பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 29, 2015

இரண்டு பேட்டி


நன்றி: தந்தி டிவி

வைணவ விடிவெள்ளி’ என்று கொண்டாடப்படுபவர் ஸ்ரீராமானுஜர். கி.பி. 1017ம் வருடம் பிங்கள ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். 120 வருடங்கள் வாழ்ந்து அதே மாதம், அதே நட்சத்திரத்தில் மறைந்தவர். வைணவர்களின் வாழ்வில் இறுதி லட்சியமான மோட்சத்தை அடைய விசிஷ்டாத்வைத தத்துவத்தை அருளிச் செய்தவர். குலங்களில் ஏற்றத் தாழ்வு இல்லை; கோயிலுக்குள்ளே சென்று வழிபடவும், மோட்சத்தை அடையவும் வழிகாட்டும் மூல மந்திரத்தைத் தெரிந்துகொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு" என்று முழங்கி, அதன்படி தன் செயல்பாடுகளை வகுத்துக்கொண்டவர்.

தொலைக்காட்சிக்காக பழுத்த வைணவ மகானான ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கைத் தொடரை, பழுத்த நாத்திகவாதியான டாக்டர் கலைஞர் எழுதுவது பெரிய பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் கலைஞரை பாராட்டியும், கிண்டல் செய்தும் காமெண்ட்டுகள் கலக்குகின்றன. மதத்திலே புரட்சி செய்த - மனிதாபிமானம் மிக்க ஆத்திகரான ராமானுஜர் பற்றி தொலைக்காட்சியிலே அறிமுகப்படுத்துவது இந்தக் காலகட்டத்துக்கு மிகவும் தேவை" என்று ‘கல்கி’க்கு அளித்த இந்தச் சிறப்புப் பேட்டியில் சொல்கிறார் கலைஞர். ‘ஏன் அப்படிச் சொல்கிறார்?’ படியுங்கள்...

முதலில் இராமானுஜர் பற்றி எந்த வயதில் தெரிந்துகொண்டீர்கள்?

இளம் வயது என்பது மட்டும் நினைவிலே இருக்கிறதே தவிர, எந்த வயது என்பது ஞாபகத்தில் இல்லை. அந்த இளம் வயதில், நானும், என் நண்பர்கள் மறைந்த தென்னன், இசைவாணர் டி.வி. நமசிவாயம் மூவரும் முயற்சி எடுத்து, சிறுவர்களிடம் உணர்வை ஊட்ட, ‘சிறுவர் சீர்திருத்தச் சங்கம்’ என ஒரு அமைப்பை உருவாக்கி, வாரந்தோறும் ஒரு ஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில்தான் கூட்டம் நடத்துவோம். அந்தக் கால கட்டத்திலேயே ‘இராமானுஜர்’ பற்றிப் படித்த ஞாபகம் உள்ளது."

அவரைப் பற்றிப் படித்தவுடன் மனத்தில் முதலில் தோன்றிய எண்ணம் எது?

ஆத்திக எண்ணம் கொண்டவர்கள் மத்தியிலும், மதத்தைப் பற்றிய புரட்சி எண்ணம் கொண்டவர்களும் இருந்திருக்கிறார்களே என்ற ஆச்சரியம்தான் ஏற்பட்டது."

அவரது வாழ்க்கைப் பாதையில் உங்கள் மனத்தைத் தொட்ட சம்பவம் எது?

இராமானுஜரின் வாழ்க்கைப் பாதையில் என் மனத்தைத் தொட்ட பல சம்பவங்கள் உண்டு. அவை அனைத்தையும் தொலைக்காட்சித் தொடரில் காணவிருக்கிறீர்கள். தற்போது நீங்கள் கேட்ட கேள்விக்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்றையே பதிலாகக் கூறுகிறேன்.

தொண்டை மண்டலத்தில் உள்ள திருப்பெரும்புதூர்தான் இராமானுஜரின் சொந்த ஊர். கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சமதர்மத் துக்கான முன்னோடியாகத் திகழ்ந்தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சி நம்பியைத் தான் இவர் தனது குருவாக ஏற்றுக்கொண்டு பாடம் கற்றார். மனிதர்கள் இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்றால், அவர்களிடையே ஏற்றத் தாழ்வு இருப்பது நியாயமற்றது என்று சாடியவர் இவர். இறைப் பணியும் மக்கள் பணியும் ஒன்றே என்றார். உறங்காவில்லி தாசன் என்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் உட்பட பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களையும் தனது சீடர்களாக ஏற்றுக்கொண்டார்.

வைணவ மூல மந்திரங்களைக் கற்க இவர் முனைந்தபோது, திருக்கோட்டியூர் நம்பியை அணுகுமாறு கூறப்பட்டு, அவரை அணுக இவர் பலமுறை முயற்சித்தும் 18 முறைகள் பலனின்றித் திரும்பினார். இறுதியாக வேறு யாருக்கும் திரும்பச் சொல்லக்கூடாது. அப்படி தெரிந்தால் இராமானுஜர் நரகம் செல்வார் என்ற எச்சரிக்கையுடன் திருக்கோட்டியூர் நம்பி, இராமா னுஜருக்கு அந்த மந்திரத்தை உச்சரித்துக் காட்டினாராம். வைணவ மூல மந்திரத்தை அறிந்துகொண்டவுடன் இராமானுஜர், அந்த ஊரிலே இருந்த சௌமியநாராயணன் கோயில் கோபுரத்தில் ஏறி நின்று கொண்டு, ஊர் மக்களையெல்லாம் அழைத்து, தான் திருக்கோட்டியூர் நம்பியிடம் மிகுந்த சிரமத்தோடு கற்றதையெல்லாம் உரத்த குரலில் அனைவருக்கும் கூறினாராம்.

உடனே அவர் வாக்குறுதியை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டப் பட்டபோது, தான் ஒருவன் சொர்க்கம் சென்று, மற்ற மக்கள் எல்லாம் நரகத்தில் இருப்பதைவிட, தான் நரகம் சென்றாலும் பரவாயில்லை, மற்றவர்கள் எல்லாம் சொர்க்கம் செல்வதையே தான் விரும்புவதாகச் சொன்னாராம்.

இந்தச் சம்பவம்கூட என் நினை விலே நிற்பதற்கு ஒரு காரணம் உண்டு. இந்தக் காலத்தில் தணிக்கை என்பது அவ்வளவு சிரமமல்ல என்றபோதிலும், திரைத்துறையில் ஆரம்பக் காலத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்று உண்டு. 1957 ஆம் ஆண்டு ‘பராசக்தி’ படம் வெளி வந்த காலத்திலேயே தணிக்கைத் துறையினரிடம் நான் சங்கடப்பட்டிருக்கிறேன். நான் திரைக்கதை வசனம் எழுதி, நடிகர் திலகம் நடித்த படம் ‘திரும்பிப்பார்’. அண்ணா சாலையில் உள்ள ஐந்து மாடிக் கட்டடத்தின் மேல்மாடியில்தான் தணிக்கை அலுவலகம். அப்போது ‘லிப்ட்’ வசதியெல்லாம் அங்கே இல்லை. படிகளில் ஏறித்தான் செல்ல வேண்டும். அந்தப் படத்துக்குத் தணிக்கை வேலையாகச் சென்றபோது, தணிக்கை அதிகாரிகள் அந்தப் படத்தில் நான்காயிரம் அடி வெட்ட வேண்டுமென்றார்கள். எந்தெந்தப் பகுதிகளை வெட்ட வேண்டுமென்பதற்காக நானும், இயக்குனர் காசிலிங்கம் அவர்களும், நண்பர்களும் அந்த மாடிக்கு ஒவ்வொரு நாளும் படிகளிலே ஏறித்தான் செல்வோம்.

ஒருநாள் அதிகாரியிடம் இப்படி ஏறி வருவதைப் பார்த்துக்கூட உங்களுக்குக் கருணை ஏற்படவில்லையா" என்று கேட்டேன். அதற்கு அவர், திருப்பதி மலையில் ஏறிச் சென்றால் எவ்வளவு புண்ணியமோ, அதுபோல இங்கு ஏறி வருவதும் உங்களுக்குப் புண்ணியம்தான்" என்றார். என்னுடைய கொள்கையை உணர்ந்து என்னைக் கேலி செய்வதற்காக அவர் அப்படிச் சொன்னார்.

உடனே நான், திருப்பதியிலும், இங்கேயும் ஒரே ‘ரிசல்ட்’ (மொட்டை)தான்" என்று கூறினேன். அந்தப் படத்தில் ஒரு குறிப்பிட்ட வசனம் இடம் பெறக் கூடாது என்றார்கள். என்ன வசனம் என்றால், கொள்கை முழக்கம் செய்வதற்காக, கோபுரம் ஏறி நிற்கும் தலைவர்களே, அந்தக் கொள்கையிலிருந்து எத்தனை முறை வழுக்கி விழுந்திருக்கிறீர்கள் என்று ஒருமுறை திரும்பிப் பாருங்கள்" என்பதுதான்! இதிலே என்ன தவறு? எதற்காக வெட்ட வேண்டும்? என்று கேட்டதற்கு, ஒரு காலத்தில் இராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோபுரத்திலே ஏறி நின்று சில கேள்விகளைக் கேட்டார். அவரைத்தான் நீங்கள் இந்த வசனத்தின் மூலம் கிண்டல் செய்கிறீர்கள்" என்றார்.

நாங்கள் என்ன விளக்கம் கூறியும் அந்த அதிகாரி அதைக் கேட்காமல் வெட்டிவிட்டார். அந்த அதிகாரி உண்மை தெரியாமல் அப்படிப் பேசியதால், இராமானுஜரின் வாழ்வில் உள்ள பல சம்பவங்களில் இந்தச் சம்பவம் எனது மனத்தைத் தொட்டது."

இராமானுஜர் பற்றிய தொடர் எழுதுவதால் அவரது கொள்கையை ஏற்றுக்கொண்டதாக ஆகிவிட முடியாது" என்று சொல்லியிருக்கிறீர்கள். ஒரு விஷயத்தில் உள்ளார்ந்த முழு ஈடுபாடு காட்டிக் கொள்ள முடியாத நிலையில், அது தொடர்பான படைப்பு வெற்றிகரமாக அமையுமா?

கொண்ட கொள்கை உறுதி வேறு; பிறரிடம் உள்ள நல்ல கொள்கைகளைப் போற்றுவது என்பது வேறு. அவ்வாறு பிறருடைய நல்ல கொள்கைகளைப் பாராட்டுகின்ற நேரத்தில், அந்த நல்ல உள்ளத்தைப் புரிந்துகொண்டு பாராட்ட வேண்டுமே தவிர, அதிலே முழு ஈடுபாடு இல்லை என்று கருதி குறை கூறக் கூடாது. ‘கம்பரசம்’ எழுதிய பேரறிஞர் அண்ணா அவர்கள்தான் கம்பருக்குச் சிலை எடுத்தார். திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை மாநகரில் என்னுடைய சிலையை வைத்த நேரத்தில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரைக் கொண்டுதான் அதனைத் திறந்து வைத்தார்கள். எனவே ‘இராமானுஜர்’ பற்றி எழுதுகிறேன் என்பதால், நான் அதிலே முழு ஈடுபாடு காட்ட மாட்டேன்" என்று கருத வேண்டாம்; யாரைப் பற்றி எழுதுகிறோமோ அவரைப் பற்றி உணர்வுகளில் மூழ்காவிட்டால், முழுமையாக எழுத முடியாது. அதேநேரத்தில் என்னுடைய கொள்கை உறுதிப் பாட்டிலிருந்து ஒரு சிறு துளியும் மாற மாட்டேன்" என்பதுதான் உண்மை."

ஒரு அரசியல்வாதி செய்யும் எல்லா செயல்களிலும் சிறிதளவாவது அரசியல் இருக்கும் என்பார்கள். அந்த வகையில் 2016 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த வேளையில், ஆத்திகர்களின் ஆதரவை அதிகப்படுத்திக் கொள்ளும் நோக்கமாக இந்த முயற்சியை எடுத்துக் கொள்ளலாமா?

நான் ஒரு அரசியல்வாதியாக மட்டும் வாழ்ந்திருக்கவில்லை என்பதையும், இலக்கியத்திலும் முழு ஈடுபாடு கொண்டுதான் வாழ்க்கையை நடத்தி வருகிறேன் என்பதையும் - என்னை உணர்ந்த தமிழ் மக்கள் நன்றாகவே அறிவார்கள். தி.மு. கழக ஆட்சியில் ஆத்திகர்களுக்காகச் செய்யப்பட்ட எத்தனையோ சாதனைகள் எல்லாம் தேர்தலை மனதிலே வைத்துக்கொண்டு செய்யப்பட்டவை அல்ல! நான் இராமானுஜர்" வாழ்க்கை வரலாற்றின் சில முக்கிய பகுதிகளை எழுதினாலும், எழுதாவிட்டாலும், நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியின் நான்காண்டு கால அராஜகங்களையும், கொடுமைகளையும் நேரடியாக அனுபவித்து வரும் தமிழ்நாட்டு மக்கள், அவர்கள் ஆத்திகர்களானாலும், நாத்திகர்களானாலும் 2016ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் எப்போது வரும் என்று இந்த ஆட்சிக்கு முடிவு கட்டக் காத்திருக்கிறார்கள்.

எனவே பொதுத்தேர்தலை மனத்திலே வைத்துக்கொண்டு, நான் இந்த முயற்சியில் ஈடுபட்டதாக ‘கல்கி’ நினைப்பது, அதற்கே உரிய குறும்புத்தனமே தவிர வேறல்ல!"

இராமானுஜர் வரலாறு எந்த வகையில் இந்தக்கால கட்டத்துக்குத் தேவையாக இருப்பதாக உணர்கிறீர்கள்?

பா.ஜ.க. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளவாறு இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமைந்திட வேண்டுமென்ற எண்ணத்தோடு செயல்படுவார்கள் என்றுதான் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மத்தியில் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றாலும், மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தாலும், இந்தியாவில் மதச் சார்பின்மை கொள்கையினைக் காப்பாற்றவும், சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும்; திராவிட முன்னேற்றக் கழகம் களத்திலே நின்று போராடத் தயங்கியதே இல்லை. 16வது நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்று, பொறுப்புக்கு வந்தவுடன், தொடக்கத்தில் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நாம் வரவேற்கத்தக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தார்கள். வரவேற்க முடியாத சில திட்டங்களைக் கொண்டு வர முயற்சித்த நேரத்தில், நாம் எடுத்துச் சொன்ன கருத்துகளை ஏற்று, அந்தத் திட்டங்களை திரும்பப் பெற்றார்கள். ஆனால், அண்மைக் காலமாக மத்திய ஆட்சிப் பொறுப்பிலே உள்ளவர்களில் சிலர் மதச் சார்பின்மைக் கொள்கையை கைவிட்டது மட்டுமன்றி, இந்தியாவை ‘இந்து ராஷ்டிர’மாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். குறிப்பாக

* இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே";

* இராமருக்குப் பிறக்காதவர்கள், முறை தவறிப் பிறந்தவர்கள்";

* பகவத் கீதை" - தேசிய நூல்;

* காந்தியாரைப் போன்றே தேச பக்தர் கோட்சே";

* காந்திக்குப் பதிலாக, கோட்சே நேருவைத் தான் சுட்டிருக்க வேண்டும்";

* நாடு முழுவதும் கோட்சேவுக்குச் சிலைகள் அமைக்க வேண்டும்";

* கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ் கிருதத்தைக் கற்பிக்க முயற்சி";

* கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவது";

* தில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக விடுதி மாணவர்களுக்கான சுற்றறிக்கையில் ஆங்கிலம் அகற்றப்பட்டு இந்தியை மட்டுமே பயன்படுத்துவது"

* 2021-ல் இந்தியாவை ‘இந்து ராஷ்ட்டிரமாக’ மாற்றுவது"

என்று பா.ஜ.க. அரசில் அங்கம் வகிக்கும் பொறுப்புள்ள அமைச்சர்கள், பா.ஜ.க.வை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை தலைவர்கள் மற்றும் இவைகளின் துணை அமைப்புகள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தும் - அறிக்கை வெளியிட்டும் வருகின்றனர். இத்தகைய வெளிப்படையான மதத் திணிப்பு, மொழித் திணிப்பு நடவடிக்கைகளும், மாற்று மதம் மற்றும் மொழியை, தரம் தாழ்த்தி வன்மத்தைக் கற்பிப்பதும் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிராகவும்- நாட்டின் அமைதியையும், வளர்ச்சியையும் குலைக்கும் செயலாகவும் அமைந்துவிடும் என்பதால், இந்த நேரத்தில் மதத்திலே புரட்சி செய்த - மனிதாபிமானம் மிக்க ஆத்திகரான ‘இராமானுஜர்’ பற்றி தொலைக்காட்சியிலே அறிமுகப்படுத்துவது இந்தக் காலக் கட்டத்துக்கு மிகவும் தேவை; அது அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் என்று நான் உணர்ந்தேன்."

ஸ்ரீ இராமானுஜரைப் பற்றி உங்களிடம் பத்து, பதினைந்து புத்தகங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். யாருடைய புத்தகம் இராமானுஜரைப் பற்றிய முழுமையான பார்வையைக் கொண்டிருக்கிறது?

இராமானுஜரைப் பற்றி பல புத்தகங்கள் என்னிடம் இருப்பது உண்மைதான்! நீண்ட நாட்களுக்கு முன்பு நான் படித்திருந்த அந்தப் புத்தகங்களை தற்போது மீண்டும் ஒருமுறை நினைவுக்காக கடந்த சில நாட்களாகப் படித்து வருகிறேன். ‘இராமானுஜர்’ பற்றி என்னிடம் இருக்கும் புத்தகங்கள் என்று எடுத்துக் கொண்டால், ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரான ராமகிருஷ்ணானந்தர் வங்க மொழியிலே எழுதி, தமிழில் பன்மொழிப் புலவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. எழுதியுள்ள ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாறு" - கவிஞர் வாலி அவர்கள் எழுதி வானதி பதிப்பகத்தார் வெளியிட்ட ராமானுஜ காவியம்" - டி.என்.சுகி சுப்ரமணியன் எழுதிய ஸ்ரீராமானுஜர்" - அருமை நண்பர், அருளாளர் ஆர்.எம். வீரப்பன் அவர்கள் மதிப்புரை எழுதி, மூத்த எழுத்தாளர் சாண்டில்யன் அவர்கள் எழுதியுள்ள மதப் புரட்சி செய்த மகான் இராமானுஜர்’ - பி.ஸ்ரீ. அவர்கள் தீட்டிய ஸ்ரீ ராமானுஜர்" - ஆர்.வீ.ஸ்வாமி அவர்கள் எழுதிய இராமானுச வைபவம்" - கங்கா ராமமூர்த்தி அவர்கள் எழுதிய ஸ்ரீராமானுஜர் வாழ்வில் 100 அற்புத நிகழ்ச்சிகள்" - குளித்தலை ஆசிரியர் ஆர். கிருஷ்ணஸ்வாமி அவர்கள் எழுதிய உய்விக்க வந்த உடையவர்" - ஜெகாதா எழுதிய ஸ்ரீராமானுஜர் வாழ்வும் தொண்டும்" என்ற நூல்கள் என்னிடம் இருக்கின்றன. ஒவ்வொரு எழுத்தாளரும், இராமானுஜரை பல்வேறு கோணங்களில் வடித்தெடுத்து தந்திருக்கிறார்கள். இதிலே யாருடைய புத்தகம் இராமானுஜரை பற்றிய முழுமையான பார்வையைக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்ப்பது சரியல்ல."

நாத்திகப் பிரச்சாரத்துக்காக நீங்கள் பல திரைப்படங்களில் கதை வசனம் எழுதியிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் எழுதப் போகும் இராமானுஜர் தொடரால் பாதிக்கப்பட்டு யாரேனும் ஒரு நாத்திகர் ஆத்திகராக மாறிவிட்டால்?

என்னுடைய கதை வசனங்களை - என்னுடைய பேச்சை - எனது கருத்துகளைக் கேட்டு, ஆத்திகர்கள் நாத்திகர்களான வரலாறுதான் உண்டு. அதைப்போலவே இந்தத் தொடரைப் பார்க்கும் ஆத்திகர்கள், நாத்திகர்களாக மாறத்தான் வாய்ப்பு உண்டே தவிர, நாத்திகர் யாரும் ஆத்திகர்களாகி விட மாட்டார்கள்."

அறிஞர் அண்ணா அவர்கள் தெரிவித்த ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பதுதான் உங்கள் கொள்கை. அந்த ஒருவன் யார்?

அந்த ‘ஒருவன்’தான் ‘இயற்கை’. பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று இந்தக் கருத்தைச் சொல்வதற்கு முன்பே திருமூலர் தெரிவித்த கருத்துத்தான் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பதாகும். தந்தை பெரியார் அவர்கள் ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை; கடவுளை நம்புகிறவன் காட்டு மிராண்டி’ என்றெல்லாம் மிகவும் கடுமையாகச் சொன்ன போது, பேரறிஞர் அண்ணா அவர்கள் அவருக்கே உரிய மென்மையான பாணியில் கூறியதுதான் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பதாகும்."

இராமானுஜரைத் தவிர உங்கள் மனத்தைக் கவர்ந்த வேறு யாரேனும் ஆச்சார்யார்களும், மகாபுருஷர்களும் இருக்கிறார்களா?

இராமானுஜரைத் தவிர, அவரைப் போலவே என் மனம் கவர்ந்தவர்கள் என் அருந்தமிழ் வளரப் பாடுபட்ட மாணிக்கவாசகரும், வள்ளலாரும், சேக்கிழாரும் ஆவர்!"

குட்டி பத்மினி குஷி!

தொலைக்காட்சித் தொடர்கள் எடுத்துவரும் குட்டி பத்மினிக்கு அது ஒரு குஷியான திருப்பம். ‘கலைஞர்’ தொலைக்காட்சிக்கு புதுத் தொடர்கள் தயாரிப்பது குறித்து விவாதம் நடைபெற்று வந்தது. மாமியார் - மருமகள் மோதல், சதி, குழிப்பறிப்பு வேலை என்று மெகா தொடர்கள் பல தொலைக்காட்சிகளில் அன்றாட பதற்றமாக இருக்கும் நிலையில் மாறுபட்ட ஒரு தொடர் எடுத்தா லென்ன என்ற எண்ணம் நெடு நாளாகவே என் மனத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

ஆதிசங்கரர், இராமானுஜர், இராகவேந்திரர் போன்ற மகான்களின் தத்து வங்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஏற்கெனவே நாயன்மார்களைப் பற்றியும், சைதன்ய மகாபிரபு குறித்தும் தொடர்கள் எடுத்துள்ளேன். அந்த பின்பலத்தோடு, இராமானுஜர் பற்றி எடுக்கலாம்; ஆனால் நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்களே!" என்று கலைஞரிடம் சொன்னேன்.

யார் சொன்னது? மதத்திலே புரட்சி செய்து, இன்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே சாதி காரணமாக மனிதர்களுக்குள் இருந்த ஏற்றத் தாழ்வை ஒழிக்கப் பாடுபட்டவர். என் மனத்தைக் கவர்ந்தவர். நானே கதை - வசனம் எழுதுவேன்" என்று எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் கலைஞர்" என்று சொல்கிறார் குட்டி பத்மினி.

தொடருக்கான வேலைகள் விறுவிறுவென்று நடக்கின்றன. கலைஞர் வசனங்களை டிக்டேட் செய்துவிடுகிறார். இராமானுஜராக நடிக்க புது முகத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள். மே மாதம் தொடங்க இருக்கிறது தொடர். இது ஒரு பிரியட் படமாக இருப்பதால் வெளி லோகேஷன்களில் படம் எடுக்கும்போது ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும்" என்கிறார் குட்டி பத்மினி. இராமானுஜர் தொடரை கலைஞர் எழுத இருக்கிறார் என்ற அறிவிப்பு சின்னத்திரை உலகில் மட்டுமல்ல; அரசியல் உலகிலும் அதிர்ச்சியலைகளைக் கிளப்பியிருக்கிறது என்பதுதான் இன்றைய டாக்.
நன்றி: கல்கி

இந்து மதம் என்றால் சகிப்புத்தன்மை உடையது.

11 Comments:

kothandapani said...

IV இல் கலைஞர் பேட்டியை ப்ளாக்கிட்டதே. அவர் ராமானுஜர் எழுதஆரம்பித்தததின் முதல் வெற்றி.

Anonymous said...

It has created fear in the hearts of all Tamil brahmins.

Anonymous said...

Mu Ka Muthu can be considered for Sri Ramanujar role . This will be apt when MUKAuka can write about Sri Ramanujar.

என் செல்வராஜ் said...

நாத்திகவாதி என்றாலும் வரலாற்றை
மாற்ற மாட்டார். எனவே தொடரை அவர் எழுதுவதால் அது பிராமணர்களுக்கு எதிராக இருக்கும் என்ரு பயப்படத்தேவையில்லை

Anonymous said...

கலைஞர் எழுதுறாருன்னதுமே பாப்பானுங்களுக்கெல்லாம் சும்மா அதுருது இல்லே

Anonymous said...

//கலைஞர் எழுதுறாருன்னதுமே பாப்பானுங்களுக்கெல்லாம் சும்மா அதுருது இல்லே//

Nayaikaan oru vaishanavan adutha thalaipu. pin pakkan pudunga podhu!!!!!!!!!!!!

Anonymous said...

agree with n.selvaraj.

Anonymous said...

எந்த நாத்திக மனிதனும் கடைசி காலத்தில் கடவுளை சரணடைவான், நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ, என்பது நியதி. திரு.கருணாநிதியும் அவ்வாறே ராமானூஜர் தொடர் எழுதுகிறார். இதில் எங்களை போன்ற பாப்பானுக்கு ஏன் அதிருது. வேணுமானால் மற்றவருக்கு தான் அதிரனும். வரலாற்றை மாற்றி எழுதினாலும் வரலாறு மாறாது. உங்கள் சின்ன புத்தி தான் தெரியும்.

Anonymous said...

எந்த நாத்திக மனிதனும் கடைசி காலத்தில் கடவுளை சரணடைவான், நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ, என்பது நியதி. திரு.கருணாநிதியும் அவ்வாறே ராமானூஜர் தொடர் எழுதுகிறார். இதில் எங்களை போன்ற பாப்பானுக்கு ஏன் அதிருது. வேணுமானால் மற்றவருக்கு தான் அதிரனும். வரலாற்றை மாற்றி எழுதினாலும் வரலாறு மாறாது. உங்கள் சின்ன புத்தி தான் தெரியும்.

'நெல்லைத் தமிழன் said...

ஜீவகாருண்யத்தைப் பற்றி பிரசங்கம் பண்ண, கசாப்புக் கடைக்காரரைக் கூப்பிடுவதும் ஒண்ணு.......

kg gouthaman said...

இந்து மதன்! அது யாரு மிஸ்டர் மஞ்சள் கமெண்ட் ?