பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 07, 2013

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை -12

அந்த ப்ரீ ஸ்கூலை (preschool) சென்றடைகையில் மாலை மணி ஆறரை ஆகி விட்டிருந்தது. மனைவியின் தோளில் இருந்த என் குழந்தை அந்த இடத்தை வித்தியாசமாகப் பார்த்தான். வரவேற்பரையைத் தாண்டி உள்ளே சென்றதும் சுவரெங்கும் மாட்டப்பட்டிருந்த / ஒட்டப் பட்டிருந்த குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், அவர்கள் செய்த வண்ண வண்ண போர்டுகள்,பலூன்கள். அடுத்தடுத்த அறைகளில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த வித விதமான பொம்மைகள், ப்ளாக்குகள், புதிர் அடுக்குகள் எல்லாமே என் குழந்தையின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தன. உடன் வந்திருந்த குடும்ப நண்பரின் குழந்தை, கீழே இறங்கி, பொம்மைகள் பக்கம் சென்றது. என் குழந்தையை அங்குள்ள பெண்மணி ஒருவர் வாங்கிக் கொண்டு அவனுக்கு ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி, விளையாட ஊக்குவித்தார்.அந்த சென்டரை ஃப்ரான்ச்சைஸி எடுத்த பெண்மணி, ”இது விளையாடும் அறை, இது உறங்கும் அறை, இது உணவருந்தும் அறை, அந்தப் பக்கம் வெளிப்புறம் அவுட் டோர் ஆக்டிவிட்டி ஏரியா” என்று மிகுந்த உற்சாகத்துடன், குழந்தைகளின் கற்றல் திறனை, வித விதமான விளையாட்டுக்கள், செய் முறை நடவடிக்கைகள் மூலம் அவர்கள் எப்படித் தூண்டுகிறார்கள் என்று விவரித்துக் கொண்டே வந்தார்.


… மதுரையில் என் சின்ன வயதில் நான் ப்ரீ ஸ்கூலுக்கெல்லாம் சென்றதில்லை. ஒன்றாம் வகுப்புக்கு முன்னர் அரை க்ளாஸீக்குச் சென்றிருக்கிறேன். காலையில் டீச்சர் ”அம்மா இங்கே வா வா , நிலா நிலா ஓடி வா என்று கடனுக்கு நான்கைந்து முறை அழைப்பதற்குள் மதியம் வந்து விடும். மதிய உணவு முடித்து விட்டு, கால் மாடு, தலை மாடாக எல்லாக் குழந்தைகளும், அங்கேயே படுத்து,பையைத் தலைக்கு வைத்துத் தூங்க வேண்டும்.கதவை அடைத்து விட்டு, டீச்சரும் நாற்காலில் உட்கார்ந்த படியே தூங்குவார். எப்போதடா மணியடிக்கும்? என்று அரைக் கண்களை அடிக்கடித் திறந்து பார்த்து, (முழுசா கண் திறந்தா டீச்சர் திட்டுவாங்க) மணியடித்தவுடன், தபால் பையைத் தோளில் போட்டுக் கொண்டு அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு ஓடுவேன்.
”அஞ்சு வயசுக்கு முன்னால, குழந்தைய, எங்கயுமே சேக்குறது தப்பு. அப்பா அம்மாவோட தான் இருக்கணும், நாங்கள்ளாம் எந்த ப்ரி ஸ்கூலுக்குப் போனோம்? நல்லா புத்திசாலியா இல்லயா என்ன?” என்கிற பெரியவர்களின் பேச்சுக்கள் நிறைய வீடுகளில் ஒலிக்கக் கேட்டிருக்கிறேன்.

ப்ரீ ஸ்கூல் ஏன் முக்கியம்?

குழந்தைகளின் மிக முக்கியமான கல்விப் பருவம் அவர்கள் வாசிக்கத் துவங்கும் முன்னரே தொடங்கி விடுகிறது.
குழந்தைகளின் வளர்ச்சி வீதம்- உடல், மன, எமோஷனல், சமூக ரீதியான வளர்ச்சி- இந்த வயதில் அதிகமாக இருக்கிறது.இந்தப் பருவத்தில் தான் குழந்தை, தன் உடலைக் கொண்டு தன்னால் என்னென்ன செய்ய முடியும்? எப்படிச் செய்ய முடியும் என்று பரீட்சித்துப் பார்க்கத் துவங்குகிற பருவம்.
குழந்தைகளின் இளம் மூளையானது புதிய விஷயங்களை மிக எளிதில் கிரகிக்கிறது.புதிய பழக்கங்களை இலகுவாகக் கற்றுக் கொள்கிறது.

உட்கார வைத்து ஏ,பி,சீ,டி அல்லது ஒண்ணு ரெண்டு என்று சொல்லித் தருவது தவறான கல்வி முறை.. விளையாட்டு நடவடிக்கைகள், கதை சொல்லுதல், ப்ளாக்குகளை சேர்த்தல் போன்ற மகிழ்வூட்டும் நடவடிக்கைகள் மூலமே கற்றல் இனிமையாகும். விளையாட்டுகளின் மூலம் குழந்தைகளின் கற்கும் திறனை முன்னேற்றுவது என்பதையே அடிப்படைக் கல்வி முறையாகக் கொண்டது அந்தப் பள்ளி.(Pre-School) விளையாட்டுப் பொருட்களை தொட்டு, உணர்ந்து, செய்து பார்த்தலின் மூலம் கற்றல் இயற்கையாகவே நிகழ்கிறது. வளரும் வயதில் விளையாட்டின் மூலமே குழந்தை கற்றுக் கொள்கிறது.ஒவ்வொரு விளையாட்டுச் செயல்பாடும் முக்கியமானதே. ஆசிரியர்கள் கற்றலுக்கான சூழலை, அதற்கேற்ற விளையாட்டு நடவடிக்கைகளின் மூலம் கட்டமைக்கிறார்கள். இந்த நடவடிக்கைகளின் வாயிலாக குழந்தைகளுக்கு, கணிதம், அறிவியல், கலை பற்றிய அடிப்படை புரிதல் நிகழ்கிறது. பின்னாளில் நிகழ இருக்கும் உடல் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் ப்ரீ ஸ்கூல் ஒரு தகுந்த அடித்தளத்தை அமைக்கிறது.

ப்ரீ ஸ்கூல், குழந்தைகளுக்கு, தங்களைப் பற்றி அறிய, மற்றவர்களுக்கு மரியாதை தர, சின்னச் சின்ன புதிர்களை விடுவிக்க, தன் வயதொத்த மற்ற குழந்தைகளுடன் விளையாட, அதன் மூலம் தைரியத்தை வளர்த்துக் கொள்ள ஒரு களமாக அமைகிறது
ப்ரீ ஸ்கூல் செல்லும் குழந்தைகளின் நினைவாற்றல், திட்டமிடுதல்,வாசிப்பு மற்றும் மொழி வளத் திறன்,(vocabulary) பகிர்ந்து கொள்ளும் பண்பு போன்றவை நன்கு முன்னேறியுள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.ப்ரீ ஸ்கூல் பருவம், குழந்தையின் விழுமியங்களையும், மனோபாவத்தையும் உருவாக்குகிற அடிப்படைப் பருவம்.

ப்ரீஸ்கூலின் மைல்கல், அகடமிக் எல்லைகளை எட்டுவதாக இல்லாமல், குழந்தையை சோசியலைஸ் செய்வதையும், அவர்களின் கற்பனைத் திறனை வளர்ப்பதுமே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

உளவியல் ஆய்வுகளின் படி, Nature Vs Nurture கோட்பாட்டின் படி, வீடு சரியில்லையெனில் (கற்றலுக்கான சரியான சூழ்நிலை வீட்டில் கிடைக்காவிடில்) ப்ரீஸ்கூலினால் குழந்தைக்குக் கிடைக்கும் பலன்கள் அதிகம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், வீட்டில் இருக்கும் மோசமான சூழ்நிலையை சமனப் படுத்த பல்வேறு பரந்து பட்ட அனுபவங்களைப் (exposure) பெற, ப்ரீ ஸ்கூல் உதவுகிறது. மரபணு ரீதியாக வரும் அறிவாற்றலை நல்ல முறையில் குழந்தைகளிடம் வெளிக் கொணர ப்ரீஸ்கூல் ஒரு தூண்டுதல் காரணியாக செயல்பட்டு உதவுகிறது.
.
ப்ரீ ஸ்கூல் குழந்தைகளிடம் கண்ட முக்கிய பலன்கள்:

1.ப்ரீ ஸ்கூல் செல்லும் குழந்தைகள், செல்லாத குழந்தைகளை விட ஆல்ரவுண்ட் வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

2.முன்னதாகவே ப்ரீ ஸ்கூலில் சேர்ந்த குழந்தைகள் (3 வயதுக்கு முன்னரே) தாமதமாக சேர்ந்த குழந்தைகளை விட அதிக பலன்களைக் கண்டுள்ளனர்.

3.முழுநேரமும் ப்ரீ ஸ்கூலில் இருந்த குழந்தைகளுக்கும், பகுதி நேர குழந்தைகளுக்கும் அறிவுத் திறனளவில் வேறுபாடு ஏதுமில்லை.

4.வசதி வாய்ப்புகளற்ற ஏழ்மை நிலைக் குழந்தைகளுக்கு ப்ரீ ஸ்கூலினால் கிடைக்கும் பலன்கள் குறிப்பிடத்தக்க அளவில் மிக அதிகமாக இருந்தன.

5.அதிக மாதங்கள் ப்ரீ ஸ்கூல் செல்லும் குழந்தைகள் குறைந்த கால அளவு சென்ற குழந்தைகளை விட நன்கு சிறந்து விளங்குகின்றனர்.

ப்ரீ ஸ்கூலில் கற்றுக் கொண்ட நல்ல விஷயங்கள், திறன்கள், குழந்தைகள் வளர்ந்த பின்பும் (பத்துப் பதினைந்து வருடங்களாகியும் ) மறைவதில்லை என்று சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ”இல்லை இல்லை. ப்ரீ ஸ்கூலின் பாதிப்பு (effect) குறைந்த காலத்திற்கு மட்டுமே” என்று வாதிடுவோரும் உண்டு.

நல்ல, தரமான ப்ரீ ஸ்கூலை எப்படித் தேர்ந்தெடுப்பது?

இணையத்தில் தேடுங்கள். கள ஆய்வு செய்யுங்கள்.முதலில் உங்கள் வீட்டிலிருந்து அருகாமையில் இருக்கிறதா என்று பாருங்கள். பகுதி நேரமா? முழு நேரப் பள்ளியா என்று முடிவு செய்யுங்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள பெரியவர்கள் யாரும் இல்லாத வீடுகளில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் பட்சத்தில் முழுநேரப் பள்ளியைத் தேர்ந்தெடுக்கும் கட்டாயத்திற்கு ஆளாகிறோம்.

ஒவ்வொரு ப்ரீஸ்கூலையும் நேரில் சென்று பாருங்கள். அவர்களது ஃபீஸ், அட்மிசன் பாலிசி, கல்வி கற்றுக் கொடுக்கும் முறை என்று ஒவ்வொன்றாகக் கேட்டு அறியவும்,

எத்தனை குழந்தைகள் பயில்கிறார்கள், எத்தனை ஆசிரியர்கள் / ஆயாக்கள் (care takers) இருக்கிறார்கள், குழந்தைகளை அவர்கள் வயதுக்கேற்ப தனித் தனியே பிரித்துப் பயிற்றுவிக்கிறார்களா, குழந்தைகள்-பாதுகாவலர்கள் விகிதாச்சாரம் (child-caretaker ratio) அவர்களது தினப் படி நடவடிக்கைகள் என்னென்ன? என்பதைக் கேட்டு அறியவும்.

அந்த சென்டரை நடத்தும் மேலாளர்/ ஆசிரியர், early-childhood education training கற்றுள்ளாரா என்று உறுதி செய்து கொள்ளவும்.இது போன்ற அங்கீகரிக்கப் பட்ட ட்ரெயினிங் கற்றிருப்பவர்கள் நல்ல கல்விச் சூழலை குழந்தைக்கு அளிக்க முடியும்.
முக்கியமாக, அந்த இடம் சுகாதாரமாகவும், குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாகவும் (முதலுதவிப் பெட்டி போன்றவை) இருக்கிறதா என்று பார்க்கவும். கலைப் பொருள்கள், குழந்தைகளின் வயதிற்கேற்ப சரியான பொம்மைகள் உள்ளனவா? அவை சரியான தரத்தில் உள்ளனவா? குழந்தைகள் செய்த கலைப் படைப்புகள், அவர்களின் வேலைப்பாடுகளை அந்த அறைகளின் சுவர்களில் தொங்க விட்டுள்ளார்களா? குழந்தைகளுக்கான விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள தகுந்த இடவசதி, புதிர்களை விடுவிக்க, ப்ளாக்குகள் சேர்க்க தகுந்த இட வசதி, தூங்குவதற்கான தனி அறை, உணவருந்த தனி அறை, குழந்தைகளுக்கேற்ற கழிப்பறை வசதிகள் ஒழுங்காக உள்ளனவா என்று எல்லாவற்றையும் உறுதி செய்து கொள்ளவும்.தினசரி காலை முதல் மாலை வரை குழந்தைகளுக்காக என்னென்ன நிகழ்வுகள் என்று டைம் டேபிளை அவர்களைக் கேட்டறியவும்.என்னென்ன உணவு வகைகள் குழந்தைக்குக் கொடுக்கிறார்கள் என்று கவனமாக அறிந்து கொள்ளவும்.
ப்ரீ ஸ்கூலில் சேர்ப்பது எந்த விதத்திலும் வீட்டில் சொல்லிக் கொடுப்பதைக் குறைத்து விடக் கூடாது. வீட்டுக்கு வந்த பின்பும், பெற்றோர்கள் குழந்தையுடன் அதிக நேரம் செலவிட்டு, உரையாடிக் கொண்டிருக்க வேண்டும்.அதுதான் சரியான முறை.
பெற்றோர்களும்,இந்த சமூகமும் குழந்தைகளை ப்ரீ ஸ்கூலில் விடுவதன் மூலம் அவர்களிடம் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றனர் என்பதை ஒவ்வொரு ப்ரி ஸ்கூலும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
நல்ல தரமான ப்ரி ஸ்கூலில் சேர்ப்பதானால் சரி. ப்ரீ ஸ்கூலின் தரம் சரியில்லை என்று நீங்கள் நினைத்தால் வீட்டிலேயே கற்றுக் கொடுப்பது உத்தமம்.

அந்த ப்ரீ ஸ்கூலை சுற்றிப் பார்த்து விட்டு வீட்டுக்குப் போகக் கிளம்பினோம். குழந்தைகள் இரண்டும் அங்கேயே இருந்து கொண்டு வர மாட்டேன் என்று அடம் பிடித்தன.

அடுத்த மாதத்திலிருந்து ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டும் டே கேருக்கு (day care) குழந்தையை அனுப்ப முடிவெடுத்துள்ளோம்.
டாக்டர் பிரகாஷ்.

www.rprakash.in


எழுத்தாளர் ஆவதற்கு முன் பிளாக் எழுதுவது அவசியம் அதே போல ஸ்கூல் போவதற்கு முன் ப்ரீ ஸ்கூல் அவசியம்.

3 Comments:

Umesh Srinivasan said...

குழந்தைகளுக்கு நாம தேவைப்படும்போது நமக்கு நேரமில்ல, அதே பெரியவனாகி நமக்கு அவங்க தேவைப்படும்போது அவங்களுக்கு நேரமில்ல. மொத்தத்தில் புலி வால் புடிச்ச கதைதான். எல்லாம் கணிணி யுகத்தின் சோகங்கள்.

Anonymous said...

very useful information. thanks. - k.rahman

கோவை மு சரளா said...

அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை அந்த பள்ளி நிர்வாகமும் பெற்றோர்களும் பாராட்டு பதிர்விர்க்கு