பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 03, 2014

இன்றைய ஈராக் - ஈராக்கிலிருந்து ஜெயகுமார் - பகுதி - 2


சமீபத்தில் இட்லிவடையில் நான் எழுதியதின் அடுத்த பகுதி இது. சமீபத்திய களநிலவரங்களையும், கேள்விப்பட்டதையும் வைத்து இந்த ரிப்பொர்ட்.

தேர்தலுக்கு பிறகு புதிய பாராளுமன்றம் கூடியதுமே ஒரு வார காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஈராக்கின் அரசியல் முழுக்க முழுக்க ஈரானைச் சார்ந்தது. இந்தநிலை சதாமின் அழிவுக்குப்பின்னர் உண்டான நிலை.

சதாம் காலத்தில் ஷியாக்களும், குர்துகளும் கொடூரமாக ஒழிக்கப்பட்டனர். பெரும்பான்மையாக ஷியாக்கள் இருந்தும் அவர்களின் இமாம்களை தரிசிக்கக்கூட பயங்கர கெடுபிடிகளை விதித்தார் சன்னி பிரிவைச் சேர்ந்த சதாம் ஹுசைன். நான் (சதாம் ஹுசைன்) உங்கள் இமாம்களை விட பெரியவன் எனச் சொல்லி ஷியாக்களின் உணர்வுகளை புன்படுத்தினார். சதாமைப் பார்த்து நீங்கள் தப்பு செய்கிறீர்கள் எனச் சொன்ன ஷியா மதகுருமார்களை கொன்றழித்தார். இதெல்லாம் சதாம் உயிருடன் இருந்தவரையில். சதாம் ஒழிந்து மீண்டும் மக்களாட்சி மலர்ந்ததும் பெரும்பான்மையினரான ஷியாக்கள் ஆட்சிக்கு வந்தனர்.

அன்றிலிருந்து சதாம் ஷியாக்களுக்குச் செய்ததை ஷியாக்கள் சன்னிகளுக்கு செய்ய ஆரம்பித்தனர். குர்திஸ்தான் பிரிவினை கோரிக்கை சதாமின் காலத்துக்கு முந்தையது. ஆனால், தொடர்ந்து அந்த கோரிக்கை அடக்கப்பட்டே வந்திருக்கிறது. ஈராக்கில் மக்களாட்சி மலர்ந்தபின்னரும்கூட குர்திகள் ஈராக்குடன் இணைந்து இருப்பதை விரும்பவில்லை. தனிநாடாக போய்விடவேண்டும் என்றே நினைத்தனர் / நினைக்கின்றனர். அவர்களின் எண்ணம் சரியே என்பதற்கு வசதியாக குர்திஸ்தானத்துக்கு கிடைக்க வேண்டிய எண்ணெய் விற்பனையின் பங்குப்பணம் சரியாக கொடுக்கப்படவில்லை. இன்றைக்கும் பாக்தாத் கொடுத்தால்தான் சம்பளம் என்ற அளவில் நிலை. எண்னெய் வளம் இருந்தும் பிச்சைக்காரர்களைப்போல நடத்துவதால் பயங்கர கடுப்பில் இருக்கின்றனர். இதன் விளைவு தனி நாடு பிரிவினை கோரிக்கை இன்றைக்கு முழு உச்சத்தில்.

ஐ எஸ் ஐ எல் மோசுலின் உள்ளே புகுந்ததும் குர்துகள் செய்த முதல் வேலை குர்திஸ்தானின் பகுதி என அவர்கள் நம்பும் திக்ரித் பகுதியின் எண்ணெய் வளங்களை பாதுகாக்க ஆரம்பித்தனர். (குர்திகளின் மிலிட்டரியில் கிட்டத்தட்ட 1,25000 பேர் இருக்கின்றனர். இவர்கள் ஈரக்கிய மிலிட்டரி அல்ல. குர்திஸ்தானத்து மிலிட்டரி) இன்றைக்கு ஐ எஸ் ஐ எல்லின் பரவல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டதில் குர்திகளுக்கும் பங்குண்டு.

இந்த நிலையில் கடந்த ஜூலை 1 ம் தேதி கூடிய பார்லிமெண்டில் குர்திகள் எங்களுக்கு தனி நாடு தவிர வேறு வேண்டாம் எனச் சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்தனர்.

சுன்னி இஸ்லாமியர்கள் எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவமோ அல்லது உரிய மரியாதையோ வழங்கப்படுவதில்லை, அது கிடைக்கும்வரை நாங்களும் வெளிநடப்பு செய்கிறோம் எனச் சொல்லி வெளியேறினர்.

ஈராக்கின் ஷியாக்களுக்குள்ளேயே நூரி அல் மாலிக்கி மூன்றாம் முறையாய் பிரதமர் ஆக முனுமுனுப்புகள் இருக்கிறது. இருப்பினும், இன்றைக்கு அவரைவிட்டால் வேறு வழியில்லை என்பதால் மற்ற ஷியாக்கள் அடக்கி வாசிக்கின்றனர்.

இன்றைய தேதிக்கு பார்லிமெண்டைவிட ஈராக்கின் ஐ எஸ் ஐ எல்லால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்பதே முதல் வேலையாக இருக்கும் நேரத்தில் இந்த சண்டைகள் முட்டுக்கட்டையாய் இருக்கின்றன.

சுன்னிகள் கேட்கும் மரியாதையும், பிரதிநிதித்துவமும் கொடுத்தால் ஐ எஸ் ஐ எல்லை நாங்களே விரட்டுகிறோம் என்கிறார்கள் சுன்னி பிரதிநிதிகள்.

இப்போதே ஐ எஸ் ஐ எல்லின் போக்கு பிடிக்காத சுன்னி குழுக்கள் ஈராக்கின் ராணுவத்துக்கு துப்புகளும், உதவியும் கொடுத்து ஐ எஸ் ஐ அல்லை திக்ரித்திலிருந்து வெளியேற்ற உதவுகின்றனர்.

அமெரிக்காவும் எல்லோரையும் ஒருங்கினைத்த, பிரதிநிதித்துவம் வழங்கும் ஒரு பார்லிமெண்ட்டை அமையுங்கள் என அழுத்தம் கொடுத்து வருகிறது.

இன்றைய தேதிக்கு ஐ எஸ் ஐ எல்லின் முன்னேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நூர் அல் மாலிக்கி அமெரிக்காவின் கருத்துகளை ஏற்பதைப் பொறுத்து ஐ எஸ் ஐ எல் விரட்டியடிக்கப்ப்டுமா இல்லை அந்த பூச்சாண்டியை வைத்து நூர் அல் மாலிக்கியை மிரட்டுவார்களா என்பது தெரியும்.

அமெரிக்க படைகள் இன்றைக்கு பாக்தாதில் இல்லாதிருந்தால் சில நாட்களுக்கு முன்னரேயே பாக்தாத் ஐ எஸ் ஐ எல்லின் கையில் வீழ்ந்திருக்கும். ஐ எஸ் ஐ எல்லுக்கும் யாருடன் மோதப்போகிறோம் என்பது தெரிந்திருப்பதால் முன்னேறாமல் பிடித்த இடங்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயன்று வருகிறது. இந்த இடைவெளியில் உலகம் முழுக்க ஜிகாதிகளை ஒன்று திரட்ட முயல்கிறது ஐ எஸ் ஐ எல். ஏற்கனவே செசன்யா பிரிவினைவாதிகளின் தலைவன் மோசுலில் இருப்பதாக் சொல்கிறார்கள்.

பாக்தாத் அரசுக்கு ஈரானின் ராணுவ உதவியும், அமெரிக்க உதவியும் இருக்கிறது. இந்த ஐ எஸ் ஐ எல் பூதத்தை வைத்துக்கொண்டு ஈராக்கில் எல்லா இன மக்களும் இணைந்த ஒரு ஆசை அமைக்க அமெரிக்கா முயல்கிறது. ஆனால், ஈரானின் இன்ஃப்ளுயன்ஸ் எவ்வளவு என்பதைப்பொறுத்தே அரசியல் சதுரங்கம் மாறும்.

காலிஃபேட் அல்லது இஸ்லாமிய அரசாங்கம் என்பது அவர்களே சொல்லிக்கொள்வதுதான். இப்போது ஈராக்கில் இருக்கும் 500 அமெரிக்க படைகளுக்கு உத்தரவு கிடைத்தால் அந்த காலிஃபேட் அரசாங்கத்தை இரண்டு அல்லது மூன்று நாட்களில் சிதறடித்து விடுவார்கள். இத்தனைக்கும் ஐ எஸ் ஐ எல் வழக்கமான கொரில்லாப் படைகளின் உத்தியான மக்களுடன் கலந்து திரிந்து தங்களை பாதுகாத்துக்கொண்டுள்ளனர். இருந்தாலும் அமெரிக்காவின் உளவும், நவீன இயந்திரங்களும் துல்லியமாக கண்டுபிடித்து தாக்கும் வல்லமையுள்ளவர்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஒபாமாவிடமிருந்து ஒரு ஓகே. ஆனால், அது கிடைப்பது நுர் அல் மாலிக்கியின் கையில் இருக்கிறது.

பாஸ்ரா நிலவரம்

எந்த வித்தியாசமும் இல்ல. வழக்கம்போல இயங்குகிறது. வழக்கமான விமான சேவைகள் அப்படியே இருக்கிறது. எல்லா விமானங்களும் காலி இருக்கைகள் இல்லாமல் முழுதும் ஆட்களுடன் வருகிறது, ஆன்களும், பெண்களுமாக.

பாக்தாத்

அமெரிக்க படைகள் பாக்தாத் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளனர். ட்ரோன்கள் தினமும் 20 முதல் 30 தடவைகள் பாக்தாதையும், அமெரிக்க தூதரகத்தையும் சுற்றி வருகின்றன. அமெரிக்கர்கள் இருப்பதால் இனி ஐ எஸ் ஐ எல்லை உள்ளே விட அமெரிக்காவும் விடாது. ஐ எஸ் ஐ எல்லுக்கும் பாக்தாதுக்குள் நுழைய முற்படுவது தற்கொலை என்பது தெரிந்திருக்கும். பாக்தாத்துக்குள் இருக்கும் ஐ எஸ் ஐ எல் மக்களும் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள்.

திக்ரித் மற்றும் மோசுல் :

திக்ரித்தில் வான் மற்றும் தரைவழி தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றது. ஆனால், ஈராக்கிய படைகளின் கட்டுப்பாட்டில் இன்னும் வரவில்லை. 40 இந்திய மக்களின் கதி என்ன என்பது இன்னும் தெரியவில்லை. நம் தூதரக அதிகாரிகள் பிரச்சினை ஏதும் இல்லாத பாஸ்ராவிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் இருக்கும் இந்தியர்களை பிடித்து ஊருக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் செய்ய வேண்டியது பாக்தாத்திலும், அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும், மோசுல் மற்றும் திக்ரித்திலும். ஆனால், அங்கு ஏதும் சமீபத்தில் இந்தியர்களை வெளியேற்றியதாக தெரியவில்லை.

மக்களின் பொதுவான மனநிலை

ரமலான் மாதம் நடக்கிற படியால் மக்கள் சண்டை குறையலாம் என நம்பிக்கொண்டிருக்கின்றனர். கெர்பலா மற்றும் நஜஃப் அருகிலேயே நேற்று குண்டு வெடித்திருக்கிறது. எல்லாம் உள்ளூர் ஸ்லீப்பிங் செல்களின் கைவரிசை. வழக்கம்போல அல்லாவின்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு ஏதேனும் அதிசயம் நடக்கவும், நூர் அல் மாலிக்கி எந்த பிரச்சினையும் இன்றி மீண்டும் பிரதமர் ஆகவும் விரும்புகின்றனர்.

இந்த ”தாஷ்” ஒழியக்காத்திருகின்றனர் ஈராக்கியர்கள். (தாஷ் - ஐ எஸ் ஐ எல் சொல்லிக்கொள்ளும் விடுதலை இயக்கத்தை கொச்சைப்படுத்தும் ஒரு சொல். ஷியாக்கள் ஐ எஸ் ஐ எல்லை இந்த வார்த்தையைக் கொண்டே குறிக்கின்றனர்)

ஜெயக்குமார்

3 Comments:

Anonymous said...

Well prepared article by Mr. Jayakumar based on the ground reality. Such kind of articles needs to be published frequently.

rk said...

The whole Iraq conspiracy is of American making. They went in with the excuse of WMD where there was none. The target is divide Iraq into 3 parts, Sunnis/Shites/Kurds and keep a check on recalcitrant Iran. ISIL is backed by Saudis who in turn is backed by USA. Who is supplying tanks and weapons to ISIL? Why USA is preventing Iraq from bombing ISIL holdings?

Anonymous said...

Usa propose...these isil dispose..