பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 01, 2007

பாபா கலைஞர் சந்திப்பு - கவர் ஸ்டோரி

பாபா கலைஞர் சந்திப்பு - தலையங்கள், கவர் ஸ்டோரி ( கல்கி, விகடன், ரிப்போட்டர் துக்ளக்)

பாபா உணர்த்தும் பாடம்! - கல்கி தலையங்கம்

‘‘எந்த மதத்தையும் வெறுக்காதீர்கள்; எந்த மனிதன் மீதும் வெறுப்பு காட்டாதீர்கள்’’ - பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா இவ்வாறு பேசியது நமது அரசியல்வாதிகளின் கவனத்துக்கே முக்கியமாக உரியது. மதங்களை அரசியலாக்குவதும் தனிநபர் தூற்றுதலும்தான் இன்று தேர்தல் வெற்றிக்கான குறுக்குவழிப் பாதைகளாகத் திகழ்கின்றன.

பாபா தமது அறிவுரையைப் பேச்சளவில் நிறுத்திக்கொள்ளாமல் செயல்வடிவிலும் நிகழ்த்திக்காட்டி முன்னுதாரணமாக ஒளிர்கிறார் என்பதையும் நாம் வணக்கத்துடன் கவனிக்க வேண்டியிருக்கிறது.

பாபா எந்த மதத்தையும் வெறுக்கவில்லை, ஒதுக்கவில்லை என்பதோடு நாத்திகவாதத்தைக்கூட தாம் வெறுக்கவில்லை என்பதை, தமது சமீப சென்னை விஜயத்தின்போது முதல்வர் மு.கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்ததன் மூலம்
நிரூபித்திருக்கிறார். நாம் என்றும் மறவாமல் நினைவில் கொள்ள வேண்டிய நிகழ்வு இது.

கடவுள் மறுப்பைக் கொள்கையாகவே பரப்பி வருபவர் கருணாநிதி. பாபா உள்பட பல ஆன்மிகவாதிகளைத் தாக்கிப் பேசத் தயங்காதவர்; தி.மு.க.வினர் திருநீறு அணிவதையும் குங்குமம் தரிப்பதையும் கூடச் சகியாதவர். அத்தகையவரை நாடிச் சென்று நேசம் பாராட்டும் சத்ய சாயி பாபாவின் செயலை, சகிப்புத் தன்மையின் அடையாளம் என்றோ, பெருந்தன்மையின் வெளிப்பாடு என்றோ சொல்வது கூட குறைத்து
மதிப்பிடுவதாகிவிடும். நிபந்தனைகளற்ற மனிதநேயத்தின் அடையாளமே அந்தச் சந்திப்பு. அதன் மூலம் இந்தியாவெங்கிலும் உள்ள குறுகிய மனம் படைத்த அரசியல்வாதிகளுக்கும் அவர்களுடைய பாதிப்பினால்
பிளவுபட்டுக் கிடக்கும் மக்களுக்கும் உன்னத செய்தியை
வெளிப்படுத்தியிருக்கிறார் பாபா.

இந்தச் சந்திப்பினூடே ஸ்ரீ சத்ய சாயி பாபா, முதல்வரின்
நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தவுமில்லை; தமது பாதையே மேன்மையானது என்று உயர்த்திப் பேசவுமில்லை; நிகழ்ந்த சந்திப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவுமில்லை. வேறு பலருக்குச் செய்ததைப் போல், பகுத்தறிவு வாதத்துக்குக் கட்டுண்ட துரைமுருகனுக்கும் தயாநிதி மாறனுக்கும் மோதிரங்களை வரவழைத்துக் கொடுத்துள்ளார். அவர்களும் அதனை மகிழ்வோடு ஒப்புக் கொண்டுள்ளனர்.

தமிழக முதல்வரோ, தாம் ஸ்ரீ சத்ய சாயி பாபாவுக்குக் குறைந்தவரல்லர் என்று உணர்த்த விரும்பி, பல விதங்களிலும் பேசியிருக்கிறார்:

காவிரியும் கொள்ளிடமும் இணைவதைப் போல் தாங்கள்
இணைந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். தமது அரசின் இலவசத்
திட்டங்களை, பாபாவின் சமுதாய சமூகப் பணிகளுடன் ஒப்பிட்டுப்
பேசியிருக்கிறார். அடுத்தபடியாக, கூவம் சுத்திகரிப்புக்கு பாபா உதவ வேண்டும் என்று கோரிக்கையையும் வைத்திருக்கிறார்!

முன்னொரு காலத்தில் அரசியலும் ஆன்மிகமும் கொள்ளிடம் - காவிரி போல் இருந்திருக்கலாம். இன்று நிச்சயம் அப்படி இல்லை. வேறு உதாரணம்தான் தேட வேண்டியிருக்கிறது. அரசின் பொறுப்புகளையெல்லாம் நிறைவேற்றுவது சேவை அமைப்புகளின் வேலை அல்ல. சமுதாய மேம்பாட்டுக்கான நிரந்தரப் பணிகள் (குடி நீர்த் திட்டங்கள், கல்விக் கூடங்கள், மருத்துவ வசதிகள் போன்றவை), அரசாங்கத்தின் இலவச வினியோகத்தைப் போல் மக்களைச் சோம்பேறிப் பிச்சைக்காரர்களாக்குவதில்லை.

கருணாநிதியைச் சந்தித்துத் திரும்பிய கையோடு, மனிதகுல மேம்பாட்டுக்காக மாபெரும் வேள்வி ஒன்றை சென்னையில்
நடத்துகிறார் பாபா. மத நம்பிக்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் சிறுமைப்படுத்தும் போக்கு, இனியேனும் தமிழகத்தை விட்டுத் தொலையுமானால், பாபா உணர்த்திய பாடம் முதல்வருக்கும் இதர
அரசியல்வாதிகளுக்கும் புரிந்தது என நாம் மகிழலாம்.


களஞ்சியங்கள் திறக்கட்டும்! - விகடன் தலையங்கம்

அரசியலும் ஆன்மிகமும் கலக்கும்போதெல்லாம் அது அனாவசியமான சர்ச்சைகளையும் தலைவலிகளையும்தான் உருவாக்கும் என்பதே இதுவரை பார்த்த பொதுவான காட்சி. ஆனால், இரு துருவங்கள் போல காட்சி அளிக்கும் இவை இரண்டும் சேர்ந்து, சென்னை மாநகரத்தின் தாகத்தையே தணிக்கும் அதிசயத்தை இப்போது பார்க்கிறோம்.

தமிழக முதல்வர் கருணாநிதி அடிப்படையில் நாத்திகவாதியாக இருந்தாலும், மக்களுக்கு உதவ முன்வந்த சத்ய சாய்பாபாவை இரு கரம் நீட்டி வரவேற்று, மனமார நன்றி தெரிவித்திருக்கிறார்.

இது ஓர் ஆரோக்கியமான ஆரம்பம்!

சூரத் கொள்ளை நோய், குஜராத் நிலநடுக்கம், கார்கில் யுத்தம் என இதயங்களை உலுக்கும் பேரழிவுகள் நிகழும்போதெல்லாம், பணத்தாலும் பொருளாலும் உடல் உழைப்பாலும் ஓடோடி உதவிக் கரம் நீட்டுவதில் எப்போதுமே தமிழகத்துக்குத்தான் முதல் இடம்!

அந்தத் தமிழகமே சுனாமியால் துயருற்றபோது, அதைத் துடைப்பதில் தன்னாலான பங்கைச் செய்தார் மாதா அமிர்தானந்த மயி. இதோ இப்போது, சென்னைக்குக் கிருஷ்ணா நதி நீரைக் கொண்டுவர நிதி அளித்திருக்கிறார் சத்ய சாய்பாபா.

இப்படி ஆந்திரத்தின் பாபாவும் கேரளத்தின் மாதாவும் காட்டுகிற அதே பரிவை, தமிழகத்திலேயே இருக்கிற பாரம்பரியமிக்க மடங்களும், உயர்ந்து வளர்ந்து நிற்கும் ஆன்மிக மையங்களும் ஏன் காட்ட முன்வரக் கூடாது?

பொது நலத் திட்டங்களுக்கு உதவ முன்வருவது யாராக இருந்தாலும் அவர்களுடன் கைகோக்க, கொள்கைகள் எதுவும் தடையாக இருக்காது என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் முதல்வர்.

கனவுகள் பல நனவாக, களஞ்சியங்கள் திறக்கட்டும். சாதி - மத பேதங்களைக் கடந்த சாதனை ஓட்டம் இங்கிருந்தே தொடங்கட்டும்.

புதிய சாதனைகள் தமிழகத்தின் சரித்திரத்தை மாற்றட்டும்!

சந்திப்பால் ஏற்பட்ட ஷாக் - குமுதம் ரிப்போட்டர் கவர் ஸ்டோரி

உலக அளவில் எத்தனையோ பிரபலங்களும், இந்திய அளவில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஜ.பி.க்களும் சாய்பாபாவை பலமுறை சந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் ஏற்படாத பரபரப்பும், விமர்சனமும் ஜனவரி 20_ம் தேதியன்று சென்னையில் பாபாவும், கலைஞரும் சந்தித்த பின்பு ஏற்பட்டிருக்கிறது. கூடவே பலதரப்பிலும் அதிர்ச்சி அலைகளையும் உண்டாக்கியிருக்கிறது.

அன்று காலை முதலே இருவரும் சந்திக்கப் போகிறார்கள் என்ற செய்தி உறுதிப்படுத்தப்படாமல் உலா வரத்தொடங்கியது. பாபாவே வந்து கலைஞரைச் சந்திக்கப்போகிறார் என்று கூடுதல் தகவல் வந்தபோது, யாராலும் அதை நம்ப முடியவில்லை. இரண்டு தரப்பிலும் அதை உறுதிப்படுத்தவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ‘அப்படியே சந்திப்பு நடந்தாலும் கலைஞர்தானே பாபாவைப் போய் பார்ப்பார்..?’’ என்ற கேள்வியுடனேயே பிற்பகல் மூன்று மணியிலிருந்தே கலைஞரின் கோபாலபுரம் வீட்டில் குவிய ஆரம்பித்தார்கள் பத்திரிகையாளர்கள். நான்கு மணி வாக்கில் தான் பாபா இங்கு வருகிறார் என்ற தகவலை உறுதிப்படுத்தினார்கள் முதல்வர் வீட்டில் இருந்த அதிகாரிகள்.

பாபாவை வரவேற்க மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அமைச்சர்கள் துரைமுருகன், பெரிய கருப்பன் ஆகியோர் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே வாசலுக்கு வந்து காத்திருந்தார்கள். சரியாக 4.25 மணிக்கு பாபா வந்து சேர்ந்தார். அவர் காரிலிருந்து இறங்கும் முன்பே காருக்குள் தலையை நீட்டி பாபாவை வணங்கிய துரைமுருகன், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

சாய்பாபாவுடன் வந்தவர்கள் கொண்டு வந்திருந்த சக்கர நாற்காலியில் பாபா அமர, அவரை முதல் மாடிக்கு அழைத்துச் சென்றார் தயாநிதிமாறன். கடவுள் மறுப்பு இயக்கத்தில் பயிற்சி பெற்ற கலைஞரும், பல கோடி பக்தர்களால் கடவுளாகவே வணங்கப்படும் சாய்பாபாவும் அங்குதான் சந்தித்தார்கள்.

பரஸ்பர மரியாதைகள் பரிமாறப்பட்டவுடன் மனைவி தயாளு அம்மாள், முரசொலி மாறனின் தாயார் உள்ளிட்டவர்களை பாபாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் கலைஞர். இந்த நேரத்தில்தான் பாபாவின் முன்பாகக் குனிந்து காலைத்தொட்டு வணங்கினார் தயாளு அம்மாள்.

புகைப்படக்காரர்கள் படம் எடுத்துவிட்டுப் போன பிறகு தனது மோதிரம் ஒன்றை வரவழைத்து தயாநிதிமாறனுக்குத் தந்தார் பாபா. இதைப் பார்த்து துரைமுருகன் தனக்கும் ஒரு மோதிரம் கேட்க... அவருக்கும் ஒன்றை வரவழைத்துக் கொடுத்திருக்கிறார். கலைஞருக்காக ஒன்றைத் துரைமுருகன் கேட்டப்போது, ‘அவருக்காக என் மனதையே தந்திருக்கிறேன்’ என்று பதிலளித்திருக்கிறார் பாபா.

அதன் பிறகு கலைஞரின் மஞ்சள் சால்வை பற்றியும் பாபா பேசியிருக்கிறார். (இந்த நிகழ்வுகளை எல்லாம் அடுத்த நாள் பாபாவுக்கு நடந்த பாராட்டுவிழாவில் கலைஞர், தயாநிதிமாறன், துரைமுருகன் ஆகியோர் வெளிப்படையாக விவரித்தார்கள்) சுமார் நாற்பது நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பு முடிந்த பின்பு கீழ்த்தளம் வரை வந்து பாபாவை வழியனுப்பினார் கலைஞர்.

மரியாதை நிமித்தம் நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சி சுமுகமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் நடந்து முடிந்தாலும், அதே வேகத்தில் விவாதங்களையும் ஏற்படுத்தத் தவறவில்லை.

‘இந்துக் கடவுள்களை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நிந்திக்கும் குணம் கொண்ட கலைஞரை பாபா நேரில் போய்ப் பார்க்கலாமா?’ என்ற கேள்வி பலரது மனதில் எழுந்தாலும் அதை வெளிப்படையாக விமர்சிக்க யாரும் முன்வரவில்லை. ஆனால் தன் வீட்டிற்கு வரவழைத்து பாபாவைச் சந்தித்த கலைஞரை விமர்ச்சிக்கிறார்கள் பலரும். கலைஞர் வரவழைத்தாரா அல்லது பாபாவே விரும்பிப் போனாரா என்பது தெளிவாகத் தெரியாத நிலையிலேயே இந்த விமர்சனம் நடக்கிறது.

‘‘தனது பதவி நீடிக்கவேண்டும். தனது குடும்பத்தாரின் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என்று நினைத்து கருணாநிதியே பாபாவை அழைத்திருப்பார் என்றே நினைக்கிறேன். எப்படியோ இந்து துறவி ஒருவரை கலைஞர் தன் வீட்டிற்கு வரவழைத்தருதன்பது, தெய்வீகத்திற்கும், தெய்வ பக்திக்கும் கிடைத்த வெற்றி. பாபாவே அங்கு சென்றது அவரது பெருந்தன்மையைத்தான் காட்டுகிறது.

இந்தச் சந்திப்பு கருணாநிதியின் நாத்திக கோஷங்களுக்குக் கிடைத்த அடி என்றே கருணாநிதி முன்பாக தயாளு அம்மாள் பாபாவைக் குனிந்து வணங்கியதே இதற்குச் சான்று. ஆனாலும் தயாளு அம்மாவின் செயலை நான் வரவேற்கிறேன்.

தனது மகன்கள், பேரன், பேத்திகளின் நலன்களுக்காக பாபாவை வரவழைத்துப் பார்த்தது கருணாநிதிக்குக் காலம் ஏற்படுத்திய கட்டாயம். விதியின் விளையாட்டு. ஆக மொத்தத்தில் நல்லது நடந்திருக்கிறது. மந்திரமா! தந்திரமா என்று இவர் உள்ளிட்ட யாரும் இனி கேட்கமுடியாது. அப்படிக் கேட்டால் ‘தயாநிதி, துரைமுருகனைக் கேளுங்கள்’ என்று சொல்லிவிடலாம். மோதிரங்களை வரவழைத்துத் தந்தபோது கருணாநிதியும்கூட சாட்சியாக இருந்திருக்கிறார். பாவம்... வீரமணியை எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்றுதான் தெரியவில்லை.’’ என்று உணர்ச்சியும் கிண்டலுமாகச் சொல்கிறார் இந்து முன்னணியின் நிறுவனர் ராமகோபாலன்.

பி.ஜே.பி.யும் கூட இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியை சந்தோஷத்தோடு பார்க்கிறது. ‘‘தமிழகத்தில் நாத்திக வாதத்தின் சவப்பெட்டியில் இறுதி ஆணி அடிக்கப் பட்டிருக்கிறது. கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட, இந்து விரோத மனப்போக்கு கொண்ட கருணாநிதி, தன் வீட்டிற்கு உலகப்பிரசித்தி பெற்ற இந்து மதப் பெரியவரை வரவழைத்திருக்கிறார். தன் மனைவி அவர் காலில் விழுவதைப் பார்த்துப் பூரித்திருக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் நாத்திகவாதம் என்பது கடந்த காலம் ஆகிவிட்டது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

ஆன்மீக சக்தியால் மோதிரம் வரவழைப்பதை மோசடி என்று சொன்னவர்கள் இன்று அதைத் தாங்களே பரவசத்தோடு அனுபவித்து ஆச்சரியப்பட்டோம், என்று சொல்லியிருப்பது இந்துத்துவத்திற்கும் அதை சித்தாந்தமாகக் கொண்ட பி.ஜே.பி.க்கும் கிடைத்த வெற்றியாகும்’’, என்று சொல்கிறார் தமிழக பி.ஜே.பி. துணைத்தலைவரான ஹெச். ராஜா.

இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு எல்லோரது பார்வையும் திராவிடர் கழகத்தை நோக்கியே இருக்கிறது. அவர்கள் இதை எப்படிப் பார்ப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ‘‘இதை நாங்கள் சர்ச்சையாகப் பார்க்கவில்லை. உதவி செய்தவரைப் பாராட்டும் வகையில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் ஒருவர் உதவி செய்தால் அதைப் பாராட்டுவதில் தவறில்லை. அதைத் தடுக்கவோ, விமர்சிக்கவோ வேண்டிய அவசியமில்லை. இதே சந்திப்பு, சாயி நடத்தும் யாகத்தில் நடந்திருந்தால் அதைத் தவறு என்று சொல்லலாம். ஆக பகுத்தறிவு வாதிகள் இதை மனிதாபிமான அடிப்படையிலேயே பார்க்கிறோம். வேறு கண்ணோட்டம் இல்லை’’ என்று நம்மிடம் சொன்னார் தி.க. பொதுச் செயலாளரான கலி பூங்குன்றன்.

இப்படியெல்லாம் விமர்சனங்கள் வரும் என்று தெரிந்தால்தானோ என்னவோ, பாபாவுக்கு நடந்த பாராட்டு விழாவின் போதே ஒரு கருத்தை வெளியிட்டார் கலைஞர் ‘‘நாட்டில் பலர் உண்டு அந்த வேடதாரிகளை ஒரு பகுதியாகவும் இப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த பாபா போன்ற துறவுக்கோலம் பூண்டவர்களை ஒரு பகுதியாகவும் பிரித்துப் பார்க்க நான் தவறியதேயில்லை. மக்களுடைய கஷ்டங்களைப் போக்க வேண்டுமென்று கருதுகின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் துறவிகளைவிட மேலானவர்கள். அவர்கள் ஆண்டவனுக்கே ஒப்பானவர்கள் என்று சொன்னாலும் அதை யாரும் மறுக்க முடியாது’’ என்று கலைஞரின் வெளியிட்ட இந்தக் கருத்தை இன்னொரு விவாவதத்திற்கு வழி கோலாமல் இருந்தால் சரிதான்!

எல்லாம் சரி. கலைஞரின் இல்லத்துக்கே சென்று அவரை பாபா சந்தித்தது பற்றி கார்டன் தரப்பில் என்ன ரியாக்ஷன்? இது பற்றி அ.தி.மு.க. வி.ஐ.பி.களிடம் விசாரித்தபோது, ‘‘கருணாநிதி என்பவர் இந்துக்களின் விரோதி என்றுதான் இதுவரை சித்திரிக்கப்பட்டுக் கொண்டிருந்தார். பாபாவின் இந்தச் சந்திப்பு அதைத் தூள்தூளாக்கிவிட்டது என்பதில் எங்களுக்கு மிகந்த வருத்தம்தான். காரணம் இனி இந்துக்களின் ஓட்டும் கருணாநிதிக்கு அதிகம் விழ வாய்ப்பிருக்கிறதல்லவா!’’ என்றார்கள் வருத்தத்தோடு.

துக்ளக் கார்ட்டூன்


2 Comments:

வல்லிசிம்ஹன் said...

சுவையாகப் பதியப் பட்டிருக்கிறது.
மூன்று வெவ்வேறு (ஆனால் கிட்டத்தட்ட ஒரே நினைப்புடன்)கண்ணோட்டங்களைக் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி இட்லிவடை.

Thamizhan said...

அவர் வீட்டிலே போய் இவர் பார்க்கலாமா?என்ற ஆத்ங்கம்.கொஞ்சம் சமாதானம் ஆவது போல அவர் துணைவியார் காலில் விழுந்து வணங்கினார் என்று ஆறுதல்.மாறனும் துரைமுருகனும் வணங்கினார்கள் என்று பேரின்பம்.
200 கோடி ரூபாய் உதவியுள்ள ஒருவருக்கு அவர் யாராக இருந்தாலும் நன்றி தெரிவித்தல் முதல்வரின் கடமை.ஆனால் என்ன பேசிகிறோம் என்பதை யோசிக்காமல் உணர்ச்சியில் பேசின அமைச்சர் துரைமுருகனுக்குச் சரியான சாடல்.சாயி பாபா பற்றித் தெரிந்த குறைகள் குற்றங்களை ஒரு அலசல் இது ஆசிரியர் வீரமணி அவர்களின் வெளிப்பாடு.
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கல்கியின் குமுரல்,சங்கரரால் ஓரங்கட்டப்பட்ட சாயி பாபாவுக்கு(பார்ப்பனர் இல்லையல்லவா}திடீர் பெரிய மரியாதை கல்கியில்!
ஓரளவு நடுநிலையில் விகடன்!
ஏதோ எழுதவேண்டுமே கொஞ்சம் இந்தப்பக்கம் கொஞ்சம் அந்தப்பக்கம் குமுதம்!
பல அயோக்கியத்தனங்கள் வெளிவந்தும் வராததுமாக இருந்தாலும் சாதிமத வேறுபாடின்றி அனைவருக்கும் மருத்துவம்,கல்வி மற்றும் பொது மக்களுக்குப் பல சேவைகள் என்று வாரி வழங்குவதால் மற்ற மதவாதிகளைவிட இவர் பரவாயில்லை என்ற் ஒரு கணிப்பு.
யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் சமம் இவர்பற்றிய புகார்களுக்குச் சரியான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது கோரிக்கை.
தந்திரத்துடன் ஏமாற்றுகிதார் என்பது பி.பி.சியின் படப்பிடிப்பு.
இந்தியா மட்டுமன்றி உலகெங்கும் இவரது மனிதாபகரமான உதவிகட்கும் மனித ஏமாற்று வித்தைகட்கும் ஆதரவும் எதிர்ப்பும் இருப்பதுதான் கண்கூடு.