பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 23, 2013

ஒரு பேனாவும், பெரும் கனவுகளும்.

மிக நீண்டதொரு இடைவேளைக்குப் பின்னர், இட்லிவடை வாசகர்களுக்காக ஒரு ரீடர்ஸ் டைஜஸ்ட் மொழிபெயர்ப்பு!!

கட்டுரையாசிரியரைப் பற்றியதோர் சிறிய அறிமுகம்:


இக்கட்டுரையாசிரியர், டான் பிந்நோக், தென்னாப்ரிக்காவின் கேப் டவுன் நகரில் தன்னுடைய மனைவியும், பிரபல நாவலாசிரியருமான பாட்ரிஷியா ஸ்கான்ஸ்டீனுடன் வசிக்கிறார். இவர் ஒரு பயணக் கட்டுரையாளர், பல புதிய இடங்களுக்குச் செல்வதும், புதிய மனிதர்களைச் சந்திப்பதும், ஆப்ரிக்க காடுகளில் வசிக்கும் புலிகளை புகைப்படமெடுப்பதும் இவரது விருப்பமான பொழுதுபோக்காகும். இனி இவருடைய கட்டுரையின் மொழிபெயர்ப்புக்குச் செல்லலாம்.

.
1999 ஆம் ஆண்டின் மத்தியில், தெளிந்த வானத்துடன் கூடிய ஆப்ரிக்காவிற்கே உரித்தான வெம்மையான ஒரு தினம். எத்தியோப்பியாவிலிருக்கக் கூடிய ஒரு சிறு கிராமமொன்றின் குறுக்கே ஓடும் நதியொன்றின் மீதான பாலத்தில் நின்று கொண்டிருந்தபோது, கண்கவரும் பல வண்ண நூலிழைகளால் பின்னப்பட்டிருந்த ஒரு ப்ரேஸ்லெட்டுடன் ஒரு சிறுவன் என்னை அணுகினான்.

என் பெயர், மாரிஷெட் டையர்ஸ், என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு, நான் உங்களுக்கு எத்தியோப்பியாவின் நிறங்களைப் பரிசளிக்கிறேன், பதிலாக எனக்கு பணமெதுவும் வேண்டாம், உங்களுடைய நட்பு மட்டுமே போதும் என்று கூறிக் கொண்டே, என்னுடைய கையில் அந்த அழகிய ப்ரேஸ்லெட்டை அணிவித்தான்.

டாணா ஏரியிலிருந்து சீறிப் பாய்ந்து கொண்டிருந்த நீல நைல் நதியின் மேலமைந்திருந்த அப்பாலம், பாஹர் தார் என்ற இடத்தில் அமைந்திருந்தது. அச்சிறுவன் மாரிஷெட் அப்போதுதான் அவனுடைய பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தான், ஆங்கிலப் பாடங்களை பயிற்சி செய்ய வேண்டியிருப்பதாகக் கூறினான்.

பச்சை, மஞ்சள், சிகப்பு இழைகளால் மிக நெருக்கமாகவும், நேர்த்தியாகவும் பின்னப்பட்டிருந்த அந்த ஆபரணத்தையும், வெள்ளைச் சிரிப்புமாய், தேனின் நிறத்தோடு, அடர்த்தியான கருப்பு நிற முடியுடைய அச்சிறுவனையும் நான் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். அவனுடைய நாகரிகம்தான் எத்தனை பழையது மற்றும் முன்னேறியது!! ஐரோப்பியர்கள் வெறும் புற்களையும், களி மண்ணையும் வைத்துக் கொண்டு கட்டிடம் கட்டிக் கொண்டிருந்த காலத்திலேயே, இவர்கள் கற்களாலான அரண்மனைகளையும், க்ரானைட்டினால சிலைகளையும் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிறங்கள் எவற்றைப் ப்ரதிபலிக்கின்றன?, என்று கேட்டேன்.

பச்சை இயற்கை வனப்புடன் கூடிய சமவெளியையும், மஞ்சள் சர்ச்சையும், சிகப்பு...என்று யோசித்தவன், நினைவில்லை, நீங்களே தெரிந்து கொள்வீர்கள் பிறகு என்று புன்னகைத்தான்.

சிறு தயக்கத்திற்குப் பிறகு, உங்களால் எனக்கொரு பேனா தர முடியுமா?? என்று கேட்டான்.

பொதுவாக பணம், இன்னும் பலவற்றைக் கேட்கும் ஆஃப்ரிக்கக் குழந்தைகளைப் பார்த்தே பழக்கப்பட்ட நான், பேனா மட்டும் போதுமா? என்று ஆச்சர்யத்துடன் வினவினேன்.

ஆம், போதும். பேனா இல்லையென்றால் எங்களைப் பள்ளியில் அனுமதிப்பதில்லை. என்னுடைய பேனா இன்று தீர்ந்துவிட்டது, இன்னொன்றை வாங்குமளவிற்கு என்னுடைய குடும்பத்திற்கு வசதியில்லை. நான் பள்ளிக்குச் செல்வதை மிகவும் விரும்புகிறேன். பிற்காலத்தில் ஒரு மருத்துவராகவோ அல்லது ஒரு கணக்காளராகவோ வர விரும்புகிறேன், அதற்கு நான் கல்வி கற்றேயாக வேண்டும். உங்களால் எனக்கொரு பேனா தர முடியுமா??

நான் பொதுவாக பயணங்களின் போது மலிவான பேனாக்கள் நிறைய வைத்திருப்பேன். அதனால் அவன் கைநிறைய பேனாக்களை அள்ளிக் கொடுத்தேன். அப்பேனாக்களைப் பெற்றுக் கொண்டதும் அவன் முகத்தில் விரிந்த அப்புன்னகைக்கு முன்னர் அப்பேனாக்கள் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என எனக்குத் தோன்றியது.

உங்கள் முகவரியைக் கொடுங்கள், உங்களுக்குக் கடிதமெழுதுகிறேன், என்றான்.

சரி, ஆனால் நீ ஏன் உன் வயதொயொத்த என் பெண், ரோமனிக்கு கடிதமெழுதக் கூடாது? என்னைவிட அவளுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய சுவாரஸ்யமான விஷயங்கள் உன்னிடம் அதிகமிருக்குமென எண்ணுகிறேன், என்றேன்.

நான் கேப் டவுன் திரும்பிய சில தினங்களுக்குள்ளாகவே, கண்ணைப் பறிக்கும் தபால்தலைகளைத் தாங்கிய ஒரு கடிதமொன்று மாரிஷெட்டிடமிருந்து வந்தது.

என்னுடைய இனிய சினேகிதிக்கு, என்று துவங்கிய, எத்தியோப்பியச் சாயலுடனான அழகிய ஆங்கில நடையில் அக்கடிதத்தில், தன்னுடைய குடும்பம், பாஹர் தார் கிராமம், தன்னுடைய நம்பிக்கைகள் மற்றும் லட்சியங்கள் என நிறையப் பேசியிருந்தான். ரோமானிக்கு புதிய சினேகிதன் கிடைத்த அளவிலா மகிழ்ச்சியுடன் திரும்பக் கடிதமெழுதினாள்.

தொடர்வதும் பிறகு இடை நிற்பதுவுமாகக் துவங்கிய இவ்விருவருக்குமிடையேயான கடிதப் போக்குவரத்து பல வருடங்களுக்கு நீடித்தது. பிறகு அவளுடைய ஒரு கடிதத்திற்கு பதிலே வராமற்போனது. பள்ளிப் படிப்பு முடிந்துவிட்டதா? அருகிலுள்ள பண்ணையில் ஏதும் வேலை செய்து கொண்டிருப்பானோ? அல்லது வசிப்பிடம் அருகே தபால்நிலையம் ஏதும் இல்லாதிருக்கலாம், அல்லது மற்ற ஆஃப்ரிக்கச் சிறுவர்களைப் போல அடிஸ் அபாபாவில் இவனும் பிச்சையெடுக்கச் சென்றிருப்பானோ என பலவிதமான எண்ண ஓட்டங்கள், சுய சமாதானங்கள்.

மெதுவாக, கால ஓட்டத்தில், மாரிஷெட், எங்களுடைய கடந்தகாலத்தில் கரைந்து விட்டிருந்தான்.

2011, அக்டோபர் மாதம், தென் ஆஃப்ரிக்காவின், ஃப்ரீ ஸ்டேன் ப்ரொவின்ஸின் ஊடாகப் பிரயாணித்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய அலைபேசி அழைத்தது. நானே வண்டியோட்டிக் கொண்டிருந்தபடியால் எடுக்க வேண்டாமென நினைத்து, பிறகு தொடந்து அழைத்துக் கொண்டேயிருந்தமையால், அழைப்பை எடுத்தேன்.

மறுமுனையில் ஹலோ என்ற குரல், நீங்கள் டான் பிந்நோக்தானா? என்று கேட்டது.

ஆம், நீங்கள் யார்?

நான் மாரிஷெட் டையர்ஸ், எத்தியோப்பியாவின் பாஹர் தார் பாலத்தருகே நீங்கள் சந்தித்த சிறுவன், நினைவிருக்கிறதா?

ஓஹ், நன்றாகவே.

உங்களுடைய இணையதளத்தில் உங்களது அலைபேசி எண் கிடைத்தது என்று சொன்னவன் எனது மின்னஞ்சல் முகவரியைக் கேட்டான்.

அங்கு அவ்வளவாக அலைபேசி இணைப்பு சரியாக இல்லாதபடியால், நான் உங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன் என்று அவன் சொன்னவுடன் தொடர்பு அறுந்து போனது. எனக்கு மிகுந்த ஆச்சரியம்! எப்படி அவ்வளவு ஏழ்மை நிலையிலிருந்த ஒரு சிறுவனுக்கு இன்று இணையதளங்களையும், செல்போன்களையும் பயன்படுத்துமளவிற்கு முன்னேற்றம் கிட்டியது?

சில வாரங்களுக்கு அவனிடமிருந்து மின்னஞ்சல் ஏதும் வரவில்லை. பிறகு ஒன்று வந்தது....

அன்பிற்குரிய பிந்நோக்,

உங்களிடம் மீண்டும் பேச முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. பல முறை உங்களைத் அலைபேசியின் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ள முயற்சி செய்து பலனளிக்கவில்லை. அன்றைய தினம் உங்களுடன் பேச முடியுமென்றே நினைக்கவில்லை, அந்நாளை ஆசீர்வதிக்கப்பட்ட தினமாக உணர்கிறேன். எப்படி இருக்கிறீர்கள்? நீண்ட காலமாயிற்று.

அந்த மின்னஞ்சலூடாக, மாரிஷெட், எப்படியோ ஹாலந்திற்குச் சென்றுவிட்டதும், அங்கு சில காரணங்களால் கல்வி கற்க இயலாமற்போனதும், பிறகு லண்டனில் கடந்த நான்கு வருடங்களால கல்வி கற்று வருவதும் தெரியவந்தது. மின்னஞ்சல் கடைசியில் இவ்வாறு முடிந்தது..

...நான் தற்போது ப்ருநெல் பல்கலையில் பட்டய கணக்காளருக்குப் படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அளித்த பேனாக்களுக்கு நன்றி. தொடர்பிலிருங்கள். உங்களுக்கும் உமது குடும்பத்தாருக்கும் என்னுடைய வணக்கங்கள்.

மீண்டும் வருக!

2 Comments:

Anonymous said...

HATS OFF. AN INSPIRING AND TOUCHING POST.
PLEASE BE POSTING SUCH THINGS NOW AND THEN.TODAY MANY DO NOT HAVE THE OPPORTUNITY OF READING READERS DIGEST.

Umesh Srinivasan said...

பேனா நண்பர்கள் எனும் மகத்தான விடயத்தில் எவ்வளவு குதூகலம் இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி அந்தச் சந்தர்ப்பத்தை இன்றைய சமுதாயத்திடமிருந்து பறித்துவிட்டது சோகம். அருமையான பதிவுக்கு நன்றி.