பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 22, 2013

வாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா

வாலி ஒரு மகா கவிஞன் என்பதைத் தாண்டி அவரின் மிகப்பெரிய சாதனையாக நான் கருதுவது, தனது கடைசி மூச்சு வரை தன்னை RELEVANT ஆக வைத்துக் கொண்ட தன்மையைத் தான். இறுதி வரை தன்னை புதுப்பித்துக் கொண்டே இருந்தார் என்று தான் கூற வேண்டும். அதனாலேயே, அவரால் எம்ஜியார் தொடங்கி தனுஷ் வரை ஹிட் பாடல்களை அள்ளி வழங்க முடிந்தது. கண்ணதாசனுக்கு அடுத்து அவரளவுக்கு மொழியை வசப்படுத்தி வைத்திருந்தவர் யாருமில்லை. கற்பனை வளம், சொல் ஆளுமை (vocabulary), தமிழ் மேல் காதல் என்ற மூன்றும் அதீதமாக வாய்க்கப் பெற்றவர் வாலி. 15000-க்கும் மேல் பாடல்கள் புனைந்த அவர், தமிழ் பாடலாசிரியர்களில் சச்சின் டெண்டுல்கர்.

ஸ்ரீரங்கம் அருகே திருப்பரைத்துறையில் 1931-ல் டி.எஸ்.ரங்கராஜனாக் பிறந்து, சென்னை கலைக்கல்லூரியில் பயின்று, வாலி சில ஆண்டுகள் ஆல் இந்தியா ரேடியோவில் பகுதி நேர வேலை பார்த்தவர். சினிமா வாய்ப்புக்காக அலைந்த சமயத்தில், அவருக்கு உதவியவர்களில் குணச்சித்திர நடிகர் வி.கோபாலகிருஷ்ணனும், பாடகர் டி.எம்.எஸ்ஸும் முக்கியமானவர்கள். வாலி வார்த்தைச் சித்து விளையாட்டில் கை தேர்ந்தவர் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் டி.எம்.எஸ். வாலி டி.எம்.எஸ்-ஸுக்கு ஒரு போஸ்ட் கார்டில் அனுப்பிய கவிதை, இசை வடிவம் பெற்று, டி.எம்.எஸ்-ஸாலேயே பாடப்பட்டு ”கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்” என்று AIR-ல் பெரும்பிரபலம் அடைந்தது. ’அழகர் மலைக்கள்ளனாக’ ஆரம்பித்த வாலியின் சகாப்தப் பயணம் ‘காவியத்தலைவனாக’ முடிவுற்றதில் ஆச்சரியமில்லை!எம்ஜியாருக்கு வாலி எப்போதும் “ஆண்டவரே” தான். எம்ஜியாருக்காகவே எழுதப்பட்ட ஹிட் பாடல்கள் தான் எத்தனை!

1. தரை மேல் பிறக்க வைத்தான்
2. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
3. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
4. கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்
5. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு
6. கண் போன போக்கிலே கால் போகலாமா
7. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

வாலி என்று தனக்கு நாமகரணம் செய்து கொண்டதற்கு அவருக்கு ஓவியர் மாலி மேல் இருந்த அபிமானமே காரணம். வாலியே ஓரளவுக்கு நன்றாக வரைவார். வசன கவிதையில் / பேச்சில் எதுகை மோனையில் அவரை விஞ்ச இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும். அவரது திரைப்பாடகளில் மட்டுமன்றி, அவரது கலகலப்புப் பேச்சிலும் ஒரு தன்னிச்சையான இயல்பு (spontaneity) இருந்ததும், அவரது பேச்சை கேட்கத் தூண்டுவதாக இருந்தது.
“ஊக்குவிக்க ஆளிருந்தா ஊக்கு விக்கறவன் கூட தேக்கு விப்பான்”

ஒரு முறை வாலி வீட்டுக்கு ஒரு பாம்பு வந்த விஷயம், நாளிதழ்களில் முக்கியச் செய்தியாக வந்து விட, பலரும் அவரை விசாரிக்க, ஒருவர் மட்டும் “உங்க வீட்டுக்கு மட்டும் ஏன் பாம்பு வர வேண்டும்?” என்று குசும்பாக கேட்க, வாலி தனக்கே உரித்தான பாணியில், “படமெடுக்கறவங்க எவ்வளவோ பேர் வராங்க, பாம்பு வந்தா என்னய்யா!” என்று ஒரு போடு போட்டாராம். பிறிதொரு சமயம், எம்ஜியார், வாலியை வெறுப்பேத்த, ”உலகம் சுற்றும் வாலிபன்” படத்தின் டைட்டில் கிரெடிட்ஸில், பாடலாசிரியாராக வாலியின் பெயரை போடப் போவதில்லை என்று சொன்னபோது, வாலி உடனே “அப்படி உங்களாலே படத்தை ரிலீஸ் பண்ணவே முடியாது” என்றாராம். எம்ஜியார் விடாப்பிடியாக, ‘பண்ணிக்காட்டறேன் பாருங்க’ என்று கூற, வாலி “அதெப்படி ’வாலி’ இல்லாம நீங்க படத்தை ‘உலகம் சுற்றும் பன்’ என்றா ரிலீஸ் பண்ணுவீங்க?!” என்றவுடன் எம்ஜியார் சிரித்து விட்டு வாலியை தழுவிக் கொண்டாராம்.

அய்யங்காரான வாலிக்கு மீன் குழம்பு பிடிக்கும் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. சிலபல சமயங்களில் கட்டாயத்தின் பேரிலோ (நட்பின் பேரிலோ!) அவரது அரசியல் சார்பு ஜால்ரா தான் சற்று அயற்சியைக் கொடுத்தது. ஆனால், அதிலும் இருந்த மொழி வளமும், சொல் விளையாட்டும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. எ.கா: ’ஏ.எம், பி.எம் பார்க்காத ஒரே சி.எம் நீ தான்’. வாலியின் (கலைஞருக்கு) ஜால்ரா கவிதை ஒன்றை இங்கே காணலாம்.


இந்தக் கவிதையிலும் (ஆண்டு 2007-ல் எமனிடம் இருந்து நீ என்னை மீட்டாய். அதற்கு முன் ஆண்டு 2006-ல் ஓர் 'உமனிடம்' இருந்து தமிழ் மண்ணை மீட்டாய்), இது தவிர ஓரிரு சமயங்களிலும், வாலி ஜெ.ஜெ-வை கிண்டலாக விமர்சித்திருந்தாலும், புள்ளி விவரங்களுடன் விமர்சகர்களுக்கு பதில் / விளக்கம் தரும் ஜெ.ஜெ, வாலி குறித்து எதுவுமே பேசியதில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அது போல, பெரும்பாலான சினிமா ஆசாமிகள் போல அரசியல் சூழலுக்கு ஏற்றாற் போல் வாலி ஜால்ரா தட்டவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். கருணாநிதி மேல் கடைசி வரை வாலி அபிமானத்துடனே இருந்தார்!

பிடித்த வாலியின் பாடல்கள் என்று பெரிய ஒரு லிஸ்ட் இருந்தாலும், சிலபல பாடல்கள் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

1. வெண்ணிலா வரும் வேளையில் நான் விழித்திருந்தேன், என்னவோ கனவுகளில்...
2. மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டனே
3. மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ
4. கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை
(ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா, வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா - மறக்க முடியாத சரண வரிகள்)
5. வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
6. காதோடு தான் நான் பாடுவேன், மனதோடு தான் நான் பேசுவேன்
7. ஒன்னை நினைச்சே பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
8. ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி
9. வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
10. அம்மா என்றழைக்காத உயிரில்லையே
11. காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா

வாலி பாடலின் ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கியத்துவம் தருபவர். “சீனத்து பட்டு மேனி உந்தன் சிட்டு மேனி” என்ற உ.சு.வா பாடலுக்கு, பல்லவி வரிக்கு முன் ஒரு சொல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யாரோ பிரியப்பட, வாலி “செஞ் சீனத்து பட்டு மேனி உந்தன் சிட்டு மேனி” என்று பல்லவியை ஒரு நொடியில் அழகாக்கி விட்டார். வாலிக்குப் பிடித்த பாடல் குறித்து, ஒரு பேட்டியில், ஒரு வரலாற்றைப் பதிவு செய்த வகையில் அமைந்த கண்ணதாசனின் “நிலவைப் பார்த்து வானம் சொன்னது...” பாடலை வாலி பிரமிப்புடன் குறிப்பிட்டு இருக்கிறார். அப்பாடலில் வரும் “புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல் தான் அது
திரு நீலகண்டரின் மனைவி சொன்னது” என்ற சரண வரிகளை நினைவு கூர்க!

வாலி கண்ணதாசன் மேல் பெருமதிப்பு வைத்திருந்தவர். சமீபத்தில் வாலி பற்றிய சந்தக்கவிதையாக எழுதப்பட்டதில் “கண்ணதாசன் கொடி அகற்றி கண்ணதாசனை வென்றாய்” என்பதை ஏற்றுக் கொள்ள வாலி ஒரேடியாக மறுத்து, பின்னர் அவ்வரிகள் “கோடி கோடி கனவோடு கோடம்பாக்கம் வந்தாய்; கண்ணதாசன் கொடியோடு கொடி நாட்டி நின்றாய்” என்று மாற்றப்பட்டது.

எண்பத்து ஒன்று வரை தமிழ் எழுதி
கண்பட்டும் நிறைவாகவே வாழ்ந்த பின்னும்
மண்பட்டு உன் உடல் போகையிலே
புண்பட்டுப் போனாளய்யா தமிழன்னை!

என்று அவருக்கு உரித்தான ஸ்டைலிலும், “ராஜனுக்கு ராஜன் எங்க ரங்கராஜன் தான்” என்ற அவரது தசாவதார பாடல் வரிகள் வாயிலாகவும், வாலி அவர்களுக்கு அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன். அவரது விஜயத்தால், பரமபதம் இப்போது கலகலப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்!

எ.அ.பாலா
பரமபதம் கலகலப்பாக இருக்குமா என்று தெரியாது ஆனால் உங்களது விஜயத்தால் இட்லிவடை கலகலப்பாக இருக்க போகிறது உண்மை

எ.அ.பாலாவிற்கு சில கேள்விகள்:
வாலி சில முறை ஜெயலலிதாவை நக்கல் அடித்தாலும் ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை ஏன் ?
வாலி மறைந்த போது ஜெயலலிதா ஏதாவது அஞ்சலி அறிக்கை கொடுத்தாரா ? அல்லது டி.கே.பி மறைந்த போது கலைஞர் கண்டுகொள்ளாத மாதிரி இவரும் கண்டுக்கொள்ளவில்லையா ?

33 Comments:

M Arunachalam said...

"ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி" - இது வைரமுத்து எழுதிய பாடல் ஆயிற்றே?

enRenRum-anbudan.BALA said...

இ.வ கேள்விகளுக்கு பதில்கள்:

//வாலி சில முறை ஜெயலலிதாவை நக்கல் அடித்தாலும் ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை ஏன் ?//

வாலி, ஜெ பற்றி கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். வாலி கிண்டலுக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை என்று ஜெ நினைத்திருக்கலாம்!

//வாலி மறைந்த போது ஜெயலலிதா ஏதாவது அஞ்சலி அறிக்கை கொடுத்தாரா ? அல்லது டி.கே.பி மறைந்த போது கலைஞர் கண்டுகொள்ளாத மாதிரி இவரும் கண்டுக்கொள்ளவில்லையா ? //

”கலைஞர் மாதிரியே” ஜெவும் கண்டு கொள்ளவில்லை! இப்ப திருப்தி தானே!

enRenRum-anbudan.BALA said...

//M Arunachalam said...

"ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி" - இது வைரமுத்து எழுதிய பாடல் ஆயிற்றே?
//

மன்னிக்கவும், அவசரத்தில் தவறு செய்து விட்டேன். சுட்டியதற்கு நன்றி. இ.வ திருத்தி விடுவார் :)

Anonymous said...

`சீனத்துப் பட்டுமேனி எந்தன் சிட்டு மேனி` பாடல் இடம் பெற்ற படம் தாய்மூகாம்பிகை என்று நினைவு.

Anonymous said...

Always this Bala makes silly mistakes. Example: Raina is a left arm bowler. and many more, actually.

Anonymous said...

Bala's sytle is utter copy of the writing style of Sujatha.

Uyara uyara parandhaalum oor kuruvi parundhu aagathu, Bala.

Sondha stylela edhuvathu ezhuthunga.

R. J. said...

உலகம் சுற்றிய வாலிபன் - vaalee fun !

திரை உலகை சேர்ந்த ஜெ , தன தலைவன் எம் ஜீ ஆருக்கு நெருக்கமான வாலி மறைவுக்கு அஞ்சலி செலுத்தாதது சரி இல்லை. நட்பு பேணுவதில் கலைஞர் பலப் பலப் படி மேல்! உண்மையில் ஜெ'க்கு நண்பர்கள் உண்டா?

தமிழ் வாலி வசம் இருந்தது உண்மையானாலும் மற்றவர்களை குறைத்து மதிப்பிடவேண்டாம். வைரமுத்து, நா.முத்துக்குமார் என்று பலர் உண்டு.

இ.வ. எதிர்பார்க்கும் 'கலகலப்பு' இந்தப் பதிவுக்குக் கிடைக்காது! (பாலாவின் சீரியஸ் பதிவு இது!)

-ஜெ.

Anonymous said...

பொய் கால் குதிரை திரைப்படம், வாலி யின்
உண்மை யானா நகைச்சுவை நடிப்பு .. (கமல் படம், உண்மையான புகைப்படம்) ஒரு பாத்திரமாக நடித்தார்.

நல்ல படம் எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டும்.

Anonymous said...

பொய் கால் குதிரை திரைப்படம், வாலி யின்
உண்மை யானா நகைச்சுவை நடிப்பு .. (கமல் படம், உண்மையான புகைப்படம்) ஒரு பாத்திரமாக நடித்தார்.

நல்ல படம் எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டும்.

Anonymous said...

"பெரும்பாலான சினிமா ஆசாமிகள் போல அரசியல் சூழலுக்கு ஏற்றாற் போல் வாலி ஜால்ரா தட்டவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்" --- ஜெ முதல்வரான பிறகு, ஸ்ரீ ரங்கத்து ரங்கநாயகி என்று வாலி பாடல் எழுதியதாக நினைவு...

ப்ரதிவாதி பயங்கரன் said...

எ.அ. பாலா ஐயங்காருக்கு ஜாதிப் பாசம் ஜாஸ்தி. வாலி ஐயராக இருந்தால் இதை எழுதியிருப்பாரா என்பது சந்தேகமே. IPL விஷயத்தில் ஸ்ரீசாந்தை ஒரு பிடி பிடித்த இவர், அது boomerang ஆகி சீனு மாமாவை தாக்க ஜாதி பாசம் அதிகமாகி அப்படியே அந்தர் பல்டி அடித்ததும் நாம் கண்டதுதானே.

kothandapani said...

வாலியின் அஞ்சலியில் நமக்கு வாலி பற்றி தெரிய வரும் அறிய தகவல்கள் :
1. பாலா ஐயங்கார்
2. ஐயங்காருக்கு ஐயங்கார் மேல் பாசம் அதிகம் என்று ஐயர் கருதுகிறார்
3. ஜெ வாலியை கண்டுகொள்ளவில்லை
4, கருணாவும் டி கே பி யை கண்டு கொள்ளவில்லை (தி கே பட்டம்மாளா )
5. ஜெ வும் கருணாவும் யார் யாருக்கு எல்லாம் அஞ்சலி செலுதேலம் என்பதை நம்மை கேட்பதே இல்லை.
வாலியின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

எ.அ.பாலா பறக்கும் படை said...

//எ.அ. பாலா ஐயங்காருக்கு ஜாதிப் பாசம் ஜாஸ்தி. வாலி ஐயராக இருந்தால் இதை எழுதியிருப்பாரா என்பது சந்தேகமே. IPL விஷயத்தில் ஸ்ரீசாந்தை ஒரு பிடி பிடித்த இவர், அது boomerang ஆகி சீனு மாமாவை தாக்க ஜாதி பாசம் அதிகமாகி அப்படியே அந்தர் பல்டி அடித்ததும் நாம் கண்டதுதானே.//

வாலி ஐயரா இருந்தாலும் எ.அ.பா எழுதியிருப்பாரு. பிரதிவாதி பயங்கரனுக்கு ஸ்ரீனிவாசன் ஐயன்மாருன்னு தெரியாது போல...
-----------------
அடுத்து, எ.அ.பா ஸ்ரீசாந்த் ஆதரவா, வட இந்தியர்களை தானே இப்டி வறுத்தெடுத்து இருந்தாரு அந்த போஸ்ட்ல..
”””குருநாத் மெய்யப்பன் மேல் பெட்டிங் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருக்கும் சூழலில், ஸ்ரீனிவாசன் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வட இந்திய ஆங்கில நியூஸ் டிவி சேனல்கள் (CNN-IBN, TimesNow, Headlines Today) அலறுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. IPL-இல் நடந்துள்ள இந்த மகா பெரிய அசிங்கத்திற்கு பொறுப்பேற்று அதன் தலைவர், காங்கிரஸ்காரர் ராஜிவ் சுக்லா பதவி விலக வேண்டும் என்றும் அவை அலற வேண்டியது தானே!! அது போலவே, ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் என்று 3 கிரிக்கெட்டர்கள் முதலில் சிக்கியபோதும், ஸ்ரீசாந்த் வயிற்றெரிச்சலைத் தான் வட இந்திய ஆங்கில நியூஸ் சேனல்கள் அதிகம் கொட்டிக் கொண்டன”””

பிரதிவாதி பயங்கரன் சரியான காமடி பீஸ் போல இருக்கே, சம்ம உளறலா இருக்கே கமெண்ட். யாருக்கு பூமராங் இப்ப ;-)

கௌதமன் said...

மஞ்சுளாவுக்கு அஞ்சலி கிடையாதா?

enRenRum-anbudan.BALA said...

//`சீனத்துப் பட்டுமேனி எந்தன் சிட்டு மேனி` பாடல் இடம் பெற்ற படம் தாய்மூகாம்பிகை என்று நினைவு.
//
நன்றி அனானி. அவசரத்தில் நேர்ந்த கவனக்குறைவு அது.

enRenRum-anbudan.BALA said...

//Anonymous said...

Always this Bala makes silly mistakes. Example: Raina is a left arm bowler. and many more, actually.
//
IV is not a R&D site. You are not going to gain great insight or serious knowledge from here. So, "silly mistakes" wont have life altering effect on you, so relax !!!

enRenRum-anbudan.BALA said...

// Anonymous said...

Bala's sytle is utter copy of the writing style of Sujatha.

Uyara uyara parandhaalum oor kuruvi parundhu aagathu, Bala.

Sondha stylela edhuvathu ezhuthunga.
//
நான் பருந்துன்னு சொல்லவே இல்லையே. எனக்கு இவ்வளவு தான் எழுத வரும். வாசிக்கறதும், வாசிக்காததும் பாராட்டறதும், திட்டுவதும் உங்க விருப்பம்.

enRenRum-anbudan.BALA said...

// Anonymous said...

"பெரும்பாலான சினிமா ஆசாமிகள் போல அரசியல் சூழலுக்கு ஏற்றாற் போல் வாலி ஜால்ரா தட்டவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்" --- ஜெ முதல்வரான பிறகு, ஸ்ரீ ரங்கத்து ரங்கநாயகி என்று வாலி பாடல் எழுதியதாக நினைவு...
//

உங்கள் நினைவு சரி தான். ஆனால், ஈழத்தமிழருக்கான இரங்கல் கவிதையில், அம்மக்களுக்கான ஜெயின் வலிமையான நேர்மையான ஆதரவை பாராட்டி வாலி எழுதியதை நான் ஜால்ராவாக பார்க்கவில்லை.

IdlyVadai said...

//IV is not a R&D site. You are not going to gain great insight or serious knowledge from here. So, "silly mistakes" wont have life altering effect on you, so relax !//

ஜெயஸ்ரீ, ஹான்பிரசன்னா போன்ற முக்கியமானவர்கள் படிக்கும் ஒரு தளத்தை இப்படி ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை என்று கூறுவதை கண்டிக்கிறேன். ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை என்றால் இவர்கள் படிப்பாகளா ? இது பாலா செய்யும் அடுத்த 'Silly Mistake'

எ.அ.பாலா பறக்கும் படை said...

//ஜெயஸ்ரீ, ஹான்பிரசன்னா போன்ற முக்கியமானவர்கள் படிக்கும் ஒரு தளத்தை இப்படி ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை என்று கூறுவதை கண்டிக்கிறேன்.//

இதென்னய்யா கூத்து? ‘எனக்குள் ஒருவன்’ மாதிரி இருக்கற எ.அ.பா வும் இ.வ யும் அடிச்சுக்கறாங்க! ஒரு இழவும் புரிய மாட்டேங்குது
----------------------------

Anonymous said...

Motham 19 comment. Adhula Bala eluthinathu 6 comment + 1 bala padai comment. Vilangidum.

Yaaravadhu Balavoda internet connectionai cut pannungappa.

Naadu urupadum.

”தளிர் சுரேஷ்” said...

வாலியை பற்றிய சுவையான தகவல்கள்! ஜெ. வாலிக்கு அஞ்சலி செலுத்தாதது தவறு என்றே தோன்றுகிறது! நன்றி!

Anonymous said...

அமைச்சர் பெருந்தகை ஆற்காட்டாரிடம் உள்ள பவரால், வீட்டு விளக்கு எரியும், நடுரோட்டு விளக்கு எரியும்.
உயரிய தலைவா உன்னிடம் உள்ள பவரால் தான் நாட்டு விளக்கு எரியும், நற்றமிழ் பாட்டு விளக்கு எரியும்.

idhellam romba jaasthi...

இலவச மொத்தனார் said...

இனிமே இவரு எ.அ பாலா அல்ல; த.அ.பாலா - தர்ம அடி. எத்தன குடுத்தாலும் தாங்குறாரய்யா மனுஷன்.. பாவம் ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்யா!

லொள்ளு லோகநாதன் said...

//மஞ்சுளாவுக்கு அஞ்சலி கிடையாதா?//
ஹல்லோ கெளதமன்,
தமிழ் படவுலகுக்கே கிடையாதுன்னு அஞ்சலி சொல்லிட்டாங்களே! தெரியாதா? இதில மஞ்சுளாவுக்குன்னு தனியா சொல்லனுமா என்ன?

Vikram said...

\\IV is not a R&D site. You are not going to gain great insight or serious knowledge from here\\

yaaralayum marukka mudiyaada balavin "karuthu" idhu dhaan :-)

on a serious note - R.I.P vaali :-(

ஜெ. said...

//ஜெயஸ்ரீ, ஹான்பிரசன்னா போன்ற முக்கியமானவர்கள் படிக்கும் ஒரு தளத்தை இப்படி ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை என்று கூறுவதை கண்டிக்கிறேன். ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை என்றால் இவர்கள் படிப்பாகளா ? ..// இ.வ.வை தொடர்ந்து படித்து தொடர்ந்து பின்னூட்டமிடும் அடியேன், கௌதமன் அவர்கள், கோதண்டபாணி அவர்கள், மற்றும் பலர் ‘முக்கியமில்லாதவர்’களா? -ஜெ.

R.DEVARAJAN said...

ஊர்ப்பெயரை ‘திருப்பராய்த்துறை’
என்று திருத்துக; ஒத்தி ஒட்டும்
ஒட்டர்கள் [போட்டியாளர்கள்]
தவறான சொல்லைப் பின்பற்றக் கூடும்.
தவறாக எண்ண வேண்டாம்

Lalitha said...

//மஞ்சுளாவுக்கு அஞ்சலி கிடையாதா? //

Oruvar vazhvu mudindavudan perum mariyadhai, avar vazhndha vazhvaiporuthu than irukum.

Kinathumedu said...

`சீனத்துப் பட்டுமேனி எந்தன் சிட்டு மேனி` பாடல் தாய் மூகாம்பிகை படத்தில் சிவக்குமார் பூர்ணிமா நடிப்பில் எடுக்கப்பட்டது.

Srriram said...

வாலி ஒரு சகாப்தம் என்றால், அவருக்கு இவ்வளவு அழகாக சமர்ப்பணம் எழுதிய நீங்கள் ஒரு half volley !

Srriram said...

வாலி ஒரு சகாப்தம் என்றால், அவருக்கு இவ்வளவு அழகாக சமர்ப்பணம் எழுதிய நீங்கள் ஒரு half volley

Srriram said...

வாலி ஒரு சகாப்தம் என்றால், அவருக்கு இவ்வளவு அழகாக சமர்ப்பணம் எழுதிய நீங்கள் ஒரு half volley !