பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 02, 2004

நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 11

தேவன் - (8-9-1913 - 5-5-1957)

தேவன் என்ற புனைபெயரில் நகைச்சுவையை கதை, கட்டுரை நாவல் என்று அள்ளி வீசியவர் ஆர்.மகாதேவன். திருவிடைமருதூரில் பிறந்தவர். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய பின், 'ஆனந்த விகட'னில் உதவியாசிரியராக இருந்தார். பிறகு 1942 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டு காலம் அப்பத்திரிகையில் பல்வேறு சுவையான கதைகள், கட்டுரைகள் எழுதி சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார். பத்திரிக்கை எழுத்துத் துறையில் அவர் கையாளாத உத்திகளே இல்லை என்று சொல்லும் முறையில் எழுதிவந்தார்.

வித்தியாசம் என்றாலே அது தேவனின் கலை என்று சொல்லிவிடலாம்.
தேவன் என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது துப்பறியும் சாம்புதான். காக்கை உட்கார்ந்தது; பனம்பழம் விழுந்தது! என்று ஒருமுறை சொன்னால் நம்பலாம். ஆனால் அதையே நூறு தடவை சொல்லி வாசகர்களை நம்பவைத்தவர் தேவன் மட்டுமே!. 'துப்பறியும் சாம்பு'வைப் படிக்க வாராவாரம் 'ஆனந்தவிகடனு'க்காகக் காத்திருந்த வாசகர்கள் ஏராளம்.

அவருடைய தொடர் நாவல்களில் வித்தியாசமானவை 'கோமதியின் காதலன்' வீட்டைவிட்டு ஓடிப்போய் வாழ்கையில் விளையாட்டாகவே சோதனைகளைச் சந்திக்கும் வாலிபனின் கதை. 'மிஸ்டர் வேதாந்தம்' கிராமிய மணம் கமழும் காதல் கதை. 'ஜஸ்டிஸ் - ஜகந்நாதன்' நீதிமன்றங்களில் நடக்கும் வாதப் பிரதிவாதங்களைக் கொண்டே புனையப்பட்ட வித்தியாசமான நாவல்.

சிறுகதைகளில் தேவனின் பாத்ததிரங்களைத் தவிர அவருக்கே கதை சொல்லும் முக்கிய பாத்திரமாக ஒருவர் வருவார். அவர் தான் 'மல்லாரிராவ்'. உள்ளங்கையிலிருக்கும் புகையிலைத்தாளைக் குவித்துக்கொண்டே பேசுவார். ஆள்காட்டி விரலிலும், கட்டை விரலிலும் பொடியை இடுக்கிக் கொண்டு மூக்கில் வைத்து உறிஞ்சிவிட்டு கையைச் சொடுக்குவார். அங்கே 'உண்மைக் கதை' பிறக்கும். ஆனால் அத்தனையும் நிஜம் போல் நம்பவைக்கும் கற்பனைக் கதைகள்.

தேவனின் நகைச்சுவைக் கட்டுரைகளை படிக்கையில் நெருங்கிய நண்பர் ஒருவருடன் ஜாலியாக அரட்டையடிப்பது போல் ஒரு அனுபவம் ஏற்படும்.

புத்தகம் எழுதி வெளியிடுவதைப் பற்றி அவருடைய கட்டுரையில் இப்படி எழுதுகிறார்:
நிலத்தில் உழுவது, பயிரிடுவது, வண்டி ஓட்டுவது, கொத்து, தச்சுவேலைகள் சொய்வது இப்படிப் பல தொழில்களைச் செய்து உயிரை வளர்க்கலாம் என்று ஒப்புக் கொண்டவர்கள் ஏனோ புத்தகம் எழுதிப் பிழைப்பதைப் பற்றி அவ்வளவு நம்பிக்கை கொள்ளவில்லை.
இருந்தும் புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆசை மட்டும் என்னை விடவேல்லை. அதற்க்காக நான் தபஸ் செய்யவும் தயாராக இருக்கிறேன். தபஸின் இறுதியில் பகவான் பிரத்தியட்சமாகி என்னைப் பார்த்து, "பக்த்தா! உனக்கு என்ன வேண்டும்" என்று கேட்பார் அல்லவா? அப்போது என்ன பதில் சொல்வதென்று தெரியாததால் தான் தபஸையே ஆரம்பிக்காமல் இருக்கிறேன். அதில் என்ன சிரமம் என்று கேட்கிறீர்களா ?

'நீ என்ன மாதிரி புத்தகம் எழுத வேண்டும் என்று விரும்புகிறாய்? உன் ஆயுள் காலத்திலேயே யாரும் சீண்டாமல் சொற்ப ஜனங்களிடம் மட்டும் பாராட்டு தலைப் பெற்றுவிட்டு, நீ காலமானவுடன் 'குபீர்' என்று பிரக்யாதி அடையும் புத்தகங்கள் எழுத விரும்புகிறாயா? உன் ஆயுள் காலத்திலேயே அமோகமாக விற்பனையாகி, உனக்கு தனத்தை அள்ளிகொடுத்து எங்கே திரும்பினாலும், கண்ணில் பட்டு, நீ மறையும்போது உன்னோடு மறைந்துவிடும் புத்தகம் எழுத விரும்புகிறாயா? என்று பகவான் கோட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது ?
"ஸாக்கிலே கொஞ்சம் 'பேக்'கிலே கொஞ்சம் கேட்கிறவனாயிற்றே நான் ? அந்த உத்திரவாதம் கிடைகாததால் தபஸ் பண்ணவே ஆரம்பிக்கவில்லை!"

நிஜவாழ்கையிலும் அவருடைய உண்மையான தாபமும் தாகமும் அதுதான், சுமார் கால் நூற்றாண்டுக் காலம் கதைகளையும், நாவல்களையும் அவர் எழுதிக் குவித்தார். அவற்றை ஓரளவாவது புத்தக வடிவில் பார்க்கவும் ஆசைப்பட்டார். ஆனால் அந்த ஆசை ஏனோ அவர் உயிரோடு இருந்த வரையில் நிறைவேறவே இல்லை.


தேவனின் படைப்புக்களை வாசிக்க ...
1. மரத்தடி ( தேவன்- என் பார்வை - ஹரன் பிரசன்னா)
2. தேசிகன் பக்கம் ( தேவன் சில கட்டுரைகள்/கதைகள்)
3. அப்புசாமி ( தேவன் சில கட்டுரைகள்/கதைகள்)

1 Comment:

Anonymous said...

http://www.thinnai.com/arts/ar0904032.html

I wrote a few things about Devan in this article.