பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 31, 2006

உதயசூரியனுக்கு வாக்கு கேட்கும் ம.தி.மு.க

மதிமுக பட்டியல் வெளியிட்ட போது சம்மட்டி தென்காசி தொகுதியில் வேட்பாளர் ராம உதயசூரியன் அப்படி என்றால் வைகோ உதயசூரியனுக்கு ஓட்டி கேட்பாரா ? என்று பின்னூட்டத்தில் கேட்டிருந்தார். இன்று வந்த தினமணி செய்தியில் இந்த பிரச்சனை மதிமுகவிற்கு இருந்திருக்கிறது என்று தெரிகிறது.

அந்த செய்தி இங்கே தந்துள்ளேன்....


திருநெல்வேலி மாவட்டம், தென்காசி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் வாக்கு கேட்பவர்கள் மதிமுக வேட்பாளருக்கும், மதிமுக சார்பில் வாக்கு கேட்பவர்கள் திமுகவுக்கும் வாக்கு கேட்பது மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தென்காசி தொகுதியில் திமுகவும், மதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. திமுக வேட்பாளராக வீ.கருப்பசாமிப் பாண்டியன் போட்டியிடுகிறார். மதிமுக வேட்பாளர் பெயர் செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. அவருடைய பெயர் உதயசூரியன்.

எனவே, மதிமுக சார்பில் தேர்தல் பிரசாரம் செய்வோர் வேட்பாளர் பெயரைக் கூறி ""உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்'' என்றால் அது திமுகவுக்கு வாக்கு கேட்பது போலத்தானே இருக்கும்.

அதே போல, திமுக சார்பில் தேர்தல் பிரசாரம் செய்வோர் அவர்களின் சின்னத்தைச் சொல்லி ""உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியனுக்கு அளியுங்கள்'' என்றால் அது மதிமுக வேட்பாளர் உதயசூரியனுக்கு வாக்கு கேட்பது போலத்தானே இருக்கும்.

எனவே, மதிமுக சார்பில் தென்காசி வேட்பாளராக உதயசூரியனை வைகோ தேர்வு செய்தபோது கட்சி நிர்வாகிகள் சிலர் வைகோவிடம் ""உதயசூரியனை நாம் வேட்பாளராக நிறுத்தினால் அவருக்கு வாக்கு கேட்பது, திமுகவுக்கு வாக்கு கேட்பது மாதிரி இருக்காதா'' என கூறினார்களாம்.

அதைக் கேட்ட வைகோ, ""அதை ஏன் அப்படி பார்க்கிறீர்கள், திமுகவினர் எப்படி வாக்கு கேட்பார்கள் என யோசித்து பாருங்களேன்.

திமுகவினர் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என பிரசாரம் செய்தால், அது நமது வேட்பாளர் உதயசூரியனுக்கு வாக்கு கேட்பது மாதிரிதானே இருக்கும்.

எனவே, அது நமக்கு "பிளஸ் பாயிண்ட்'தான். ஆதலால், தென்காசி தொகுதி வேட்பாளராக உதயசூரியனே இருக்கட்டும்'' என சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாராம் வைகோ


பிகு: தேர்தல் கவுண்ட் டவுன் என்ற பகுதி வலது பக்கத்தில் புதுசு

2 Comments:

ஜோ/Joe said...

இவர்கள் எல்லாம் நினைக்கிற மாதிரி மக்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்கள் அல்ல.

- யெஸ்.பாலபாரதி said...

கடந்த தேர்தலில் தஞ்சையில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளரின் பெயர் பகவான். அவருக்கே கலைஞர்.கருணாநிதி அவர்கள் போய் பிரச்சாரம் செய்தார் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.