பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 19, 2004

டாக்டர் மாத்ருபூதம்

டாக்டர் மாத்ருபூதம் அவர்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடைய "புதிரா புனிதமா" என்ற நிகழ்ச்சியை பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன்.

கடந்த சில ஆண்டாக உடல் நலம் குன்றியிருந்த டாக்டர் மாத்ருபூதம், தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கும்பகோணத்தில் நடந்த பள்ளிக் கூரை தீ விபத்தில் காயம் அடைந்த குழந்தைகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு டாக்டர் மாத்ருபூதம் நேரில் சென்று மன நல மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தி வந்தார். இதன் அடுத்தக் கட்டமாக உடல் நோய்களை பொருட்படுத்தாமல் மீண்டும் கும்பகோணம் சென்று இலவச மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தினார். அப்போது அவருக்கு உடல்நிலை மோசமானது. எனினும் முகாமை நடத்தி முடித்து விட்டு, சென்னை திரும்பினார். இந்நிலையில், நேற்று காலை 5.15 மணிக்கு அவர் வீட்டிலேயே காலமானார்


அவர் வாழ்வில் ஏற்பட்ட பல நகைச்சுவையான சம்பவங்கள் சில இந்த பதிவில் இடம் பெற்றிருக்கிறது

* - *
நான் செக்ஸ் எஜுகேஸனைப் பற்றி தொடந்து 6 ஆண்டுகள் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்தினேன் என்பது தமிழறிந்த எல்லோருக்கும் தெரியும். அப்போது சில விவகாரமான கேள்விகள் நேயர்கள் கேட்பார்கள்.

ஒருவர் எழுதியுருந்தார், "உங்களுக்கு கிட்டத்தட்ட அறுபது வயதாகிறது. உங்களை நேர்காணல் செய்யும் லேடி டாக்டர் அழகான இளம் வயது பெண்மணி அவரை வைத்து கொண்டு நீங்கள் செக்ஸ் பற்றிப் பேசுவது உங்களுக்கு நியாமாக இருக்கிறதா? எனக் கேட்டார். நான் உடனே சொன்னேன். "இந்த வயதில் பேசத்தான் முடியும்" வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள் ? என்றேன். அந்தப் பதில் எல்லோருக்கும் பிடித்திருந்தது என்பது தான் இதில் உள்ள விஷயம்.

* - *
ஒருமுறை நான் ரயிலில் பயணம் செய்தபொழுது, ஒருவர் ஏழெட்டுக் குழந்தைகளுடன் வந்திருந்தார். அவருக்கு வயது 45-க்குள்தான் இருக்கும். நான் அவரிடம் "இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அரசாங்கம் எவ்வளவோ செலவழித்து விளம்பரம்மெல்லாம் கொடுக்கிறதே அதை நீங்கள் பார்த்ததில்லையா" என்றேன்.

"அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, இந்தக் குழந்தைகளெல்லாம் கடவுள் கொடுத்த சொத்து" என்றார்.

"அது எப்படியப்பா கடவுள் கொடுக்கிறதா இருந்தாக்கூட நீ கர்பத்தடை முறைகளை கடைபிடித்தால் இரண்டோடு நிறுத்திக் கொண்டிருக்கலாமே. அதற்கு கடவுள் என்ன அப்ஜெக்ட்டா செய்யப் போகிறார்" என்றேன்.

அவர் கேட்பதாக இல்லை."உங்களுக்கு இதெல்லாம் புரியாது சார், இது கடவுள் கொடுத்த வரம் எத்தனையோ பேர் குழந்தை இல்லாமெ இருக்காங்களே அவர்களிடம் போய் பேசுங்கள்" என்று சொல்லிவிட்டார்.

பிறகு வண்டி கிளம்பியது, எல்லோரும் தூங்க ஆரம்பித்தோம். ஜிலு ஜிலுவென்று காற்று அடித்ததால், பாத்ரூம் செல்ல வேண்டுமென்று கீழே இறங்கினேன். அப்போது அவருடைய வேட்டி கலைந்திருந்தது. அவரை எழுப்பினேன். "வேட்டியை ஒழுங்காக கட்டிக் கொளுங்கள், கடவுள் தெரிகிறார்" என்றேன்.

அதாவது எதனால் குழந்தை பிறக்கிறது ? அதற்கு நாம் தான் காரணம் என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள்.

* - *
சில இடங்களில் துக்கமாக இருக்கும் போது கூட சிரிப்புக்கான சந்தர்ப்பம் எற்படும்படி சில விஷயங்கள் நடப்பதுண்டு, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை எனக்கு சிறுநீரகங்கள் பாதிக்கபட்டிருக்கிறது. "Acuterenal Failure". அதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்னவென்றால், நான் என்னுடைய மூட்டுவலிக்காக, பல வருடங்களாக அவ்வப்போது வலி நிவாரண மாத்திரைகள், "NSAID (Non Steroid Anty Inflammatory drug) என்று சொல்வோம்.

அதை சாப்பிட்டு வந்ததால் சிறுநீரகம் பாதிக்கப் பட்டிருக்கலாம் அதோடு பல வருடங்கள், சக்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருப்பதாலும் எற்பட்டிருக்கலாம் என பல காரணங்களைச் சொன்னார்கள். எனவே என்னை எமர்ஜென்சியாக அருகில் இருக்கும் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். கீழே Emergency Room இருந்தது, என்னை பரிசோதித்த இளம் டாக்டர்கள்,

"டாக்டர் மாத்ருபூதம் எவ்வளவு பெரிய மனநல மருத்துவர், எவ்வளவு சேவை செய்கிறார், Sex Education-க்கொல்லாம் எவ்வளவு பாடுபட்டு நிகழ்ச்சிகளையெல்லாம் நடத்தியிருக்கிறார் அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றனர். உடனே நான் அக்ஸிஜன் மாஸ்க்கை எடுத்துவிட்டு, "எப்படியாவது காப்பாற்றுகிறேன் என்று சொல்கிறீர்கள். விதியென்று ஒன்று உள்ளது. அதற்குமேல் இழுத்துப் பறித்துக் கொண்டு நான் இருக்க விரும்பவில்லை" என்றேன் அதற்கு,

"உங்களது தைரியம் எல்லோருக்கும் வராது, Any how உங்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்று சொல்லி பக்கத்தில் இருக்கும் நர்ஸிடம், Send him up அதாவது மேல்மாடியில் இருக்கும் Critical care யூனிட்டிற்கு அனுப்பு என்று சொல்லியிருக்க வேண்டும். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. மறுபடியும் மாஸ்க்கை எடுத்துவிட்டு நான் சொன்னேன். நான் சைக்யாரிஸ்ட் எனக்கு புரிகிறது. நிங்கள் எல்லோரும் வந்திருக்கும்போது Send him up என்று சொல்லாதீர்கள்.கொஞ்சம் நாள் கழித்து போகும் உயிர் இன்றே போய்விடும்" என்றேன்.

அவரும், சாரி சார் என்றார். சாரி சொல்லாதீர்கள் இதையே நகைச்சுவையாக பார்க்கும் பக்குவத்தை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார் என்று நான் சொன்னேன்.

மேலும் அவர் சொன்னார் உங்களுக்கு மூச்சு இழுக்கிறேதே அஸ்துமா இருக்கிறதா ? எனக் கேட்டார். நான் மறுபடியும் ஆக்ஸிஜன் மாஸ்க்கை எடுத்துவிட்டு, "அது ஒன்றுதான் எனக்கு இல்லை" என்றேன்.

"டாக்டர் உங்களுக்கு சாவே வராது" என்று சொன்னார் அவர். "பரவாயில்லை நீங்கள் சிறுவயதாக இருந்தால்கூட உங்கள் வாழ்த்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிக் கொண்டே போனேன்.

மேலேபோய் இரத்த பரிசோதனையெல்லாம் பண்ணினால், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், யூரியா எல்லாமே தாறுமாறாக இருந்தது. அதை பார்த்துவிட்டு அந்த டாக்டர், மிகவும் நல்லவர், மிகவும் வல்லவராகிய அவர் உங்கள் பையன்களுக்கு சொல்லியனுப்பிவிடுங்கள் என்றார். ( ஒருவர் லண்டனிலும், ஒருவர் அமெரிக்காவிலும் உள்ளார்). நான் சொன்னேன் "நான் இறந்தால் எப்படியும் வந்து விடுவார்கள், நான் ஒரு வேளை பிழைத்துக் கொண்டால் அவர்கள் வந்துபோவதே அவர்களுக்கு வேஸ்ட், அனாவசிய செலவு அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவர் என் மனைவியிடம் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

மேலும் நான் இறந்தால்கூட நீங்கள் அழக்கூடாது அழுகை என்றால் எனக்கு பிடிக்காது. பிறகு எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அப்படி சொன்னேனே தவிர அதற்காக நீங்கள் நரகாசுரன் செத்துவிடான் என்று பட்டாசெல்லாம் வெடிக்கக் கூடாது என்றேன். அப்போது என்னுடைய மனைவி உண்மையிலேயே அழ ஆரம்பித்துவிட்டாள். "உங்களுக்கு ஒன்றும் ஆகாது" என்றாள். "எனக்கு என்றும் ஆகக் கூடாதுன்னு எல்லோருக்கும் இருக்கும் ஆசை எனக்கு இருக்கு ஆனாலும் பரவாயில்லை என்ற நேக்கத்தில்தான் நான் இருக்கிறேன்" என்றேன்.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால், "One can be affraid of Morbility, but not moratality" மார்பிடிட்டி என்றால் ஒருவர் படுத்த படுக்கையாக இருக்க கூடாது. அதை கண்டு பயப்படுவேன் என்று சொன்னால், அவர்கள் தினம் தினம் செத்து கொண்டிருப்பார்கள். அது தான் உண்மை.

பகவான் கிருஷ்ணர் பயம் என்பது ஒரு பாவம் என்கிறார். ஏசுநாதர் அது ஒரு நோய் என்றார். ஆதிசங்கரர் புனரபிஜனனம், புனரபிமரணம். அதாவது "மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு" என்கிறார். அப்படி இருக்கும்போது நமக்கு மரண பயம் ஏன்?

நீங்கள் உடல்நலத்தில் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நன்றாக இருப்பதாக நினைப்பது நம் கையில்தான் இருக்கிறது. அப்போழுது நோய்கூட குணமாகும். "The conerrs die everyday, the Brane die only once" என்று சொல்வது எக்காலத்துக்கும் பொருத்தமக ஒரு விஷயம்.

(புன்னகை பூக்கள், கற்பகம் புத்தகாலயம், தி.நகர், சென்னை-17)
(படம்: தினமலர் )

2 Comments:

dondu(#11168674346665545885) said...

லாடு லபக்தாஸைப் பற்றிப் பேசும் போது விவேக்கையும் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. முகலில் ஒரு படத்தில் வந்த லாடு லபக்தாஸ் காட்சி மற்றொரு படத்திலும் அழகான முறையில் வந்தது. தன்னிடம் நோயாளியாக வரும் விவேக்கிடமே அவர் அப்பெயரைக் குறித்து தன் வயிற்றெரிச்சலைக் கூறுவார். பிறகு விவேக் குரலைக் கூர்ந்து கவனித்து அதே குரல் என்று வேறு கூறுவார். விவேக் பதறியடித்து ஓடுவார். அருமையான காட்சி.

Kannan Ramanathan said...

போன வாரம் வீட்டுக்கு போயிருந்த போதுதான் அவரோட பேட்டி ஒன்றினை படித்தேன் (ஒரு பழைய ஆ.வி.யில்) . அவரின் நகைச்சுவை பேச்சை இனிமேல் கேட்க முடியாது என்று நினைக்கும்போது ரொம்ப கஷ்டமாதான் இருக்கு!