பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 26, 2013

வாலி – சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா



தொடக்கக் குறிப்பு: இது வாலியைப் பற்றிய ஆய்வு அல்ல. எனவே ஒத்திசைவு ராமசாமிகள் (http://othisaivu.wordpress.com/2012/03/10/post-100/) கொஞ்சம் விலகி நிற்கவும். ;)

இரண்டாம் குறிப்பு: நான் இங்கே வாலி எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கும் பாடல்களில் சில வாலி எழுதாமல் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அதை ஒரு புள்ளி விவரப் பிழை என்று மட்டும் கொள்ளவும். உண்மையில் பல திரையிசைப் பாடல்களை யார் எழுதியது என்று கண்டுபிடிப்பதே பெரிய சிரமமாக இருந்தது. அதோடு வாலியும் ராஜாவும் சேர்ந்து பணியாற்றிய பாடல்கள் நினைவில் வந்து அருவிபோல் கொட்டுகின்றன. (வார்த்தைகள் முட்டுகின்றன! வாலி!) ஒரு பாடலை நினைக்குபோது அதிலிருந்து அதிலிருந்து என பலப்பல பாடல்கள். ஆய்வுக் கட்டுரை அல்ல என்று சொல்லிவிட்டதாலும் என் மனத்திலிருந்து எழுதுவதாலும் நினைவிலிருந்த வரிகளை மட்டுமே இங்கே குறிப்பிடப் போகிறேன்.

மூன்றாம் குறிப்பு:
நான் வாலியை வந்தடைந்தது இளையராஜாவின் வழியாகத்தான். எனவே நான் எழுதப்போகும் இந்தப் பதிவு தொடர்ச்சியாக இளையாராஜவைப் பற்றியும், எனவே வைரமுத்துவைப் பற்றியும் பேசும் வாய்ப்பு உண்டு. எம் எஸ் வி மற்றும் கேவி மகாதேவன் இசையில் வாலி பல நல்ல பாடல்களை எழுதியிருக்கிறார். நல்ல பாடல்கள் தவிர மற்ற பாடல்கள் பற்றித் தெரியாததால் நான் அவற்றைத் தொடவில்லை. 1976லிருந்து 2000 வரை என வைத்துக்கொண்டாலும், 24 வருடங்களில் வாலியை வரையறுத்தாலே அதன் முன்பின்னாக நாம் நீட்டித்துக்கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன்.



நான்காம் குறிப்பு: கட்டுரை தொடங்கிவிட்டது!

13 வயதில் எல்லாம் இளையராஜா வெறியனாகிவிட்டேன் என்று நினைக்கிறேன். வீட்டில் இருந்த ரேடியோவை எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்பதற்காக, அதில் இரண்டு ஸ்பீக்கர்களை இணைத்து ஒன்றை சமையலறையிலும் இன்னொன்றை கழிப்பறையிலும் வைத்திருந்தேன். அது இளையராஜா கோலோச்சிய காலம் என்பதால் எப்போதும் ராஜாவின் பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். யார் எழுதியது என்பதெல்லாம் அப்போது கவனித்ததே இல்லை.

ராஜாவும் வைரமுத்துவும் பிரிந்துவிட்டதால், ராஜாவின் மீது இருந்த தீவிரக் காதல் காரணமாக வைரமுத்துவின் மீது தீராத வன்மம் இருந்தது. அவர் என்ன எழுதினாலும் சிரிப்பேன். தொலைக்காட்சிகளில் அவர் தோன்றிப் பேசும்போது அவரது தமிழைக் கடுமையாகக் கிண்டல் செய்வேன். 91ல் ரஹ்மான் வந்தார். வைரமுத்துவின் கிராஃப் கடுமையாக எகிறியது. எல்லோரும் ரஹ்மானைப் பற்றியே பேசினார்கள். ரஹ்மான் உயர உயர இளையராஜாவின் இசை மீதான என் வெறி கூடிக்கொண்டே போனது. ஒரு நாளைக்கு பத்து முறையாவது ராஜாவை நினைத்துக்கொள்வேன். எங்கே இருந்தோ எப்படியோ ஒரு ராஜா பாட்டு காதில் விழுந்து அன்றைய தினத்தை இன்னும் இளமையாக்கும்.

இந்த சமயத்தில் 1993ல் கல்லூரிக்குள் நுழைந்தேன். அங்கே இதே போன்று இரண்டு கிறுக்கர்கள் எனக்கு நண்பர்களானார்கள். ஒருவன் ஜெயராஜன். இன்னொருவன் வினை தீர்த்தான். நாங்கள் மூவரும் ராஜா வெறியர்கள். வினை தீர்த்தான் வாலியின் தீவிரமான ரசிகன். ஜெயராஜன் வைரமுத்துவின் தீவிரமான ரசிகன். எவ்வித யோசனையும் இல்லாமல் நான் வினைதீர்த்தானுடன் சேர்ந்துகொண்டேன். தினம் தினம் வாலி வைரமுத்து சண்டைதான். இளையராஜா விஷயத்தில் மட்டும் மூவரும் ஒன்றாகிவிடுவோம்.

வேதியல் பிரிவில் எங்கள் மூவர் கூட்டணி மட்டும் எப்போதும் வித்தியாசமாகப் பேசிக்கொண்டிருக்கும். அந்தப் பாட்டு யார் எழுதினது, இந்தப் பாட்டு யார் எழுதினது என்று கேட்டு கேட்டுத்தான் நான் வாலியைப் பற்றிப் பேச ஆரம்பித்தேன். அவர் எழுதிய பாடல்களைத் தேடித் தேடிக் கேட்க ஆரம்பித்தேன். எம் எஸ் வியுடன் அவர் இணைந்து பல பாடல்களை மிகச் சிறப்பாக எழுதியிருந்தார். ஆனால் என் கவனம் அவர் ராஜாவுடன் என்ன எழுதுகிறார் என்பதில் மட்டுமே இருந்தது.

இன்னொரு பக்கம் தேவா வாலி கூட்டணி. வைரமுத்துவை எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே வாலியைக் கடுமையாகப் புகழ்வோம் நானும் வினைதீர்த்தானும். ஜெயராஜன் கெஞ்சுவான், ‘கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசுங்கல.’

இப்போது யோசித்துப் பார்த்தால் ஜெயராஜன் எத்தனை நியாயமாகப் பேசியிருக்கிறான் என்பது புரிகிறது. அன்றும் இன்றும் வாலி, வைரமுத்துவை எப்படி அணுகிறேன் என்பதும் எனக்கே புரிகிறது. கன்சிஸ்டென்ஸி என்ற வகையில் கண்ணதாசனோடும் வைரமுத்துவோடும் வாலியை ஒப்பிடவே முடியாது என்பதே அவரது தோல்வி என்று இன்று நன்றாகப் புரிந்திருக்கிறது.

பாடல்களில் ஆபாசமாக எழுதுவது முதலிலிருந்தே இருந்து வந்துள்ளது. ஆனால் அது தேவா-வாலிக்குப் பின்னர்தான் அதற்குப் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது என்பது என் எண்ணம். யாரோ ஒருவர் ஆபாசமாக எழுதுவதற்கும், வாலி போன்ற ஒருவர் ஆபாசமாக எழுதுவதற்கும் உள்ள வேறுபாடே இந்த அங்கீகாரத்துக்குக் காரணம். ஆனால் வாலி இதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. ‘எப்படி எப்படி சமஞ்சது எப்படி’ என்ற பாடல் வந்தபோது, எங்கள் நண்பர்கள் அனைவரும் ரகசியமாகப் பேசிக்கொண்டோம். மணி அண்ணன் என்பவர், ‘இவம்லாம் ஐயராம். என்ன அசிங்கமா எழுதியிருக்கான்’ என்றார். வாலியின் பெரிய ஆதரவாளனான நான், ‘இதுல என்ன இருக்கு? அந்த கேரக்டர் அப்படி பேசுது. சமஞ்சது எப்படின்னு கேட்டா ஒரு தப்பா’ என்றேன். உடனே அவர், ‘ஐயரே. ஐயர்ன்றதுக்காக சப்போர்ட் பண்ணாதல. நீ உங்க அம்மாகிட்டயும் அக்கா கிட்டயும் கேளுல’ என்றார். என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ‘அப்படி கேக்க முடியாது. அதான் அவன் (அந்த கேரக்டர்) வேற ஒருத்திகிட்ட கேக்கான்’ என்று என்னமோ சொல்லி வைத்தேன். மணி அண்ணனுக்கு ஆத்திரம் அடங்கவே இல்லை. இப்போது நான்கைந்து நாள்களுக்கு முன்பாக வாலி பற்றிய பேச்சு வந்தபோது, சமஞ்சது எப்படி என்ற பாடலுக்கு நான் சொன்ன அதே காரணத்தை இன்னொரு நண்பர் சீரியஸாகவே என்னிடம் சொன்னார்.

உண்மையில் சமஞ்சது எப்படி என்ற பாடல் தமிழ்ப் பாடல்களில் ஆபாசத்துக்குப் பெரிய அளவில் வித்திட்டது. அது மட்டுமல்ல, அந்த படத்தின் பாடல்கள் அத்தனையுமே இப்படி ஆபாசத்தை பெரிய அளவில் பரப்பின. அன்று நான் வாலியை பெரிய அளவில் ஆதரித்தாலும் இன்று யோசிக்கும்போது வாலி இப்பாடல்களை எழுதியிருக்கக்கூடாது என்றே தோன்றுகிறது. தனி ஒருவரால் திரையுலகப் பாடல்கள் பெரிய வீழ்ச்சியை அடைந்துவிடமுடியாது என்றாலும், அதற்கு பலமான அஸ்திவாரத்தைப் போட்டவர் வாலிதான்.

அதே (இந்து) படத்தில் வந்த மற்ற வரிகளைப் பாருங்கள். சமஞ்சது எப்படி… முந்தா நேத்து வானம் லேசா தூறல் போடும் நேரம் ஊதாப் பூவ போல பூத்து உட்கார்ந்தேனே ஓரம், ஒலக்க ஒண்ணு இங்கிருக்கு ஒரலு ஒண்ணு அங்கிருக்கு நெல்லு குத்தும் நேரம் எது சொல்லடி என் சித்திரமே நெல்லு குத்தும் நேரத்துல உரலுக்குள்ளே மாட்டிக்குவே, கட்டயிலும் கட்ட இது கடஞ்செடுத்த நாட்டுக்கட்ட அது உரச உரச உருகுதுடா டோய், உட்டாலக்கடி சிவப்புத் தோலுடா கொஞ்சம் உத்துப் பார்த்தா உள்ளே தெரியும் நாயுடு ஹாலுடா, எங்கிட்ட பேட்டிருக்கு உங்கிட்ட பால் இருக்கு… அத்தனையும் வாலி.

வாலியின் இந்த வரிகள் சக கவிஞர்களுக்கும் போட்டியை ஏற்படுத்தியது. கதவ சாத்து கதவ சாத்து மாமா நான் கன்னி கழிய வேணும்னா ஆமா – காளிதாசன், படிப்படியா அது தொடங்கட்டும் பள்ளியறையில் சூடு அடங்கட்டும் – வைரமுத்து, மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா மார்(க்)கெட்டுப் போகாத குண்டு மாங்கா (வைரமுத்து? திரைப்படம் பிரதாப்) என ஆளாளுக்குத் தொடங்கினார்கள். அடுத்து வந்தது எறும்புக் கடி. சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குதா என்று வாலி எழுதினார். பலர் வீடுகளில் அப்படி ஏன் கேக்கான் என்று சொல்லும்போது எனக்கெல்லாம் சிரிப்பாக இருக்கும். இன்று நினைத்தால் பக்கென்று இருக்கிறது. சித்தெறும்போடு கட்டெறும்பும் கடித்தது. கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு – வைரமுத்து. இப்படி பலமான போட்டி துவங்கியது. புலமைப்பித்தனும் சரிகமபதநி படத்தில் இப்படி ஒரு வரி எழுதினார். சட்டென்று நினைவுக்கு வரவில்லை. மேத்தா ‘தென்றல் வரும் தெரு’ படத்தில் ‘கடலைப் பயிரு ஜொள்ளு நீரில் நல்லா விளையும்டா’ என்று என்னவோ எழுதினார். நல்லவேளை அத்துடன் புலமைப்பித்தன், மேத்தாவெல்லாம் நிறுத்திக்கொண்டு விட்டார்கள்.

இந்தப் பாடல்கள் வந்தபோது பெரிய சர்ச்சையைக் கிளப்பின. சர்ச்சைகள் எல்லாவற்றையுமே வாலி விளம்பரமாகப் பார்த்தார். ‘காய்ச்ச மரம் கல்லடி படும்’ என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு எழுதினார். வாலியின் மோசமான பாடல்களைப் பற்றி அந்த நேரத்தில் யாருமே கண்டிக்கவில்லை. கமல்ஹாசனுடன் ஒரு பேட்டியில் இதைப் பற்றிக் கேட்டார்கள். தெளிவாக, பேட் பால் என்றெல்லாம் பாட்டு வருகிறதே என்று கேட்டார்கள். அவர் மிகவும் புத்திசாலித்தனமாக ‘என் படங்களில் அப்படி வருவதில்லை’ என்றார். எஸ்பிபியும் யேசுதாஸும் இனி நாங்கள் இரட்டை அர்த்தப் பாடல்களைப் பாடப்போவதில்லை என்று அறிவித்தார்கள். ஆனால் எந்தக் கவிஞரின் பெயரையும் அவர்கள் குறிப்பிடவில்லை. அப்படிப் பாடாமல் இருந்தார்களா என்றும் தெரியவில்லை. வாலியோ, ‘கம்பன் கழகத்தில் கவிஞர் என்றும், திரையுலகில் விட்டெறியும் ரொட்டித் துண்டுக்கு வாலாட்டும் நாய்’ என்றும் சொல்லிவிட்டார். கடைசி வரையில் இப்படித்தான் இருந்தார். என்னுடைய ஜி.எம் ஒருவர் அடிக்கடிச் சொல்வார், ‘கால் மீ தோட்டி, பட் பே மீ ஃபார்டி’ என்பார். இப்படித்தான் வாலியும் இருந்தார்.

திடீரென்று வாலி அவதார புருஷன் எழுதப்போவதாக அறிவிப்பு வெளியானது. அன்று உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது. இனி வாலியை எதிர்ப்பவர்களுக்கு பதில் சொல்லவாது முடியும்! முதல் வாரத்தில் ‘காமன் கதை எழுதி காயங்கள் பெற்ற நான் ராமன் கதை எழுதி ரணங்களை ஆற்ற உள்ளேன்’ என்று எழுதினார். வாலி ஆபாசமாக எதுவும் எழுதவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்த என்னை நண்பர்கள் பிடித்துக்கொண்டார். அவரே ஒத்துக்கிட்டார் என்றார்கள். (பின்னர் சோ ஒரு மேடையில் பேசும்போது, இப்படி வருத்தப்படும் அளவுக்கு வாலி எதையும் மோசமாக எழுதிவிடவில்லை என்றார். எனக்கு பக்கென்று இருந்தது.)

நான்கைந்து வாரங்கள் அவதார புருஷன் படிக்கவுமே வெறுத்துவிட்டது. ஆனாலும் வெளியில் விடாமல் பாராட்டிக்கொண்டிருந்தேன்.  ஒரு கட்டத்தில் வாலி மாயை மெல்ல விலகியபோது வாலியின் கவிதை ஆழம் புரிந்துவிட்டது! நேர்மையாகச் சொல்வதென்றால் வாலியை ஏன் கவிஞர் என்றழைக்கவேண்டும் என்பதே எனக்குப் புரியவில்லை. இதை அதீதம் என்று எண்ணலாம். ஆனால் நான் உண்மையில் இப்படித்தான் நினைக்கிறேன்.

வாலி அற்புதமான பல திரைப்பாடல்களைத் தந்தவர். மறுக்கமுடியாது. வாலி எழுதி எனக்குப் பிடித்த பாடல்கள், நான் அசந்த பாடல்கள் பல உள்ளன. சட்டென்று சிலவற்றைப் பட்டியலிடுகிறேன். ‘ராம நாமம் ஒரு வேதமே.’ முதலில் இதைச் சொல்ல காரணம் உண்டு. வாலியின் மிகச் சிறந்த வரியாக நான் இதைப் பார்க்கிறேன். ராமன் பாரதத்தின் நாயகன் என்ற எண்ணம் எனக்கு வலுப்பட்டபோது, ஹிந்துத்துவத்தின் வாயிலாக இந்தியாவின் பாரம்பரியப் பெருமைகள் குறித்த பெருமிதம் ஏற்பட்டபோது இந்த வரி எனக்கு மிகவும் ஆழமாகப் பட்டது. ராம நாமம் வேதம் என்ற மூன்று வார்த்தைகளில்தான் எத்தனை பெரிய ஜாலம். வாலியின் பெரிய திறமைகள் என்றால், சந்தத்திலிருந்து சிறிதும் விலகாத வார்த்தைகளைக்கொண்டு பாடல்களை எழுதுவது. தமிழ் வார்த்தைகளின் பலம். இவையே வாலியின் திறமைகளாக நான் நினைப்பவை.

கல்லூரியில் வாலி வைரமுத்து விவாதம் வரும்போது நானும் வினைதீர்த்தானும் அடிக்கடி ஜெயராஜனை இதைக்கொண்டுதான் மடக்குவோம். ‘கொடுக்கிற மெட்டுக்கு சரியான வார்த்தையை போடத் தெரியலைன்னா என்னல கவிஞன்’ என்போம். ஏன், வார்த்தைகளுக்கு இசையமைப்பாளர் இசையமைத்தால் என்ன என்று பேசுவான் ஜெயராஜன். மெட்டே முதன்மை என்பதாகவே என் மனப்பதிவு இருந்தது. கொடுக்கப்படும் மெட்டுக்கு சரியான வார்த்தைகளை அதுவும் ஆழத்தோடு அமைப்பதே கவிஞரின் சாதனை என்று நினைத்தேன். இப்போதும் இதுதான் என் எண்ணம். ஆனால், கொஞ்சம் சந்தத்தை அட்ஜஸ்ட் செய்துகொள்வதன்மூலம் நல்ல ஒரு வார்த்தையைப் போட்டு கவிதையின் ஆழத்தைக் கூட்ட முடியுமானால் அதைச் செய்வதில் தவறில்லை என்றும் இப்போது நினைக்கிறேன். இதை வைரமுத்து அன்றே செய்துகொண்டிருந்தார். ஆனால் வாலி சந்ததிலிருந்து சிறிதும் பிசகமாட்டார். இதனாலேயே பல சாதாரணமான வார்த்தைகளைப் போட்டு பாடல்களை ஒப்பேற்றிவிடுவார்.

மறுபடியும் திரைப்படத்தில் வரும் ‘நலம்வாழ என்னாளும் என் வாழ்த்துகள்’ பாடல் இன்னொரு அதிசயம். இயைபுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது வாலியின் பாணி. அதற்காக எத்தனை மோசமான வரிகளையும் எழுதத் தயங்காதவர். இதனாலேயே பல வரிகள் எனக்கு எரிச்சலூட்டியிருக்கின்றன. வட்டமிட்டு சுத்தும் கண்ணும் வீச்சு, வாய விட்டு போனதென்ன பேச்சு என்று எழுதினாலே எனக்கு எரிச்சல் வரும். அதே படத்தில் வரும் ’ஆழம் விழுதாகவே மனம் ஆடிடும் போது நானும் அதுபோலவே அலை ஆடிடும் மாது’ என்று எழுதியிருப்பார். இதில் வரும் போது மாது என்பது எத்தனை இயல்பாக இருக்கிறது என்று பாருங்கள். ஒரு நீண்ட வரியில், வரியை உடைக்காமல் இப்படி வரும்போது அது அழகு. அல்லது ‘வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்’ என்ற அளவுக்குப் போகவேண்டும். அதே வரியில் பாருங்கள், ‘பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்’ என்று வரும். என்ன ஒரு ரைமிங். இது வைரமுத்து. வாலியும் இப்படி எழுதக்கூடியவரே. ஆனால் அவசரத்துக்கு எழுதியிருப்பாரோ என்னவோ. இந்த இயைபு விஷயத்தில் அவர் என்னவேண்டுமானாலும் எழுதக்கூடியவராகிவிட்டார். ’நீ போடு காதல் விண்ணப்பம் கிடைக்காது வேறே சந்தர்ப்பம்’ என்று என்னவாவது எழுதுவார்.

வாலியின் கற்பனைகளைப் பற்றிப் பேசினாலும் எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமே மிஞ்சும். சில க்ளிஷேக்களில் இருந்து அவரால் கடைசி வரை மீளவே முடியவில்லை. குயிலைப் பற்றி எழுதினால் அடுத்த வரி மயிலைப் பற்றி எழுதியாகவேண்டும் என்று என்ன நேர்ச்சை? குயிலைப் பிடிச்சு கூண்டில் அடைச்சு கூவச் சொல்லுகிற உலகம், மயிலைப் புடிச்சி கால ஒடச்சி ஆடச்சொல்லுகிற உலகம் – கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் ஆடாதம்மா சோலைமயில்தன்னை சிறை வைத்துப் பூட்டி பாடென்று சொன்னால் பாடாதம்மா. குயில் பின்னர் மயில், அதிலும் ஒரே விதமான கற்பனை. இன்னொரு பாட்டு, குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே! (இதுபோன்றவை வைரமுத்துவுக்கும் உண்டு. கால்கொலுசு மணியாவேனா, கால்கொலுசு மணிச்சத்தம், இன்ன பிற.)

கொட்டும் மழைச்சாறல் உப்பு விற்கப் போனேன் காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன் – நான் உப்பு விக்கப் போனா மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது நான் மாவு விக்கப் போனா பெரும் புயல் காத்து வீசுது. இரண்டுமே வாலி! இப்படியே சிந்தனை மாறாமல் அப்படியே எழுதுவார்கள்?

தேன் என்று எழுதுவதில் வாலியை மிஞ்ச ஆள் கிடையாது. காமம் வந்தால் ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் தேன் ஊறும் என்ற ரேஞ்சுக்கு அவர் பல பாடல்களை எழுதித் தள்ளியிருக்கிறார். உள்ளூர ஊறுதடி தேன்போல (பாசமுள்ள பாண்டியரு). இந்த தேன் ஊறும் பாடல்கள் பல உள்ளன. தேவையென்றால், நான் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் அப்டேட் செய்கிறேன். அதேபோல் பெண்களை குளமென்றும் ஆணை குளிக்க வரும் ஆள் என்றும் எழுதித் தள்ளியிருக்கிறார். இவையெல்லாம் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காத கற்பனைகள். (நான் தானே நீச்சல் குளம் நாள்தோறும் நீயும் வந்து ஓயாமல் நீச்சல் பழகு, இளமை நதியில் குளிக்க வரவா). இவற்றைப் போல வாலி எழுதிய பாடல்கள் பல உண்டு. இன்னொரு சலிக்க வைக்கும் கற்பனை, இடையை நூலகம் என்பது! மேனி எங்கும் நான் படிக்கும் நூலகம்தான், மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம்தான், இளையவளின் இடை ஒரு நூலகம் படித்திடவா பனி விழும் இரவுகள் ஆயிரம். மற்றுமொறு சலிப்பு – விடுமுறை நாள். வெட்கம் அச்சம் இவைகளுக்கின்று விடுமுறை நாளாச்சு, உன் நாணம் ஒருமுறை விடுமுறை எடுத்தால் என்ன. அதேபோல், அருகில் இருந்தால் ஒரு யுகம் ஒரு நொடி, விலகி இருந்தால் ஒரு நொடியும் ஒரு யுகம் என்று நிறைய தடவை எழுதியிருக்கிறார். அதேபோல் மழையில் நீ நனைந்தால் எனக்கு காய்ச்சல் (ஆசை, காதலர் தினம்). அதேபோல் விலை கேட்பது. (என்ன விலை அழகே, இந்தப் புன்னகை என்ன விலை.)

இப்படிப் பல வரிகளை மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறார். 15,000 பாடல்களில் இதுபோன்று நிகழ்வது சாதாரணம் எனலாம். ஆனால் ஒரு சலித்த கற்பனையை மிக உயர்வானதாக எண்ணி அவர் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதுதான் ஆச்சரியம் தருகிறது. அதோடு, ஒரு சிறந்த கவிஞன் இந்த ரிப்பிட்டிஷனைத் தவிர்க்கவேண்டும் என்று நினைப்பவனாக இருக்கவேண்டும்.

வாலியின் தமிழ் வார்த்தை குறிந்த ஞானம் அபாரம். ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் தமிழ்த் திரைப்பாடல்களில் மிகவும் தேர்ந்தெடுத்த சில வார்த்தைகளுக்குள்ளாகவே அவர் சுற்றிக்கொண்டிருந்தார். வாலியின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டு ஐம்பது வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துவிடலாம். பூங்குயில், குயில் மயில் தென்றல் மானே தேனே பொனமானே ராசா ரோசா ராஜா பாட்டு கண்மணி பொன்மணி மாமா நிலா இப்படி மேலோட்டமான வார்த்தைகளை எவ்விதத் தயக்கமும் இல்லாமல் எழுதுவார். இதனாலேயே ஒரு பாடலில் மிக அழகான வரிகளும், மிக அபத்தமான வரிகளும் ஒரே போல் இடம்பெறும்.

ராஜாவின் பல அற்புதமான பாடல்களையெல்லாம் ஆழமற்ற, கோடிட்ட இடங்களை நிரப்புவது போல வார்த்தைகளைக் கொண்டு ரொப்பியவர் வாலி. இன்று பல பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் பெரிய ஆயாசம் எழுகிறது. தீர்க்கமுடியாத ஏக்கம் வருகிறது. எத்தனை எத்தனை அழகழகான மெட்டுக்கள். மெலோடி, குத்துப் பாடல் என்று வகையில்லாமல் ராஜா போட்ட அத்தனை மெட்டுக்களையும் மிகவும் சாதாரணமான வரிகளால் ஒப்பேற்றியிருக்கிறார் வாலி. வைரமுத்துவோடு ஏற்பட்ட பிரிவை, ராஜா, ’மெட்டுக்கு வரிகளின் பலம் தேவையில்லை’ என்ற நிலைக்குக் கொண்டு சென்றார். இதை மீறி, மெட்டு என்பதை வார்த்தைகள் சிறைப்படுத்துகின்றன என்று ராஜா நினைப்பதில் மிகப்பெரிய நியாயம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.. அது இசை என்னும் பேரனுபவத்தை மனத்தில் வைத்து ராஜா சொல்வது. ஆனால் தமிழ்த் திரைப்படத்துக்கான மெட்டில் வரிகள் வேண்டும் என்ற நிலை உள்ளபோது, அதை ராஜா வைரமுத்துவின் கணக்கை, அதுவும் ஒரு சீனியர் கவிஞன் மூலமே தீர்த்துக்கொண்டார். பல பொருளற்ற வரிகளை எழுதித் தள்ளினார் வாலி. ராஜாவின் வேகத்துக்கும், வாலியின் வேகத்துக்கும் ஒத்துப் போனது. மேலும் வாலி ஒரு சீனியர் என்பது ராஜாவுக்கு இலகுவாக இருந்தது. இந்த இரண்டு காரணங்களன்றி, வாலி ராஜாவுடன் இத்தனை பாடல்களை எழுதித் தள்ளியிருக்கமுடியாது என்றே நினைக்கிறேன்.

கண்ணதாசன் வாலி எழுதிக்கொண்டிருந்தபோது வைரமுத்து வந்தது போல, வாலி வைரமுத்து எழுதிக்கொண்டிருந்தபோது ஒரு புயல் வரவில்லை. இதுவும் ஒரு காரணம். இப்படி நேர்ந்திருந்தால், வாலியின் முக்கியத்துவம் கொஞ்சம் குறைந்திருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

சம்பா சம்பா அடி ரம்பா ரம்பா கேக்குது கேக்குது ஏதோ ஒண்ணு பாத்து பாத்து ஏங்குறேன் லவ்வு பண்ணு என்ற வரிகளைக் கேட்கும்போதே எரிச்சல் எழுகிறது. இதற்கு எதற்கு ஒரு கவிஞர்? ஹோஹோல ராணி ஹோஹோல மேனி, ஹோஹோல தேனி லாவளவுல வாணி இது என்ன! சம்பா சம்பா ரம்பாதான் அம்மா பொண்ணு ரம்பாதான், இதுதான் இதுக்குத்தான் அதுதான் அதுக்குத்தான், இப்ப சாத்து நடு சாத்து - இப்படி வாலி எழுதித் தள்ளிய பாடல்களைப் பட்டியலிட்டால் அவர் ராஜாவை எந்த அளவுக்கு வஞ்சித்திருக்கிறார் என்பது புரியும்.

ராஜாவின் பல பாடல்களில் முதல் பாரா முடியும்போது வரும் வரி மிக அழகானதாக நீளமாக இருக்கும். அதற்கு வரிகளை எழுதுவதில் ஒரு பெரிய சவால் இருக்கும். வைரமுத்து பல பாடல்களில் கலக்கியிருக்கிறார். கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில் எரியும் விளக்கு சிரித்துக் கண்கள் மூடும் என்பது போல. இப்படி வைரமுத்து கலக்கிய வரிகள் பல உள்ளன. வாலியும் இப்படி எழுதியிருக்கிறார். அந்தி மாலை வரும் நோய்கொண்டு தன்னந்தனியாய் நின்று பாவை நிதம் பாடும் விதம் பாராய் – இது வாலி எழுதியதுதான். நல்ல வரிகள்தான். நான் யோசித்தபோது இப்படி நீளமான வரிகளில் வாலி நன்றாக எழுதியதாகக் கிடைத்தவை சில பாடல்களே. இன்னொன்று, ஸ்ரீ... ராம சங்கீர்த்தனம் நலங்கள் தரும் நெஞ்சே...மனம் இனிக்க, தினம் இசைக்க, குலம் செழிக்கும்... தினம் நீ சூட்டிடு பாமாலை. ஆனால் பல பாடல்களில் இப்படி வரும்போது வாலி மிக சாதாரணமான வார்த்தைகளையே எழுதியிருக்கிறார். சந்தத்தில் பிசிறே இருக்காது. நல்ல தமிழ் வார்த்தைகளாகவும் இருக்கும். ஆனால் பொருள் இருக்காது. ஆழம் இருக்காது. இதையெல்லாம் வாலி கவனித்தாரா என்றே தெரியவில்லை. தன் மீதான அதீத நம்பிக்கையும் வாலிக்கு ஒரு எதிரி என்றே நினைக்கிறேன். (நீளமான வரிகளில் வாலி கலக்கியிருக்கும் இன்னொரு பாடல், இந்தப் பூவுக்கொரு அரசன் பூவரசன்.)

திரைப்படப் பாடல்கள் இல்லாமல் வாலியை கவிஞராகப் பார்த்தால் வெறும் ஏமாற்றமே மிஞ்சும். கல்லூரியில் கவிதை என்ற ஒன்று வந்தது. ‘பல மரங்களைக் கொண்டு சிலுவை தயாரிக்கும் நாம், பல மனிதர்களைக் கொண்டு ஒரு யேசுவை தயாரிக்கமுடியவில்லையே’ என்ற ரேஞ்சில் உள்ள கவிதை இது. இதுதான் வாலியின் கவிதை! ஒரு சிறிய அறிவுபூர்வமான சிந்தனையையே கவிதை என்று மெச்சக்கூடிய உலகில் மட்டுமே வாலி செல்லுபடியாவார். எனவேதான் இவ்வுலகம் அவரையும் கவிஞர் என்றே அழைக்கிறது. இன்று ஆழம் பத்திரிகை என் கைக்கு வந்தது. அதில் வாலியின் ஒரு கவிதையைப் பார்த்தேன். (ஆர்.முத்துகுமார் வாலிக்கு எழுதிய அஞ்சலி.) மனிதர்களை எங்களால் மந்திரிகளாக்க முடிகிறது, மந்திரிகளைத்தான் மீண்டும் மனிதர்களாக்க முடிவதில்லை! இந்த ஆச்சரியக்குறி போட்டுவிட்டாலே அது கவிதை என்று வாலி நம்பியது ’எங்ஙனம்’?

வாலியின் மீதான ஈர்ப்பில், அவரது பொய்க்காதல் குதிரைகள் கவிதைத் தொகுப்பையெல்லாம் முன்பு படித்திருக்கிறேன். பெரிய ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. சிலேடை, இயைபு, சிறிய அறிவுபூர்வம் – இவற்றையே அவர் கவிதைகள் என நம்பினார். எனவே வாலியின் முக்கியமான இடம் என்பது அவரது திரைப்படப் பாடல்களால்தான்.

வாலியின் இன்னொரு சறுக்கல், எவ்விதத் தேவையும் இல்லாமலும்கூட தொடர்ந்து ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொண்டே இருந்தது. என்னதான் இயக்குநர்கள் கேட்டாலும், ஒரு கவிஞர் கொஞ்சமாவது உறுதி காட்டவேண்டாமா? அழகு ஒரு மேஜிக் டச், ஆசை ஒரு காதல் ஸ்விட்ச் என்று அந்நாளிலேயே ஆரம்பித்துவிட்டார். கடைசிவரை இப்படிப் பல பாடல்களை எழுதித் தள்ளினார். இது பற்றி அவருக்கிருந்த ஒரே பதில், கம்பன் கழகத்தில் மட்டுமே நான் கவிஞன் என்பதே. சரி, அப்படி என்ன கவியரங்களில் பேசுகிறார் என்று பார்த்தாலும், வெற்றுச் சிலேடைகளாகவே அவை எஞ்சும்.

வாலியின் அரசியலைப் பற்றிப் பேசாமல் இருப்பதே நல்லது. எவ்வித நேர்மையும் இல்லாத வகையில் மட்டுமே அவர் நடந்துகொண்டார். அதிலும் கருணாநிதிக்கு கடைசி காலங்களில் அவர் அடித்த கவிதைப் புகழ்ச் சாயங்கள் அருவருப்பூட்டுபவை. நான் ஆணையிட்டால் என்ற பாடலில் வரும் ஒரு வரி, காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன் என்பது. அவர் காக்கைகள் என்று காமராஜரையே சொல்கிறார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இதை வாலியே எழுதினார். என்னதான் அரசியல் நிலைப்பாடு என்றாலும் யாரை எப்படி எழுதுகிறோம் என்ற உணர்வு ஒரு கவிஞருக்கு இருந்திருக்கவேண்டும். இரண்டு நடிகர்கள் உச்சத்தில் இருந்தபோது, இரண்டு ரசிகர்களை ஏத்திவிடவும் பல வரிகளை எழுதியிருக்கிறார். இங்கே எல்லாம் அவர் வெறும் வணிக திரைப்படப் பாடலாசிரியராக மட்டுமே இருந்துவிடுகிறார்.

தனது வரிகளை மாற்றக்கூடாது என்று வாலி அதிகம் அடம்பிடித்ததில்லை. அல்லது தன் வசதிக்கேற்ப யாரிடத்தில் எப்படி இருந்திருக்கவேண்டுமோ அப்படி இருந்திருக்கிறார். வாலி சந்தேகமே இல்லாமல் ஒரு சமசரசத்தின் உச்சமாகவே இருந்தார். அதனால்தான் அவரால் இத்தனை நீண்ட நெடுங்காலம் திரையுலகில் சாதிக்க முடிந்தது.

திரையிசையில் வாலியின் இடமும் சாதனையும்தான் என்ன? வாலி கடைசிவரை இளைஞர்களும் கொண்டாடும் திரைப்படப் பாடலாசிரியராக இருந்தார். தமிழ் வார்த்தைகளில் அறிவு ஆழமாக இருந்தாலும், எந்தக் காலத்தில் எந்த வார்த்தைகள் எடுபடாது என்று தெரிந்து வைத்திருந்தார். எந்த வார்த்தையை எங்கே பயன்படுத்தவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். (செங்காய் நிலாவின் தங்காய்!) தொடர்ந்து சமகாலத்துக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொண்டே இருந்தார். சந்தம் அவரது மூச்சு என்பதால் மிக வேகமாக அவரால் சந்தத்துக்கு ஏற்ற வார்த்தைகளை எழுதித் தரமுடிந்தது. மிக ஆழமான வரிகள் இல்லை என்றாலும், மினிமம் கேரண்டி இருந்தது. அதில் சில சமயம் அபூர்வமும் தென்படும் வாய்ப்பு உண்டு. இளைஞர்களை ஊக்குவிப்பவராக இருந்தார். இவையெல்லாம் இவரது சாதனைகள். 15,000 பாடல்கள் எழுதும்வரை ஒருவர் நீடித்திருப்பது சாதாரணம் இல்லை. அப்படி நீடித்திருந்ததே அவரது சாதனை.

எனக்குப் பிடித்த வாலியின் பாடல்களைப் பட்டியலிடுவதென்றால் 500 பாடல்களாவது தேறும் என்று நினைக்கிறேன். சட்டென்று நினைவுகூரமுடியாத, ஆனால் நினைவில் எங்கோ தங்கியிருக்கும் பாடல்கள் பல இருக்கும். எனவே சட்டென்று நினைவுக்கு வரும் சில பாடல்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.

01. ராம நாமம் ஒரு வேதமே
02. அழைக்கிறான் மாதவன்
03. ஜனனி ஜனனி
04. ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்
05. பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்
06. கமலம் பாதக் கமலம்
07. பூவுக்கொரு அரசன் பூவரசன்
08. மாசறு பொன்னே வருக
09. நல்லதோர் வீணை செய்தே (மறுபடியும்)
10. நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துகள்
11. தென்றல் வந்து தீண்டும்போது
12. அரிதாரத்தைப் பூசிக்கொள்ள
13. நியூ யார்க் நகரம்
13. ரோஜா ரோஜா ரோஜா (காதலர் தினம்)
13. சரவண பவ குக வடிவழகா
14. சின்னத் தாயவள்
15. மணியே மணிக்குயிலே
16. ராஜ்யமா இமயமா
17. மடை திறந்து ஓடும் நதியலைநான்
18. துள்ளித் திரிந்ததொரு காலம்
19. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
20. என்ன விலை அழகே

இன்னும் பல நூறு நல்ல பாடல்களை எழுதிய வாலிக்கு அஞ்சலி. என் இளமைப் பருவத்தை பெரிய அளவில் ஆக்கிரமித்திருந்த வாலிக்கு இன்னொரு ஸ்பெஷல் அஞ்சலி.

கடைசியாக, வாலி நல்ல திரைப்படப் பாடல் ஆசிரியர் அல்ல என்று சொல்லவில்லை. அவர் இன்னும் நல்ல திரைப்படப் பாடலாசிரியராக இருந்திருக்கலாம் என்றே சொல்லுகிறேன். காலம் எல்லோருக்கும் இப்படி ஒரு வாய்ப்பை வழங்காது. அந்த வாய்ப்பை வாலி நன்றாகப் பயன்படுத்திக்கொண்டாரே ஒழிய, புரிந்துகொள்ளவில்லை என்கிறேன்.

ஆமாம் உங்க கவிதை தொகுப்பு எங்கே கிடைக்கும்... படித்து பார்க்க ஆவல் :-)

22 Comments:

Shankar said...

Excellent!! Yes, I was also a staunch supporter of Vaali in my early days and people used to say that I was supporting him because of his caste!!!

Shankar said...

Excellent!!

ஆறுமுகம் said...

ரொம்ப நேர்மையான பதிவு. அப்புறம்
\\ துள்ளித் திரிந்ததொரு காலம்// - இது இயக்குனர் பாக்ய நாதன் எழுதியது

ஆறுமுகம் said...

ரொம்ப நேர்மையான பதிவு. அப்புறம்
\\ துள்ளித் திரிந்ததொரு காலம்// - இது இயக்குனர் பாக்ய நாதன் எழுதியது

ஹரன்பிரசன்னா said...

ஆறுமுகம், நான் வாலி என்றே நினைத்திருந்தேன். அதில் எல்லாமே ஒரு நாள் ஒரு நாள் என்று வரும், சட்டென்று ஓரிடத்தில், கையில் குழந்தையும் அதனால் என்று வரும். அந்த வரி எனக்கு மிகவும் பிடிக்கும். வாலி இல்லை என்பதே வருத்தமாக உள்ளது. ;)

Alagu said...

I think மணியே மணிக்குயிலே is written by Ilaiyaraja

சிந்திப்பவன் said...

ஹரன்!

வாலி கவிஞனாய் வாழ்வைத்தொடங்கி,வியாபாரியாய் முடித்தவர்.அவர் தன் மாறும் நிலைப்பாடுகளை குறித்து வெட்கப்பட்டதே இல்லை.மறைத்ததும் இல்லை.
அவருக்கு இவ்வளவு பெரிய கட்டுரை total waste.

Kavin said...

அருமையான பதிவு.நன்றி.

கௌதமன் said...

நல்ல அலசல்.

SRK said...

//மணியே மணிக்குயிலே//

அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் இளையராஜா எழுதியவை.

R. J. said...

இவ்வளவு டிஸ்கியுடன் கட்டுரை! ஹரன் பிரசன்னா தன மனதில்பட்ட உண்மையான விமரிசனத்தை எழுதி இருக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனாலும், இது அஞ்சலி சமயம், இப்போது இவ்வளவு நேர்மையான, எதிர்மறையான விமரிசனம் தேவை இல்லை என்பது என் எண்ணம். அதுவும் வாலியே தன திரைப்படப் பாடல்களை 'துட்டுக்குப் பாட்டு' என்று சொன்னதுக்கப்புறமும் அவர் எழுதின காமப் பாடல் வரிகளை எடுத்துக் காட்டியது, கட்டுரையாளரின் உள்ளே இருக்கும் பத்திரிகையாளனை வெளிக்கொணர்கிறது. (குமுதம் போன்ற பத்திரிகையை சொன்னேன்!). சினிமாப் பாட்டு சென்று சேர்வது அடித்தட்டு மனிதர் வரை, சினிமா ஒரு வியாபாரம் என்று புரிந்துகொண்டு அந்தப் பாடல்களை கேட்டு மறக்கலாம், மன்னிக்கலாம். மேலும் ராஜாவும் இயக்குனர்களும் அந்த வரிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து மாற்றச் சொல்லி இருக்கலாம். அதனால் அவர்களுக்கும் பங்கு உண்டு. முக்கியமாக இசைக் குயில் ஜானகியை முக்கல், முனகல் பாடல்களாக மாற்றியது ராஜாதான். ராஜா வாலியின் பாடல் வரிகளை ரசித்தே அனுமதித்தார் அல்லது கேட்டு வாங்கினார் என்பது என் எண்ணம். (இன்று பலர் ராஜாவை ஞானி ஆக வரிக்கலாம், என்னால் முடியாது. அவரின் அகம்பாவம் தான் எனக்குத் தெரிகிறது. ) அதே போல எம் ஜீ ஆருக்கும் அவர் உதட்டைக் கடித்து, சுழித்து ஹீரோயினை அணைக்கும் பொது, இந்த மாதிரி வார்த்தைகள் தான் அவருக்கும் தேவைப் பட்டிருக்கும். (என்னளவில் MSV க்கு வாலி இந்த அளவு ஸ்ருங்கார வரிகளை எழுதவில்லை என்று படுகிறது - நிச்சயமாகத் தெரியவில்லை.)

நான் ஏற்கனவே ஒரு பதிவில் பின்னூட்டம் இட்டதுபோல், வாலி மாதிரி யாரும் இல்லை என்று புகழ வேண்டாம் (வைரமுத்து, நா,முத்துக்குமார் போன்றோர் இருக்கும்போது), தூக்கி மிதிக்கவும் வேண்டாம்.

கவிதையோ இல்லை வெறும் எதுகை மோனை வாக்கியங்களோ, திரைப்படப் பாடல்களில் செய்த தவறுகளுக்கு, அவர் வேண்டிய பிராயச்சித்தம் செய்துவிட்டார் என்பதே என் எண்ணம்.

-ஜெ

சு.கி.ஞானம் said...

மருகோ மருகோ
சம்பா சம்பா ரம்பாதான் அம்மா பொண்ணு ரம்பாதான்
இதுதான் இதுக்குத்தான் அதுதான் அதுக்குத்தான்
இப்ப சாத்து நடு சாத்து
இப்படி வாலி எழுதித் தள்ளிய பாடல்களைப் பட்டியலிட்டால் அவர் ராஜாவை எந்த அளவுக்கு வஞ்சித்திருக்கிறார் என்பது புரியும்.

என்ன கொடூர வஞ்சனை இது
ஆஹா பாடல்கள் இடம்பெற்ற சூழ்நிலை எல்லாம் எப்படிபட்டது!
அப்பப்பா
பாஸ் இந்த படமெல்லாம் பார்த்துருக்கேங்களா
இந்தப் பாடல்களே நேரத்தை ரோப்புவதர்க்க்காகவும் அடித்துத் தள்ளுவதர்க்க்காகவும் தானே..

காரிகன் said...

மிக நடுநிலையான கருத்து. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். ஆபாசமான பாடல்கள் எழுதிய வாலியை நன்றாகவே சாடியும் இருக்கிறீர்கள்.அவரை நல்ல கவிஞர் என்ற நிலையில் வைத்துப் பார்ப்பதை சந்தேகம் கொள்கிறீர்கள். ஆனால் அதே சமயம் அந்த ஆபாச பாடல்களுக்கு இசை அமைத்து உயிர் கொடுத்த இசை அமைப்பாளர்களை(அவற்றில் பெருமான்மை இளையராஜா இசையில் வந்தது) தவிர்த்து விடுவது சரியல்ல.சொல்லப்போனால் எதைவேண்டுமானாலும் நான் பாடலாக்கிக்காட்டுவேன் என்று தற்பெருமை பேசிய இளையராஜாவும் இந்த சீரழிவிற்க்கு உடந்தையாக இருந்தவர்தான். அவரை மட்டும் லாவகமாக எதுவும் சொல்லாமல் வாலியை மட்டும் குற்றவாளி ஆக்குவது நியாயம் இல்லை என்றே நினைக்கிறேன்.

Anonymous said...

Kannadasan,vali,vairamuthu they are all business man. They are not poets and their songs and writings are considered now as literature.

They wrote songs sorry filled words for musicians ...only few people will know what is poem and poetry...for majority movie songs are literature...long live tamil....

murali

Anonymous said...

With ilayaraja music and Vaali lyrics, Kalayana malai song from Pudhu Pudhu arthangal was amazing - http://www.youtube.com/watch?v=r5JJIuo4pEo

Anonymous said...

வள வள வென்று இப்படி ஒரு புலம்பல் தேவையா? அனைத்து சினிமாக் கவிஞர்களின் பெரும்பாலான பாடல்கள் வெறும் வெட்டிக் கூத்துதான். என்னமோ இலக்கியம் பாழாப் போன மாதிரி இந்த ஒப்பாரி என்னத்துக்கு?

Expatguru said...

எந்த 'கவிஞன்; தான் ஒழுங்காக எழுதியிருக்கிறான் சொல்லுங்கள்? பல அருமையான பாடல்களை எழுதிய வைரமுத்து கூட ஜெமினி படத்தில் வரும் 'ஓ போடு' என்ற கேவலமான பாடலில் "காற்றடைத்த பையடா கட்டில் இன்பம் பொய்யடா, ஆண்மை இல்லாதவன் ஒருவன் அன்று சொன்னது" என்ற‌ குப்பை வரிகளை எழுதினார். பட்டினத்தார் ஸ்வாமிகளை இதைவிட மோசமாக‌ யாராலும் அவமானப்படுத்த முடியாது. கேட்டால் மக்கள் விரும்புகிறார்களாம். ஏதோ இவர்கள் மக்களிடம் கருத்து கேட்ட மாதிரி. இப்படி எழுதுவதற்கு பதில் வேஸி தொழில் செய்யலாம்.

என்ன இருந்தாலும் கண்ணதாசனுக்கு பிறகு சொல்லி கொள்ளும் படியாக இருந்தவர் என்றால் அது வாலி தான். ஆனால் ஏதோ அவர் மட்டும் தரம் தாழ்ந்து எழுதியது போல சொல்லவது பிதற்றலான வாதம்.

Unknown said...

very nice
S.R.Sukumaran

kailash said...

எய்தவரை விட்டு விட்டு அம்பை மட்டுமே நொந்து என்ன பயன் !

திண்டுக்கல் தனபாலன் said...

உமது தளத்தில் கருத்து சொல்ல phd படிக்க வேண்டும் என்று சொன்னார்கள்...

இதோ படித்துக் கொண்டிருக்கிறேன்... மனிதனை மதிக்காத மிருகங்களை... நன்றி... வாழ்த்துக்கள்...

Ranjith said...

ஊனக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான் . . .

ஞானக்கண்ணில் பார்த்தால் யாவும் சுற்றம்தான் . . .

உங்கள் பார்வை இப்படித்தான் உள்ளது . . . .

Anonymous said...

15000 பாடல்கலை எழுதிய கவிஞர் ஒருவரை ஒரு 100 பாடல்களால் இனம் அறிவது சரி அல்ல..

சில நேரம் அவர் கற்பனை உறைந்து இருக்கலாம்..அது மனிதனின் இயல்பு..

ஆச்சரியம் ஊட்டும் சில பாடல்கள் அவர் படைப்பில்:

* அம்மா என்று அலைக்காத
* Mustafa Mustafa
* தென் மதுரை வைகை நதி
* பூவே செம்பூவே உண் வாசம்
* வெண்மதி வெண்மதியே நில்லு
* மௌன ராகம் (அனைத்து பாடல்கள்)
* வாழ்வே மாயம்
* பெண்ணல பெண்ணல ஊதா பூ

அவர் எல்லா காலத்திற்க்கும், தேவைக்கும் எழுதி இருக்கிறார் என்றே எனக்கு தெரிகிறது.