பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 23, 2015

சுஜாதா விருதுகள் - ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் மற்றும் பலர்

ஏர் டெல் சூப்பர் சிங்கராக இருந்தாலும், இலக்கிய(?) விருதாக இருந்தாலும் சர்ச்சை தொடர்கிறது... இதற்கு ஒரே தீர்வு கடைசியில் சொல்லியிருக்கிறேன்.

ஜெ,
சுந்தர ராமசாமி விருது, ராஜமார்த்தாண்டன் விருதுக்கெல்லாம் பாராட்டு தெரிவிக்கிறீர்கள். சுஜாதா விருதுகளைப்பற்றிய உங்கள் வாழ்த்துக்களை காணவில்லையே?
சித்ரன்


அன்புள்ள சித்ரன். முதல் கடிதம். புரிகிறது. ஆனாலும் சீரியஸாகவே பதில்
சுந்தர ராமசாமியும் சரி, ராஜமார்த்தாண்டனும் சரி தீவிர இலக்கியத்தின் சின்னங்கள். சுஜாதா அப்படி அல்ல. அவர் நல்ல கதைகள் சிலவற்றை, சில நல்ல நாடகங்களை எழுதியிருக்கிறார். நவீன உரைநடையில் அவருக்கு பங்களிப்பு உண்டு. ஆனால் அவர் இலக்கியவாதி அல்ல. அப்படிச் சொல்பவன் இலக்கியவாசகனும் அல்ல
இளையதலைமுறையினர் சிலர் அவர்களின் இளமைப்பருவ வாசிப்பை அவரிடமிருந்து தொடங்கியிருக்கலாம். மேலே வராமல் தொடங்கிய இடத்திலேயே நின்றிருப்பது பொதுவாக தமிழர் பண்பாடு. அவர்களே அவரை இலக்கியவாதி என்பவர்கள். அவர்களுக்கு வயது முப்பதுக்குள் என்றால் அவர்கள் மேலே வாசிக்கவேண்டும் என்றும் மேலே என்றால் சிறந்த சுகசௌபாக்கிய வாழ்க்கை அமையட்டும் என்றும் வாழ்த்துகிறேன்
சுஜாதாவை ஓர் இலக்கிய ‘ஐகான்’ ஆக்கும்பொருட்டு மனுஷ்யபுத்திரன் தொடங்கிய விருது இது. அதன்பொருட்டு அதை தீவிர இலக்கியம் எழுதியவர்களுக்கு அளிக்கத் தொடங்கினார். ஆனால் எந்த அடையாளமும் காலப்போக்கில் அதன் உண்மையான மதிப்பு என்னவோ அங்கேதான் வந்து நிற்கும். சுஜாதா விருதுகள் இன்று நடைமுறையில் பல்ப் ஃபிக்‌ஷனுக்கான விருதுதான்
சுஜாதா விருது பெற்ற பட்டியலில் வினாயக முருகன் எழுதிய சென்னைக்கு மிக அருகில் என்ற நாவலையும் போகன் சங்கரின் கவிதைத் தொகுதியையும் மட்டும் வாசித்தேன். இரண்டுமே தமிழின் தீவிர இலக்கியத்தின் தொடர்ச்சியை எவ்வகையிலும் உள்வாங்கிக்கொள்ளாதவை. சமகாலக் கேளிக்கை எழுத்து, மிகையுணர்ச்சி எழுத்து ஆகியவற்றிலிருந்து தொடர்ச்சியை உருவாக்கிக் கொண்டவை.
வினாயகமுருகன் எழுத்தை நான் ‘ஙேயிசம்’ என்று சொல்லத்துணிவேன். ராஜேந்திரகுமார் என்ற அமரர் எழுத்தாளர் உருவாக்கிய அழகியல்முறையைச் சேர்ந்தது. அதற்கு தமிழில் என்றுமே பெருவாரியான வாசகர்கள் உண்டு.முன்பு ஒரு நாவலின் முன்னுரையில் கண்ணதாசன் எழுதினார் [வேலங்குடித் திருவிழா] ‘தமிழ் வாசகனை எனக்குத் தெரியாதா? அவனுடைய அரிப்பு எனக்கும் இருக்காதா? ஆகவே என் அரிப்புக்காக நான் எழுதினேன். தன் அரிப்புக்காக தமிழர்கள் இதை வாசிக்கலாம்” வினாயகமுருகனும் அதை அவரது முன்னுரையில் சொல்லியிருக்கலாம்
போகன்சங்கர் கவிதைகள் தமிழின் பிறசமகாலக் கவிதைகளைக் கண்டு அவற்றை போலிசெய்பவை. பெரும்பாலான ஃபேஸ்புக் கவிதைகள் இத்தகையவைதான். உணர்ச்சிகரமான தீவிரமான மனநிலை ஒன்றை இவை போலியாக உருவாக்கிக்கொள்கின்றன. அதில் நின்றபடி மிகையுணர்ச்சியும் நாடகத்தன்மையும் கொண்ட குறிப்புகளையும் குட்டிச்சித்தரிப்புகளையும் புனைகின்றன.
இவை நீடித்தவாசிப்புக்குரியவை அல்ல. மறுமுறைகூட வாசிக்கப்படாதவை.உடனடியான ‘லைக்கு’கள்தான் இலக்கு. ஆகவே இவை பொய்யான ஓர் உணர்ச்சித்தளத்தை நிறுவி அதை அனைத்துக்கவிதைகளுக்கும் நீட்டிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. போகன் சங்கரின் கவியுலகில் துக்கம் கெட்டிப்பட்டு கிடக்கிறது. அவர் கலகக்காரராக, கண்ணீர்வடிக்கும் கதைசொல்லியாக, இருத்தலியல் துக்கம் கனத்தவராக மாறிமாறித் தோற்றமளிக்கிறார்.
நவீனத் தமிழ்க்கவிதையின் விதிகளில் ஒன்றாக இருந்தது அடக்கம். கவிதை என்பதனாலேயே மிகையுணர்ச்சி உருவாகிவிடும், பொய்யான ஆன்மிகதளம் உருவாகிவிடும் என்று அஞ்சி அடைந்தது அது. அதன் நுட்பங்களனைத்தும் அவ்வாறு உருவானவை. அவற்றைத் தூக்கிவீசி நவீனக் கவிதைகளின் வரியமைப்பு, மொழிநடை மற்றும் சில தேய்வழக்குகளை மட்டும் எடுத்துக்கொண்டு வைரமுத்துக் கவிதைகளின் உணர்வுதளம் நோக்கிச் செல்கின்றன இவை
நான் இப்போது ஷங்கர் ராமசுப்ரமணியனின் ஆயிரம் சந்தோஷ இலைகள் என்ற கவிதைத்தொகுதியை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதன் மொழியின் அடக்கமும் நுட்பமும் அளிக்கும் பரவசத்துடன் இக்கவிதைகளை வாசிக்கும்போது என்ன இது என்ற திகைப்பு உருவாகியது. மேலும் சில இணையக்கவிதைகளை வாசித்தபோதுதான் இது ஒரு டிரெண்ட் என்றும் இது நவீனக்கவிதையை ஆப்ரிக்க நீர்ப்பாசி போல மூடி ஆக்ஸிஜன் இல்லாமல் ஆக்கிவிட்டிருக்கிறது என்றும் புரிந்தது. எண்பதுகளில் கவிதைக்கு எதிரான சக்தியாக இருந்த முற்போக்குக் கவிதைகளுக்கு நிகரான நோய் இது. நான் போகனை மட்டும் சொல்லவில்லை. அப்படி ஒரு இருபது பெயர்களைச் சொல்லமுடியும்.
இன்னும் ஒன்று, ஷங்கர் ராமசுப்ரமணியனின் கவிதைகளே என் நண்பர் இளம்பரிதியால் பெரிய நூலாக வெளியிடப்பட்ட பின்னர்தான் என் கவனத்தை முழுமையாகப் பெறுகின்றன. ஏனென்றால் இன்று பெருகும் இந்த உடனடிஎதிர்வினைக் கவிதைகள் நடுவே இத்தகையகவிதைகள் கவனம்பெறமுடியாமலிருக்கிறது.
வணிக எழுத்து தேவை என்று நினைப்பவன் நான். சுவாரசியமான எழுத்து பல தளங்களில் வந்துகொண்டே இருப்பது வாசிப்பு எனும் இயக்கம் நீடிக்க இன்றியமையாதது. ஆகவே வணிக எழுத்தை சுட்டிக்காட்டி பாராட்டுவது மட்டும் அல்ல விருதளிப்பதும் கூட சிறந்ததுதான். ஆனால் அதை இலக்கியமாகக் காட்டும் பசப்பு மிக ஆபத்தானது. மனுஷ்யபுத்திரனின் உயிர்மை இன்று ஓர் இயக்கமாகவே அதை முன்னெடுக்கிறது என ஐயப்படுகிறேன்.அவரைச்சுற்றி அப்படிப்பட்ட எழுத்தாளர்களின் ஒரு குழு கூடியிருக்கிறது. அதில் அவருக்கு வணிகலாபம் உள்ளது. ஆகவே அதை அவர் வழிநடத்துகிறார்.
பொதுவாக இன்று இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கமும் பாராட்டும் அபூர்வம். ஆகவே அவர்களுக்கு அளிக்கப்படும் விருதுகளை பாராட்டவேண்டியது கடமை. விருது பெற்றுள்ள பலர் என் மதிப்பிற்குரியவர்கள். விருதைப் பெற்றதையோ விருதையோ நான் குறைத்துச்சொல்லவில்லை. ஆனால் இவ்விருது இன்று முன்னெடுக்கும் மதிப்பீடுகளை இங்கே சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. இந்த மனநிலையில் இதை எழுதாவிட்டால் இது சொல்லப்படாமலேயே போய்விடலாம்.
உயிர்மை இன்று தமிழின் மிகப்பெரிய இணைய மாஃபியாக்களில் ஒன்று. ஆகவே எதிர்வரும் வசைகளையும் கொந்தளிப்புகளையும் முன்னரே காண்கிறேன். பரவாயில்லை. இலக்கியவாசகர்களில் சிலராவது இப்படி ஒரு கோணம் உள்ளது என அறிந்துகொள்ள்வேண்டும். இந்த விவாதங்கள் அடங்கியபின் இந்நூல்களை வாசிக்கையில் நான் சொல்வதென்ன என்பதைப் புரிந்துகொள்வார்கள்
ஜெ
நன்றி: http://www.jeyamohan.in/74452#.VTi2Ff6UdQF
------
உயிர்மை இன்று தமிழின் மிகப்பெரிய இணைய மாஃபியாக்களில் ஒன்று.
-ஜெயமோகன்
ஜெயமோகன் சுஜாதாவிருதுகள் மேல் மேற்கொண்டிருக்கும் கொலை வெறித்தாக்குதலில் மேலே சொன்ன வரி இடம் பெற்றுள்ளது. உயிர்மையை இணைய மாஃபியா என்று சுருக்குவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உண்மையில் நிழல் உலக மாஃபியாவாக மாறி ஜெயமோகனை மிரட்ட வேண்டுமென்பதுதான் என் ஆவல்.
இந்தப் பதிவில் அவர் விநாயக முருகனையும் போகன் சங்கரையும் மிக்க் கடுமையாக தாக்குகிறார். இதற்கான காரணம் மிக எளிமையானது. அவர்கள் இருவருமே ஜெயமோகனை தொடர்ந்து விமர்சிப்பவர்கள். அதற்கு பழிவாங்க இது ஒரு சந்தர்ப்பம். அதற்க்கா சுஜாதாவையும் சேர்த்து திட்ட வேண்டிய அவலம் ஜெயமோகனுக்கு.
ஆனால் ஜெயமோகன், சுஜாதா விருது பெற்ற சமஸ் பற்றி ஏதும் சொல்வதில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அதற்காக காரணம் மிகவும் பச்சையானது. அந்த புத்தகத்தை ’ அழியாக் குரல்’ என வானளாவ புகழ்ந்து ஜெயமோகன் முன்னுரை எழுதியிருக்கிறார். போகனோடு ஒப்பிட்டு ஷங்கர்ராம சுப்ரமணியணை இப்போது புகழ்வதும் அதே அடிப்படியில்தான். சமஸ்சும் ஷங்கரும் தமிழ் இந்து அல்லாத வேறு இடத்தில் பணி புரிந்துகொண்டிருந்தால் இந்நேரம் ஜெயமோகனின் குண்டாந்தடிக்கு இருவருமே பழியாயிருப்பார்கள்
விருது பெற்ற பாவண்ணன் பற்றியோ சுரேஷ் கண்ணன் பற்றியோ, சந்தோஷ் பற்றியோ, அடவி, திணை சிற்றிதழ்கள் பற்றியோ ஜெயமோகன் எதுவும் சொல்லவில்லை என்பதை கவனிக்க வேண்டும். இவர்களும் இதே சுஜாதா விருதைத்தான் பெற்றிறுக்கிறார்கள். ஜெயமோகனிடம் இருப்பது தனிப்பட்ட பழிவாங்கும் உணர்ச்சி மட்டுமே. அதற்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு மதிப்பீடு சார்ந்த முகமூடிகளை அணிகிறார் என்று தெரியவில்லை.
கடந்த காலத்தில் சுஜாதாவிருது பெற்றவர்கள் அனைவருமே தமிழுக்கு வெவ்வேறு வகையில் மிக தீவிரமான பங்களிப்பை செய்து வந்தவர்கள் என்பதை அந்தப் பட்டியலை திரும்பிப் பார்க்கும் எவருக்கும் தெரியும். மேலும் இந்த விருது தேர்வில் பங்கெடுத்த அனைவரும் தமிழ்ன் மிக முக்கியமான படைப்பாளிகள். அவர்கள் அனைவரையும் ஜெயமோகன் தனது வன்மத்தால் அவமானப்படுத்த முயற்சிக்கிறார்.
ஜெயமோகன் இதற்கு மேல் கீழே இறங்க முடியாது என்று யாராவது சொன்னால் இன்னும் இறங்கிக் காட்டுகிறேன் பார் என்று சவால வீட்டு அவசர அவசரமாக இன்னும் பத்தடி பள்ளம் தோண்டி உள்ளே போய் படுத்துக்கொள்வதில் அவர் வல்லவர்.

- மனுஷ்யபுத்திரன்
நன்றி: முகநூல் பக்கம்

நூறு மீட்ட ஓட்ட போட்டியில் இந்த மாதிரி பிரச்சனை வருவதில்லை, அதனால் இனிமேல் விருதுக்கு தேர்வானவர்களுக்கு ஓர் ஓட்டப்பந்தையம் வைத்து பரிசு கொடுக்கலாம். இதில் வாசகர்கள் யாரும் கலந்துக்கொள்ள கூடாது !

4 Comments:

ஜெயக்குமார் said...

உம்

ஏமாற்றுப்பேர்வழி said...

மனுஷ்யபுத்திரனான ஹமீது தனது பரிவாரங்களை குஷிப்படுத்தவும், உயிர்மையில் வெளியாகும் குப்பைகளுக்கு இலக்கிய அந்தஸ்த்து தருவதற்குமான முயற்சியே இந்த "ராயல்ட்டியை பிச்சைக்காசாக வாங்கிய" சுஜாதா விருதுகள்.

எத்தனை குட்டிக்கரனம் போட்டாலும் சுஜாதாவை ராயல்ட்டியில் ஏமாற்றிய பாவம் போகாது.

உயிர்மையில்ெந்த எழுத்தாளனாவது எனக்கு சரியாக ராயல்ட்டி கிடைத்தது என எழுதியதாக சரித்திரம் உண்டா? வேறு வகையில் சொல்வதானால் இன்றுவரை உயிர்மையின் ராயல்ட்டி கணக்கு பற்றி எழுதாத ஆட்கள் யாரும் உண்டா.

ஏமாற்றுப்பேர்வழிகள் எப்படி பெரிய மனிதன் போல காட்டிக்கொள்வதெனில் இப்படித்தான். நானும் விருது வழங்குகிறேன் எனக்கிளம்புவது.

முதலில் சுஜாதா.புத்தகங்கள் விற்ற வகையில் அவர் குடும்பத்துக்கு கொடுக்க வேண் டிய ராயல்ட்டியை கொடுத்துவிட்டு பின்னர் கொடுக்கலாம் சுஜாதா விருது.

Bala said...

ஜெ.மோ தமிழ் இந்துவில் நமக்கு தேவை சேதன் பகத்தும், ஜேம்ஸ் பாட்டர்சன்னும், டேவிட் பிரவுனுமே என்று சொல்லி ஒரு கட்டுரை எழுதினார். அப்படிப்பட்ட ஒருத்தர் தான் சுஜாதா...அவரை இலக்கியவாதி இல்லை என்று இன்னொரு புறம் சாடுவது சரியன்று....

சுஜாதா = எம்.ஜி.ஆர் = ரஜினி
ஜே.கே = சிவாஜி = கமல்....

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ரஜினி அளவுக்கு ரசிகர்கள் சுஜாதாவுக்கும், ஜேகேக்கும் உண்டு....

இப்படிக்கு
சுஜாதா வெறியன்...

T.N. Gopalan said...

நீங்களும் ஏதாவது சொல்லுங்க சார் நைசா ஒதுங்கினா என்ன அர்த்தம்