பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 25, 2006

நடிகை பத்மினி மாரடைப்பால் மரணம்

நாட்டியப் பேரொளி என திரையுலக ரசிகர்களால் அழைக்கப்பட்ட பழம் பெரும் நடிகை பத்மினி மாரடைப்பால் நேற்று இரவு சென்னையில் காலமானார். பழம் பெரும் நடிகை பத்மினி. இவரது மகன் ஆனந்த் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அமெரிக்காவில் இருந்த நடிகை பத்மினி, கடந்த மாதம் அங்கிருந்து சென்னைக்கு வந்தார். பின்னர் எம்.ஜி.ஆர்., நடித்த நாடோடி மன்னன் படம் மீண்டும் திரையிடப்பட்டதற்கான விழா சென்னையில் நடந்தது. இதில், பத்மினி கலந்து கொண்டார்.
ஏராளமான தமிழ்படங்களிலும் இந்தி உள்பட பல்வேறு மொழி படங்களிலும் நடித்து சினிமா உலகில் தனக்கென்று தனி இடத்தைப்பிடித்தவர் நடிகை பத்மினி.

சென்னையில் வசித்து வரும் நடிகை பத்மினி, கடந்த சில நாட்களாக உடல் நலம் இல்லாமல் இருந்தார்.

முதல் அமைச்சர் கருணாநிதிக்கு நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு நடிகை பத்மினி சக்கர நாற்காலியில் வந்தார். அப்போது அவருக்கு திடீர் என்று மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துசெல்லப்பட்டார்.

இந்த நிலையில் நடிகை பத்மினிக்கு நேற்று இரவு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக நடிகை பத்மினியின் உடல் நிலை மேலும் மோசம் அடைந்தது.

அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நடிகை பத்மினி மரணம் அடைந்தார்.

நடிகை பத்மினி வாழ்க்கை குறிப்பு

மறைந்த நடிகை பத்மினி திரைவானில் `நாட்டிய பேரொளி'யாக பிரகாசித்தவர்.

திருவாங்கூர் சகோதரிகள்

தமிழ் திரை உலகம் கண்ட மிக சிறந்த நடிகைகளில் நடிகை பத்மினியும் ஒருவர். நடிகை பத்மினியும், அவரது சகோதரி லலிதாவும், திருவாங்கூர் சகோதரிகள் என புகழ் பெற்று விளங்கினார்கள். 1948-ம் ஆண்டு இருவரும் நாட்டிய நட்சத்திரங்களாக சினிமா உலகுக்கு அறிமுகம் ஆனார்கள். அதன்பிறகு 3 ஆண்டு காலத்துக்கு லலிதா, பத்மினி நடனம் இல்லாத படமே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் அவர்களுடைய நடனம் இடம் பெற்றது.

நடிகை பத்மினி 1951-ம் ஆண்டு வெளியான ஏழை படும்பாடு படத்தில் முதல் முறையாக நடித்தார். சிவாஜி கணேசனின் இரண்டாவது படமான `பணம்' படத்தில் அவருக்கு ஜோடியாக பத்மினி நடித்தார்.

`தூக்கு தூக்கி' படத்தில் இருவரும் மீண்டும் ஜோடியாக சேர்ந்து நடித்தனர். படம் அபாரமாக வெற்றி பெற்றது. அதன்பிறகு எதிர்பாராதது `அமர தீபம், மங்கையர் திலகம், புதையல், காவேரி, மரகதம், உத்தமபுத்திரன், இருமலர்கள், வியட்நாம் வீடு, தில்லானா மோகனாம்பாள் பல வெற்றி படங்களில் சிவாஜி கணேசனுடன் பத்மினி நடித்தார்.

இதேபோல பட உலகில் முன்னணியில் இருந்த எம்.ஜி.ஆருடனும் பல படங்களில் சேர்ந்து நடித்தார். இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்கள் உள்பட 250-க்கும் அதிகமான படங்களில் பத்மினி நடித்து உள்ளார்.

நடிகை பத்மினி தனது 4 -வது வயதிலேயே பரதநாட்டியம் கற்றவர். 10-வது வயதில் அவரது அரங்கேற்றம் நடந்தது. அதன்பிறகு அவர் இந்தியா முழுவதும், பல்வேறு இடங்களில் நடன நிகழ்ச்சிகள் நடத்தி, `நாட்டிய பேரொளி' என்ற பட்டம் பெற்றவர்.

1961-ம் ஆண்டு அவர் டாக்டர் கே.டி.ராமச்சந்திரனை மணந்தார். அதன்பின் பட உலகில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும், அமெரிக்காவில் தங்கி இருந்தபோது, நாட்டிய பள்ளி நடத்தி வந்தார். கணவரின் மறைவுக்கு பிறகு மீண்டும் சென்னை திரும்பிய நடிகை பத்மினி ஒருசில படங்களில் நடித்தார்

பத்மினி படங்கள் : தில்லானா மோகனாம்பாள் படங்கள்
Payan(Hindi) படங்கள்

அவருக்கு கண்ணீர் அஞ்சலிகள்

3 Comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செய்தி காலை அறிந்தேன்; பழம் பெரும் உன்னத நாட்டிய நங்கை; நடிகை! அவர் நினைவை விட்டகலாதவர். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
யோகன் பாரிஸ்

மணியன் said...

நாட்டிய பேரொளியாக திகழ்ந்தாலும் சிறந்த நடிகையாகவும் பரிமளித்தவர் அவர். சிவாஜியுடனான பல படங்களில் அவருக்குப் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்தவர் அவர். நானும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்.

மிக்கி மௌஸ் said...

பத்மினி அவர்களின் மரணம் திரைப்படத்துறைக்கு மட்டும் அல்ல, நாட்டியம் உள்ளான் கலைத்துறைக்கும் ஒரு பேரிழப்பு, அவரது பூவேபூச்சூடவா இன்னும் கண்ணிலேயே இருக்கிறது. அவர்க்கு எனது கண்ணீர் அஞ்சலி......