பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 05, 2014

மன்மோக குறிஞ்சி சிங் பூ

குறிஞ்சிப் பூ பூத்திருப்பதாக செய்தி வந்திருந்தது, கூடவே பிரதமரும் திருவாய் மலரப் போகிறார் என்ற செய்தியும் வந்தது.

பிரதமர் பேசப் போகிறார் என்றதுமே சில முன்னணி வட இந்திய ஆங்கில செய்திச் சானல்கள், பிரதமர் ராஜினாமாவா? ராகுல் புதிய பிரதமரா என்றெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டன. ஆனால் எதிர்பார்த்தது போல், பதவிக் காலம் முடியும்வரை ராஜினாமாவுக்கே இடமில்லை என்பதைத் தெளிவுபடுத்திவிட்டார். அதாவது இதற்கு மேலும் கெட்ட பெயர் எதுவும் வரும் ஆனால் அதுவும் பிரதமரையே சாரும். இன்னும் சொல்லப் போனால், பிரதமர் ராஜினாமா செய்வார் என்பதைத்தான் காங்கிரஸ் மேலிடமும் எதிர்பார்த்திருந்தது, ஆனால் அவர்களுக்கும் இது அதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

நான்கு மாநிலத் தேர்தல் வீழ்ச்சிக்குப் பொறுப்பேற்க வேண்டுமென பிரதமரைக் காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டதாக ஒரு பதிவர் எழுதியிருந்தார். தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனையில் எதற்கு நெறியேற வேண்டுமென பிரதமர் திரும்பக் கொக்கி போட்டார் என்றும் கேள்வி. பண வீக்கமும், விலைவாசி உயர்வும் மட்டுமே சமீபத்திய தோல்விகளுக்குக் காரணம் என்பது பிரதமரின் வாதம்; ஆனால் உட்கட்சிப் பூசல்தான் காரணமென்று ஷீலா தீக்ஷித் கூறுகிறார். பிரதமர் தில்லியில் கலந்துகொள்ளவிருந்ததாகயிருந்த பொதுக்கூட்டம் கடைசி நேரத்தில் ரத்தானது குறிப்பிடத்தக்கது, அவர் கலந்து கொள்ளவிருந்ததை ஷீலா தீக்ஷித் விரும்பவில்லையென்றும், அதனாலேயே ரத்து செய்யப்பட்டதென்றும் கூறப்படுகிறது. எஸ்.வி.சேகர் நாடகத்தில் ”வெளிநாட்டு சதி” என்பார் அதை போல காங்கிரஸ் மன்மோகன் சிங் கூட்டாளிகள் எதற்கு எடுத்தாலும் இதே காரணத்தை சொல்ல ஆம்பித்துவிட்டார்கள். ஆக பண வீக்கம், விலைவாசி உயர்வு என்று இவரே கூறிவிட்டு, பொருளாதாரத்தில் இந்தியா கடந்த பத்தாண்டில் மிகவும் முன்னேறியிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். அமெரிக்க டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு எழுபதைத் தொட்டு வந்த பிறகும் கூட. இன்னும் இந்தோனேஷிய ருபியா ஒன்று மட்டும்தான் இந்திய ரூபாயின் மதிப்பிற்கெதிராக உயரவில்லை.

நரேந்திர மோதிக்குக் கூடும் கூட்டம், ஆம் ஆத்மி கட்சியின் திடீர் உதயம் மற்றும் அதற்கு இல்லாத ஒரு க்யாதி இருப்பதாகக் காட்டும் மீடியா மற்றும் சமீபத்திய நான்கு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் திமுகவின் அறிவிப்பு, மஹராஷ்டிரத்தில் ஆதர்ஷ் விசாரணைக் கமிஷன் அறிக்கை தாக்கல், ஷரத் பவாரின் ரெண்டுங்கெட்டான் நிலை இவற்றால் காங்கிரஸின் அடித்தளம் ஆட்டம் கண்டிருக்கிறது. அதனால் பிரதமரை ராஜினாமா செய்யச் சொல்லி, ராகுலைத் திடீர் பிரதமராக்கி, இரண்டு மூன்று அதிரடித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி எப்படியாவது வெற்றி பெற முயல வேண்டும் என்பது காங்கிரஸின் திட்டம். இதற்கு மேலும் மெருகூட்ட, நரேந்திர மோதியின் பெயரை எப்பாடுபட்டேனும் சீரழிக்க வேண்டும். கோத்ரா கலவரம் எத்தனை நாட்களுக்குத்தான் கை கொடுக்கும்? அதற்காகத்தான், ஒரு பெண்ணை உளவு பார்த்த விவகாரத்தில் ஒரு கமிஷன் ஒன்றை மத்திய அமைச்சரவை அமைத்திருக்கிறது.

ஏற்கனவே இவ்விவகாரத்தில் குஜராத் அரசாங்கம் ஒரு கமிஷன் அமைத்திருக்கும் நிலையில், இன்னொரு கமிஷன் செல்லுபடியாகாது. ஆனால் இதிலும் ஒரு புதுமையைப் புகுத்தி, ஒரே விவகாரத்திற்கு இரண்டு கமிஷன்கள். இதில் மத்திய அமைச்சரவையின் கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே தாக்கல் செய்யப்படுமெனத் தெரிகிறது. ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் ஒரு அறிக்கையை, கமிஷன் தயாரித்ததாகச் சொல்லி, தேர்தலுக்கு சமீபமாக மோதியின் பெயரை ரிப்பேராக்கும் ஒரு நாலாந்தர முயற்சியைக் காங்கிரஸ் கைகொண்டிருக்கிறது. தன்னுடைய பத்தாண்டு ஆட்சியின் சாதனை என்று சொல்லிக் கொள்ள ஏதுமில்லாத நிலையில், எதிரியின் இடுப்பிற்குக் கீழ் அடிப்பதுதான் ஒரே வழி என்பதுதான் காங்கிரஸின் இப்போதைய நிலை. அதற்கு அச்சாரம்தான் பிரதமரின் பேட்டி.

ஐந்தாண்டுகளில், இரண்டாவது பேட்டியாம் இது. பேச்சின் தரம் ஒரு பிரதமர் பேசுவதாக இல்லை, வெற்றி கொண்டானோ அல்லது எஸ்.எஸ். சந்திரனோ பேசுவதைப் போல்தான் இருந்தது. "அஹமதாபாத்தின் வீதிகளில் மக்கள் படுகொலையை முன்னின்று நடத்திய நரேந்திர மோதி இந்நாட்டின் அடுத்த பிரதமராய் வருவது இந்திய ஜனநாயகத்திற்கே பேரழிவாக முடியும்" இது பிரதமர் உதிர்த்த ஒரு முத்தின் சாம்பிள், இதைப் போன்ற ரகம்தான் மற்ற பேச்சுக்களும். குஜராத்தில் மக்களின் அமோக ஆதரவோடு, நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசியலமைப்பின் பிரதிநிதியைக் கொலைகாரன் என்று வர்ணிக்கிறார் இத்தேசத்தின் பிரதம மந்திரி. அரசாங்கம் நியமித்த SIT, மற்றும் குஜராத் உயர்நீதிமன்றம் ஆகியவையே நரேந்திர மோதியை குஜராத் கலவரத்தில் குற்றவாளியாக்க முகாந்திரமே இல்லை என்று உத்தரவிட்ட பின்னரும், தேசத்தின் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள ஒருவர் இப்படி அபத்தமாக, மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு தலைவரைப் பற்றி அவதூறு பேசுவது அதிர்ச்சியாக இருக்கிறது.

இதுவரை வெளிவந்துள்ள ஊழல்களின் மொத்த மதிப்பு, திருப்பதி வேங்கடவன், குபேரனிடம் பட்ட கடனை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. இன்னும் வெளிவராத ஊழல்கள் எத்தனையுள்ளனவோ? 2G, நிலக்கரி ஊழல், CWG போன்றவற்றின் கதி இன்னும் முழுவதுமாக நிர்ணயிக்கப்படாத நிலையில், அடுத்து பாஜக அரசாங்கம் அமையுமானால், அதில் எத்தனை பேர்களின் தலைகள் உருளுமோ என்ற பயம் மட்டுமே காங்கிரஸிடம் தெரிகிறது.

அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சீனா ஆகிய அனைத்து நாடுகளும் நம்மை ஏதோ ஒருவகையில் சீண்டி வரும் நிலையில், எவற்றுக்கெதிராகவும் தக்க நடவடிக்கை எடுக்கத் திராணியில்லாத ஒரு அரசாங்கத்தை நடத்தி வரும் இவர்தான் தன்னை வலுவான பிரதமர் என்று பிரகடனப் படுத்திக் கொள்கிறார். மீனவர்கள் தொடர்ந்து இலங்கையால் கைது செய்யப்படுவதாகட்டும், காஷ்மீரில் பாகிஸ்தானின் அத்து மீறலாகட்டும், சீனாவின் ஆக்கிரமிப்பு, எவற்றிலும் ஸ்திரமில்லாத வெளியுறவுக் கொள்கையின் காரணமாக எவ்விதமான நடவடிக்கையும் இல்லை.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், ஊழல்கள் மீது நடவடிக்கை எடுத்ததால்தான் மக்கள் இரண்டாவது முறையும் காங்கிரஸைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றார். இது அப்பட்டமான பொய்! 2G ஊழலின் முழுப் பரிமாணமும் வெளிப்பட்டதே 2009 நவம்பரில்தான், அதாவது மக்களவைத் தேர்தல்களுக்குப் பிறகு. காமன்வெல்த், ஆதர்ஷ், நிலக்கரி ஊழல் போன்றவையும் இவரது இரண்டாவது ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள். இதில் எதிலொன்றிலும் இதுவரை எவரும் தண்டிக்கப்படாத நிலையில், என்ன நடவடிக்கை எடுத்ததாகச் சொல்கிறார்? தவிர, அனைத்து ஊழல் தொடர்பான கோப்புகளும் காணாமல்போய், தொடர்புடைய முக்கியமானவர்கள் அனைவருமே காப்பாற்றப்பட்டுள்ளனர் என்ற ஒரு சாதனையைத் தவிர, மன்மோகன் சிங் ஒரு சாதனையையும் நிகழ்த்திவிடவில்லை, கடந்த பத்தாண்டுகளில்.

அப்பறம் பேட்டியை பார்த்தவர்களுக்கு தெரியும் முன்பே கேட்க வேண்டிய கேள்விகளை தயாரித்து கேட்ட மாதிரி இருந்தது. இருந்தும் பிரதமர் பல கேள்விகளுக்கு "I'm sorry I haven't thought that through, but..” என்று தன் பதிலை ஆரம்பித்தார். ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிந்தது அவரை பற்றி அவரே பெருமையாக நினைத்துக்கொண்டிருக்கிறார் - ஐயோ பாவம்.

மோடி மாதிரி ஒருவர தேவை இல்லை, சாதாரண ஆள் பிரதமராக வந்தாலுமே, இவரை விட இந்நாடு சுபிக்ஷமாக இருக்குமென்பதே, இவரது பத்தாண்டு ஆட்சியின் லட்சணம்.
மதுரையில் திமுக கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது... இதே மதிரி காங்கிரஸ் கட்சியையும் கலைத்துவிட்டால் நன்றாக இருக்கும்.

6 Comments:

Gopal said...

சரியான நெத்தியடி. மண்மோஹனை விட லல்லுவோ அழகிரியோ கூட இந்தியாவை ஆண்டாலும் பரவாயில்லை. ஆனால் இந்த தலையாட்டி வராது என்பதே பெரிய ஆறுதல்.

kg gouthaman said...

Apt.

alex said...

ஒரு புள்ளபூச்சிய ஏன்தான் இப்படி பாடாப்படுத்தரீங்களோ....

Anonymous said...

மோடிக்கு அதிகமாக விளம்பரம் தேடி தருவது காங்கிரெஸ் தான். இந்த முறை அந்த கட்சி தோற்றால் அதிகமாக நிம்மதி அடையும் ஒரே நபர் மன்மோகன் சிங்காகத்தான் இருக்க முடியும். தன்மானம் இழந்து ஒரு மனிதனால் எவ்வளவு நாள் பிரதமராக இருக்க முடியும் என்று நிரூபித்தவர் ஸிங்க் தான். தேவே கவுடா, வீபீ ஸிங்க் போன்ற ஆட்கள் அந்த வரிசையில் நின்றார்கள் - அவர்களை எல்லாம் தூக்கி அடித்து விட்டார். முன்பு காங்கிரெஸ் தலைவர் நட்டுவர் ஸிங்க் கூறியது போல் ஒரு முனிசிபாலிட்டி தேர்தலில் கூட வெற்றி பெற முடியாதவர் பத்து வருடம் பிரதமராக வலம் வந்தது ஒரு பெரிய அவமானம். - Sriram

Avargal Unmaigal said...
This comment has been removed by a blog administrator.
bandhu said...

மன்மோகன் நம் நாட்டுக்கொரு சாபக்கேடு! செய்வதெல்லாம் செய்துவிட்டு உத்தமர் மாதிரி பேட்டி கொடுப்பதில் எந்த அரசியல்வாதிக்கும் நான் சளைத்தவன் இல்லை. பொருளாதாரம் வேண்டுமானால் எனக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அரசியலில் நான் புலி என்று நிரூபித்திருக்கிறார் இவர்!