பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 06, 2006

வைகோ - பேட்டி


நீங்கள் அ.தி.மு.க.,வுடன் அணி சேர்ந்த பிறகு உங்கள் கட்சித் தொண்டர்கள் என்ன சொல்கின்றனர்?

நுõற்றுக்கு 101 சதவீதம் பேர் இந்த முடிவை வரவேற்கின்றனர். அவர்களின் கருத்துப்படிதான் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்துள்ளோம். இனி தி.மு.க.,வுடன் இருக்கவே முடியாது என்று அவர்கள் சொன்னதால் தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது ஆழமாக சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு.

தி.மு.க.,வில் மூன்று தொகுதிகள் கிடைக்காதது தான் நீங்கள் விலகியதற்கு காரணமா?

இல்லை. அவர்களது அணுகுமுறையே காரணம். நம்ப வைத்து கழுத்தறுப்பார்கள் என்ற எண்ணம் எங்கள் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டு விட்டது. நான் கருணாநிதியிடம் 25 தொகுதிகள் கேட்டபோது தர ஒப்புக் கொண்டார். பின்னர் 22 தொகுதிகள் என்று சொன்னபோது கடைசியாக கெஞ்சிக் கேட்டேன். அவரது மனதில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினேன். அதை இப்போது வெளியிட விரும்பவில்லை. காலம் வரும்போது வெளியிடுவேன். 3ம் தேதி காலை நான் கருணாநிதியுடன் பேசியபோது 22 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்றார். 22 தொகுதியை ஏன் கொடுக்கிறீர்கள் என்று என்னிடம் கோபிக்கின்றனர் என்று சிலரது பெயரை சொன்னார்.

நீங்கள் கேட்ட முக்கிய தொகுதிகள் கிடைக்காததால் வெளியேறியதாக சொல்கிறார்களே?

உண்மைக்கு மாறாக எதையும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், கேட்கிற தொகுதிகள் கிடைக்காது என்ற எண்ணம் தொண்டர்கள் மத்தியில் இருந்தது. நான் கருணாநிதியிடம் 41 தொகுதிகளின் பட்டியலை கொடுத்தேன். அதில் அருப்புக்கோட்டை இடம்பெறவில்லை என்று தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் எங்கள் மாவட்டச் செயலரை தொடர்பு கொண்டு "வைகோ கொடுத்துள்ள பட்டியலில் உங்களுக்கே வாய்ப்பில்லையே. உங்கள் தொகுதியே இல்லையே' என்று கூறியுள்ளார். இப்படி நான் தலைமையிடம் கொடுத்த பட்டியலையே கீழே கொடுத்து எங்களுக்குள் கசப்புணர்வை ஏற்படுத்தினர். 99 சதவீதம் நிர்வாகிகளுக்கு தி.மு.க., கூட்டணியில் இருக்க விருப்பம் இல்லை. தி.மு.க., தலைவர் கருணாநிதி பேட்டியளித்ததும் தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் என்னுடன் தொடர்பு கொண்டு கூட்டணியில் இனி இருக்க முடியாது என்று ஒருமனதாக தெரிவித்தனர். அதன்பின்னர்தான் கூட்டணியை விட்டு வெளியேற முடிவு செய்தேன். கட்சியின் ஏகோபித்த முடிவுதான் இது.

தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும் உங்களை தோற்கடித்து விடுவார்கள் என்ற பயம் ஒரு காரணமா?

நல்ல எண்ணம் அவர்களிடத்தில் இல்லை. நாகரிகமற்ற அணுகுமுறை இருந்தது. கடந்த முறை நான் சிறையில் இருந்தபோதே தொகுதி பங்கீடு நடத்தப்பட்டது. எங்களுக்கு நான்கு இடங்கள் மட்டுமே ஒதுக்கினர். அதில் ஒரு இடத்தில் நான் நிற்க வேண்டுமா? என்று நினைத்தேன். அதனால் தான் நான்கூட போட்டியிடவில்லை. அதன்பிறகு என்னை அழைத்து ஒரு இடம் கொடுப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், கருணாநிதி கொடுக்கவில்லை. வெற்றி பெற்ற பிறகு ஒருமுறை பிரதமரைச் சந்தித்தபோது ம.தி.மு.க., எம்.பி.,க்கள் நான்கு பேரையும் சேர்த்து 20 எம்.பி.,க்கள் என்று கணக்கிட்டு தான் தி.மு.க.,வுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். தி.மு.க.,வில் உள்ளடங்கிய கட்சி ம.தி.மு.க., என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளனர். அது என்னை மிகவும் வருத்தமடையச் செய்தது. இருந்தாலும் இந்த விஷயத்தை நான் இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. கருணாநிதியிடமும் கேட்கவில்லை.

மிசாவுக்கும் பொடாவுக்கும் வேறுபாடு இருக்கிறது என்று கருணாநிதி கூறியிருக்கிறாரே?

பொடாவை விட மிசா கொடுமையான சட்டம். பொடா சட்டத்தில் பேச்சு சுதந்திரமாவது இருக்கிறது. ஆனால், மிசா சட்டத்தின்போது எழுத்துரிமை, பேச்சுரிமையும் பறிக்கப்பட்டது. தி.மு.க., இயக்கத்தையே தடை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. சாத்துõர் பாலகிருஷ்ணனும் சிட்டிபாபுவும் உயிரிழந்தனர். அப்போது 77ம் ஆண்டு தேர்தல் வந்தது. 79ம் ஆண்டிலேயே காங்கிரசுடன் கூட்டு வைத்து இந்திரா காந்தியை வரவேற்கவில்லையா? அதையெல்லாம் இப்போது என்னால் வெளியிட முடியாதா? அண்ணாவும் ராஜாஜியும் விமர்சித்துக் கொள்ளவில்லையா? கண்ணீர் துளிகள் என்று அண்ணாவைப் பற்றி பெரியார் விமர்சிக்காததா? குள்ள மனிதர் ஒருவர் என்னை கொலை செய்ய முயற்சித்தார் என்று வழக்கு தொடரும் அளவுக்கு போகவில்லையா? பின்னர் அவர்களே சேர்ந்து கொள்ளவில்லையா? காமராஜரும் பெரியாரும் எவ்வளவு விமர்சித்தனர் என்பது தெரியாதா? ஏழைப் பங்காளன் காமராஜரின் பங்களா பாரீர் என்று படம் வெளியிடவில்லையா? எம்.ஜி.ஆரை கேரளத்துக்காரர் என்று சொல்லிவிட்டு அவர் அமெரிக்காவில் இருந்தபோது என்னிடம் ஆட்சியைக் கொடுங்கள். அவர் திரும்பி வந்ததும் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறேன் என்று பேசவில்லையா? பண்டாரம், பரதேசி என்று பேசிவிட்டு பின்னர் கூட்டு வைத்ததை நான் வெளியிடட்டுமா? இதுபோன்ற ஓராயிரம் முரண்பாடுகளை அரசியலில் சொல்ல முடியும். நான் சொல்வதெல்லாம் "டிப் ஆப் த ஐஸ்பர்க்' என்பதைப் போல ஒரு சிறு துளிதான்.

உங்களது கட்அவுட் கொளுத்தப்பட்டிருக்கிறதே?

எனது கட்அவுட்டை 100 துண்டுகளாக்கி அதை ஆயிரம் பேர் செருப்பால் அடித்துள்ளனர். தலைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்துச் சென்று அசிங்கப் படுத்தி உள்ளனர். அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. பத்திரிகையாளர்களை அடித்ததுதான் வேதனை. எங்கள் கட்சி சார்பில் துளியும் வன்முறை நடக்க நான் அனுமதித்தது இல்லை.

பிரசாரத்தின்போது உங்கள் மீதும் வன்முறை தொடரும் என்று நினைக்கிறீர்களா?

எல்லாவற்றையும் அனுபவித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன். அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. வன்முறை நடந்தாலும் எங்கள் கட்சியினரை பதிலுக்கு ஈடுபட அனுமதிக்க மாட்டேன்.

மத்திய கூட்டணியில் ம.தி.மு.க., இடம்பெறுவதை அனுமதிக்க மாட்டோம் என்று கருணாநிதி கூறியுள்ளாரே?

ம.தி.மு.க.,வை இழக்க வேண்டியதில்லை என்று பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி பதிலளித்துள்ளார். இதுபற்றி முடிவெடுக்க வேண்டியது சோனியா தான்.

மத்திய கூட்டணியில் இருந்து வெளியில் வர வேண்டும் என்று அ.தி.மு.க., சார்பில் நிபந்தனை விதிக்கப்பட்டதா?

இல்லை.

நீங்கள் அ.தி.மு.க., கூட்டணிக்கு போய் விட்டதால் மூன்று மாவட்டச் செயலர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்கள் தி.மு.க.,வில் சேரப் போவதாகவும் கூறப்படுகிறதே?

எங்கள் கட்சி ஒரு இரும்புக் கோட்டை. இங்கிருந்து ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது. தி.மு.க.,வில் சேதாரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளட்டும். அவர்கள் கட்சியில் உள்ள பழைய தி.மு.க.,வினர் எங்கள் தலைமை தான் உங்களை சரியாக நடத்தவில்லை என்று என்னிடம் வருத்தப்பட்டு சொல்கின்றனர்.

நீங்கள் அணி மாறியிருப்பது சந்தர்ப்பவாதம் என்று குற்றம் சாட்டப்படுகிறதே?

எந்த சந்தர்ப்பவாதமும் இல்லை. தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., ஆகிய மூன்றுமே திராவிட இயக்கங்கள் தான். இது "நேச்சுரல் அலையன்ஸ்'. 72ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., கட்சியை விட்டு நீக்கப்பட்டார். நானும் கட்சியை விட்டு நீக்கப்பட்டவன் தான். என்னை நீக்கியபோது ஐந்து பேர் உயிரிழந்தனர். அதையெல்லாம் மறந்து விட்டுத்தான் தி.மு.க., அரவணைத்தபோது இணைந்து செயல்பட்டோம்.

தி.மு.க., பொதுக்குழுவில் உங்களைப் பற்றி கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறதே?

பலர் பேசியதாக நானும் கேள்விப்பட்டேன். நாங்கள் கூட்டணியில் இருந்தபோது அவர்களை அப்படி பேச அனுமதித்துள்ளனர். அதையும் பொறுத்துக் கொண்டு மாநாட்டுக்கு செல்ல பேச்சை தயார் செய்தேன். ஆனால், கருணாநிதி நிபந்தனை விதித்ததுதான் நாங்கள் வெளியேற காரணமாகி விட்டது.

நீங்கள் கேட்கும் தொகுதிகள் அ.தி.மு.க.,வில் கிடைக்குமா?

அ.தி.மு.க.,வில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நாங்களும் குழு அமைத்துள்ளோம். அவர்கள் பேசி முடிவு செய்வார்கள்.

பொடாவில் இருந்து உங்களை காப்பாற்றியவரே கருணாநிதி தான். ஆனால், அவருக்கு துரோகம் செய்துவிட்டு நீங்கள் கூட்டணி மாறிவிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறதே?

தவறான கருத்து. என்னை பொடாவில் கைது செய்தபோது அவர்களது பத்திரிகையில் கேலிச்சித்திரம் வரைந்தவர்கள் தான் இவர்கள். நான் நான்கைந்து மாதங்கள் சிறையில் இருந்தபோது மாறன் வருத்தப்பட்டார். எனக்கு கடிதம் எழுதினார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது எனது மகனை நேரில் சென்று பார்க்கும்படி சொன்னேன். அதற்குப் பிறகுதான் ஆதரவு தெரிவித்தனர். பொடா சட்டம் வந்தபோது நாங்கள் எதிர்த்தோம். பார்லிமென்ட்டில் பேசவில்லை. ஆனால், தி.மு.க., ஆதரித்து பேசியது. ஓட்டெடுப்புக்கு விடும்போது அமைச்சரவையில் இருந்ததால் வேறு வழியின்றி ஓட்டுப் போட்டோம். நான் சிறையில் இருந்தபோது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். ஒருநாள் சிறையில் இருந்தால்கூட தேர்தலில் போட்டியிட முடியாது என்று இருந்தது. அதை சுட்டிக்காட்டி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். பின்னர் அதற்காக சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. சட்ட திருத்தம் கொண்டு வர தி.மு.க., வலியுறுத்தவில்லை. என்னை விடுவிக்க தி.மு.க., தலைவர் கருணாநிதி முயற்சி எடுத்தார் என்பதில் உண்மை இல்லை. இன்னும் நான் முழுமையாக விடுதலை பெறவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால தடை வழங்கப்பட்டுள்ளது. பொடாவுக்கு முன்தேதியிட்டு சட்ட திருத்தம் கொண்டு வந்தால் தான் விடுதலை பெற முடியும். அதை செய்தால் தனி நபருக்காக செய்ததாக வரும் என்றனர். அதற்காக நானும் மத்திய அரசிடம் கெஞ்சவில்லை. அதற்காக மத்திய அரசுமீது எனக்கு வருத்தமும் இல்லை. அதைபற்றி தி.மு.க., கோரவும் இல்லை. பேசவும் இல்லை.

பா.ம.க.,வுக்கு இணையாக அல்லது கூடுதலாக தொகுதிகள் வேண்டும் என்று கேட்டீர்களா?

அப்படி நாங்கள் கேட்டதே இல்லை. எங்களுக்கும் பா.ம.க.,வுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. கருணாநிதியிடம் பேசும்போது பா.ம.க., வெளியில் போனால் உங்களுக்கு நிறைய "சீட்' தருகிறேன் என்று சொன்னார். அதேபோன்று எங்களைப் பற்றி அவர்களிடமும் சொல்லியிருக்கலாம்.

தி.மு.க., கூட்டணியில் இருந்து வேறு எந்தக் கட்சியாவது அ.தி.மு.க., பக்கம் வர வாய்ப்புள்ளதா?

அதுபற்றி முதல்வர் ஜெயலலிதா தான் முடிவெடுப்பார். யாரையும் நான் அழைக்கவில்லை.

ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுப்பதற்காகவே இந்த முடிவை எடுத்தீர்கள் என்கிறார்களே?

அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை. எதற்கு அந்தப் பேச்சு.

நீங்கள் போட்டியிடுவீர்களா? எந்த தொகுதியில்?

கட்சியின் ஆட்சிமன்றக் குழுதான் முடிவெடுக்கும்.இவ்வாறு வைகோ பேட்டியளித்தார்.

"டிவி' நிகழ்ச்சி வைகோ மகிழ்ச்சி : நீங்கள் முன்பு ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதை தொலைக்காட்சியில் தற்போது வெளியிடுகிறார்களே?

எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. கடந்த இரண்டு ஆண்டுகளாக அ.தி. மு.க.,வை விமர்சனம் செய்து பேசியபோதெல் லாம் காட்டாத அவர்கள் இப்போது காட்டுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அப்போது செய்த பாவத்திற்கு இப்போது பரிகாரம் தேடிக் கொள் கின்றனர்.

"காபி கொடுப்பவனிடமும் கருத்து கேட்டேன்' : வைகோ அளித்த சிறப்பு பேட்டியில், ""அ.தி.மு.க., கூட்டணிக்கு செல்லும் முன்பாக அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டு ஆழ்ந்து சிந்தித்து முடிவு எடுத்தேன்,'' என்றார். ""கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மட்டுமின்றி எனக்கு காபி கொடுக்கும் பையனிடம் கூட கருத்து கேட்டேன். எனக்கு முடிவு வெட்டுபவர், சலவை தொழிலாளி, டிரைவர் என அனைவரின் கருத்தையும் கேட்டு கடைசியாக எடுத்த முடிவு தான் இது,'' என்று வைகோ கூறினார்

படம், செய்தி : நன்றி தினமலர். படத்தில் வைகோ கடைசியாக போட்ட கும்பிடு

3 Comments:

அழகப்பன் said...

//நுõற்றுக்கு 101 சதவீதம் பேர் இந்த முடிவை வரவேற்கின்றனர். அவர்களின் கருத்துப்படிதான் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்துள்ளோம். இனி தி.மு.க.,வுடன் இருக்கவே முடியாது என்று அவர்கள் சொன்னதால் தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது ஆழமாக சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு.//

//அவர்களது அணுகுமுறையே காரணம். நம்ப வைத்து கழுத்தறுப்பார்கள் என்ற எண்ணம் எங்கள் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டு விட்டது.//

//3ம் தேதி காலை நான் கருணாநிதியுடன் பேசியபோது...//

கருணாநிதி 25 தொகுதிகள் கொடுத்திருந்தால் ஆழமாக சிந்தித்து எடுத்த முடிவை கண்டிப்பாக மாற்றியிருப்பார். ஆக 3 தொகுதிகள்தான் அவரது ஆழமான சிந்தனை.

அழகப்பன் said...

கூட்டணி ஏற்பட்ட மறுநாள் 5ஆம் நாள் அ.தி.மு.க.வின் நாளேட்டில் ஒட்டுண்ணியைப் பற்றிக் கூறியுள்ளனர்.

பார்க்க: தேர்தல் திருவிழா - வை.கோ.

வானம்பாடி said...

//கருணாநிதி 25 தொகுதிகள் கொடுத்திருந்தால் ஆழமாக சிந்தித்து எடுத்த முடிவை கண்டிப்பாக மாற்றியிருப்பார். ஆக 3 தொகுதிகள்தான் அவரது ஆழமான சிந்தனை.//

;-) :))