பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 25, 2014

இன்றைய ஈராக் - ஈராக்கிலிருந்து ஜெயகுமார்

விசா காலாவதியனதால் கடந்த 14ம் தேதி பாஸ்ராவிலிருந்து ஊருக்கு வந்து சேர்ந்தேன். புறப்படும்போதே ஈராக்கின் வடக்கில் புகைச்சல். ஆனால், இப்படி ஒரு குழு திடுதிப்பென்று மோசுல் மற்றும் டிக்ரித் நகரங்களை கைப்பற்றும் என்றும் பாக்தாத்தின் எல்லைக்கு 30 கிலோமீட்டர் தூரத்திற்குள் வந்துவிடுவார்கள் என்றோ ஈராக் அரசு உட்பட யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.

நான் ஊரில் இருந்த 8 நாட்களும் நம் தொலைக்காட்சி மக்கள் ஈராக்கை குறித்து வளைத்து வளைத்து செய்திகளை வெளிட்டுக்கொண்டிருந்தனர். வீட்டில் எல்லோரும், உறவினர்களும், நண்பர்களும் அப்பாடா, நீ தப்பிச்சு வந்துட்ட என சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால், நான் இன்னும் 10 நாட்களில் பாஸ்ரா கிளம்பிவிடுவேன் என்பதைச் சொல்லி இருக்கவில்லை.

முதலில் இந்த பிரச்சினையின் அடிநாதம் ஷியா, சன்னி பிரச்சினை மட்டுமே. தற்போதைய பிரதமரான நூர் அல் மாலிக்கி பதவி ஏற்றதும் செய்த முதல் வேலை சன்னிகளை ஓரம் கட்டியது. அவகளின் பகுதிகளுக்கு எந்த வசதியும் கிடைக்காமல் பார்த்துக்கொண்டது. சன்னி பிரிவு தலைவர்களை கட்டம் கட்டி வரிசையாக அழித்தது, அதற்கு உண்டான எதிர்ப்புக் குரல்களை நசுக்கியது இப்படியாக பல விஷயங்கள்.

அதன் பின்னர் சன்னிகள் வெகுண்டதும் முதலில் ஓடி ஆதரவு கேட்டது அமெரிக்காவிடம். அப்போதே அமெரிக்கா இது உங்கள் உள்நாட்டு விவகாரம், நாங்கள் இனி வரமாட்டோம் எனச் சொல்லி விலகிக்கொண்டது. அதன்பின்னர், சிரியாவில் சென்று பயிற்சி பெற்ற ஈராக்கியர்கள் மற்றும் சிரிய தீவிரவாதிகள் இணைந்து ஒரு படையாய் திடீர் தாக்குதல் நடத்த ஈராக்கிய படையினர் திக்குமுக்காடிப் போனார்கள். உண்மையில் அந்த தீவிரவாத கும்பல்கள் ஈராக் ராணுவம் மற்றும் போலிஸின் முன்பு சின்ன கொசு. நினைத்திருந்தால் நசுக்கி இருக்கலாம். ஆனால், போலிஸிலும், ராணுவத்திலும் இருந்த சன்னி இன ஆபிஸர்கள் ஏதும் செய்யாமல் இருந்து அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தனர். சிலர் வேண்டுமென்றே ஆயுதங்களையும், வாகனங்களையும் “பறி கொடுத்தனர்” இதுவரை 57 போலிஸ் ஆபிசர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். (3 ஸ்டார் அலுவலர்கள். போலிஸில் கிடைக்கும் ஈராக்கின் உயர்ந்த ஸ்டார் இது)ஆரம்பத்தில் ஐ எஸ் ஐ எல் வரவை ஆரவாரமாக கொண்டாடிய மோசுல் மற்றும் டிக்ரித் மக்கள் அவர்களின் ஷரியா பெயரால் கொடுத்த தண்டனைகளைக் கண்டதும் ஆடிப்போயிருக்கின்றனர். தலைக்கு மட்டும் துணி கொண்டு மறைத்த பெண்ணை ஏன் முழு புர்கா அணியவில்லை என சவுக்கால் அடித்திருக்கின்றனர். லஞ்சம் வாங்கியதாக கேள்விப்பட்ட ஒருவருக்கு கையை வெட்டி இருக்கின்றனர். 1750 போலிஸ்களை கழுத்தை அறுத்தும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றதைக் கண்டதும் இப்போது ஐ எஸ் ஐ.எல்லுக்கு கொடுத்த ஆதரவை கைவிட்டுவிட்டு வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். ஈராக்கின் சன்னி பிரிவு தலைவர்களில் பெரும்பான்மையினருக்கு ஐ எஸ் எ எல்லின் வரவு பிடிக்கவில்லை. அவர்களும் நாங்கள் ஈராக்கியர்கள், நாங்கள் ஈராக் அரசின் பக்கம்தான் என தொலைக்காட்சிகளில் தோன்றி சொல்லிக்கொண்டு உள்ளனர். தீவிரவாதிகளை விரட்ட அரசுப்படையில் சேருங்கள் என அவர்களும், ஈராக்கை காப்பது நமது கடமை. நாளை கெர்பெலாவுக்கும், நஜஃபுக்கும் இவர்களால் கேடு விளையலாம், எனவே அரசுப்படையில் சேருங்கள் என பெரும்பான்மை ஷியா பிரிவின் மதத்தலைவர்களும் அழைப்பு விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
கெர்பலாவும், நஜஃபும் ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் புனிததலம் மற்றும் கல்லறைகள் உள்ள இடம். சன்னி இஸ்லாமியர்களைப் பொருத்தவரை இரண்டுமே அவர்களின் மதத்திற்கு எதிரான இணைவைக்கும் குற்றம். எனவே கெர்பலாவை அழிப்பது குறித்தும் சொல்லி இருக்கின்றனர்.

ஏகப்பட்ட ஆயுதங்கள் சவுதியில் இருந்தும், சிரியாவில் இருந்தும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. ஐ.எஸ் ஐ எல்லின் மொத்த உருப்பினர்களின் எண்ணிக்கை தோராயமாக 7000 இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதில் ஈராக்கியர்கள், சிரியா, பாலஸ்தீனம், துருக்கியைச் சேர்ந்தவர்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவலை அடுத்து பெரும்பாலான துருக்கியர்கள் ஈராக்கில் இருந்து வெளியேறிவிட்டனர். எண்ணெய்துரப்பனப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க, பிரித்தானிய மக்களும் வெளியேறி வருகின்றனர். இவர்கள் வேலை செய்வதெல்லாம் சண்டை நடக்கும் இடத்திலிருந்து 700 கிலோமீட்டருக்கு அப்பால் என்றாலும் வெளியேறி வருகின்றனர்.

பொதுவாக நான் இருக்கும் பாஸ்ரா பகுதியில் ஷியாக்களின் எண்ணிக்கையே அதிகம். கிட்டத்தட்ட 90 சதவீதம். எல்லோருக்கும் இருக்கும் எரிச்சல் மீண்டும் அமெரிக்காவை உள்ளே வரவைத்துவிட்டாரே இந்த நூர் அல் மாலிக்கி என்பதாகவே இருக்கிறது. பாஸ்ராவுக்குள் இந்த ஐ.எஸ்.ஐ.எல் வரும் வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறார்கள். அதற்கு ஏற்றார்போலவே போலிஸும் பிரமாதமாக எல்லாம் சோதனை இடுவதில்லை. வழக்கம்போல பாஸ்போர்ட்டைக் காமி என்பதுடன் நிறுத்திக்கொள்கின்றனர்.

ஈராக்கிய தொலைக்காட்சிகளில் தீவிரவாத படைகளைச் சேர்ந்தோரை பிடிப்பதையும், அவர்களின் வாகனங்களை கைப்பற்றியதையும்காண்பிக்கின்றனர்.

இராக்கின் பரந்த நிலப்பரப்பில் வடக்கு பகுதி எப்போதும் பிரச்சினைக்கு உரியதாகவே இருந்து வந்திருக்கிறது. இப்போது அது அதன் முழு தீவிரத்துடன் வெளிவந்திருக்கிறது. அங்கிருக்கும் இந்தியர்களின் நிலைமைதான் கொஞ்சம் மோசம். பெரும்பாலான ஈராக்கியர்களுக்கு இந்தியர்கள் மீது நல்ல மதிப்பே இருக்கிறது. ஐ எஸ் ஐ எல்லின் கூட்டத்தில் ஈராக்கியர்களைத்தவிர பிற நாட்டவரும் இருப்பதால் இந்தியர்களை காஃபிர் என்ற கணக்கில் வைத்து ஏதேனும் செய்யலாம். குர்திஸ்தான் எப்போதும் அமைதியான பகுதி. கிட்டத்தட்ட துபாய்போல எல்லா வசதிகளும் நிறைந்த ஈராக்கின் தன்னாட்சிப் பகுதி. அவர்களும் இந்த தீவிரவாத கும்பல் நுழைந்துவிடாமல் இருக்க முன்னாள் ராணுவ உறுப்பினர்களையும், வாலண்டியர்களையும் படையில் சேர அழைத்துள்ளது. குர்திகளும், துருக்கியர்களும் நிறைந்த பகுதி. இந்தியர்கள் குறிப்பாய் ஆந்திர மக்கள் நிறைய வேலை செய்யும் மாநிலம் அது.

நான் இருப்பது ஈராக்கின் தென் கடைசியான பாஸ்ரா மாநிலம் அல்லது கவர்னரேட். இங்கே எல்லாம் முழு அமைதி. அங்கிருக்கும் தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் திடீரென முளைக்குமா இல்லை அவர்களே பாக்தாதைத் தாண்டி இங்கே வருவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஏனெனில் இங்கேதான் ஈராக்கின் 70 சதவீத எண்ணெய் வளம் உள்ளது.

அமெரிக்க உதவியும், ஈராக்கிய படைகளும் சேர்ந்து அவர்களை விரட்டியடிப்பார்கள் என நம்பலாம்.7 Comments:

சுபத்ரா said...

தெளிவான தகவலுக்கு நன்றி. கவனமாக இருங்கள்..

ஜெ, said...

இந்த இரு பிரிவுகளுக்கும் - சன்னி, ஷியா - என்ன வித்தியாசம்? எப்படி ஒருவர் எதிரி என்று கண்டுபிடித்து அடிப்பார்கள்? - ஜெ.

R. J. said...


என் கேள்விக்கு இன்று டைம்ஸ் ஆF இண்டியாவில் பதில் கிடைத்தது! தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்:
http://timesofindia.indiatimes.com/world/middle-east/4-questions-ISIS-rebels-use-to-tell-Sunni-from-Shia/articleshow/37257563.cms

-ஜெ.

syed said...

it's not ISIL., it is ISIS(islamic state of iraq and sham).

Jeyakumar Srinivasan said...

http://en.wikipedia.org/wiki/Islamic_State_in_Iraq_and_the_Levant

நண்பர் சையது சொன்னதும் சரி. நான் சொன்னதும் சரி. சையது சொன்னது மொழிபெயர்ப்பு.

Anonymous said...

It is ISIL - Islamic State of Iraq and Levant.

Unknown said...

sirapana katurai...iraq nilavarathai azhagaga kati irukirar katurai asiriyar