பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 04, 2014

எதிர்கால தமிழக அரசியல்! - சோ

பதினெட்டு வருடங்களாக நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்ட ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்கள் - ஆகியவற்றின் அடிப்படையில் பெங்களூரு விசேஷ நீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்மானித்து, அவருக்கு நான்கு ஆண்டு சிறைவாசமும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது; ஜெயலலிதாவுடன் கூட மூன்று பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. தங்கள் முன் வைக்கப்பட்ட ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்திருந்தாலும், அந்த ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்கள் அடிப்படையில் தீர்ப்பு இப்படி மட்டும்தான் அமைய முடியும் என்று சொல்லி விட முடியாது. அதே ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில், ‘எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை’ என்றும் தீர்ப்பு வந்திருக்க முடியும். அப்படி ஒரு தீர்ப்பு வருவதற்குப் போதுமான ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டதாக வழக்கின் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

இப்போது வந்துள்ள தீர்ப்பைப் பாராட்டி, ‘நீதிபதி நேர்மையாளர், துணிவு மிக்கவர்’ என்றெல்லாம் கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. ‘குற்றம் எதுவும் நடக்கவில்லை’ என்று தீர்ப்பு வந்திருந்தால், இந்த மாதிரி பாராட்டுக்கள் வந்திருக்காது. அதாவது ‘ஜெயலலிதா குற்றவாளி என்று கூறி, அவருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படா விட்டால் நீதிமன்றத்தின் நேர்மையே சந்தேகத்துக்குரியதாகி விடும்’ என்ற அளவுக்கு வெளியே பிரசாரம் நடந்தது. அந்த மாதிரி சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில், இப்போதைய தீர்ப்பு அமைந்திருக்கிறது.

தீர்ப்பு இவ்வளவு கடுமையாக இருக்கும் என்று நாம் உட்பட பலரும் எதிர்பார்க்கவில்லை. தி.மு.க. மட்டும் எதிர்பார்த்தது; இதையே நம்பியிருக்கிற அளவுக்கு அக்கட்சியின் தலைவரும், அம்மாதிரி எதிர்பார்ப்புடனேயே கருத்துக்களைக் கூறி வந்தார்; இவர்கள் எப்படி இந்த மாதிரி ஒரு நிலைப்பாட்டுக்கு முன்கூட்டியே வந்தனர் என்பது நமக்குத் தெரியவில்லை. இதற்கு மேல் இது பற்றி விவரித்துக் கொண்டு போனால், அது ‘நீதிமன்ற அவமதிப்பு’ என்ற ஆபத்தான எல்லைக்குள் நுழைவதாகி விடும்.

சம்பந்தப்பட்ட சொத்துக்களைப் பற்றி, தாங்கள் கொடுத்த விவரங்களை வருமான வரி இலாகா ஏற்றுக் கொண்டுள்ளது என்ற ஜெயலலிதா தரப்பினரின் வாதத்தை நீதிமன்றம் பரிசீலித்ததா, இல்லையா என்று தெரியவில்லை. தீர்ப்பின் முழு விவரங்கள் வெளியாகிறபோதுதான், இது பற்றியெல்லாம் நாமும் ஒரு கருத்துக்கு வர முடியும்.

இப்போது வந்திருக்கிற தீர்ப்பு இந்த விவகாரம் பற்றிய ஒரு இறுதியான முடிவல்ல. அப்பீல் இருக்கிறது. அதில் மறுபரிசீலனை நடக்கும். அப்போது இன்றைய தீர்ப்பு ரத்தாகக் கூடிய வாய்ப்பும் உண்டு. ஜெயலலிதா தொடர்பான வழக்குகளிலேயே கூட, ஓரிரு வழக்குகளில் கீழ்கோர்ட் விதித்த தண்டனை, அப்பீலில் ரத்தாகியுள்ளது. அம்மாதிரி வாய்ப்புகள் இருக்கிற சூழ்நிலையில், அவருடைய அரசியல் வாழ்க்கையே ஒரு பெரும் சோதனைக்கு உள்ளாகி விட்டது போல் நினைக்க வேண்டிய அவசியமில்லை.

சொல்லப் போனால், அவருக்கு மக்களிடையே ஏற்கெனவே உள்ள அபரிமிதமான ஆதரவு, இந்தத் தீர்ப்பின் மூலம் அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் உண்டு. ஏனென்றால், தீர்ப்பின் கடுமை, மக்களிடையே ஜெயலலிதாவின் பக்கம் ஒரு அனுதாப சிந்தனையைத் தோற்றுவித்திருக்கிறது. ஆகையால், இந்தத் தீர்ப்பு தங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி விட்டதாக தி.மு.க. கருதிக் கொள்ள முடியாது. இந்த வழக்கோடு 2ஜி சமாச்சாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து, அக்கட்சியை நிராகரிக்கிற மனநிலையிலிருந்து மக்கள் மாறாமல் இருப்பார்கள் என்றுதான் எதிர்பார்க்க முடியும்.

இப்போது ஒரு புதிய முதல்வரின் கீழ் அமைகிற அ.தி.மு.க. அரசு, ஜெயலலிதாவின் வழிகாட்டுதலுடன்தான் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது மாநிலத்திலும், மத்தியிலும் அரங்கேறிய அரசியல் அவலங்களும், ஊழல் விவகாரங்களும் மக்கள் மனதை விட்டு இன்னமும் அகலவில்லை.

இங்கு அமையவிருக்கிற அரசு செயல்படுகிற விதத்தின் மூலமாக, தி.மு.க.வுக்கு மீண்டும் செல்வாக்கு வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இந்தத் தீர்ப்பின் காரணமாக தமிழக அரசியல், குழப்பத்தைச் சந்திக்க நேரிடலாம். அந்தக் கோணத்தில் பார்க்கிறபோது, இந்தத் தீர்ப்பு ஜெயலலிதாவுக்குப் பின்னடைவோ, இல்லையோ - தமிழக அரசியல் எதிர்காலத்துக்கு, ஒரு சோதனைக் காலமாகி விடும்.


நண்பன் ல என்னடா நல்ல நண்பன் கெட்ட நண்பன் நண்பணாலே நல்லவன் தான் - ராஜா ராணி படத்தில் வரும் வசனம்.

19 Comments:

NAGARAJAN said...

மாமியார் உடைத்தால் மண் குடம் பழமொழிதான் நினைவிற்கு வருகின்றது.

1991 - 96 ஆண்டுகளில் ஜெ சசிகலா ஆடிய ஆட்டத்தினை யாரும் மறக்கவே முடியாது.

அந்த 5 ஆண்டுகளில் ஆட்சி நடத்திய விதத்தினைக் கண்டுதான் - இதே சோ - ஜெயை கடுமையாக எதிர்த்தார்.

இபோது வந்துள்ள சொத்துக் குவிப்பு வழக்கு அப்போது ஆண்ட 5 ஆண்டுகளில் பண்ணிய ஊழல் பற்றியது. இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?

அப்பீல், இறுதித் தீர்ப்பு என்று பேசும் சோ, இதே அளவு கொலை திமுக சம்பத்தப் பட்ட வழக்குகளிலும் காட்டுவாரா?

சோ நேரடியாக அதிமுகவின் கொ ப செ ஆக ஆகி விடலாம். இட்லி வலை துணை கொ ப செ ஆகி விடலாம்.

biddu said...

ஐயா. ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி அதி 30லட்சம் வருமான வரி கட்டி விட்டால் அதை எந்த நீதி மன்றமும் கண்டுகொள்ளக் கூடாது என்று சோ வாதிடுகிறார். சோ ஒரு நேர்மையாளர் என வாதிடும் அவரது ஆதரவாளர்களுக்கு இது ஒரு செருப்படி. அதுவும் சோவின் செருப்பு கூட கிடையாது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசியின் பழைய செருப்பு...ஐயோ...ஐயோ...!

Anonymous said...

சோ என்ன சொல்ல வருகிறார்?

எந்த வழக்கானாலும் ஒரு தரப்பு குற்றம் செய்யப்படவில்லை என்பதற்கு ஆதாரங்களும், மறு தரப்பு குற்றம் இழைக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களும் பதிவு செய்வார்கள். ஆகவே இரண்டு தீர்ப்புகளில் எந்த ஒன்றும் சாத்தியமே. இரண்டையும் ஆராய்ந்து தீர்ப்பு சொல்லத்தான் நீதிபதி இருக்கிறார். அதுதான் இங்கு நடந்துள்ளது!

சாட்சியங்களையும் ஆதாரங்களையும் வைத்து ஜெயலலிதா நிரபராதி என்றும் தீர்ப்பு வந்திருக்க கூடும் என்று கணித்த "வழக்கின் விவரமறிந்தவர்கள்", அதிமுகவைச் சேர்ந்தவர்களா அல்லது எந்த கட்சியையும் சேராத நடுநிலையாளர்களா என்பதையும் சோ தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!!

ஜெயலலிதாவின் ஆலோசனையின் படி ஆட்சி நடப்பதற்கும், அவரது ஆணையின் படி ஆட்சி நடப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு ! முன்னது என்றுமே நடந்ததில்லை! முதல்முறை அவர் ஆறே மாதங்கள் பதவியில் இல்லாததனால் தாக்கம் அதிகமாக இல்லை. இரண்டு+ வருடங்கள்? ம்ம் ................

அமைச்சர்கள் தங்களுடைய சொந்த முயற்சியில்/அறிவில் (!) ஆட்சியை நடத்தினால் தமிழ் நாடும் கட்சியும் பிழைக்கும். அதற்கு முதல் சோதனை - இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களும், வன்முறையும், கடையடைப்பும், முகம் சுளிக்க வைக்கும் (நகைச்சுவை) போஸ்டர்களும் அறவே நிறுத்தப்படவேண்டும். செய்வார்களா?

மஞ்சள் கமெண்ட் ஒரே டமாஸ் !!!! கூட்டுக்கொள்ளை அடிப்பவர்கள் நல்ல நண்பர்கள் ! கூட இருந்தும், நண்பன் செய்வது தவறென்று தெரிந்தும், அதை தடுக்க முயலாதவர்கள் கெட்ட நண்பர்கள்! சோ எந்த வகையை சார்ந்தவர் என்பது அவருக்கே தெரிந்திருக்கும் !!

2G தீர்ப்பு எப்பொழுது வரும்? கடையடைப்பு, வன்முறை, போஸ்டர், உண்ணா விரதம் நிறைந்த அடுத்த நாடக அரங்கேற்றத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் !! நாடகக் குழுவினர் தயாராக உள்ளனரா? ஆனால் ஒன்று; குழுவின் தலைவர் 1974இல் கற்றுக்கொண்ட பாடத்தை நன்றாக பயன்படுத்தி உள்ளார்! அவரை சூழ்ந்திருப்பவர்கள் உள்ளே போவார்களே தவிர, அவர் வெளியேதான் இருப்பார்! அறிக்கை விட ஆள் வேண்டுமல்லவா!!

- கல்யாணராமன் சுப்ரமணியம்

Anonymous said...

சங்கரராமன் கொலை வழக்கில் அரசு அப்பீல் செய்ய வேண்டாம் என்று கருத்து கூறியபோது அவருடைய நேர்மை பல் இளித்தது. இந்த சம்பவத்தில் அரசியில்வாதியை விட கேவலமானவர் என்று நிருபணம் ஆகியுள்ளது.
​​
நேர்மையை அரசியலில் மட்டுமல்ல அரசியலை வைத்து பத்திரிக்கை நடத்துபவர்களிடம் இருந்தும் இனி எதிர்பார்க்க முடியாது. ஏறத்தாழசோ 40 ஆண்டு காலம் நேர்மையாக பத்திரிக்கை நடத்தவில்லை, நடத்துவதாக ஏமாற்றி உள்ளார். இதில் நேர்மையை மட்டும் நம்பியிருந்த வாசகர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

சோவிற்காவது வயதாகிவிட்டது அதனால் புத்தி பேதலித்து விட்டது என்று கூறி தப்பித்து விடலாம். ஆனால் IVக்கு என்ன ஆயிற்று?

Anonymous said...

ஜெயலலிதாவிற்கு சசிகலாவுடன் நட்பு ஏற்பட்டபோது இந்த சோதான் அன்று சசிகலா ஜெயலிதாவை நோக்கி 'வாராய்...நீ வாராய் ...என்று படுகுழியை நோக்கி அழைப்பதாக... கார்டூன் போட்டதாக ஞாபகம் .....

Anonymous said...

திரு சோ அவர்களுக்கு 91 முதல் 95 வரை வருமான வரியைக் கூட செலுத்தாத ஜெ யின் செயல் அருவருக்கத்தக்கதாய் இல்லை. 98 ல் அளிக்கப்படும் ரெட்ராஸ்பெக்டிவ் வருமானவரிக்கான ரிட்டர்னில் வருமானம் 9.3 கோடியும் செலவு 11.5 கோடியும் காட்டியது இவர் கண்ணில் பட மறுக்கிறது. கேட்டரேக்ட்டோ என்னவோ???
எனது பார்வையில் இது ஜெ-யின் ஆணவத்துக்குக் கிடைத்த அடி, அவ்வளவுதான்.

இந்த நேரத்தில், வை கோ பொடாவில் கைது செய்யப்பட்டதையும், நெடுமாரன் கைது செய்யப்பட்டதையும் வேறு பல அசிங்கங்களையும் ஞாபப்படுத்திக்கொள்ளட்டும்....

Anonymous said...

CHO=S DOUBLE STANDARDS IN THIS CASE ARE REALLY UNBELIVEABLE.
ARUVERUPANAVAI.
WHEN COURTS DECIDED IN FAVOUR OF MODI HE WELCOMEDIT.
SO WHEN IT IS YOUR MAN THE JUDGEMENTS ARE OK.OTHERWISE THEY ARE BAD.
WILLHE WRITE LIKE THIS FOR KANIMOZHI AND RAJA.
IT WAS HE WHO BROUGHT TOGETHER TMC(MOOPANAR) AND DMK TO DEFEAT JAYALALITHA.
IT WAS THUGLAK WHICH CARRIED RAJINI'S ARTICLES AGAINST JEYALALITHA.
THE PHOTO OF JEALALITHA/SASIKALA WITH ALL JEWELLARY WAS PUBLISHED BY THUGLAK.
HE SEEMS TO HAVE FORGOTTEN WHAT ALL HE WROTE ABOUT SUDAKARAN'S MARRIAGE.
IT IS AGREED THAT KARUNANIDHI IS NO ANGEL. MOREOVER HE IS ANTI NATIONAL ALSO.
THAT DOES NOT CALL FOR THIS BLIND SUPPORT.
BUT CHO'S WRITING IN THIS CASE HAS TURNED AWAY LOT OF HIS ADMIRERS.
HIS CREDIBILITY/NEUTRALITY HAS GONE AWAY.
IT IS SAD THAT SUCH MEN ALSO FALL.
WHAT A GREAT FALL.

Anonymous said...

i agree with Mr.Cho.

பொன்.முத்துக்குமார் said...

Blood is thicker than water கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு thicker-ஆகவா ? என்ன படித்து என்ன விமர்சித்து என்ன ... சோ மேல் பெரும் பரிதாபமே மேலிடுகிறது.

ஐயோஓஓஓஓ பாஆஆஆஆஆஆவம்.

NAGARAJAN said...

சோ சில காலம் 1996 - 2000 ஆண்டுகளில் ஜெயை எதிர்த்தது ஊழல் காரணங்களுக்காக அல்ல. இவர்கள் இருவரிடமும் உள்ள தனிப்பட்ட ஈகோ சம்பந்தப்பட்டதுதான். இவர் எழுதிய அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் தொடரில் - ஜெ பற்றி மட்டும் எழுதவே இல்லை.

இந்த தீர்ப்பு தவறு என்று தைரியமாக எழுதாமல் (இவாறு எழுதினால் அது நீதி மன்ற அவமதிப்பாகாது ), இதிலும் தி மு க மீதே குற்றம் காணும் சோவை என்ன செய்வது?

இதே தீர்ப்பு ஜெவிற்கு சாதகமாக வந்திருந்தால், அப்போது அது சரியான தீர்ப்பாக உள்ளது என்று இதே சோ கூறியிருப்பார். எதிராக வந்ததால் , இந்தத் தீர்ப்பை நேர்மையாக எதிர் கொள்ளாமல், கண்ட படி எழுதுவது - சிறிதும் நேர்மையில்லை. வக்கீலாக பணியாற்றிய சோவிற்கு இது தெரியாமல் போனதுதான் விந்தை.

Anonymous said...

தலையங்கம் ஒரே வரியில் எழுதியிருக்கலாமே...ஜெயலலிதாவின் ஊழல் வழக்குகள் நீதி மன்ற தீர்ப்புக்கு அப்பாற்பட்டவை என்று .....

Anonymous said...

ஒன்று இரண்டு வருடமில்லை .....
ஏறத்தாழ நாற்பது வருடங்கள் ....... நேர்மையானவனா .... எப்படிடா நடிச்ச? நீ உண்மையிலேயே நல்ல நடிகன்தான் ....நேர்மையான வாசகர்கள் பாவம் கமெடியர்கள் ...

Anonymous said...

சோ, இனி துக்ளக்கை மூடி விட்டு சசிகலாவிற்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம்.

Anonymous said...

குற்றம் காண முடியாததால் அப்துல் கலாமை நக்கலும் நையாண்டியும் செய்தவர்தான் இந்த சோ. இவர் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை விட பத்து மடங்கு இழிவானவர்.

Anbu said...

ஒரு விஷயத்தில் சோவின் கருத்து என்ன என்று அறிய பலரும் விரும்பிய காலமெல்லாம் உண்டு. அதெல்லாம் சுத்தமாக இப்போது கிடையாது. ஊழல் செய்தது யாராக இருந்தாலும் எதிர்த்து வந்தவர், இப்போது ஜெ.யின் ஊழல்களுக்கெல்லாம் சப்பைக்கட்டு கட்ட ஆரம்பித்து விட்டார். அவருடைய இந்த கட்டுரை கூட, ஜெ.யின் பல பினாமி கம்பெனிகளில் அவரும் ஒரு டைரக்டர் என்று அரசல் புரசலாகப் பேசப்பட்டதை நிரூபிப்பது போல் உள்ளது.

Anonymous said...

yoooooooooooooooou toooooooooooooooooo choooo

Anonymous said...

yoooooooooooooooou toooooooooooooooooo choooo

Anonymous said...

இங்கே பாருங்கள் இவர் இணைய தள சோ....

http://vimarisanam.wordpress.com/2014/10/01/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81/

Anonymous said...

http://vidhushagan.blogspot.ae/