பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 19, 2007

சேது சமுத்திரம், கலைஞர், கணேசன், எஸ்.குருமூர்த்தி

சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுருத்தி வீதி சமைப்போம் - மகாகவி பாரதியார்

சேது சமுத்திர திட்டம் போன்ற நாட்டு திட்டம், இவை நிறைவேற வேண்டுமானால், குறுக்கே வரும் பெருச்சாளிகளுக்கும், குருட்டுத்தனங்களுக்கும் இடம் தராதீர்கள். இவர்களது புலம்பல்களுக்கும், இதிகாசத்தினë பெயரால், இலக்கியத்தின் பெயரால், வரலாற்றின் பெயரால் நம் நாட்டு வளத்தை தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நாட்டின் விரோதிகள், தேச துரோகிகள். அவர்களுக்கு வழிவிடாமல் இதுபோனëற திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்
- கலைஞர்

சென்னைக்கு அருகே துணை நகரம் அமைக்கப்படுவதை பாமக எதிர்த்தவுடன் முதல்வர் அத்திட்டத்தை கைவிட்டார். அதுபோல் ராமர் பாலத்தை இடிப்பதை தவறு என எதிர்கட்சிகள் கூறினால் அதை திருத்தி கொள்வதுதான் சிறந்தது.
முதல்வர் கருணாநிதி ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடிகள் என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதும்போது ஆதாம் பாலம் என்றழைக்கப்படும் ராமர் பாலம் இருப்பதை குறிப்பிட்டிருந்தார்.
நேற்றைய கூட்டத்தில் முதல்வர், சேது சமுத்திர திட்டத்தை இதிகாச பெயரால் தடுப்பவர்கள் துரோகிகள் என கூறியுள்ளார். பாஜகவின் தேச பக்தியை பற்றி போசவோ, சந்தேகப்படவோ நேற்றைய கூட்டத்தில் பேசியவர்களுக்கு எந்த அருகதையும், யோக்யதையும் இல்லை
- பிஜேபி தமிழக தலைவர் இல.கணேசன்


சங்கராச்சாரியர்கள் தேசத் துரோகிகளா?: கருணாநிதி பதில் சொல்லட்டும்!
எஸ்.குருமூர்த்தியின் கட்டுரை கீழே.."கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், இதிகாசத்தின் பெயரால் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசத் துரோகிகள்'. இவ்வாறு சொல்லி இருப்பது முதல்வர் கருணாநிதி.

சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஆதரவாக சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதை மே 17-ம் தேதி பத்திரிகைகள் வெளியிட்டன.

அதே தேதியில் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து ஹிந்து மத உயர் தலைவர்கள் போராடப் போவதாகவும் செய்தி இடம் பெற்றுள்ளது.

இந்த ஹிந்து தலைவர்கள் யார்? அசோக் சிங்கலோ அல்லது பிரவீண் தொகாடியாவோ அல்ல அவர்கள். புரி, துவாரகை, பத்ரிநாத், சிருங்கேரியில் உள்ள உயரிய ஆன்மிக பீடங்களாகத் திகழும் மடங்களின் தலைவர்கள். அவர்கள் சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிராக தேசிய அளவில் போராட முடிவு செய்துள்ளனர் என்ற செய்தியை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

இந்த சங்கராச்சாரியர்கள் எப்போதுமே போராட்டம் நடத்தத் தெருவுக்கு வந்ததில்லை. தமது சகிப்புத் தன்மையையும் மீறி அவர்களைப் போராடத் தூண்டுவது எது?

அதுதான் முதல்வர் கருணாநிதி மே 16ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் ஆதரவு தெரிவித்துப் பேசிய "சேது சமுத்திரத் திட்டம்'. அந்தத் திட்டம்தான் சங்கராச்சாரியர்களின் மனங்களைக் கொதித்தெழச் செய்துள்ளது.

சம்ஸ்கிருதத்தில் "சேது' என்பதன் பொருள் பாலம். இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கடலைத் தாண்டிச் செல்ல ராமரால் கட்டப்பட்டது சேது என்று மதத் தலைவர்கள் கருதுகிறார்கள். இப்போதும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நில இணைப்பாகத் திகழ்வது ராமர் பாலமாகும்.

பல லட்சம் ஆண்டு பழமை வாய்ந்த இந்தப் பாலத்தை தனது கேமிரா மூலம் படம் பிடித்துள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த நாஸô அமைப்பின் செயற்கைக்கோள். இந்த ராமர் பாலத்தை நடந்து செல்வதற்காகப் பல நூற்றாண்டுகளுக்கு முன் பயன்படுத்தியுள்ளனர் என்பதை நிரூபிக்க வரலாற்றுப்பூர்வ ஆதாரங்கள் நிறையவே உள்ளன.

சேது சமுத்திரத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்தப் புராதன கால பாலம் அழிந்துபோகும் அபாயம் உள்ளது.

இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்லாமல் இந்திய கடற்கரையோரமாக வங்கக் கடலிலிருந்து அரபிக் கடலுக்குச் செல்வதற்கான கடல்வழி அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.

இந்தத் திட்டம் நிறைவேறினால் வர்த்தக ரீதியில் ஆதாயம் அடைய முடியும் என இந்தத் திட்டத்தின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இந்தத் திட்டத்தை ஜெயலலிதாவும் அவரது அதிமுகவும், அத்வானி மற்றும் பாஜகவும் எதிர்க்கின்றன. விஎச்பியும் ஆர்.எஸ்.எஸ்.ஸýம்கூட தீவிரமாக எதிர்க்கின்றன. இந்த எதிர்ப்பை அமைப்பு ரீதியில் மக்களைத் திரட்ட என்று கருத வாய்ப்பு உள்ளது. ஆனால், மடாதிபதிகளின் எதிர்ப்பு மதநம்பிக்கை ரீதியிலானது. அவர்களது உணர்வுக்கு மதச்சார்பற்ற ஓர் அரசு மதிப்பு தருவது அவசியம்.

இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், சேது சமுத்திரத் திட்டம் என்று பெயரிட்டிருந்தாலும் சுவாமி தயானந்த சரஸ்வதி சொல்லி இருப்பதுபோல், சேது இருக்காது சமுத்திரம் தான் இருக்கும் என இந்த ஆன்மிகத் தலைவர்கள் வேதனையில் உள்ளனர்.

சேது சமுத்திரத் திட்டத்துக்கு அரசியல் ரீதியில் எழும் எதிர்ப்பை, உள்நோக்கம் கொண்டது என அர்த்தம் கற்பித்து நிராகரிக்கலாம். ஆனால் ஆன்மிகத் தலைவர்களின் எதிர்ப்புக் குரலை எப்படி நிராகரிக்க முடியும்? அவர்களுக்கு அரசியல் உள்நோக்கம் இல்லையே. அவர்களது வேதனை உணர்வுகளை அரசு புறந்தள்ளிவிட முடியுமா?

கடவுள், மதம், இதிகாசம், புராணத்தின் பெயரில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறார் கருணாநிதி. இந்த தர்க்கம் ஆபத்தானது.

இந்தத் திட்டத்துக்கு மத நம்பிக்கை ஒன்றால் மட்டுமே எதிர்ப்பு எழவில்லை. இந்திய புவியியல் ஆய்வு அமைப்பின் ஓய்வுபெற்ற தலைமை இயக்குநர் எஸ்.பத்ரிநாராயணன், புவியியல் துறை நிபுணர் வி.சீனிவாசன் போன்றோர், இந்தப் பாலம் இயற்கையாக உருவானதல்ல என்றும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

மதத்துக்கு அப்பாற்பட்டும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு உள்ளது. மதச்சார்பின்மைக் கொள்கையில் ஊறியவர்களும் அறிவுஜீவிகளுமான நீதிபதிகள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், கே.டி.தாமஸ் போன்றோரும் பூகோள-அரசியல் மற்றும் பாதுகாப்பு கோணத்தில் இந்தத் திட்டம் மீது கவலை வெளியிட்டுள்ளனர்.

சுனாமி தொடர்பாக உலக அளவில் சிறந்த நிபுணர்களாகத் திகழ்பவர்களில் ஒருவரான டாக்டர் தாட் மூர்த்தி (கனடா) "2004ல் சுனாமியின் பேரழிவிலிருந்து ராமர் பாலத்தால் காப்பாற்றப்பட்ட கேரளம் இனி சுனாமி பாதிப்புக்கு இலக்காகும்' என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் அலுவலகத்திலிருந்துகூட இந்தத் திட்டம் தொடர்பாக 16 கேள்விகள் அனுப்பப்பட்டன. திட்டம் தொடங்கிய 2 நாள்களுக்கு பிறகு தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகம் பதில்களை அனுப்பியது.

சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிர்ப்பாக உள்ள இந்த வல்லுநர்களும் அறிவுஜீவிகளும் தேசத் துரோகிகளா? முதல்வர் கருணாநிதி பதில் கூற வேண்டும்.

புரி, துவாரகை, பத்ரிநாத், சிருங்கேரி மடங்களின் சங்கராச்சாரியர்களும் தேசத் துரோகிகளா?

ராமர் பாலம் இடிக்கப்படுவது பற்றி வேதனைப்படும் இவர்கள், உண்மையில் சொல்லப்போனால் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்கவில்லை. புராதன ராமர் பாலத்துக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் சேது கால்வாய் அமைக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். இது சாத்தியமானது என்றே வல்லுநர்களும் கூறுகின்றனர். அதை அரசு ஆராய வேண்டும். ஆனால் அதைச் செய்ய விருப்பம் இல்லாமல் உள்ளது அரசு.

சட்டப் பேரவை சேவையில் பொன்விழா கொண்டாடிய உன்னத தலைவரான முதல்வர் கருணாநிதி, அறிவியலறிஞர்கள் மீதும் மதத்தலைவர்கள் மீதும் வெறுக்கத் தக்க வார்த்தைகள் வீசியதைத் தவிர்த்திருக்கலாம். அதற்கு மாறாக நன்கு பகுத்தறிந்து வெளியிடப்பட்ட எதிர்ப்பை அடுத்து, இந்தத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கலாம்.

அறிவுபூர்வமான ஆலோசனையைச் செவிகொடுத்து கேட்காத ஓர் அரசு, ஆங்காங்கே மக்களின் போராட்டத்தையே எதிர்கொள்ள வேண்டிவரும்.


15 Comments:

வால்டர் said...

தினமலத்தில் இருந்து காப்பி பேஸ்டா ஊசிப்போன வடை?

சதுக்க பூதம் said...

Sethu bridge is not man made one.It was built by monkeys and Anils.Sankaracharya tried to change the history.Best proof is that 3 lines drawn behind their back

Anonymous said...

அரசியல் சூறாவளியில் இந்துமதத் தலைவர்கள் சீரழியாது இருக்கவேண்டும். கோவாவில் பிஜேபி ஆன்மீகமும் அரசியலும் கலக்க வேண்டாம் என்று கோரிக்கை விடும்போது நாடு தழுவிய அளவில் ஆன்மீகத்தலைவர்களை இதுபோல அரசியலுக்கு இழுத்து அவர்களது 'புனித பிம்பத்தை' உடைக்கப் போகிறார்கள்.
எனக்கென்னவோ கலைஞர் இந்துமதத்தைக் காப்பாற்றுபவராகவும் பிஜேபி அதை அழிவுப் பாதையில் கொண்டுசெல்பவர்களாகவும் தெரிகிறது. :((

Ravi said...

I think your starting line-e tells it all. Bharathiyaar appavae solli irukkaar: "Sethuvai 'medu' paduthi"-nu... 'udaithu'-nu sollala.

I think this should be viewed as a case of preserving our ancient treasure than relating it to a religious feud.

When I first saw the Nasa snaps (few years ago, before the Sethu project was taken up), I was amazed. And when reasearchers have said its a man-made structure, it amazes me further to know that such an age old structure has withstood for so many years. So don't we have a responsibility not to disturb it? - if not protect it!!

Just because the Sethu canal is being attributed to Ramar, MK is opposing it vehemently. Had it been attributed to a myth of some other religion - say Christianity or Islam, I am sure MK wouldnt have the guts to vent out like this. And I am 100% sure!!

My point is: the Sethu bridge is our ancient treasure and it needs to be protected - even if it is associated with Christianity, Islam, Sikhism, Buddism, Jainism or any other religion.

Anonymous said...

1. Not even waited to get a NOC from Tamilnadu pollution control Board
2. Not get a clearnce from NEERI,(National Environmental Eng. Research Institute) India.
3. Why archeologist are not allowed to inspect the place?
Why this urgent?
is it commission problem.....

Anonymous said...

பதிவுக்கே காப்பி-பேஸ்ட் செய்கிறவர்களுக்கு மத்தியில் செல்லமுத்து குப்புசாமியின் நல்ல பதிவு ஒன்றை பின்னூட்டத்தில் காப்பி-பேஸ்ட் செய்து சிந்திக்கமுடிபவர்களுக்காக இங்கு தாருகிறேன் -

இப்போதைய இந்தியாவும், இலங்கையும் ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவுக்குக் கிழக்கே (அல்லது அதன் பகுதியாக விளங்கிய) லெமூரியாக் கண்டத்தில் இருந்தன. காலப் போக்கில் மெதுமெதுவாக நகர்ந்து ஆசியாவுடன் மோதி ஒட்டிக் கொண்டன. அந்தத் தாக்கம் தந்த அழுத்தத்தில் எழுந்ததுதான் இமயமலை என்று புவியியல் வல்லுநர்கள் நிரூபித்துள்ளனர். தற்போதைய இலங்கைத் தீவு இந்தியத் தீபகற்பத்தில் ஒரு பகுதியாக இருந்தது. சில தாழ்வான பகுதிகளைக் கடற்கோள் விழுங்கிய காரணத்தால் இலங்கை தனித் தீவாக உருவெடுத்தது.

இப்போதும் கூட வங்கக் கடலின் ஒரு பகுதி ஆழமாக இல்லை. இந்தப் பகுதியை 'சேது சமுத்திரம்' அல்லது 'சேது' எனக் குறிப்பிடுவர். மகாகவி பாரதி, "சேதுவை மேடுறுத்தி வீதி செய்குவோம், சிங்களத் தீவினுக்கோர் பாலம் அபைப்போம்" என்று பாடினார். அந்த அளவுக்கு மேடாக இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த இடைவெளி பாக் ஜலசந்தி எனப்படுகிறது. அதன் வழியாகப் படகுகள் போகலாம். ஆனால், கப்பல் செலுத்துவது கேள்விக்கு அப்பாற்பட்டது.

வலிமை வாய்ந்த சோழப் பேரரசின் கடல் வாணிகத்திற்கு நாகப்பட்டினம் துறைமுகம் நுழைவாயிலாக விளங்கியது. காலப் போக்கில் அதைக் கடல் உள்ளிழுத்துக் கொண்டது. தென்னிந்தியாவின் அரசியல் மற்றும் வியாபார மையமாக பிரிட்டிஷ்காரர்கள் சென்னையைத் தேர்ந்தெடுத்த பிறகு சென்னைத் துறைமுகம் பிரபலமானது. சோழர்களின் நாகைத் துறைமுகம், பல்லவர்களின் மகாபலிபுரத் துறைமுகம் ஆகியவை கொண்டிருந்த இடத்தை சென்னை அபகரித்துக் கொண்டது. ஆனால், தூத்துக்குடித் துறைமுகம் இன்னமும் பயன்பாட்டில் உள்ளது. சென்னையைப் போலல்லாமல் தூத்துக்குடி இயற்கைத் துறைமுகம் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

சரி..இந்த விவரமெல்லாம் இப்போது எதற்கு என நீங்கள் கேட்கக் கூடும். காரணம் இருக்கிறது. உலகத்தின் மூன்று மிகப் பெரிய துறைமுகங்களை எடுத்துப் பார்த்தால், அவற்றில் ஒன்று சீனாவில் உள்ளதை அறிகிறோம். அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனென்றால், சீனா பரந்த நிலப்பரப்பும், நிறைய மக்கள் தொகையும், அபாரமான பன்னாட்டு வியாபாரமும் ஒருங்கே அமைந்த தேசம். எனினும், நமக்கு ஆச்சரியம் தருவதெல்லாம் முதல் மூன்று துறைமுகங்களில் மற்ற இரண்டு எங்கே அமைந்துள்ளது என்பதில்தான்.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் உலகத்தையே வளைத்துப் போடுவதில் முனைப்பாக இருந்த சமயத்திலே கூட ஐரோப்பாவில் மிகவும் செழிப்பாகத் திகழ்ந்தவர்கள் டச்சுக்காரர்கள். அதற்கு முக்கியமான காரணம் அவர்களின் நெதர்லாந்து(ஹாலந்து) ரோட்டர்டாம் துறைமுகமாகும். ஹாலந்து ஒரு குட்டி நாடு. வெறும் ஒன்றரைக் கோடு மக்களை மட்டுமே கொண்டது. ரோட்டர்டாமின் கடல் போக்குவரத்து ஹாலந்தின் தேவைகளை நிறைவு செய்வதைக் காட்டிலும் ஏனைய ஐரோப்பிய நாட்டுச் சரக்குகளைக் கையாளவே பயன்படுகிறது. அந்த நாட்டில் கடல் மட்டத்திற்குக் கீழே அமைந்துள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையமும் அப்படியே.

இரண்டு துறைமுகங்களைக் கவனித்து விட்டோம். மூன்றாவது சிங்கப்பூரில் உள்ளது. ஒரு நகரம், நாடு என்ற வகையில் தனி நபர் வருமானத்தில் மிகச் சிறப்பாக விளங்கும் ஒரு பகுதி சிங்கப்பூர். அவர்களின் முக்கியத் தொழில் வியாபாரமும், சேவைகளுமே; தொழில் மற்றும் வேளாண்மை அல்ல. சிங்கப்பூர்த் துறைமுகமும், அது சார்ந்த தொழில்களும் நிறையப் பேருக்கு வேலை வாய்ப்பையும், செழிப்பான வருமானத்தையும் அளிக்கிறது.

சிங்கப்பூர் முக்கியமான நிறுத்துமிடம். அங்கு நேரடியாக வருகை தரும் கப்பல்களைக் காட்டிலும் சில மணி நேரம் நிறுத்தி இளப்பாறி விட்டு பயணத்தைத் தொடரும் கப்பல்களே அதிகம். இந்தியாவின் மேற்குக் கரைக்குச் செல்லும் பல இந்தியக் கப்பல்களும் அதில் அடக்கம். ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து தென்கிழக்காசிய நாடுகளுக்கும், ஜப்பான் & அமெரிக்க மேற்குக் கரைக்குச் செல்லும் கப்பல்களும் உண்டு.

உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். நமது கப்பலை எதற்காக சிங்கப்பூரில் நிறுத்த வேண்டும். நமது கிழக்குக் கரையோரமாக எதாவது ஒரு துறைமுகத்தைப் பயன்படுத்தக் கூடாதா? நிச்சயமாகக் கூடும். அதற்குத்தானே தூத்துக்குடி இருக்கிறது! ஆனால், ஒரு சிக்கல். அங்கு வந்தால் மறுபடியும் இலங்கையைச் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும். அல்லது வரும் போதே இலங்கையைச் சுற்றிக் கொண்டு வர வேண்டும். அப்படிச் செய்வதில் நடைமுறைச் சாத்தியம் ஏதுமில்லை. எரிபொருளும், நேரமும் விரயமாகும்.

ஆனாலும், ஒரு வழி இருக்கிறது. சேதுவை மேடுறுத்தி வீதி செய்வதற்குப் பதிலாக ஆழமாக்கி வாய்க்கால் செய்தால், இலகுவாக கப்பல் விடலாம்.

அப்படிச் செய்தால் சிங்கப்பூர் மற்றும் கொழும்புத் துறைமுகங்களில் இருந்து கணிசமான பிசினஸ் நம் கரைக்கு வந்து ஒதுங்கும். நம்முடைய 135 ஆண்டு காலக் கனவாக இது இருந்து வந்திருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவிலும், சுதந்திர இந்தியாவிலும் பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அதைச் செய்வதற்கான சாத்தியத்தை அளவிடும் ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டன. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதும், திட்டங்களுக்கான முதல் முயற்சி கை விடப்பட்டது நடந்தது.

சேது சமுத்திரம் பற்றிய பேச்சு அடிபடும் போதெல்லாம், இலங்கை கலக்கமடைந்தது. புது டெல்லிக்குத் தூதனுப்பி அந்தக் கலக்கத்தை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளிப்படுத்தி வந்திருக்கிறது. அதற்கான காரணத்தைக் கண்டு பிடிப்பதற்கு நாம் ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை விட வேடிக்கை என்னவென்றால், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் இலங்கையின் பொருளாதாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று இந்தியா பல்வேறு சந்தர்ப்பங்களில் உறுதி கொடுத்துள்ளது. நம் நாட்டின் பொருளாதாரம் முன்னேறாமல் போனாலும் பரவாயில்லை, பக்கத்து நாட்டிற்குப் பாதிப்பு வரக்கூடாது என்ற நல்லெண்ணம் அதில் வெளிப்படதை தமிழக அரசியல்வாதிகள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

பல ஆண்டுக் கனவாகிய சேது சமுத்திரத் திட்டத்திற்கு நடப்பு மன்மோகன் சிங் அரசு செயல் வடிவம் அளித்துள்ளது. 2,400 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடந்து வருவதாக அறிகிறோம். பல வருடங்களாக வைகோ சேது சமுத்திரத் திட்டம் பற்றிய கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார். ஆனால், மத்திய அரசில் வலுவான கூட்டணியாக தி.மு.க. உருவெடுத்த காரணத்தினாலும், அந்தக் கட்சியின் அமைச்சர் துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கிற காரணத்தினாலும் திட்டத்தை எளிதாக நிறைவேற்ற இயன்றது. எதிர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால், வேலைகளுக்கு அது முட்டுக்கட்டை போடுவதாக அமையவில்லை.

ஆனால், சமீபத்தில் ஒரு பிரச்சினை உருவெடுத்திருக்கிறது. பா.ஜ.க. வும், அதன் சங்க பரிவாரங்களும், ராமகோபாலன் போன்ற நபர்களும் ராமர் பாலம் என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளனர். சேது சமுத்திரத் திட்டம் ராமர் பாலத்தை அழித்து விடும் என்பது அவர்கள் குற்றச்சாட்டு. இராமாயணம் என்பது புராணம். இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்ட தன் மனைவி சீதையை இராமர் மீட்க வேண்டும். அதற்காக அனுமனின் வாணரப் படைகள் பெரிய பெரிய கற்களைத் தூக்கிப் போட்டு கடலை நிரப்பிப் பாலம் அமைத்தார்களாம். அதுதான் ராமர் பாலம், அதன் மூலமாகக் கடலைக் கடந்து சென்று தன் மனைவியை ராமர் மீட்டு வந்தாராம். அதைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இதுதான் அவர்கள் பிரச்சினை.

விவாதத்துக்கு உரிய அந்தப் பகுதி மிகவும் மேடானது என்பதும், முற்காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது என்பது ஒரு தலைச் சார்பற்ற புவியியலாளர்கள் கூற்று. மனிதனோ அல்லது குரங்குகளோ உருவாக்கிய பாலமாக இருக்க முடியாது. அப்படியே பாலம் அமைந்திருந்தது என்ற கற்பனையைக் கொஞ்ச நேரம் ஏற்றுக் கொண்டு சிந்தித்துப் பார்த்தாலும் கூட, அது இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே போக்குவரத்து மற்றும் வணிகம் நடப்பதற்குச் சாதகமாக அமைந்த மேட்டுச் சாலையாக இருந்திருக்க வேண்டும். நூற்றாண்டுகளின் ஓட்டத்தில் கடல் அதை மூழ்கடித்திருக்க வேண்டும். எனவே, எந்த நோக்கத்திற்காக பாலம் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கமே இன்று அடிபட்டு வழக்கொழிந்து போன பிறகு அதைப் பற்றிப் பேசி என்ன பயன்? (போக்குவரத்திற்காக பாலம் கற்பனையின் அடிப்படையில் இந்த விவாதமே ஒழிய எதுவும் உறுதியாக நிரூபணமாகவில்லை என்பதைக் கவனிக்கவும்)

(இராவணனைத் தாக்கி அழிக்கும் நோக்கத்தோடு ராமர் செல்வதற்கு அனுமார் போட்டுக் கொடுத்த பாலம் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியே இருந்தாலும் இப்போது என்ன நன்மை? சீதாப் பிராட்டி திரும்பி வந்து விட்டார். நெருப்பில் குளித்துத் தன் தூய்மையை நிரூபித்தும் விட்டார். இனி மேல் ராமனுக்கு இலங்கையில் இருந்து மீட்டு வர வேறு மனைவிமார் எவருமில்லை. இருந்தாலும் கூட கடலுக்குள் மூழ்கிய பாலம் இனிமேல் உதவாது. அவரால் எப்படி கடலைக் கடக்க முடியும்? கள்ளத் தோணி ஏறிப் போக வேண்டும். இல்லையென்றால் பிரைவேட் ஜெட் பிடிப்பது நல்லது. அதை விடுத்துக் சேது சமுத்திரத்தைக் குழப்பி அதில் மீன் பிடிக்கக் கூடாது)

பதவியைப் பிடிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என எல்லா அரசியல் கட்சிகளுமே எதிர்பார்ப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், மதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, மூட நம்பிக்கைகளுக்கு எண்ணெய் ஊற்றி எரிய விட்டு அந்தச் சூட்டை வாகனமாகப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க நினைப்பது சரியல்ல. இத்தகைய காரியங்கள் நம் தேசத்தின் பொருளாதாரத்திற்கும், செல்வச் செழிப்பிற்கும் எதிராகத் திரும்பி சேது சமுத்திரம் போன்ற திட்டங்களைச் சீர் குலைப்பதை மன்னிக்கவே முடியாது.

1940களின் இறுதியில் தெற்காசியாவில் மூன்று நாடுகள் ஆங்கில ஏகாதிபத்திய அடக்கு முறையில் இருந்து விடுதலை அடைந்தன. இங்கிலாந்திலே படித்துப் பட்டம் பெற்ற மூன்று மனிதர்கள் அந்த மூன்று நாடுகளையும் ஆரம்ப காலத்தில் ஆட்சி புரிந்தனர். இந்தியாவிற்கு நேரு, பாகிஸ்தானுக்கு ஜின்னா, சிலோனுக்கு (அப்போது இலங்கைக்கு அதுதான் பெயர்) பண்டாரநாயகா.

நேருவைப் போல மற்ற இருவரும் இல்லை. மதத்தின் பெயராலும், மொழியின் பெயராலும் தங்கள் தேசியத்தைக் கட்டமைக்க முயன்றனர். நேருவைப் போன்ற ஒரு தொலைநோக்குப் பார்வையுடைய ஒரு மாமனிதர் இந்தியாவை ஆரம்ப காலத்தில் வழி நடத்தியதால்தான் இன்று உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடாகத் திகழ்கிறது. அதே ஆங்கில அரசிடம் அதே சமயத்தில் விடுதலை பெற்ற பாகிஸ்தானில் மக்களாட்சி கேலிக்கூத்தாக உள்ளது. புத்த மதத்தை அங்கீகரிக்கப்பட்ட ஒரே மதமாக இலங்கை அறிவித்து மாற்று நம்பிக்கைகளுக்கு வழியில்லாமல் செய்தது. சிங்களம் ஒரே மொழியாக அறிவிக்கப்பட்டது. வருடப் போக்கில் நிலைமை மேலும் மேலும் சீரழிந்து பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் படுகொலைக்கு ஆளாயினர். தமிழ்ப் பண்பாட்டின் நினைவுப் பெட்டகமாக இருந்த யாழ் நூலகம் இராணுவத்தினரால் தீக்கிரையானது.

இங்கும் கூட ஆங்காங்கு நடந்த கொடுமையான பல சம்பவங்கள் காலப் போக்கில் வரலாற்றின் பக்கத்தில் ஒதுங்கிக் கிடப்பது உண்மை. ஆயினும், நல்ல வேளையாக இந்தியா சமயச் சார்பற்ற மாபெரும் சமஸ்டி அரசாகத் திகழ்கிறது. இதற்குப் பெரும் பங்களிப்பும் நமது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவைச் சாரும். பல மத, மொழியைச் சேர்ந்த தேசிய இனங்கள் ஒருசேர இங்கே கூடி வாழ முடிகிறது.

ஆனால், பாரதிய ஜனதாவும் அதன் கூட்டமைப்புகளும் வரலாற்றை மாற்றியமைக்க முனைகின்றன. காந்தியையும், நேருவையும் சமகால வரலாற்றில் இருந்து ஓரங்கட்டி விட்டு அந்த இடத்தில் சாவர்க்கரை உட்கார வைக்க விரும்புகின்றன. அரசியல் மற்றும் நிர்வாகத்தில் மதம் கலந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை உலக வரலாறு திரும்பத் திரும்ப நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. சிங்களப் பேரினவாத அரசுகள் அதைக் காலங்காலமாகச் செய்து வருகின்றன. இஸ்லாமிய நாடுகள் சிலவற்றில் அடிப்படைவாத சக்திகள் அந்தப் பாதையை இறுகப் பற்றிக் கொள்கின்றன. அந்த வேலைகளுக்குச் சற்றும் சளைக்காமல் சமநிலைக்குத் தன்னை உயர்த்தித் தன்னாலும் ஈடுபட முடியுமென்று நிரூபிக்க பா.ஜ.க. முற்படுகிறது. எந்த ஒரு தேசமும், இனமும் இயற்கைக்கு எதிரான பாதையில் பின்னோக்கிப் பயணிக்க நினைத்தால் அழிவைச் சந்திக்க நேரிடும்.

காங்கிரஸ் கட்சியினர் இலஞ்சத்தில் திளைத்தவர்களாகவும், நிர்வாகத் திறமை அற்றவர்களாகவும் இருக்கலாம். ஆனால், அதெல்லாம் பாரதிய ஜனதாவின் இந்துத்துவா கொள்கையை நியாயப்படுத்தி விடாது. மற்ற கட்சிகளை விட அதிகமான அறிவுஜீவிகளைக் கொண்ட கட்சியாக பா.ஜ.க. அறியப்படுகிறது. ஆனால், மூளையை, அதன் சிந்திக்கும் ஆற்றலைச் சரியான திசையில் செலுத்தாவிட்டால் சாத்தானின் உறைவிடமாக அது மாறிவிடும்.

மேலே குறிப்பிட்ட நிலைப்பாடு பொருளாதார ரீதியாகவும், மேலோட்டமான ஆறாம் அறிவின் அடிப்படையிலும் அமைந்தது. கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவையோ அல்லது அவருடைய தலைவர் மு.கருணாநிதியையோ பினிதப் பசுவாக மாற்றும் முயற்சியல்ல. தமிழக முதல்வர் கருணாநிதி மிகத் தேர்ந்த தந்திரமான அரசியல்வாதி. அவர் மீதான பிற விமர்சனங்களைக் கட்டமைக்க பல கட்டுரைகள் தேவைப்படும்.

சேது சமுத்திரத் திட்டம் சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்றால், அது ஆராயத் தகுந்தது. வல்லுநர் குழு அந்தக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து தனது அறிக்கையைச் சமர்ப்பித்து, திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது. ஆகவே, திசை திருப்பு நோக்கத்துடன் 'சுற்றுச் சூழல் சுற்றுச் சூழல்' என்று கொழும்பு விடும் ஊளையை நாம் கண்டு கொள்ளாமல் விட்டது நல்ல செய்தி. மீனவர்களின் தொழிலை, அவர்தம் வருமானத்தைப் பாதிக்கும் என்றால், அதையும் மிகுந்த அக்கறையோடு அணுகித் தீர்வு காண வேண்டியது தேவையாகிறது.

ஆனால், காரணமே இல்லாமல் சில அமைப்புகளின் எதிர்ப்பை எல்லாம் சட்டை செய்ய வேண்டியதில்லை. மத மூட நம்பிக்கை மீது செளகர்யமாகச் சவாரி செய்து கொண்டு யாராவது சுரண்டிக் கொண்டிருப்பதையெல்லாம் ஒதுக்கி விட்டு வேலையைக் கவனிக்க வேண்டும். உண்மையிலேயே அனுமார் ஒரு பாலத்தைக் கட்டி, அது தண்ணீருக்குள் மூழ்கியிருந்தாலும் இதே நிலைப்பாட்டை எடுக்கத் தயங்கக் கூடாது.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதால் மக்களுக்கு உண்மையிலேயே நிறைய வேலை வாய்ப்புகள் பெருகாது என்றும், அது நம் நாட்டின் - குறிப்பாக தமிழகத்தின் - பொருளாதாரம் செழிக்க எவ்வகையிலும் உதவாது என்றும் சிலர் சந்தேகப்படுகிறார்கள். கடலைத் தோண்டி ஆழமாக்கி விட்டால் மட்டும் எல்லாம் நடந்து விடாது. துறைமுகப் பொறுப்புக் கழகத்திற்கு எட்டக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து, எளிமையான நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்து, பொறுப்புணர்ச்சியோடு செயல்படச் செய்து சிங்கப்பூரைப் போலத் திறமையாகச் இயங்க வைத்தால் நிச்சயமாக அனைவரும் போற்றும் திட்டமாக அமையும். சேது திட்டம் வந்தால் யாருக்கும் வேலை பெருகிவிடாது என்றும் வாதிடும் மக்கள் அதை நிறைவேற்றாமல் விட்டால் மட்டும் வேலை வாய்ப்புகள் பெருகிவிடுமா என்பதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

ஒரெ வேளை சேது சமுத்திரத் திட்டம் காமராஜர் காலத்தில் நடைமுறைக்கு வந்திருந்தால் உலக வரைபடத்தில் சிங்கப்பூரின் இடத்தை தூத்துக்குடி பிடித்திருக்குமோ என்னவோ!!

posted by Chellamuthu Kuppusamy at 7:29 PM

Anonymous said...

‘இராமர் பாலம்’ என்பதற்கு அறிவியல் ஆதாரம் உண்டா?

அயோத்தியில் இராமன் பிறந்ததாகக் கூறப்படும் ‘இராமஜென்ம பூமி’யில் தான் அதுவும் தற்போது இடிக்கப்பட்டுள்ள பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் கோவில் கட்டப்படவேண்டும் என்று அண்மைக் காலமாக அடம்பிடித்துச் செய்த இந்த இந்து வெறியர்களும் அவர்களின் நிறுவனமான ஆர்.எஸ் எஸ். அமைப்பும் இப்போது இந்திய மய்ய அரசின் திட்டமான சேதுக்கடல் திட்டத்தின் ஒருபகுதியான கடலை ஆழப்படுத்தும் பணிக்கு ஊறு செய்யும் வகையில் இவர்களின் கற்பனையான ‘இராமர் பால’த்தைச் சேதப்படுத்தக்கூடாது எனக் கூப்பாடு போட்டு வருகிறார்கள். இதுபற்றி இந்து முண்ணனியைச் சேர்ந்த திருவாளர் இராம.கோபால அய்யரும் அவரது கும்பலும் சிலபல நாட்களாகவே குரல் கொடுத்துக் குழப்பம் விளைவித்து வருகிறார்கள்.

தற்போது, இராமே°வரம் பகுதியில் கடலை ஆழப்படுத்தும் பணியை நிறுத்தக்கோரி வழக்குத் தொடர்ந்துள்ள இராமநாதபுரம் மாவட்ட ஆர்.எ°.எ°. தலைவர் குப்பு ராமு அவர்களின் கருத்து ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழில் வெளிவந்து அதன் ஒரு பகுதி 18.1.2007ஆம் நாளிட்ட ‘காலைக்கதிர்’ நாளிதழில் எடுத்து வெளியிடப்பட்டுள்ளது.
புராணங்கள் புகல்கின்றனவாம்!

அதில் அவர் கூறுகிறார்:
“ராமே°வரத்துக்கும் இலங்கைக்கும் இடையே ராமர் பாலம் அமைக்கப்பட்டதாகப் புராணங்கள் சொல்கின்றன. தற்போது தனுஷ்கோடியிலிருந்து பார்க்கையில் திட்டுத் திட்டாகத் தெரியும் மணல் மேடுகளின் கீழ்ப்பகுதியில்தான் இந்தப் பாலம் உள்ளது.”

பொய்யான கதை மெய்யானதாகுமா?

இவர் கூறுவதைப் பார்த்தால், புராணங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் எல்லாம் உண்மையாகி விடுமா? வரலாறாகி விடுமா?
“பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கக்கத்தில் வைத்துக் கொண்டு கடலில் முழுகினான் ஓர் அரசன்” என்றுதான் புராணம் கூறுகிறது.

இதனால் இந்தக் கதை உண்மையாகிவிடுமா? புராணத்தில் கூறப்பட்டதாலேயே உருண்டையான பூமி தட்டையாகி விடுமா?
இக்கருத்து அறிவியலுக்கு ஏற்புடையதாகி விடுமா?

அறிவியலாளர்கள் உரைப்பதென்ன?
தனுஷ்கோடிக்கும் தலை மன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மணல் திட்டுகளின் வடபுறம் கடல் நீரோட்டம் இடமிருந்து வலமாகவும், தென்புறம் வலமிருந்து இடமாக இருப்பதால் இடையில் அமைந்துள்ள பகுதியில் மணல் சேர்ந்து, அவற்றின் மேல் பாசிப் படிமங்கள் தோன்றி, பாலம் போன்ற அமைப்பாக உருவானதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
இயற்கை செயற்கை அல்ல!

மேற்கூறிய மணல் திட்டுகள், நேராக, பாலம் போன்று இணைக்காமல் வளைந்து, காணப்படுவதும் இவை இயற்கையாக உருவானதற்குச் சான்றாக விளங்குகிறது. இதனைத்தான், ‘மணல் திட்டுகளின் அடியில் இராமர் கட்டிய பாலம் இருக்கிறது’ என்கிறார் இந்த ஆர்.எ°.எ°.எ°.காரர்.

எது உண்மை?
அவர் மேலும் கூறுகிறார்:
“இப்படி ஒரு பாலம் இருக்கிறதா? எனச் சந்தேகம் வரலாம் ஆனால் கடலின் அடியில் பாலம் என்பதுதான் உண்மை. இதைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ தெளிவுபடுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக எடுத்த படங்களையும் ‘நாசா’ வெளியிட்டுள்ளது. சுமார் பதினேழு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது அது என, ‘நாஸா’ சொல்கிறது.”

சொல்லாத உண்மை
‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம் இதுபற்றிய படங்களை வெளியிட்டுள்ளது உண்மையே! அது வெளியிட்டுள்ள படங்களில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல் மட்டத்திற்குச் சற்று, கீழே நீண்ட மணல் திட்டுகள் ஒரு பாலத்தைப் போன்று இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

இந்தப் படங்கள் குப்புராமு கூறுவது போல சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்படவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன் ‘நாசா’ வெளியிட்ட படங்கள் அவை. ஆனால், “இவற்றின் வயது பதினேழரை இலட்சம் ஆண்டுகள் என்றோ, அல்லது இவை மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதாகவோ, எப்போதும் தகவல் வெளியிடவில்லை.”
என, நாசா அறிவியலாளர்கள் திட்ட வட்டமாக மறுத்துவிட்டனர்.

நாங்களா சொன்னோம்?
குறிப்பாக, ‘இந்தப் பாலத்தை இராமாயண காலத்தில் கட்டினார்கள் என்று நாங்கள் கூறவே இல்லை’ என ‘நாசா’ அறிவியலாளர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

குதியாட்டம் போடுவதா?
அப்படியானால், இப்படிப்பட்ட தகிடுதத்த வேலையை பித்தலாட்ட திரிபுக் கருத்து எப்படி வெளிவந்தது?
‘இன்டோ லிங்க்காம் வைஷ்ணவ நியூ° நெட் ஒர்க்’ என்னும் இணைய தள அமைப்புதான் இத்தகைய செய்தியை ‘நாசா’ கூறாத செய்தியை கூசாமல் வெளியிட்டது. இதனை வைத்துக் கொண்டுதான் இந்தக் குப்பு ராமு ஒரே குதியாட்டம் போட்டு நீதிமன்றத்தின் நெடிய வாயிலிலே போய் நின்று கொண்டிருக்கிறார்.

மறுப்புக் கோவை
இந்த இணையதளத்தின் பொய்யான புரட்டான தகவலை அது வெளிவந்த காலகட்டத்திலேயே சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர்.

இதனை சன்டே டைம்° (ளுரனேயல கூஐஅநள) ஏடு 20.10.2002இல் வெளியிட்டுள்ளது. அவற்றின் சில பகுதிகளை மட்டும் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும்.

எந்தத் தொடர்பும் இல்லை
ஜே.வி. நர்னீகர் என்பவர் புகழ்மிகு வானியல் இயற்பியல் வல்லுநர் : “கட்டுக்கதையாக (ஆலவா)க் கூறப்படும் பாலத்தைக் கண்டுபிடித்துள்ளதாக வந்த செய்தியைக் கண்டேன். ஆனால், நாசாவின் கண்டுபிடிப்பிற்கும் இராமாயணப் பாலத்திற்கும் தொடர்பு இருப்பதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை!” என அவர் கூறியுள்ளார்.

சான்றுகள் இல்லையே!

ஆர்.எ°.சர்மா எனப்படும் இராம் சரண் சர்மா என்பவர் ஒரு மூத்த வரலாற்று ஆய்வாளர். அவர் கூறுகிறார்: “இராமாயண காலப் பாலம் கட்டியதற்கு அகழ்வு ஆராய்ச்சிச் சான்றோ இலக்கியச் சான்றோ இல்லை. பாலம் போலத் தோன்றும் மணல் திட்டுக்களின் காலம் பதினேழரை லட்சம் ஆண்டுப் பழைமையது என்றே வைத்துக் கொண்டாலும், அந்தக் காலத்தில் மனிதர்களே இல்லை.

கிடைத்துள்ள சான்றுகளின் படி, இராமாயணம் எழுதப்பட்ட மிகப் பழங்காலம் கி.மு. 400 ஆகும். அய்ந்து கட்டங்களாக அது, வெவ்வேறு காலங்களில் விரிவு படுத்தப்பட்டது.
6000 சுலோகங்களாக இருந்த வால்மீகி ராமாயணம் கி.பி. 1200இல் 24,000 சுலோகங்களாக விரிந்தது.
இராமாயணக் கதை பற்றியே இலக்கியச் சான்று கி.மு. 1500 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை.
கதையில் கூறப்படும் பாலம் மற்றும் இலங்கை ஆகியன எந்த இடத்தில் இருந்தன என்பதையே இன்னும் முற்றாக அறிய முடியவில்லை.”

கேலிக்கூத்து
டில்லிப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டி.என்.ஜா ஒரு மூத்த வரலாற்றுப் பேராசிரியர்.டி.என்.ஜா பின்வருமாறு கூறியுள்ளார்:
“நாசா” ஒளிப்படக் கருவி பிடித்த படங்கள் ஒரு புவியியல் வடிவமைப்பைக் காட்டுவன. இயற்கையாக உருவான மணல் திட்டுகளின் தொடர்தான் காணப்படுகின்றது. இத்தொடர் ஒரு புவியியல் செய்திதான்! வரலாற்றுச் செய்தியன்று.
இராமனுடனும், இராமாயணத்துடனும் அதைத் தொடர்புபடுத்துவது கேலிக்குரியது.

காண்பன எல்லாவற்றையும் இராமாயணத்துடனும் மகாபாரதத்துடனும் இணைத்துச் சொல்வது கட்டுக் கதைதான்; வரலாறு ஆகாது!”

மனித இன மலர்ச்சி

இந்த இந்து வெறியர்கள் கூறுவது போல அவர்கள் கூறும் இராமர் பாலம் பதினேழரை லட்சம் ஆண்டுகள் என்பதாகவே வைத்துக் கொள்வோம்.

மனித இனவளர்ச்சியை ஆய்வோமானால் மதி மனிதன் எனப்படும் மனித இனம் தற்கால வகை மனித இனம் தோன்றியது ஏறத்தாழ 2 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தித்தான்.

அதற்கும் முற்பட்ட நிமிர்நடை இனம் (HOMO SAPIENS) எனப்படுவது குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினங்கள் 7 லட்சம் ஆண்டுகட்கு முன்னர்தான் ஆஃபிரிக்காவிலிருந்து வெளிவந்தன.

குரங்குக் கூட்டமாக...
தற்போதைய மனித இனம் ஏறத்தாழ இரண்டரை அல்லது மூன்று லட்சம் ஆண்டுகட்கு முன்னர்தான் தோன்றின.
இராமன் காலம் எனக் கூறப்படும் திரேதாயுகம் எனப்படும் பதினேழரை லட்சம் ஆண்டுகட்கு முன்னர் குரங்கினங்களாகவே நாம் இருந்து வந்துள்ளோம்.

கண்டுபிடிக்கப்படாத கருவிகள்

கோடரி போன்ற ஆயுதங்கள், கருவிகள்கூட அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அந்தக் காலத்தில், இராமன் கருவிகள் கொண்டு பாலம் அமைத்ததாகக் கூறப்படுவது நம்பத்தகுந்ததா? அறிவியலுக்குப் பொருந்துவதா?
இராமன், இராவணன் போன்றோர் அரண்மனைகளில், மாடமளிகைகளில் இருந்து ஆட்சி புரிந்ததாகவும் பல்வகை அ°திரங்களைக் கொண்டு போர் புரிந்ததாகவும் கூறப்படுவது அறிவுக்குப் பொருந்துவதாக உள்ளதா?
இல்லை! இல்லை! இல்லவே இல்லை!

நிறுத்து! நிறுத்து!
இப்படிப்பட்ட நிலையில், தொடர்ந்து குப்பு ராமு கூறுகிறார்:
“தற்போது சேது சமுத்திரத் திட்டத்துக்காக கடலை ஆழப்படுத்தும் பணி இந்த ராமர் பாலத்தை நெருங்கிவிட்டது. அவ்வாறு ஆழப்படுத்தும்போது, இந்தப் பாலம் சேதம் அடையும் என்கிறார்கள். பாலம் உடைவதைத் தடுக்கத்தான் கடலின் அகழாயும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்கிறோம்”

யாரோ? அவர் யாரோ?

கடலை ஆழப்படுத்தும்போது இராமர் பாலம் சேதமடையும் என்கிறார்களாம்!

யார் அப்படிக் கூறுகிறார்கள்? அவர்கள் யார்?
சொல்வாரா குருமூர்த்தி அவர்கள்?
கடலில் பாலம் போன்றுதான் தோற்றமுள்ளதே தவிரப் பாலம் எதுவும் இல்லை என்கிறபோது அது எப்படிச் சேதமடையும்?

ஆசையைப் பாருங்கள்!
கற்பனையான பாலம் கற்பனையாகச் சேதம் அடையுமா?

இந்தக் கற்பனையான கட்டுக் கதையான பாலத்துக்காக சேது சமுத்திரத் திட்டம் நிறுத்தப்படவேண்டுமாமே!
பொருளாதார, அரசியல், சமுதாய, மக்கள் நல அடிப்படையில் உருவாகும் சேது சமுத்திரத் திட்டத்தின் கடல், ஆழப்படுத்தும் பணி, வெறும் இந்து மத நம்பிக்கையிலான ஆதாரமற்ற, அறிவியல் அடிப்படையில்லாத பொய்யான பாலத்துக்காக நிறுத்தப்பட வேண்டுமா?
அப்படியே ஏற்க வேண்டுமா?
அவர் தொடர்ந்து கூறுகிறார்:

“வழிபாட்டுக்குரிய புனிதச் சின்னம் உடைக்கப்பட்டு விடக் கூடாது என்பது தான் எங்கள் கோரிக்கை”.
பாபர் மசூதியை இடித்தவர்கள் எந்த முகத்தோடு இதைச் சொல்கிறார்கள், பாருங்கள்! - வெட்கங்கெட்டவர்கள்.
இல்லாத, கற்பனையான மத நம்பிக்கையின் வழியிலான பாலம் வழிபாட்டுக்குரியதாம்! புனிதச் சின்னமாம்!
இவர்கள் கூறுவதை அரசு அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
இது என்ன இந்து மத நாடா? இது என்ன இந்துமத அரசா?
வழிபாட்டுக்குரிய புனிதச் சின்னம் பிள்ளையார் சிலையினை மட்டும் உடல் பகுதிகளை வெட்டி, அறுத்து, உடைத்துத் துண்டுத் துண்டாக ஆக்கிக் கடலில் கரைக்கலாமா?
பதில் கூறுவாரா இந்த ஆர்.எ°.எ°.காரர்?
மதவெறி மாய்ப்போம்
மேலும் கூறுகிறார்: “இந்தப் பாலத்தைச் சேதப்படுத்தாமல் மாற்றுப் பாதையில் திட்டம் வகுக்க வேண்டும்”
சேது சமுத்திரத் திட்டத்திற்கான கடலியல், சுற்றுப் புறச் சூழலியல், பொறியியல் வல்லுநர்கள் கூறுவதை விட்டுவிட்டு இப்படிப்பட்ட கோமாளித்தனமான, மூடநம்பிக்கையாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டுமா?
நடக்காது; நடக்கக் கூடாது! நடக்கவும் விடலாகாது! இந்து மத வெறி மண்டையில் ஏறி, மூளையில் ஊறி இப்படி எல்லாம் பிதற்றுவதை இப்படிப்பட்டவர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்! இல்லையேல் நிறுத்த வைப்போம்!

Anonymous said...

Adam's Bridge is not a man made structure rather it's a geological phenomenon, according to N. Ramanujam, Head, Post Graduate Department of Geology and Research Centre, V.O. Chidambaram College, here.

He was reacting to both political and apolitical statements made by different sections , relating Adam's Bridge to the epic "Ramayana."

Speaking to The Hindu here on Friday, he said that Adam's Bridge is only a chain of shoals between the Palk Strait and the Gulf of Mannar, created by sedimentation owing to long shore currents.

Explaining the bridge's geological history, he said both the Palk Strait and the GoM were once part of the Cauvery basin, which was formed during the separation of India and Antarctica about 70 million years ago during the `Gondwana period.'

They were combined till a ridge was formed in the region owing to thinning of earth's crust. The development of this ridge augmented the coral growth in the region.

"The coral cover acted as a `sand trapper' leading to the formation of Rameswaram Island," Dr. Ramanujam said.

The long shore currents on the southern side of island created a discontinuous shoreline eastward from Dhanuskodi to Talaimannar, which's the Adam's Bridge.

He dispelled the fears of a few environmentalists and non-governmental organisations that destruction of Adam's Bridge to facilitate the implementation of Sethusamudram Ship Channel Project (SSCP) would create geological imbalance in the region.

"Considering that Adam's Bridge is just sedimentary deposits, its removal will not create any geological imbalance," he said.

Dr. Ramanujam ruled out any impact of the SSCP on the fragile eco-system in the GoM.

"Since the dredging was mainly carried out in Palk Strait, which was far away from the valued environmental assets in the GoM biosphere's buffer zone, coral reef eco system will not be affected," he said.

Courtesy: The Hindu - 17 March 2007

Anonymous said...

Whether rama made or krishna made , if one is good for nation, what is the problem of breaking the same...

வடுவூர் குமார் said...

நம் நாட்டுக்கும் மக்களுக்கும் வளப்பம் வரும் என்ற பட்சத்தில்...
பாலம் என்ன? இராமர் கோவில் இருந்தா கூட எடுத்திடலாம்.
இந்து மத்தத்தின் சாராம்சமே எங்கும் நிறைந்திருக்கும் "இறைத்தன்மை" என்பதால் கட்டிடத்துக்கெல்லாம் அதுவும் இப்போது பயன் படுத்தாத ஒரு இடத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்பது என் எண்ணம்.
இதெல்லாம் சரி,கடலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத,பயண்படாத பாலம்...
கத்திப்பாரா,விமான நிலையம்,சேனிடோரியம் பாலங்கள் ஏன் அப்படியே உள்ளது?
இதைப்பற்றி யோசிச்சு முடிவெடுத்தா,தரை மேல் உள்ள மக்களுக்கு பிரயோஜனமாக இருக்கும்.
சுந்தர் இப்படி சொன்னது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.அதுவும் இளைப்பாறவா?நம்ப முடியவில்லை.
சிங்கப்பூர் முக்கியமான நிறுத்துமிடம். அங்கு நேரடியாக வருகை தரும் கப்பல்களைக் காட்டிலும் சில மணி நேரம் நிறுத்தி இளப்பாறி விட்டு பயணத்தைத் தொடரும் கப்பல்களே அதிகம்.

Anonymous said...

Okay....Fine. Here, there is only targetting to disprove the Ramayana relation. But that is not the main point. The other points are:
1. why not even waited to get a NOC from Tamilnadu pollution control Board
2. why not get a clearnce from NEERI,(National Environmental Eng. Research Institute) India?.
3. Even some experts (Former Tutucorin Harbour chairman) questioned the nature of project.
4. Why archeologist are not allowed to inspect the place?
5. Anyone scientifically studied what is the impact on nature, if this bridge is removed/disturbed?
6. why the Indian Tsunmai scientific advisor warning is not taken into account?
7. What is the national security aspects in future?.

Anonymous said...

see the link
http://poduniversal.blogspot.com/2007/05/adams-bridge-also-known-as-ramar-bridge.html

Anonymous said...

ராமர் பாலம் பற்றி என்னுடைய பதிவை பார்க்கவும்.

http://nermai.wordpress.com/2007/05/04/ramar2/

http://nermai.wordpress.com/2007/04/13/ramarpoi/

http://nermai.wordpress.com/2007/05/14/poi2/

பார்வைகள் said...

சங்கராச்சாரியார்கள் தேசத் துரோகிகளா? கருணாநிதி பதில் சொல்லட்டும் - எதிர்வினை
முனைவர் தி.நெடுஞ்செழியன்

அன்புள்ள திரு. எஸ்.குருமூர்த்தி அவர்களுக்கு, வணக்கம்.
 சங்கராச்சாரியார்கள் தேசத் துரோகிகளா? கருணாநிதி பதில் சொல்லட்டும் என்னும் தலைப்பில் அமைந்த தங்களின் செய்திக் கட்டுரையை 19.05.07 நாளிட்ட தினமணி நாளிதழில் படித்தேன். கட்டுரை தொடர்பான என் எதிர்வினையைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், இதிகாசத்தின் பெயரால் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசத் துரோகிகள் என முதல்வர் கருணாநிதி சொல்லியிருக்கிறார். நீங்கள் சங்கராச்சாரியார்கள் தேசத் துரோகிகளா? என வினா எழுப்பியிருக்கிறீர்கள். என்னுடைய வினா என்னவெனில், கடலை மட்டுமே நம்பி வாழும் மீனவப் பெருங்குடி மக்கள் பலர் இத்திட்டத்தை ஆரம்பம் முதல் எதிர்த்து வருகிறார்கள். கடல் உயிரிகளின் வாழ்விடத்திற்கும் இனப் பெருக்கத்திற்கும் இத்திட்டம் இன்னலாக அமையும் என்றும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் எதிர்த்து வருகிறார்கள்.
அடுத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். காரணம் பவளப் பாறைகள் அகற்றப்படுவதால் பவளப் பாறைகள் மூலம் கிடைக்கக்கூடிய அந்நியச்செலவாணி கிடைக்காமல் போகும். சேதுசமுத்திரத் திட்டத்தின் மூலம் கிடைக்கக்கூடிய தொகையைவிட பவளப்பாறைகள் மூலம் கிடைக்கக்கூடியத் தொகை அதிகம் என்பதை புள்ளிவிவரங்களுடனும் சான்றா- தாரங்களை முன்வைத்தும் எதிர்த்து வருகிறார்கள். நர்மதை ஆற்றில் அணைக் கட்டுவதை எதிர்த்து மக்களைத் திரட்டி போராடி உச்சநீதிமன்ற தீர்ப்பினால் தோற்கடிப்- பட்ட மக்கள் போராளி மேதாபட்கர் கூட சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்த்து வருகிறார். இந்த நாட்டில் வாழும் ஏழை மக்களுக்கு இந்தத் திட்டத்தால் எந்த பயனும் விளையப்போவதில்லை. மேல்தட்டு வர்க்க செல்வந்தர்களுக்கே இத்திட்டத்தால் பயன் கிடைக்கும். ஏழை மக்களின் வாழ்க்கைக்கு உதவாத, பயன் விளைவிக்காத எந்தத் திட்டமானாலும் சரி, அது சேதுசமுத்திரத் திட்டமானாலும் அதை நான் எதிர்ப்பேன் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அண்மையில் சென்னை வந்திருந்த- போது, ஆழிப்பேரலை என்னும் சுநாமியால் இந்திய கடற்கரைகள் முழுவதும் தனியார் மயமாகி வருகிறது. சேதுசமுத்திரத் திட்டத்தால் இந்திய கடற்பகுதியே தனியார்- மயமாகும் அவலம் ஏற்படலாம் என்று அச்சம் தெரிவித்து தன் எதிர்ப்பை மக்களின் குரலாக மேதாபட்கர் பதிவு செய்துள்ளார்.
பண்பாட்டு ஆய்வாளர்கள் கூட சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். சேதுசமுத்திரத் திட்டத்தால் வருமானம் பெருகும். மக்களின் வாழ்க்கைத் தரம்கூட உயரும். அதே நேரத்தில் திட்டத்தால் பயன்பெறும் மக்கள் பண்பாட்டு தரத்தில் குறைந்துபோகும் அபாயம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள். இலங்கையைச் சுற்றி செல்லாமல் பல வெளிநாட்டு கப்பல்கள் தூத்துக்குடியில் சில நாட்கள் இளைப்பாறும் வாய்ப்புள்ளது. அக் கப்பல்களில் பணியாற்றும் பலநிலை தொழிலாளர்கள் பல்வேறு செலவுகளில் ஈடுபடுவார்கள். இதனால் வருமானம் குவியும். அதேவேளையில், விபச்சாரம், ஆபாச நடனங்கள் போன்ற பண்பாட்டுச் சீரழிவுகள் பெருகும். கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவது போல் உயர்ந்த பண்பாட்டின் சின்னமாய் விளங்கும் தமிழ்ப் பண்பாடு விரைவில் அழியும் அவலம் நிகழும் என எச்சரித்து எதிர்த்து வருகிறார்கள். இலங்கை அமைச்சர் ஒருவர்கூட சேதுசமுத்திரத் திட்டம் இலங்கைக்கு எதிரானது. இலங்கையின் பொருளா தாரத்தைக் குலைக்கும் செயல். சேதுசமுத்திரத் திட்டத்தைக் கைவிட்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தரைப்பாலம் அமைப்பது இலாபகரமாக இருநாடுகளுக்கும் அமையும் என்று கூறியுள்ளார். இதுபோன்று தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்பினர் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் முதல்வர் கருணாநிதி தேசத் துரோகிகள் என்று குறிப்பிடவில்லை என்பதை தாங்கள் முழுமையாக உணரவேண்டும்.
 கடவுள்,மதம்,இதிகாசம் இவற்றின் பெயரால் எதிர்ப்பவர்கள் மட்டுமே தேசத் துரோகிகள் என்று முதல்வர் கருணாநிதி வகைப்படுத்தி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். கடவுள்,மதம்,இதிகாசம் இம்மூன்றும் அறிவியல் சார்ந்தவையல்ல; நம்பிக்கை என்பதைவிட மூடநம்பிக்கை சார்ந்தவையாகும் என்பதுதான் தெளிவான உண்மையாகும். அறிவியல் முறைப்படி மெய்பிக்கப்படாத எந்த உண்மையும் அறிவுக்கு புறம்பானது என்பதும், அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும். பொட்டாசியம் பர்மாங்கனேட்டையும் மாங்கனீஸ்-டை-ஆக்ஸைடையும் ஒரு சோதனைக் குழாயில் போட்டு சூடேற்றினால் நிகழும் வேதி வினையால் கிடைக்கக்கூடியது ஆக்சிஸனாகவே இருக்கமுடியும் என்பது உண்மை. இந்த வேதி வினை எத்தனை முறை நடந்தாலும், எந்த நாட்டில் நடந்தாதலும் கிடைக்கக்கூடியது ஆக்சிஸனாகவே இருக்கவேண்டும். அமெரிக்க நாட்டில் நடந்த வேதி வினையில் கிடைத்தது நைட்ரசனாக இருந்தது என்றும் சுவிர்ச்சலாந்தில் நடந்த வேதி வினையில் கிடைத்தது கார்பன்-டை-ஆக்ஸைடாக இருந்து என்றும் விடை கிடைத்தால் வேதிப்பொருள்கள் வேறுவேறாகவே இருந்திருக்க வேண்டும் என்று நம்புவது அறிவு சார்ந்ததாகும். ஆக நம்பிக்கை என்பதும் அறிவு சார்ந்தே இருக்கவேண்டும். அறிவு சாராது "குறிப்பிட்ட" நாங்கள் அதை நம்புவோம். அதனால் எதிர்ப்போம் என்றால் எதிர்ப்புக்கு எவ்வாறு ஆதரவு கிடைக்கும். மக்களின் நலன் சார்ந்து, சுற்றுச்சூழல் சார்ந்து, பண்பாடு சார்ந்து நடைபெறும் எதிர்ப்புகளைக் கூட நாம் ஆய்வு செய்யலாம். ஆய்வின் முடிவில் கிடைக்கும் உண்மையைக் கூட ஏற்கலாம். ஆனால் மூடநம்பிக்கை சார்ந்தவைகளை எப்படி ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளமுடியும்?
மக்கள் நலன் சார்ந்து, சுற்றுச்சூழல் சார்ந்து எதிர்ப்பவர்கள் அனைவரும் கூடங்குளம் மின்னணு உலை, கிழக்கு கடற்கரைச் சாலை, பெப்சி மற்றும் கோலா நிறுவனங்களின் குடிநீர் தயாரிப்பு, மரபணு நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க விதைகள், மண்ணை நஞ்சாக்கும் இரசாயன உரங்கள், மரங்களை வெட்டுதல், புகைபிடிப்பிற்கு எதிர்ப்பு, புகையிலை எதிர்ப்பு என பல திட்டங்களைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். எதிர்ப்பில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஏன் தோல்வியும் அடைந்திருக்கிறார்கள். கடவுள்,மதம், இதிகாசம் இம்மூன்றின் பெயரால் எதிர்ப்பவர்கள் மக்கள் நலன்கூட முன்வைக்கவில்லை என்பதை உணரவேண்டும். மக்களைப் படைத்தவர்தானே கடவுள், அந்த கடவுள் உண்டாக்கியதுதானே மதம், அந்த கடவுள் எழுதியதுதானே இதிகாசம் என்றால் சேதுசமுத்திரத் திட்டத்தையும் எல்லாம் வல்ல அந்த கடவுளே பார்த்துக் கொள்ளட்டுமே. கடவுள் இருக்கிறார் என்றால் அவர் சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்க்கட்டும். அதில் கூட மக்கள் நலன் இருக்கும். மக்கள் நலனுக்கும் மக்களை ஒற்றுமைப்படுத்தும் பொதுவுடைமைக்கும் எதிரான சங்கராச்சாரியார்கள் சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பது எந்த வகையில் பொருத்தப்பாடுடையது?
உலகின் வலிமையான மதத்தலைவர், ஒரு நாட்டின் அதிபர், ஐக்கிய நாடுகளின் சபையில் ஒரு நாட்டின் சார்பில் உறுப்பினர் என்ற பெருமை பூத்தவர் கிறித்தவர்களின் மதத் தலைவரான போப்பாண்டவர். அந்த போப் மதத்திற்கு கொடுக்கும் முதன்மையை விட மனிதத்திற்குக் கொடுத்துக் கொண்டிருப்பதால்தான் அவர் உலக மக்களால் நேசிக்கப்படுகிறார். பேரறிஞர் அண்ணா புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்க சென்று தமிழ்நாடு திரும்பும் வழியில் இத்தாலி வருகிறார். அங்கே ஓய்வெடுக்கிறார். ஓய்வின்போது அண்ணா இந்திய மாநில முதல்வர் என்ற முறையில் மரியாதை நிமித்தம் போப்பைச் சந்திக்கலாம் என்று இந்திய தூதரகம் அண்ணாவைக் கேட்டுக் கொள்கிறது. அதற்கு அண்ணா, நான் ஒரு நாத்திகன். மதவாதியான கடவுள் நம்பிக்கைக் கொண்ட போப்பைச் சந்திக்கவிரும்பவில்லை என்று பதில் தருகிறார். போப் மதம்,கடவுள் இவை சார்ந்த நம்பிக்கையை விட மனிதத்தைப் போற்றக்கூடியவர் என்ற செய்தியால் அண்ணா போப்பை சந்திக்கிறார். சந்திப்பின்போது, "இந்தியாவில் உள்ள கோவா மாநிலத்தின் விடுதலைக்காகப் போராடிய இராணடே என்பவர் இந்தியா விடுதலைப் பெற்றும் இன்றுவரையில்(1968ன் இறுதி மாதங்களாக இருக்கலாம்) சிறையில் உள்ளார். இந்திய விடுதலையின்போது பல விடுதலை கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள். இராணடே விடுதலை கோராப்படக்கூடாதவர்கள் பட்டியலில் இருந்ததால் அவர் விடுவிக்கப்படவில்லை. இந்தியா விடுதலைப் பெற்று 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இராணடேவின் விடுதலை கேள்விக்குறியாகவே உள்ளது. அவரின் விடுதலைக்காகத் தாங்கள் குரல் கொடுக்கவேண்டும்" என்று போப்பை அண்ணா கேட்டுக் கொண்டு, சந்திப்பின் நினைவாக கலைஞர் கருணாநிதி தமிழர்களின் பண்பாட்டு காப்பியமான சிலப்பதிகாரத்தை அடிப்படையாக வைத்து எழுதிய நாடக சிலம்பு என்னும் நூலின் ஆங்கிலப் பிரதியைப் போப்பிடம் வழங்கிவிட்டு விடைபெறுகிறார்.
தமிழ்நாடு திரும்பிய அண்ணா மகிழ்ச்சியடைகிறார். காரணம், அண்ணா போப்பிடம் வைத்த வேண்டு கோளுக்கிணங்க, போப் சிறையிலிருக்கும் இராணடேவை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுகிறார். இதை உலக சமுதாயத்தின் வேண்டுகோளாக ஏற்கவேண்டும் என்று இந்திய அரசுக்குத் தெரிவிக்கிறார். இந்திய அரசு என்பது மதம் சாரா அரசு என்பதால் மதத்தலைவரான போப்பின் வேண்டுகோள் மனிதம் சார்ந்து இருப்பதால் வேண்டுகோளை நிராகரிக்காமல், இந்திய அரசு வேண்டுகோளை ஏற்று இராணடேவை விடுதலை செய்தது என்பது நிகழ்கால வரலாற்று உண்மையாகும். விடுதலை பெற்ற இராணடே நன்றி தெரிவிக்க போப்பைச் சந்திக்கிறார். அப்போது போப் நன்றிக்குரியவன் நான் அல்ல, இந்தியத் துணைக் கண்டத்தின் தமிழ்நாட்டில் முதல்வராய் இருக்கும் அண்ணாதான் உன் நன்றிக்குரியவர் என்று இராணடேவின் நன்றியை அண்ணாவிற்குக் காணிக்கையாக்குகிறார் போப். இராணடே சொந்த ஊருக்குச் சென்று தன் சொந்தங்களைப் பார்த்துவிட்டு மீண்டும் இந்தியா திரும்பி, அண்ணாவைச் சந்திக்க தமிழ்நாட்டிற்கு வருகிறார். அண்ணா இயற்கை எய்தி சிலநாட்கள் ஆகிவிட்டன என்னும் செய்தியறிந்து இராணடே மனமுடைகிறார். நாத்திகரான அண்ணாவும் கடவுள்,மதம் சார்ந்த நம்பிக்கைக் கொண்ட போப்பும் மனிதத்தைப் போற்றும் முனையிலும் மனிதத்திற்கு எதிரான நிலைப்பாட்டிலும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.
மனிதத்தை எந்த காலத்திலும் போற்றாமலும், பிறப்பில் கீழோர் மேலார் என்று வேற்றுமைப் பாராட்டிக் கொண்டு, ஜாதி இருக்கவேண்டும்; அது ஷேமகரமானது என்பதை இன்றளவிலும் போற்றிக் கொண்டும், சமஸ்கிருதம் தேவபாஷை என்றும் மற்ற பாஷைகள் நீசபாஷைகள் என்றும் பழித்துக் கொண்டிருக்கும் சங்கராச்சாரிகள் எவ்வாறு தேசநலனுக்கு உகந்தவர்களாக இருக்கமுடியும். அறுதியிட்டு உறுதியாகவும் இறுதியாகவும் கூறுகிறோம் சங்கராச்சாரியார்கள் (நீங்கள் விட்டுவிட்ட காஞ்சி சங்காரச்சாரியார்கள் உட்பட) அனைவரும் தேசத் துரோகிகளே. கலைஞர் முன்- மொழிந்த இந்த தேசத் துரோகிகளை உலகில் உள்ள மனிதம் போற்றும் மக்களின் சார்பில் வழி -மொழிகிறோம். கலைஞரின் முன்மொழிவையும், உலக மக்களின் வழிமொழிவையும் எதிர்கொள்ள வேண்டியதும், பொறுப்பாக பதில் சொல்ல வேண்டியதும் குருமூர்த்தியின் கடமையாகும். இந்தக் கடமையினை சரியாகவே குருமூர்த்தி செய்வார் என்று நம்புகிறோம்.
 தமிழர்களின் வரலாற்று ஆவணங்களில் ஒன்றாய் திகழும் தினமணியில் அக்கடமையினை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கிறோம். உங்களின் கட்டுரையில் இராமர் பாலம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதால் கட்டப்பட்டது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன எனக் கூறியுள்ளீர்கள். ஆனால் ஒரு சான்றைக்கூட முன்வைத்து உங்களின் வாதத்தை நிலைநிறுத்த தாங்கள் முன்வராமை ஏன்? மிக அண்மையில் நாடாளுமன்ற மக்களவையில் இராமர் பாலம் பிரச்சனையில், மைய அமைச்சர் மாண்புமிகு டி.ஆர்.பாலு வால்மீகி எழுதிய இராமாயணத்தைக் கையில் வைத்துக்கொண்டு இராமர் பாலம் இருப்பதை நிலைநிறுத்துங்கள். விவாதிப்போம் வாருங்கள் என்று அழைத்தபோது பிடரி தெரிக்க ஓடியவர்கள் இராமர் பாலம் இருந்ததாக நம்புகிற பாரதீய ஜனதா கட்சியினர்தானே. விவாதத்தில் இராமர் பாலம் இருந்தது என்பது உறுதியானால் இந்த அமைச்சர் பொறுப்பிலிருந்து உடனே விலகிவிடுகிறேன் என்று டி.ஆர்.பாலு அறைகூவல் விட்டபோது மெளனமாய் தலைகவிழ்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவர்கள் அறிவியலுக்குப் புறம்பான அந்த நம்பிகையாளர்கள்தானே? நீங்கள் முன்வைத்த விவாதத்திற்கு நாங்கள் பதில் அளித்துவிட்டோம். நாங்கள் முன்வைத்துள்ள விவாதத்திற்கு நீங்கள் பதில் அளிக்கவேண்டும். அதுதானே நாகரீகம் கூட.
 தங்கள் உண்மையுள்ள,
முனைவர் தி.நெடுஞ்செழியன், ஆசிரியர், www.tamilthinai.com தமிழ் இணைப் பேராசிரியர், ஏவிசி கல்லூரி(தன்னாட்சி),மன்னம்பந்தல்,மயிலாடுதுறை.
மின்னஞ்சல் : tamilthinai@gmail.com,info@tamilthinai.com

பார்வைகள் said...

pl.see www.tamilthinai.com
- Dr.T.Nedunchezhian