பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 02, 2006

48 மணி நேரத்தில் வைகோ பல்டி ?


வைகோ பல்டி இன்னும் 48 மணி நேரத்தில் தெரிந்துவிடும் என்று தோன்றுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வைகோ பல்டி அடிக்க தயாராகி கொண்டிருக்கிறார் என்று வந்துள்ளது. அதேபோல் மற்ற செய்திதாள்களிலும் மெதுவாக இந்த செய்தி வரத் தொடங்கியுள்ளது. தட்ஸ் தமிழிலிருந்து சில பகுதிகள்....


மதிமுக முன்னணித் தலைவர்களுடன் வைகோ, தனது பண்ணை வீட்டில் நீண்ட நேர ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

திமுகவில் தாங்கள் விரும்பும் தொகுதிகள் கிடைக்காது என்று உறுதியாகத் தெரிய வந்துள்ளதால் அதிமுக அணிக்குப் போவதுதான் ஒரே வழி என்று மதிமுக முன்னணியினர் வைகோவை வலியுறுத்தியுள்ளனர்.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுக்கும், மதிமுகவுக்கும் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. வைகோவின் போக்கினால் அதிருப்தி அடைந்த திமுக தலைமை, பொருளாளர் ஆற்காடு வீராசாமியை விட்டு ஒரு அதிரடி அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் நாணயமற்ற அரசியலை நடத்துகிறார் வைகோ என்று கடுமையாக சாடியிருந்தார் ஆற்காடு வீராசாமி.

இந்த அறிக்கை வெளியான அடுத்த நாளே வைகோ பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் திமுக அணியிலேயே மதிமுக நீடிக்கும் என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார். இதனால் வைகோவின் வரவை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த அதிமுக கடும் அதிர்ச்சிக்குள்ளானது.

அறிக்கை விட்ட அடுத்த சில நாட்களிலேயே திமுக தலைவர் கருணாநிதியை போய் சந்தித்தார் வைகோ. அந்த சந்திப்பின்போது திமுக தலைவர்கள் யாரும் கருணாநிதியுடன் இருக்கவில்லை. அதேபோல வைகோவுடன் மதிமுக தலைவர்கள் யாரும் வரவில்லை.

இதிலிருந்தே, திமுக உறவை மதிமுகவினர் விரும்பவில்லை என்பதும், வைகோவின் வருகையை திமுகவினர் விரும்பவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமானது.

இருப்பினும் வைகோவின் அறிவிப்பை கருணாநிதி மிகுந்த சந்தோஷத்தோடு வரவேற்று பேட்டி கொடுத்தார். வைகோவும், திமுக அணியில் நீடிப்பதில் சந்தோஷம்தான் என்று பேசினார்.

இந் நலையில் தங்களுக்கு எத்தனை தொகுதிகள் தேவை என்று கோரி கருணாநிதியிடம் வைகோ கொடுத்த தொகுதிப் பட்டியலை திமுக தலைமை பரிசீலித்தது. அதில் வைகோ கோரிய பெரும்பாலான தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் கேட்பதால் அவற்றை மதிமுகவுக்கு ஒதுக்க முடியாத நிலை இருப்பதாக வைகோவுக்குத் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கூட்டணியில் தன்னால் நீடிப்பது கஷ்டம் என்று திமுகவுக்கு தகவல் அனுப்பினார் வைகோ.

அதைத் தொடர்ந்து சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் வீட்டிற்கு நேற்று இரவு ஆற்காடு வீராசாமி திடீரென சென்று வைகோவைச் சந்தித்தார். அப்போது திமுக தரப்பில் ஒதுக்கத் தயாராக உள்ள தொகுதிகள் குறித்து ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதைக் கேட்டதும் வைகோ அதிர்ச்சியும் டென்சனும் அடைந்தாராம்.

காரணம், அவர் கொடுத்த பட்டியலிலிருந்து 5 முதல் 10 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கப்படக் கூடிய சூழ்நிலை இருப்பதாக ஆற்காடு தெரிவித்ததுதான். மேலும் வைகோ கோரியபடி 25 தொகுதிகளைத் தர இயலாது, 20 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்றும் ஆற்காடு கூறியுள்ளார்.

இச் சந்திப்பின்போது, தான் விடுத்த அறிக்கையில் நாணயமற்ற அரசியல்வாதி என்று விமர்சித்ததற்காக வைகோவிடம் ஆற்காடு வீராசாமி மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கலைஞரிடம் பேசி 23 தொகுதிகள் வரை பெற்றுத் தர முயற்சிப்பதாகவும் ஆற்காடு கூறினாராம்.

ஆற்காடு வீராசாமி பேசப் பேச வைகோவின் முகத்தில் கோபம் தாண்டவமாடியதாக சொல்கிறார்கள்.

இருப்பினும் அவரிடம் எந்தக் கருத்தையும் கூறாமல், கலைஞரிடம் பேசிக் கொள்கிறேன் என்று ஒற்றை வார்த்தையை மட்டும் சொல்லி ஆற்காட்டாரை அனுப்பி வைத்திருக்கிறார்.

இந் நிலையில் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தனது பண்ணை வீட்டில், இன்று கட்சியின் மூத்த நிர்வாகிகளைக் கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார் வைகோ.

அப்போது, திமுகவை நிம்புவதை விட்டு விட்டு பேசாமல் அதிமுக அணிக்குப் போய் விடலாம். அதிமகவுடன் இதுகுறித்துப் பேசி விட்டோம். 40 தொகுதிகள் தர அவர்கள் சம்மதித்துள்ளார்கள். கூடுதலாக 5 தொகுதிகள் கேட்போம், கொடுப்பதாக உறுதியளித்தால் அணி மாறி விடலாம் என வைகோவிடம் ¬எல்.கணேசன், கண்ணப்பன் உள்ளிட்ட அதிமுக ஆதரவு முன்னணித் தலைவர்கள் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

தலைவர்களின் இந்த யோசனையைக் கேட்ட வைகோ, யோசிக்க அவகாசம் கொடுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.

மதிமுகவின் இந்த திடீர் போக்கு திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக, இனியும் வைகோவைத் தாங்கிக் கொண்டிருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்து விட்டதாக சொல்கிறார்கள்.

அதேசமயம், அதிமுக தரப்பு புத்துணர்வு பெற்றுள்ளதாகவும், வைகோவுடன் பேசும் சேனல்களை ஆக்டிவேட் செய்திருப்பதாகவும் தெரிகிறது.

இது திமுகவை மிரட்டி அதிக இடங்களை வாங்கவா அல்லது உண்மையிலேயே அதிமுகவுக்கே போய்விடும் திட்டமா என்று தெரியவில்லை.

2 Comments:

Anonymous said...

இட்லிவடை நீங்கள் அதிமுக அணியிலே வைகோ வரவேண்டுமென்று மிகவும் விரும்புவதாகவே தோன்றுகிறது. இது கருணாநிதிமீதான எதிர்ப்பின் காரணமாகவா அல்லது ஜெயலலிதாமீதான பாசத்தின் காரணமாகவா என்பதுதான் இன்றைய குழப்பம்

இணையத்தின் இட்லிவடைப்ரியர்களின் வெறுப்புமீட்டரைப் போட்டால், கட்சி அடிப்படையில் இறங்குவரிசையிலே இப்படியாக வருமோ?

கருணா ஐயா
காடுவெட்டி ஐயா
திருமா
வைகோ
காப்டன்
தமிழ்நாடு காங்கிரசுகள்
ஜெ அம்மா
உதிரி பிஜேபி

Babble said...

இத பார்த்தீங்களா? அம்மா பக்கம் சாய்ஞ்சிடுவார் போல இருக்கே.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=242783&disdate=3/3/2006&advt=1