பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 27, 2013

காதல் ஜாதி

காதலுக்காக பல தியாகங்களைச் செய்தவர்களின் பல நூறு காதல் கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். எதுவுமே மதாய் தூபே என்கிற மதாய் தோம் என்பவருடைய காதலுக்கீடாகாது. மதாய் தூபே, பிஹாரிலுள்ள ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தன்னுடைய காதலுக்காக தன்னுடைய சமூகத்தை எதிர்த்து, ஜாதியைத் துறந்து, சுக்மோனா என்ற பெண்ணை மணந்திருக்கிறார். அதுவுமெப்படி? சமூகக் கட்டுப்பாடுகளை மீறி, தன் காதலுக்காக அப்பெண்ணினுடைய ஜாதியையே தன்னுடையதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். அப்பெண், சுக்மோனா, பிறப்பால் மயானத்தில் தகனத்தை மேற்கொள்பவருடைய பெண்ணாவார். மிகவும் தாழ்த்தப்பட்டதாகக் கருதப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர். "தோம்" என்பது இவர்களது குலப்பெயர்.

மதாய் தூபே, ஒரு ஆசாரமான மிகவும் பணக்கார பிஹாரி பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்; ஏராளமான நிலபுலன்களுக்கு அதிபதியான குடும்ப வாரிசு. இவர்களது நிலத்தையொட்டிய மயானக் காட்டில்தான் சுக்மோனாவுடைய தந்தை, தன்னுடைய தகனத் தொழிலை மேற்கொண்டு வந்தார். அதில் வரும் சொற்ப வருமானத்தில்தான் சுக்மோனாவுடைய குடும்ப ஜீவிதம். சுக்மோனா, தினமும் தூபேவினுடைய வயலைக் கடந்துதான், தன்னுடைய தந்தைக்கு உணவு கொண்டு செல்லும் வழக்கம். அடிப்படையில் இருந்த குல வேறுபாடுகள் காரணமாக, இவர்களிருவரும் தினமும் சந்திக்க நேர்ந்தாலும், பேசிக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் நேர்ந்ததில்லை. ஆனால் அன்றைய தினம், சூரியனின் தாக்கம் காரணமாக, சுக்மோனா உணவு சுமந்து செல்லும் வேளையில், தூபேவினுடைய வயலில் மயங்கிச் சரிகிறார். இதைக் கண்ணுற்ற தூபே, சமூகத்தின் சகல வேறுபாடுகளையும் மறந்து, சுக்மோனாவைத் தன் குடிலுக்குத் தூக்கிச் சென்று, மயக்கம் தெளிவித்து ஆசுவாசப்படுத்துகிறார். இங்கிருந்துதான் இக்காதல் துவங்குகிறது.

இவர்கள் காதலுக்கெதிராக, தூபேவின் சமூகம் கொதித்தெழுகிறது. அக்காலத்தில், சுக்மோனா போன்ற குலத்தில் தாழ்த்தப்பட்ட பெண்களை, உயரிய குலத்தைச் சார்ந்தவர்கள் "சேர்த்துக்" கொள்வது வழக்கம். ஆனால் திருமணமென்பதெல்லாம் நினைத்தே பார்க்க இயலாதது. ஒரு பிராமண குலத்தைச் சார்ந்தவன், பிணம் எரிக்கும் தொழிலைச் செய்பவருடைய மகளை மணப்பதா? முடியவே முடியாது; குலத்தை விட்டு ப்ரஷ்டம் செய்வோம், சொத்தில் உரிமை கோர முடியாது என்று தூபே தனது சமூகத்தாலும், குடும்பத்தாலும் பலவாறாக காதலைத் தியாகம் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார். இவையெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தூபே, சுக்மோனாவை மணக்கப் போவதாக வெளிப்படையாக அறிவிக்கிறார். எந்தவொரு நிர்பந்தத்தை முன்னிட்டும் தமது காதலுக்கு துரோகம் செய்ய தூபே விரும்பவில்லை. முடிவாக வீட்டை விட்டும் வெளியேற்றப்படுகிறார்.

சுக்மோனாவின் பார்வையில் தூபே மிகவும் வித்யாசமாகத் தெரிந்தார். பொதுவாக, அவருடைய வயதொத்த, உயர்குல வாலிபர்கள், தங்கள் குலப் பெண்களை ஒரு போகப் பொருளாகவே நினைத்து, பலருடைய வாழ்க்கையைச் சீரழித்துக் கைவிட்டுள்ள நிலையில், தூபே தன்னுடைய காதலில் மிகவும் உறுதியுள்ளவராக இருந்தார்.

இக்காதலில் கடினமான கட்டம் இனிமேல்தான் என்பதை தூபே அறிந்தவராக இல்லை. வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டும், சமூகத்தை விட்டு பகிஷ்கரிக்கப்பட்ட நிலையில், தூபே, சுக்மோனாவின் தந்தையை அணுகிறார், அவரைத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தைத் தெரிவிக்கும் நோக்குடன். காதலுக்காக சமூகத்தையும், அந்தஸ்து மற்றும் சுகபோகங்களை இழந்ததை சுக்மோனாவின் தந்தையிடம் தெரிவிக்கிறார். ஆனால் சுக்மோனாவின் தந்தை மசியவில்லை. எதிர்ப்புக் குரல்கள் அவர்கள் சார்ந்த சமூகத்திடமிருந்து இன்னமும் பலமாக இருந்தன. நீங்கள் பிராமண குலம், நாங்களோ தாழ்த்தப்பட்ட குலம்; நீங்கள் புலால் மற்றும் மதுவைத் தொடாதவர்; நாங்களோ அதிலேயே புழங்குபவர்கள். ஆகையால், என்னுடைய பெண்ணை நீங்கள் மணமுடிப்பதில் உறுதியாக இருந்தால், எங்கள் ஜாதியை நீங்கள் ஏற்று கொண்டு, நீங்களும் எங்கள் தொழிலில் ஈடுபட வேண்டும். இதற்கு முன்னர் சில நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

தன் காதலில் சற்றும் உறுதியிழக்காத தூபே, அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்தார்.

முறைப்படியான ஜாதி மாற்றச் சடங்கிற்கு முன்னதாக, தூபே செய்ய வேண்டியதாக, தோம் சமூகத்தினர் விதித்த நிபந்தனைகள்...

* பன்றியிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி ஆகியவற்றை உண்ண வேண்டும்;
* மது அருந்த வேண்டும்;
* மயானத்தில் பிணத்தினை தகனம் செய்ய வேண்டும்;
* கிராமத்தில் யாசகம் செய்ய வேண்டும்;
* தோம் சமூகப் பெண்கள் குளித்து முடித்த அழுக்கு நீரை அருந்த வேண்டும்;
* பன்றிகளை வளர்க்க வேண்டும்!!

பிராமண குலத்தில் பிறந்து, இறைச்சி மற்றும் மதுவை கனவிலும் அறியாத தூபே, இந்நிபந்தனைகளத்தனையையும் நிறைவேற்றி, தம் காதலை வென்றெடுத்தார். முறையான ஜாதி மாற்றச் சடங்கிற்குப் பிறகு, மதாய் தூபே என்ற பெயரை மதாய் தோம் என்று மாற்றிக் கொண்டு, பிறகு வாழ்நாள் முழுவதும் ஒரு மயானத்தில் தகனம் செய்பவராகவே வாழ்ந்தார்.

சிறிது காலத்திற்குப் பின்னர், தனது சொந்த ஊரான சலேம்பூரை விட்டு, கஜ்ராஜ்கன்ஜ் என்ற ஊருக்கு இடம்பெயர்ந்தார். அங்கும் பிராமண சமூகத்தவர் அதிகமாக இருந்தபடியினால், அங்கும் பகிஷ்கரிக்கப்பட்டார். ஒரு பிரிட்டிஷ் அரசர், தன் காதலுக்காக ஒரு சாம்ராஜ்யத்தை இழந்தார். ஷாஜஹான் தனது காதலுக்காக தாஜ்மஹாலை எழுப்பினார்; ஆனால் மதாய் தோமிடம் இழப்பதற்கு ராஜ்யம் இல்லை, காதலுக்காக தாஜ்மஹாலையும் எழுப்பவில்லை; ஆனால் தனது கலாசாரத்தைத் தியாகம் செய்தார். எப்போது, இன்றைய காலகட்டம் போலல்லாமல், சமூகக் கட்டுப்பாடுகளும், சாதீய வேறுபாடுகளும் மிகவும் கடுமையாக இருந்த காலகட்டத்திலேயே.

இது உண்மைக்கதையென்று நம்பக் கடினமாக இருக்கலாம். ஆனால் மதாய் தோமும், சுக்மோனாவும் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மடிந்தவர்கள்தாம். தம்முடைய காதல் வாழ்க்கையை தொடர்ந்த இவர்கள் இறந்தது 1965 இன் சமீபத்தில்தான். இவர்களுடைய வாரிசுகள் இன்னமும் சட்கி சசோரி கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், தம்முடைய பெற்றோரின் நினைவுகளைத் தவிர, அவர்களின் காதலினைப் பறைசாற்றும் வேறெந்த நினைவுச் சின்னங்களும் அற்று.

("The Hindu" வில் வெளியான இக்கட்டுரையின் ஆங்கில மூலத்தை எழுதியவர், Dr. கவிதா ஆர்யா, வாரணாசியின் ஆர்யா மகிளா கல்லூரியில் துணைப் பேராசிரியையாகப் பணிபுரிகிறார்.)

நன்றி - The Hindu ( http://www.thehindu.com/opinion/open-page/a-love-story-stranger-than-fiction/article5384027.ece )
மொழிபெயர்ப்பு உதவி: யதிராஜ சம்பத் குமார்.

இந்த கதையை படித்து முடித்த பின் என்ன ஒரு inspiration என்று எண்ணம் முதலில் வரும் ஆனால் நிதானமாக யோசித்தால், மதம் மாறலாம் ஆனால் காதலினால் Common Sense கூடவா போய்விடும் என்று நினைக்க தோன்றுகிறது ? எதற்கு அழுக்கு தண்ணீரையும், மதுவையும் அருந்த வேண்டும் ?

8 Comments:

Anonymous said...

when love makes people logically blind, what is the point in thinking about drinking dirty water.....

Cinema Virumbi said...

அன்புள்ள இ.வ. ,

அது தூபே அல்ல, துபே. த்விவேதி என்பது போல் துபே என்றாலும் இரண்டு வேதங்கள் கற்றவன் என்று பொருள். (சௌபே என்றால் நாலு வேதம்!).

உ.பி., பீகாரில் பிராமண வகுப்பினர் புலால் உண்ணாதவர்கள் என்பது ஒரு அழகான fantasy. அவ்வளவுதான்!

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in

Anonymous said...

முத்து பட்டன் கதை தெரியுமா.தெரியாவிட்டால் படியுங்கள்.அது இன்னும் பழைய கதை.

Anonymous said...

yellow comment kevalamaa irukku. better to condemn the society and its stupid rules instead of condemning the love which made him do this.

R. J. said...

I am in agreement with Yellow comment. In a film Jayam Ravi will be tested by Prabhu to live the life of a villager / farmer. It was ok. Not this foolish lover. If this man can live without his parental support, the girl too could have lived so. What was the need for one community to agree while the other community and habits can be sacrificed! - R. J.

R. J. said...

I am in agreement with Yellow comment. In a film Jayam Ravi will be tested by Prabhu to live the life of a villager / farmer. It was ok. Not this foolish lover. If this man can live without his parental support, the girl too could have lived so. What was the need for one community to agree while the other community and habits can be sacrificed! - R. J.

யதிராஜ சம்பத் குமார் said...

நான்கு வேதம் படித்தவர்கள் சதுர்வேதி அல்லவோ?

ராமுடு said...

Good yellow comment.