் அவர்களிடம் "இது வேண்டாம்' என்று கூறியிருக்கிறார். அதாவது
தேவையில்லாத ஒரு கருத்து கணிப்பை, அவசியமில்லாத ஒரு நேரத்தில், முதல்வரே கேட்டுக் கொண்ட பிறகும், பிரசுரம் செய்திருக்கிறார்கள்.

இதையே வேறு ஒரு பத்திரிகை செய்திருந்தால், அது பத்திரிகையின் பொறுப்பு; அந்த மாதிரி ஒரு பத்திரிகையிடம், கருத்து கணிப்பு வெளியிட வேண்டாம் என்று முதல்வர் கேட்டிருக்க மாட்டார்; அப்படியே அவர் கேட்டாலும், முதல்வரின் வேண்டுகோளுக்கு இசைவதும், இசையாததும் சம்பந்தப்பட்ட பத்திரிகையின் இஷ்டம்; அந்தப் பத்திரிகை தனது கணிப்பை வெளியிடுவது – பத்திரிகை சுதந்திரம்; அதற்காக அப்பத்திரிகை தாக்கப்பட்டால், அது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்.

ஆனால், இப்போது நடந்துள்ள நிகழ்ச்சிகளிலோ, குடும்பப் பொறுப்பும் வருகிறது.
தங்களுடைய மீடியா பலத்திற்கும், மத்திய அரசு பதவிக்கும், இவற்றின் மூலமாக கிட்டுகிற மற்ற பல "நன்மை'களுக்கும் கலைஞரே மூல காரணம் என்பதை, அவர்கள் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் – என்ற எதிர்பார்ப்பு, குடும்பத் தொடர்புடையது. அதை மீறி பிரசுரம் நடந்தது என்பது, அந்த குடும்பப் பொறுப்பை மீறிய விஷயம்; குடும்பப் பிரச்சனை.

இந்த இரு தரப்புகளுக்கிடையே உள்ள மனக்கசப்பு பல வகைகளில் வெளிப்பட்டு வருகிறது என்பதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்: சென்ற மார்ச் மாதத்தில் ஸ்டாலின் பிறந்த தின விழா நடந்தபோது, தினகரன் "இன்று குரங்கின் பிறந்த நாள்' என்று முதல் பக்கத்தில் ஹைலைட் செய்து, உள் பக்கத்தில் "தனது பேரன் பேத்திகளுடன் ஒரு குரங்கு பிறந்த நாள் விழா கொண்டாடியது' – என்ற ஒரு செய்தியை வெளியிட்டது.

இது தவிர, ஏற்கெனவே அழகிரி செய்திகள் சன் டி.வி.யிலும், தினகரனிலும் புறக்கணிப்பு; தயாநிதி மாறனின் நிகழ்ச்சிகள், தென் மாவட்டங்களில் அழகிரி ஆதரவாளர்களால் புறக்கணிப்பு – போன்ற போக்குகளின் மூலம், இந்த இருவருக்குமிடையே ஒரு மௌன மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அந்த மோதலின் ஒரு கட்டமாக கருத்து கணிப்பு வெளியாகியது; அடுத்த கட்டமாக வன்முறை வெறியாட்டம் நடந்திருக்கிறது.

சட்டசபையில் முதல்வர் "மற்றவர்கள் 20 சதவிகிதம் ஆதரவு பெறுகிறார்கள்' என்ற தினகரனின் கருத்து கணிப்பு, தயாநிதி மாறனுக்கு அந்த அளவு ஆதரவு உள்ளதாகக் குறிப்பிடுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிற வகையில் பேசினார். இது ஒருபுறமிருக்க, முதல்வரின் "50 ஆண்டு சட்டசபைப் பணி' பாராட்டு விழாவை ஒளிபரப்புகிற உரிமையை சன் டி.வி. பெறவில்லை. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காத, ஒரே தமிழக மத்திய அமைச்சர் – தயாநிதி மாறன். இவை எல்லாம், எந்த உரசலையும் காட்டவில்லை என்று யாரும் நம்ப மாட்டார்கள்.

ஆக, இது முதல்வர் குடும்பத்தினுள் இருக்கிற பிரச்சனையின் வெளிப்பாடே. அப்படி இருக்க, இதை "பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்' என்று சொல்வது, இதில் உள்ள குடும்பச் சூழல்களையும், உறவின் முறை சிக்கல்களையும், புறக்கணித்து விட்டு பேசுகிற பேச்சாகத்தான் இருக்கும்.

மதுரையில் நடந்தது அராஜகம். வன்முறை. கொலை. அது சட்டப்படியான நடவடிக்கைக்கு உரியது. ஸி.பி.ஐ. விசாரிக்கும் என்று முதல்வர் சொல்லி விட்டதால், இப்போதைக்கு மாநில போலீஸ் இதில் எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமற், பார்த்துக் கொண்டாகி விட்டது. ஸி.பி.ஐ. மத்திய அரசின் சொல்லைத் தட்டுவதில்லை என்பதை வேறு வழக்குகளிலும் பார்த்திருக்கிறோம். மத்திய அரசோ, கலைஞர் பேச்சைத் தட்டாது. ஆக, ஸி.பி.ஐ. விசாரணை என்ற அறிவிப்பின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தாகி விட்டது. ஒன்று – மாநில போலீஸ் ஒதுங்கி நிற்கும்; இரண்டு – முதல்வரை மீறி எதுவும் நடந்து விடாது. இது தவிர, ஸி.பி.ஐ. விசாரணை என்று கோரிய பத்திரிகைகளும், எதிர்க்கட்சிகளும் இது பற்றி, முதல்வரைக் குறை கூற இடமில்லாமலும் போய் விட்டது.

கருத்து கணிப்பு வெளியிட்டு, முதல்வரின் கோரிக்கையை நிராகரித்து, அவருக்கே சவால் விட "தினகரன்' ஏன் முனைந்தது என்பது தெரியவில்லை. "எங்களால் எதுவும் செய்ய முடியும்; என்ன மாதிரி சிக்கலையும் உருவாக்க முடியும்' – என்று காட்டி, முதல்வரை எச்சரிக்க யாரோ விரும்பியிருப்பது போலத்தான் தோன்றுகிறது. மத்திய அரசு, இப்போதைக்கு, தமிழக முதல்வரின் பக்கமே நிற்கும் என்கிற நிலையில், இம்மாதிரி சவால்கள், அதில் ஈடுபடுபவர்களுக்கு என்ன பலன் அளிக்கும் என்று, அதில் ஈடுபட்டவர்கள் எதிர்பார்த்தார்கள் – என்பது புரியவில்லை.

மக்களைப் பொறுத்தவரையில், நடப்பது குடும்பச் சண்டை. ஆனால் விளைந்தது கொடூரமான வன்முறை. அதை நடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள். வன்முறையை வேடிக்கை பார்த்த போலீஸாரும் விசாரணைக்குரியவர்கள். குடும்பச் சண்டையில், ஒரு பத்திரிகை, ஒரு தரப்பின் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது என்பதால், விளைந்துள்ள தண்டனைக்குரிய வன்முறையை – பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று கூற முடியாது. குடும்பத்தினரின் போட்டா போட்டி – பத்திரிகை சுதந்திரமாகி விடாது.


எச்சரிக்கை

இந்த இதழ் அச்சாகிற தருவாயில், தயாநிதி மாறனை, மத்திய அமைச்சர்
பதவியிலிருந்து நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, முதல்வரை, தி.மு.க. நிர்வாகக் குழு கேட்டுக் கொள்ள – அதை ஒட்டி,
தயாநிதி மாறன் ராஜினாமா செய்திருக்கிறார். அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்றும் தி.மு.க. நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

தி.மு.க.வினரால் – முக்கியமாக கலைஞரால் – உருவாக்கப்பட்டவர்கள், (கலைஞர் உதவியால் உதயமாகி, வளம் பெற்ற) சன் டி.வி.யின் "சக்தி'யும், பண பலமும், தி.மு.க.வையே நிலைகுலையச் செய்யக் கூடிய திறன் படைத்தவை என்று எண்ணி விட்டார்கள். அதன் விளைவுதான் இப்போது நடந்திருப்பது.

தோல்வியைக் கூடத் தாங்கி விடலாம்; ஆனால் வெற்றியைத் தாங்கிக் கொள்ள, நிதானமும், மனோபலமும் தேவை. அது இல்லையென்றால், சிலர் பெறுகிற வெற்றிகளே, அவர்களுக்கு வினையாகி விடும். இதை அரசியலில் முன்பும் பார்த்திருக்கிறோம்; பின்பும் பார்ப்போம்; இப்போதும் பார்க்கிறோம்.
( நன்றி: துக்ளக் )

4 Comments:

Sundar Padmanaban said...

இதற்கும் வந்து "சோ"மாறி, பார்ப்பு பத்திரிகை என்று யாரும் வந்து இன்னும் குதிக்கக் காணோம்!

துக்ளக்கின் இந்தத் தலையங்கம் உணர்ச்சி வசப் படாமல், நடுநிலைமையுடன் வார்த்தைகளை அளந்து எழுதப்பட்டது என்பது என் கருத்து.

அனுபவமும் முதிர்வும் அரைநாளில் வருவதில்லை என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.

நன்றி.

Geetha Sambasivam said...

அருமையான தலையங்கம். இரண்டு செய்திகளுமே நடுநிலையோடு எழுதப் பட்டிருக்கிறது. ஆ.வி.யில் ஞாநியின் கட்டுரையும் சேர்த்துச் சொல்கிறேன். நன்றி.

Anonymous said...

Wonderful presentation of facts. written without bias

Anonymous said...

cho is always best