பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 07, 2015

தனு வெட்ஸ் மனு - ரிடர்ன்ஸ்..(2015)

இது சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த தனு வெட்ஸ் மனு படத்தின் தொடர்ச்சி.

படத்தின் டைட்டில் ஓடும்போதே பழைய படத்தின் கல்யாணக் காட்சியை ஒரு பாடல் முழுக்க காட்டி டைட்டில் முடிந்ததும் "4 ஆண்டுகளுக்குப் பிறகு..." என போட்டுவிட்டு படம் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கிறது. பழைய படம் பார்க்காதவர்களுக்குக்கூட எந்தப்பிரசினையும் இன்றி இந்தப்படத்துடன் ஒன்ற முடியும் இந்த உத்தியினால்.

முதல் ஷாட் ஒரு மெண்ட்டல் அசைலத்தின் கவுன்சிலிங்கிற்காக கணவனும் மனைவியும் செல்கிறார்கள். (மாதவன், கங்கனா ராவத்)

கவுன்சிலிங்கில் இருவரும் மாறி மாறி குறைகளை அடுக்குகின்றனர். ஒரு கட்டத்தில் மாதவன் கோபத்தின் உச்சத்தில் கத்த, அவரை பைத்தியம்போல அழைத்துச் செல்கின்றனர். அந்த கவுன்சிலிங்கின்போது இருவரும் மாற்றி மாற்றி குற்றங்களை அடுக்கும்போது எழுதப்பட்ட வசனம் கலக்கல். எத்தனை ரவுடிப் பெண்ணாய் இருந்தாலும் பொதுஇடத்தில் பெண்கள் எப்படி அழகாக வேஷம்போடுவார்கள் என்பதைக் காட்டியிருக்கின்றனர்.

இருவரும் பிரிந்ததும் அடுத்தடுத்து நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளை அழகாகக் கோத்ததில் திரைக்கதை எழுதியவர் கலக்குகிறார். அழகான வசனங்கள். டெல்லி ஹிந்தி தெரிந்திருந்தால் படம் இன்னும் நிறைய பிடிக்கும். குறிப்பாய் குசும் ஆக வரும் கங்கன ராவத்தின் இரண்டாவது வேடத்தில் வரும் கேரக்டர்.

டெல்லி மற்றும் வட இந்திய மக்களின் கலாசாரத்திற்கும், நமக்குமான இடைவெளியும் படம்பார்க்கும் மதராசிகளுக்குப் புரியும். டைவர்ஸ் என்றதும் மூலையில் போய் உட்கார்ந்துவிடாத கேரக்டர். நம்மூரில் அந்தப் பெண்ணுக்கு வாழாவெட்டி எனப் பெயரிட்டு நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ அசிங்கப்படுத்துகிறது சமூகம்.




டைவர்ஸ் ஆனாலும் மாதவன் மீதான அன்பு குறையாமல் இருப்பதை சில ஷாட்டுகளில் அருமையாக காண்பித்திருப்பார் இயக்குனர். மொபைலில் கல்யாண ஃபோட்டோக்களைப் பார்த்துக்கொண்டிருப்பது, ஃபோன் செய்து மன்னிப்புக்கேட்க முயல்வது, குசும் உடன் மாதவன் காதல்வயப்பட்டு கல்யாணம் செய்ய முடிவெடுத்ததும் காண்பிக்கும் உணர்ச்சிகள் என கங்கனா ராவத் என்ற நல்ல நடிகை தெரிகிறார்.

சுதந்திரமான பெண்களின் அடையாளமாக கங்கனா ராவத்தை காண்பிக்க இயக்குனர் முயன்றிருந்தாலும் காதலித்து மணந்துகொண்ட கணவனைப் பிரிந்திருப்பதைப் பொறுக்கமுடியாமல் இருப்பதையும் காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு. அதே அலைவரிசையில் சுதந்திரமான பெண் என்பதைக் காண்பிக்க-- குடிப்பது, பழைய காதலனுடன் சுற்றுவது, வகைதொகையில்லாமல் ஆண் நண்பர்களுடன் பழகுவது, ஊர் சுற்றுவது, சினிமா செல்வது எனவும் காட்டி இருக்கிறார்.

படத்தில் கருத்தோ செய்தியோ சொல்ல முயலவில்லை இயக்குனர். ஒரு நல்ல பொழுதுபோக்குப் படத்தைக் கொடுக்க முயன்று வெற்றியும் கண்டிருக்கிறார்.

படத்தில் நகைச்சுவைக்கென தனி ட்ராக்கெல்லாம் கிடையாது. வட இந்திய மக்களின் வாழ்க்கையே கொண்டாட்டமாக, ஜாலியாக போவதை அப்படியே காட்சிப்படுத்தி இருப்பதிலேயே நகைச்சுவைப் பகுதியும் இயைந்து வருகிறது.

கங்கனா ராவத்தின் தங்கைக்கு பெண்பார்க்க வரும் காட்சியில் ஒரே ஒரு டவலுடன் வந்து சபையில் உட்கார்ந்துகொண்டு மாப்பிள்ளையிடம் கேட்கும் கேள்விகளும், கடைசியில் இப்படிப்பட்ட ஆட்களுடன் வாழ்க்கை பயங்கர போர் அடிக்கும் எனவும், எவனுடனாவது ஓடிப்போ என தங்கைக்கு அறிவுரை சொல்வதையும் புதுமைப்பெண்ணுக்கு சொல்ல ஆசைப்பட்டிருப்பார்போல. அந்த காட்சியமைப்பும், நகைச்சுவையும் அருமை.

தபங் படத்தில் பிரகாஷ்ராஜின் தம்பியாக வந்து செத்துப்போகும் நடிகர் இதில் மாதவனின் தம்பியாக வருகிறார். நகைச்சுவை நடிகராக ஒரு சுற்று வர நல்ல வாய்ப்பிருக்கிறது. அவர் பேசும் புல்லட் ஸ்பீட் ஹிந்தியும், அடிக்கும் காமெடியும் கலக்கல். அவரது வாட்சப் காதலும், அதன் சொதப்பலும் அருமை.

மாதவன் அவர் அப்பாவாக வருபவரிடம் நான் டைவர்ஸ் வாங்கப்போகிறேன் எனச் சொல்லும்போது அவர் அப்பா சொல்லும் வசனங்கள்தான் இன்றைய பெருவாரியான குடும்பங்களின் நிதர்சனம். எவ்வளவு தூரம் சேர்ந்திருக்க முடியுமோ அவ்வளவு தூரம் சேர்ந்திரு என்பதே விஷயம். புதுசா வருபவள் உன்னை இப்படிப் படுத்தமாட்டாங்கிறதுக்கு என்ன நிச்சயம்? உங்கம்மாவும் நானும் கூடத்தான் எம்புட்டு தூரம் சேர்ந்திருக்க முடியுமோ அப்படி இருக்கிறோம்,

மாதவன் : நான் டைவர்ஸ் வாங்கலாம்னு இருக்கேன்..

அப்பா : ஏன்?

மாதவன் : எங்களுக்குள்ள பேசிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லை. சின்னச் சின்ன விஷயங்கள் கூட பெரிய சண்டையாய் ஆகிருது. அவளை நானோ இல்லை அவள் என்னையோ புரிந்துகொள்வதில்லை. என்னைய பைத்தியக்கார ஆஸ்பத்திரியில சேர்த்துவிட்டது ரொம்பவே அதிகம்.

பப்பி (மாதவன் தம்பி) : நீ எப்படி பைத்தியக்கார ஆஸ்பத்திரியில போய்ச் சேர்ந்தே?

மாதவன் (அப்பாவிடம்): நானும் நாலு வருஷமா சமாளிச்சுட்டேன்,

அப்பா : எல்லோரும் அனுபவிக்கிறாங்க. நான் 40 வருஷமா சமாளிச்சிட்டிருக்கேன். உங்கம்மாவும் இப்படித்தான் சமாளிச்சிட்டிருப்பாங்க,

மாதவன் : அப்படின்னா?

அப்பா : அப்படின்னான்னா என்ன? சமாளி. அதுக்கும் மேல இது இருக்கு ( விஸ்கியைக் காண்பித்து) எப்பயாச்சும் தண்ணீர் சேர்த்து, அப்பப்ப சோடா சேர்த்து அடி..

பப்பி : அப்பப்ப நீட்டா ( தண்ணீர் சேர்க்காமல்) அடி..

அப்பா : டைவர்ஸ் ஆனபின் என்ன ஆகும்னு நெனைக்கிற? வாழ்க்கை முழுக்க தனியா இருக்கப்போறியா? தனியா இருந்தா போரடிக்கும் உனக்கு. இல்லைன்னா, இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க. ரெண்டாவது கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டாவது பொண்டாட்டி உன்னைய சந்தோஷமா வச்சிருப்பான்னா நெனைக்கிற? மகனே, உலகத்தின் நியதி இது. ஆணும் பெண்ணும் காதலில் விழவேண்டும். அப்புறம், கல்யாணம், அப்புறம் ஒருத்தர் இன்னொருத்தரால போர் ஆகிருவாங்க,

பப்பி : சரியா சொன்னீங்க.. (சிரித்துக்கொண்டே)

அப்பா : இதனாலதான் சொல்றேன், எம்புட்டு தூரம் இழுத்துட்டுப் போகமுடியுமோ, போ. எப்ப தோத்துப்போறியோ, அப்ப முடிச்சிக்க.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் மாதவனின் அம்மா கத்திக்கொண்டே இருக்கிறாள், சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் வந்து சாப்பிடு, உனக்கு எடுத்து வைக்கிறதுக்கு இங்க உன் பொண்டாட்டி இல்ல, யார் லைட்ட போட்டுட்டு போறது, சர்மா ஜி மாத்திரை சாப்பிடுங்கன்னு விடாமல் கத்திக்கொண்டே இருக்கிறார்.

மாதவனுக்கும் , கங்கனா ரவத்தைப்போலவே தோற்றமளிக்கும் கல்லூரி சென்றுகொண்டிருக்கும் ஸ்போர்ட்ஸ் உமன் ஆன குசும் உடன் காதல் வருகிறது. மோதலில் வருகிறது காதல். காதல் வந்ததும் அதன் அடுத்த கட்டமாக இருவரும் போட்டிங் செல்கின்றனர். (குசும் பாஸ் ஆனதற்கான பார்ட்டி) அப்போது பாடும் I might be sentimental.. but, don't get so judgemental என்ற பாடல் முடியும்போது இருவரும் கிட்டத்தட்ட காதலர்களாய் ஆகியிருப்பர். இதில் விஷயம் என்னவெனில் மாதவனுக்கும் குசுமாக வரும் கங்கனா ராவத்துக்குமான வயது இடைவெளி. பப்பி ஒரு வசனமாகச் சொல்வான். அண்ணே, நீ கிராஜுவேஷன் முடிச்சிருக்கும்போது இவ பிறந்திருக்கக்கூட மாட்டா என.

இப்படி வயது வித்யாசம் இருக்கும்போதும் குசும் வீட்டில் அண்ணன் கல்யாணத்திற்கு சம்மதிப்பான். அண்ணியும்கூட வேறொரு பையனை பார்த்து வைத்துவிட்டதால் வேண்டாம் எனச் சொல்வார். நம்மூரில் இதெல்லாம் சொன்னாலே சிரிப்பார்கள். திக்விஜய் சிங் செய்தது நம்மளவில் பெரிய அநியாயம், ஆனால், வட இந்தியாவில் இது பெரிய விஷயமாய் விவாதிக்கப்படவில்லை என்பதை நாம் பார்த்திருக்கலாம்.

கங்கனா ராவத் மீண்டும் முதல் காதலனுடன் சுற்ற ஆரம்பிக்கிறாள். கடைசியில், அவனுக்கு நிச்சயமாகி இருக்கும் பெண்ணைத்தான் மாதவன் காதலித்துக்கொண்டிருப்பார். இது விஷயமாக கங்கனா ராவத்துக்கும், பழைய காதலனுக்கும் நடக்கும் உரையாடல்.

தனு : என்னாச்சு, ஏன் இம்புட்டு கோபமா இருக்க?

காதலன் : உன் பழைய புருஷன் டாக்டர் என் வாழ்க்கையில் மீண்டும் வந்துவிட்டான். இம்முறை அவனை சும்மா விடமாட்டேன், சுட்டுத்தள்ளத்தான் போகிறேன்.

தனு : ஏன் திட்டிக்கிட்டிருக்க, என்ன நடந்துச்சுன்னுதான் சொல்லேன்.

காதலன் : நாலு வருஷம், நாலுவருஷம் ஒரு பொண்ணத் தேடினேன்.அவள பாத்ததும் இல்ல, பேசுனதும் இல்ல, நேரா கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டேன். ஏன்? அவளுக்கும் உன்னையப் போலவே முகம். சரி நீதான் இல்லை, உன்னைய மாதிரி இருக்குறவளையாவது கட்டலாம்னா, உன் புருஷன் அதுக்கும் விடமாட்டான் போல. ராஸ்கல், ஒரிஜினலும் அவனுக்குத்தான் வேணும், டூப்ளிகெட்டும் அவனுக்குத்தான் வேணும்..



மாதவன் தான் மனுவாக. மனு இப்படிச் செய்திருக்கிறான் என்றதும் இருக்காதே என்ற நப்பாசையில் எப்படி என ஒவ்வொரு கேள்வியாய் கேட்க கடுப்பாகும் முன்னாள் காதலன் கடைசியில் "ஏ தனுஜா த்ரிவேதி, உன் புருஷன் உன்னைய ஏமாத்திட்டு இன்னொரு பொண்ணுகூட சுத்திட்டிருக்கான். அதுல என் வாழ்க்கையிலும் மண்ணள்ளிப்போட்டுட்டான்.." என முடியும்.

படம் முழுக்க அழகான ஒளிப்பதிவும் நல்ல பின்ணணி இசையுமாக இருக்கிறது. ஒளிப்பதிவு பளிச்சென இருப்பதே ஓர் அழகைக் கொடுத்துவிடுகிறது. பாடல்களும், அதனை படமாக்கியிருக்கும் விதமும் அருமை.

என்னதான் கதையில் இத்தனை சண்டை சச்சரவும் இருந்தாலும், ஒருவருக்கொருவர் டைவர்ஸ் வரை சென்றாலும் இருவரும் ஒருவருக்கொருவர் பிரிந்திருப்பதை மனதின் அடியாழத்தில் வெறுக்கின்றனர் என்பதால் இறுதியில் சேர்வதன் மூலம் மங்களம். இரண்டாவது காதலியாக வரும் கங்கனா ராவத்தை (குசும்) அதற்கேற்றார்போல கேரக்டரைசேஷன் செய்திருப்பார்கள். நான் ஒன்னா, ஜெயிப்பேன், இல்லைனா தோப்பேன், ஸ்போர்ட்ஸ் உமன் ஆன எனக்கு ஆறுதல் பரிசில் எல்லாம் இஷ்டமில்லை எனச் சொல்லிவிட்டு கல்யாணப் பந்தலிலிருந்து இறங்கிச் செல்வாள்.

குசும் ஆக வரும் கங்கனா ராவத்தையும், தனுவாக வரும் கங்கனா ராவத்தையும் இரு துருவங்களாக ஒப்பனை செய்ததிலும், பாத்திர வடிவமைப்பு செய்ததிலும் இயக்குனரின் திறமை தெரிகிறது. குறிப்பாய் கிராமப்புற ஹிந்தி பேசும் குசும், கான்பூர்வாலி ஹிந்தி பேசும் மனு. பெரும்பாலும் கிராமப்புற உடையணிந்து டெல்லியில் சுற்றும் பெண்ணாக குசும், நவநாகரீக உடையணியும் தனு என, தலைமுடி ஒப்பனையில் இருந்து, உடல் அசைவுகள் வரை, முக ஒற்றுமை தவிர வேறெதுவும் கொஞ்சம்கூட ஒட்டாத அளவு பாத்திர வடிவமைப்பு செய்திருக்கிறார். அதிலும் குசும்மின் குரலும் ஹிந்தி பேசும் வேகமும் அருமை.

நம்மூரின் சாக்லேட் பாய் மாதவன் அங்கேயும் அவ்வாறே. ஒரு சண்டை கூட இல்லாமல் குரலுயர்த்திக்கூட பேசும் வாய்ப்பில்லை. ஆனால், படம் முழுக்க தன் இருப்பை அழகாக பதிவு செய்கிறார். தமிழ் சினிமாதான் அவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என நினைக்கிறேன்.

ஏன் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன் எனத் தெரியவில்லை. நான் நினைத்ததை, உணர்ந்ததை எழுதியதாகவும் தெரியவில்லை. எழுதாமற்போனாலும் ஒன்றும் ஆகிவிடாது, ஆனால், எழுதாமல் இருப்பது நான் ரசித்த நல்ல படத்தைக்குறித்து நாலுபேருக்கு சொல்ல வேண்டியதைச் சொல்லமுடியாமல் போகும்.

அவசியம் பார்த்தேயாகவேண்டிய வாழ்க்கையைப் புரட்டிப்போடும் சினிமாவா? இல்லை.

பின்னே, அருமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன், நல்ல இசையுடன், நல்ல ஒளிப்பதிவுடன், நல்ல திரைக்கதையுடன் வந்திருக்கும் படம். அவசியம் பாருங்கள் எனச் சொல்லவே இந்தப்பதிவு. அதை நியாயம் செய்யவே மேலே சொன்ன அனைத்தும்.

:)

இந்த விமர்சனத்தை எழுதியவர் யார் ? தெரிந்தால் பரிசு கிடையாது - எச்சரிக்கை !

4 Comments:

adiyaarkku adiyavan said...

நம்மூரின் மாதவன் படம் முழுக்க தன் இருப்பை அழகாக பதிவு செய்கிறார். தமிழ் சினிமாதான் அவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என நினைக்கிறேன். - மிக அருமையான நடிகரை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது இருக்கும் எல்லா நடிகரையும் விட இவர் மேலாகத்தான் தோன்றுகிறது.

Anonymous said...

very boring article

Anonymous said...

இவ்வளவு அருமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் எழுதியிருப்பதால் அவர் சத்தியமாக பாலா அல்ல

Anonymous said...

eppa vandha padatha paththi ippa review ezhudharadhu?
Idly vadai, do you know rajiv gandhi is no more?!!!!