பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 17, 2012

(ஓசி)முனிமலர் 17-2-2012

முன்குறிப்பு:
"சடைத்தனமாக இருப்பதால் இது அநங்கன் எழுதியது என்று நினைக்கிறேன்" என்ற கமெண்ட் வந்தவுடன் அநங்கன் டென்ஷன் ஆகி இவ்வாறு எழுதியிருந்தார்...

அடப்பாவி அநானி. இதை நான் எழுதவில்லை. நான் எழுதியதை தூக்கக் கலக்கமாக இருந்ததால் இட்லி வடை போடவில்லை. இனிமேல் போடுவாரா என்றும் தெரியாது. இட்லிவடை ஏரியாவில் அடிக்கடி ஃபீஸைப் பிடுங்கி விடுகிறார்களாம், பாவம். :-(

அது சரி, எழுத்தின் ஸ்டைலை வைத்து அதை யார் எழுதியிருப்பார்கள் என்று கூட உங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் நான் என்னத்தச் சொல்ல?

அவர் எழுதிய முனி மலர் ( சில வாரங்களுக்கு முன் எனக்கு அனுப்பியிருந்தார் கொஞ்சம் எடிட் செய்து, சில இடங்களில் மாற்றம் செய்து இங்கே... )

நிச்சயம் நான் எழுதிய முனி மலரைக் காட்டிலும் நன்றாக இருக்கும். திட்டுவதாக இருந்தால் என்னை திட்டவும்
நன்றி
இட்லிவடைமுனிமலர் ஆசிரியர் : முனி - பொறுப்பாசிரியர், வெளியீட்டாளர் : இட்லிவடை
சிறப்புச் செய்தியாளர்: அநங்கன்


செய்திகளில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே அல்ல; இறந்தோர் இருப்போர் என எவரையும் குறிப்பன ஆகா ஆகும்.

ஸ்டாலின் திமுக தலைவராகிறார்!
சென்னை: பிப்ரவரி 3 அன்று திமுகவின் பொதுக் குழு கூட இருக்கிறது. அன்று என்ன நடக்கும் என நாடே எதிர்பார்த்திருக்கும் சூழலில் பொதுக்குழுவில் எடுக்கப்பட இருக்கும் தீர்மானங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. பெயர் வெளியிட விரும்பாத கலக முன்னணித் தலைவர் ஒருவர் மூலம் கசிந்துள்ள இத்தகவல்கள் உறுதியானதுதான் என்கிறது நம்பத்தகாத வட்டாரம். இதன்படி ஸ்டாலின் திமுக தலைவர் ஆகிறார். இதுவரை தலைவராக இருந்த கருணாநிதி ஓய்வு பெற இருக்கிறார்.

அழகிரி பொதுச் செயலாளர் - உதய நிதி இளைஞர் அணித் தலைவர்
அழகிரி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். உதய நிதிக்கு இளைஞர் அணித் தலைவர் பதவி வழங்கப்பட இருக்கிறது.
குஷ்பு கொபசெ
கட்சி வளர்ச்சிக்கு தீவிரமாக உழைத்து வரும் குஷ்புவின் “பணிகளை”ப் பாராட்டும் வகையில் அவருக்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட இருக்கிறது.

கனிமொழிக்குக் கல்தா
கனிமொழிக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட வேண்டும் என கருணாநிதி நினைத்தாலும் குடும்ப எதிர்ப்பால் தற்போது அதைக் கைவிடும் நிலையில் இருக்கிறார். இதற்குப் பதிலாக மத்திய அமைச்சர் பதவி அல்லது ஊழல் ஒழிப்புத் துறையின் தலைவர் பதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

தோழிகள் சந்திப்பு?
பிரிந்தது பிரிந்தது தானா, மீண்டும் இணைய மாட்டார்களா, நாம் எப்படிப் பிழைப்பு நடத்துவது என்றெல்லாம் பல குப்பாச்சு-குழப்பாச்சுக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்த வேலையில் உடன்பிறவா தோழிகள் சந்திப்பு இன்று அதிகாலை நிகழ்ந்ததாக தோட்டத்து வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை ரகசியமாக நடந்த சத்ரு-சம்ஹார யாகத்தில் ரகசியமாக முக்காடு போட்டுக் கொண்டு ஒருவர் வந்து கலந்து கொண்டதாக நம்பத்தகாத வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அது யார் என்ற ஆர்வத்தால் ஐந்து வயது பையன் முக்காடை எடுக்க எல்லோருக்கும் அச்‘சோ’ என்று ஆகிவிட்டது. சென்னையில் அதிக பனி பெய்ததால் அவர் அப்படி முக்காடு போட்டுக் கொண்டு வந்து கலந்து கொண்டார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.


இந்தியா முழுவதும் அணு உலைகளை மூட வேண்டும் - வைகோ போராட்டம்
கல்பாக்கம்: கூடங்குளத்தைத் தொடர்ந்து கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தையும் மூட வேண்டும் என வைகோ போராட்டம் நடத்தினார். இந்தியா முழுவதும் உள்ள அணுமின் உலைகள் பாதுகாப்பாற்றவை. அவற்றை உடனடியாக மூட வேண்டும் என்றும் அவர் கூறினார். உடன் இருந்த ராமதாஸூம் அதனை வரவேற்றுப் பேசினார். அப்படியானால் ஏற்கனவே இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழகம் முற்றிலும் இருளில் ஆழ்ந்து விடுமே என்று நிருபர்கள் கேட்டதற்கு ராமதாஸ், “ ரொம்ப நல்லது. டி.வி. இண்டர்நெட், ஃபேஸ் புக், ஈமெயில் எதையும் பார்க்க முடியாது. மக்கள் ரொம்ப நிம்மதியா இருக்கலாம். இனி எல்லோரும் ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டுப் படுத்து விட வேண்டும். எட்டு மணிக்கு மேல் யாராவது வெளியே தலைகாட்டினால் அவர்களை சவுக்கால் அடிக்க வேண்டும். எட்டு மணிக்கு மேல் வீட்டிற்கு வருபவர்கள், ஒவ்வொரு தெரு முனையிலும் நின்று கொண்டிருக்கும் பாமக தொண்டர்களிடம் வாயை ஊதிக் காண்பித்து, ’குடிக்கவில்லை’ என்று உறுதிப்படுத்தப் பட்ட பிறகுதான் வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.

“உங்கள் இயக்கத்தைச் சேர்ந்த சில பெண்களே குடிப்பதாக பேப்பரில் புகைப்படத்துடன் செய்தி வந்ததே என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு, ராமதாஸ் ஆத்திரத்துடன் “அது விஷமிகளின் சதி. குடிப்பது மாதிரி அந்தப் பெண் சாராயத்தை வாயில் ஊற்றிக் காண்பித்தார். அவர் துப்புவதற்குள் புகைப்படக்காரர் படம் எடுத்து விட்டார்” என்றார். ராஜ்யசபாவிற்கு அன்புமணி போன்றவர்களை அனுப்பினால் தமிழர்களின் அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கி விடும்” என்றார் அவர் உறுதியுடன்.

நித்யானந்தா ஆசிரமத்தில் திவாகரன்?
நாடெங்கும் வலைவீசித் தேடப்பட்டு வரும் திவாகரன் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் பதுங்கி உள்ளதாகத தகவல்கள் கசிந்துள்ளது. இதனால் போலீஸ் படை அங்கு விரைந்துள்ளது. அதே சமயம் அவர் ரகசியமாகக் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது என்றும் கூறப்படுகிறது.போலீஸ் தேடும் வேட்டையில் ஈடுப்படுத்தப்பட்ட போது அங்கே கர்நாடகாவை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் பதுங்கி இருந்ததாக தெரிகிறது.

நானும் எம்பி ஆக வேண்டும் - செந்தில் கோரிக்கை
பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் அதிமுக தலைவர் ஒருவருக்கு கோரிக்கைக் கடிதம் எழுதியுள்ளார்.

“தங்கத்தாரகை, பாரதத்தின் வருங்காலப் பிரதமர் அம்மாவுக்கு என் அன்பு கலந்த நன்றி கலந்த மரியாதை கலந்த வணக்கங்கள். அண்ணன் எஸ்.எஸ். சந்திரனை எம்பி ஆக்கினீங்க. அவரு போய் ’எல்லாத்தையும்’ ’பாத்துட்டு’ வந்ததாச் சொன்னார். அண்ணன் ராமராஜனை எம்பி ஆக்கினீங்க. அவரு நான் வாஜ்பாயைப் பாத்தேன்; சோனியா காந்தி அம்மாவைப் பார்த்தேன். லல்லு பிரசாத் யாதவ் வீட்டுல விருந்து சாப்பிட்டேன்னுல்லாம் சொல்றாரு. எனக்கும் அவங்களை எல்லாம் பக்கத்துல இருந்து பாக்கணும்னு ஆசையா இருக்கு. நானும் டெல்லி, ஆக்ரா, தாஜ்மகாலை எல்லாம் பாக்கணும்னு ஆசைப்படறேன். என்னையும் எம்பி ஆக்குங்க” என்று அதில் கோரிக்கை வைத்துள்ளார்.
இது பற்றி நடிகர் கவுண்டமணியிடம் கேட்டதற்கு “அட்ரா சக்கை அட்ரா சக்கை.. ஊஊ.. ஊ... ஊ...” என்றவர், “பார்லிமெண்ட் மண்டையனே பார்லிமெண்ட் போனா வெளங்குமா?” என்று சொல்லி விட்டு போனை கட் செய்து விட்டார்.

மக்கள் பிரச்சனைகளுக்காக மொட்டை அடித்துக் கொள்ள நடிகர்கள் தயாரா? - ராமதாஸ் சவால்
சினிமாவில் நடிப்பதற்காக மொட்டை அடித்துக் கொள்ளும் நடிகர்கள் மக்கள் பிரச்சனைகளுக்காக மொட்டை அடித்துக் கொள்ளத் தயாரா? என்று ராமதாஸ் சவால் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் போதிதர்மன் மக்கள் பேரவை சார்பாக அன்புமணி ராமதாஸூக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட ராமதாஸ், “நாம்தான் போதி தர்மரின் உண்மையான வாரிசுகள் என்பது சீனாக்காரனுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் இங்குள்ள மடத்தமிழர்களுக்கு அது தெரியவில்லை. நாம் அதைத் தெரியப்படுத்த உழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் போதிதர்மனின் ஆட்சி மலரப் பாடுபட வேண்டும். சினிமாவில் துட்டு வாங்கிக் கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு நடிக்கும் நடிகர்கள் நிஜவாழ்வில் முல்லை பெரியாறு, கூடங்குளம் அணுமின் பிரச்சனை, கச்சத் தீவுப் பிரச்சனை போன்றவற்றிற்காக போராடத் தயாரா? நாம் நேற்று இங்கே அந்தப் பிரச்சனைகளை வலியுறுத்தி கோவண ஊர்வலம் நடத்தினோம். தைரியமிருந்தால் நடிகர்கள் இந்தப் பிரச்சனையை வலியுறுத்தி மொட்டை அடித்துக் கொண்டு கோவண ஊர்வலம் போகத் தயாரா?” என்று சவால் விட்டார். மேடையில் இருந்த கோ.க. மணி, காடு வேட்டி குரு, சோடா புட்டி ரவி ஆகியோர் ராமதாஸின் இந்தக் கேள்வியை கை தட்டி ஆரவாரித்தனர்.

ரஜினி ”நச்” பேட்டி
சென்னை விமான நிலையத்தில் நேற்று திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. நிருபர்களின் கேள்விகளும் அவரது பதில்களும்

கே: கோச்சடையான் எப்போது?

ப: விரைவில்

கே: உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது?

ப: ஹா.ஹ்ஹா.. ஹா.. நன்றாக இருப்பதால் தானே உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்.

கே: தனுஷை உலக நாயகன் என்று சிலர் சொல்கிறார்களே!

ப: தனுஷ் நல்ல நடிகர். சிறந்த பாடகர் என்பதை நிரூபித்திருக்கிறார். உலகம் முழுவதும் அவர் புகழ் பரவியிருப்பது எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது.

நிரு 1: நீங்கள் ரசிகர்களைச் சந்திப்பது எப்போது...
நிரு 2: தனுஷுக்கும்....

(கேள்வியை முடிக்கும் முன்பே) ஹே.. ஹே.. அவர் நல்ல நடிகை. நன்றாகப் பாடுகிறார். என் இனிய நண்பரின் மகள். புலிக்குப் பிறந்தது பூனையில்லை என்று நிரூபித்திருக்கிறார்.அவர்களுக்கு என் வாழ்த்துகள். நிச்சயம் 3 படம் வெற்றி அடையும். ரசிகர்களை விரைவில் நேரில் சந்திப்பேன். எல்லோருக்கும் நன்றி. வணக்கம் என்று சொல்லி விட்டு வேகமாக விமான நிலையத்தினுள் சென்று விட்டார். அடுத்த பிளைட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருகிறார் என்ற பலர் பேசிக்கொண்டார்கள்

எழுத்தாளர்கள் சந்திப்பில் அடிதடி - பிரபல எழுத்தாளர்கள் கட்டிப் புரண்டு சண்டை
சென்னை: சமீபத்தில் பிரபல எழுத்தாளருக்கு வழங்கப்பட்ட விருதை ஒட்டி அவருக்கு பிரபலங்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடந்தது. அப்போது திடீரென மேடை ஏறிய ”குட்டி” எழுத்தாளர் ஒருவர் ”இந்த எழுத்தாளர், விருது பெறுவதற்குத் தகுதியானவர் இல்லை; என்னுடைய ஒன்று விட்ட சித்தப்பாவின் தாத்தாவினுடைய ஆவணங்களைக் காப்பி அடித்து புத்தகமாக எழுதி விட்டார்” என்று குறை கூறியதுடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைத் தூக்கித் தாறுமாறாக வீசினார். அது சில வாசகர்கள் தலையில் விழுந்து பலத்த காயத்தை ஏற்படுத்தியதால் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். இதனால் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த மற்றொரு பிரபல எழுத்தாளருக்கும் ’குட்டி’ எழுத்தாளருக்கும் சண்டை மூண்டது. கட்டிப் புரண்டு இருவரும் போட்ட சண்டையில் பிரபல எழுத்தாளரின் முட்டி உடைந்தது. ’குட்டி’ எழுத்தாளரின் சட்டை கிழிந்தது. ஆத்திரத்தில் பிரபல எழுத்தாளர் குட்டி எழுத்தாளரின் காதைக் கடித்து விட்டதால், குட்டி எழுத்தாளர் ”அய்யோ.. அன்னா.. அயல்... இயல்... கயல்.. காவல்..” என அலறிக் கொண்டே வெளியே ஓடித் தப்பித்தார். இதனால் சில மணி நேரம் நிகழ்ச்சி தடைப்பட்டுப் பின் தொடர்ந்தது. இதை எல்லாம் தன் ஐ.போனில் படம் பிடித்துக்கொண்டு இருந்த மற்றொரு எழுத்தாளர் கூடிய சீக்கிரம் இந்த காட்சிகளை தன்னுடைய சீரியலில் சேர்ப்பார் என்று தெரிகிறது.

”மேதை” டிக்கெட் இலவசம்
தான் நடித்த ”மேதை” படத்தின் டிக்கெட்டுகளை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க இருப்பதாக நடிகர் ராமராஜன் தெரிவித்தார். நேற்று சேலத்தில் இலவச ஆடு, மாடு வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாடுகளை வழங்கிய ராமராஜன், பள்ளி மாணவர்கள் மாடு மேய்க்கப் போகக் கூடாது என்று தான் மிகவும் விரும்புவதாகவும், அதற்காக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தான் நடித்த ”மேதை” படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார். அதனைக் கேட்ட மாணவர்கள் சிலர், “ அந்தப் படத்தைப் பாக்கறதுக்கு பதிலா மாடு மேய்க்கவே நாங்க போயிடறோம். எங்களை விட்டுடுங்க..” என்று கதறிக் கொண்டே அந்த இடத்தை விட்டு ஓடினர்.

வள்ளுவர் கோட்டம் இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு
இன்றைக்கு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்படுவதாவது... ”தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகியவற்றை இணைக்கும் மையப்பகுதியாக வள்ளுவர் கோட்டம் இருக்கிறது. ஆனால் அது அங்கு இருப்பதால் பேருந்துகள் சுற்றிச் செல்ல நேரிடுகிறது. சிக்னலுக்காக பேருந்துகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு வள்ளுவர் கோட்டம் இடிக்கப்பட்டு அங்கே புதிய நான்கு வழி மேம்பாலம் அமைய இருக்கிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது. வள்ளூவர் கோட்டம் இடிப்பு பற்றி துக்ளக் சோவிடம் கேட்டதற்கு ஆண்டு விழா நடந்துவிட்டது அதனால் எனக்கு கவலை இல்லை. அடுத்த வருடம் இதை பற்றி கவலைப்படுகிறேன் என்று நக்கலாக பதில் அளித்தார்.

சாலை வரி!? - நமது நிருபர்
தமிழக அரசு தற்போது பெரும் வருமானப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கிறது. சமாதிகளைச் சீர் செய்வது, எம்.எல்.ஏக்களுக்கு லேப்-டாப், மக்களுக்கு ஆடு, மாடு, கோழி, மிக்சி, கிரைண்டர் வழங்குதல் போன்ற திட்டங்களை அறிவித்தபடி செயல்படுத்த போதிய பணம் இல்லை. பேருந்து, மின் கட்டணத்தை உயர்த்தினாலும் வரும் வருவாய் இருக்கும் நிலைமையைச் சீர் செய்யவே போதாது என்பதால் அரசு வருமானத்தைப் பெருக்க அதிரடியாகச் சில திட்டங்களை அறிவிக்க இருக்கிறது. சமீபத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் என அறிவிப்பு வந்ததைப் போலவே சாலை விதிகளிலும் மாற்றம் செய்யப்பட இருக்கிறதாம். எப்படி முக்கிய இணைப்புச் சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள் ”சுங்க வரி” செலுத்துகிறார்களோ அதுபோல இனி முக்கியச் சாலைகளில் நடப்பதற்கும் வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அதன்படி இனி ரங்கநாதன் சாலை, உஸ்மான் சாலை, அண்ணா சாலை, பாண்டி பஜார், மெரீனா போன்ற இடங்களுக்குச் செல்பவர்களில் குழந்தைகள் ரூ 1/, பெண்கள், ரூ. 3/- ஆண்கள் ரூ. 5/- செலுத்த வேண்டி வரலாம் எனத் தெரிகிறது. ”இது மிகவும் அநியாயம். 3/- ரூபாய் என்றால் பரவாயில்லை” என சில பொதுமக்கள் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வள்ளுவர் கோட்டம் இடிப்பு பற்றி கருணாநிதி
வள்ளுவர் கோட்டம் இடிப்பு பற்றிய அரசின் அறிவிப்பு குறித்து கருணாநிதியை நிருபர்கள் இன்று சந்தித்தனர். நிருபர்களின் கேள்விகளும் அவரது பதில்களும்

நிரு : வள்ளுவர் கோட்டத்தை இடிக்கப் போவதாக ஜெ. கூறியுள்ளாரே!

கரு: தமிழனுக்கு சுரணை என்ற ஒன்று இருந்தால், அவன் உடம்பில் தமிழ் ரத்தம் ஓடுவதாக இருந்தால் இந்தச் செய்தியைக் கேட்டுக் கொண்டு அவன் சும்மா இருக்கலாமா? போயஸ் கார்டன் என்ன அமெரிக்காவிலா இருக்கிறது?

நிரு : நீங்கள் செய்த ஒவ்வொரு சிறப்பான பணியையும் ஜெயலலிதா கிடப்பில் போடுவது ஏன்?

கரு: [edited] அடையாளமே தமிழ் மண்ணில் இருக்கவே கூடாது என்பதற்காக சில ஆரியர்கள், தீய சக்திகள், பார்ப்பனப் பதர்கள், கோமாளித் தலையர்கள், ஆரியப் புல்லுருவிகள், சொட்டை மண்டையர்கள் சேர்ந்து சதி செய்கின்றனர். தமிழ் உணர்வுள்ளோர் இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடாக உள்ளது.

நிரு : தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எதிர்பார்த்தபடி மத்திய அரசு உதவவில்லையே!

கரு: நான் நேற்றுக் கூட கடிதம் எழுதியிருக்கிறேன்.

நிரு : பரிதி இளம் வழுதிக்கு மீண்டும் திமுகவில் முக்கிய பொறுப்பு கொடுப்பீர்களா?

கரு : தம்பி வித்தகக் கவிஞர் பா. விஜய் நடிக்கும் படத்திற்கு வசனம் எழுத இருக்கிறேன்.

(காதில் விழவில்லையோ என நினைத்த நிருபர் மீண்டும் அதே கேள்வியைக் கேட்கிறார்.)

நிரு : பரிதி இளம் வழுதிக்கு மீண்டும் திமுகவில் முக்கிய பொறுப்பு கொடுப்பீர்களா?

கரு : வித்தியாசமாக இருக்கட்டுமே என்று அந்தப் படத்தில் தம்பி வைரமுத்துவை பாடல்கள் எழுதச் சொல்லியிருக்கிறேன்.

நிருபர்கள் ஒட்டு மொத்தமாக : பரிதி இளம் வழுதிக்கு மீண்டும் திமுகவில் முக்கிய பொறுப்பு கொடுப்பீர்களா?

கரு: பொறுப்பு என்றாலே அது முக்கியம் தானே ?

மேற்கொண்டு நிருபர்கள் பொதுக்குழு, ஸ்டாலின், கனிமொழி, பதவி என்று கேட்க முனையும் போதே கையாட்டி விட்டு காரில் சென்று விட்டார் கருணாநிதி.


பாராட்டு அநங்கனுக்கு, திட்டு இட்லிவடைக்கு :-)

Read More...

Thursday, February 16, 2012

முனி மலர் 15-2-2012


தமிழருக்கு நோபல் பரிசு!
ப.சிதம்பரத்துக்கு நோபல் பரிசு. நேற்று முன் தினம் டெல்லியில் இஸ்ரேலியத் தூதரக அதிகாரியின் கார் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு தீவிரவாதத் தாக்குதல் என கண்டுபித்த இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு நோபல் பரிசு கொடுக்கலாமா என்று நோபல் பரிசுக் குழு தீவிரமாக யோசிக்கிறது. இந்தப் பரிசு அடுத்த பிலிம் பேர் அவார்ட் கொடுக்கும் நிகழ்ச்சியில் பல நடிகர்கள் முன்னிலையில் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

பார்லிமெண்ட்டில் சோனியா அழுகை!
தன் மூத்த அமைச்சர் ஒருவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்படும் செய்தி கேட்டு சோனியா ஆனந்தக் கண்ணீர் வடித்தார் என்று குர்ஷித் தெரிவித்தார். ஆனால் இந்த செய்தியை முழுமையாக மறுத்த காங்கிரஸ் தலைவர்கள், வெடிகுண்டு வெடிப்பு நடந்த போது புகை வந்தது. அதனால் கண் எரிச்சலில் தண்ணீர் வந்தது என்று எரிச்சலுடன் தெரிவித்தார்கள்.

சோனியா அழுகை, கலைஞர் ஆறுதல்!
சோனியா பார்லிமெண்டில் அழுத செய்திக்கேட்டு கலைஞர் போஸ்ட் கார்ட் ஒன்றில் ஆறுதல் கவிதை எழுதி அனுப்பினார்.
"நேரு" பரம்பரை அழலாமா?
வேர்பட்டுப் பிளக்கின்ற பூமியிலே மழை
நீர் அழுத குடிதண்ணீர் உப்பு கரிக்கும்
தேர்தல் நாடகம் நடத்திப் பார்த்து; ஏமாந்த காரணத்தால்
இரு விழி மூடிக் கொண்டு அழுதுவிட்டார்!
நல்லாட்சி நடக்கும் தமிழகத்தில்
உள்ளாட்சி இடைத்தேர்தல் நடந்ததம்மா!
நீ அழுததைப் பார்த்து நாடு அழுதது
அதனால் கொடுத்தேன்
உங்கள் நினைவாக
இலவச கர்சீப்
அன்பு உடன்பிறப்புகாள், அதற்குள் துள்ளிக் குதிக்காமல் -
அடுத்து வரும் வெற்றிகட்கு இது அச்சாரமென அயராது உழைத்திடுக!
கொடுத்த கர்சீப்பில் மூக்கைச் சிந்தித் தூக்கிபோடுங்க.தோனி சிக்ஸர் அடித்த ரகசியம்!
போன கிரிக்கெட் போட்டியில் தோனி சிக்ஸர் அடித்துப் பலரையும் ஆச்சரியப்படுத்தினார். நீங்கள் கடந்த இரண்டு போட்டிக்களில் அபாரமாக விளையாடும் ரகசியத்தை சச்சினிடம் சொன்னால் அவரும் அடிப்பார் இல்லையா என்று கேட்டதற்கு தோனி சொன்ன பதில்: "விளையாடும் போது பிசிசிஐ-ஐ நினைத்தேன். அவர்கள் மீது உள்ள கோபத்தில் அடித்தேன்" என்று பதில் சொன்னார். இதைக் கேட்ட சச்சின் பிசிசிஐ படத்தை கிரிக்கெட் மட்டையில் ஒட்டி விட்டு விளையாடலாம என்று யோசிக்கிறார். மட்டையில் பிசிசிஐயின் படத்தை இந்திய அணியினர் மட்டுமே ஒட்டலாம் என்றும் மற்றவர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படு என்று ஐசிசி அறிவித்துள்ளது.

ஆங்கில ஹிந்து மீது முட்டாள்கள் அமைப்பு போராட்டம் தமிழ் ஹிந்து ஆதரவு?
ஆங்கில நாளேடான ஹிந்து தன் விளம்பரத்தில் டைம்ஸ் பத்திரிக்கை படிப்பவர்கள் முட்டாள்கள் என்று கூறியுள்ளது. ஆங்கில ஹிந்துவை அதிகமாக படிக்கும் தமிழகள் அடிக்கடி போராட்டம் நடத்தும் நடிர்களுடன் முட்டாள்கள் அமைப்பு என்ற அமைப்புடன் சேர்ந்து போராட்டம் நடத்த உள்ளார்கள். இதற்கு இடையில் தமிழ் ஹிந்துவிற்கும் ஆங்கில ஹிந்துவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது மற்ற மதத்தினர் செய்யும் சூழ்ச்சி என்று கட்டுரை வெளியிட்டுள்ளார்கள். கூடிய சீக்கிரம் இந்த மாதிரி கட்டுரையின் தொகுப்பை ஆங்கிலத்திலும் பிறகு தமிழில் மொழிபெயர்த்தும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இந்தப் புத்தகத்தின் விமர்சனத்தை சரக்கு மாஸ்டர் ஆழம் இதழில் எழுதுவார். அது தான் மரபு.

உலகில் பெரிய பணக்காரர் ஆனார் மிஸ்டர் குடிமகன்!
உலக பணக்கார தரவரிசையில் குடிமகன் என்ற தமிழன் அம்பானியை விட 100 கோடி அதிகம் சம்பாதித்து முதல் இடத்தை பெற்றார். இவர் உலகில் 7ஆம் இடத்தில் இருக்கிறார். 1992ல் இவர் ஒரு பைக் வைத்திருந்தார், பிறகு 2002ல் கார் வாங்கினார், பிறகு 2012 இவர் வீட்டில் 24மணி நேரம் கரண்ட் இருந்த காரணத்தால் இவர் தான் பெரிய பணக்காரர் என்று முடிவு செய்யப்பட்டது. தமிழ் நாட்டில் தொடர்ந்து கரண்ட் கட் நடைபெற்றால் இந்த குடிமகன் உலக வரிசையில் முதல் இடத்தை பெற்றிவிடுவார் என்று சொல்லுகிறார்கள்.

அல்வா கொடுத்தால் சாப்பிடுவீர்களா?
நேற்று மத்திய அமைச்சர் ஒருவர் மலேசியாவுக்கு 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த பிறகு நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார். அவரிடம் பிளைட்டில் என்ன சாப்பிட கொடுத்தார்கள் என்று கேட்டதற்கு "நூடுல்ஸ், மற்றும் ஜாங்கிரி" என்றார். அப்போது அங்கிருந்த நிருபர் ஒருவர் "அல்வா" கொடுத்தால் சாப்பிடுவீர்களா என்று கேட்டதற்கு "கொடுத்தால் சாப்பிடுவேன்" என்றார். மாம்பழம் என்றால் தம்பியுடன் பங்கு போடலாம் அல்வாவை பங்கு போட முடியுமா? என்று பதில் கேள்வி கேட்டுவிட்டுப் போனார்.


எங்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள் -குரங்குகள் போராட்டம்!

இந்து முன்னணி மாவட்ட செயலாளர், ஒன்றிய தலைவர், ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் முன்னிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு கழுதை, நாய்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதைப் பார்த்த ஹிந்துக் குரங்குகள் எங்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் சில குரங்குக் குட்டிகளையும் பார்க்க முடிந்தது. இதைப் பார்த்த ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்கள் பால்ய விவாகம் கூடாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.


கோச்சடையானிலிரிந்து ஏன் சிநேகா நீக்கம்?

வை திஸ் கொலைவரி டியின் மாமனார் நடிக்கும் கோச்சடையானிலிரிந்து நடிகை சிநேகா ஏன் நீக்கம் என்ற கவலையளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பட கதை விவாதத்தின் போல பலர் 'புல்'லாக இருந்த போது நடிகை சிநேகவிடம் நீங்கள் நடிக்கும் விளம்பரத்தில் அந்த சப்பாத்திக்கு பேர் என்ன என்று அசிஸ்டண்ட் கேட்க அவர் அது 'புல்'கா என்று பதில் சொல்லியுள்ளார். மூத்த இயக்குனர் காதில் வெறும் புல் மட்டும் காதில் விழ தன்னை தான் கிண்டல் அடிக்கிறார் என்று நினைத்து அவரை நீக்கியுள்ளார். கோச்சடையான் படம் வர இன்னும் பல வருடங்கள் ஆகும். அதனால் நான் நிச்சயம் அதே ஹீரோவுக்குப் பாட்டியாகவாவது நடிப்பேன் என்று சிநேகா நம்பிக்கை தெவித்துள்ளார்.


விஜயகாந்த் அதிர்ச்சி!

அதிமுக தொண்டர் ஒருவருக்கு நேற்று ஒன்பது மாசத்தில் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு "ஜெயா" என்று பெயர் வைத்த அந்தத் தொண்டர் அளித்த பேட்டி "அவங்களும் 10 மாசம்தான்... நாங்களும் 10 மாசம்தான்" என்று சில நாட்களுக்கு முன் சட்டசபை முன்பு விஜயகாந்த் பேட்டி அளித்தார். இப்போது எனக்கு 9 மாசத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு விஜயகாந்த் என்ன பதில் கூறுவார் என்று ஆவேசமாக கேட்டுள்ளார். பன்னும் ரொட்டியும் சாப்பிட்டுக்கொண்டு இருந்த விஜயகாந்திடம் இதை பற்றி கேட்டதற்கு "அதிர்ச்சியாக இருக்கிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் மின்வெட்டால் நடந்த விபரீதம் இது" என்று கூறியுள்ளார்!


பச்சை சைடில்..

Read More...

Monday, April 04, 2011

முனிமலர் 4-4-2011

அம்மா ஜெயித்தால் ? ... வழக்கம் போல விபரீத கற்பனை இது உண்மையானால் எங்களால் ஒன்று செய்ய முடியாது... மதிமுக & அதிமுக கூட்டணி போல மலர் தயாரிப்பு அநங்கன் & இட்லிவடை கூட்டணி ....

ஸ்ரீ ரங்கத்தில் ஜெயலலிதா அமோக வெற்றி

மே, 14. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆனந்தை எதிர்த்து 1,76,643 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ( கூட்டு தொகை 9 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஸ்ரீ ரங்கம் என் தாய் மண். அதன் மக்கள் என் சொந்த மக்கள். அதனால்தான் பெரும் வாக்கு வித்தியாசத்தில் என்னை அவர்கள் ஜெயிக்க வைத்துள்ளனர். இந்த வாக்கு ஸ்பெக்ட்ரம் வாக்கு. ஸ்ரீரங்கம் மக்களுக்கு என் நன்றி” என்றார்.

கவிஞர் தாமரைக்கு இரண்டாமிடம்

ஜெயலிதாவை எதிர்த்து "தமிழ் நேர்மையாளர் கூட்டமைப்பு" சார்பில் போட்டியிட்ட கவிஞர் தாமரை 31,181 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பெற்றார். திமுக வேட்பாளர் ஆனந்தை விட 21180 வாக்குகள் இவர் அதிகம் பெற்றார். ஆனந்த் 10001 வாக்குகள் பெற்றார்.

கருணாநிதி போராடி வெற்றி

திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு. கருணாநிதி பெரும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பெற்றார். முதல் சுற்று எண்ணிக்கையின் போது அதிமுகவின் குடவாசல் ராஜேந்திரன் முன்னணியில் இருந்தார். அடுத்தடுத்த சுற்றுக்களிலும் அவரே முன்னணியில் இருந்தார். இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கருணாநிதி 176 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பெற்றது. மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும் என்ற குடவாசல் ராஜேந்திரனின் கோரிக்கை தேர்தல் கமிஷனால் நிராகரிக்கப்பட்டது. அதுகுறித்து வருந்திய அவரிடம், தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜெயலிதா, “கவலைப்படாதீர்கள். நீங்கள் தான் உண்மையாகவே வெற்றி பெற்றிருக்கிறீர்கள். உங்கள் உழைப்பிற்கு சரியான பரிசு காத்திருக்கிறது. திருவாரூரே உங்களுக்குத்தான்” என்று ஆறுதல் கூறினார். இதனால் அவரும், அதிமுக தொண்டர்களுடம் உற்சாகத்தில் உள்ளனர்.

விஜயகாந்த் வெற்றி

ரிஷிவந்தியம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிவராஜை விட விட 93112 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். இது பற்றி அவர் நிருபர் சந்திப்பில் “போட்டியிட்ட 41 இடங்களில் 34 இடங்களில் தேமுதிக வென்று தான் ஒரு பலமான கட்சி என்பதை நிரூபித்துள்ளது. நாங்கள் தோழமைக் கட்சியாகவும் ஆக்கபூர்வமான எதிர்கட்சியாகவும் செயல்படுவோம்” என்றார். ”நீங்கள் துணை முதல்வர் பதவி ஏற்பீர்களா?” என்று நிருபர்கள் கேட்டதற்கு, “நான் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளேன். மக்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படிச் செய்வேன். தன்மானத்திற்காகப் பதவியை அடகு வைக்க மாட்டேன்” என்றார் கண்கள் சிவக்க, ஆவேசத்துடன். உடனிருந்த பண்ருட்டி ராமசந்திரன் ”அது குறித்து பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்” என்றார். நடிகர் அருண்பாண்டியன், மாஃபா பாண்டியராஜன் போன்ற தேமுதிகவின் வெற்றி வேட்பாளர்களும் உடன் இருந்தனர்.

”கூட்டணி கட்சிகளுக்கு மந்திரிசபையில் இடம் கிடையாது” - ஜெயலலிதா திட்டவட்ட அறிவிப்பு

மே,14. போட்டியிட்ட 160 தொகுதிகளில் 148 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் வெற்றி குறித்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜெயலலிதா ”கூட்டணிக் கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் கிடையாது” என திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது குறித்துப் பேசிய அவர், ”மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்பது எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து பின்பற்றப்படும் கழகக் கொள்கை. அதில் அணுவளவும் மாற்றமில்லை” என்றார்.

இது குறித்து தேமுதிக என்ன முடிவெடுக்கும் என தொண்டர்கள் ஆர்வத்துடன் கட்சி அலுவலகத்தில் குவிந்ததால் கோயம்பேட்டில் நேற்று பெரும் கிள்ளு முள்ளு ஏற்பட்டது. வெளியூருக்குச் செல்லும் பயணிகள் ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். அதனால் அவர்கள் விஜயகாந்தின் திருமண மண்டபத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு இலவசக் குடிநீரும், பிரியாணியும், தயிர்சாதப் பொட்டலமும், ஐஸ்க்ரீமும் வழங்கினார் விஜயகாந்த். இலவசமாக அதை வாங்கித் தின்றுவிட்டு சிலர் உற்சாக மிகுதியில் “வருங்கால முதல்வர், இலவச நாயகன் விஜயகாந்த் வாழ்க, வாழ்க” என கோஷம் எழுப்பினர். இலவச பிரியாணியோடு இலவச குவார்ட்டரும் தருவதாக வாந்தி பரவியதால் பெருங்குடி மக்கள் பலரும் திரண்டு வந்தனர். அதனால் கோயம்பேடு ஏரியாவே பரபரப்புடன் காணப்பட்டது.

வை.கோ. வாழ்த்து

மே.14. தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதை அறிந்த வைகோ அவருக்கு ஃபேக்ஸ் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அமெரிக்காவில், தனது மகள் வீட்டில் இருக்கும் வைகோ, தான் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ஜெயலிதாவின் வெற்றி அவரது துணிச்சலையும், தன்னம்பிக்கையையும் பறை சாற்றுவதாகவும், இந்த அன்புச் சகோதரனின் அன்பும், ஆதரவும் அவருக்கு எப்போதும் உண்டு என்றும், மக்களுக்கு இலவசங்கள் பல தந்து நீடித்த நல்லாட்டரி தர வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

சசிகலா துணை முதல்வர் ?

தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் சில சட்ட விதிகளின் படி சசிகலா துணை முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார் என போயஸ் பட்சி கூறுகிறது. அரசியல் சட்ட விதி 82/ஏ14ன் படி சசிகலா துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும் பின்னர் அவர் ஏதேனும் ஒரு சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்கிறார் நமது சிறப்பு நிருபர்.

இதுபற்றி விஜயகாந்தின் கருத்தை அறிய பல முறை நமது சிறப்பு நிருபர் தொடர்பு கொண்ட நிலையில், “இந்த எண் உபயோகத்திள் இல்ளை” என்ற கரகரப்பான ஆண்குரலே திரும்பத் திரும்பப் பதிலாக வந்ததால் நிருபர் குழம்பினார்.

”புரட்சித் தாய்” ஜெயலலிதாவுக்கு வீரமணி பாராட்டு

தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று ஜெயலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடந்த அந்தச் சந்திப்பில் பேசிய வீரமணி ”மணியம்மை போல் மாதர்குல மாணிக்கமாக ஜெயலலிதா திகழ்வதாகவும், பல்வேறு சதிகளையும், சிக்கல்களையும் எதிர் கொண்டு, சமூக நீதி காத்து வென்ற அவரைக் காணும் போது புறநானூற்றின் புரட்சித் தாய் தான் தனது நினைவுக்கு வருவதாகவும் குறிப்பிட்டார். பத்திரிகையாளர் சோ. ராமசாமி, இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகரன், ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, ச.ம.க. தலைவர் சரத்குமார், புதிய தமிழகம் கிருஷ்ணாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உடன் இருந்தனர்.

ராகுல் சந்திப்பு?

டெல்லியின் நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து வந்த தகவல்படி விரைவில் ஜெயலலிதாவை ராகுல் காந்தி சந்திப்பார் என்றும், மத்திய மந்திரி சபை விரிவாக்கம் குறித்து அவருடன் பேசுவார் என்றும் தெரிய வருகிறது. அதிமுகவை காங்கிரஸிற்கு இழுப்பதன் மூலம் தேர்தலில் சீட் ஒதுக்குவதில் தங்களுக்கு பலவிதங்களிலும் குடைச்சல் கொடுத்த திமுகவிற்கு ராகுல் செக் வைப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் புதிய கவர்னராக ஜெயலலிதாவின் அன்பிற்குரிய வடநாட்டு காங்கிரஸ் தலைவர் (அம்பிகா சோனி) யாரேனும் நியமிக்கப்படுவார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அழகிரி அமெரிக்கா பயணம்

தான் நிறுத்திய வேட்பாளர்கள் பலரை தனது ’பல’த்தால் வெற்றி பெற வைத்த அழகிரி, ஓய்விற்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். புதிய தொழில் தொடங்குவதற்காகவே அவர் அமெரிக்கா சென்றுள்ளார் என்றும், ஓபாமாவைச் சந்தித்து மதுரைக்கு வர அழைப்பு விடுக்கவே அவர் அமெரிக்கா சென்றுள்ளார் என்றும், ஓய்வெடுக்கச் சென்றுள்ளார் என்றும் பலதரப்பட்ட தகவல்கள் கூறப்படுகின்றன.

கார்த்திக் எங்கே?

நா.ம.க. என்னும் புதிய கட்சியை உருவாக்கித் தேர்தலைச் சந்தித்த நடிகர் கார்த்திக் படு தோல்வி அடைந்தார். இந்நிலையில் தேர்தல் முடிவு பற்றி அவரது கருத்தை அறிய அவரைத் தொடபு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. வீட்டிலும் அவர் இல்லை. ஓய்வெடுப்பதற்காக கார்த்திக், காஷ்மீர் சென்றிருப்பதாக அவரது நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.

சாயிபாபாவிடம் ஸ்டாலின் ஆசி

மே, 14. திமுக படு தோல்வியைச் சந்தித்தபோதும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், பி.ஏ. வெற்றி பெற்றார். அவர் நேற்றிரவு புட்டபர்த்தி சாயிபாபாவைச் சந்தித்து தனது வெற்றிக்காக ஆசி பெற்றார். அப்போது அவர் உடல்நலம் பற்றி விசாரித்ததாக தெரிகிறது.

தமிழன் ஒரு முட்டாள் - கருணாநிதி கடும் தாக்கு

மே.14. நடந்து முடிந்த தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக படு தோல்வியைச் சந்தித்துள்ளது. 45 தொகுதிகளில் மட்டுமே அக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து நிருபர்களின் கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில்.

கே: திமுக கூட்டணி படு தோல்வியைச் சந்தித்துள்ளதே!

ப: தோல்வி ஒன்றும் கழகத்திற்குப் புதிதல்ல. அண்ணாவே ஒரு காலத்தில் தோற்றுப் போனவர்தான். காமராஜர் கூட தோற்றுப் போனவர் தான். இந்த தோல்வி கமா(ராஜர்) தான் புல்-ஸ்டாப் இல்லை. ஆனாலும் இதைத் தோல்வி என்பதை விட ஆரியச் சதி, நம்பிக்கைத் துரோகம் என்றுதான் சொல்ல வேண்டும். கழகத்துடன் கூட்டணி அமைத்திருந்த சில கட்சியினர் கடைசி நேரத்தில் ஆரிய, பார்ப்பன கைக்கூலிகளின் சதிக்கு இரையாகி கழகத்துக்கு எதிராகச் செயல்பட்டனர். அதனால் தான் தோல்வியுற நேர்ந்தது.

கே: அவர்கள் யார்?

“கை” புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா? ”களை”களை விடுத்து மரங்களை வெட்டுவது யார் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியுமே!

கே: பல இலவசத் திட்டங்கள் அறிவித்தும் மக்கள் திமுகவுக்கு ஆதரவளிக்காதது ஏன்?

ப: (கடுகடுத்த முகத்துடன்) தமிழன் ஒரு சோற்றாலடித்த பிண்டம். மரமண்டை. அவனுக்கு என்னதான் தங்கத் தட்டில் உணவு பரிமாறினாலும், அந்த நன்றியை மறந்து ....... இலைச் சோற்றைத் தேடி ஓடும் முட்டாளாகத்தான் அவன் இருக்கிறான். மேனா மினுக்கிகளின் மின்னலங்காரப் பேச்சிற்கு மயங்கி ஏமாந்து விடுவதே அவனது வாடிக்கையாக இருக்கிறது. தமிழனையும், தமிழ்நாட்டையும் இனி எந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

கே: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தினால் தான் இந்தத் தோல்வி என்று கருதுகிறீர்களா?

ப: (கோபத்துடன்) ’ஸ்பெக்ட்ரம்’ என்பதே ஒரு போலியான பிரச்சனை. கழகத்தை வீழ்த்த பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கிய மாயைதான் ஸ்பெக்ட்ரம். திமுகவை நிர்மூலம் செய்ய வடநாட்டு ஊடகங்களும், ஆரிய சக்திகளும் ஒன்று சேர்ந்து செய்த சதி. ஒருவேளை அப்படியே ஊழல் நடந்திருந்தாலும் ’ராசா’ ஒருவர் மட்டுமே அதனைச் செய்திருக்க முடியுமா? யார், யார் “கை”கள் எல்லாம் அதில் உள்ளன என்ற விவரங்களை, சிறையிலிருந்து மீண்டு வந்து விரைவில் ’ராசா’ உங்களுக்குத் தெரிவிப்பார்.

கே: யார் எதிர்கட்சி தலைவர் ?
கட்சி செயற்குழு கூடி என்னை எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்க உள்ளார்கள். ஸ்டாலின் துணை எதிர்கட்சி தலைவர்.

கே: தேர்தலில் வென்ற ஜெயலிதாவுக்கு உங்கள் செய்தி என்ன?

ப: ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்; வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்பதைத் தவிர வேறு எதையும் சொல்ல நான் விரும்பவில்லை. நோ கமெண்ட்ஸ்

கே: இனி என்ன செய்ய இருக்கிறீர்கள்?

ப: (ஆத்திரத்துடன்) என்னவோ செய்யப் போகிறேன். உனக்கென்ன? நீ அந்தக் கட்சி ஆளா? உன் வீட்டிற்குச் சாப்பாட்டிற்கு வரமாட்டேன். போய்யா... சொல்லிவிட்டு கலைஞர் கடுகடுத்த முகத்துடன் காரில் ஏறிச் சென்றார்.

ராமதாஸ் வாழ்த்து

மே.14. திமுக கட்சியில் 30 தொகுதிகளில் போட்டியிட்டு 21 தொகுதிகளில் வென்றிருக்கும் ராமதாஸ் அதிமுக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இன்று மதியம் அவர் விடுத்த அறிக்கையில், “அதிமுக மகத்தான வெற்றி அடையும் என்பது நான் முன்னமே எதிர்பார்த்ததுதான். அதிமுவுடன் கூட்டணி அமைக்கவே பாமக பொதுக்குழு முடிவெடுத்திருந்தது. எத்தனை தொகுதிகள் என்று பேசியும் கூட முடித்து விட்டிருந்தோம். பொதுக்குழு பழைய டப்பாவில் ஓட்டு போட்டது ( என்று ஒரு டப்பாவை தூக்கி காண்பிக்கிறார்). ஆனால் பத்திரிகை கொடுக்கப் போன இடத்தில் எங்களை மிரட்டிக் கையெழுத்து வாங்கி விட்டனர். அதனால்தான் திமுக கூட்டணி அமைந்தது. அதிமுக கூட்டணிக்கு எங்கள் நிபந்தனையற்ற ஆதரவு எப்போதும் உண்டு. அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட், மந்திரி பதவி இது மட்டும் கிடைக்க ஏற்பாடு செய்தால் போதும். வேறு எந்த நிபந்தனையும் இல்லை. அன்பு சகோதரி ஜெயலலிதாவுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். உடன் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளனும் ராமதாஸ் கூற்றை ஆதரித்துப் பேசினார். கையில் மண்வெட்டியுடன் காடுவெட்டி குரு உடன் இருந்தார்.

ஜெ-எஸ்.வி.சேகர் சந்திப்பு

மே.14. ஜெயலலிதாவை நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். மீண்டும் அதிமுகவில் இணையப் போகிறீர்களா என்ற கேள்விக்கு அவர், மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பு இது என்றும், தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஜெயலலிதாவை வாழ்த்தவே தாம் வந்ததாகவும் குறிப்பிட்டார். தேர்தலில் காங்கிரஸ் கட்சி உங்களை ஏன் சரிவரப் பயன்படுத்தவில்லை, சீட் அளிக்கவில்லை என்ற கேள்விக்கு அவர், “காங்கிரஸ் பெரிய கட்சி. கோஷ்டிகள் நிறைய இருக்கின்றன. அந்தந்தக் கோஷ்டியைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்புத்தர வேண்டும் என்பதற்காகவே எனக்கு வாய்ப்புத்தரப்படவில்லை ” என்றார். நீங்கள் மயிலையில் தீவிரமாகப் பிரசாரம் செய்தும் காங்கிரஸ் ஏன் தோற்றது என்ற கேள்விக்கு, ”நான் பிரச்சாரம் செய்ததால்தான் தோற்றது என்கின்றீர்களா? ஒருவேளை எனக்கு சீட் கொடுக்காததினால் கூடத் தோற்றிருக்கலாம் இல்லையா?” என்றார் நகைச்சுவையாக. மேலும் கேள்விகள் கேட்க நிருபர் முற்பட்டதற்கு தான் அவசரமாக ‘அல்வா’ நாடகம் போட வாணி மஹால் செல்ல வேண்டி இருப்பதால் பிறகு போன் செய்யுமாறும், எப்போதும் நான் தான் போன் எடுப்பேன் என்றும் கூறினார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸின் தலைவர்?

நடந்து முடிந்த தேர்தலில் திமுக + காங்கிரஸ் கூட்டணி பெருந்தோல்வியைச் சந்தித்துள்ளது. இதற்கு செயல்பட முடியாத தலைவராக இருந்த தங்கபாலுதான் காரணம் என்றும், தார்மீகப் பொறுபேற்று அவர் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். ஃபேக்ஸ் மற்றும் தந்தி மூலம் அவர்கள் இத்தகவலை சோனியாவுக்குத் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றப்படலாம் என்றும் இளங்கோவனோ, வசந்த & கோ வசந்தகுமாரோ அல்லது வாசன் ஆதரவாளர் யாரேனுமோ தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் காங்கிரஸ் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்று காலை தங்கபாலு எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் என இருதரப்பினரும் சத்தியமூர்த்தி பவன் முன்பு ஒன்று கூடி ஒருவர் வேட்டியை ஒருவர் கிழித்துக் கொண்டு அங்கும் ஓடி, உரக்கக் கூச்சலிட்டனர். இதைப் படம் பிடிக்கச் சென்ற கேமரா மேனின் பேண்ட் அவிழ்ந்தது. அவர் தப்பித்தோம், பிழைத்தோம் என ஒரு கையில் கேமராவையும், மறுகையில் அண்டர் வேரையும் பிடித்துக் கொண்டு சாலையில் ஓடியது பார்க்கவே பரிதாபமாக இருந்தது. காங்கிரஸார் சிலர் அந்தக் கேமரா மேனைத் துரத்திக் கொண்டு ஓடினர். ஏதோ சினிமா ஷூட்டிங்தான் நடக்கிறது என நினைத்து மக்கள் வேடிக்கை பார்த்தனர்.


”நோ கமெண்ட்ஸ்” ரஜினி

மே.13. நேற்று திருவல்லிக்கேணி ராகவேந்திரா கோயிலுக்கு ரஜினி சாமி கும்பிட வந்திருந்தார். செய்தி அறிந்து ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் திரண்டனர். அவர்களிடம், நீண்ட நாளைக்குப் பிறகு இங்கு வந்து சாமி கும்பிடுவது மனதிற்கு மிகவும் நிறைவாக இருப்பதாக ரஜினி தெரிவித்தார். ”விருந்து எப்போது?” என்று ஒருபுறம் ரசிகர்களும், “ஜெயலலிதா வெற்றி குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று பத்திரிகையாளர்களும் ஒரே சமயத்தில் கேட்டனர். “வாழ்த்துக்கள்” என்று முதலில் கூறியவர், பின்னர் ”நோ கமெண்ட்ஸ்” என்று கூறி விட்டுக் காரில் பறந்து விட்டார். எதற்கு எந்த பதில் என்று தெரியாமல் பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் குழம்பி நின்றனர். ரஜினி இந்திய கிரிக்கெட் அணி அணியும் நீல நிற T-Shirtடன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ - அஜீத், விஜய் சந்திப்பு

தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற ஜெயலலிதாவை நடிகர்கள் அஜீத் மற்றும் விஜய் குடும்பத்துடன் நேற்றுச் சந்தித்தனர். தங்கள் வெளிநாட்டுப் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வந்த இருவரும் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்து கூறியதுடன், அவர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர். நடிகை குஷ்பு மற்றும் சுந்தர்.சி ஆகியோர் விரைவில் ஜெயலலிதாவைச் சந்திப்பார்கள் என சினிமா வட்டாரம் கூறுகிறது.

”கஜானா காலி?”

தமிழக அரசின் கஜானா கிட்டத்தட்ட காலியாக இருப்பதாகவும் அதில் எலி புழுக்கை மட்டும் தான் இருக்கிறது எனவே தேர்தல் அறிக்கையில் கூறியபடி பல நலத்திட்ட உதவிகளை ஜெயலலிதா அரசு செயல்படுத்துவது மிகவும் கடினம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிதி ஆதாரத்தைப் பெருக்க என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என ஜெயலலிதா நேற்று முக்கிய அதிகாரிகளுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். சசிகலா, மகாதேவன், சகாதேவன், தினகரன், பாஸ்கரன், சுதாகாரன், ராமன், லட்சுமணன், கோவிந்த்ன், ராவணன், ராமச்சந்திரன், ராமசாமி, கோவிந்தசாமி, பெருமாள்சாமி, முத்துசாமி, முனியசாமி ஆகியோர் அதில் கலந்து கொண்டனர். இறுதியில் ஒவ்வொரு எம்.எல்.ஏக்களும் 100 ஆடுகள் மற்றும் 1000 கோழிகளை வளர்த்து மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றும், மந்திரிகளாக நியமிக்கப்படுவோர் நூறு மாடுகளை மேய்த்துப் பராமரித்து தங்கள் தொகுதி மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஒருவேளை ஆடு, மாடுகள் பற்றாக்குறை ஏற்பட்டால் அவற்றை பீகாரிலிருந்து இறக்குமதி செய்வோம் என அத்துறைக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட இருக்கும் பசுநேசன் நடிகர் ராமராஜன் தெரிவித்தார். பசு மாடு வளார்ப்பு திட்டம் பற்றி விரைவில் பி.ஜே.பி முக்கிய தலைவர் அத்வானியுடன் பேசுவார் என்று தெரிகிறது. பேசாமல் பசுவிற்கு பதில் வெள்ளை பன்றி கொடுத்துவிடலாம் என்ற முடிவிலும் இருக்கிறார் ஜெயலலிதா. இது குறித்து ஏற்கனவே கிழக்கு பதிப்பகம் உரிமையாளர் பத்ரியிடம் பேசவிருக்கிறார் என்கிறது கட்சி வட்டாரம்.

”முதல்வருக்குப் பாராட்டு” ராமநாராயணன் அறிவிப்பு

திரைப்பட கலைஞர்கள் அடுத்த வாரம் ஒன்று கூடி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறார்கள். எதற்கு என்ற விவரம் பிறகு அறிவிக்கப்படும். விஜய் தலைமை தாங்க, மற்ற நடிகர்கள், நடிகைகள் கலந்துக்கொள்கிறார்கள். விசு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று தெரிகிறது. குஷ்பு, விவேக் வடிவேலு கலந்துக்கொள்வார்களா ? என்று தெரியாத நிலையில் தமிழக மக்கள் குழம்பி போய் இருக்கிறார்கள். விஜய்காந்த் அடுத்த பட படப்பிடிப்பில் இருப்பதால் அவர் கலந்துக்கொள்ளுவதும் சந்தேகம் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். நிருபர்களிடம் பேசிய ராமநாராயணன் "தேதி அம்மா அனுமதி பெற்ற பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.

வடிவேலு உணர்ச்சி பேட்டி:
நடிகர் வடிவேலு, தான் ஒரு நடிகர் என்ற முறையில் விஜயகாந்தை சும்மா எதிர்த்துப் பேசுவது போல நடித்துப் பிரசாரம் செய்ததாகவும், விஜயகாந்த் தனது அண்ணன் போன்றவர். "எங்கள் அண்ணன்" படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது என்றும் நாங்கள் ஒரே ஊர்க்காரர்கள் என்றும் சொன்னார். தண்ணி கமெண்ட் பற்றி எடக்கு மடக்கு நிருபர் கேட்ட் கேள்விக்கு "தண்ணி அடிப்பது என்ன தப்பா ? அரசே டாஸ்மார்க் கடைகளை நடத்துகிறார்கள். அப்படி என்றால் அது தப்பு இல்லை என்று தானே அர்த்தம் ?" விரைவில் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று சேர்ந்து தண்ணி அடிப்பேன் இதில் என்ன தப்பு ? இரண்டு நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் தண்ணி ஒரு அங்கம். ஏன் இந்தியா ஜெயித்த போது சச்சின் மைதானத்தில் குடித்தாரே ? அதனால் தண்ணி அடிப்பது தப்பில்லை. தனக்கும் விஜயகாந்திற்கும் பிரச்சனை ஏற்பட சிங்கமுத்துதான் காரணம் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். ’அம்மா’ என்றைக்குமே தனக்கு “அம்மா” தான் என்றும், விரைவில் அம்மாவைச் சந்தித்து தாம் ஆசி பெற இருப்பதாகவும் கூறினார்.

இலக்கிய பயணம் தொடரும்.. கனிமொழி அறிவிப்பு

தான் அரசியலிலிருந்து விலகப் போவதாக கனிமொழி அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதிய 100 நூல்களின் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நேப்பியர் பாலம் அருகே நடந்தது. அதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கனிமொழி, தான் அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் ஒருவித சலிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இனி அரசியலில் இருந்து விலகி, சாருவைப் போல தீவிர இலக்கியம் படைக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். ”சாருவைப் போல நானும் அடுத்த ஆண்டுக்குள் நூறு கவிதை நூல்களை, இல்லை... இல்லை... 108 கவிதை நூல்களை எழுதி வெளியிடப் போகிறேன்” என்று அவர் அறிவித்ததும், உடனிருந்த பதிப்பாளர் அதிர்ச்சி அடைந்தார் (அவருக்கு பேப்பர் கவலை.)உடனே அதைக் கரவொலி எழுப்பி ஆமோதித்த சாரு, “கனிமொழி சிறந்த கவிஞர் . எரிகா யங் கவிதைகளை விட கனிமொழியின் கவிதைகள் ஆயிரம் மடங்கு உயர்வானவை. அவருக்கு நிச்சயம் ஆஸ்கர் பரிசு கிடைக்கும்” என்று கூறினார். கடைசியாக நன்றியுரை கூற வந்த வந்த மிஷ்கின் தான் அடுத்து எடுக்க போகும் படம் பற்றி பேசிவிட்டு நன்றியுரையாற்றினார்.

”அயல்நாட்டு சதி” சுப்ரமண்ய சாமி பரபரப்புக் குற்றச்சாட்டு

ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமண்ய சாமி, பாரதிய ஜனதாக் கட்சியுன் கூட்டணி அமைத்து இத் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் அவர் கட்சி தோல்வி அடைந்ததுடன், அவரது வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். நேற்று இரவு அமெரிக்கா புறப்படுமுன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ”இந்த எலக்‌ஷன் செல்லாது. அதிமுக, திமுக இரண்டு பேரும் ஒண்ணு சேந்து நிறைய தில்லுமுல்லு பண்ணிதான் ஜெயிச்சிருக்கா. இரண்டு பேருமே ரகசிய உடன்படிக்கை செஞ்சுண்டுதான் இந்தத் தேர்தலைச் சந்திச்சிருக்கா. காங்கிரஸை எப்படியாவது தமிழகத்தில் இருந்து விரட்டணும். இருந்த இடம் தெரியாமச் செய்யணும். அதே போல வைகோவையும் ஒண்ணுமில்லாமப் பண்ணிடனுங்கறதுதான் அவா திட்டம். அவா ரெண்டு பேரும் வளந்தா தங்களோட கட்சி எதிர்காலத்துக்கு பாதிப்புன்னுதான் இவா இப்படி பண்ணியிருக்கா. இதுபத்தி ஸ்டாலினும் ஜெயலலிதாவும் சந்திச்சிப் பேசுன ரகசிய வீடியோ என் கிட்ட இருக்கு. அந்த வீடீயோக்களை எல்லாம் என் பென் ட்ரைவில வச்சிருக்கேன். சமயம் வரும் போது அதை நா வெளியிடுவேன். இப்போ லிபியா பிரச்சனை பத்திப் பேச ஒபாமா என்ன அர்ஜெண்டா கூப்பிட்டிருக்கார். அதுக்காக அமெரிக்கா போறேன்” என்றார்.

கருணாநிதி கவிதை

தேர்தல் தோல்வி குறித்து கருணாநிதி உள்ளத்தை உருக்கும் கவிதை ஒன்றை முரசொலியில் எழுதியிருக்கிறார். முனிமலர் வாசகர்களுக்காக அந்தக் கவிதை இங்கே....

தமிழர்களே தமிழர்களே
தற்குறியான தமிழர்களே

ஆரிய சதிக்கு
அல்லக்கை ஆன
அறிவு மறந்த தமிழர்களே

அன்று பட்டதை மறந்து போனீரா...
மேனா மினுக்கிகளிடம் மயங்கிப் போனீரா...

டி.வி., கேஸ், அரிசி என்று
வேண்டிய மட்டும் இலவசம் பெற்றீரே...
வேளா வேளைக்குத் தின்று கொழுத்தீரே

வாக்களிக்க ஏன் மறந்தீர்..
உதய சூரியனை ஏன் துறந்தீர்...

சோற்றாலடித்த பிண்டமே
சொரணை கெட்ட முண்டமே
பார்ப்பனச் ச(க)திகளுக்கு
பகடையாகிப் போன
பஞ்சப் பரதேசி தண்டமே

என்று திட்டுபவன் அல்ல
இந்தக் கருணாநிதி

அன்று முதல் இன்று வரை
யார் யாரோ முதுகில் குத்தினாலும்
குத்தியவர்களையும் முதுகில் சுமக்கும்
அதிர்ஷ்டக்கட்டைதான் இந்தக் கருணாநிதி

என் ராசி நல்ல ராசி
என் ஜாதகம் அப்படி ஒரு ஜாதகம்
நான் சாத்திரம் அறியா சூத்திரன்
ஆனாலும்
உன் குத்தும் எனக்குச் சொத்துதான்
நீயும் எனக்கு முத்துதான்

முதுகில் மட்டுமல்ல
இதயத்திலும் குத்து
எதையும் தாங்குபவன்
இதையும் தாங்குவேன்
இனிமையாய் வாழ்த்துவேன்
தமிழா.....
தமிழா.....

- என்று முடித்துள்ளார்.

இந்தக் கவிதையைப் படித்து விட்டு பிரபல பதிப்பாளர் ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதது பார்க்கப் ப(த்)ரிதாபமாக இருந்தது, அவருக்கு இட்லி வடை வாங்கிக் கொடுத்துத் தேற்றினர்.


விரைவில் அடுத்த முனி மலர்.. :-)


Read More...

Monday, March 07, 2011

முனி மலர் 7-3-2011


இன்று போய் நாளை வா என்பது மாதிரி நாளைக்கு நாம சேர்ந்துக்கொள்ளலாம் என்று திமுகவும் காங்கிரஸும் முடிவு செய்துவிட்டது. ராமதாஸுக்கு ஒதுக்கிய 31லிருந்து 3 சீட்டை காங்கிரஸுக்கு திமுக தானம் செய்ய போகிறதாம். இனிமேல் கட்சிகள் எல்லாம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்திதுவிடும். எல்லோரும் தங்களுக்கே வெற்றி.. வெற்றி.. என்று கூவிக் கொண்டிருப்பார்கள். இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி என்று செய்தி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை...
( இந்த பகுதியை இந்த முறை காங்கிரஸ்+திமுக கூட்டணி மாதிரி அநங்கன் + இட்லிவடை எழுதியது )

தி.மு.க அமோக வெற்றி

சென்னை: மே.14. போட்டியிட்ட இடங்களில் 180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது தி.மு.க கூட்டணி.

ஆறாவது முறையாக முதல்வர் பதவி ஏற்கவுள்ளார் மு.கருணாநிதி. இந்த வெற்றி குறித்து அவர் கூறும் போது, ஆரியப் பதர்களின் அற்ப மாயைகளை, பொய்களை ஓரம் கட்டி தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. வாக்களித்தோர், வாக்களித்தோர் என்றில்லாமல் அனைவருக்கும் தமது நற்பணி தொடரும் என்றார். எப்போது ரிடையர் ஆவீர்கள் என்ற கேள்விக்கு ‘ரிடையர்’ என்ற வார்த்தையில் இருக்கும் டையர் போல நான் தமிழர்களுக்கு ஓயாது உழைப்பேன் என்றார். ஆட்சியில் காங்கிரஸுக்கு பங்கு உண்டா என்ற மற்றொரு கேள்விக்கு “குரங்கு அப்பம் பங்கு போட்ட கதை தெரியுமா ?” என்று பதில் கேள்வி கேட்டு நிருபர்களிடம் ஜோக் அடித்தார்.

ஸ்டாலின் துணை முதல்வர்! அழகிரி இணை முதல்வரா?
தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சியமைக்க உள்ள நிலையில் ஸ்டாலின் சென்ற முறை போலவே துணை முதல்வர் பதவி வகிப்பார் என்றும், இணை முதல்வராக அழகிரி பொறுப்பேற்க இருக்கிறார் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதுபற்றி அழகிரியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ”நானாக எதுவும் கேட்க மாட்டேன். அவ்வாறு நியமித்தால் வழக்கம் போல் மக்கள் பணியாற்றுவேன்” என்று தெரிவித்தார்.

டாக்டர் சுப்ரமணியன் சாமி வழக்கு
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெருமளவு மோசடிகள் நடந்துள்ளது என்றும், தி.மு.கவினர் கள்ள ஓட்டு போட்டும், கருவிகளில் தில்லுமுல்லு செய்தும் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றியுமே தேர்தலில் வென்றுள்ளனர் என்றும் டாக்டர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இன்று நிருபர்களிடம் பேசிய அவர், தி.மு.க.வினர் கள்ள ஓட்டுப் போட்டதன் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அதை உச்சநீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்து வழக்குப் போட இருப்பதாகவும் கூறினார்.

ஆ.ராசா விடுதலை ஆவார்!
ஆ.ராசா வழக்குகளிலிருந்து விரைவில் விடுதலை ஆவார் என்று திராவிடர் கழகத் தலைவர் திரு கி. வீரமணி தெரிவித்தார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “ நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதன் மூலம் தமிழர்கள் இன உணர்வு மிக்கவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். இந்த வெற்றியைத் தடுக்க ஆரிய-பார்ப்பன சக்திகள் ஒன்று சேர்ந்து பல சதிகள் செய்த போதிலும் தி.மு.க அதை முறியடித்து வெற்றிவாகை சூடியுள்ளது. ஆரிய சதியால் சிறைக்குப் போன இனமான கதிரவன் ஆ.ராசா விரைவில் விடுதலையாகி, மக்கள் பணி ஆற்றுவார் என்பதை மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

திருமாவளவன் அதிர்ச்சித் தோல்வி
தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட திருமாவளவன் தோல்வி அடைந்தார். தனது இந்தத் தோல்விக்கு தான் காங்கிரஸை எதிர்த்து பேட்டி அளித்ததை மனதில் வைத்துக்கொண்டு பழிவாங்கிவிட்டார்கள் என்று அவர் சோகத்துடன் தெரிவித்தார். ஆனாலும் தொடர்ந்து தான் இலங்கை தமிழர்கள் உயர்வுக்குப் பாடுபடப் போவதாகவும். தோல்வியைக் கண்டு பின்வாங்குபவன் தான் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எஸ்.வி.சேகர் வெற்றி
மயிலை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.வி.சேகர் அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து அ.தி.மு.க சார்பாகப் போட்டியிட்ட நடிகர் விசுவை விட இவர் 9 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தனது இந்த வெற்றிக்கு மயிலை மக்களும், இட்லிவடை என்ற வலைப்பதிவருமே காரணம் என்று அவர் நன்றியுடன் குறிப்பிட்டார். என் செல் நம்பரில் எப்போது வேண்டும் என்றாலும் யார் வேண்டும் என்றாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றார். அதற்கு பில் நான் கட்ட மாட்டேன் என்றார்.

நாளை சந்திப்பு?
சென்னை; மே, 14. டாடா, நீரா ராடியா, அனில், முகேஷ் அம்பானி ஆகியோர் நாளை கருணாநிதியைச் சந்திக்கவிருக்கின்றனர். அவர்களாக கைபட எழுதிய கடிதத்தை கவனர் முன்னிலையில் தருவார்கள் என்று தெரிகிறது..


சோனியா வாழ்த்து
தி.மு.க. வெற்றிக்கு சோனியாவும், மன்மோகன் சிங்கும் நேற்று தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர். ”I take complete responsibility” என்று பழக்க தோஷத்தில் சொன்னார் என்று தெரிகிறது.

விஜயகாந்த் எங்கே?
தேர்தலில் வெற்றி பெற்றாலும் தனது கூட்டணி கட்சி வெற்றி பெறாததால் சோகமான விஜயகாந்த், நிருபர்களைச் சந்திக்க விரும்பவில்லை. தொலைபேசியில் தன்னைத் தொடர்பு கொண்ட நிருபர்களிடமும் தான் பின்னர் விரிவாகப் பேசுவதாகக் கூறிய விஜயகாந்த் தன் மக்களுடன் கூட்டணி அமைத்து குடும்பத்துடன் தென்னாப்பிர்க்கா சென்றுள்ளதாக அவரது கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

மந்திரி சபையில் பங்கு கேட்க மாட்டோம். ஈ.வி.கே.எஸ்.
போட்டியிட்ட இடங்களில் மூன்றில் ஒரு பங்கே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களைச் சந்தித்தார். கூட்டணிக்கட்சிகளின் ஆதரவில்லாமல் தி.மு.க. இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது என்று கூறிய அவர், ஆட்சியில் நிச்சயம் பங்கு கேட்க மாட்டோம். 2016 தேர்தலில் காமராஜர் ஆட்சி அமைவது உறுதி என்றும் தெரிவித்தார். பேட்டி முடிந்து விடை பெறும் முன் அவர் கலங்கிய கண்களுடன், நிருபர்கள் தங்கள் பேண்ட், சட்டை, பனியன், உள்ளாடைகளை உதறி விட்டுச் செல்லும்படிக் கொண்டது உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.

தேர்தல் தோல்வி எதிரொலி : ஜெயலலிதா கொடநாடு பயணம்
தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து விரக்தியடைந்த ஜெயலலிதா நேற்று இரவோடு இரவாக கொடநாடு புறப்பட்டுச் சென்றார். சசிகலாவும் உடன் இருந்தார். நள்ளிரவு நேரத்திலும் செய்திக்காக போயஸ் கார்டன் வாசலில் காத்திருந்த நிருபர்களுக்கு “நோ கமெண்ட்ஸ்” என்ற பதிலை புன்னகையுடன் கூறிவிட்டு ஜெயலலிதாவின் கார் விரைந்து சென்றது. முன்னதாக தேர்தல் இயந்திரம் காங்கிரஸ் கையில் இருப்பதால் தனக்கு தோல்வி என்று கூறினார்.


ரஜினிகாந்த் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை கருணாநிதியை நேரில் சந்தித்து மீண்டும் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றதற்காக வாழ்த்துத் தெரிவித்தார். எந்திரன்-2 பட பூஜை விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்தார் என்று தெரிகிறது. ஸ்விட்சர்லாந்து ராணா படப்பிட்டிப்பில் இருந்த ரஜினி இன்று அதிகாலை விமானத்தில் சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கனிமொழி - கொ.ப.செ.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கனிமொழி தி.முக.வின் புதிய கொள்கைப்பரப்புச் செயலராக நியமிக்கப்படுவார் என அதிகாரப் பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய நிருபர்களின் கேள்விக்கு வானவில் போன்று ஏழு வண்ணங்கள் கொண்ட பட்டுப் புடவை தரித்த கவிதாயினி கனிமொழி பதிலளிக்க மறுத்து விட்டார்.

சொன்னதுக்கு எதிராக பலித்தது - ஜோதிடருக்குப் பாராட்டு
’இட்லிவடை’ என்ற வலைப்பதிவில் பலருக்கும் ’இலவசமாக’ ஜோதிடப் பலன் சொல்லி வந்த ஒரு ஜோசியர், வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி வெல்லும்என்பதைக் கணித்து எழுதியிருந்தார். அதற்கு நேர் எதிராக திமுக வெற்றி பெற்றதால் அவருக்கு திட்டும், தமிழக அரசு சார்ப்பில் கலைமாமணி விருது வழங்கப்படும் என்று தெரிகிறது.

ராமதாஸ் கண்ணீர்
போட்டியிட்ட பல தொகுதிகளில் டெபாசிட் இழந்து 2 தொகுதிகளில் மட்டுமே பா.ம.க. வெற்றி பெற்றுள்ளது. தங்களது தோல்விக்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணிக் கட்சிகள் சரியாக ஒத்துழைக்காததே காரணம் மற்றும் காங்கிரஸுக்கு நாங்கள் 3 தொகுதிகள் விட்டு கொடுத்தால் தோல்வி அடைந்தோம் என்று கோபத்துடன் கூறிய ராமதாஸ், ”இனிமேல் பா.ம.கவைச் சேர்ந்தவரை முதல்வராக்கும் எனது லட்சியம் வெறும் கனவுதான். மரம் வெட்டப் போவதைத் தவிர வேறு வேலையில்லை” என்று சொல்லிக் கண்ணீர் விட்டார். காடுவெட்டி குரு உடன் இருந்தார்.

பத்ரிக்கு பத்மபூஷன்
’ஸ்பெக்ட்ரம்’ நடந்தது என்ன?’ என்ற புத்தகத்தை எழுதியதற்காக கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி அவர்களுக்குப் பாராட்டு விழா கன்னிமாரா ஹோட்டலில் நடந்தது. விழாவுக்குத் தலைமையேற்ற கி.வீரமணி, பத்ரி அவர்கள் இது போன்று பல நூல்களை எழுதி அறிவுலகிற்குச் சேவை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். சென்னை பல்கழகத்தின் தமிழ் ஆராய்ச்சி துறை, ஊழல் என்பதற்கு சர்ச்சை என்ற வார்த்தையை கண்டுபிடித்த பத்ரிக்கு பாராட்டு தெரிவிப்பதுடன் அடுத்த அகராதியில் இந்த புதிய விளக்கம் சேர்க்கப்படும் என்றார். திடீரென மேடை ஏறிய ஒருவர், பத்ரிக்கு மோதிரம் ஒன்றை பரிசாக அளித்தார்.தங்க மோதிரம் போட்டவர் நிச்சயம் நல்லி குப்பு சாமியாக தான் இருப்பார் என்று பலரும் நினைத்தார்கள் ஆனால் அவர் மேடையில் ஓரத்தில் இருந்ததால், இந்த விருதை யார் கொடுத்தார்கள் என்று மக்கள் குழம்ப சிலர் நிச்சயம் இது ஜெயமோகனாக தான் இருக்க வேண்டும் அவர் தான் விருது கொடுப்பவர் என்று பேசிக்கொண்டார்கள். விழாவில் கனிமொழி, ஜெகத்கஸ்பர், நல்லி குப்புசாமிச் செட்டியார், ஏ.நடராஜன், ரவிகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் பத்ரி தமிழில் பேசினார் சின்னதாக ஒரு டாப்லெட் வைத்துக்கொண்டு இரண்டு நிமிஷம் பேசினார். கேட்டவர்கள் எல்லோரும் இலவசமாக வழங்கிய சாரிடான் டாப்லெட்டை விழுங்கினார்கள்.

எல்லோருக்கும் இலவச திருமணம் - கருணாநிதி அறிவிப்பு
இலவச டி.வி. உட்பட பல்வேறு சலுகைகளை கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய கருணாநிதி, தற்போது மேலும் மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் வண்ணம் ”எல்லோருக்கும் இலவச திருமணம்” - திட்டத்தை அறிவித்துள்ளார். நேற்று நடந்த திருமண விழாவில் பேசிய அவர், “ ’ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்று அண்ணா அவர்கள் முன்மொழிந்ததைப் போல, ராவணனின் மனைவி மண்டோதரி போல இந்தத் திருமண விழாவில் அவரது தம்பியான நான் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும், இதுவரை திருமணமே செய்து கொள்ளாதவர்களுக்கும் விரைவில் அரசு செலவில் இலவச திருமணம் - திட்டத்தை அமல் படுத்த உள்ளேன் என்று தெரிவித்தார். அதுபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு ’சட்டசபையில் பதிலளிக்கிறேன்’ என்று புன்சிரிப்புடன் பூடகமாகத் தெரிவித்தார்.

வாலி வாழ்த்து

மீண்டும் ஆறாவது முறையாகப் பதவியேற்க இருக்கும் கருணாநிதியை கௌரவிக்கும் வகையில் ஜெகத்ரட்சகன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. அதில் வாலி,
வைரமுத்து, பாவி.ஜய், அப்துல்ரகுமான், மு.மேத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வாலி பாடிய வாழ்த்துப்பாவிலிருந்து...

நிதியின் கருணையே
கருணையின் நிதியே
கருணாநிதியே

நீயே தலைவன்
நீயே தமிழன்
நீயே உலகம்
நீயே வள்ளுவம்
நீயே அண்ணா
நீயே பெரியார்

உலகம் உனக்குள்
உனக்குள் உலகம்
தமிழ் நீ; தமிழகம் நீ
இயல் நீ; இசை நீ
நாட்டியம் நீ;

ராசா நீ
மந்திரி நீ
என்றும் முதல் மந்திரி நீ

என்றெல்லாம் அவர் பாடினார். பாடும்போது அவர் உணர்ச்சி வசப்பட்டு அழுதது பார்வையாளர்களை நெகிழ வைத்தது.

காணவில்லை: ( தற்போது வந்த தகவல்)
விஜய் என்ற இளைஞரை மே மாதம் 14 ஆம் தேதி முதல் காணவில்லை. இவரை நாகப்பட்டினம் கடல் அருகில் சுறா பிடித்துக்கொண்டு வருகிறேன் என்று வீட்டை விட்டு போனவர் வீடு திரும்பவில்லை. இவர் அப்பா இவரை காணவில்லை என்று அம்மாவிடம் புகார் கொடுத்துள்ளார். காவலர்கள் இவரை எங்கு தேடியும் இன்னும் கிடைக்கவில்லை. தகவல் தெரிந்தால் டெல்லியில் இவருடைய நண்பர் ராகுல் காந்திக்கு தகவல் சொல்லி அனுப்புங்கள்.Read More...