பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 21, 2014

சுனந்தா! - யதிராஜ சம்பத் குமார்

கடந்த இரு தினங்களாக அரசியலை அவ்வளவாக உற்று நோக்காதவர்களுக்குக் கூட அதிர்ச்சியாக அமைந்த சம்பவம், மத்திய அமைச்சர் சஷி தரூரின் மனைவி சுனந்தா தரூரின் திடீர் மரணம்., குறிப்பாக அம்மரணத்தின் பின்னணி.

காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தாவை சஷி தரூர் கடந்த 2010 ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி மாலை 7.30 மணி அளவில் சுனந்தா தரூர் திடீர் மரணம் என செய்திகள் வரத் துவங்கின. தில்லியிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியொன்றின் அறையில் சுனந்தா தரூரின் சடலம் இருந்ததாகத் தகவல்கள் வெளிவந்தன. சஷி தரூரின் தொடர்ந்த அலைபேசி அழைப்புகளை சுனந்தா ஏற்காகததால், ஹோட்டல் ஊழியர்களிடம் சுனந்தாவின் அறையைப் பார்க்குமாறு சஷி தரூர் கூறியதாகவும், ஹோட்டல் ஊழியர்கள் தொடர்ந்து முயற்சித்தும் அறைக்கதவு திறக்கப்படாததால், ஹோட்டல் நிர்வாகமே கதவை வேறு சாவி மூலம் திறந்து பார்த்தபோது சுனந்தா இறந்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக, சில தினங்களுக்கு முன்னர், சஷி தரூருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து, எனது கணவருக்கும் பாகிஸ்தானிய பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் என்பவருக்கும் தொடர்பு என்பதாகவும், மெஹர் தரார் தன் கணவர் சஷி தரூருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் எனவும் சில நிலைத்தகவல்கள் வெளியாகின. உடனடியாக, தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், அதில் வரும் நிலைத்தகவல்கள் போலியானவை எனவும் சஷி தரூரிடமிருந்து அறிக்கை வந்தது. அதைத் தொடர்ந்து, சஷி தரூருடைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்படவில்லை, தாமே அவருடைய கணக்கில் அத்தகவல்களை வெளியிட்டதாக சுனந்தாவின் ட்விட்டர் கணக்கிலிருந்து நிலைத்தகவல் வெளியாகவும், சஷி தரூர், தன்னுடைய ட்விட்டர் கணக்கை மூடுவதாக அறிவித்தார்.

இதனிடையே சுனந்தா தரூர், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியிலும், தனது கணவருக்கு பாகிஸ்தானிய பத்திரிகையாளர் மெஹர் தராருடன் அந்யோந்யமான தொடர்பு இருப்பதாகவும், இதனால் விவாகரத்து பற்றி சிந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். வேறொரு தொலைக்காட்சி சானலுக்கு அளித்த தொலைபேசி வாயிலான பேட்டியில், மெஹர் தரார் பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ உளவு அமைப்பைச் சார்ந்தவர் எனவும் குற்றம் சாட்டியிருந்தார். இவ்வளவு களேபரங்கள் நடந்த மறுதினம், சஷி மற்றும் சுனந்தா தரூர் ஆகிய இருவர் பெயரிலும் வெளியான அறிக்கையில், தங்களுக்குள் எவ்வித பிரச்சனையும் இல்லை எனவும், மகிழ்ச்சியாகவே இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான ஒரு பின்னணியில் ஏற்பட்டுள்ள சுனந்தாவின் திடீர் மரணம் பலவாறான சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன. முழுமையான பிரேத விசாரணை அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில், சுனந்தாவின் உடலில், கழுத்து மற்றும் மணிக்கட்டு பகுதிகளில் சில கீறல் காயங்கள் இருப்பதாகவும், ஆனால் அது பற்றி மேலும் கருத்து கூற இயலாத நிலையிலிருப்பதாகவும் அவர் பிரேதத்தை ஆய்வு செய்த மருத்துவக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த சுனந்தா, அதற்கான மருந்துகளை எடுத்து வருவதாகவும், அதை அதீதமாக உட்கொண்டதால் மரணம் சம்பவித்திருக்கலாமெனவும் செய்திகள் வெளியானபடியுள்ளன. பாஜக, இடதுசாரிகள், மற்றும் சஷி தரூர் உள்ளிட்டோர் அனைவருமே சுனந்தாவின் மரணத்தில் விசாரணை கோரியுள்ளனர்.

சப்-டிவிஷனல் மாஜிஸ்த்ரேட் தலைமையிலான விசாரணைக் குழு பல்வேறு தரப்பினரிடம் விசாரணை செய்து, அவற்றைப் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, நளினி சிங் என்ற பத்திரிகையாள நண்பியிடம், தான் உயிரிழப்பதற்கு முதல்நாளிரவு அலைபேசியில் தொடர்பு கொண்ட சுனந்தா மிகவும் மனமுடைந்த நிலையில் பேசியிருக்கிறார், அவருடைய வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, திருனவந்தபுரத்தில் சுனந்தாவிற்கு கடந்தவாரம் சிகிச்சை செய்த மருத்துவர் குழு, அவருடைய உடல்நிலையில் உடனடி மரணத்தைத் தழுவும் அளவிற்கு எந்த சிக்கலான பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்திருப்பதாலும், பிரேத விசாரணையில், உடனடி மற்றும் இயற்கைக்கு விரோதமான மரணம் என்று வந்திருப்பதாலும் இம்மரணம் பலவிதமான சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது, தவிர இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும், அவர் ஐ எஸ் ஐ உளவாளி என்று சுனந்தா வெளிப்படையாகக் குற்றம் சாட்டிய மறுதினமே இம்மரணம் நிகழ்ந்துள்ளதாலும், இவருடைய இறுதிப் பிரேத விசாரணை அறிக்கையில் வெளியாகப் போகும் தகவல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

- யதிராஜ சம்பத் குமார்

இன்னும் இரண்டு மாதத்தில் இந்த செய்தியும் கேஸும் காணாமல் போகும்

7 Comments:

kg gouthaman said...

ஐம்பத்தேழு வயதில் மணந்துகொண்ட மூன்றாவது கணவனின் நான்காவது மனைவி மர்மமான முறையில் இறந்தது பற்றி யாருக்கு என்ன கவலை?

Alex said...

ரொம்ப நாள் கழிச்சு வந்துள்ளார்.. ஆனா என்ன ஏற்கனவே செய்தித்தாள்களில் வந்ததைத் தொகுப்பாகத் தந்துள்ளார்...

Anonymous said...

rendu maasam ellaam aagaadhu rendu vaaram paraparappu irundhaaley periya vishayam...
eppadiyum oru thiraipadam varumnu ethirpaarkkalaam...

Anonymous said...

கணவன், துணைவன், இணைவன் ok ... மனைவி துணைவி, இணைவி .... நாலாவதா என்னப்பா ?

Umesh Srinivasan said...

என்னமோ நடக்குது, மர்மமாய் இருக்குது. # இதுவும் கடந்து போகும்.

Anonymous said...

sashi tharur is in sonia's good books.
within two weeks case will be closed.
but a common man may wonder what is the connection between dubai business, pakistan link ISI and etc etc

Anonymous said...

இந்த மாதிரி உப்பு சப்பு இல்லாத பதிவுகள் வந்தால் இட்லி வடை விரைவில் காணாமல் போகும்.