பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 20, 2005

பில்கேட்ஸ் வருகை மர்மம் என்ன..? - ஞாநி

டெல்லியில் பில்கேட்ஸ் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்திய தொழில் அதிபர் ராகுல் பஜாஜ் பேசியதை மீடியாக்கள் பெரிய அளவில் சித்திரிக்கவில்லை. இந்தியாவுக்கு பில்கேட்ஸை விட முக்கியமானவர் பஜாஜ். டூவீலர், த்ரீ&வீலர் (ஆட்டோ) துறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய பஜாஜ், பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குப் போட்டியாக, ஓர் இந்திய நிறுவனம் வெற்றிகரமாக இயங்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்.

பஜாஜ் இந்தக் கூட்டத்தில் பில்கேட்ஸை கலாய்த்தார். ‘‘இன்னும் ஐயாயிரம் பேருக்கு வேலை, இத்தனை கோடி ரூபாய் முதலீடு என்பதெல்லாம் சரி, ஆனால் இந்தியாவின் ஜி.டி.பி&யில் (கிராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட் & மொத்த உள்நாட்டு உற்பத்தி) அது என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது? ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வியில் பொறியியல் நிர்வாகம் ஆகியவற்றை கற்பிப்பதில் நாம் பெரும் சாதனைகள் செய்திருக்கலாம். ஆனால் ஆரம்பக் கல்வியும் பள்ளிக்கல்வியும் படுமோசமான நிலையில் இருக்கும்போது, ஒரு சில உயர்மட்ட நிறுவனங்களின் சாதனையால் பெருவாரியான மக்களுக்கு என்ன லாபம்?’’ என்று நறுக்குத் தெரித்தாற்போல் கேட்டார் பஜாஜ். அவர் மட்டுமல்ல பல பொருளாதார அறிஞர்கள் & நோபல் வென்ற அமர்த்தியா சென் உட்பட & சுட்டிக் காட்டுவது, தேசத்தில் பொருட்களின் உற்பத்தி பெருகினால் தான் நிஜமான செல்வப் பெருக்கம் (வெல்த்) ஏற்பட முடியும் என்பதாகும்.

கம்ப்யூட்டர் துறையை பொறுத்தமட்டில் இன்னமும் அதன் பயன்பாடு சுமார் 20% அளவில்தான் தயாரிப்புத் துறைக்கு இருக்கிறது. 80 சதவிகித பயன்பாடு சேவைத்துறையில்தான். எடுத்துக்காட்டு, ரயில் டிக்கெட் பதிவு, டெலிபோன் பில் போன்றவை. கம்ப்யூட்டரின் பயனைத் தயாரிப்புத் துறைக்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் விதத்தில் முதலீடுகள் செய்யப்படுவதில்லை. சேவைத் துறையில் கூட ஒயிட் காலர் சேவைகளில் மட்டுமே கருவிகளும், கம்ப்யூட்டர்களும் ஈடுபடுத்தப்படுகின்றன. நகர சாக்கடைகளின் கழிவுகளை அகற்றுவது, சுத்தப்படுத்துவது போன்ற அழுக்கான சேவைப் பணிகளில் இயந்திரங்கள், கம்ப்யூட்டர்கள் பங்களிப்பு இல்லை.

இப்படிப்பட்ட சூழலில் பில்கேட்ஸ் இந்தியாவில் செய்யப்போகும் முதலீட்டின் நடைமுறை விளைவுகள் என்ன?

அவரே சொன்னது போல் புத்திசாலியான நிறைய கம்ப்யூட்டர் இன்ஜினீயர்களைத் தங்களுக்குப் பயன்படும் விதத்தில் உருவாக்குவது. அவர் சொல்லாதது மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் தயாரிக்கும் ஆபரேட்டிங் சிஸ்டம் மென்பொருளை இன்னும் அதிகமாக விற்பது. இதற்கான ஒரு வியாபார உத்தியாகத்தான் தமிழ்நாட்டுப் பள்ளிகளிலும் கிராமப்புறங்களிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி தர மைக்ரோ சாஃப்ட் முன் வந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் எம்.எஸ் மென்பொருளை ரூபாய் 1200/& விலையில் விற்கவும் முன் வந்திருக்கிறது.

இந்தத் திட்டத்தை அரசாங்கத்துறை மூலம் செய்ய முற்படுவதன் உள்நோக்கம் என்ன? இதே கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்ட மென்பொருளான லினக்ஸ் (Linux), இலவச மென்பொருளாகும். இதனை பல அரசாங்கங்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. அரசின் பொதுத் துறையிலும், கல்வித்துறையிலும் லினக்ஸ் வேரூன்றி விட்டால் அங்கே மைக்ரோ சாஃப்ட் மார்க்கெட்டை இழந்துவிடும். எனவே, லினக்ஸ் பரவும் முன்பாக மைக்ரோ சாஃப்ட் நுழைய விரும்புகிறது.

உலக அளவில் இதுவரை மைக்ரோ சாஃப்ட், தன் வர்த்தக போட்டியாளர்களை பல வகைகளில் வீழ்த்தி இருக்கிறது. ஆனாலும் அதன் பிரதான விற்பனைப்பொருள் அதன் ஆபரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் தான். விண்டோஸின் உதவி இல்லாமலே பல கணிணி செயல்பாடுகளைச் செய்து விட முடியுமெனில் விண்டோஸ் அடி வாங்கத் தொடங்கும்.

இந்த ஆபத்தும் இப்போது வந்துவிட்டது. இணையத்தில் பிரதான தேடல் வாகனமான (சேர்ச் இன்ஜின்) கூகிள், தன் பிகாசா மென்பொருள் மூலம் விண்டோஸ் இல்லாமலே பல செயல்களை இணையத்தில் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. கணிணியே தேவைப்படாமல் செல்போன், டெலிபோன், கீ&போர்ட் மட்டும் கொண்டு பல இணைய வேலைகளைச் செய்துவிடும் அளவிற்கு கூகிள் வளர்ந்துவிட்டது.

கூகிளின் மென்பொருள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. இன்று இணையத்தின் தேடல் கருவிகளில் முதலிடத்தில் இருக்கும் கூகிள், இப்படி மென்பொருள் துறையிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கால் பதித்ததில், மைக்ரோ சாஃப்டின் வியாபரத்திற்கு சிக்கல் வந்துவிட்டது.

கூகிளை முறியடிக்க தானும் ஒரு தேடல் வாகனத்தை களத்தில் இறக்கலாம் என்று கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ‘அன்டர் டாக்’ என்ற பெயரில் மைக்ரோ சாஃப்ட் அறிமுகப்படுத்தியது. ஆனால் இது வெற்றிபெறவில்லை.

இப்போது புரிகிறதா பில்கேட்ஸ் சென்னை வருகையின் மர்மம்?

நன்றி: நாணயம் விகடன்

1 Comment:

மணியன் said...

இந்தியா ஒளிர்கிறது என்று பிஜேபி ஏமாந்தது போல ஐக்கிய முன்னேற்ற கூட்டணியும் ஏமாறாமல் இருக்க வேண்டும். ஹாங்காங்கில் கூட தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக வெற்றிமாயையில் இருக்கிறார்கள். ஊடகங்களும் உண்மையை தெளிந்துரைக்காமல் கட்சிசார்பினாலும் பன்னாட்டு நிறுவனங்களின் தயை வேண்டியும் மாயவலை பின்னுகிறார்கள்