பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, June 09, 2013

சன்டேனா இரண்டு (9-6-13) செய்திவிமர்சனம்

இந்த வாரம்(மாவது)… எதையாவது உருப்படியாக எழுதலாம் என்று முயற்ச்சித்தில், நதிகள் இணப்பு திட்டம் பற்றிய ஒரு குட்டி ஆராய்ச்சிசெய்தி # 1நெய்வேலியில் இருந்து கர்னாடக மாநிலத்திற்க்கு, கேரளாவிற்க்கும் மின்சாரம் செல்கிறது. ஆனால், காவேரி, முல்லைப்பெரியாறு என இரு மாநிலங்களும் நமது உரிமையை தட்டி பறித்து இருக்கின்றன. மத்திய அரசில் எந்த கட்சி இருந்தாலும், வேடிக்கை மட்டுமே பார்க்கின்றன. காரணம், நெய்வேலி மின்சாரம் தேசிய உடமை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால், நதிகள் உற்பத்தி ஆகும் பகுதிகளை கொண்ட மாநிலங்கள். நதிகள் தங்களுக்கே சொந்தம் என்று கூறுகின்றன.நதிகள் முதலில் தேசிய உடமை ஆக்கப் படவேண்டும். இரண்டாவதாக, நதிகள் இணைப்பு திட்டம்.

முதல் திட்டம் அரசியல் கட்சிகளின் கையில்தான் இருக்கிறது. இரண்டாவதான, நதிகள் இணைப்பு திட்டம் நமது இந்தியாவில் சாத்தியமா?

"நதிநீர் இணைப்பு திட்டத்தால், கூடுதலான விவசாய நிலங்களில் நீர்ப்பாசனம் செய்ய முடியும். ஆனால் இதில் சில பிரச்சினைகள் உள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய கவலை உள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால், அது உயிரினங்களுக்கு ஈடுசெய்ய முடியாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும். எனவே, நதிநீர் இணைப்பு திட்டத்தை எச்சரிக்கையுடன் செயல்படுத்த வேண்டி இருக்கிறது.

மேலும், நதிநீர் இணைப்பு திட்டம், எந்த அளவுக்கு மக்களுக்கு தண்ணீர் பாதுகாப்பை அளிக்கும் என்று நிபுணர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. இருப்பினும், தற்போது இரண்டு, மூன்று நதிநீர் இணைப்பு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. அவற்றில், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்தில் ஓடும் கேன்- பேட்வா நதிகளை இணைக்கும் திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தை சோதித்து பார்க்கப்போகிறோம்" - இவ்வாறு ஒருமுறை தெரிவித்தார் பிரதமர் மன்மோகன் சிங்.

"நதிகள் இணைப்பு திட்டம் சாத்தியமே" என்கிறார் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள்.

இவர் தமிழக நதிகளை இணைத்து, அவற்றுக்கு ஒரு பொதுவான வழித்தடத்தை உருவாக்கும் ஒரு புதிய திட்டத்தை முன் மொழிந்து இருக்கிறார்.

நதிநீர் இணைப்பு சாத்தியமில்லை என்று சில அரசியல் தலைவர்களும் மந்திரி பொறுப்பில்உள்ளவர்களும் பேசுவதை இப்போதும் கேட்கிறோம். நாம் வானத்தை வில்லாகவளைக்கச் சொல்லவில்லை, வானவில்லையும் நேராக்கச் சொல்லவில்லை. நம் கண்ணெதிரே இருக்கக் கூடிய ஒரு விஷயத்தைச் சரி செய்யுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

"தமிழ்நாடு வாட்டர்வேஸ் பிராஜக்ட்
" பற்றிச் சொல்லியிருந்தேன். அது ஒரு மிகப் புதுமையான திட்டம். வெள்ளத்தைக் கட்டுப் படுத்துவது மட்டுமின்றி உபரிநீரைச்சேமிக்கவும் வைக்கக்கூடிய திட்டம். இரண்டு வழிகளில் நீர் செல்லக்கூடியஒன்று. மேட்டூர், சாத்தனூர், பவானி, வைகை, மணிமுத்தாறு, பேச்சிப்பாறை,சோலையாறு, பாபநாசம், சேர்வலாறு இவற்றோடு பூண்டி, சோழவரம், ரெட் ஹில்ஸ்,செம்பரம்பாக்கம், வீராணம் போன்ற எண்ணற்ற ஏரிகள், குளங்களை இணைக்கக் கூடிய அற்புதமான திட்டம்.தமிழ்நாட்டில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயக்கூடிய முக்கியமான நதிகளை ஒருபொதுவான வழியின் மூலம் இணைக்கக் கூடிய அத்தனை வரைத் திட்டங்களும் அதில்இருக்கின்றன. இந்தத் தண்ணீர் வழிகள் அனைத்தும் கடல் மட்டத்திலிருந்து 300மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றால் எவ்வளவு ஆழமானஆராய்ச்சிக்குப் பிறகு இவை தீட்டப்பட்டிருக்கும் என்பது உங்களுக்குப்புரியும்.இது என்னுடைய கனவுத் திட்டம்.இந்த தண்ணீர் வழிகளின் வழியே தமிழ்நாட்டின் அத்தனைஆறுகளும் இணைக்கப்பட்டு தமிழகத்தின் எல்லா ஆறுகளும், ஏரிகளும்,குளங்களும், கால்வாய்களும், இணைக்கப்பட்டு எல்லாவற்றிலும் ஆண்டு முழுவதும்கற்கண்டுத் தண்ணீர் தளும்பி நின்று விவசாயிகளுக்கும்,பொதுமக்களுக்கும்,தொழிற்சாலைகளுக்கும் எப்போதும் தாகம் தீர தண்ணீர் கிடைக்கக் கூடிய அந்தஅற்புதக்காட்சி எப்போதும் என் கனவுகளில் வருவது உண்டு. அந்தக் கனவுமட்டும் நிறைவேறிவிட்டால் தமிழ்நாடே சொர்க்கபுரி ஆகிவிடாதா என்ன?

ஒவ்வொரு நதியும் ஒவ்வொரு இடத்தில் இருப்பது போல் மேம்போக்காகப் பார்க்கும் போதுநம்மை பிரமிக்க வைக்கும். ஆனால் தேர்ந்த வரைபடத் திட்டங்களின் முலம் இவைஎத்தனை அழகாக இணைக்கப்படக்கூடியவை என்கிற உண்மை புரியும்.

இது ஏதோ வரைபடத்தில் மட்டுமே உள்ள, நிதர்சனத்தில் சாத்தியமே இல்லாத பகல்கனவுதிட்டம் அல்ல. ஐந்து கட்டங்களில் நிறைவேற்றப்படக் கூடிய பிராக்டிகலானதிட்டம்.


முதல் கட்டத்தில் வைகையையும் மேட்டூரையும் இணைக்கும் திட்டம். இது 350 கிலோ மீட்டர் நீளமானது.இரண்டாவது கட்டம் மேட்டூரையும் பாலாறையும் இணைப்பது, இது 270 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.150 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வைகை - தாமிரபரணி இணைப்பு அடுத்த கட்டத்தில் உள்ளது.நான்காவது கட்டத்தில் 130 கிலோமீட்டர் நீள முள்ள தாமிரபரணி - பெருஞ்சாணி இணைப்பு வருகிறது.ஐந்தாவதுகட்ட மாக இந்த நதிகளை இணைப்பு மூலம் கிடைக் கக்கூடிய உபரி நீரை ஆங்காங்கே உள்ள குளம், குட்டை, ஏரிகளில் இணைக்கக்கூடிய சப்சிடியரி கால்வாய் திட்டங்கள்.இப்படி நதிகளை இணைப்பது மூலம் தண்ணீர் அற்ற நதிகளுக்குத் தண்ணீர் கிடைப்பது மட்டுமன்றி,இதர தண்ணீர் நிலைகளுக்கு அதன் உபரித்தண்ணீரும் திறந்து விடப்படுவதால்நாடெங்கும் தண்ணீர் திரண்டு நிற்கக்கூடிய அற்புதமான நிலையை நம்மால் காணமுடியும். செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல வேண்டியதைப் போன்ற மலைக்கவைக்கும் திட்டம் அல்ல இது.

பத்தே வருடங்களில் செய்து முடிக்கக் கூடிய பிராக்டிகலான திட்டம்.இதனுடைய பலா பலன்களும் திட்டவரைவில் தெளிவாகவே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன.

முதல்கட்டமாக வெள்ள அபாயத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது இந்தத் திட்டம்,உபரியாக, 7.5. மில்லியன் ஏக்கர் அளவு விவசாய நிலத்துக்குப் பாசன நீரைஅளிக்கும்.

150 மெகாவாட்மின்சாரத்தை ஹைட்ரோ பவர் மூலம் உற்பத்தி செய்யும். நிலத்தடி நீர் அளவைஅதிகரிப்பதின் மூலம் மின்சார உபயோகத்தை 1350 மெகாவாட் அளவு குறைக்கும்.

10மீட்டர் ஆழமும் 120 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு அருமையான நீர்வழிப்பாதையை இந்தத் திட்டம் ஏற்படுத்தித் தரும். தண்ணீர் போக்குவரத்து, சுற்றுலாபோன்ற வற்றின் மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்.


சாலைப்போக்குவரத்தைக் காட்டிலும் 90 சதவீத எரிபொருள் சேமிப்பு இந்தத் தண்ணீர்வழிப் போக்கு வரத்தின் மூலமாகக் கிடைக்கும். ஐம்பது மில்லியன் பொது மற்றும் தொழிற் சாலை சார்ந்த மக்களுக்கு இந்தத் தண்ணீர் மூலம் பயன் கிடைக்கும். புதிய மின் உற்பத்திக் கான வழிகள் இந்தப் புதிய தண்ணீர் சாலைகளின் வழியே ஏற்படும்.சிந்தித்துப்பாருங்கள். இந்தப் புதிய தண்ணீர் வழிகள் தமிழ்நாட்டின் தலைவிதியையே மாற்றிவிடாதா?அசோகர் சாலை இருமருங்கிலும் மரங்களை நட்டார், ஏரி, குளங்களைஏற்படுத்தினார் என்று இன் றைய சரித்திரத்தில் படிக்கி றோமே, அதே போல்நாளைய வரலாற்றில், தமிழகத்தில் நதிகளை இணைத்தார்கள், அதன் மூலம் தமிழ்நாடு வளம்பெற்றது என்று எழுதப்பட வேண்டாமா? அது நம் கையில்தானேஇருக்கிறது?

என்று ஒரு கட்டுரையில் விளக்கம் தந்து, தனது நதி நீர் இணைப்பு கனவை வெளிப்படுத்தி இருக்கிறார் டாக்டர் அப்துல்கலாம்.

இரண்டாவது செய்தியில் இதன் எதிர்மறையான கருத்துக்களை பார்ப்போம்.செய்தி # 2"நதிநீர் இணைப்புத் திட்டம் பேரழிவு திட்டம்" என்றும், "இந்தத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து விளையும்" என்றும் ஒரு கருத்தை பதிவு செய்து இருக்கிறார் வருங்கால பிரதமர்(?) ராகுல்காந்தி.

"இயற்கைக்கு முரணாக நதிகளின் போக்கை திருப்பிவிடக் கூடாது" என்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

"நதிகளின் போக்கை திரும்பிவிடக் கூடாது. அது இயற்கைக்கு முரணானது. அதனால், பல்லாயிரக்கணக்கான உயிரினங்களும் வனப்பகுதியும் அழிந்துவிடும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

நதி நீர் ஆதாரம் இல்லாத நிலையில் மன்னர்கள் ஏராளமான ஏரிகள், குளங்களை அமைத்தனர். அவற்றின் மூலம் ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைத்து வந்தது.

அப்போது இயற்கை விவசாயம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதால், தண்ணீரின் தேவையும் குறைவாக இருந்தது. ஆனால், பசுமைப் புரட்சி என்ற பெயரில் ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் நிலம் பாழ்பட்டது. நீரின் தேவையும் அதிகரித்தது. பராமரிப்பின்றி ஏரிகளும் குளங்களும் தூர்ந்துபோனதால், விவசாயமும் அழிந்து வருகிறது.

நமது விவசாயிகள் 120 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்தி வந்தனர். அவற்றில் 90 வகை நெல் ரகங்கள் இப்போது வழக்கொழிந்துவிட்டன. இவை எல்லாமே வறட்சியைத் தாங்கும் திறன் கொண்டவை. மக்களுக்கு எதிரான வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்" என்று அறிவித்து இருக்கிறார் நம்மாழ்வார் அவர்கள்.

"இயற்கை வேளான்மை திட்டம் பின் நதிகள்,குளங்கள் மற்றும் ஏரிகளை தூர்வாருதல் போன்றவையே அரசு செய்யவேண்டிய, அத்தியாவசியமான திட்டங்கள்" என்கிறார் நம்மாழ்வார்.

இந்த வார சன்டேனா இரண்டு படித்தபின், நதிகள் இணைப்பு திட்டம் பற்றிய உங்கள் சிந்தனை என்ன?எப்படி இருக்கிறது?(நன்றி, இனி, அடுத்தவாரம்)

-இன்பா

11 Comments:

Unknown said...

கொள்ளிடமே வெட்டப்பட்ட கால்வாய் தான். அது போல நதிகளை இணைப்பதில் தவறு என்ன நம்மாழ்வாரே?

Anonymous said...

**** "நதிகள் இணைப்பு திட்டம் சாத்தியமே" என்கிறார் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள்.
****

கூடங்குளம் பத்திகூட இப்படித்தான் சொன்னார். இப்ப 60 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட கடிதத்தில் அது தரமற்ற இரும்பால் செய்யப்பட்டதாக வரும் தகவலைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இதிலும் கூட வெல்டு வைத்திருப்பது முற்றிலும் பாதுகாப்புக் குறைபாடு என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அப்படியான உலையில்தான் கலாம் அரை மணி சுற்றிப்பார்த்துவிட்டு எல்லாம் சரியாக இருப்பதாக சர்டிபிகேட் கொடுத்தார்!

சரவணன்

கௌதமன் said...

நதிநீர் இணைப்பு சாத்தியம் என்றும், அவசியம் என்றும் கருதுகின்றேன். நதிகளை யாரும் நூற்று எண்பது டிகிரி திருப்பிவிடப் போவதில்லை. இயற்கைக்கு எதிராக யாரும் எதுவும் செய்யமாட்டார்கள்; செய்யவும் இயலாது. நடந்தவை, நடப்பவை, நடக்கப் போவது யாவும் நன்மைக்கே என்று நம்புவோமாக! The idea is channelizing the flow of water. That is all.

கானகம் said...

நதிநீர் இனைப்பைக் குறித்து நான் சிறுவனாய் இருந்த காலத்திலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். முதல் கல்லை எடுத்துவைக்கத்தான் ஆள் இல்லை. பா,ஜ,க தனது தேர்தல் மேனிஃபெஸ்ட்டோவில் இதைச் சேர்க்க வேண்டும். தங்க நாற்கரச் சாலையைபோல பா.ஜ.க.வால் இதுவும் சாத்தியப்படும்.தண்ணீருக்காக உள்நாட்டுப்போர் வரும் முன்னர் இதைச் செய்தல் அவசியம் மற்றும் அவசரம்..

Anand said...

Thanks to IV for posting such a
worthy article.

கொள்ளிடமே வெட்டப்பட்ட கால்வாய் தான்.

நீச்சல்காரன் said...

கடலில் கலக்கும் நன்னீர் குறையும் போது உப்பின் தன்மைக் கூடி, கழிமுக நன்னீர் ஜீவராசிகள் கடலில் அழியும். சதுப்பு நிலக் காடுகள் நீர்வரத்துக் குறைந்தால் அந்தப் பல்லுயிர் மண்டலம் அழியும். புது வழித்தடம் அமைக்க பல ஏக்கர் காடுகள் எழிக்க நேரிடும். ஊழல் செய்ய வாய்ப்பாக அமையும். நதி நீர் இணைப்புத் திட்டத்தால் நிச்சயம் பல்லுயிர்கள் அழியும். ஆனால் அவற்றையெல்லாம் மீறி இயற்கைக்கு பிரதி உபகரணம் செய்து அணைகளை இணைக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இணைக்கப் படாமல் இருப்பதே கசப்பான நல்லது

நீச்சல்காரன் said...

இதற்கிடையில், தமிழகத்தில் எந்த ஆற்றில் உபநீர் கடலில் கலக்கிறது? ஒன்றைப் பறித்து மற்றொன்றை அமைக்கவேண்டுமா? ஜிவநதிகள் தெற்கே வராமல், நீர் இல்லாத தமிழக நதிகளை இணைப்பது தேவையா எனத் தோன்றுகிறது.

Chittoor Murugesan said...

இந்திய நதிகளின் இணைப்பே நோக்கமாய் நான் தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தின் சுருக்கம் கீழே.
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

இதன் விரிவாக்கத்தை தமிழக சபா நாயகருக்கு கடந்த மார்ச் மாதம் கூரியர் மூலம் 234 பிரதிகள் அனுப்பியுள்ளேன்.

எம்.எல்.ஏக்களுக்கு கிடைக்க செய்யுமாறு கோரியுள்ளேன்.

பதில் தான் இல்லை. பார்ப்போம்.

ஜோதிஜி said...

நதி நீர் - கனவுத் திட்டமா?
http://deviyar-illam.blogspot.in/2011/12/blog-post_18.html

Hari Krishna said...

அணைகள் கூட இயற்கைக்கு எதிரானதுதான் - கட்டவில்லையா ?? நதிகள் இணைப்பு அவசியம். இயற்கைவளர்த்திக்கும் மூலிகை வளர்த்திக்கும் தகுந்த பாதுகாப்பு செய்துவிட்டு செயல்படுத்த வேண்டும். நம் வருங்கால சந்ததியின் நல் வாழ்க்கைப் பற்றியும்
யோசிக்க வேண்டும்.

Hari Krishna said...

அணைகள் கூட இயற்கைக்கு எதிரானதுதான் - கட்டவில்லையா ?? நதிகள் இணைப்பு அவசியம். இயற்கைவளர்த்திக்கும் மூலிகை வளர்த்திக்கும் தகுந்த பாதுகாப்பு செய்துவிட்டு செயல்படுத்த வேண்டும். நம் வருங்கால சந்ததியின் நல் வாழ்க்கைப் பற்றியும்
யோசிக்க வேண்டும்.