பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 25, 2004

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு ! - விடை

ரங்கா,

வாழ்த்துக்கள். சரியான விடை - கருப்பு எழுத்துக்களை(முகம் பார்க்கும்)கண்ணாடியில் காண்பித்தால் அப்படியே இருக்கும், திரும்பாது!

அன்புடன்
இட்லி

Read More...

Tuesday, August 24, 2004

பத்ரிக்கு Temporary ரஜினி ரசிகனின் கடிதம்

......
அருண் வைத்யநாதன் வேண்டுகோளை ஏற்று பதிவு நீக்கப்பட்டுள்ளது.
யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,
இட்லி
(Temporary ரஜினி ரசிகன்)

Inspiration:
1. பத்ரி
2. வந்தியத்தேவன்
3. அருண் வைத்யநாதன்
4. ராஜ்குமார்

Read More...

Monday, August 23, 2004

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு !

இந்த வாரம் ஒரு புதிர்!
எனக்கு கருப்பு கலர்ல இருக்கும் எழுத்துதான் பிடிக்கும் ஏன் ?

CHOICEPURPLEBOOKWATER
WARDIEDTIGERECHO
ICEBOXSQUAREBOOHOOTABLE
TURTLEHIDELARGEDECIDED
OBOEROSECHOCKEDPIG


clue1: ஆங்கில புதிர். தமிழ்ல யேசிக்காதீங்க! (23-Aug-04)
clue2: தெரியலைனா கண்ணாடி போடுங்க ! ( 24-Aug-04)


Read More...

Tuesday, August 17, 2004

சென்ற வார உலகம் - 17/8/04

அரசியல் - ஒரு மந்திரி, ஒரு வழக்கு, ஒரு வாபஸ்
நான் சென்ற வார உலகம் எழுத ஆரம்பித்ததிலிருந்து யாராவது ஒரு மத்திய அமைச்சர் மாட்டிக்கொள்கிறார்.இந்த வாரம் ராஷ்ட்ரீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தஸ்லிமுதீன் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரனுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது போலவே இவருக்கு எதிராகவும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பாராளுமன்றத்தில் பாஜகவினர் புயலைக்கிளப்புவார்கள், வழக்கம் போல் சபாநாயகர் சட்டர்ஜி ஸ்வீட்,காரம், காப்பி கொடுத்து
சமாதானப்படுத்துவார்.சற்றுமுன் கிடைத்த செய்தி: மத்திய அமைச்சர் முகமது தஸ்லிமுதீன் மீதான கொலை முயற்சி, வெடிபொருட்கள், பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக பதிவான வழக்கை பீகார் மாநில அரசு வாபஸ் பெற்றது.

அரசியல் - பேட்டி - போட்டி
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக அரசுக்கு 11,625 கோடி ரூபாய் இழப்பு என்பது பல பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வந்தது. திரு.தீத்தன்(மாநில அக்கெளண்டெண்ட் ஜெனரல்) இந்த தகவல்களை தெரிவித்து, தவிர்க்க வேண்டிய செலவுகள், குறைபாடுகளால் இந்த இழப்பு எற்பட்டிருக்கிறது என்று பேட்டி கொடுத்து பத்திரிக்கைகளுக்கு தீனி போட்டார். தீத்தன் இந்த ஆண்டில் 4,713.88 கோடி ரூபாய் இழப்பு என்று கூறியதாக தினகரன், முரசொலி, ஹிந்துவில்
செய்தி வெளியாகியது. ஆனால் இது நான் பத்திரிகைகளுக்கு அளிக்கவில்லை என்று தீத்தன் கூறியுள்ளார். ஹிந்து மட்டும் ஒரு திருத்தத்தை அளித்துள்ளது. அது சரியாகயில்லை. அதிகாரி கூறியதாக ஒரு செய்தி அதற்கு ஒரு திருத்தம், திருத்தத்திருக்கு திருத்தம் என்று பல சந்தேகங்கள் எழுப்பிகிறது. தீத்தன் சுட்டிக்காட்டியுள்ள குறைகளுக்கு தமிழக முதல்வர் பதில் அளித்திருக்கிறார். முதல்வர் விளம்பரங்கள் மூலம் விளக்கம் அளித்தது எதுவும் தவறில்லை.

அரசியல் - ரகசிய சந்திப்பு
உடுமலையில் நடிகர் விஜயகாந்தை, பா.ஜ., மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் சந்தித்தார். இ ருவரும் தனி அறையில் அரசியல் விஷயங்கள் தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்தினர். இந்த ரகசிய சந்திப்பு போட்டோவுடன் இல்லா பத்திரிக்கைகளிலும் ரகசியமாக வந்தது.

அரசியல் - வாக்கிங்
வைகோவின் வாக்கிங் பற்றி சென்றவாரம் எழுதியிருந்தேன். வைகோ சென்ற இடமெல்லாம் மக்கள் வரவேற்கும் காட்சி, போட்டோக்கள் இன்று எங்கு செல்லயிருக்கார் போன்ற தகவல்களை ரன்னிங் கமண்டரி போல் பத்திரிக்கை/டிவி கொடுத்துக்கொண்டே இருக்கிறது. சன் டிவி ரன்னிங் கமண்டரி வேண்டாம் அட்லீஸ்ட் ஒரு வாக்கிங் கமண்டரி கூட கொடுக்கவில்லை.

அரசியல் - லாலுவின் அதிர்ச்சி வைதியம்
அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அதிரடியால் தற்போது டில்லியில் ரயில்வே அமைச்சக ஊழியர்கள் அலுவலகம் துவங்கும் நேரத்திற்கு முன்னதாகவே ஆஜராகி விடுகின்றனர். அதிகாரிகள் பலர் ஒரு மணிநேரத்திற்கு முன்பே உள்ளே அமர்ந்திருக்கின்றனர். நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும், ரயில்வே அலுவலகங்களிலும் இதே நிலைமை காணப்படுவதாக கூறப்படுகிறது.டில்லியில், பார்லிமென்ட் ஹவுசை ஒட்டியுள்ள ரயில்வே அமைச்சகத்திற்கு கடந்த செவ்வாய்கிழமை ரயில்வே அமைச்சர் லாலு அதிரடி விஜயம் செய்து, தாமதமாக வந்த அதிகாரிகள் உட்பட ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். தாமதமாக வந்த 500க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு "ஆப்சென்ட்' போட்டு, ஒரு நாள் சபளத்திலும் "கை' வைத்தார்.

இதனால், ஆடிப் போன ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தற்போது ஒரு மணி நேரத்திற்கு முன்பே அலுவலகத்திற்கு வந்து விடுகின்றனர். மற்ற ஊழியர்களும் அலுவலக நேரத்திற்கு சற்று முன்னதாகவே வந்து விடுகின்றனர்.

பீஹார் முதலமைச்சர் ராப்பிரி தேவி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மட்டும்தான் போகிறார். மற்ற நாட்களில் உருளைக்கிழங்கு உரித்துக்கொண்டே ஃபைல்களை பார்கிறார்.

அரசியல் - தன்மானம்
ஒரு தவறும் செய்யாத என்னை, இரண்டு வருடங்களாக நாடாளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகள்
அனுமதிக்கவில்லை. இதைவிட அமெரிக்காவில் நடந்த சம்பவம் ஒன்றும் பெரிதல்ல,'' என்று முன்னாள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்தார். இது நம் இந்திய குணம். அவ்வளவுதான். இல்லாவிட்டல் இங்கிலாந்திலிருந்து வந்தவர்கள் ஒரு காசுக்கும் உதவாத 'ராவ்பகதூர்', 'திவான்பகதூர்' பட்டங்களை நமக்கு கொடுத்து நம் தலையில் மிளகாய் அரைத்திருக்க முடியுமா? வெள்ளைக்காரர்களை பார்த்தால் நாம் கொஞ்சம் தாழ்த்தப்பட்டவர்களாக உணர்கிறோம். இதுதான் உண்மை. நம் கண்களில் தூசு விழுந்துவிட்டால்
'foreign particle' என்று அப்படியே விட்டாலும் விடுவோம்.

அரசியல் - குண்டர்கள்
தினமலர் மற்றும் காலைக்கதிர்' பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய பா.ம.க அரசியலை வன்மையாக எந்த கட்சியும் கண்டிக்காதது வியப்பை அளிக்கிறது. நீ ஆயுதம் வைத்திருந்தால் தீவிரவாதி உன் தொண்டர்கள் வைத்திருந்தால் நீ தலைவன் என்று எங்கோ படித்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

தொழிலாளர் சேமநல நிதி - 8.5
நீண்ட இழுபறிக்குப் பின், தொழிலாளர் சேமநல நிதிக்கு (இ.பி.எப்.,) இந்த நிதியாண்டில் 8.5 சதவீதம் வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது.தொழிலாளர் சேமநல நிதித் திட்டத்தில் நாடு முழுவதும் மூன்று கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இத்திட்டத்தில் தொழிலாளர்கள் செலுத்தும் தொகைக்கு தற்போது 9.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதை எட்டு சதவீதமாக குறைக்க மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.வட்டி விகிதத்தை முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டது. பலமுறை இக்குழுவின் கூட்டம் நடந்த போதும், முடிவு ஏற்படாமல் இழுபறியாக இருந்தது. குழுவின் கூட்டம் டில்லியில் நடந்தது. இதில், இந்த
நிதியாண்டிற்கு மட்டும் 8.5 சதவீதம் வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிஸ்ராம் ஓலா, இதை அறிவித்தார். கூட்டத்தில் பங்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்புடைய சி.ஐ.டி.யூ., மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற் சங்கங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன. பாரதிய மஸ்துõர் சங்கமும் 8.5 சதவீத வட்டியை ஏற்கவில்லை. இதை எதிர்த்து, அடுத்த மாதம் 20ம் தேதி டில்லி, கோல்கட்டாவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் போவதாக இச்சங்கம் அறிவித்தது. இதை ஏன் (புத்திசாலி)பட்ஜெட்டில் சொல்லாமல் இப்போழுது சொல்கிறார்கள்?

விளையாட்டு - நம்பிக்கை, எதிர்பார்ப்பு, எதார்த்தம்...
ஒலிம்பிக்... 4 ஆண்டு பயிற்சிக்கு பலனாக பதக்கங்களை அறுவடை செய்யும் விளையாட்டுத் திருவிழா.இதில் ஒரே வீராங்கனை பல தங்கங்களை அள்ளிச் செல்வதை நாம் ஏக்கத்துடன் பார்த்திருக்கிறோம். இத்தனை கோடி மக்கள் இருந்தும் நமக்கு வெண்கலம் மட்டுமே ஆறுதலாக கிடைக்கிறது என்று ஆதங்கப்பட்டுள்ளோம். கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவால் ஒரு தங்கப்பதக்கத்தை கூட பெற முடியாததது வேதனையான விஷயம்தான். இந்த வேதனைக்கு எல்லாம் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் விடிவு காலம் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியாக
ஹாக்கி, தடகளத்தில் அஞ்சு ஜார்ஜ், துப்பாக்கி சுடுதலில் அஞ்சலி பகவத், பளு துõக்குதலில் மல்லீஸ்வரி, டென்னிசில் பயஸ், பூபதி என ஏகப்பட்ட பதக்க "நம்பிக்கைகள்' இம்முறை காணப்படுகின்றனர்.
எதார்த்தம்: நான் செல்ல வேண்டுமா என்ன ஒரு வெண்கலம் கிடத்தால் அதுவே ஒரு பெரிய சாதனைதான்.

இரண்டு தண்டனை
பள்ளி மாணவியை கற்பழித்துக் கொன்ற தனஞ்ஜய் சட்டர்ஜிக்கு 14ஆம் தேதி அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேல்முறையீடுகள், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியது உள்ளிட்ட பல விஷயங்களால் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது தள்ளி போய்க் கொண்டே இருந்தது.தூக்கிலிட அவரை அழைத்துச் சென்ற போது அவர், "நான் நிரபராதி; என்னை கொல்கிறார்கள்' என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருந்தார்.

இந்த தூக்கு தண்டனை வழக்கிற்கு ஒரு பெரிய hype மீடியாவினால் கிடைத்தது. தூக்கு தண்டனை வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை பற்றி தினமும் அலசினார்கள்.தனஞ்சய்க்கு கொடுக்கப்பட்டுள்ள தண்டனை சரிதான், ஆனால் 14 ஆண்டுகள் கழித்து நிறைவேற்றபட்டதுதான் தவறு என்பது என் எண்ணம். தனஞ்ஜய்க்கு இரண்டு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது - ஒரு ஆயுள் தண்டனை + ஒரு தூக்கு தண்டனை.

14 வயது மாணவியை, 14 ஆண்டுகளுக்கு முன் கற்பழித்துக் கொன்ற தனஞ்ஜயின் பிறந்ததினம் 14 ஆம் தேதி. இறந்த தினமும் 14 ஆம் தேதி!.
நம் எல்லோருக்கும் கொஞ்சம் பாவமாகதான் இருந்தது. தூக்கு தண்டனையை நீக்கமுடியாது. தூக்குத் தண்டனைக்கு பதிலாக குற்றவாளிக்கு விஷஊசி போட்டு மரணத்தை தழுவச் செய்யலாம். என்னைப் பொறுத்தவரை மனிதாபிமானத்தோடு ஒரு குற்றவாளியை உயிர் இழக்கச் செய்வதற்கு இதுவே வழி.


கொண்டாட்டம் - சுதந்திர தினம்.
சுதந்திர தினம் என்றால் நாம் எல்லோரும் முதலில் பார்ப்பது அது எந்த கிழமையில் வருகிறது என்று தான். இந்த வருடம் அது ஞாயிற்றுக்கிழமையில் வந்தது எல்லோருக்கும் ஏமாற்றமே. சுதந்திர தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே டிவி சானல்கள் அன்று என்னென்ன சினிமா என்று அலர ஆரம்பித்துவிட்டன. பழைய கருப்பு வெள்ளை படங்களிருந்து சில காட்சிகளை போட்டு தங்களின் தேச பக்தியை உணர்த்தினார்கள். கொடியை குத்திக் கொண்டு நடிகர், நடிகைகள் பேட்டி கொடுத்தார்கள். வழக்கம் போல் டிடியில் அணிவகுப்பை காண்பித்தார்கள். செய்திகளில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு என்று வாசித்தார்கள். விஜய் டிவியில் -
காமராஜர், ராஜ் - வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் காண்பித்தார்கள்.
நம் நாட்டில் இது ஒரு சடங்கு அவ்வளவுதான்.

கப்பல்
நாட்டின் பாதுகாப்பு கருதி தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் துவக்க கூடாது என்று ஜெ கூறியிருக்கார். நல்ல கோரிக்கை என்பது என் எண்ணம். இந்த புதிய வசதியினால் பெட்ரோல், டீஸல் போன்ற பொருட்கள் கடத்தலுக்கு வழிவகுக்கும். ஏன் ஆயுத பரிமாற்றம் கூட நிகழலாம். என்னை கேட்டால் ஒரு பேப்பர் கப்பல் கூட விட அனுமதிக்க கூடாது.

குடிக்க கொஞ்சம் தண்ணி தாங்கப்பா
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகிறது. இதனால், ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக அங்கு செயற்கையான ஏரி உருவாகியுள்ளது. இதில் தேங்கியிருக்கும் வெள்ள நீரினால் இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கும் பெரும் அபாயம் ஏற்படக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதை சென்னை பக்கம் திருப்ப முடியுமா ?

கின்னஸ் சாதனை ?
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண்ணுடன் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல காவல்துறை அதிகாரிகள் முறைகேடான தொடர்பு வைத்துள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி காவல்துறைக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலட்சுமி இதுவரை 19 பேரை(இன்றைய கணக்குப்படி!) கல்யாணம் செய்துள்ளதாகவும், இதில் பலர் காவல்துறை அதிகாரிகள் எனவும், இவர்களைத் தவிர மேலும் பல போலீஸ் அதிகாரிகள் சிக்குவார்கள் என்று செய்திகள் வருகிறது. இந்த செய்தி விரைவில் அமுத்தப்படும் என்பது
என் எண்ணம்.


கடைசி செய்தி
ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ள மூன்று இந்தியர்களை பற்றிய செய்தி அவ்வளவாக கடந்த வாரம் வரவில்லை. பேச்சு வார்த்தை முன்னேற்றம், பின்னடைவு என்று மாறி மாறி கூறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தியர்களை விடுவிப்பது தொடர்பாக தீவிரவாதிகளின் பிரதிநிதியாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் அல் துலாய்மி, சுவாரசியமான பேட்டி ஒன்று அளித்தார். அதில், "பாலிவுட் நடிகர்கள் அமிதாப், தர்மேந்திரா ஆகியோர் "டிவி'யில் தோன்றி வேண்டுகோள் விடுத்தால், இந்தியர்களை தீவிரவாதிகள் உடனடியாக விடுதலை செய்து விடுவார்கள்' என்றார். இந்த செய்தியை வைத்து கொஞ்ச நாள் பத்திரிக்கையை ஓட்டினார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்திருக்கார்கள்.

ஜோக்ஸ்
"திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு முஸ்லிம்கள் காரணம்" - கருணாநிதி.
"சந்தன கடத்தல் வீரப்பனின் குணாதிசயங்களை அறிந்தவன் நான். பொதுகாரியங்களுக்கு விரப்பன் எவ்வித இடையூரும் செய்யமாட்டான்" - ஈ.விகே.எஸ். இளங்கோவன்.

Read More...

Monday, August 09, 2004

சென்ற வார உலகம் - 9/8/04

விளையாட்டு - Statutory warning - இந்திய அணி மேல் பெட் வைக்காதீர்கள்.

இலங்கையை நான்கு ரன் வித்தியாசத்தில் சூப்பர் லீகில் வீழ்த்திய பின் திடீர் என்று இந்திய அணி இனி சென்ற இடமெல்லாம் ஜெயித்துவிடும் என்று எல்லோரும் மீண்டும் நம்பினார்கள். இலங்கை 228 என்ற உடன் கோப்பை நமது என்று கனவு கண்டார்கள். அசிங்கமாக தோத்தார்கள். ஏனென்றால் அவர்கள் அன்று விளையாடியது கிரிக்கேட் இல்லை. அன்றைய மாட்சை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம்.

முதல் பகுதி - ஆஹா இந்திய அணி என்றால் சும்மாவா ? எப்படி விளையாடுகிறார்கள் பார்த்தீர்களா? பந்து வீச்சாளர்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்.
இரண்டாவது பகுதி - 228 ஒரு சுலபமான இலக்கு என்ற நம்பிக்கையில் நண்பர்களுடன் பெட் வைத்தல்.
முன்றாம் பகுதி - கடவுளே என்ன ஆயிற்று இவர்களுக்கு ஏன் இவ்வளவு கேவலமாக விளையாடுகிறார்கள்.
நான்காம் பகுதி - அடச்சே சொதப்பிட்டாங்களே இவர்கள் விளம்பர படத்தில் நடிக்கத்தான் லாயக்கு.

நீதி: இந்திய அணியை நேசி, அவர்கள் ஜெயிக்க கடவுளை வழிபடு, ஆனால் அவர்கள் நம்பி பெட் வைக்காதே.

அரசியல் - புதிய சிக்கல்

சிபு சோரனை தொடர்ந்து இன்னொரு மத்திய அமைச்சரான டி.ஆர். சந்திரசேகர ராவுக்கு மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் உத்தரவை கோர்ட் பிறப்பித்தது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரான அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ., வற்புறுத்தியது. இதனால், மத்திய அரசுக்கு புதிய சிக்கல் முளைத்துள்ளது. இது மாதிரி எவ்வளவு பேர் கிளம்பியிருக்கீங்க ?
முன்பு நான் எழுதிய அடுத்த தேர்தலுக்கான விண்ணபப் படிவத்தின் டாப் 10+3 கேள்விகள்


அரசியல் - நடைப்பயணம்
மதிமுக பொதுச்செயலர் வைகோ தனது மறுமலர்ச்சி நடைப்பயணத்தை திருநெல்வேலியில் வியாழக்கிழமை நண்பகல் தொடங்கினார்.

தாமிரபரணி ஆற்றில் நீராடி தனது பயணத்தைத் தொடங்கிய அவர், 42 நாட்களில் 1,025 கி.மீ. தூரம் நடந்து சென்று அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சென்னையைச் சென்றடைகிறார்.

வைகோவின் 'வேண்டும்' லிஸ்ட்

மாநிலங்களிடையே ஓடும் நதிகளை இணைக்க வேண்டும்
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும்
பொதுவாழ்வில் ஊடுருவிவிட்ட சீர்கேடுகளை அகற்றும் உணர்வு பொதுமக்களிடையே ஏற்பட வேண்டும்;
சாதி, மத மோதல்களைத் தடுக்க வேண்டும்;
வன்முறை மனப்பாங்கை இளைஞர்கள் கைவிட வேண்டும்
என்பனவற்றை வலியுறுத்துவதோடு, தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின் அராஜகத்தையும், ஊழல்களையும் எதிர்த்து மக்கள் சக்தியைத் திரட்டவும் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார்.

உங்களுக்கு டயாபடீஸ் என்றால் கலந்துகொள்ளலாம் வாக்கிங் டயாபடீஸூக்கு நல்லது.

அரசியல் - சம்பிரதாயம்
மூன்று மாதத்திற்கு ஒரு முறை எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதி/கவர்னரிடம் மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. என்ன நடந்துவிட போகிறது ? ஒன்றும் நடக்காது. மிஞ்சி போனால் ஒரு நல்ல நாள் பார்த்து ஒரு அழகான ஃபைலில் போட்டு வைக்கலாம். பின் ஏன் இந்த கூத்து ? இப்படி பண்ணினால் தான் பத்திரிக்கை/டீவியில் உங்களை காண்பிப்பார்கள்.

கொரிக்க கொஞ்சம் பான் மசாலா

பான்மசாலா மற்றும் குட்கா விற்பனைக்குத் தடை விதித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இதன் மூலம், தமிழகத்தில் பான்மசாலா மற்றும் குட்கா விற்பனைக்கு இருந்து வந்த தடை நீங்கியது. ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.அதைத் தடை செய்ய வேண்டும் எனக் கருதியிருந்தால் நாடாளுமன்றமே அதற்குத் தடை விதித்திருக்கும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். சட்டப்படி நியாயமான தீர்ப்பு என்றாலும், நல்ல தீர்ப்பு இல்லை.


இது கொஞ்சம் ஓவர்

மதுரையை சுற்றியுள்ள மக்கள் வழக்கு சம்பந்தமாக சென்னைக்கு அலைவதை குறைக்க மதுரை கிளை துவங்க பட்டது. நல்லது நடந்தது ஆனால் வக்கீல்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினார்கள்.மதுரை கிளைக்கு 25 ஆயிரம் வழக்குகள் மாற்றிக் கொடுத்தாலும், மீதம் சென்னையில் உள்ள வழக்குகளை விசாரித்து முடிக்கவே 20 வருட காலம் ஆகும்.

நீண்ட காலமாக மிக நல்ல வருமானத்தைப் பார்த்து விட்ட சென்னை வக்கீல்கள், பிற்காலத்தில் தன் மகன், பேரன், கொள்ளுப் பேரன்களை வக்கீலுக்கு படிக்க வைத்து வக்கீலாக பிராக்டீஸ் செய்யும்போது, மதுரை கிளை துவங்குவதால் 100 வருடங்களுக்குப் பிறகு தன் கொள்ளுப் பேரன் வக்கீலாகும்போது அவன் தொழில் பாதிக்குமே என இப்போதே வேதனையுடன் கொள்ளுப் பேரனை எண்ணி துடி துடிக்கின்றனர்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டியை மாற்றியே தீர வேண்டுமென்று சென்னை ஐகோர்ட் மன்ற வக்கீல்கள் அனைவரும் அணி திரண்டு போராடினர்.இது கொஞ்சம் ஓவர்.

வருங்கால முதல்வர்களே..
இயக்குனர் பாரதிராஜா, ஒரு வார நாளிதழில், "நடிகர் விஜயகாந்த் எல்லாம் வருங்கால முதல்வர் என்று அடைமொழியிட்டுக் கொள்கிறார்' என்று மிகவும் வருத்தத்துடன் கடிந்து கொண்டுள்ளார். இந்தியர்களாக பிறந்த எல்லோரும் வருங்கால முதல்வர் என்று அழைத்துக் கொள்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.நான் ஸ்கூலில் படிக்ககும் போது, "If you become a PM/CM" என்று கட்டுரை எழுதச் சொல்லுவார்கள் பாரதிராஜா அதற்கும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தெரிவிப்பார்.

திருட்டுத்தானே ..

சென்னை போன்ற பெரு நகரங்களில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி குற்றங்கள் மிகவும் அதிகமாகி விட்டன.சில இடங்களில் கொள்ளையர்கள் கொலையும் செய்து விட்டுத் தப்பியோடி விடுகின்றனர். நம்முடைய தண்டனை சட்டத்தில் இதற்கு கடுமையான தண்டனை இல்லாததே இதற்கு காரணம்.

கொள்ளை, திருட்டு, வழிப்பறி மட்டும் செய்பவர்கள் குற்றம் நிரூபணமாகும்போது குறைந்தபட்சம் தண்டனையை கடுமையாக்க வேண்டும். திருட்டுத்தானே என்று விட்டுவிடுவதால் வந்த விளைவு.

ஓர் அறிவுரை

"இது பள்ளியா" என்று ஜெ கேட்டிருப்பது அவர் நாட்டு நடப்பு பற்றி அவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதையே காண்பிக்கிறது. முன்பு அரசர்கள் "மாதம் மும்மாரி பொழிகிறதா அமைச்சரே" என்று கேட்டார்கள்,

மாறுவேடம் அணிந்து நகர்வலம் வந்தார்கள். இவர் அது மாதிரியெல்லாம் செய்ய வேண்டாம், அட்லீஸ்ட் வாரம் ஒரு முறை அமைச்சர்கள், பத்திரிக்கை நிருபர்களை சந்தித்தாலே போதும் நாட்டு நடப்புகள் தெரிய வரும்.

ஓர் எச்சரிக்கை
நக்ஸலைட்டுகள் மீதான தடையை ஆந்திர அரசு விலக்கி கொண்ட இந்த அவகாசத்தை அவர்கள் பணம், ஆட்பலம் சேர்க்க பயன்படுத்தபடுவதாக செய்தி வருகிறது. உண்மை இருக்கும் என்று தான் தோன்றுகிறது. இதற்க்காக ஆந்திர அரசு வருத்தபடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. ஆயிதத்தை ஒப்படைக்கும் வரை பேச்சு வார்த்தை தொடங்கியிருக்க கூடாது என்பது என் எண்ணம்.


சரி - தப்பு
கும்பகோணம் தீ விபத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஐந்து பேருக்கு கும்பகோணம் வக்கீல்கள் சங்கம், "கும்பகோணத்தில் இருந்து வழக்கறிஞர்கள் யாரும் மேற்படி குற்றவாளிகளுக்கு ஆஜராக மாட்டோம்' என்று முடிவெடுத்துள்ளது. நல்ல முடிவு தான், ஆனால் கொஞ்சம் யோசித்தால் இது ஒரு தப்பான முடிவு என்பது தெரியும்.

கடைசி செய்தி - மரணப்பிடியில்
இந்தியர்கள் மூன்று பேர் இராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இரண்டு வாரம் ஆகிறது. அவர்கள் வைத்த கோரிக்கை என்ன, என்ன பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. தீவிரவாதிகள் அவர்களை விட்டுவிட ஆண்டவனை பிராத்திப்பதை தவிர நாம் ஏதும் செய்ய இயலாது. மனிதாபிமானம் ஜெயிக்க வேண்டும்.


ஜோக்ஸ்
1. "தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரத்தில் தி.மு.க., தில்லு முல்லு செய்து விட்டது' - ஜெயலலிதா.

2. "கவிதை எழுதுகிறவன் ஆட்சி செய்வதற்கு மிக அருமையானவன். கவிதை எழுதுபவனிடம் நாட்டை ஒப்படைத்தால் அந்த நாடு நன்றாக இருக்கும். இது மூடர்களுக்குத் தெரியவில்லை" - கவிக்கோ அப்துல் ரகுமான்


Read More...

Wednesday, August 04, 2004

நியூ பட விமர்சனம்

நேற்று 'நியூ' படம் பார்த்தேன். சிம்ரனின் இடை, கிரனின் எடையை நம்பியே சூர்ரியா படத்தை எடுத்திருக்கிறார். என்னுடைய விமர்சனம்
நடிப்பு : 20%
மம்மி செண்டிமெண்ட் : 5%
பாடல் : 5 x 5 = 25%
இரட்டை அர்த்த நகைச்சுவை : 25 x 2 = 50%

படத்தில் இரட்டை அர்த்த ஜோக்ஸ் சகட்டு மேனிக்கு வருகிறது ( விசில் ஜோக், ஆணி அடிக்கும் ஜோக், உப்பு மூட்டை ஜோக் ...)இப்படி ஏராளமாக வருகிறது. வாயில் விரல் போடும் குழந்தைக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம், மற்ற எல்லோருக்கும் புரியும். நான் சிரிக்கவில்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை. சிரித்தேன்.

எச்சரிக்கை: குடும்பத்துடன் பார்க்காதீர்கள். சில ஜோக்ஸுக்கு நீங்கள் வாய்விட்டு சிரித்துவிடுவீர்கள், பிறகு மாட்டிக்கொள்வீர்கள். Friends உடன் பார்க்கவும்.


Read More...

Monday, August 02, 2004

சென்ற வார உலகம்

சென்ற வாரம் என்னால் எதுவும் எழுத முடியவில்லை. வாழ்த்துச் செய்தி அனுப்பியவர்களுக்கு என் நன்றிகள். சென்ற வாரம் எழுத நினைத்ததை இந்த வாரம் தந்துள்ளேன்.

தலைப்பு செய்தி
'வசூல் ராஜா MBBS' என்ற படத்தின் தலைப்பிற்கு டாக்டர்கள் கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார்கள். போனவாரம் 'ரமணா' படத்திலிருந்து ஒரு காட்சியை KTVயில் காண்பித்தார்கள். ஒரு பிணத்திற்கு வைத்தியம் பார்த்து பணம் வசூலிப்பார்கள் டாக்டர்கள். நியாயமாக பார்த்தால் இந்த படத்திற்குதான் டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். நல்ல கூத்து.

அரசியல் - தீ
கும்பகோணம் தீ விபத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது என்று சொல்லியே எல்லோரும் அரசியலாக்கினார்கள். கவிஞர்கள் கவிதை எழுதினார்கள். பத்திரிக்கைகள் ஒரு வாரம் நடிகைகளின் அட்டை படத்தை போடாமல் தீக்கிரையான குழந்தைகள் படத்தை போட்டு 'கவர் ஸ்டோரி' எழுதினார்கள். பிரபலங்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை பார்த்துவிட்டு வெளியே வந்து பேட்டி கொடுத்தார்கள். ராகுல் காந்தி If you are asking me if there was a good rescue operation, I would say no" என்று ஆரம்பித்துவைத்தார். சன் டிவி கரிக்கட்டையான உடல்களை மீண்டும் மீண்டும் காண்பித்து எல்லோருடைய வயிற்றெரிச்சலையும் கொட்டிக்கொண்டது. தமிழகத்தில் கூரை பிரிப்பதை ( அறிவாலையத்தை தவிர்த்து) படம் பிடித்து காண்பித்தார்கள்.
அரசியல்வாதிகளும், அதிகாரிகள் மட்டுமே இதற்கு காரணம் கிடையாது. நாம் எல்லோரும் லஞ்சம் கொடுக்கிறோம், நம் வீட்டுப்பக்கத்தில் நடக்கும் அந்நியாயத்தை நாம் தட்டிக்கேட்காமல் டிவி பார்த்துக்கொண்டிருக்கிறோம். பல வித குறுக்கு வழிகளை தேர்ந்தெடிக்கிறேம்.
தண்ணீர் குடித்துவிட்டு யோசித்துப் பாத்தால் இதற்கு நாம் எல்லோரும் ஒருவிதத்தில் காரணம் என்பது புரியும்.

அரசியல் - கூட்டணி
கொலை வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்திரவிலிருந்து தப்புவதற்காக தலைமறைவாகிவிட்ட மத்திய நிலக்கரி மந்திரி சிபு சோரன் இரண்டு நாட்களுக்கு முன் சரணடைந்துள்ளார். பிரதமர் ராஜினாமா கோருவதற்கு ஒருவாரம் எடுத்துக்கொண்டார். கூட்டணி
நிர்பந்தம் என்று பாங்காகில் பேட்டி கொடுக்கிறார். முன்பு இருந்த ஆட்சியிலும் இதே போல்தான் செய்தார்கள் என்று விளக்கம் கொடிக்கிறார் கொஞ்சம் போனால் நிலக்கரி இலாக்கா அதுதான் அவர் மீது கறை படிந்துவிட்டது என்று சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது.

இன்று ஒரு தகவல்
இன்று ஒரு தகவல் டைப்பில் இரண்டு செய்தி தினமும் வருகிறது.
1. போலி முத்திரைத்தாள் மோசடியில் இன்று சிக்கியவர்களின் விபரம்..
2. பாராளுமன்றத்தை புறக்கணித்தல்.
முன்பு காங்கிரஸ் செய்து கொண்டிருந்தது. இன்று பா.ஜ.கா.பாராளுமன்ற புரக்கணிப்பை ஜனநாயக விரோதம் என்று கூறும் காங்கிரஸ், தமிழ் நாட்டில் சட்டமன்றத்தை புறக்கணிக்கிறார்கள். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா

காணவில்லை
தமிழ் பத்திரிக்கைகள் மூலம் பிரபலமடைந்த குட்டிச்சாமியாரை கொஞ்ச நாளாக காணவில்லை. கடைசியாக மதுரை ஆதீனத்துடன் பார்த்ததாக ஞாபகம்.

விளையாட்டு
இந்திய இலங்கை 'ஒரு நாள் போட்டி' பார்பதற்கு நன்றாக இருந்தது. ஏதோ luck ஜெயித்துவிட்டேம். கடைசி பந்து வரை இந்தியா ஜெயிக்கும் என்று யாரும் நம்பவில்லை. அவ்வளவு நம்பிக்கை இந்திய அணி மேல்.

முக்கிய செய்திகள்
1. Hinduவில் ஜெயலலிதா மூகாம்பிகை கோயில் சென்றதை அரைப்பக்கம் படத்துடன் செய்தியாக வெளியிட்டது. எவ்வளவோ முக்கியமான செய்திகள் இருக்கும் போது இந்த செய்தி அவர்களுக்கு முக்கிய செய்தியாகிவிட்டது.

2. முஸ்லிம் பெண் 'இர்ஷாத் ஜஹான்' மோடி ஆதரவு போலிசாரால் கொலை செய்ததாக தலையங்கம் எழுதிய பத்திரிக்கைகள் அவர் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ள உண்மை வெளியே வந்தவுடன் அடங்கிவிட்டார்கள். பத்திரிக்கை தர்மம் ?

கவிதை
அவள் விகடனில் வந்த 'அன்புள்ள அக்காவுக்கு...' என்ற கவிதை என்னை மிகவும் பாதித்தது.


உனக்குப் பிடிச்ச
குட்டி கிளாஸையும்
முட்டை தட்டையும்
சாமி ரூமுக்கு
மாத்திட்டாங்க

நீ மறந்து விட்டுட்டுப் போன
வாட்டர் கேனைப் பார்த்து
அம்மா அழுதுக்கிட்டே கெடக்கு

என்கிட்ட நீ
அடம்பிடிச்சு வாங்கின
பொம்மை போட்ட கவுனை
அப்பா எனக்கே கொடுத்துட்டாரு

நீ ஓட்டின சைக்கிள
இனிமே யாரும்
தொடக்கூடாதுன்னு
உத்தரவு போட்டுட்டாங்க

நேர்ல பார்க்க
நீ ஆசைப்பட்ட
நடிகருங்க எல்லாம்
நம்ம வீடு தேடி வர்றாங்க

கண்ணாமூச்சி ஆட
இனி யாரைக் கூப்பிடறதுன்னு
கேக்கறா
உன் தோழி சரசு

நானாவது
உசுரோட வேணும்னு
படிப்புக்கு என்னைய
முழுக்குப் போடச் சொல்லிட்டாங்க

அதெல்லாம் கெடக்கட்டும்...
ஸ்கூல் விட்டு வந்து
நீ எடுத்து விடறேன்னு
சொன்ன முள்ளு மட்டும்
இன்னும் என் கால்ல
உறுத்திக்கிட்டேதான் இருக்கு.

- மு. மாறன்
( நன்றி அவள் விகடன் )

கடைசி செய்தி
தீவிரவாதிகள் வசம் இராக்கில் மூன்று இந்த்தியர்களுக்கு தினமும் ஒரு கெடு வைத்தும் நீடித்த வண்ணம் இருக்கிறார்கள். NDTVயை பார்த்தால் மணிக்கு ஒரு தடவை இன்னும் 5 மணி நேரம் தான் இருக்கு, 4 மணி நேரம் தான் இருக்கு என்று Count Down செய்து கொண்டிருக்கிறார்கள். தீவிரவாதிகளே மறந்தாலும் NDTV அவர்களுக்கு ஞாபகப் படுத்திவிடுவார்கள்.

ஜோக்ஸ்

"என்னிக்காவது பிரதமர் ஆவேன்" - லாலு
"அன்புமணிக்கு கிடைக்கும் எல்லா பதவிகளும் பொதுக் குழுவின் முடிவு" - டாக்டர் ராமதாஸ்



Read More...