பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 03, 2006

கலைஞர் , வைகோ பேட்டி

கலைஞர் பேட்டி
22 தொகுதிகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ம.தி.மு.வுடன் கூட்டணி என்று கருணாநிதி நிபந்தனை விதித்து உள்ளார்.

பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு சங்கம் ஓட்டலில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கே:- 5-ந்தேதி மாநாட்டில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுமா?

ப:- தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று நான் சொல்லவில்லை. கூட்டணி கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை அறிவிக்கப்படும் என்று சொல்லி இருந்தேன். இப் போது அதுபற்றி முடிவு செய்ய தலைவருக்கு பொதுக்குழு அதிகாரம் வழங்கி உள்ளது.

காங்கிரஸ், பா.ம.க., ம.தி. மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் ஆகிய கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் குறித்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகிற நிலையில் தொகுதிகளின் எண்ணிக்கையை பொறுத்த வரையில் இன்னும் இறுதியாக முடிவெடுக்காத சூழலில் பேச்சுவார்த்தை விவரங்கள் பொதுக்குழுவில் வைத்து விவாதிக்கப்படும். இன்னும் கால அவகாசம் 2 நாள் இருப்பதால் அதை பயன்படுத்தி கூட்டணி கட்சிகளுடனும், தோழமை கட்சிகளுடனும் மேலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுத்து அறிவிப்பதற்கு வசதியாக அதற்கான அதிகாரம் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி: மாநாடு முடிவில் தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பீர்களா?

பதில்: தலைவருக்கு அதிகாரம் வழங்கி இருக் கிறார்கள். இன்னும் சில பேரை கலந்து பேசிவிட்டு அறிவிப்பேன்.

கே: கூட்டணி தலைவர்கள் அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்வார்களா?

ப: எல்லோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. எல்லோரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

கே: 15 நாட்களுக்குள் தொகுதிபங்கீடு பேச்சு வார்த்தை முடிந்து விடுமா?

ப: மாநாடு முடிந்ததும் பேச்சுவார்த்தை தொடரும். எவ்வளவு நாட்களுக்குள் முடியுமோ அவ்வளவு நாட்களுக்குள் முடியும். மாநாடு முடிந்த மறுநாளே கம்யூனிஸ்டு தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரு வதாக இன்று என்னிடம் தொலைபேசியில் தெரிவித்து இருக்கிறார்கள்.

கே: ம.தி.மு.க.வும், தி.மு.க.வும் இரட்டை குழல் துப்பாக்கிபோல் செயல்படவேண்டும் என்று கூறப்பட்டதே. இப்போது அப்படி செயல்படுகிறதா?

ப: இதுவரை இல்லை. எதிர் காலத்தில் வரலாம்.

கே: ம.தி.மு.கவுடன் எப் போது பேச்சுவார்த்தை?

ப: ம.தி.மு.க.வுடன் பேசுவது பற்றி பல்வேறு கருத்துகள் வெளிவருகிறது. மற்ற கட்சிகளுடன் பேசும் பேச்சு பற்றி தவறான தகவல்கள் வெளியானால் அந்த கட்சி தலைவர்கள் உடனடியாக மறுத்து அறிக்கை விட்டு வருகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு தொகுதிகள் குறைத்து கொடுப்பதாக செய்திகள் வெளி வந்த போது வரதராஜனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தொகுதி எண்ணிக்கை குறைத்து கொடுப்பதாக தவறான தகவல் வெளியானதும் தா.பாண்டியனும் மறுத்து அறிக்கை வெளியிட்டார்கள்.

ஆனால் ம.தி.மு.க.வால் தொகுதி எண்ணிக்கை பற்றி செய்திகள் தவறாக வந்தபோதும் எந்த மறுப்பு அறிக்கையும் கொடுக்க படவில்லை.

ம.தி.மு.க.வுக்கு 16 இடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருப்பதாக அர்ப்பத்தனமாக பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அது அண்டப்புளுகு, ஆகாசப்ளு புளுகு. நாங்கள் ம.தி.மு.க.வுக்கு 22 தொகுதி வரை தருவதாக கூறி இருக்கிறோம்.

கே:- அவர்கள் கேட்பது எவ்வளவு?

பதில்: 22 தொகுதி கேட்கிறார்கள். நாங்கள் நிலைமை குறித்து இதற்கு மேல் தர இயலாது என்று கூறி இருக்கிறோம். கடந்த தேர்தலில் ம.தி.மு.க. இல்லாத நிலையில் ஜெயலலிதா ஒரு கூட்டணியை உருவாக்கி 140 தொகுதிகளில் போட்டியிட்டு 132 தொகுதிகளில் வெற்றி பெற்றார்.

நாங்கள் அப்படி 140 தொகுதிகளை வைத்துக் கொண்டு பிடிவாதம் செய்யவில்லை. 10 அல்லது 15 தொகுதிகளை தியாகம் செய்யவும் தயார் என்ற அளவில் பேசி இருக்கிறோம். கூட்டணி கட்சிகள்தான் ஒத்துக்கொள்ள வேண்டும்.

கே: வைகோ உங்களை நேரில் சந்தித்த பிறகு மீண்டும் பேசினாரா?

பதில்: டெலிபோனில் பேசினார். முதலில் 20 தொகுதிகள் கொடுப்பதாக பேசினோம். அதன்பிறகு 21 தொகுதிகள் தருவதாக ஒத்துக்கொண்டோம். நேற்று 22 தொகுதிகளுக்கு ஒத்துக்கொண்டோம்.

கே: ம.தி.மு.க. உங்கள் கூட்டணியில் தொடருமா?

பதில்: 22 தொகுதிகளுக்கு ஒத்துக்கொண்டால் தொடரும்.

கே: மாநாட்டில் வைகோ கட்-அவுட் அகற்றப்பட்டதாக கூறப்படுகிதே?

பதில்: எப்போதுமே கூட்டணி கட்சிகூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க. என்றுதான் வரிசைப்படுத்தப்பட்டு வருகிறது. இது பந்தல் காரர்களுக்கு தெரியாமல் மாற்றி வைத்து விட்டார்கள். பின்னர் வரிசைப்படி வைத் திருக்கிறார்கள். கட்-அவுட்களை அகற்றம் அளவுக்கு அர்ப்பத்தனம் படைத்தவர்கள் அல்ல நாங்கள். வைகோ மாநாட்டுக்கு வராமல் இருந்தால் கூட அவருடைய கட்-அவுட் அப்படியேதான் இருக்கும்.

கே: குறைந்த தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டால் கூட்டணி ஆட்சி வரும் என்று மக்களிடம் பயம் ஏற்படாதா?

பதில்: எங்கள் பயமும் அதுதான். மணிமேகலை அட்சய பாத்திரம் போல் தொகுதிகள் அள்ள அள்ள வராது இருக்கிற தொகுதிகளுக்குள்தான் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கே: 130 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுமா?

பதில்: எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்று இப்போது சொல்ல முடியாது.


வைகோ மினி பேட்டி

தேனியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைகோ நேற்று இரவு 8 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தார். அவரை வரவேற்க மதுரை நகர செயலாளர் புதூர் பூமிநாதன், புறநகர் மாவட்ட செயலாளர் வீர.இளவரசன், அவைத் தலைவர் சின்ன செல்லம், திருமங்கலம் நகர செயலாளர் நாகராஜன், தொழிற்சங்க செயலாளர் மகபூப் ஜான் உள்பட நிர்வாகிகள் சென்றிருந்தனர். அவர்களிடம் வைகோ சுமார் 30 நிமிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் நிலவி வரும் கருத்துக்கள், மற்றும் எதிர்கால கட்சி வளர்ச்சி குறித்து பேசினர். தேர்தல் கூட்டணி குறித்தும், திருச்சி தி.மு.க. மாநாட்டில் கலந்து கொள்வது பற்றியும் வைகோ நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் வைகோ இன்னும் 2 நாளில் நல்ல முடிவை அறிவிப்பதாக கூறிவிட்டு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

வைகோவின் திடீர் மனமாற்றம் ம.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் அது பற்றி வெளிப்படையாக பேச மறுத்துவிட்டனர்.

செய்தி உதவி : மாலை மலர்

0 Comments: