பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, June 02, 2013

சன்டேனா இரண்டு (2-6-13) செய்திவிமர்சனம்

இந்த வாரம்... இரண்டு செய்தியிலும் மனவளர்ச்சி குன்றியவர்கள்.

செய்தி # 1


மனவளர்ச்சி குன்றிய குழந்தையின் தாயைச் சந்திக்கும்போது அவர் இப்படிச் சொன்னார், "மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனில் எந்த அரசுக்கும் அக்கறை இருக்காது; காரணம், இவர்கள் என்ன வாக்களிக்கவா போகிறார்கள்?' இது வேதனையின் விளிம்பிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள்.

அந்த நிலையில்தான் இருக்கிறோமா என்பதை எந்த அரசு ஆனாலும் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

மனவளர்ச்சி குன்றியவர்கள் நலனில் சமுதாயமும் சரி, மத்திய, மாநில அரசுகளும் காட்டும் அக்கறை போதுமானதாக இல்லை.
விலங்கினங்களில்கூட ஊனமாகப் பிறக்கும் குட்டியைத் தாய் புறக்கணிப்பதில்லை. ஆனால், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறந்தால், அதைக் குடும்பத்தாரும், சமூகமும், அரசும் புறக்கணிக்கும் அவலம் மனித சமுதாயத்துக்கு வெட்கக்கேடான விஷயம்.


பிறரின் கேலிக்கு அஞ்சியே இந்தக் குழந்தைகளைச் சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர பெற்றோர் அஞ்சுகின்றனர். அக்குழந்தையின் தாய்க்கு மட்டுமே தெரியும் அதன் வலி.இதனை மீறி வெளிக்கொணர்ந்தாலும், அவர்களுக்குத் தேவையான முறையான பயிற்சிகள், மருத்துவ வசதிகள், சிறப்புப் பள்ளிகள், இதற்கான ஆசிரியர்கள் என அனைத்திலும் பற்றாக்குறை
.தமிழகத்தில் 2001 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படியே பார்த்தாலும் 6 கோடி பேரில் 6 லட்சம் பேர் மனவளர்ச்சி குன்றியவர்கள் என்பது தெரிகிறது. ஆனால், இவர்களில் வெறும் 50,619 பேர் மட்டுமே மாதாந்திர உதவித்தொகையாக ரூ.500 பெறுகின்றனர். இதிலிருந்தே தெரியும், மீதம் எத்தனை பேர், அரசின் உதவி கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள் என்பது.


உடல் ஊனமுற்றவர்களுக்கு, அதன் சதவீதத்தின் அடிப்படையில் அனைத்து உதவிகளையும் நிர்ணயிப்பது சரி. ஆனால், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் முதல் நிலையில் இருந்தாலும், இறுதி நிலையில் இருந்தாலும், இவர்கள் அனைவருமே பிறரைச் சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாயம். அப்படியிருக்க, இவர்களுக்கு எதற்குக் கட்டுப்பாடுகள்?

மனவளர்ச்சி குன்றியோரின் திறனைச் சோதிப்பதில் போதிய அக்கறை காட்டாமல், அரசு மருத்துவர்கள் கடைப்பிடிக்கும் "விதி' அக் குழந்தையின் தலைவிதியை மாற்றுகிறது என்பதை உணர வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெரும்பாலானோரை "மைல்டு' எனக் குறிப்பிட்டு, அரசு கொடுக்கும் உதவிகளுக்குக்கூட இவர்களைத் தகுதியற்ற​வர்களாகச் செய்து விடுகின்றனர். இதில் அரசு விதியைத் தளர்த்துவதில் தவறில்லை.
தமிழகம் முழுவதும் உள்ள சிறப்புப் பள்ளிகள் எண்ணிக்கை 250. இதில் ஒன்று மட்டுமே அரசுப்பள்ளி.

இறுதி, மிக மோசமான என இரு நிலைகளில் இருக்கும் குழந்தைகளுக்கான, சிறப்புப் பள்ளிகள் அதிகம் தேவை.


இவர்களால் நன்றாக நடக்க, தெளிவாகப் பேச முடியாது. இவர்களைத் தற்போது தொண்டு நிறுவனத்தினர் மட்டுமே பராமரித்து வருகின்றனர்.
முதல் நிலையான "மைல்டு' நிலையில் இருக்கும் குழந்தைகள், வழக்கமான பள்ளி மாணவர்களோடு கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்தும் திட்டத்தை 2001-ல் அறிமுகம் செய்ததோடு சரி. இதற்கான சிறப்பாசிரியர்கள் நியமனத்திலும் மெத்தனம்.

தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் 38 ஆசிரியர்களுக்குக் கடந்த 8 மாதங்களாக தலா ரூ.3 ஆயிரம்கூட வழங்க மறுக்கிறது அரசு. 1992 க்குப் பிறகு புதிதாக ஆசிரியர்களையும் நியமிக்கவில்லை.

1 ம் வகுப்பு முதல் அரசுப் பள்ளிகளில் இயங்கும் சிறப்புப் பள்ளியில் பயிலும் இம்மாணவர்கள், 5 ம் வகுப்பு வரை எவ்விதப் பயிற்சியும் இன்த் தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர்.


6 ம் வகுப்பில் கட்டாயம் படித்தாக வேண்டும் என்ற நிலை வரும்போது, இவர்களால் எழுதக்கூட முடிவதில்லை. மீண்டும் தொண்டு நிறுவனத்தின் சிறப்புப் பள்ளிக்குத் திருப்பி அனுப்பும் சூழல் உள்ளது.இது, நல்ல நிலையில் உள்ள குழந்தைகளுக்கான பாடத்திட்டத்தை, மனவளர்ச்சி குன்றியோருக்கும் அளிப்பதால் ஏற்படும் பிரச்னை.

இவர்களுக்கென தனிப் பாடத் திட்டம், தனி வகுப்பறை, சிறப்பாசிரியர்கள், முடநீக்கியல் வல்லுநர்கள் என எவ்வித வசதியும் செய்யாமல், வெறு​மனே பள்ளிக்கு வரவழைத்து, அமரவைத்து, திருப்பியனுப்புவதில் பயனேதும் இல்லை.

மனநிலை பாதிக்கப்பட்ட இவர்களுகுத் தேவை அன்பு, ஆதரவு, சத்தான உணவு, பயிற்சிகள் மட்டுமே. வறுமையில் வாடும் பெற்றோரால் எத்தனை காலத்துக்கு சத்தான உணவைத் தர முடியும்?

ஆனால், இவர்களுக்குத் தேவையானவற்றை யோசித்துச் செய்யும் நிலையில் அரசு இல்லை என்பது, அவர்கள் இதுவரை செய்திட்ட பணிகளின் மூலம் தெளிவாகிறது.

நல்ல நிலையில் இருக்கும் நபர்களுக்காக ஏராளமான புதிய திட்டங்களைத் தினசரி அறிவித்து, பல கோடி ரூபாயைச் செலவிடுகின்றனர்.

மனநிலை பாதிக்கப்பட்டோர் நலனுக்காகத் தொடர்ந்து செயல்படுவதில் அரசுக்கு ஏன் இத்தனை தயக்கம்? பாதிக்கப்பட்ட தாயின் வேதனை வார்த்தைகளை உண்மையாக்குவதும்; பொய்யாக்குவதும் அரசின் கைகளில்!


இந்த நேரத்தில் நாம் குறிப்பிட விரும்புகின்ற ஒரு நிகழ்ச்சி. சென்னையில் உள்ள மனநல மருத்துவமனைதான் ஆசியாவிலேயே மிக பெரிய மனநலம் குன்றிய நோயாளிகளுக்கான மருத்துவமனை. இங்கு மொத்தம் சுமார் 2800 பேர் நிரந்தரமாக தங்கி சிகிச்சை பெறுகிறார்கள்.செய்தி # 2“உனக்கு பின்னால் இருக்கிற தலைமுறையை உத்து பார். டிவி சீரியல் பார்த்து வளர்ந்த ஒரு பலகீனமான தலைமுறை தெரியும். உன் ஐடியாலாஜி எல்லாம் அவங்ககிட்ட எடுப்படாது " - இது குருதி புனல் படத்தில் ஒரு காட்சியில் கமல் , தீவிரவாதி நாசரிடம் பேசும் வசனம்.

தமிழகத்தில் டிவிகளின் தாக்கம் பற்றி நான் படித்த கட்டுரையை இங்கே அப்படியே தருகிறேன்.

பொழுதுபோக்கை மையமாக வைத்துக் கண்டுபிடிக்கப்பட்ட தொலைக்காட்சி, இன்று நம் அனைவரின் வாழ்விலும் தொலைந்து போன காட்சிகளைத்தான் காண்பித்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியைப் பார்த்து வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வட இந்தியர்களை விட தென்னிந்தியர்கள் அதிக கவனம் செலுத்துவதாகவும், தமிழகத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 6.5 எபிசோடுகளைப் பார்ப்பதாகவும், அதிலும் குறிப்பிட்ட 3 சானல்களை 54 சதவீதம் பேர் பார்ப்பதாகவும் தனியார் நிறுவனம் ஒன்றின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கேரளத்தில் இது 4 எபிசோடுகளாக உள்ளதாகவும், பிற்பகலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் கேரளம், கர்நாடகத்தை விட தமிழகமும், ஆந்திரமும் தான் முன்னணியில் உள்ளதாகவும்,அதிலும் முன்னணில் இருப்பவர்கள் பெண்கள் என்றும் அந்தப் புள்ளிவிவரம் மேலும் தெரிவிக்கிறது.

தொலைக்காட்சிகளால் நம்மவர்கள் அடைந்த பயன்தான் என்ன? பக்கத்து வீடுகளுடனான தொடர்பும், சச்சரவுகளும் குறைந்துள்ளது. கொலையும், கொள்ளைகளும், வீடுகளில் பிரச்னைகளும் அதிகரித்துள்ளன என்பது தான் பதில்.

பெண்களையும், தொடர்களையும் மையமாக வைத்தே இன்றைய டிவி சேனல்கள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கொலைக்காட்சிகளாகத்தான் இருக்கின்றன என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று.

நல்ல நிகழ்ச்சிகளை வழங்கும் டிவி சேனல்களுக்கு நம்மிடையே பெரிய அளவில் வரவேற்பில்லை என்பதும், இந்த தொலைக்காட்சி தொடர்களின் ஆதிக்கத்துக்குக் காரணம். பெண்களை மட்டுமன்றி குழந்தைகளையும் கவரக்கூடிய வகையில் ஏராளமான டிவி சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைப்பதாகத்தான் உள்ளன.

சிறுவயதிலேயே டிவிக்கு அடிமையாகும் குழந்தைகள் கண்பார்வைக் குறைபாடுகளுக்கு உள்ளாவதாகவும், மனரீதியான பாதிப்புக்குள்ளாவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களை வீதியில் கொண்டாடிய காலம் போய் இன்று டிவியில் பார்த்து ரசிக்கிற காலத்தில் இருக்கிறோம். பண்டிகைக் காலங்களில் கோயில்களுக்குச் செல்வது,உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று வருவது போன்ற பழக்க வழக்கங்கள் எல்லாம் இன்று நம்மிடம் இருந்து மறைந்து போய்விட்டது (மறந்து போய்விட்டது) என்றே சொல்லலாம்.

"ஓடி விளையாடு பாப்பா" என்று சொன்ன கவிஞர் பாரதி வாழ்ந்த நாட்டில், இன்று நாம் டிவி முன் கூடி வாழ பழகிவிட்டோம்.

டிவி சேனல்கள்,இணையத்தின் வருகையால் இன்றைக்கு மைதானங்களில் விளையாடுவோரின் எண்ணிக்கையும்,தெருமுனைகளில் கதை பேசுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.

தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக இன்று ஏராளமானோரை தன்னுடைய கட்டுக்குள் வைத்திருப்பது இணையதளம். தொலைக்காட்சியின் பரிணாம வளர்ச்சி என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ச்சியையும்,வரவேற்பையும் பெற்றுள்ளது இணையதளம்.

அதன் விளைவு தான் மழைக்கு முளைத்த காளான்களைப் போன்று தோன்றியிருக்கும் தெருமுனை பிரவுஸிங் சென்டர்கள்.

சமூகத்தில் மாற்றங்களும்,இணையத்தால் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளன என்பதை ஒத்துக்கொள்ளும் அதே வேளையில் அதனால் ஏற்பட்டுள்ள சமூகச் சீரழிவுகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

மணிக்கணக்காக டிவி மற்றும் இணையதளங்களின் முன் அமரும் பெரும்பாலன இளைஞர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும்,

தவறான வழிகளில் செல்வதாகவும்.சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுற்றத்தோடும்,உறவுகளோடும் வாழ்ந்தவர்கள் அக்கால மனிதர்கள். தொலைக்காட்சியோடும்,இணையத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் இக்கால மனிதர்கள்.

இன்றைய இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதைவிடஅதைப் பார்த்து ரசிப்பதைத்தான் விரும்புகின்றனர்.

இதன் விளைவு கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளில் மெச்சுகின்ற அளவுக்கு இந்தியர் யாரும் இல்லை. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியின் நிலையோ மிகவும் பரிதாபத்துக்குரியது.

உலக வரைபடத்தில் ஒளிந்திருக்கும் நாடுகள் கூட ஒலிம்பிக்கில் கோப்பையை வென்ற நாடுகளின் பட்டியலில் ஒளிர்கிறது. ஆனால் உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்தியாவின் நிலையோ வெற்றிப்பட்டியலில் தேடும் நிலையில் தான் இருக்கிறது.

இன்று நடனம் என்ற பெயரில் வரும் நிகழ்ச்சிகளில் ஆபாச கூத்துக்கள் அரங்கற்ற பட்டு வருகின்றன. குடிப்பதும், கள்ள உறவுகளும் இன்று வரும் மெகா தொடர்களில் சகஜம். தங்கள் வீட்டு குழந்தைகளும் டிவி பார்க்கிறார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இந்த டிவி சம்பந்தப்பட்ட ஆசாமிகளுக்கு இல்லாதது ஏன்?

சினிமாவை போலவே, சின்ன திரைக்கு எப்போது, எந்த அரசு தணிக்கை கொண்டு வர போகிறது?

கீழ்த்தரமான உறவுகள்,சதி திட்டம் தீட்டும் வில்லிகள் என சொல்லிவைத்தாற் போல எல்லா சீரியல்களும் கிட்டத்தட்ட ஒரே விதமான கதையம்சத்தோடுதான் இருக்கின்றன.

நடிகர்,நடிகைகளும்,டைட்டிலும்தான் மாறுபடுகின்றன.

குறிப்பாக சன் டிவியில் வரும் டிவி மெகா தொடர்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதுபவர்கள் எல்லாம், நான் முதல் செய்தியில் குறிப்பிட்டு இருக்கும் 'அந்த' மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆவது தமிழ்நாட்டுக்கு அவர்கள் செய்யும் நல்ல சேவையாகும்.(நன்றி, இனி, அடுத்தவாரம்)

-இன்பா

9 Comments:

பாலாஜி said...

இது வரை தீவிரவாத்தையும், தீவிரவாத இயக்கங்களைப் பற்றி எழுதிவந்த உங்கள் நண்பர் இப்போ சீரியலுக்கு போய் பின்றாரே அவரிடம் கேட்டீர்களா ... சமூக அக்கறை பற்றி. அவர் வேலை பார்க்கும் சில பல சீரியல்கள் கீழே...
வாணி ராணி (சன் டிவி – இரவு 9.30)
முத்தாரம் (சன் டிவி – மதியம் 12.30)
முந்தானை முடிச்சு (சன் டிவி – மாலை 6.00)
சிவசங்கரி (சன் டிவி – சனிக்கிழமை தோறும் இரவு

Anonymous said...

Inba,
Very good article. Your last few sentences truly exhibit the angst of many reasonable minds.

S

Kannan said...
This comment has been removed by the author.
kothandapani said...

தொலைகாட்சி இணையம் பற்றிய இன்பாவின் கருத்துக்கள் சரியானவையே .என்ன கொஞ்சம் ஓவராகவே கவலைப்பட்டு உள்ளார். தொலைகாட்சி இல்லாத போது SSLC +2
பாஸ் percentage I மார்க விட தற்போது அதிகரித்து தான் உள்ளது (499 Xth I மார்க் )ஆபீஸ்
செல்லும் ஆண் பெண்கள் தொடர்களை பார்க்கவே வாய்ப்பு இல்லை.ஆக வீட்டில் உள்ள பெண்களும் ஓய்வு பெற்றவர்களுமே அதிகமாக தொடர்களை பார்ப்வர்கள் .இவர்கள் தொடர்களை பார்ப்பதே மன அழுத்தத்தை குறைக்கத்தான் அப்புறம் விளையாட்டு துறையில் நம்மால் சாதிக்க முடியவில்லை என்கிறீர்கள் . ஏதோ டிவி வருவதற்கு முன் நாம் ஒலிம்பிக் கோல்ட் மெடல்களை வாங்கி குவித்தது போலவும் , இப்போ அதனால் பாதிக்க பட்டுள்ளோம் என்பது தவறான கருத்தே(. சின்ன சின்ன நாடக இருந்தாலும் பெரிய நாடக இருந்தாலும் மெடல்களை குவிப்பது கறுப்பின மக்களே .இதற்க்கு டிவி காரணம் இல்லை அவர்கள் ஜீன்ஸ் தான் )
மேலை நாடுகளில் இணையம் தொலைக்காட்சி தொடர்களை தாண்டிதான் வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது. தற்போதுகூட மெகா தொடர்களி விட்டு மக்கள் கவனம் reality ஷோக்கள் பக்கம் திரும்ப ஆரம்பித்து உள்ளது.இந்த டிவி தொடர் மோகமும் 'கடந்து போகும்'

Anonymous said...

எங்கள் வீட்டில் வேறு சில பிரச்சினைகளை முன்னிட்டு தொலைகாட்சிக்கு மூடு விழா நடத்தியுள்ளோம். இதை படிக்கும் போது நாங்கள் எவ்வளவு ஒரு நல்ல காரியத்தை செய்துள்ளோம் என தெரிகிறது.

Anonymous said...

happy birthday and many many happy returns of the day to kalaignar karunanidhi

R. J. said...

I watched the Mahabharatham serial for some time yesterday - muting the audio. I felt it is the same as any other social serial but with characters in Puranic costumes! What is the general opinion on this serial by those who watch it regularly? - R. J.

Anonymous said...

/// குறிப்பாக சன் டிவியில் வரும் டிவி மெகா தொடர்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதுபவர்கள் எல்லாம், ///

பா.ராகவன்தான் 6 சீரியலுக்கு எழுதுறேன் என்று சந்தோஷமாக அலுத்துக் கொள்கிறார்!

நான் சீரியல் பார்ப்பதில்லை. சத்தியம், தந்தி, புதிய தலைமுறை டிவிகளில் காட்டப்படும் விவாதங்களைப் பார்த்துவிட்டு, டைம்ஸ் நவ், என்டிடிவி, சிஎன்என்-ஐபிஎன், ஹெட்லைன்ஸ் டுடே ஆகியவற்றில் விவாதங்களைப் பார்க்கிறேன். இதில் 2 - 3 மணி நேரம் போகிறது!

சரவணன்

BalajiS said...

Saravanan,

Pls read
www.mediacrooks.com

You will come to know the about the latchanam of MainStreamMedia.