பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 12, 2006

இதெல்லாம் நியாயம்தானா? - ஞாநி

‘தமிழ் இணைக்கிறது; டம்ளர் பிரிக்கிறது’ என்று ஒரு தலித் கவிதை, தமிழ்நாட்டில் கட்டித் தழுவும் மேடை அரசியலுக்கும், தீண்டாமை கோலோச்சும் அசல் வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளியை சில காலம் முன்பு அழகாக வர்ணித்தது.

தமிழைப் பாதுகாக்க வேறு நாதியற்றுப் போன நிலையில், மருத்துவர் மாலடிமையும் (மால் - ராம; அடிமை - தாசு) தொல். திருமாவளவனும் இணைய வேண்டியதாயிற்று. தேர்தல் அவர்களைப் பிரித்துவிட்டது. தேர்தலுக்குப் பின் மறுபடியும் தமிழ்ப் பாதுகாப்புப் பணி தொடருமாம். அதுவரை தமிழன்னை பாவம், மூன்று மாத காலம் காவலற்ற காரிகையாய் காத்திருக்கவேண்டும்.

வைகோவின் அரசியல் கொள்கைகளிலேயே உச்சமானது விடுதலைப் புலிகள் ஆதரவு. அவர்கள் இவரை ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும், இவர் அவர்களைத் துளியும் தயக்கமின்றி ஆதரிப்பார். அதே போல, ‘விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல; அவர்களால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை; அவர்கள் உண்மையில் விடுதலைக்குப் போராடும் காந்தியவாதிகள்தான்’ என்று மனம் மாறி சந்திரிகாவும், ராஜபக்ஷேவும் அறிவித்தாலும்கூட, விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள்தான் என்ற தன் கருத்தை மாற்றிக் கொள்ளப் போவதில்லை ஜெயலலிதா. ஆனால், வைகோவும் ஜெயலலிதாவும் இப்போது ஓரணியில்!

இதற்கெல்லாம் என்ன நியாயம்? ஒரு நியாயமும் இல்லை என்று புலம்பவேண்டாம். நிறையவே இருக்கிறது.

கட்சி தொடங்கி பல ஆண்டுகள் ஆகியும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் சரி, ம.தி.மு.க-வுக்கும் சரி, ஒரு எம்.எல்.ஏ கூட இதுவரை இல்லை. (ஒரே ஒரு முறை, தான் மட்டும் ஜெயித்ததையும் திருமா தானே கெடுத்துக் கொண்டுவிட்டார்.) எம்.எல்.ஏ. இல்லாமல் தமிழ்நாட்டு அரசியலில் எப்படிக் கட்சியை வளர்க்க முடியும்?

ராமதாஸ் மூலம் தி.மு.க. அணியில் இடம் பிடிக்க திருமா எடுத்த முயற்சிகள் எதுவும் பயன் தரவில்லை. தன் வீட்டு மருமகள்களில் தலித்துக்கு இட ஒதுக்கீடு இருப்பதைப் பெருமையோடு சொல்லும் கலைஞரைப் பொறுத்தவரை, இம்முறை கூட்டணியில் இதுவரை இடம் இல்லை. வேறு வழியே இல்லாமல், அய்யாவின் கருணைக்கு ஏங்குவதைக் கைவிட்டு, அம்மாவின் கடாட்சத்துக்குக் கையேந்தினார் திருமா. ஆன்மிக குரு ஜக்கியிடம் பெரியாரையும் அம்பேத்கரையும் மார்க்ஸையும் தரிசித்ததுபோல, இனி அரசியல் குரு புரட்சித் தலைவியிடம் பொதிந்து கிடக்கும் ஜான்சி ராணி முதல் அன்னை தெரசா வரை திருமா கண்டறிந்து நமக்கும் உபதேசிக்கலாம்.

வைகோவின் நியாயம், வேறு எந்தத் தேர்தலையும் விட இந்தத் தேர்தலில் அதி முக்கியமானது. தேர்தலில் தி.மு.க. ஜெயித்தால் யார் முதலமைச்சர்? கலைஞர்தான். ஆனால், முதுமை காரணமாக, பொறுப்பை மாற்றித் தந்தாகவேண்டிய நிலை வந்தால், வைகோவிடமா ஒப்படைக்கப் போகிறார்? நிச்சயமாக இல்லை. ஸ்டாலினிடம்தான்!

ஸ்டாலினை முதலமைச்சராக வைகோ ஏற்பதானால், அவர் ம.தி.மு.க-வைத் தொடங்கி இருக்கவே தேவையில்லையே! கலைஞருக்கு பேராசிரியர் மாதிரி, ஸ்டாலினுக்கு வைகோ என்று அக்கடாவென்று இருந்திருக்கலாமே!

கலைஞர் காலத்துக்குப் பிறகு தி.மு.க. தன் பக்கம் வருமென்று நம்பி, மறுபடியும் போய் ஒட்டிக் கொன்டது, தயாநிதி மாறனின் வருகைக்குப் பின் முட்டாள்தனமாகிவிட்டது. எனவே, இந்தத் தேர்தலில் தி.மு.க. உறவை உதறிவிட்டு வராவிட்டால், வைகோ இனி எந்தத் தேர்தலிலும் ஸ்டாலினுக்கோ தயாநிதிக்கோ எதிரான பெரும் தலைவராக தன்னை உயர்த்திக் கொள்ள வழியே இல்லை.

‘பொடாவில் 19 மாதம் சிறை வைத்த ஜெயலலிதாவுடனா கூட்டு?’ என்று தொடங்கி, சரமாரியாக எத்தனைக் கேள்விகள் எழுந்தாலும் சரி, சுலபமாக பதில் சொல்லிவிடலாம். புலிகள் ஆதரவு பற்றிய அரசியல் வேறுபாட்டினால், ஜெயலலிதா வைகோவை சிறை வைத்தார். மற்றபடி, தனிப்பட்ட முறையில் வைகோ பற்றி ஒரு இழிவான சொல்கூட அவர் சொன்னதில்லை. ஆனால், வைகோ தனிக் கட்சி துவங்குமளவுக்கு கலைஞர் வீசிய குற்றச்சாட்டு, சிறையில் அடைத்ததை விடக் கொடுமையானது இல்லையா? இதுவே ம.தி.மு.க. சொல்லும் நியாயமாக இருக்க முடியும்!

‘நான்கு ஆண்டுகளாக, கடைசி நிமிடம் வரை இந்த அணியில் இருந்துவிட்டு, திடீரென கூட்டணி மாறியது சரியா?’ என்று கேட்டால், அதற்கும் பதில் உண்டு. 40 எம்.பி. இடங்களையும் ஜெயித்த தேர்தலுக்குச் சற்று முன்பு வரை பி.ஜே.பி. அரசில் ஆட்சி அதிகார சுகத்தை அனுபவித்துவிட்டுக் கடைசி நிமிடத்தில்தானே காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்தார் கலைஞர்?

தமிழக அரசியலில் மிகப் பெரிய சிக்கலே இதுதான். யாரும் யாரை நோக்கியும் கை நீட்ட முடியாது. எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அதனால்தான் விமர்சனங்கள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இங்கே விமர்சனம் என்பதே சுவாரஸ்யமான பொழுதுபோக்காக மாறிவிட்டது. இரு தரப்பும் மாறி மாறி வைக்கும் வாதங்களின் புத்திசாலித்தனத்தை ரசிப்பதில் மக்கள் செலவிடும் நேரத்தில் ஒரு சிறிய அளவு கவனம்கூட அந்த வாதங்களின் நியாயங்களில் செலுத்துவதில்லை என்பதை அரசியல்வாதிகள் நன்கு அறிவார்கள்.

அதே சமயம், யார் யாரோடு சேருவது என்று எடுக்கும் முடிவுகள் எதுவும் பொது நலன் கருதி அல்ல என்பது இன்று மக்களுக்கும் தெரிந்துவிட்டது. எனவேதான், Ôஇது கூட்டணி அல்ல, தொகுதி உடன்பாடுதான்; தேர்தல் கூட்டு என்பது கொள்கை கூட்டு அல்லÕ என்றெல்லாம் புதுப்புது அரசியல் சித்தாந்த விளக்கங்கள் தரப்படுகின்றன. தேர்தல் நேரத்தில் ஒரே ஒரு கொள்கைதான்... எப்படியாவது அதிக சீட் பெற்றுவிடவேண்டும். அதிக சீட் ஜெயிக்க வேண்டும். அதற்கு யாரோடு யார் சேர்ந்தாலும் சரி!

இந்தக் கேவலமான நிலைமைக்கு நம்மைத் தள்ளியதில், நமது தேர்தல் முறைக்கு முக்கியப் பங்கு உண்டு. விகிதாசார பிரதிநிதித்துவம் இருந்தால், இந்தக் கேவலம் ஏற்படாது. வைகோவின் ம.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டபோது, அதற்குச் சுமார் 4.5 சதவிகித ஓட்டு கிடைத்தது. விகிதாசார முறை இருந்திருந்தால், அதன்படி அப்போதே அக்கட்சிக்கு சுமார் 9 எம்.எல்.ஏ-க்கள் இருந்திருப்பார்கள்.

தேர்தல் முறை மாறாமல், மக்கள் பார்வை மாறாமல் இந்தக் கேவலங்கள் மாறப் போவதில்லை.

‘நடைபெறும் கேலிக்கூத்துகளில் இன்னும் பாக்கியிருப்பது ஒன்றே ஒன்றுதான். அது கருணாநிதியும் ஜெயலலிதாவும் கூட்டணி அமைப்பதுதான்’ என்று நினைக்கிறீர்களா? ம்ஹூம்! அதுவும் எப்போதோ நடந்து முடிந்துவிட்டது. மக்களுக்கு எதிரான அரசியலில் அவர்கள் மட்டுமென்ன... எல்லாக் கட்சிகளும் எப்போதும் ஓரணியில்தான் இருக்கிறார்கள்!

நன்றி: ஆனந்த விகடன்

3 Comments:

Voice on Wings said...

(ஒரு பின்னூட்டமிட்டேன், சமர்ப்பிக்கும்போது நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது, ஆகவே, வந்ததா என்றுத் தெரியவில்லை)

//இந்தக் கேவலமான நிலைமைக்கு நம்மைத் தள்ளியதில், நமது தேர்தல் முறைக்கு முக்கியப் பங்கு உண்டு. விகிதாசார பிரதிநிதித்துவம் இருந்தால், இந்தக் கேவலம் ஏற்படாது. வைகோவின் ம.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டபோது, அதற்குச் சுமார் 4.5 சதவிகித ஓட்டு கிடைத்தது. விகிதாசார முறை இருந்திருந்தால், அதன்படி அப்போதே அக்கட்சிக்கு சுமார் 9 எம்.எல்.ஏ-க்கள் இருந்திருப்பார்கள்.//

அந்த 9 எம்எல்ஏக்களும் எந்தத் தொகுதிகளின் பிரதிநிதிகளாக அறியப்படுவார்கள்? அல்லது எல்லா எம்எல்ஏக்களுமே தொகுதிச் சார்பற்றவர்களாக அறியப்படுவார்களா? அப்படியென்றால் ஒரு வட்டார அளவில் நடக்கும் அரசியல் / ஆட்சிப் பணிகளுக்கு யார் பொறுப்பாளி? 'இன்ன தொகுதிக்கு இன்னார்தான் பிரதிநிதி' என்று வரையறுத்திருக்கும் போதே எந்த விதமான accountabilityயையும் பார்க்க முடிவதில்லை. இன்னும் தொகுதிப் பொறுப்பும் இல்லாது, சும்மா சட்ட மன்றத்திற்கு வந்து போனால் போதும் என்ற நிலை ஏற்படுமானால், மக்கள் நலன் மேலும் பாதிப்படையும்.

Anonymous said...

You have commented as to whether Karunanidhi and Jayalalitha will form an alliance. Who knows? As it happened in Germany it may happen here after election. And it may not be a wonder if we see Amma again as CM and Ayya as Chief of the coalition Govt.!!!!

பாலசந்தர் கணேசன். said...

-ஞாநி சொல்லுகிற யோசனையில் உள்ள நடைமுறை சிக்கல்களை தெளிவாக பின்னூட்டம் காட்டுகிறது.
தற்பொதைய செயல்பாட்டிற்கும் , -ஞாநி சொன்ன யோசனையும் கலந்து நாம் ஒரு வழிமுறை கொண்டு வர வேண்டும். முதலில் இந்த கட்சி அமைப்புகள் தடை செய்யபட வேண்டும். தனி மனித ஆராதனை, கண்மூடித்தனமாக சின்னங்களுக்கு ஒட்டு போடுவது போன்றவை அழிய வேண்டும்.