பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 30, 2006

குமுதம் தேர்தல் கணிப்பு - இரண்டாவது ரவுண்ட்

நாகை மாவட்டம்

மெதுவாக சூரியன் கீழ்வானில் கிளம்பிக் கொண்டிருக்க, மெலிந்த விவசாயிகள் முண்டாசை இறுக்கியபடி டீக் கடைகளுக்கு நடந்து கொண்டிருந்தார்கள். அது சீர்காழி தொகுதிக்கு உட்பட்ட சிறிய ஊரான கொள்ளிடம்.

மழையின்போது ஏக்கருக்கு மூவாயிரம் வீதம் நிவாரணம் கிடைத்தது இந்த மக்களுக்குப் பெரிய திருப்தியைத் தந்துள்ளது. அதேசமயம் கிராம நிர்வாக அதிகாரியும், உள்ளூர்ப் பஞ்சாயத்து காங்கிரஸ் தலைவரும் அதை முழுமையாக சென்றடையவிடாமல் சொந்த ஆதாயம் தேடப் பார்த்ததையும் சிலர் வருத்தத்துடன் சொன்னார்கள். தைக்கால் கிராமத்தில் பாய் நெசவு செய்யும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் ஓட்டளித்தார்கள். இங்கே இஸ்லாமியப் பெண்கள் சொல்லி வைத்தாற்போல அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க, ஆண்கள் தி.மு.க. பக்கம் சாய்ந்தார்கள்.

மயிலாடுதுறை தொகுதியில் கடந்த முறை தி.மு.க. ஆதரவோடு வெற்றி பெற்ற பாரதீய ஜனதாவின் ஜெக வீரபாண்டியன் இந்த முறை கடைசி நிமிடத்தில் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிடுவார் என்று எதிர்பார்க்கிறார்கள், அவரது கணிசமான ஆதரவாளர்கள்! ஒரு காலத்தில் தி.மு.க.வில் கிட்டப்பா, செங்குட்டுவன் என்று செல்வாக்கான தலைவர்கள் இருந்த இந்தத் தொகுதி இன்று கலகலத்து காணப்படுகிறது. சுற்றுபட்டு கிராமங்களில் ‘இரட்டை இலைக்குத்தான் எங்கள் ஓட்டு’ என்று அடித்துச் சொன்னார்கள் குடிசைப் பெண்கள்.

மயிலாடுதுறை புனுகீஸ்வரர் கோயில் அருகே ஓர் இளைஞர் ‘‘மணிசங்கர அய்யர்னு ஒருத்தரை மெட்ராஸ்ல பார்த்தா, இங்க வரச் சொல்லுங்க சார்... ஏதோ நேர்த்திக் கடன் போல ஓசை படாம விடியற்காலையில வர்றாரு. பெரிய ஓட்டல்ல தங்கி சொந்த வேலைய முடிச்சுட்டு சர்சர்னு கார்ல பறந்துடறாரு’’ என்று ரொம்பவும் உணர்ச்சிவயப்பட்டார்.

நாகை, கீழ்வேளூரில் கிராமத்து மக்களே க்யூ அமைத்து, ஓட்டுப் போட்டது வித்தியாசமானது. கூலி வேலைக்குப் போகும் சில பெண்களிடம் பேச்சு கொடுத்தபோது, ‘‘நிவாரண தொகையாக அம்மா கொடுத்த ஆயிரம் ரூபாயை அப்படியே செலவழிக்காம வச்சிருக்கோம். ஒரு நடை வீட்டுக்கு வந்து பார்த்துட்டு மோர் குடிச்சுட்டுப் போங்க...’’ என்றார்கள் பாசத்துடன்!

சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட அக்கரைப் பேட்டை மீனவர்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டது தெரிந்தது! திருக்கை மீனுக்காக ஸ்பெஷல் வலை பின்னிக் கொண்டிருந்த வேலாயுதம், திடீர் குப்பத்திலும், ரோலிங் மில் அருகிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் ரெடியாகிவிட்டதைப் பெருமிதத்துடன் சொன்னார். இங்குள்ள மீனவர்கள் அ.தி.மு.க. அரசோடு மாதா அமிர்தானந்தமயி மடத்தின் நிவாரணப் பணிகளையும் மனதார பாராட்டினார்கள். நல்ல உச்சி வெயிலில் வேளாங்கண்ணி மாதா கோயிலில் நம் வாகனம் நின்றபோது, ஏதோ குலுக்கல் போட்டி என நினைத்துக் கொண்டு ஏகப்பட்ட வெளிமாநில டீ ஷர்ட் அழகுப் பெண்கள் ஓடிவந்தனர். ‘உங்களுக்கு இங்கே ஓட்டு இல்லை’ என்று சொல்லி அவர்களை அனுப்பிவைக்கப் பெரும்பாடு பட்டோம்.

திருவாரூர் மாவட்டம்

பேரளம், பூந்தோட்டம், முடிகொண்டான், சன்னா நல்லூர், பனங்குடி என்று சிறிய ஊர்கள் அடங்கிய தனித் தொகுதி நன்னிலம். பெரும்பாலும் விவசாயக் கூலிகள். இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசனுக்காக அ.தி.மு.க. விட்டுக் கொடுத்த இடம். இரண்டு கழகங்களுமே இந்தத் தொகுதியைப் பல காலமாகவே கண்டு கொள்ளவில்லை என்பது மனதை வருடும் உண்மை.

‘‘செ.கு. நல்ல மனுஷன்தாங்க. அதிர்ந்து பேசத் தெரியாது. ஆனா அதுமட்டும் போதுமா? தொகுதி பக்கம் வர வேண்டாமா? ஏதாவது செய்ய வேண்டாமா?’’ என்று பூந்தோட்டத்தில் வருத்தப்பட்டார்கள் விவசாயிகள்.

கலைஞரின் பிறந்த மண்ணான திருவாரூரில் நம் வாகனம் நுழைந்தபோது, கமலாலயக் குளத்தில் இளம் காலைத் தென்றல் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. தி.மு.க. எம்.எல்.ஏ. அசோகன் கைவசம் உள்ள தொகுதி.

‘‘எம்.எல்.ஏ. தொகுதிக்கு வர்றாரா?’’

‘‘திருவாரூரைச் சுற்றி அவருக்கு என்ன ஆவப்போவுது? தளபதியைச் சுற்றினா சீட் வாங்கிப்புடலாம். எங்க ஆளுங்க பல பேர் இப்படித்தானே கட்சியைக் கெடுத்து வச்சிருக்காங்க. தலைவருக்கோ பிள்ளைப் பாசம் கண்ணை மறைக்குது. இல்லாட்டா ஒரே ஒரு சீட்டு அதிகம் கேட்ட வைகோவை விட்டிருப்பாரா?’’ என்றார் பஜாரில் நின்று கொண்டிருந்த கலைஞர் அனுதாபியான ஒருவர்.

இந்த ஐந்து வருடத்தில் தொகுதி பெரிய அளவில் எந்த வளர்ச்சியையும் காணவில்லை என்பது பெரும்பான்மையினரின் கசப்பான அபிப்பிராயம்.

‘‘எம்.எல்.ஏ.வை கல்யாண வீட்டுக்குக் கூப்பிட்டா முறையா வந்து மொய் வச்சுட்டு போனா தொகுதி வளர்ந்துடுமா?’’ என்று நக்கலடித்தார் தியாகராஜர் கோயில் வீதியில் கடைவைத்திருக்கும் பெரியவர். அடியக்கமங்களம், ஆண்டிப்பாளையம், கானூர் போன்று இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஏரியாக்களில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அதிகமாகவே இருந்தது.

தஞ்சை மாவட்டம்

கும்பகோணத்தில் மீண்டும் களம் இறங்கலாம் என்று கோ.சி.மணி நினைத்தால் இரண்டுக்கு மூன்று முறை யோசிக்க வேண்டும்.

‘‘அ.தி.மு.க.வுல கூட ஆளுங்க மாறிக்கிட்டே இருக்காங்க. குடை ராட்டினம் மாதிரி உச்சியில இருக்கிற ஆளு அடுத்த சுற்றுல தரைக்கு வந்துடறாரு. இங்க பாருங்க. அதே ஆற்காடு, அதே அன்பழகன், அதே கோ.சி.மணின்னு எத்தனை வருஷங்கள் இவங்களே யாரையும் அண்ட விடாம கட்சியை ஓட்டிட்டு இருக்கிறது?’’ நாச்சியார் கோயில் பெருமாள் கோயில் வாசலில் சில இளசுகள் வெறுப்புடன் கேட்டார்கள்.

வியாபாரம் பெருகிவிட்டதால் கும்பகோணத்தில் எங்கு திரும்பினாலும் டிராபிக் நெருக்கடி விழி பிதுங்கும் நிலையில். இதைக் கட்டுப்படுத்த புதிய மேம்பாலங்கள், புதிய சாலை வசதிகள் இல்லை என்பது பலரது குற்றச்சாட்டு.

‘‘மூப்பனாரின் பூர்வீக பூமியான பாபநாசத்தில் இன்னமும் நிறைய காங்கிரஸ் ஓட்டுக்கள் இருக்கின்றன. ஆனால், தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராம்குமார் கதர் வேட்டி சகிதம் ஜீப்பில் ஏறி கை கூப்பினால், மாற்றிப் போட்டுவிடுவார்கள். ஒன்று, வேட்பாளரை மாற்ற வேண்டும் அல்லது தி.மு.க. போட்டியிட வேண்டும்’’ என்கிறார்கள்.

தஞ்சாவூரில் நுழைவதற்கு முன்பு கரந்தை கிராமத்திலேயே நமது வாகனத்தை வளைத்துக் கொண்டனர். வாக்களித்த அத்தனை பேரும் உழைக்கும் தொழிலாளிகள். தி.மு.க.வின் கோட்டையாக இருந்த இந்தத் தொகுதி, கொஞ்சம் அசந்தாலும் ‘அம்மா’விடம் கைமாறிவிடும் நிலையில் உள்ளது. காரணம், பெரும் வசதிபடைத்த உள்ளூர் தி.மு.க. எம்.எல்.ஏ.வான உபயதுல்லாவின் குடும்பத்தினர் கொலை வழக்கில் மாட்டிக் கொண்டதில், மக்களிடையே அதிருப்தி தலைதூக்கியுள்ளது. தவிர, தி.மு.க.வில் உள்ள உட்கட்சிப் பூசல்!

அந்த மதிய வேளையில் திருவையாறு வந்தபோது ஊர் லேசாகத் தூங்கிக் கொண்டிருந்தது.

தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யாறு வாண்டையாருக்குப் பதவி தந்து அதே வேகத்தில் ஜெயலலிதா பறித்துக் கொண்டதில் பலருக்கு வருத்தமுள்ளது.

நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் விஜயகாந்த் கட்சியைப் பற்றிச் சொல்லவில்லையே என்று நீங்கள் அவசரப்பட்டால் ஸாரி... கேப்டனின் தே.மு.தி.க. இந்த மூன்று மாவட்டங்களிலும் கால் பதிக்கவே இல்லை.

‘‘அவர் முதலமைச்சருக்கா போட்டியிடறாரு?’’ என்று ஒரு சிலர் நமட்டுச் சிரிப்புடன் கேட்டுவிட்டுக் கழகங்களுக்கு டிக் செய்தார்கள்.

பெரம்பலூர் மாவட்டம்.

தஞ்சை மாவட்டத்தை முடித்துக் கொண்டு அரியலூர் தொகுதிக்கு உட்பட்ட திருமானூர் கடைத்தெருவிற்கு வந்தபோது விலாங்குமீன் பாட்டிற்கு (சுயேச்சைகள் யாருக்காவது விலாங்குமீன் சின்னம் கிடைத்தால் அமோகமாக ஓட்டு விழுமோ?) தாளம் போட்டுக் கொண்டிருந்த டீக் கடை இளம்வட்டம் திபுதிபுவென்று ஓடிவந்தது. உடையார், வன்னியர் மற்றும் மூப்பனார் சமூகம் அதிகமுள்ள தொகுதி. உள்ளூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இளவழகன் மீது புகார்கள். இத்தனைக்கும் ஜெயலலிதா பக்தர்கள் ஏராளமானவர்கள் உள்ள தொகுதி என்பது பலரிடம் பேசியபோது புரிந்தது. அதே சமயம், பெரம்பலூர் தி.மு.க. மாவட்டச் செயலாளரும், மத்திய அமைச்சருமான ராஜா மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

‘‘அவர் 99_ம் வருஷம் வாஜ்பாய் அமைச்சரவையிலேயே மந்திரியா இருந்தவர். தொடர்ந்து மந்திரியா இருக்கார். ஏழு வருஷமா முழுக்கைச் சட்டை கலையாம கோபாலபுரத்தை எதுக்கு சுத்தி சுத்தி வரார்னு யாராவது கேட்டுச் சொல்லுங்க. தாழ்த்தப்பட்ட ஜனங்களுக்கு எதிரிகள் வெளியில இல்லீங்க’’ _ கொதிப்புடன் பேசினார்கள் காட்டுபிரிங்கியம் கிராமத்தில் பல கூலித் தொழிலாளிகள்.

இளநீரை ஜில்லென்று தொண்டை குழிக்குள் இறக்கிவிட்டு பெரம்பலூர் தொகுதிக்குள் நுழைந்தோம். குறும்பலூர், பாலிகண்டபுரம், பாளையம், அம்மாபாளையம் என்று நிறைய அமைதியான கிராமங்கள்.

‘பெரம்பலூருக்குக் கூட்டுக் குடிநீர்த் திட்டம், கொள்ளிடத்திலிருந்து குழாய்மூலம் காவிரி குடிநீர், வேப்பந்தட்டை பகுதியில் விசுவகுடியில் ஏழரைக் கோடியில் விசுவகுடி அணை திட்டம், பேரூராட்சியாக இருந்த பெரம்பலூரை நகராட்சியாக அறிவித்தது’ என்று இந்தத் தொகுதியில் ஜெயலலிதா காலத்தில் நிறைவேறிய நல்ல திட்டங்களை அடுக்கினார் நான்கு ரோட்டு சந்திப்பில் பெட்டிக்கடை வைத்திருப்பவர். தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் வழக்கறிஞருமான ராஜரத்தினம் கூப்பிட்ட குரலுக்கு ‘என்ன அண்ணே’ என்று ஓடிவந்துவிடுவார் என்று பெருமிதத்துடன் சொல்கிறார்கள் பெரம்பலூர் பெரிசுகள்.

திருச்சி மாவட்டம்

பெரம்பலூர் மட்டுமல்ல... உப்பிலியாபுரத்திலும் கண்ணை மூடிக்கொண்டு ‘இரட்டை இலையைத் தவிர எங்களுக்கு வேறு சின்னம் தெரியாது’ என்று சொல்லும் கிராமத்து மக்கள் ஏராளமாக உள்ளனர். வெங்கடாசலபுரம், நந்தியாபுரம், சிக்கத்தமூர் என்று இன்னமும் டி.வி.யை அதிசயமாகப் பார்க்கும் முன்னேறாத கிராமங்கள். உள்ளூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சரோஜா மீது பெரிய அபிப்பிராயம் இல்லை என்றாலும் இலவச சைக்கிள் திட்டத்தை நன்றியுடன் சொல்கிறார்கள். இங்குள்ள கிராமங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பல பெண்களை ஒட்டுமொத்தமாக இரட்டை இலை பக்கம் திருப்பியுள்ளது.

‘‘ஒரு சாதாரண ஆளை அம்மா தூக்கிவிட்டாங்க. அவர் நடந்து வந்த பாதையை மறக்கலாமா? தன்னோட சேர்ந்து கஷ்டப்பட்ட ஏழை கட்சிக்காரர்களை மறக்கலாமா? மறந்துவிட்டு சர்புர்னு சுமோவுல, மூச்சுவிடாம ‘செல்’லுல பேசிகிட்டு பறக்கிறாரே’’ என்று லால்குடி தொகுதிக்குட்பட்ட வாளாடி கிராமத்தில் வியாபாரம் செய்யும் ஒருவர் கோபப்பட்டார். அவர் சொல்வது லால்குடி எம்.எல்.ஏ. பாலனை! கடந்த அ.தி.மு.க. தேர்தலில் தி.மு.க. பிரமுகர் நேருவை எதிர்த்து வென்றவர். தொகுதியில் இன்னமும் நேருவுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. முத்தரையர், உடையார் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமுள்ள தொகுதி.

தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு நேர்மாறாக பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் விஜயகாந்தின் ரசிகர்களை குக்கிராமங்களிலும் பார்க்க முடிந்தது.

எந்த ஊருக்கு யார் ராஜாவாக இருந்தாலும் இந்த ஊருக்கு நான்தான் ராஜா என்பது போல படுகம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஸ்ரீரங்கப் பெருமாளின் ராஜகோபுரம் நம்மை வரவேற்க... நான்கு வீதிகளைச் சுற்றிலுமுள்ள அழகான பெண்கள், போன தடவை நாம் அங்கு கருத்துக் கணிப்புக்காக வந்ததை சந்தோஷத்துடன் ஞாபகப்படுத்திவிட்டு வாக்களித்தனர். உள்ளூர் எம்.எல்.ஏ. கே.கே.பாலசுப்ரமணியம் பெயரைக் கெடுத்துக் கொள்ளவில்லை.

திருச்சி 1_ம் தொகுதிக்குள் நுழைந்தபோது காந்தி மார்க்கெட் பரபரப்பாக இருந்தது. இங்கே வியாபாரிகள் மற்றும் சுற்று கடைத்தெருவிலுள்ள கடைக்காரர்கள் மத்தியில் நிறைய புகார்கள். மீண்டும் கந்துவட்டி பிரச்னை ஜாஸ்தியாகிவிட்டதாக சொன்னார்கள்.

‘‘அவர் எங்க ஊர்ல இருக்காரு? திரும்பிப் பார்த்தா, தளபதியைப் பார்க்க மெட்ராஸ் போய்டுவாரு. எப்பவும் கூடவே ஒரு பந்தா கோஷ்டி. நல்லாத்தான் இருந்தார். ஆனா இப்போ ரொம்ப மாறிப் போய்ட்டாரு...’’ என்று தி.மு.க. எம்.எல்.ஏ பரணிகுமாரை சற்று வருத்தத்தோடு நக்கலடித்தார் பாலக்கரையில் நாம் சந்தித்த ஒரு மார்க்கெட்டிங் அதிகாரி.

தொகுதி இரண்டு கழகங்களுக்குமே ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்பது மட்டும் உறுதி. அ.தி.மு.க.வில் திருவெறும்பூர் ரத்தினவேலுவுக்கு தொகுதியில் நல்ல பெயர் உள்ளது.

இரண்டாவது சுற்றை முடித்தபோது, நமக்கு தோன்றியதெல்லாம் முதல் சுற்றைப் போலவே ஏறத்தாழ அதே மனநிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள் என்பதுதான்! அவர்களுக்கு ஆடம்பர அறிவிப்புகள், பல கோடிகளில் மூன்று வருடம் கழித்து எழும்பப் போகும் கட்டிடங்களுக்கு இன்றைய அடிக்கல் நாட்டு விழாக்கள், ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக்கொண்டு உலகத்தோடு பேசலாம் போன்ற கவர்ச்சித் திட்டங்கள், மொழிக்கு உயர்ந்த அந்தஸ்து தந்த பெருமை ஆகியவையெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு வேண்டியது உடனடி நிவாரணம். அதை ஜெயலலிதா அரசு செய்கிறது. செய்துள்ளது.

அடுத்தது, உதவித் தொகையில் முதல்வர் காட்டிய தாராளம். மூன்றாவது, கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி யார் வேண்டுமானாலும் உயர்ந்த இடத்தில் உட்காரலாம் என்கிற நம்பிக்கையை கட்சிக்காரர்களுக்கு முதல்வர் தந்துள்ளது.

தி.மு.க.வின் பெரிய பலவீனம் திரும்பத் திரும்ப அதே தலைகள். அங்கே இளம் ரத்தத்திற்கு இடமில்லை. நந்தி போல உட்கார்ந்திருக்கும் இந்தத் தலைகளைப் பார்த்து மக்கள் சலித்துப் போய்விட்டனர். கலைஞரை ஏற்கும் மக்கள், அவருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின் என்பதை ஜீரணிக்கக் கஷ்டப்படுகிறார்கள்.

அடுத்த ரவுண்ட் ரிசல்ட்...

புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள்.

கூட்டணி அறுபது இடங்களை தாண்டாது’’

தமிழருவி மணியன் (காங்கிரஸ்)

‘‘சுமார் இரண்டு லட்சம் வாக்காளர்கள் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களிடம் மட்டும் கருத்துக் கேட்டுவிட்டு அதையே பெரும்பான்மையினர் கருத்தாக முத்திரை குத்தி வெளிப்படுத்துவது எந்த வகையில் அறிவியல்பூர்வமான தேர்தல் கணிப்பு என்று புரியவில்லை.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது வீட்டுச் சமையலுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், நாட்டு மக்களின் எண்ணப் போக்கை நாடிபிடித்துப் பார்க்க ஒரு போதும் சரிப்படாது. 1998_ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கருத்துக் கணிப்புக்கு மாறாக அ.தி.மு.க. அணி 30 இடங்களில் வென்றது. 2001_ம் வருட சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. நின்ற 141 இடங்களில் 132 இடங்களைப் பெறும் என்று எந்தக் கருத்துக் கணிப்பும் வெளிப்படுத்தவில்லை. எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்று இறுதிநாள் வரை முடிவெடுக்காத வாக்காளர்களின் எண்ணிக்கையே தேர்தல் கணிப்புகள் தவறிப்போவதற்கு முக்கியமான காரணம்!

ஜெயலலிதா அரசு இன்று சலுகை சாளரங்களைத் திறந்து வைப்பது நாளை உரிமைக் கதவுகளை இழுத்து சார்த்துவதற்காகவே என்ற உள்ளார்ந்த அச்சம் பாமரர்கள் வரை பரவியிருக்கிறது. வெளிப்படையாக அனுதாப அலை அல்லது கடுமையான எதிர்ப்பு அலை வீசுகிறபோது மட்டுமே தேர்தல் கணிப்புகள் சரியாக செலாவணியாகின்றன. ஆயிரம் கைகள் தூக்கிப் பிடித்தாலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி அறுபது இடங்களைத் தாண்டாது’’

முதுமை முகாரி காளிமுத்து

இந்தக் கருத்துக்கணிப்பு பற்றி உங்கள் அபிப்ராயம்?

‘‘இதை மக்களின் நாடித்துடிப்பாக நினைக்கிறேன். ஆரம்பத்திலேயே முதலமைச்சர் சொன்னார் _ ‘இது மக்கள் கூட்டணி’ என்று. அடித்தளத்து மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதைத்தான் குமுதம் துல்லியமாக காட்டியுள்ளது. ‘கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி’ என்றொரு பழமொழி உண்டு. கடந்த இருபது ஆண்டுகளாக கிராமங்களில் நிறைவேறாத பல திட்டங்கள் நிறைவேறியுள்ளது. பாலம், பள்ளிக் கட்டிடம், சுகாதார நிலையம் போன்ற ஏதாவது ஒரு நன்மை நம்முடைய ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றுள்ளது. எங்கள் அடிப்படை பலமே அதுதான். வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் எங்கள் கூட்டணியில் இருப்பது பலம்.

சாயப்போகும் சர்வாதிகாரிகளுக்குக் கடைசியாக ஏற்படும் குமட்டல் நோய் தி.மு.க. தலைவருக்கு வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் கருத்துக்கணிப்புக்காக தி.மு.க. தலைவர் சொல்வது போல பெட்டி வாங்கியதாக இருந்தால், சன் டி.வி.யை விட பணக்கார நிறுவனமாக பத்திரிகைகள்தான் இருக்கமுடியும்.

கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மனை என்ன செய்யும்? மக்கள் எண்ண ஓட்டம் இவரது அணிக்கு எதிராக இருந்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தவிக்கிறார். கொதிக்கிறார். வெடிக்கிறார். சீறுகிறார். சபிக்கிறார். இவ்வளவு தூரம் கருணாநிதி கொந்தளிப்பதற்குக் காரணம், குடும்ப ஆதிக்கத்தின் கொடியை _ அதாவது ஸ்டாலினை அடுத்து அரியணையில் ஏற்றத் திட்டமிட்டார். அதற்கு மக்கள் சக்தி இடம் கொடுக்கவில்லை.

முசோலினியைப் பற்றி ஒரு விமர்சன வாசகம் உண்டு. ‘அவன் உபதேசங்களை செவிமடுப்பதில்லை. அவன் பேச்சுக்குக் கைதட்டல் சத்தம் மட்டுமே அவனுக்குப் பிடிக்கும்.’ கருணாநிதிக்கும் அதே பிரச்னை. விமரிசனங்களைத் தாங்க வலு இல்லாத நொய் அரிசியாக தி.மு.க. தலைமை இருக்கிறது. எனவேதான் வாரா வாரம் குமுதத்தைப் பார்த்து குமுறல் வருகிறது. இது, முதுமை முகாரி. விருதாப்பிய வேதாந்தம் என்று கருதுகிறேன். கருணாநிதி பேச்சுக்கு அதைவிட முக்கியத்துவம் கிடையாது!’’

முதலமைச்சரின் நிவாரண உதவிகளால் அ.தி.மு.க. முன்னணியில் இருந்தாலும், சில தொகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்களே?

‘‘எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு தகுதியுள்ள நல்ல வேட்பாளர்களை நிறுத்துவார் முதல்வர் என்ற நம்பிக்கை எனக்குண்டு!’’


குமுதம் தேர்தல் கணிப்பு முதல் ரவுண்ட்

நன்றி: குமுதம்

2 Comments:

- யெஸ்.பாலபாரதி said...

இது மேட்டரு...
பாத்து தல... தமிழ் நாட்டு பத்திரிக்கைக்காரைய்ங்க.. உங்க மேல கேஸ் போட்டுறப்போறாய்ங்க... அவனுக மேட்டரை எல்லாம் ஒடனே அப்டேட் பண்ணுறீங்கன்னு...
ஆனாலும் இது செம பாஸ்ட்டு...

IdlyVadai said...

பாலபாரதி - கண்ணு போட்டாதீங்க :-). குமுதத்தில் வந்த பேட்டியை படித்திருக்கிறேன்.