பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 24, 2006

பெரியார் படத்திற்கு சில யோசனைகள்

தமிழக அரசு 95 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்ய, பெரியார் பற்றிய திரைப்படம் தயாராகிறது. அவர் அழுத்தம் திருத்தமாக, பிரகடனம் செய்த கருத்துக்கள் அந்தப் படத்தில் இடம் பெறும் என்று நம்புகிறோம். அம்மாதிரி கருத்துக்களுக்கு உதாரணமாக, அவருடைய பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களிலிருந்து ஒரு சில பகுதிகள் இங்கே பிரசுரம் ஆகின்றன. தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்வதைத் தவிர, வேறு நோக்கம் எங்களுக்கு இல்லை. ( நன்றி துக்ளக் 29.11.06 )


தமிழ் காட்டுமிராண்டி பாஷை

இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? – என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. "வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்' என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், "தமிழ் மொழி 3000 – 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி' என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டு மிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும், மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லா விட்டால், நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?தமிழால் என்ன நன்மை?

தமிழ் தோன்றிய 3000 – 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய
இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.தமிழறிஞர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகு தூரம்

"தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாத வித்துவான்களாக... தமிழ்ப் புலவராகவே வெகு காலம் இருக்க நேர்ந்து விட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். ஆகவேதான் புலவர்கள், வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்கள் வரை, இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்றெதற்கும் பயன்படுவதற்கில்லாதவர்களாகவே
ஆகி விட்டார்கள்.பிழைப்புக்கு ஆதாரமாய் தாய்மொழி வேஷம்

அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக்
கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால் பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும் யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பல விதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.தொல்காப்பியன் மாபெரும் துரோகி

தொல்காப்பியன் ஆரியக் கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்து விட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் வகையில், தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.

– பெரியார் எழுதிய "தமிழும் தமிழரும்' என்ற நூலிலிருந்து.தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது?

நாட்டுக்கு "சுதந்திரம்' கிடைத்து இன்றைக்கு 20ஆவது ஆண்டு நடக்கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, "இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்'. இதுதானா? அய்யோ பைத்தியமே! தமிழை (பிற
மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் "சுவை' அல்லாமல், அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை, பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டுபிடித்து பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன்.சிலப்பதிகாரம்

இது விபச்சாரத்தில் ஆரம்பித்து, "பத்தினி'த்தனத்தில் வளர்ந்து, முட்டாள்தனத்தில்,
மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிஷமாகும்.வெளிநாட்டான் அறிவு இனிப்பு; மொழி கசப்பா ?

சர்வத்தையும் விஞ்ஞான மயமாக மேல்நாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல்நாட்டானை (புதிய முறைகளை)ப் பின்பற்றி, வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்கு
தமிழர் – முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு, ஆங்கிலக் கருத்தோ,
இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்து விட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்?பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன் ?

சாதாரணமாக பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

– பெரியாரின் கருத்துகள், "அறிவு விருந்து' என்ற நூலிலிருந்து.தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம்

...தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? "தாய்ப்பால் சிறந்தது' என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்! தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு – காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.

இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.

– "தாய்ப் பால் பைத்தியம்' என்ற நூலிலிருந்து.
(தொடரும் :-) )

15 Comments:

Haranprasanna said...

இப்போதுதான் எனது நண்பர் இட்லிவடை இதை அப்படியே வெளியிடுவார் என்று கூறினார். :-)

வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் விழாவில் கருணாநிதி பேசிய கருத்தின் மீதான சோவின் கிண்டலையும் (கேள்வி பதில் பகுதியில்) வெளியிடவும். நேயர் விருப்பம். :P

IdlyVadai said...

haranprasanna - உங்கள் நண்பருக்கு இட்லிவடையாக இருக்க போகிறார். பார்த்து :-). உங்கள் விருப்பத்திற்காக கீழே கேள்வி பதில். இதனால் எனக்கு என்ன பின்விளைவுகள் வருமோ கடவுளே !


கே : ரூபாய் 200; 300 – எல்லாம் மாத உதவித் தொகை என்பது கேலிக் கூத்தாக இல்லையா?ப : 150ஐ விட்டு விட்டீர்களே? ஒரு பிரிவினருக்கு அதுவும் அளிக்கப்படுகிறது. இதுவல்ல வேடிக்கை. இந்தத் தொகையை கொடுக்கிற விழாவில் கலைஞர் கூறியதுதான் அசல் தமாஷ்! "இந்த உதவியைப் பெறுகிற வேலை வாய்ப்பற்றவர்கள், இதில் ஒரு பகுதியை குடும்பச் செலவுக்காக பெற்றோரிடம் கொடுத்துவிட்டு, மீதியில் வேலைவாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்கிற வழிகளைத் தேடிக் கொள்ள வேண்டும்' என்று அவர் சொல்லியிருக்கிறார்.

மாதம் 150 ரூபாயிலும், 200 ரூபாயிலும் குடும்பச் செலவுக்கு ஒரு பகுதி போக, மீதி வேலைவாய்ப்பு தேடலுக்கு! குடும்பத்தில் இது எந்தச் செலவுக்குப் போதும் என்றும் தெரியவில்லை. வேலைவாய்ப்பு தேடலுக்கு பஸ் கட்டணம், ரயில் கட்டணத்துக்காவது இது ஆகுமா என்பதும் தெரியவில்லை.

நல்லவேளை! "இந்த 150 ரூபாய், 200 ரூபாயில் உங்கள் சகோதரிகளின் திருமணத்தை முடித்து, உங்கள் சகோதரர்கள் இருந்தால் அவர்கள் படிப்பையும் முடித்து, ஒரு வீடு கட்டி, ஒரு ஸ்கூட்டரும் வாங்கி, மீதியை வேலைவாய்ப்பு தேடலுக்கு பயன்படுத்துங்கள்' என்று சொல்லாமல் விட்டாரே!

ஒருவேளை டிஃபன் சாப்பிட்டாலே, பதினைந்து நாட்களில் இந்தத் தொகை ஃபணால் ஆகிவிடும். இதில், குடும்பத்திற்கு, வேலை தேடுவதற்கு...! நல்ல தமாஷ்!

சிநேகிதன் said...

//இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? – என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. "வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்' என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள்.//

//அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.//

எனக்கு என்னவோ கருனாநிதியை திட்டுகிறமாதிரியே இருக்கு!, உங்களுக்கு?

Anonymous said...

ஆகா! ஆகா!...எத்தனை சிலை வைத்தாலும் தகும் பெரியாருக்கு....

சரி தல. அந்த துக்ளக் கேள்வி பதிலையும் போடும்...நமது பட்டணத்து நண்பர்கள் இதன் மூலமாகவாவது துக்ளக் படிக்கட்டும்....

Anonymous said...

ஏங்க,

தலைவர் தன்னுடைய சிறுவயதில் முக்காலணாவுடன் பட்டணத்திற்க்கு வந்தவர், 60 ஆண்டு போது வாழ்கை வாழ்ந்தவர்...3 முறை முதல்வரானவர், பெரிய்ய குடும்பங்க(ளூக்கு) தலைவர்...அவருக்கு தெரியாதா?....அட்வைஸ் பண்ண?

சோ கிடக்கிறார், அவருக்கு ஒரே குடும்பம், ஒரே பத்திரிகை, ஒரே ஒரு வருமானம்...அவருக்கு எப்படி தெரியும் இதெல்லாம்?. தலைவர் அப்படியா?

Haranprasanna said...

யாரெல்லாம் இட்லி வடையாக இருக்கமுடியும் என்பதற்கு நான் ஒரு பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன். :P

கொஞ்சம் சீரியஸாக ஒருவிஷயம். இந்த 300, 200, 150 ரூபாயைப் பெற வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏற்படும் கஷ்டம் பற்றி தினமலர் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அது வேலையில்லா இளைஞர்கள் படும் அவதிகளைப் பட்டியிலிட்டிருந்தது. 300 ரூபாய் என்பது முதுகலைப் பட்டதாரிகளுக்குரியது. அப்பணத்தை பெற அவர்கள் தலைநகரில் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமாம். வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து, ஒருநாள் அல்லது சில நாள்கள் (தாங்கள் கடுமையாக அலைக்கழிக்கப்படுவதாக நிறைய இளைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்) தங்கி... இதற்கெல்லாம் ஆகும் செலவு என்ன? ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தும் லட்சணம் இதுதான். இதுவே நாளைய பாரதத்தை உருவாக்கும் லட்சணமும்.

IdlyVadai said...

//யாரெல்லாம் இட்லி வடையாக இருக்கமுடியும் என்பதற்கு நான் ஒரு பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன். //

அந்த பட்டியலை எப்போது வெளியிட போறீங்க ?

சிநேகிதன் said...

கருனாநிதி கொண்டுவரும் பெரும்பாழான திட்டங்கள் அரசு அலுவலர்கள் சம்பாதிக்கத்தான் (ஊழல் பண்ணி, லஞ்சம் வாங்கி). இதனால் தான் அரசு ஊழியர்களின் ஆதரவு திமுகவிற்கு எப்போதும் இருக்கிறது. அவரின் திட்டங்களால் பொதுமக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

Anonymous said...

பிரசன்னா, சைட்டுல பாருங்க. அடிக்கடி செல்லும் ஸ்தலம்/ தளம் முருகன் இட்லி கடை புரியுதா :-)

குழலி / Kuzhali said...

இட்லிவடை இவ்வளவு தூரம் பெரியார் பட இயக்குனருக்கு எடுத்துகொடுத்துள்ளீர் என் பங்குக்கு நானும் எடுத்து தருகிறேன், இப்படியெல்லாம் தமிழை திட்டிய பெரியார் அறிமுகப்படுத்தியது தான் இன்றைய தமிழ் அச்செழுத்து சீர்திருத்தம், தமிழ் என்ற இந்த காட்டுமிராண்டிகளின் மொழியில் அச்செழுத்து சீர்திருத்தத்தை பெரியார் அறிமுகப்படுத்துவதற்கு முன் "லை" இப்படி இருந்ததல்ல, அது எப்படி இருந்தது என்றால் பாலச்சந்தரின் "வானமே எல்லை" சுவரொட்டியையோ பழைய துக்ளக், கல்கியையோ பார்க்கவும்(கடந்த சில ஆண்டுகளாகத்தான் இவர்களும் பெரியார் உருவாக்கிய தமிழ் அச்செழுத்து சீர்த்திருத்தத்தை ஏற்றுகொண்டார்கள் என நினைக்கின்றேன்), பெரியார் கூற்றுப்படி நல்ல விடயங்களுக்காகவும் அச்சு நவீனத்துவத்துக்குமான மாற்றத்தை மொழியில் ஏற்காதவர்களின் மொழி காட்டுமிராண்டிகளின் மொழி "வானமே எல்லை" படம் வெளிவந்தபோது இந்த கூற்றுப்படி பாலச்சந்தர் காட்டுமிராண்டி, துக்ளக்கும் கல்கியும் நீண்ட நாட்களுக்கு இதை ஏற்காததால் அவர்களும் அவர்கள் எழுதிய தமிழும் காட்டுமிராண்டி, இதே மாதிரி நீங்கள் ஒரு பதிவிட்டபோதும் நான் இதே மாதிரி பெரியாரின் அச்செழுத்து சீர்திருத்தத்தை எழுதியிருந்தேன், உங்கள் பதிவின் செய்தி சேவையினால் அதை தேடி கண்டுபிடிக்கமுடியவில்லை, இந்த பதிவை குறித்து வைக்க வேண்டும், மீண்டும் இதே மாதிரி நீங்கள் பதிவிடுவீர் அப்போது எனக்கு CTL-C , CTL-V செய்தால் போதுமானதாக இருக்கும், புதிதாக தட்டச்ச தேவையில்லை...உ

பார்ப்பனீயம் ஊடுறுவிய, அதைஉள்வாங்கிய ஒரு சமூகத்தின் மொழி வெளிப்பாடு பெரியார் சொன்னது போலத்தான் இருக்கும், திருக்குறளுக்கு பிந்தைய காலகட்டத்தில் வெளியான தமிழிலக்கிய நூல்களில் பெரும்பாலானவை போர் பரணிகளும், அரசர்களுக்கு தட்டிய ஜால்ராக்களும், சைவ,வைணவ மதமென்று பார்ப்பனியத்துக்கு கூஜா தூக்கிய படைப்புகளாகவும் தானிருந்தன, பார்ப்பனீயம் ஊடுறுவிய, அதைஉள்வாங்கிய ஒரு சமூகத்தின் மொழி வெளிப்பாடு பிறகெப்படி இருக்கும்? அப்படித்தானிருக்கும்.? பார்ப்பனிய அதிகாரத்துவத்தை எதிர்க்கும் பெரியாரின் குரல் இப்படி தான் இருக்கும், கருத்தளவில் இப்படி எதிர்த்த இதே பெரியார் இதே தமிழ் மொழி நவீனத்துவமடையவேண்டுமென்று அச்செழுத்து சீர்திருத்தம் செய்திருக்கிறாரென்றால் அவர் தமிழ் மொழியை கேவலமாக நினைத்தவரா என்பது புரியும்...

அது சரி தமிழ் என்றால் பலர் உணர்ச்சிவயப்படவும் சிலர் எரிச்சலடையவும் காரணமென்ன?

தமிழ்- முகமூடி, குழலி பதிவுகளை முன்வைத்து என்ற பதிவில் எழுத்தாளர் மாலன் சொல்லியிருப்பதிலிருந்து சில வரிகள் கீழே...

மிகை உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், இரண்டு விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்:

1.தமிழ் அறிவு என்பது ஒரு சமநிலைச் சமூகத்திற்கான (egalitarian society) விழைவை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்று
2.தமிழ் உணர்வு என்பது அதிகாரத்திற்கெதிரான, குறிப்பாக -வலியார் சிலர் எளியோர் தமை வதை செய்குவதை- போர்க் குணத்தை அளிப்பது. (anti -establishment)

கம்பன், பாரதி, பாரதிதாசன், ஜீவா ஆகியோரிடம் காணப்படும் அதிகார எதிர்ப்பு நிலைகளுக்கும் ஒரு முக்கிய காரணியாக தமிழுணர்வு இருந்திருக்கிறது.

தமிழுக்கு ஐம்பெரும் காப்பியங்களைத் தந்த சமண பெளத்த சமயங்கள், ஒரு வித சமநிலைச் சமூகத்தை விரும்பின. நிறுவனமாக்கப்பட்ட அமைப்புக்கள் மூலம் கல்வி வழங்கல், வைதீக சமயங்கள் பெண்களுக்கு அளித்திருந்ததைவிட சற்று மேம்பட்ட நிலையை அளித்தல் இவை அவற்றின் இந்த விழைவுகளுக்கு உதாரணங்கள். ஆனால் அவை தங்களது தமிழ் ஆர்வத்தை உணர்வு நிலையில் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அறிவார்ந்த நிலையிலேயே வெளிப்படுத்திக் கொண்டன. தமிழர்களிடையே இந்த சமயங்கள் பெரும் செல்வாக்குப் பெற இயலாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.

அரசியல் வரலாற்றின் வெளிச்சத்தில் பார்த்தால், களப்பிரர்களுக்கு எதிராக சைவர்களும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக பார்ப்பனர்களும், பார்ப்பனர்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், இன்று பிற்பட்டோருக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டவர்களும் எழுப்பும் கலக்க்குரலின் அடையாளமாகத் தமிழ் உணர்வு இருந்து வருகிறது.


அதுசரி இப்போது புரிந்திருக்குமே தமிழென்றால் சிலருக்கு உணர்ச்சிப்பெருக்கும், சிலருக்கு வயிற்றெரிச்சலும் உருவாவதன் காரணம்.

சரி இந்த பின்னூட்டத்தினால் ஏதோ நீர் புரிந்துகொள்வீரென்ற நம்பிக்கையெல்லாம் எனக்கு இல்லை, ஏனென்றால் இதே மாதிரி ஏற்கனவே ஒரு பதிவிலும் சொன்னது தானே இது, ஆனாலும் ஏன் எழுதுகிறேனென்றால் உம் மாதிரியான ஆட்கள் தொடர்ந்து இயங்கும் போது (எதற்கு எதிராக இயங்குகிறீர்கள் என்பது சொல்ல தேவையில்லை) எம் மாதிரியான ஆட்களும் தொடர்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

dondu(#11168674346665545885) said...

குழலி அவர்களது இப்பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://kuzhali.blogspot.com/2006/11/blog-post_25.html
அவ்வளவு தூரம் லை னை, ணை என்ற எழுத்துக்களை சீர்திருத்துவதைப் பற்றிப் பேசிய அதே ஈ.வே.ரா அவர்கள்தான் தன் கடைசி நாட்கள் வரை தன் கைப்பட எழுதியதில் பழைய முறையையே பாவித்து வந்தார். கம்பாசிட்டர்கள்தான் அவற்றைத் திருத்த வேண்டியிருந்தது. ஆக, சினிமாவில் சத்யராஜ் இவ்வாறு பழைய முறையில் அந்த எழுத்துக்களை அவர் எழுதி வந்ததையும் காண்பிக்கலாம்.

தன்னை நாடி வந்த வறிய புலவர் ஒருவரிடம் பாலறுந்தக் கொடுத்து விட்டு அவரிடம் தமிழ்ப்புலவர்கள் எல்லோருமே பிச்சைக்காரர்கள் எனக் கூற கதிரேசன் என்னும் பெயருடைய அந்த ஏழைப்புலவர் மனம் நொந்து "உம்மிடம் போய் வந்து நின்றேனே" எனக் கூறிவிட்டு தன் தொண்டையில் விரலை விட்டு முழுக்க வாந்தியிட்டு, மறம் பாடி விட்டு சென்ற நிகழ்ச்சியைப் பற்றி பெரியார் பிற்காலத்தில் எழுதும்போது கதிரேசன் என்னும் வாயாடிப் புலவர் என்று குறிப்பிட்டு தன் தமிழ்பற்றையும் வெளிப்படுத்தினார் என்பதையும் இப்படத்தில் காட்டுவார்கள என நம்புவோமாக.

இப்பின்னூட்டத்தின் நகலை ஈ.வே.ரா. அவர்களைப் பற்றிய எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

பெரியாரின் சீரிய சமுதாயத் தொண்டுகளில் குறிப்பிடத் தக்கது அவர் பொதுக்கூட்ட மேடைகளில் அவையடக்கத்துக்கு அடித்த சாவுமணிதான். இப்போதைய அரசியல் மேடைகளில் பேசப்படும் அவைக்கொவ்வா கொச்சைகளின் முன்னோடி அவரே. இதுவும் படத்தில் சேர்க்கப் படலாம்.

Anonymous said...

Please put regularly Thuglak (in particular questions and answers; sathya article; editorial column and Hindu Maha samuthiram)

வஜ்ரா said...

நீங்க சொல்றதல்லாம் பார்த்தா பெரியார் படத்துல பெரியார் ரோலுக்கு முன்னாள் வில்லன் சத்தியராஜ் சரியாக தேர்வாகவே படுகிறது.

இதெல்லாம் படத்தில் சேர்த்தால் சத்தியராஜ் வில்லனாக பெரியார் படத்தில் வருவதைத்தவிர வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது.

பெரியார் படத்தில் யாரு அப்ப ஹீரோ ?

ஒருவேளை இது anti-hero வை முன்னிலைப்படுத்தி எடுக்கப் படும் படமா ?

We The People said...

//அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.//

எனக்கு என்னவோ கருனாநிதியை திட்டுகிறமாதிரியே இருக்கு!, உங்களுக்கு?//

ஐயய்யோ நான் இந்த ஆட்டத்துக்கு வரல... வேற யாரோ ஏற்கனவே சொல்லியிருக்காங்கபா....