பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 25, 2006

அரசியல் அவியல்

கலைஞர் கேள்வி பதில் அறிக்கை:

1. சிக்-குன்-குனியா நோய் காரணமாக இறந்தவர்களின் பட்டியலை ஜெயலலிதா கொடுத்ததாகவும் அதற்கு அரசு சார்பில் முறையான பதில் சொல்லப்படவில்லை என்றும் திரும்பத் திரும்ப ஜெயலலிதா அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறாரே?

ஜெயலலிதாவின் பட்டியலில் சிக்-குன்-குனியா நோயால் இறந்தவர்கள் என்று குறிப்பிட்டிருப்பவர்களில் ஒருவரான திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ராமசாமி என்பவர் இன்னமும் உயிரோடு தான் இருக்கிறார். கோவை பேரூரைச் சேர்ந்த குப்புசாமி செட்டியார் இப்போதும் உயிரோடு தான் இருக்கிறார். கோவை மருதூரைச் சேர்ந்த காரணி அம்மாள், சேலம் அய்யம்பெருமாள், மகாலிங்கம் ஆகியோரும் இன்னும் உயிரோடு தான் இருக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் தங்கவேல், திண்டுக்கல் மாவட்டத்தில் மவுனஜோதி, பழனியம்மாள், நாராயணசாமி ஆகிய நான்கு பேரும் இறந்து ஆண்டுக்கணக்கில் ஆகிறது. ஆனால், தற்போது சிக்-குன்-குனியாவால் இறந்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். இதுபோன்று தூக்குப் போட்டு தற்கொலை, விஷம் அருந்தி தற்கொலை, கொலை, விபத்தில் இறந்தவர்களை சிக்-குன்-குனியா நோய் காரணமாக இறந்ததாக ஜெயலலிதா கூறியுள்ளார். "தன் நெஞ்சறிவது பொய்யற்க' என்று வள்ளுவர் சொன்னதை மறந்து நடந்து கொண்டால், "தன் நெஞ்சே தன்னைச் சுடும்.' இறந்தவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறவில்லையே என்று கேட்டுள்ளார். சிக்-குன்-குனியா நோயால் யாராவது இறந்தால் தானே அவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூற முடியும். ஜெயலலிதாவின் அறிக்கையை நம்பி உயிரோடு இருப்பவர்களின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி அவமானப்படுவதா. ஜெயாவின் ஆட்சியில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டினி காரணமாக சாகிறோம் என்று கடிதம் எழுதிவிட்டு செத்தார்களே. அவர்களில் எத்தனை பேருடைய வீட்டுக்கு ஜெயலலிதா சென்றார்.


2. உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னம் கிடைக்க விடாமல் தி.மு.க., தான் தடுத்து விட்டதைப் போல ஒரு பிரசாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறதே?

தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு தேசிய கட்சிகள், நான்கு மாநில கட்சிகளுக்கு மத்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே தேர்தல் சின்னங்களை ஒதுக்கியுள்ளது. அந்த சின்னங்களே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அனைவரும் சுயேச்சை வேட்பாளர்களாகவே கருதப்படுவர். சுயேச்சை வேட்பாளர்களுக்கென 35 சின்னங்கள் கொண்ட பட்டியலில் முரசு சின்னம் இடம்பெறவில்லை. தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு அதே நேரத்தில் இன்னும் முறைப்படி அங்கீகாரம் பெறாத கட்சியாக தே.மு.தி.க., இருப்பதால் அந்த கட்சி கேட்கும் சின்னத்திற்கு அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. இதில், தி.மு.க.,விற்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. தி.மு.க., மீது தேவையில்லாமல் திட்டமிட்டு கூறப்படும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

3. கச்சத்தீவு பிரச்னையில் நீங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியது பற்றி ஜெயலலிதா குறை கூறியிருக்கிறாரே?

கடிதம் எழுதாமல் இருந்தால் அதைப்பற்றி முதல்வர் மூன்று மாதமாகியும் பிரதமருக்கு கடிதம் எழுதியது உண்டா என்று அறிக்கை விடுவார்.

திமுக- கம்யூ. உடன்பாடு
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் இட பகிர்வு குறித்து திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சி களுக்கும், திமுகவுக்கும் இடையே இன்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது. காங்கிரசும், பாமகவும் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இன்று மாலை திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் பற்றிய இறுதிப் பட்டியல் வெளி யாகும் என்று தெரிகிறது.

டெல்லியிலிருந்து காங். தலைவர்கள் திரும்பினர் சுமுகத்தீர்வு ஏற்பட்டது கிருஷ்ணசாமி, வாசன் பேட்டி


தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு சுமுகமாக தீர்வு ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அவசரமாக நேற்று புதுடெல்லிக்கு புறப்பட்டுச்சென்ற காங்கிரஸ் தலைவர்கள் இன்று விமானம் மூலம் சென்னை திரும்பினார்கள்.

இலவச கலர் "டிவி', தரிசு நிலம் வழங்கியிருந்தாலும் அதையெல்லாம் மீறி அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் - திருமா

எங்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும் அ.தி.மு.க., ஒதுக்கிய நான்கு சதவீதம் திருப்தி அளிக்கிறது. கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம். இலவச கலர் "டிவி', தரிசு நிலம் வழங்கியிருந்தாலும் அதையெல்லாம் மீறி உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும். எங்கு இருந்தாலும் நாங்கள் உண்மையாக உழைப்போம். சென்னையில் எங்களுக்கு 7 வார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக கேட்டுள்ளோம் " - திருமாவளவன்

கார்த்திக் நீக்கம்

பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவரும், பொதுச் செயலாளருமான நடிகர் கார்த்திக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. ( இப்போது கட்சியில் ஒருவர் தான் இருக்கிறார் :-)

0 Comments: