பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 30, 2005

2005 டாப் டென் (- 2) வலைப்பதிவுகள்

1. தவமாய் தவமிருந்து


சற்றே நம்பிக்கைக் குறைவுடன்தான் இந்தப் படத்தைப் பார்க்கப் போனேன் என்றுஆரம்பிக்க மாட்டேன் கவலைபடாதீர்கள். அமெரிக்க கிராமத்திலிருந்து ஹீரோ கோவைக்கு வந்து செட்டில் ஆகிறார். அமெரிக்காவில் தமிழ் வலைப்பூக்களுக்காக இவர் செய்த சாதனைகளை ஃப்ளாஷ்பேக்கில் இடைவேளை வரை ஓட்டுகிறார்கள். அத்தனை வலைப்பூக்களையும் ஒன்றிணைத்து திரட்டி ஒன்றை உருவாக்குகிறார். எல்லா வலைப்பூக்களையும் பாசத்துடன் ஒன்று திரட்டி வளர்த்து பெரிய ஆளாக்கும் பாசமிகு தந்தை ரோலில் (வலை) பின்னியிருக்கிறார்.

இடைவேளை வரை வில்லன் ரோல் என்று யாருக்கும் இல்லை. பிறகு திடீரென்று மெகாசீரியல் மாதிரி திரும்பிய இடமெல்லாம் வில்லன்கள் முளைக்கிறார்கள். தந்தை சற்று கண்டிப்பு காண்பிக்கும்பொழுது பாசபந்தங்கள் எப்படி வேஷம் போட்டார்கள் என்று முடிக்கிறார் இயக்குனர். அப்போது பின்னனி இசையில் 'ஷேம் ஷேம் பப்பி ஷேம்' பாடல் நம் கண்ணில் கண்ணீர் வர வைக்கிறது.2. வசூல் ராஜா எம்.பி.பி.ஸ்

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்!!! - டீ, காப்பி செலவுக்கு நிதி திரட்டும் இந்த காலத்தில் ஒரு ஏழை மாணவியின் படிப்பு செலவுக்கு உதவி செய்ய நீதி திரட்டுகிறார் படத்தின் கதாநாயகன் பாலா!!!!!!. அப்படி திரட்டிய நிதியை அந்த பெண்ணுக்கு தருகிறார்!!!. தமிழ் வலைப்பதிவில் இப்படியா என்று மழை பெய்கிறது!!. இதில் இயக்குனரின் டச் தெரிகிறது. ஹீரோ நடுவில் பல பாடல்களுக்கு பல்லவியை மட்டும் பாடி மற்றவர்களை சரணம் பாட வைப்பது நல்ல தமாஷ்!!!. மனிதநேயத்தை நன்றாக வலியுறுத்தியுள்ளதால் இயக்குனரை பாராட்டலாம்!!!
முக்கிய குறிப்பு: தமிழ் வலைப்பதிவில் இதெல்லாம் கூட நடக்கிறது என்பதைக் குறிக்க ஆச்சரியக் குறி !. வேறு எந்த உள்ளர்த்தமும் இல்லை!!! நம்புங்க !!!!

3. சண்டைகோழி

முழுக்க முழுக்க வெட்டு, குத்து என்று வன்முறைகள் நிறைந்த படம். ஹீரோ ஜப்பானிலிருந்து படித்துவிட்டு இந்தியா திரும்பும் வழியில் ஏர்போர்ட் பிரௌசிங்க் செண்டரில் ஒரு சண்டையில் ஈடுபட நேர்கிறது. தொடர்ந்து விமானத்தில் லாப்டாப் வைத்துக்கொண்டு சண்டையிட்டுக்கொண்டே தமிழ்நாடு வந்து சேர்கிறார். (ஏர்போர்ட்டில் டிக்கெட் கேட்கும் அதிகாரிகளை (கழுத்தை) அறுத்துவிடுவேன் என்று மிரட்டுவது நல்ல காமெடி)

சண்டையின் நடுநடுவே திருட்டு வி.சி.டியில் 'சந்திரமுகி' பார்த்து ரசிக்கிறார்.
ஒரு எலி க்வாண்டம் கணினி பற்றி சொன்ன பாய்ண்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கிறார். எலி எப்போதும் புலியாக முடியாது என்பதை வலியுறுத்தும் படம். இந்தப் படத்தில் இயக்குனருக்குச் சமமாக சண்டைக்காட்சிகள் அமைத்த ஸ்டண்ட் மாஸ்டரின் பங்கும் சிறப்பாக அமைந்திருக்கிறது. பலர் தாக்க வரும்போது 'இப்பொழுது நேரமில்லை, எனக்கு அவசரமாக போகனும் என்று சொல்லி கிளம்புகிறார். எங்கே போகிறார் என்பது எடிட்டரின் கைவண்ணத்தால் தெரியாமல் போகிறது. எதையாவது அறுத்துதொலைக்க போகிறார் என்று சென்சாரில் 'யூ' சர்டிஃபிகேட் கொடுத்துவிட்டதாக கேள்வி. வெங்கட் இந்த படத்துக்கு பிரமாதமாக இசையமைத்திருக்கிறார். ஜால்ரா ஒலி DTSசில் கேட்க வித்யாசமாக இருக்கிறது. பாடல்களில் ஆபாசம் இல்லை, ஆனால் திரைக்கதையில் வன்முறை, வசனத்தில் விரசம்.
முக்கிய குறிப்பு : கொஞ்சம் இருங்க டீ குடித்துவிட்டு சமயம் இருந்தால் இந்த பட ஸ்டிலுக்கு ஒட்டு வேலை செய்கிறேன்.
4. அந்நியன்

அந்நியன் - ஸ்பிலிட் பெர்சனாலிட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். படத்தின் ஹீரோ யாராவது 'சாதி' என்று சொன்னால், கோபம் வந்து கெட்ட வார்த்தையில் கண்டபடி திட்டுகிறார். படத்திற்கு 'A' சர்டிபிகேட் கொடுத்துள்ளார்கள். சாதி பற்றி வசனம் பேசும் இவர் படத்தில் 'ஐயங்காரு வீட்டு அழகே' என்று பாடுவது நல்ல தமாஷ். ஒரே மனிதனுக்கு பல பர்சனாலிட்டி கதை என்று நினைத்தால், பல பர்சன்களும் ஒரே பர்சனாலிட்டியுடன் வெவ்வேறு ஆட்களாகக் கூட வருகிறார்கள். க்ராஃபிக்சுக்குப் பதில் ஹாக்கிங்க் நிறைய நிறைந்துள்ளது.

பொது மக்களிடயே இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.குடும்பத்துடன் பார்க்க கூடாத படம். அந்நியனாக ஒரு சீனில் சிவபெருமான் போல் வேஷம் போட்டுக்கொண்டு கூலிங் கிளஸோடு வருவது நன்றாக இருக்கிறது. தியேட்டரில் டிக்கெட்டுடன் காதில் வைத்துக்கொள்ள பஞ்சையும் தருகிறார்கள்.

முக்கிய குறிப்பு: திருட்டு விசிடியில் பார்ப்பவர்கள் டிவியை மியூட் செய்து பார்க்கவும். இல்லை காதுலேர்ந்து ரத்தம் வரும்.
5. கஜினி

கஜினி - நல்ல தமிழ்ப் படம் என்று போனால் என்ன படம் என்றே தெரியவில்லை. சப் டைட்டில் German மற்றும் French மொழிகளில் மாறி மாறி வருகிறது. இவர் எதை எழுதினாலும் தன் உடம்பிலும் அதை எழுதுவது போல் உள்ள கதாப்பாத்திரம். தவறாமல் 4800161 என்ற எண்னையும் கூட சேர்த்து எழுதுகிறார். இவருக்கு மறதி வியாதி அதனால் எங்கு சென்றாலும் தன் நம்பர் & போட்டோ எடுத்துக்கொண்டு செல்கிறார். வில்லன்கள் இவரை போல் ஒரு போலி கதாபாத்திரத்தை கிளோனிங் மூலம் உருவாக்குகிறார்கள். அதனால் கதாநாயகன் எப்போது போலி போலி என்று பினாத்துகிறார். கடைசி கோர்ட் சீனில் இவருக்கு தேங்காய் போளி, பருப்பு போளி கொடுக்கிறார்கள். சுபமாக முடிகிறது. சோ, அருண் கவுரவ வேடம் ஏற்று படத்தை மேலும் சொதப்பி விடுகிறார்கள்.

முக்கிய குறிப்பு: இந்த சுட்டியில் உங்கள் விட்டிலிருந்து ஒரு எலியை பிடித்து அதன் வாலை அதன் மேல் வைக்கவும். 4800161 என்ற நம்பர் தெரிகிறதா என்று பாருங்கள். சூரிய/சந்திர கிரகணத்தின் போது தெரியாது.

6. நியூ ( பெண்) அந்தாங்க புதுமை பெண்

இது ஒரு ஹீரோயின் சப்ஜக்ட். நேரில் பார்க்கும்போது சின்னவராகவும் எழுதும்போது வயதானவராகவும் மாறும் ஒரு வித்யாசமான பாத்திரம் பற்றிய கதை. படம் ஹாலிவுட் ரேஞ்சிற்கு இருக்கிறது-குறிப்பாக பாலியல் சம்பந்தப்பட்ட காட்சிகள். இட்லிவடைக்கு மீசை முளைக்காததால் இந்தப் படத்தை மட்டும் தியேட்டர் போய்ப் பார்க்க முடியவில்லை. வி.சி.டி.யிலேயே பார்த்துவிட்டேன். திரைக்கதையில் நிறைய சொதப்பல்கள். 'வுமன்கைண்ட்' என்று ஒரு மாபெரும் இயக்கம் ஆரம்பித்து பெண்கள் எருமைகளுக்கு வாழ்க்கைப் படுவது பற்றி ஒரு கவிதை எழுதிகிறார். கவிதை எழுதிமுடித்த பிறகு ஹீரோயினே நுனிப்புல் மேயப்போவதைப் பார்த்தால் யார் எருமை என்று குழப்பம்தான் மிஞ்சுகிறது. வசனத்திலும் பாத்திரப்படைப்பிலும் கவனம் செலுத்திய அளவுக்கு அடிப்படைத் திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஹீரோ என்று யாரையுமே சொல்லிவிடக்கூடாது என்று கவனமாக எல்லா ஆண்களையும் வில்லன் ஆக்கி இருக்கிறார்கள். அதாவது பெண்கள் என்ன திட்டினாலும் எல்லா ஆண்களுமே அமைதியாக இருந்து ஆணாதிக்கத்தை நிரூபிக்கிறார்கள்.

ஆண்களை எதிர்த்துக்கொண்டே ஆணுடன் வாழ்வதுதான் புதுமைப்பெண்ணுக்கு அடையாளம் என்று க்ளைமாக்சில் ஹீரோயின் சொல்லும் காட்சி நெஞ்சை உருக்குகிறது. (டைவர்ஸ் வாங்கும் எண்ணமிருந்தால்) குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம்.
முக்கிய குறிப்பு: சிம்ரன் படத்தை கெடுக்க வேண்டாம் என்று நியூ பட ஸ்ட்லுக்கு ஒட்டு வேலை எதுவும் செய்யவில்லை. மன்னிக்கவும்.
7. மகா நடிகன்
படத்தை எழுதி, இயக்கி, ஹீரோவாகவும் பிரகாஷே நடித்து இருக்கிறார். படத்தின் ஹீரோ பொதுமக்களுடன் நன்றாகப் பழகிக்கொண்டே எல்க்ய வ்யாதியாகவும் அதே சமயம் Batman, spiderman, shakthiman போன்று வலைப்பதிவாளர்கள் சந்திப்பு ஒருங்கினைப்பாளராக பணிபுரியும் இளைஞராகவும் செம கலக்கு கலக்கியிருக்கார்.

அனைவரும் பாராட்டும்போது அடக்கமாக வேறு வேலை கிடைக்காததால்தான் இப்படியொரு வேலையைத் தேர்ந்தெடுத்தேன் என்று க்ளைமேக்சில் சொல்லும்போது நம் மனதைத் தொடுகிறார்.

பெண்களைத் தாயாக மதிப்பதாக மேடையில் பாடும் அந்த ஒரே ஒரே ஒரு பாட்டு மட்டும் நன்றாக உள்ளது. பாடலைப் பாடிமுடித்துவிட்டு மேல்கைண்ட் அங்கத்தினர்களைப் பார்த்து கண்ணடிப்பது அதைவிட நன்றாக உள்ளது.

படத்தில் பாடல்களை விட நேர்க்காணல்கள் அதிகமாக உள்ளன. இலக்கியவாதிகளுடன் ஆட்டோவில் செல்லும் போது பேசியதை பேட்டி என்று நன்றாக ஜல்லியடிக்கிறார். எழுதுவதைக் குறைத்துக்கொண்டு நிறையப் படிக்கப்போவதாக உருக்கமுடன் ப்ரகாஷ் சொல்வதுடன் தமாஷாக படம் முடிகிறது.
முக்கிய குறிப்பு: இந்த படத்திற்கு பிறகு நமிதாவுடன் நெருக்கமாக இருப்பதாக Blogwood'ல் கிசு கிசு. அப்படியா பிரகாஷ் சார் ?
8. குண்டக்க மண்டக்க

இட்லிவடை என்று பெயர் வைத்தால் தமிழர்கள் நிச்சயம் படம் பார்க்க வருவார்கள் என்ற இயக்குனரின் துணிச்சலை முதலில் பாராட்டவேண்டும். இட்லிவடை ஒருவரா அல்லது இரண்டு பேரா என்று கடைசி வரை சொல்லாமல் இருப்பது படத்துக்கு பிளஸ் பாய்ண்ட். இப்படி இட்லியையும் வடையையும் வைத்துக்கொண்டு எவ்வளவு நாள் குப்பை கொட்ட போகிறார் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

படம் முழுக்க பர்தா போட்டுக்கொண்டு வருவதால் யார் நடிக்கிறார்கள் என்பது கடைசிவரை தெரியவில்லை.

ஹீரோயின் கால்ஷீட் கிடைக்காததால் ஒரே ஒரு கவர்ச்சிப்படம் மட்டுமே காண்பித்து சமாளித்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். படத்தில் கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. படம் முழுக்க கிராபிக்ஸ் வைத்து ஏதோ ஒப்பேத்துகிறார் அவ்வளவுதான்.

குண்டக்க மண்டக்க படம் பார்த்தவுடன் கருத்து சொல்ல பின்னூட்டப் பெட்டி ஒன்று வைத்திருக்கிறார். அந்தப் பெட்டியை நீங்களும் பார்க்கவேண்டுமா? கீழே உள்ள comment சுட்டியை க்ளிக் பண்ணினால் போதும்.

முக்கிய குறிப்பு: எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Read More...

Thursday, December 29, 2005

பெங்களூரில் தீவிரவாதம்

பெங்களூரில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி.,) கழகத்தில் மாலை நடந்த தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் டெல்லி இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி., )யின் பேராசிரியர் எல்.என்.பூரி பலியானார். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். சுட்டவர்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
சென்னை ஐ.ஐ.டியிலும் போலிஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாதம் எங்கு எப்படி நடந்தாலும் அதை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. வீட்டில் கொசு, கரப்பான், மூட்டை பூச்சி போன்றவற்றை அழிக்க 'ஹிட்' போன்ற ஒரு சாதனத்தை தீவிரவாதிகளுக்கும் கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

படம் உதவி : தினமலர்

Read More...

Tuesday, December 20, 2005

பில்கேட்ஸ் வருகை மர்மம் என்ன..? - ஞாநி

டெல்லியில் பில்கேட்ஸ் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்திய தொழில் அதிபர் ராகுல் பஜாஜ் பேசியதை மீடியாக்கள் பெரிய அளவில் சித்திரிக்கவில்லை. இந்தியாவுக்கு பில்கேட்ஸை விட முக்கியமானவர் பஜாஜ். டூவீலர், த்ரீ&வீலர் (ஆட்டோ) துறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய பஜாஜ், பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குப் போட்டியாக, ஓர் இந்திய நிறுவனம் வெற்றிகரமாக இயங்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்.

பஜாஜ் இந்தக் கூட்டத்தில் பில்கேட்ஸை கலாய்த்தார். ‘‘இன்னும் ஐயாயிரம் பேருக்கு வேலை, இத்தனை கோடி ரூபாய் முதலீடு என்பதெல்லாம் சரி, ஆனால் இந்தியாவின் ஜி.டி.பி&யில் (கிராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட் & மொத்த உள்நாட்டு உற்பத்தி) அது என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது? ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வியில் பொறியியல் நிர்வாகம் ஆகியவற்றை கற்பிப்பதில் நாம் பெரும் சாதனைகள் செய்திருக்கலாம். ஆனால் ஆரம்பக் கல்வியும் பள்ளிக்கல்வியும் படுமோசமான நிலையில் இருக்கும்போது, ஒரு சில உயர்மட்ட நிறுவனங்களின் சாதனையால் பெருவாரியான மக்களுக்கு என்ன லாபம்?’’ என்று நறுக்குத் தெரித்தாற்போல் கேட்டார் பஜாஜ். அவர் மட்டுமல்ல பல பொருளாதார அறிஞர்கள் & நோபல் வென்ற அமர்த்தியா சென் உட்பட & சுட்டிக் காட்டுவது, தேசத்தில் பொருட்களின் உற்பத்தி பெருகினால் தான் நிஜமான செல்வப் பெருக்கம் (வெல்த்) ஏற்பட முடியும் என்பதாகும்.

கம்ப்யூட்டர் துறையை பொறுத்தமட்டில் இன்னமும் அதன் பயன்பாடு சுமார் 20% அளவில்தான் தயாரிப்புத் துறைக்கு இருக்கிறது. 80 சதவிகித பயன்பாடு சேவைத்துறையில்தான். எடுத்துக்காட்டு, ரயில் டிக்கெட் பதிவு, டெலிபோன் பில் போன்றவை. கம்ப்யூட்டரின் பயனைத் தயாரிப்புத் துறைக்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்தும் விதத்தில் முதலீடுகள் செய்யப்படுவதில்லை. சேவைத் துறையில் கூட ஒயிட் காலர் சேவைகளில் மட்டுமே கருவிகளும், கம்ப்யூட்டர்களும் ஈடுபடுத்தப்படுகின்றன. நகர சாக்கடைகளின் கழிவுகளை அகற்றுவது, சுத்தப்படுத்துவது போன்ற அழுக்கான சேவைப் பணிகளில் இயந்திரங்கள், கம்ப்யூட்டர்கள் பங்களிப்பு இல்லை.

இப்படிப்பட்ட சூழலில் பில்கேட்ஸ் இந்தியாவில் செய்யப்போகும் முதலீட்டின் நடைமுறை விளைவுகள் என்ன?

அவரே சொன்னது போல் புத்திசாலியான நிறைய கம்ப்யூட்டர் இன்ஜினீயர்களைத் தங்களுக்குப் பயன்படும் விதத்தில் உருவாக்குவது. அவர் சொல்லாதது மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் தயாரிக்கும் ஆபரேட்டிங் சிஸ்டம் மென்பொருளை இன்னும் அதிகமாக விற்பது. இதற்கான ஒரு வியாபார உத்தியாகத்தான் தமிழ்நாட்டுப் பள்ளிகளிலும் கிராமப்புறங்களிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி தர மைக்ரோ சாஃப்ட் முன் வந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் எம்.எஸ் மென்பொருளை ரூபாய் 1200/& விலையில் விற்கவும் முன் வந்திருக்கிறது.

இந்தத் திட்டத்தை அரசாங்கத்துறை மூலம் செய்ய முற்படுவதன் உள்நோக்கம் என்ன? இதே கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்ட மென்பொருளான லினக்ஸ் (Linux), இலவச மென்பொருளாகும். இதனை பல அரசாங்கங்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. அரசின் பொதுத் துறையிலும், கல்வித்துறையிலும் லினக்ஸ் வேரூன்றி விட்டால் அங்கே மைக்ரோ சாஃப்ட் மார்க்கெட்டை இழந்துவிடும். எனவே, லினக்ஸ் பரவும் முன்பாக மைக்ரோ சாஃப்ட் நுழைய விரும்புகிறது.

உலக அளவில் இதுவரை மைக்ரோ சாஃப்ட், தன் வர்த்தக போட்டியாளர்களை பல வகைகளில் வீழ்த்தி இருக்கிறது. ஆனாலும் அதன் பிரதான விற்பனைப்பொருள் அதன் ஆபரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் தான். விண்டோஸின் உதவி இல்லாமலே பல கணிணி செயல்பாடுகளைச் செய்து விட முடியுமெனில் விண்டோஸ் அடி வாங்கத் தொடங்கும்.

இந்த ஆபத்தும் இப்போது வந்துவிட்டது. இணையத்தில் பிரதான தேடல் வாகனமான (சேர்ச் இன்ஜின்) கூகிள், தன் பிகாசா மென்பொருள் மூலம் விண்டோஸ் இல்லாமலே பல செயல்களை இணையத்தில் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. கணிணியே தேவைப்படாமல் செல்போன், டெலிபோன், கீ&போர்ட் மட்டும் கொண்டு பல இணைய வேலைகளைச் செய்துவிடும் அளவிற்கு கூகிள் வளர்ந்துவிட்டது.

கூகிளின் மென்பொருள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. இன்று இணையத்தின் தேடல் கருவிகளில் முதலிடத்தில் இருக்கும் கூகிள், இப்படி மென்பொருள் துறையிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கால் பதித்ததில், மைக்ரோ சாஃப்டின் வியாபரத்திற்கு சிக்கல் வந்துவிட்டது.

கூகிளை முறியடிக்க தானும் ஒரு தேடல் வாகனத்தை களத்தில் இறக்கலாம் என்று கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ‘அன்டர் டாக்’ என்ற பெயரில் மைக்ரோ சாஃப்ட் அறிமுகப்படுத்தியது. ஆனால் இது வெற்றிபெறவில்லை.

இப்போது புரிகிறதா பில்கேட்ஸ் சென்னை வருகையின் மர்மம்?

நன்றி: நாணயம் விகடன்

Read More...

Thursday, December 08, 2005

நட்வர் சிங் டிராமா

நட்வர் சிங் விவகாரம் குரோஷியா நாட்டுக்கான இந்தியத் தூதர் மாத்ரானி அளித்த பேட்டிக்கு பின் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.

இதில் நட்வர் சிங், அவரது மகன் பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளார்கள்(அல்லது தியாகம்). காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்தை பார்க்கும் போது, இந்த எண்ணை விவகாரத்தில் கணிசமான பங்கு காங்கிரஸுக்கு நிச்சயமாக கிடைத்திருக்கும் என்பது என் கருத்து

சோனியா, மன்மோகன் சிங் பயப்படுவது பி.ஜே.பிக்கோ அல்லது பார்லிமெண்ட் ஸ்தம்பித்துவிட்டதற்கோ கிடையாது. எங்கே நட்வர் சிங்கை பதவி நீக்கம் செய்தால் அவர் உண்மையை சொல்லிவிடுவாரோ என்ற பயம் தான். இந்த டிராமாவின் திரைக்கதையை மேலும் ஒழுங்காக எழுதிவிட்டு பின்னர் நடிக்க தொடங்குவார்கள். (அதாவது நட்வர் சிங்கிடம் கொஞ்சம் பேரம் பேசிவிட்டு) அதுவரை பத்திரிக்கைகள் தங்களுக்கு தெரிந்தவற்றை எழுதிக்கொண்டிருப்பார்கள். மக்கள் அடுத்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்தவுடன் இந்த எண்ணை விவகாரம் பிசுபிசுத்துப்போய்விடும்.

Read More...

Monday, December 05, 2005

வெள்ளத்தில் நீந்திய அமைச்சர்


நேற்று அமைச்சர் ஜெயகுமார் , இணை கமிஷனர் சைலேந்திரபாபு வெள்ள நீரில் நீந்தி ஒவ்வொரு பகுதியாகப் பார்வையிட்டனர். பாராட்டுக்கள்.
( படம் உதவி : தினத்தந்தி )

Read More...