பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 07, 2006

திமுக - அதிமுக தோல்வி

நேற்றைய பதிவை சொடர்ந்து ..

திமுக அணி தோற்றால் - கலைஞரின் அறிக்கை:

தமிழனுக்குத் தேர்தலில் மூளை வேலை செய்யாது என்பது இந்த மாநிலத்தின் சாபக்கேடு. தமிழனுக்குத் தலையில் மூளைக்கு பதில் வேறு ஏதோ இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த வெற்றி அராஜகத்துக்குக் கிடைத்த வெற்றி. அம்மையாரின் ஏவலால் போலிஸார் மட்டும் க்யூ வரிசையில் நின்று வாக்களித்துள்ளனர், இதை நீங்கள் டிவியில்(சன்) பார்த்திருப்பீர்கள். பொது மக்கள் வாக்களித்திருந்தால் நிச்சயம் எங்கள் கூட்டணி தான் வெற்றி பெற்றிருக்கும். இந்த முறைகேடுகளைப் பற்றி நிச்சயம் மத்திய அரசு விசாரிக்கும் என்று நம்புகிறோம். தேர்தல் கமிஷன் பிகாரில் செயல்பட்டது போல் இங்கு செயல்படாதது ஏன்? என்ற கேள்வியை பத்திரிகைகள் (தினகரன்) டிவிக்கள் (சன்) கேட்கின்றன. கூட்டணிக் கட்சிகள் தியாக உணர்வுடன் செயல்பட்டிருந்தால் நிச்சயம் இன்னும் கொஞ்சம் இடங்கள் கூடுதலாகக் கிடைத்திருக்கும். திமுகவிற்குப் போன தேர்தலை விட அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன.
சில கூட்டணிக் கட்சிகள் முதுகில் குத்தி விட்டன; பத்திரிகைகள் எங்கள் கூட்டணியை உடைப்பதற்கு பொய்ப் பிரச்சாரம் செய்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நாளை திமுக உயர்மட்டக் குழு அறிவாலயத்தில் கூடி யார் எதிர்க்கட்சி தலைவர் என்பதை முடிவு செய்யும். அதே போல் நான் சட்டசபைக்குப் போகலாமா என்பதையும் உயர்மட்டக் குழு முடிவு செய்யும்.

அதிமுக அணி தோற்றால் - ஜெ'யின் அறிக்கை:

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அண்ணா கூறுவார். இடைத்தேர்தலில் மக்கள் எனக்குத் தானே வாக்களித்தார்கள்? அப்படியிருக்க இந்தத் தேர்தலில் மட்டும் மக்கள் எப்படி எனக்கு எதிராக வாக்களித்திருப்பார்கள். நான் கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் "உங்கள் வாக்கு எனக்குத் தானே?" என்று கேட்ட போதெல்லாம் மக்கள் "ஆம்" என்றனர். அவர்கள் போட்ட வாக்குகள் எங்கே போயிற்று? தேர்தல் கமிஷன், மத்தியில் உள்ள கூட்டணி ஆட்சியாளர்கள் இடம் மாற்றம் என்ற பெயரில் கருணாநிதிக்கு வேண்டிய அதிகாரிகளை வாக்குச் சாவடியில் போட்டுள்ளார்கள். அவர்களிடம் உள்ள டிவி, பத்திரிகைகள் மூலம் பொய்ப் பிரசாரம் செய்து கிடைத்த வெற்றி. என் மீது வழக்குப் போட்டால் அதை நிரபராதி என்று மக்கள் முன் நிரூபிப்பேன். ஜெயித்தாலும் தோற்றாலும் நான் எப்போதும் மக்களோடுதான் இருப்பேன்.

1 Comment:

மணியன் said...

ஜெ.யின் எலெக்ட்ரொனிக் வாக்கு இயந்திரம் தில்லியிலிருந்து ஏற்கெனவே program செய்யப்பட்டு அனுப்பப் பட்டது என்ற (வருங்கால) அறிக்கையை விட்டு விட்டீர்களே :))