இட்லி வடை இரண்டு ஆண்டுகள் முடித்து மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது! ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நன்றிகள்!!
சட்டசபை ஒரு பள்ளிக்கூடமாக இருந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனை. பள்ளி ஆசிரியர் காளிமுத்து. மாணவர்கள் ? நாம் தினமும் சந்திக்கும் அரசியல் தலைவர்கள்தான்!
சரி, பள்ளிக்கூடம் ஆரம்பித்துவிட்டது...
ஆசிரியர் காளிமுத்து வகுப்பறைக்குள் வருகிறார். எல்லோரும் எழுந்து வணக்கம் தெரிவிக்கிறார்கள். ஆசிரியர் வந்தவுடன், ஒரு திருக்குறளை போர்டில் எழுதிவிட்டு மாணவர்களைப் பார்க்கிறார்.
"இதை எழுதியது யார்?"
"நீங்கள் தான் சார்" என்கிறார் துரைமுருகன்.
"நான் கேட்டது திருக்குறளை எழுதியது யார்?" என்று.
"நீங்கள் தான்!"
"வந்தவுடனேயே பிரச்சனையை ஆரம்பிக்காதீர்கள். அப்புறம் வெளியே அனுப்பிவிடுவேன்!" என்று எச்சரிக்கிறார்.
அப்போது அன்பழகன் ஆசிரியரிடம் ஒரு கடிதத்தை கொடுக்கிறார்.
"என்னப்பா உங்க தலைவர் இன்றும் லீவ் லெட்டர் கொடுத்தனுப்பினாரா ? என்ன எழுதியிருக்கார் ? நீயே படி!".
அன்பழகன் படிக்க தொடங்குகிறார்.
"உடன்பிறப்பே, நேற்று அறிஞர் அண்ணாவும், பெரியாரும் என் கனவில் தோன்றினார்கள். "இடித்த புளியான தமிழன் சூடு சொரணை அற்றவன். இப்படி ஒரு கூறுகெட்ட ஜன்மத்தை எந்த நாட்டிலே பார்க்க முடியும் ? இளிச்சவாயானாக இருப்பது ஏன்? இதற்குக் காரணம் யார் ?" என்று என்னைக் கேட்டார்கள். என்னால் பதில் சொல்ல இயலவில்லை. இது சிந்திக்க வேண்டிய ஒன்று என்று கூறி சில நாள் அவகாசம் கேட்டுள்ளேன். எனக்குச் சிந்திப்பதற்கு சில நாள்கள் தேவைப்படுவதால் என்னால் பள்ளிக்கு வர முடியாது. அதனால், சில நாள்கள் எனக்கு விடுப்பு வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புள்ள,
மு.க."
"ஸ்கூல் ஆரம்பித்ததிலிருந்து இப்படியே கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்; இவர் எழுதிய கடிதத்தை பைண்ட் பண்ணி ஒரு புத்தகமாகப் போடலாம். இப்படி ஸ்கூல் ஆரம்பித்ததிலிருந்து வராமல் இருந்தால் அவர் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்!"
"எல்லோரும் வீட்டுப்பாடம் எழுதிவிட்டீர்களா ? எங்கே அன்பழகன் உன் புத்தகத்தைக் கொடு!" என்று வாங்கிப் படிக்கிறார்.
"'மதர் டங்க் ?' என்றால் 'ரொம்ம்ம்ப நீளம்.....!'னு போட்டிருக்கே, என்னப்பா இது?"
"ஆமாம் சார், மதர் என்றால் தமிழில் என்ன?"
"அம்மா"
"அம்மாவிற்கு எப்போதுமே வாய் நீளம் தானே சார்?"
"அப்படி எல்லாம் பேச கூடாது. நேற்று அம்மா அவர்கள் தான் பக்குவம் அடைந்துவிட்டதாகக் கூறியிருக்கார், நினைவில்லையா ?, சான்றோர் வாக்கை எப்போதும் மதிக்கணும்!"
எல்.கணேசன் எழுந்து, "சார், நான் சான்றோர் வாக்கைப் பார்த்திருக்கிறேன்!"
"என்ன, சான்றோர் வாக்கைப் பார்தையா ? அதெப்படி.. சான்றோர் வாக்கைக் கேக்கத்தானே முடியும், பாக்க முடியுமா ?"
"சார், எங்கள் தலைவர் வைகோ அவர்கள் வாக் செய்ததை (சன் டிவி தவிர) எல்லோரும் பார்த்தோம்; அதைத் தான் சொன்னேன்!"
"ஐயோ உங்க தொந்தரவு பெரிய தொந்தரவாக இருக்கிறது. உட்கார்"
"சரி, நேற்று பாண்டவர்கள் எத்தனை பேர் என்று கேட்டிருந்தேனே ? எங்கே நீ சொல்லு?" என்று எஸ்.ஆர்.பியை பார்த்துக் கேட்கிறார்.
"ஆறு பேர் சார்!"
"ஆறா? ஐந்து பேர்தானடா... ஆறாவதா யாரு?"
"தருமன், பீமன், அர்சுணன், நகுலன், சகாதேவன் என பாண்டவர்கள் அஞ்சுபேர். போப்'பாண்டவ'ரைச் சேர்த்து மொத்தம் ஆறுபேர்!"
"இதிகாசத்தை இப்படி எல்லாம் மாத்த முடியாது!"
"மதச்சார்பின்மையை மதிக்கிற ஆசிரியர் என்று உங்களை நினைத்தேன்?!"
"ஸிட்டவுன்!!"
அப்போது வகுப்பறைக்கு லேட்டாக இளங்கோவன் வருகிறார்.
"ஏண்டா லேட்?"
"சார், நான் விமானத்தில் ஏறி டெல்லி போறமாதிரி கனவு கண்டேன் அதனால் தான் லேட் ஆயிருச்சு.."
பின்னால் ஜி.கே.வாசன் வர..
"ஏண்டா நீயும் லேட்?"
"சார், இளங்கோவன் டெல்லி போனான் சார், அவனை வழியனுப்ப நான் போனேன் சார்.."
"இப்படி நீங்க கனவு காண்பதனால் தான் தமிழ்நாட்டிலே உருப்பட மாட்டேங்கிறேங்க!"
பின் வரிசையில் இருந்து தா.பாண்டியன் "சார் எனக்கு ஒரு சந்தேகம்.."
"என்ன சந்தேகம்?"
"தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் நீர்விழுச்சி தமிழக அரசுக்குச் சொந்தமா ? அல்லது கர்நாடக அரசுக்குச் சொந்தமா ?"
"நல்ல கேள்வி, அம்மையார் இதற்கு பதில் அளிப்பார்!"
அம்மையார் எழுந்து பச்சை ஃபைலைப் பார்த்து, "எல்லோருக்கும் தெரியும் இது ஒரு Falls நியூஸ் என்று.."
எல்லோரும் மேஜையை தட்டுகிறார்கள்.
"சார்!"
"யாரப்பா அது?"
"நான் தான் சார், கணேசன், எனக்கு பொன்முடி பக்கத்தில் உட்கார சீட் தர மாட்டேங்கிறாங்க!"
"ஏம்பா கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கணேசனுக்கு இடம் கொடுங்கப்பா!"
"எனக்கே இடம் இல்லை, வேறு எங்காவது போய் உட்காரச் சொல்லுங்கள்."
"பார்த்து அட்ஜஸ்ட் பண்ணி இடம் கொடுங்க."
"ஏன் அம்மா பக்கத்தில் இடம் இருக்கே அங்கே போய் உட்காரச் சொல்லுங்கள்."
உடனே கணேசன் "சார், நான் இங்கேயே அட்ஜஸ்ட் பண்ணி உட்கார்ந்துக்கொள்கிறேன்."
பின்னாடியிலிருந்து ஒரு சத்தம் வருகிறது "ஐயா, ஒரு கோரிக்கை.."
"என்ன ராமதாஸ்?"
"ஐயா, தமிழன், தமிழ்நாட்டில், தமிழ் வகுப்பில்..."
"சீக்கிரம் சொல்லு என்ன வேண்டும்?"
"நீங்கள் வருகைப் பதிவை எடுக்கும் போது எல்லோரும் "எஸ்..சார், எஸ்..சார்" என்று கூறுகிறார்கள். அப்படிக் கூறாமல் 'உள்ளேன் ஐயா!' என்று கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."
"நல்ல யோசனை!"
"தாங்க்கியு சார், 'மே ஐ ஸிட்டவுன்?"
எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் எழுந்து "சார், எங்கள் பிரதம மந்திரி, மன்மோகன் சிங் சீக்கியர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார், என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
பின்னாலிருந்து ஒரு குரல் வருகிறது...
"மன்னிப்பு, தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை.."
"யாரப்பா அது, இவரை யார் உள்ளே விட்டது"
"சரி, மறக்கும் முன், உங்கள் பரிட்சை பேப்பரைத் திருத்திக்கொண்டிருந்தேன். ராஜா என்று நினைக்கிறேன் 'ஆர்.எஸ்.எஸ். துணை' என்று போட்டு எழுதியிருக்கார், அப்படி எல்லாம் போடக்கூடாது. நல்லா படிக்கணும், நல்லா படித்தால் எல்லோருக்கும் வேலை கிடைக்கும், வேலை இல்லாவிட்டால் எல்லோரும் நாக்ஸலைட்கள் ஆகிவிடுவீர்கள்!"
"சார், நான் ஒரு புதுக்கவிதை எழுதியிருக்கேன், எல்லோருக்கும் படித்துக் காண்பிக்கவா?" என்று செல்வி ஜெயலலிதா எழுந்து படிக்க ஆரம்பிக்கிறார்.
(இப்போது பலர் டாய்லட் வருகிறது என்று எழுந்து போகிறார்கள்.)
"மதமாற்றத் தடை வாபஸ்,
பலி தடுப்பு வாபஸ்,
ஹெச் முத்திரை வாபஸ்,
விவசாயி மின்சாரக் கட்டணம் வாபஸ்,
அரசு ஊழியர்கள் நடவடிக்கை வாபஸ்,
பத்திரிகைகள் மீது வழக்கு வாபஸ்,
பல்கலைக்கழகப் பெயர்மாற்றம் வாபஸ்..!"
"ஆஹா! அருமையான கவிதை!! நீங்கள் 'வாபஸ் வாபஸ்' என்று கவிதை படித்தவுடன் வெளியே நம் ஸ்கூல் பஸ் வந்துவிட்டது. எல்லோரும் வீட்டுக்குப் போகலாம்; போகும்முன் எல்லோருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துகள்!!"
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Wednesday, October 26, 2005
அரசியல் பள்ளிக்கூடம்
Posted by IdlyVadai at 10/26/2005 10:31:00 AM 33 comments
Friday, October 21, 2005
தமிழ்மணம் டாப் 10
காலையில் என் 'கன்னி' ராசிக்கு என்ன பலன் என்று படித்தபோது "ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். உங்கள் பதிவுக்குப் பக்கத்தில் தமிழ்மணத்தில் பச்சை விளக்கு எரியும். (பச்சையாக எழுதினால் சிகப்பு விளக்கு) இதனால் தமிழ்மணம் நிஜமாகவே மணக்க போகிறது. உங்களுக்குத் தொல்லை தந்த எதிரிகள் இன்றோடு ஒழிந்தார்கள்...." என்று படித்து திடுக்கிட்டு என் பக்கத்தில் உள்ள ரேடியோவை ஆன் செய்தால் "சற்று முன் ஆன் செய்த 'இட்லிவடை'க்கு பிடித்த பாடல் என்று அறிவித்து 'பச்சை நிறமே பச்சை நிறமே" என்ற பாடல் முழுவதும் நடுவில் விளம்பரங்கள் இல்லாமல் ஒலிபரப்பினார்கள். நிஜமாகவே ரேடியோ மிர்ச்சி - செம்ம ஹாட்டு மச்சி! சரி என்னதான் தமிழ்மணத்தில் நடக்கிறது என்று போய்ப் பார்த்தால் 'இட்லிவடை'க்கு பக்கத்தில் நிஜமாகவே 'பச்சை விளக்கு'. ஆகா! இன்று ஜென்ம சாபல்யம் அடைந்த நான், ராசிபலனையும் நம்ப ஆரம்பித்தேன்.
சரி இப்போது விஷயத்திற்கு வரலாம். வளவள என்று எழுதாமல் ஒரு டாப் டென்:
1. சில மாதம் முன்னால் பத்ரி அவர்கள் தமிழ்மணத்தின் எதிர்காலம் என்று ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் தமிழ் மணம் 1000 பதிவுகளைத் தொட்டால் ஷாக்கடித்து பலர் துடிப்பார்கள் என்றார். இன்று 700 பதிவுகளுக்கே பலர் ஷாக்கடித்து அவதிப்படுகிறாகள்.
2. தமிழ்மணம் ஒரு திரட்டி, குப்பை போல் எல்லாம் இருக்க வேண்டும். அது தான் அதற்கு அழகு. கோழி எப்படி குப்பையிலிருந்து தனக்கு வேண்டிய குப்பையைப் பொறுக்கி எடுத்து சாப்பிடுமோ அதே போல் தமிழ் அறிஞர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொள்வார்கள். இதை மாடரேட் செய்வதற்கு பதில் சலூனுக்கு சென்று தலை மயிர் வெட்டிக்கொள்ளும் உபயோகமான வேலை இருந்தால் செய்யலாம்.
3. மூன்று மாதம் எழுதாத பதிவை பட்டியலிலிருந்து நிக்கிவிடுவதற்கு காசிக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அதை ஒரு வாக்கெடுப்பு நடத்தி பிறகு நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அட்லீஸ்டு ஜனனாயக முறை என்று ஜல்லி அடித்திருக்கலாம். தமிழ் கூறும் நல்லுலகம் 'ஆஹா' என்று பாராட்டியிருப்பார்கள்.
4. தமிழ்மணத்தின் சுட்டி தமிழ்மணம் திரட்டும் எல்லா வலைப்பதிவிலும் இருக்க வேண்டும் என்று காசி கூறியிருக்கிறார். விரைவில் கட்டாயமாகப்படும் என்றும் கூறியிருக்கிறார். தமிழ்மணம் காசியுடையது, அப்படிச் சொல்ல காசிக்கு முழு அதிகாரம் இருக்கிறது. அதே போல் வலைப்பதிவு வைத்திருப்பவருக்கும் அவர் தன் வலைப்பதிவில் சுட்டி கொடுக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய அதிகாரம் இருக்கிறது. உதாரணத்திற்கு ( பி.கே.சிவகுமார் போல் ) வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் எல்லோரும் தமிழ் மணத்திலிருந்து வேளியே வந்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம், தமிழ்மணம் நாறிவிடும். அல்லது தமிழ்மணத்திற்கு தேவையே இருக்காது.
5. "தற்போது தமிழ்மணம் ஒரு monopoly போல் திகழ்கிறது; சர்வாதிகாரம்; பேச்சுரிமை கிடையாதா? என்ன ஒரு கொடுமை!" என்று எல்லோரும் எழுதிவிட்டார்கள். வேடிக்கை என்னவென்றால் தமிழ்மணம் இவர்கள் யாரையும் எழுதாதே என்று சொல்லவில்லை. 'தமிழ்மணத்தில் உங்களுக்கு இடம் கிடையாது, சாரி!' என்று சொல்லிவிட்டது; அவ்வளவு தான். இதற்கு காசிதான் வருத்தப்பட வேண்டுமே தவிர நீங்கள் கிடையாது. மாறாக நீங்கள் நன்றாக எழுதி, என் பதிவை தமிழ்மணம் திரட்ட வேண்டும் என்றால் என்னிடம் பர்மிஷன் வாங்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள்/ சொல்ல ஆரம்பியுங்கள்.
6. தமிழ்மணத்திற்குப் போட்டியாக இன்னொரு வலை திரட்டி வந்தால் நன்றாக இருக்கும் என்று ஸ்ரீரங்கத்து மாமி கருத்து தெரிவித்துவிட்டார். அப்படி எது வந்தாலும் பாலியல், குஷ்பு, செருப்பு, சாணி, மதம், ஜாதி( குறிப்பாக பார்பனியம், தலித்), விடுதலைப்புலி (ஆதரவு, எதிர்ப்பு) என்று தனி நபர் தாக்குதல் இல்லாம் தமிழ் வலைப்பதிவு இருக்காது என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்யலாம்.
7. தமிழ் மணம் தமிழ் வலைப்பதிவுகளுக்கு ஒரு Yellow pages போன்ற ஒன்று. அதற்கு மேல் அது செயல் பட்டால் அது இன்னொரு மரத்தடி/ராயர் போல் ஆகிவிடும். அதற்கான அறிகுறிகள் தான் இந்த மாதிரிப் பிரச்சனைகள்.
8. கிட்டத்தட்ட ஐம்பது ஓட்டு வந்திருக்கிறது. ஓட்டுப்போட்ட அனைவருக்கும் நன்றிகள். முடிந்தால் இந்திய ஜனாதிபதிக்கு இந்த முடிவை அனுப்புகிறேன்.
9. 'கோயிஞ்சாமிகள்' கூட்டம் இந்த மாதிரி நேரத்தில் கருத்து சொல்லாமல் இருப்பதன்மூலம் தங்கள் நடுநிலமையை தக்க வைத்துக்கொண்டுள்ளார்கள்.
10. நல்ல வலைப்பதிவுக்கு தமிழ்மணம் தேவையில்லை. அவை தமிழ்மணம் இல்லாமலும் கவனிக்கப்படும்.
[ முடிவுகள் ]
Posted by IdlyVadai at 10/21/2005 04:27:00 PM 12 comments
Wednesday, October 19, 2005
தமிழ்மணம் அறிவிப்பு
தமிழ்மணம் காசி அவர்கள் சில அறிவிப்புகள் கொடுத்துள்ளார்:
அறிவிப்பு 1
அறிவிப்பு 2
இதை பற்றி நான் எழுதும் முன் ஒரு சின்ன வாக்கெடுப்பு !
[ஒட்டு பெட்டி இருக்குது பார் மேலே]
Posted by IdlyVadai at 10/19/2005 05:22:00 PM 2 comments
Wednesday, October 12, 2005
ஒரு பிளாகரின் கதை
கவுரவ் சாப்னிஸ் (Gaurav Sabnis) தன் ஆங்கில வலைப்பதிவில் IIPM கொடுத்த ஒரு டுபாக்கூர் விளம்பரத்தை பற்றி தன் கருத்தை எழுதி, கூடவே அதை சுட்டிக்காட்டிய ஜாம் பத்திரிக்கை செய்தியையும் கொடுத்திருந்தார்
மூன்று மாதம் கழித்து IIPM கொஞ்சம் பேஜாராகி "மரியாதையாக நீ எழுதியவற்றை அழித்து விட்டு மன்னிப்பு கேள் அல்லது 125 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடு" என்று கேட்டு இவருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸை அனுப்பி கவுரவ்வை சிரிக்க வைத்தது.
இதற்கு கவுரவ் ஒத்துக்கொள்ளவில்லை.
கையாலாகாத IIPM கோழைத்தனமாக கவுரவ் வேலை பார்க்கும் ஐபிம்(IBM) மேலதிகாரிக்கு கவுரவ் தன் பதிவை எடுக்காவிட்டால் IIPM மாணவர்கள் IIPMல் இருக்கும் ஐபிம் Think Pad Lap topபை எல்லாம் எரிக்க போகிறார்கள் என்று நெருக்கடி கொடுத்தது.
இதனால் கவுரவ் தான் வேலை பார்க்கும் IBMக்கு இக்கட்டான நிலமையை கொடுக்கக்கூடாது என்று தன் வேலையை ராஜினாமா செய்தார்.
தன் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, கருத்து சுதந்திரம் தான் முக்கியம் என்று கருதிய கவுரவின் கவுரவத்தை இட்லி வடை பாராட்டுகிறது.
இது தொடர்பான கருத்துக்கள் மற்றும் கடைசி செய்திக்கு இங்கே பார்க்கவும்
Posted by IdlyVadai at 10/12/2005 08:10:00 PM 2 comments
Thursday, October 06, 2005
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள்
Posted by IdlyVadai at 10/06/2005 05:51:00 PM 6 comments