பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 13, 2006

தி.மு.க.வுடன்- இந்திய கம்யூ சமரச உடன்பாடு

திமு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படுள்ளது.

இது அந்த கட்சித் தலை வர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 13 இடங்கள் கொடுத்தி ருப்பதன் மூலம் கம்யூ னிஸ்டுகளிடையே தி.மு.க. ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தி விட்டதாக அவர்கள் கருதினார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு இணையாக தங்களுக்கும் கூடுதல் தொகுதிகள் தர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். ஆனால் இதை தி.மு.க. ஏற்கவில்லை. கூட்டணிக்காக ஏற்கனவே நிறைய இடங்களை தியாகம் செய்து விட்டதாக தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயற் குழு சென்னையில் கூடி விவாதித்தது.

இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் மாநில செயலாளர் நல்லக்கண்ணு உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் தி.மு.க.வுக்கு நெருக்கடி ஏற்படுத்தி கூடுதலாக ஓரிரு இடங்கள் பெறுவதை விரும்பவில்லை. அவர்கள் செயற்குழு உறுப்பினர்களை சமரசம் செய்தனர்.

கூடுதல் தொகுதிகள் கேட்பதை விட வெற்றி வாய்ப்புள்ள 10 தொகுதிகளை கேட்கலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இதை பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்.

கட்சிக்குள் ஒருமித்த கருத்து உருவானதைத் தொடர்ந்து நேற்றிரவு தி.மு.க. தலைவர் கருணாநிதியை தா.பாண்டியன், நல்லக்கண்ணு ஆகிய இருவரும் சந்தித்துப் பேசினார்கள். தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 10 தொகுதி பட்டியலை கொடுத்தனர். இந்த 10 தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சமாதானம் அடைந்தனர். தி.மு.க. கூட் டணியில் நீடிப்பதாக கூறி உள்ளனர். இதன் மூலம் தி.மு.க.-இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையே நிலவி வந்த சிக்கல் நீங்கி விட்டது.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும் தொகுதி பங்கீட்டில் முழு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 10 தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்டமாக எந் தெந்த தொகுதி என்று பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஒருசில நாட்களில் இது முடிவாகிவிடும். அதன்பிறகு வேட்பாளர்களை தேர்வு செய்வோம்.

பாராளுமன்ற தேர்தலில் இந்த அணி சட்டசபை தேர்தலிலும் தொடர்கிறது. தொகுதி பங்கீட்டில் சில பிரச்சினைகள் இருந்ததாக செய்திகள் வந்தன. இப்போது அப்படி எதுவும் இல்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு எங்கள் கட்சியை விட 3 இடங்கள் கூடுதலாக கிடைத்து விட்டது என்று நாங்கள் வருத்தப்பட்டதாகவும் சீற்றம் அடைந்ததாகவும் கூறுவது தவறு. இரு கட்சிகளுக்கும் சேர்த்து 23 இடங்கள் கிடைத்து இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

பாராளுமன்றத்திலும் சட்ட சபையிலும் இடதுசாரிகள் சக்தி அதிகம் இருக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். எனவே 10 தொகுதி, 13 தொகுதி என்று நாங்கள் பார்ப்பது இல்லை. 23 தொகுதி என்றே பார்க்கிறோம்.

இதில் பொறுமைப்பட கோபப்பட எதுவும் இல்லை.

தேர்தல் என்பது ஆட்சி அமைப்பதற்கு மக்கள் கருத்தை அறிய நடத்தப்படுகிறது. அதுவே சமுதாய மாற்றத்துக்கு வழி என்று நாங்கள் கூறியதில்லை.

அதே சமயத்தில் மக்கள் கோரிக்கைளை சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் வைக்க வேண்டியது கட்டாய மாகும். அந்த பொறுப்புணர் வுடன் தேர்தல் களத்தில் இறங்குகிறோம்.

தமிழ்நாட்டில் மாற்று ஆட்சி அவசியம் என்பது எங்கள் கட்சி முடிவு. ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றம் கொண்டு வருவது ஜனாநாயகத்துக்கு அவசியம்.

தமிழ்நாட்டில் பல பணிகள் நிறைவேற்றப்பட வேண்டியதுள்ளது. வெள்ளத்தில் குளம், கால்வாய்கள் காணாமல் போய்விட்டன. அதில் கவனம் செலுத்த உள்ளோம்.

இன்னும் ஒருவாரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

கேள்வி:- தொகுதி பங்கீட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அதிருப்தி அடைந்தது உண்மையா?

பதில்:- தோழர்கள் மத்தியில் கோபம் இருந்தது. அது இயல்பு. கட்சி ஒரு முடிவு எடுத்த பிறகு அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கே: மேல்சபை எம்.பி. பதவி உங்களுக்கு தர இருப்பதாக கூறப்படுகிறதே?

ப:- சட்டசபைக்குத்தான் தேர்தல் நடக்கிறது. மேல் சபைக்கு அல்ல. மேல்சபை எம்.பி. பதவியை நாங்கள் கேட்கவில்லை. அவர்களும் தருவதாக சொல்லவில்லை.

கே:- அ.தி.மு.க.வுடன் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்ததா?

ப:- அ.தி.மு.க. தரப்பில் இருந்து என்னிடமோ, எங்கள் கட்சியினரிடமோ யாரும் தொடர்பு கொள்ளவில்லை.

கே:- வைகோ அ.தி.மு.க. அணிக்கு தாவியது பற்றி கருத்து என்ன?

ப:- அணி மாறுவது அந்தந்த கட்சி விருப்பம். அதை பெரிய குற்றமாக சொல்வது சரிஅல்ல.

கே:- வைகோ விலகலால் தி.மு.க. கூட்டணி வெற்றி பாதிக்கமா?

ப:- 2001 தேர்தலிலும் இந்த கூட்டணியில் வைகோ இல்லை. இடம்மாறி இருப்பது தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தான். மற்றவர்கள் அப்படியே இருக்கிறோம்.

கே:- தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வருமா?

ப:- மே 8-ந் தேதிதான் தேர்தல் நடக்க உள்ளது. இடையில் என்ன `சுனாமி' வருமோ தெரியவில்லை. வானிலை அறிக்கை கூட பொய் ஆகிவிடுகிறது.

மக்கள் அமைதியாக உள்ளனர். ஆனாலும் அவர்கள் சிந்தித்து சரியான தீர்ப்பு வழங்குவார்கள்.

கே:- கூட்டணி ஆட்சி, தனிக்கட்சி ஆட்சியில் எது வந்தால் நன்றாக இருக்கும்?

ப:- தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்க விரும்புகிறது. அதை நாங்கள் எதிர்க்க மாட்டோம்.

கே:- வேட்பாளர் தேர்வு எப்போது?

ப:- தொகுதி முடிவானதும் மறுநாளே வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம். புதியவர்கள், இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஆசை உள்ளது.

கே:- நீங்கள் போட்டியிடுவீர்களா?

ப:- மாநில செயலாளராக இருப்பதால் போட்டியிடும் என்னம் இல்லை.

கே:- தி.மு.க. கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்?

ப:- கலைஞர்தான் முதல்- அமைச்சர் வேட்பாளர்.

கே:- ஒரு மந்திரி வீட்டில் வாக்காளர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டதாக செய்தி வந்துள்ளதே?

ப:- அப்படி வந்து இருந்தால் தேர்தல் கமிஷன் கவனத்துக்கு கட்டாயம் கொண்டு செல்வோம்.

செய்தி: மாலைமலர்

0 Comments: