பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 24, 2015

தினம் ஒரு பாசுரம் - எ.அ.பாலா

எச்சரிக்கை:

எ.அ.பாலாவிடம் இட்லிவடைக்கு எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது ஏதாவது எழுதி தாங்க என்று கேட்டவுடன் ஐந்தே நிமிடத்தில் ஒரு பதிவு அனுப்பிவிட்டார். அட என்று படித்தால் அவர் தினமும் டிவிட்டர் மக்களுக்காக எழுதும் தினம் ஒரு பாசுரம் பதிவாம்.

இட்லிவடைக்கு அரசியல், கோமாளித்தனமான பதிவு தான் வேண்டும் என்று பதில் அனுப்பினேன். உடனே அவர் இட்லிவடை வாசகர்கள் எதை போட்டாலும் படிப்பார்கள் சும்மா போடுங்க என்று சொல்லிவிட்டார்.

தினம் ஒரு பாசுரம் -36


செருமிகு வாள் எயிற்ற அரவொன்று சுற்றித் திசை மண்ணும் விண்ணும் உடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய,
பருவரை ஒன்று நின்று முதுகிற் பரந்து, சுழலக் கிடந்து துயிலும்,
அருவரை அன்ன தன்மை அடல் ஆமையான திருமால் நமக்கோர் அரணே!

— — பெரிய திருமொழி

முந்தைய பாசுர இடுகையில், திருமங்கையாழ்வார் அருளிய மச்சாவதாரம் பற்றிய பாசுரத்தைக் கண்டோம். இன்று கூர்ம அவதாரம் (திருமாலின் 2-வது அவதாரம்) குறித்த ஓர் அற்புதமான பாசுரம். முந்தைய பாசுரத்தில் “ வரு மீனை (திரு)மாலை மறவாது இறைஞ்சு என் மனனே” என்று தனது நெஞ்சுக்கு அறிவுறுத்திய ஆழ்வார் இப்பாசுரத்தில் “அடல் ஆமையான திருமால் நமக்கோர் அரணே!” என்று அறுதியிட்டுச் சொல்கிறார்!

திருப்பாற்கடலை கடைந்த நிகழ்வை விவரிக்கும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் பற்றி நான் எழுதியதை நினைவு கூர்க! அதற்கான தொடுப்பு இதோ.

இப்பாசுரத்தில் ஒற்றை நீக்கி எண்ணினால், ஒவ்வொரு வரியிலும் சரியாக 23 எழுத்துக்களே இருக்கும். சிறப்பான சொல்லாட்சி, அருமையான விவரிப்பு என்ற இலக்கிய நயத்தைத் தாண்டி, இந்த இலக்கண நேர்த்தியையும் நோக்கும்போது திருமங்கை மன்னனின் தமிழ் வீச்சையும், ஆழ்ந்த புலமையையும் புரிந்து கொள்ள முடிகிறது. இவை திருமால் மேல் கொண்ட பெரும்பக்தி, பேரன்பால் விளைந்தவை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!


திருமாலின் கூர்ம அவதாரம்

மேலே குறிப்பிட்ட உரலில் உள்ள திருவாய்மொழிப்பாசுர பிரம்மாண்ட விவரிப்பை திருமங்கை மன்னனின் இப்பாசுரத்திலும் காணலாம். இரு பாசுரங்களுமே பிரமிக்க வைத்தாலும், இது அதனினும் சற்று நுண்ணிய விவரிப்பு எனக் கூறலாம். வாசுகி பாம்பின் வர்ணனை, வேகமாகச் சுழன்ற பாற்கடல் வர்ணனை, தேவர்களும் அசுரர்களும் கடல் கடைந்தது, மண்ணும் விண்ணும் அதிர்ந்து நடுங்கியது, ஆமையான கேசவனின் முதுகில் மேரு மலை (மத்து போல) நின்று சுழன்றது, திருமாலே (கடைதலுக்கு ஏதுவாக) பெருமலையைத் தாங்கியதொரு திருமலை போலக் கடலில் கிடந்தது மட்டுமல்லாமல், இத்தனைக் குழப்பங்கள், பேரிரிரைச்சல்கள் மிக்க சூழலில் அந்த பரமபுருடன் கண் வளர்ந்தது என்று, அக்கடல் கலக்கலுக்கு நிகராக ஆழ்வார் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார் :-))

செருமிகு வாள் எயிற்ற — வலிமைமிக்க வெள்ளொளி வீசும் பற்களைக் கொண்ட
அரவொன்று சுற்றித் — (வாசுகி எனும்) பெரு நாகத்தை (மேருமலையில் கயிறாகச்) சுற்றி
திசை மண்ணும் விண்ணும் — எண்திசைகளிலும், பூவுலகிலும், விண்ணுலகிலும் வாழ்பவர்கள்
உடனே வெருவர — அவ்வேளையில் அஞ்சி நடுங்கும்படியாக
வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப — திருப்பாற்கடல் முழுதும் கலங்கும்படியாக
இமையோர்கள் நின்று கடைய, — தேவர்கள் (+அசுரர்கள்) நின்றவண்ணம் கடைய
பருவரை ஒன்று நின்று முதுகிற் பரந்து, — அகண்ட மலை (மேருவானது, தனது பெரிய) முதுகில் பரந்துயர்ந்த வண்ணம் நின்று
சுழலக் கிடந்து துயிலும், — சுழலும்படியாக, கிடந்த திருக்கோலத்தில் யோகக்துயில் கொண்ட,
அருவரை அன்ன தன்மை — ஓர் அரிய / மேன்மை மிக்க பெருமலைக்கு ஒப்பான தன்மையுடன்
அடல் ஆமையான திருமால் — வலிமையான கூர்ம(ஆமை) வடிவம் கொண்ட திருமால் (ஒருவனே)
நமக்கோர் அரணே! — நம் அனைவரையும் காத்தருள வல்லவன் ஆவான்

எ.அ.பாலா


3 Comments:

Renga said...

அருமை. ...

Anonymous said...

ஐயோ பாவம். இட்லி வடையில எழுதறதுக்கும் ஆளில்ல. அதை படிக்கறதுக்கும் ஆளில்ல. ஆசிரியரான பாலாவே தன்னைத்தானே அழைத்து எழுதச் சொல்லிக்கொண்டாலும் எழுத சரக்கு இல்லை. இவர் எழுதியதை ‘எலவசம்’ போன்ற சொம்புகள் வேணா சொற்பிழை கண்டுபிடிக்க படிக்க வருவார்கள்.

photo said...

அருமையாக கூறியிருக்ககிறார்.