பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 15, 2004

நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம் - 10

சில நாட்களாக தொடர்ந்து எழுத முடியவில்லை. ஒன்றும் எழுதவில்லை என்றாலும் என் வலைப்பதிவுக்கு வந்த அனைவருக்கும் என் நன்றிகள்.

வரும் சில பதிவுகளில் நகைச்சுவை எழுத்தாளர்களை பற்றி கொஞ்சம் எழுதலாம் என்ற எண்ணம்.

முதலில்

எஸ்.வி.வி (25-8-1880 - 31-5-1950 )

எஸ்.வி.விஜயராகவாச்சாரி என்ற இந்த எழுதாளரைத் தெரியாத தமிழ் வாசகர் இருக்க முடியாது.
1934ஆம் ஆண்டுக்கு முன்பு திருவண்ணாமலையில் வக்கீல் தொழில் செய்துக் கொண்டே பல நகைச்சுவை, கட்டுரைகள், நாவல்கள் என்று பல எழுதியுள்ளார். 'இந்து' நாளிதழில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த இவரை, எளிமையான பழகு தமிழில் நகைச்சுவையுடன் எழுத வைத்த பெருமை 'ஆனந்த விகடனை'யே சாரும். இவருடைய எழுத்தை படித்தால் ஒரு நகைச்சுவை உணர்வுள்ள ஒரு பெரியவரிடம் பேசிக்கொண்டிருப்பது போல் இருக்கும்.

இன்று விகடனில் வரும் "அனு-அக்கா-ஆன்டிக்கு" அறுபது ஆண்டுகளுக்கு முன்பே முன்னோடியாக இருந்து தொடங்கி வைத்தவர் எஸ்.வி.வி.

அந்த காலக் குடும்பங்களை எண்ணிப் பாருங்கள். கிராமங்களாக இருந்தால் வீட்டில் ஒரு முற்றம்; வாசலில் அகலமான திண்ணை இருக்கும். நகரங்களில் உள்ள குடும்பத்தாரின் வீடுகளில் மேலே திறந்த மாடி இருக்கும் கட்டிடம் ஏதும் இல்லாததால் அத்ற்கு மொட்டை மாடி என்று பெயர் வேறே.
அங்கே கணவனும் மனைவியும் குழந்தகளுமாக உட்கார்ந்து அரட்டை அடிப்பார்கள். இந்த அரட்டை கச்சேரிக்கு உல்லாச வேளை என்று தலைப்பும் கொடுத்து அறிமுகம் செய்தார் எஸ்.வி.வி.

வாழ்க்கையை ஒட்டி அமைந்த நகைச்சுவை கட்டுகளை நிறைய எழுதியிருக்கிறார் எஸ்.வி.வி. அவற்றைப் படிக்கும்போது நம்முடைய வீட்டில் நடப்பதையே மீண்டும் கவனிப்பதைப் போல் இருக்கும்.

பல்வலியால் அவதிப்படும் மனைவி கணவனைத் திண்டாட வைத்துப் பந்தாடுவாள் கணவன் மீது சந்தேகப்படும் மனைவி விதம் விதமாக கற்பனை செய்து கடைசியில் தானே அவனுடைய ராஜாத்தி என்பதை புரிந்துகொள்வாள். "பிறர் குழந்தைகள்" என்ற கட்டுரையில் ஒரு பகுதியைப் பார்ப்போம்.
சில வீடுகளுக்குப் போனால் குழந்தையின் தகப்பானார் பெருமை அடித்துக்கொள்ளும் கொடுமையைக் கேட்டு நமக்கு அலுத்துவிடும். எப்பொழுது எழுந்து போகலாம் என்று தோன்றும்.

"குழந்தை யார் பேரனா?" என்று கோட்கிறேம். அவருடைய வயதைப் பார்த்தால் பேரனாகத்தான் இருக்க வேண்டும் என்று நமக்கு படுகிறது.
"பேரன் இல்லை பிள்ளைதான் இவன்தான் கடைசி!"
"ஏன் இதற்குள் கடைசி என்று சொல்லி விடுகிறீர்கள்" என்று சிரிக்கிறோம்.
"பொல்லாத பயல் ஸார்! ஏண்டா சோனி? நீ பொல்லாத பயல்தானேடா ?"
"நான் பொல்லாத பயல் அல்ல. அப்பாதான் பொல்லாத அப்பா"
இந்த சமர்த்து வார்த்தையைக் கோட்டு அப்பாவிற்குப் பெருமை பொங்குகிறது....

அவருடைய கதைகளிலும் கட்டுரைகளிலும் மட்டும் அல்ல; நாவல்களிலும் குடும்ப சித்தரம் அழகாக மலரும். இவை எல்லாவற்றிலுமே பாத்திரங்களைக் கவனித்தால் நம்மையே நாம் கூர்ந்து பார்ப்பது போல் இருக்கும். சில நிகழ்ச்சிகளை படிக்கும் போது "நம் வீட்டுல்கூட இப்படி நடக்கிறதே?" என்று எண்ணத் தோன்றும்.

நகைச்சுவையைத் தனது கலையாக ஏற்றுக் கடைசி வரை அதிலேயே திளைத்தவர் எஸ்.வி.வி. 'ஆனந்த விகடனில்' எழுதத் தொடங்கியவர், கடைசிவரையில் அதில் மட்டுமே எழுதினார். கடைசி நாட்களில் தனக்கு வந்த நோயைக்கூட நகைச்சுவையுடன் வருணித்து குறிப்பிட்டவர் அவர்.

நம்முடனேயே இருந்து நம்மை நமக்கு எடுத்துக் காட்டிச் சிரிக்க வைத்தவர் எஸ்.வி.வி.

1 Comment:

யோசிப்பவர் said...

Ennachu! Ennachu!!
Haloscan Commentellam Kaanamaa Pochu!