பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 26, 2006

காங்கிரஸ் கோஷ்டி பூசல்கள்..

* இரண்டு தினங்களுக்கு முன் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்பு கட்சித்தலைவர்களை வாழ்த்தி விளம்பர கட்-அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன அவை நள்ளிரவு திடீர் என்று அகற்றப்பட்டன.

* இரண்டு நாள் முன் வீரப்பமொய்லி கொடும்பாவி எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. செல்லக்குமாரை காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்டு செய்து தமிழக காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

அதை தொடர்ந்து தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டில் அதிருப்தி அடைந்த காங்கிரசார் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உருவபொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

காங்கிரசில் அதிருப்தி

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே, எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்று தகவல் பரவியது. நேற்று முன்தினம் காலையில் வள்ளுவர் கோட்டம் அருகே காங்கிரசின் ஒரு பிரிவினர் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்காமல், தோற்கக்கூடிய தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கி விட்டார்கள் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லியை மாற்ற வேண்டும். தொகுதிகள் ஒதுக்கியதை மறுபரிசீலனை செய்து மாற்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது திடீரென்று வீரப்பமொய்லி கொடும்பாவியை எரித்தனர்.

ஒரே ஒரு தொகுதியா

இதற்கிடையே நேற்று முன்தினம் மாலையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வெளியிடப்பட்டது. இதில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் மேலும் காங்கிரஸ் தொண்டர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

சென்னையில் ராதாகிருஷ்ணன் நகர் ஒரு தொகுதி மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது சில காங்கிரஸ் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறைந்த பட்சம் சென்னையில் 4 தொகுதிகளாவது ஒதுக்கியிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

கொடும்பாவி எரிப்பு

சென்னையில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கியதை கண்டித்து நேற்று காலை தி.நகர் பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் நிர்வாகி பீர்முகமது தலைமையில் வீரப்பமொய்லி கொடும்பாவியை எரித்தனர். இதில் தென்சென்னை மாவட்ட பொது செயலாளர் எஸ்.எம்.குமார், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் மோகன், வைரராஜ், சரவணன், ஜவஹர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொடும்பாவி எரித்ததாக சுமார் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து எஸ்.எம்.குமார் கூறும்போது, ''தொகுதி பங்கீட்டை திரும்ப பெற வேண்டும். சென்னையில் குறைந்தது 4 தொகுதிகளாவது காங்கிரசுக்கு வழங்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது'' என்றார்.

அம்பத்தூர்

சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பஸ்நிலையம் அருகே ஜெ.ஜெ. நகர் தமிழ்செல்வன்தலைமையில் வீரப்பமொய்லி கொடும்பாவியை எரித்தனர். உடனே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

கரூர் காங்கிரசார் தீக்குளிப்பு

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு கரூர் மாவட்டத்தில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. இது காங்கிரஸ் கட்சியினருக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. காங்கிரஸ்காரர் ஒருவர் எம்.எல்.ஏ.வாக இருந்தும் அந்த தொகுதியை பறிகொடுத்தது அவர்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் அவசரக் கூட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு ஏதாவது ஒரு தொகுதியை பெற்றுதர தலைமையை வலியுறுத்துவது. தொகுதிகள் கிடைக்காத பட்சத்தில் தொண்டர்கள் கரூர் மாவட்டத்தில் வேலை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

ரத்த கையெழுத்து

கரூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியாவது பெற வேண்டும்.அப்படி கிடைக்காத பட்சத்தில் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று உண்ணாவிரதம் இருப்பதோடு, கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இளைஞர் காங்கிரசார் ரத்தத்தால் கையெழுத்து போட்டு தலைமைக்கு இந்த முடிவை அனுப்பி வைத்தனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முக்காடு, நாமம்...

எனினும் எந்த விதமான பதிலும், கட்சி தலைமையில் இருந்து இளைஞர் காங்கிரசாருக்கு கிடைக்க வில்லை. எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என்று இளைஞர் காங்கிரசார் முடிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து இளைஞர் காங்கிரசார் தங்கள் முகத்தில் பட்டைநாமம் போட்டுக் கொண்டும், கறுப்பு துணியை தலையில் முக்காடு போட்டும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையிலுள்ள சத்திய மூர்த்தி பவனுக்கு சென்று இளைஞர் காங்கிரசார் உண்ணாவிரதம் இருப்போம். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் தீக்குளிக்கவும் தயாராக இருக்கிறோம் என்று மாவட்ட பொதுச் செயலாளர் பாலசந்தர் கூறினார்.

ராதாபுரம் தொகுதி

தி.மு.க. கூட்டணியில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.

நெல்லை மாவட்ட காங்கிரசார் பெரிதும் எதிர்பார்த்த இந்த தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் கூறினார்கள்.

எனவே ராதாபுரம் தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்கியதை கண்டிப்பதாக கூறி திசையன்விளையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலை கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திசையன்விளை காமராஜர் சிலை முன்பு நகர காங்கிரஸ் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் ராஜன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் `கறுப்பு பேட்ஜ்' அணிந்து இருந்தனர். அவர்கள் ராதாபுரம் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

மேலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கண்டன போஸ்டர்களும் நகர் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் ராதாபுரம் தொகுதியில் காங்கிரசுக்கு கண்ணீர் அஞ்சலி, காங்கிரஸ் கட்சிக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபம். இவண் ராதாபுரம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என்பன போன்ற வாசகங்கள் அடங்கி இருந்தன.

மறுபரிசீலனை செய்ய காங்கிரஸ் போர்க்கொடி

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் எஸ்.எ.கனி அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் தென்மாவட்டத்தில் நான்கு தனித் தொகுதிகள் உள்ளன. இதில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி ஒட்டப்பிடாரம் ஆகும். மேலும் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம் ஒரு தொகுதி கூட காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை.

கூட்டணி தலைமையின் இந்த செயல் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையையும், பாதுகாப்பையும் உதாசீனப்படுத்தும் நோக்கமாக உள்ளது. இதனால் இந்த பகுதி மக்களின் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது.

புறக்கணிப்பு

எனவே இந்த பகுதியில் (ஜனநாயக முற்போக்கு கூட்டணி) வேட்பாளரை புறக்கணிக்கும் நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்களிடையே உருவாகி உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தென்காசி தனி தொகுதி கம்யூனிஸ்டுக்கு கொடுக்கப்பட்டது. ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர் சட்டசபை தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மேற்கண்ட இரண்டு தொகுதிகளுமே காங்கிரசின் கோட்டையாக இருந்து வந்துள்ளது. மறைந்த மத்திய மந்திரி அருணாசலத்துக்கு பின்பு தாழ்த்தப்பட்டவர்களுக்கு அந்தஸ்து மற்றும் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

மேலும் தனித்தொகுதிகளில் அரசியல் வாழ்க்கையிலும், காங்கிரஸில் மக்கள் செல்வாக்கு பெற்ற இளைஞர்களும், முதியவர்களும் உள்ளனர். இவர்களின் செயல்பாட்டை புறக்கணிப்பதாக தற்போதைய சூழ்நிலை உள்ளது.

எனவே நான்கு தனித் தொகுதிகளில் ஒரு தொகுதி அல்லது ஒட்டப்பிடாரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க வேண்டும், தற்போது உள்ள கூட்டணியின் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் கனி தெரிவித்து உள்ளார்.

கோவை

கோவை மாவட்டத்தில் தற்போது காங்கிரஸ் வசம் 4 தொகுதிகள் உள்ளன. வருகிற தேர்தலில் கோவை மாவட்டத்தில் 3 தொகுதிகள் தான் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு கோவை கிழக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதனால் அந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வான வி.கே.லட்சுமணன் அதிருப்தி அடைந்துள்ளார். கடந்த சில நாட்களாக சென்னையில் முகாமிட்டிருந்த அவர் 'சீட்' கிடைக்கவில்லை என்றதும் நேற்றுக் காலை ரெயில் மூலம் கோவை வந்தார். பின்னர் காலை 10 மணியளவில் அவர் ஹுசூர் சாலையில் உள்ள கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவரது ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். வி.கே.லட்சுமணன் எம்.எல்.ஏ.வுக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை என்று அறிந்ததும் அவர்கள் அதிருப்தி அடைந்து தி.மு.க. கூட்டணிக்கு எதிராக குரல் கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

வி.கே.லட்சுமணனுக்கு `சீட்'தராவிட்டால் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம் என்றும், அவரை சுயேச்சையாக நிறுத்தி வெற்றி பெற செய்வோம்' என்றும் அவர்கள் அறிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் தி.மு.க. கூட்டணியை தோற்கடிப்பதே எங்கள் லட்சியம் என்றும் அவர்கள் அறிவித்தனர். ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் காட்டுமன்னார்கோவில் தொகுதி மட்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி போதாது என்றும், கடலூர், சிதம்பரம், புவனகிரி ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட சேவா தலைவர் என்.குமார் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் சட்டையை கழற்றி எறிந்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஜெயசூரியா, கலியபெருமாள் உள்பட 5 பேர் கலந்து கொண்டனர்.

0 Comments: