கவிதையும் குப்பையும்.
இந்த வருடம் புத்தக சந்தையில் எவ்வளவு புத்தகங்கள். அதனுள் மக்களை கவர்ந்த புத்தகங்கள் கீழே.
( இதை அவர்கள் வாங்கினார்களா அல்லது வேடிக்கை பார்த்தார்களா எனக்கு தெரியாது ).
1. ஒஷோ புத்தகங்கள் ( தமிழ் நாட்டு மக்கள் சிந்தனை வளர்ந்தால் சரி )
2. சுகபேதானந்தா ( இந்த தண்ணிர் கஷ்டத்தில் எப்படி ரிலக்ஸ் செய்வது )
3. குமுதம் ஸ்டாலில் கூட்டம் அலைமோதியது. ( சுண்டல் ஏதாவது குடுத்தார்களா ? ).
4. கவிதை தொகுப்புக்கள்.கவிதைப்பற்றி கீழே.
தமிழ் புத்தகங்கள் எல்லாம் நல்ல வழவழப்பான அழகான அட்டைப்பட ஓவியங்களுடன் வருவதால் எது நல்ல
புத்தகம் என்று கண்டுபிடிப்பது கஷ்டமாகிவிட்டது. பதிப்பகங்களும் நிறை வந்துவிட்டது.
ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும், இன்னோரு பக்கம் கவலையாக இருக்கிறது.
கவிதைக்கு இலக்கணக் கட்டுப்பாடு தேவையா ? என்னைக்கேட்டால் தேவை என்பேன்.
நாட்டில் கவிதையை குறைக்கவேண்டுமானால். குடும்ப கட்டுப்பாடு போல் கவிதைக்கட்டுப்பாடு தேவை.
அந்த காலத்தில் இருந்தவர்களுக்கு உணர்ச்சி இல்லையா ? இப்போழுது இருப்பவர்களுக்கு மட்டும்
தான் உணர்ச்சி இருக்கிறதா ? உணர்ச்சியின் வேகத்தில் வரும் எண்ணங்களை எழுதுங்கள் ஆனால் அதை
கவிதை என்று சொல்லாதிர்கள். அதை குப்பை என்று சொல்லுங்கள். முக்கியமாக அதை யாரிடமும் வற்புறுத்தி
படிக்கச்சொல்லாதீர்கள். உபத்திரம் இல்லா இணைய குழுக்களுக்கு அனுப்புங்கள், அல்லது வலைப்பதிவில்
அரங்கேற்றி, கடையை திறந்து, யாராவது வருகிறார்களா என்று காத்திருங்கள்.
ரமேஷ் மாகாதேவன்என்பவர் தம்முடைய வலைத்தளத்தில் வைரமுத்து கவிதை எழுதும் முறையை செல்லியிருக்கிறார். அவர் அனுமதியுடன் வழிமுறையை கீழே கொடுத்துள்ளேன்.
A | B | C |
ராஜா | முல்லை | காத்திருக்கு |
தேவ | இதழ் | பூத்திருக்கு |
ராத்திரி | ராஜா | விழித்திருக்க |
பேசிய | மான் | பாத்திருக்கு |
அழகு | ஜீவன் | செத்திருக்கு |
பூகம்பம் | சிரிச்சிருக்கு | |
மின்னல் | பொழுஞ்சிருக்கு | |
வேர்த்திருக்கு |
A, B, C வரிசைகளிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்து ஒரு வரி எழுதினால் வைரமுத்து கவிதை ரெடி!.
உதாரணத்துக்கு இப்படி கவிதை அமைக்கலாம்.
அழகு மின்னல் காத்திருக்கு
தேவ முல்லை சிரிச்சிருக்கு
பேசிய ஜீவன் பாத்திருக்கு
ராஜா இதழ் வேர்த்திருக்கு
பி.கு: வேர்வை வைரமுத்துக்கு பிடித்த வார்த்தை.
இதே போல்
கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு ...
என்ற பாடலை எழுதும் முறை சிம்பிள் - ஒரு பொருள் மற்றும் அதன் தன்மை அறிந்தால் கவிதை sorry குப்பை
ரெடி.
உதாரணத்துக்கு
Objectக்கு attribute அழகு.
ரசத்துக்கு உப்பழகு
பழத்துக்கு ஜுஸ் அழகு
கிழத்துக்கு தடி அழகு...
இப்படி எழுதிக்கொண்டே போகலாம். இதல்லாம் கவிதையா ?
அந்தகாலத்தில் கட்டளைக் கலித்துறை, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா, நேரிசை
வெண்பா,எண்சீர்க்/எழுசீர்ச்/அறுசீர்ச்/பதினான்கு சீர்க்.. கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,
சந்தம், அந்தாதி, சந்த விருத்தம், வஞ்சித்துறை, கொச்சகக் கலிப்பா, நேரிசை ஆசிரியப்பா,
கலிநிலைத்துறை, வஞ்சி விருத்தம் .. இதல்லாம் இப்போ சுறுங்கி ஹைக்கூ ஆகிவிட்டது.
( நாளை "கூ" ஆகிவிடும் ).
*
இந்த மாதம் மஞ்சரி இதழில் எழுத்து அலங்காரம் எனக் கவிதையில் ஒரு வகை பற்றி வந்துள்ளது.
மூன்று சொற்களின் நடு எழுத்தைக் செர்த்து ஒரு சொல்லாக்கி, மீதியுள்ள முதல் மற்றும் கடைசி
எழுத்துக்கள் உடைய சொற்களுக்கும் பொருள் விளங்கும் வகையில் அமைவதுதான் அது.
ராசு நல்லூர் ராமச்சந்திரக் கவிராயர் எழுதிய கவிதை ஒன்று அதனை விளக்கும்.
ஒருசமயம் ..அவர் சீதாராமன் என்ற வள்ளலை சந்திக்க சென்றார். தாம் பெரிய கடனாளி
ஆகிவிட்டதால், அவரிடம் உதவி பெறலாம் எனச் சென்றார். அந்த சமயம் அவரைச் சுற்றி நிறைய பேர் இருந்தபடியால் தாம் சொல்ல வந்தது அவருக்கு மட்டும் புரிய வேண்டும் என்று அந்தக் கவிதையைச்
சொன்னார். அவரும் அதனை புரிந்து கொண்டு உதவிகளை செய்தார். அக்கவிதை இதோ
அத்திரம் வேலா வலயம் இராசி யொன்றிற்கு
அமைந்த பெயர் மூன்றினிடையாக்க ரத்தால்
மெத்த நடக்குன்றுனை வந்தடந் தேனிந்த
விதன மகற் றிடு மற்றை எழுத்தோ ராறில்
பத்துடையா னைத் தடித்து பெண் ணாயச் செய்து
பரிவினுகர் வோனிருதாள் பணிந்து போற்றும்
சித்தசதன! தெளிய சிங்கன் தவத்திற் றோன்றும்
சீதாரா மப்ரபல தியாக வனே
அத்திரம் = அம்பு - சுகம் [க]
வேலா வலயம் = வேலை, வலையம், வேலா வலையம் = கடல் [ட]
இராசியொன்று = கன்னி [ன்]
சுகம், கடல், கன்னி ஆகிய சொற்களின் நடு எழுத்துக்கள் சேர்த்தால் கடன். தாம் கடனில் திண்டாடுவதை
இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.
மேற்கண்ட மூன்று சொற்களில் நடு எழுத்துப் போக மீதி எழுத்துக்கள் சும், கல், கனி
சும் பத்துடையானத் தடிந்து
கல் பெண்ணாய்ச் செய்து
கனி பரிவினுகர் வோன்
சும் என்றால் தலை; பத்து தலையுடைய ராவணனைக் கொன்று அகலிகை சாபம் நீக்கி, சபரி தந்த கனியை
உண்டவர் ஆகிய ராமபிரான் அந்த ராமபிரான் பெயர் கொண்டவனான சீதாராமனே எனப் பொருள்.
சிதாராம வள்ளலே, நான் கடனால் அவதிப்படுகிறேன் என்பதே இதன் திரண்ட பொருள். ( நன்றி: வை. தங்கவேலு, திருமங்கலம், மஞ்சரி பிப்ரவரி 2004)
*
திருமங்கையாழ்வாரின் திருவெழுகூற்றிருக்கை என்பது மூன்றாவது ஆயிரமாகிய
இயற்பாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. எழுகூற்றிருக்கை என்பதும் கடினமான பாட்டமைப்பு.
ஏழு, கூற்று, இருக்கை என்று பிரிப்பார்கள். ஏழு அறையாக்கி சிறுமிகளின் பாண்டியாட்டம்
போல கட்டம் வைத்து புகுந்து வெளிப்படும் அமைப்பு. ஒன்றிலிருந்து
ஏழுவரை ஏறியும் இறங்கியும் சொற்கள் அமைக்கப்படும் இதைச் சித்திரக் கவி வகையிலும்
சேர்ப்பார்கள். திருமங்கையாழ்வாரின் எழுகூற்றிருக்கை 46 அடிகள் கொண்டது. நிலைமண்டில
ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது. ஒன்று முதல் ஏழு முடிய ஏறி ஏறி இறங்கி, இறுதியில், ஒன்றாய்
விரிந்து நின்றனை என்று அமைத்திருக்கிறார்.
குடந்தை ஆராவமுதப் பெருமாளைப் பாடியதாகச் சொல்கிறார்கள். இதை, தேர் வடிவத்தில் கோலம்
போல எழுத முடிகிறது. ரதபந்தம் என்றும் பெயர் சொல்கிறார்கள். கவிதைக்கு ஒரு பயிற்சியாக
இருக்கும் இந்தப் பாட்டு ஆழ்வாரின் பல் திறமையைக் காட்டுகிறது. இவ்வாறு 1234567654321 என்று ஏற்ற இறக்கத்தில் அனாயாசமாகக் கவிதை புனைந்திருக்கிறார்.
(ஆழ்வார்கள் ஒர் எளிய அறிமுகம், சுஜாதா).
ரதவடிவில் இந்தபாடல்
இவற்றை படித்துவிட்டு நல்ல சுத்தமான கவிதையை எழுதுங்கள், அல்லது பிள்ளையார் சுழியுடன் நிறுத்திவிடுங்கள்!.