பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 12, 2013

சன்டேனா இரண்டு (12-5-13) செய்திவிமர்சனம்

ராமதாஸ் கைதை தொடர்ந்து, பாமகவினர் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டி நடுரோட்டில் போட்டு இருக்கிறார்கள். பல பகுதிகளில் மரங்களுக்கு தீ வைத்து கொளுத்தி இருக்கின்றனர்.

இந்த வார சன்டேனா இரண்டு, “காடு/மரவெட்டிகள் மற்றும் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு” சமர்ப்பணம்.செய்தி # 1சில வருடங்களுக்கு முன்னால் ஊட்டி சென்றபோது அது எனக்கு ஒரு கசப்பான,மனதில் ஒட்டாத அனுபவமாகவே அமைந்தது.பார்க்கும் இடமெல்லாம் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள்...கழிவுகள்..கூட்ட நெரிசல்..அதன் காரணனமான சீர்கேடுகள் இப்படி பல."ஊட்டி போறது வேஸ்ட். கொடைக்கானல் தான் இப்போ பெஸ்ட்" என்று தனது ஹனிமூன் பயணதிட்டம் பற்றி பேசினான் என் நண்பன் ஒருவன். ஊட்டியின் நிலை விரைவில் கொடைக்கானலுக்கும் வரும் நிலை வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.

கடல் மட்டத்திலிருந்து 2,636 மீ உயரத்தில் இருக்கும் மலை, வரையாடுகள், ஷோலா புல்வெளிகள் உள்ளிட்ட அரிய உயிரினங்களைக் கொண்ட, பூகோளரீதியாகவே நிலச் சரிவுக்கான அதிக அச்சுறுத்தலைக் கொண்ட மலை நீலகிரி.

"யுனெஸ்கோ' அறிவித்த இந்தியாவின் முதல் பல்லுயிர்க்கோவை (பயோஸ்பியர் ரிசர்வ்) நீலகிரி, இன்றைக்கு உலக வெப்பமயமாதலின் அபாயச் சங்காக மாறியிருக்கிறது. குறைந்த நாளில் அதிக மழை கொட்டித் தீர்ப்பதும், பல நாட்கள் வெயில் வாட்டி எடுப்பதும் இதன் வெளிப்பாடுதான். நீலகிரியில் மக்கள் குடியேற்றம் அதிகமாவதற்கு முன்பே, பெருமழை, வெள்ளம், மண்சரிவு, நிலச்சரிவு என பல விதமான இயற்கைப்பேரழிவுகள் நடந்துள்ளன.

இப்போது இந்த மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை, ஒன்பது லட்சம். கடந்த 1981ல் நான்கு லட்சம் மட்டுமே. 1967ல் 28 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஊட்டி நகரில், இப்போது ஒன்றே கால் லட்சம் பேர் வசிக்கின்றனர். ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

1.சுற்றுலா மையமாக மாறிய பின், மக்களுக்காகவும், சுற்றுலாப் பயணிகளுக்காகவும் சோலைக் காடுகள் வெகுவாக அழிக்கப்பட்டு, தேயிலைத் தோட்டங்களும், சுற்றுலா மையங்களும், கான்கிரீட் காடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

2. பணப்பயிர்களில் காசு பார்த்தவர்கள், மலையெல்லாம் தேயிலையை விதைத்து, பார்க்குமிடத்தையெல்லாம் "பசுமைப் பாலைவனம்' ஆக மாற்றத்துவங்கினர். நீலகிரியில் இப்போதுள்ள மொத்த விவசாயப் பரப்பில், 80 சதவீதத்துக்கு தேயிலை விவசாயமே நடக்கிறது.

3. மாவட்டத்திலுள்ள 10 தோட்ட நிறுவனங்களிடம் மட்டுமே, பல ஆயிரம் ஏக்கர் பரப்பு தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இவை அனைத்துமே வளம் கொழித்த காடுகளாக இருந்தவைதான். காடழிப்பைக் கண்டு கொள்ளாத அரசு, அங்கெல்லாம் ரோடுகள் போடவும் நிதியை வாரிக் கொடுத்தது.கடந்த நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகளில் அழிக்கப்பட்ட வனப் பரப்பை விட, கடந்த 60 ஆண்டுகளில் அழிக்கப்பட்ட வனப்பரப்பே அதிகம்.

4. நீலகிரியில் காடழிப்பு, மரக்கடத்தல், அனுமதியற்ற கல்குவாரி, ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா, மாற்று வழி, புதிய ரோடுகள், புதிய ரயில்வே வழித்தடம் என வளர்ச்சிப் பணிகள்,மாவட்டம் முழுவதும் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் உருவான கட்டடங்கள்.

5. இருக்கிற ரோடுகளை பாதுகாப்பானதாக மாற்றவும், இதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்காமல்,ரோடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது.

தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாகவும், கட்டுமான பணிகளுக்கும் அதிகளவு மரங்கள் பயன்படுவதால் ஒரு டன் பத்தாயிரம் வரை விற்பனையாகிறது. இதனால், சமீப காலங்களில் பசுமை மரங்கள் வெட்டி சாய்க்கப்படுவது அதிகரித்து வருகிறது.

அதே போல், நெடுஞ்சாலை மற்றும் ஊரக இணைப்பு சாலைகளின் ஓரத்திலும், அரசு புறம்போக்கு நிலங்கள், கோவில் நிலங்கள், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்கள், வாய்க்கால்கரைகள் என பல இடங்களில் உள்ள மரங்கள், வருவாய்த்துறை அனுமதி இல்லாமல் வெட்டப்படுகிறது.

அரசியல்வாதிகள் முதல் அன்றாடம்காய்ச்சிகள் வரை இயற்கை வளத்தினை, அதன் பாதுகாப்பு பற்றிய அடிப்படை அறிவு மருந்துக்கும் இல்லை என்பதையே இவையெல்லாம் காட்டுகின்றன.

நமது கல்வி முறைகளில், பாட திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். பசுமை கல்வி என்னும் ஒரு திட்டத்தை அரசு உருவாக்கி, மழலை பள்ளிகள் முதல் அதை கட்டாய படமாக கொண்டு வரவேண்டும். இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குழந்தைகள் முதல் நாம் தொடங்குவோம்.

மாநில வன உயிரின வாரிய உறுப்பினரும், நீலகிரி கானுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சங்க நிர்வாகியுமான ஏ.சி.சவுந்திரராஜன் தினமலருக்கு அளித்த பேட்டியில், ""மலை மாவட்டம் என்பதால், இதற்கென தனித்தன்மை உண்டு. இங்குள்ள வனமும், சுற்றுச்சூழலும் இங்குள்ள மக்களின் வாழ்வோடு தொடர்புடையவை. கடந்த 1993ல் இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட பின்னும், தேவையான நடவடிக்கை எடுக்காததன் விளைவாக இப்போது பல உயிர்கள் பலியாகியுள்ளன.

பல வித நிர்ப்பந்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் வளைந்து கொடுத்து இங்கு திட்டங்கள் செயல்படுத்தப்படுமேயானால், இன்னும் 20 ஆண்டுகளில் இப்படியொரு மாவட்டம் இருப்பதே கேள்விக்குறியாகி விடும்,'' என்றார்.

மரங்களை வெட்டும் பாமகவினரால் ஏற்கனவே தானே புயலால் சிதைக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களும் காணாமல்போகும் என்று தெரிகிறது.

செய்தி # 2நாட்டின் அரிசி உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் உத்தரப்பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நெல் பயிரிடுவது கணிசமான அளவுக்குக் குறைந்திருக்கிறது.

தமிழகத்தின் மொத்த உணவுதானிய உற்பத்தியில் 85 சதவீதத்தை அரிசிதான் பெற்றுள்ளது. மாநிலத்தில் சுமார் 19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. ஆனால், இங்கும் விவசாய நிலங்கள் மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாகக் கருதப்பட்ட தஞ்சைப் பகுதி தற்போது பெரும் பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆம், காவிரிப் படுகைப் பகுதிகளில் தனியார் அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படுவதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கப்படுகின்றன. இதனால், வாங்கப்படும் விவசாய நிலங்கள் மட்டுமன்றி அதன் அருகிலுள்ள விளைநிலங்கள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் கடும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

கிராமங்களில் ஒரு சில ஏக்கர் விளைநிலத்தை மட்டும் வைத்திருப்பவர்கள்கூட கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதைத் தடுப்பதற்கு கேரளத்தில் உள்ளதுபோல் விளைநிலத்தை குடியிருப்புப் பகுதி உள்ளிட்ட வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த கடும் விதிமுறைகளை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும்.

நாடு முழுவதும் பெரும்பாலான புறநகர்ப் பகுதிகளில் கட்டுமானத் துறை மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிற நிலையில், தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தற்போது ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலத்தை செங்கல் சூளைகளாக மாற்றத் தொடங்கியுள்ளனர்.

செங்கல் சூளைத் தொழில் லாபகரமாக உள்ளது என்றாலும், இது பூமி வெப்பமயமாவதை மேலும் அதிகரிக்கச் செய்யும் அபாயமும் இருக்கிறது. சுமார் ஒரு லட்சம் செங்கற்களைத் தயாரிக்க 30 முதல் 40 டன் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுகின்ற நிலையில் காடுகள் அழிக்கப்படுவதுடன் பூமி வெப்பமும் அதிகரிக்கிறது.

குடியிருப்புப் பகுதிகள் பெருகிய நிலையில் ஏரி நீர்ப்பாசனம், கால்வாய் நீர்ப்பாசனம் ஆகிய பாரம்பரிய நீர்ப்பாசன முறைகள் குறைந்து கிணற்றுநீர்ப் பாசனம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால்,​​ தற்போது கிணற்றுநீர்ப் பாசனமும் வெகுவாகக் குறைந்துள்ளது. 1974-ல் தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பம்ப்செட்டுகள் இருந்தன. ஆனால், தற்போது சுமார் 20 லட்சம் பம்ப்செட்டுகள் உள்ளன.

மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை நடைபெற்று வருவது ஊரறிந்த ரகசியம். இதனால் ஆற்றுப் படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அருகிலுள்ள விவசாயப் பாசனக் கிணறுகள் வறண்டு வருகின்றன. இதனால், தண்ணீர் இல்லாத நிலையில் - வானமும் பொய்த்துவிடுகின்ற சூழலில் - விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். இதனால் விளைநிலங்கள் 'விலை'நிலங்களாக வேறு பணிகளுக்கு மாற்றம் பெறுகின்றன.

ரியல் எஸ்டேட் துறை தற்போதைய அளவுக்கு அசுர வளர்ச்சி பெறாத காலத்திலேயே இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால், விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவும் உருமாறி வரும் இன்றைய காலத்தில் விவசாயத்தின் பரிதாப நிலை என்னவாக இருக்கும் என்பதைக் கணித்துக்கொள்ளுங்கள்.

கிராமப்புற வங்கிகள், விவசாய கூட்டுறவு வங்கிகள் ஆகியவை விவசாயிகளுக்கு அளிக்கும் மொத்தக் கடன்களைவிட, வர்த்தக வங்கிகள் தொழிற்சாலைகளுக்கு அளிக்கும் கடன்களின் அளவு நம் நாட்டில் எப்போதுமே பல மடங்கு அதிகமாக உள்ளது.

இந்நிலை மாறி விவசாயத்துக்குத் தேசிய வங்கிகளும் தனியார் வங்கிகளும் பெருமளவில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

உரங்களுக்காக விவசாயிகள் பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டியிருப்பதால் இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாய முறை குறித்த விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த அரசும் சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

உலகின் மிக பெரிய விவசாய நாடான இந்தியாவில் இன்று அரிசி இறக்குமதி செய்யும் அவலநிலை வந்து விட்டது. நம் விவசாய நிலங்களை பீடிதது இருக்கும் ரியல் எஸ்டேட் என்னும் தீராத, கொடிய வியாதிக்கு முடிவு என்ன? எப்போது?

(புள்ளிவிவரங்கள் : தினமணி, நீலகிரி கானுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை).

(நன்றி, இனி, அடுத்தவாரம்)

-இன்பா

6 Comments:

Vinoth Kumar said...

ஒரு சிறிய உதவி..

மின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டிருரிக்கிறேன்.

படித்து பார்த்து ஆவன செய்யுங்கள்

http://kannimaralibrary.co.in/power9/
http://kannimaralibrary.co.in/power8/
http://kannimaralibrary.co.in/power7/
http://kannimaralibrary.co.in/power6/
http://kannimaralibrary.co.in/power5/
http://kannimaralibrary.co.in/power4/
http://kannimaralibrary.co.in/power3/
http://kannimaralibrary.co.in/power2/
http://kannimaralibrary.co.in/power1/

நன்றி,
வினோத்.

ஸ்ரீராம். said...

காவிரியில் இருகரை தொட்டு ஓடுமளவு நீர் பார்த்து எவ்வளவு நாட்களாகிறது? கர்நாடகா கேரளா ஆந்திரா என்று எல்லா அண்டை மாநிலங்களும் தமிழகத்துக்கு வரும் தண்ணீரை அணை கட்டி தடுத்து விடுகின்றன. கேட்பாரில்லை. விளைந்தால்தானே விளைநிலம்? விளை நிலங்கள் காணாமல் போகின்றன. விளைநிலங்களைத்தானே விற்கக் கூடாது? எனவே இவற்றை விற்று அனல் மின் நிலையங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்புகள்... இருக்கும் நிலத்தடி நீரைக் காலி செய்யவும் அயல்நாட்டுக் குளிர்பான நிறுவனங்கள் இருக்கின்றன. மீண்டும் ஒரு பஞ்சகாலம் பக்கத்தில் வருகிறது. தடுப்பாரில்லை. பெய்யும் மழையையும் நாம் தூர் வாரியோ, புதிய அணைகள் கட்டியோ, ஆகாயத் தாமரைகளை அழித்தோ, நீரைச் சேமிக்காமல் கடலுக்கு அனுப்பி விடுகிறோம்! லாரியில் வரும் நீரை டம்ளரில் பிடித்து வைப்பது போல இருக்கும் அணைகளில் கொஞ்சம் நீரை மட்டும் சேமிக்கிறோம். நிலத்தடி நீரையும் உறிஞ்சுகின்றன என்று அறியப்பட்ட வேலிகாத்தான், பார்த்தநீயம் போன்றவற்றை அழிக்கவும் போதுமான முனைப்பும், விழிப்புணர்வும் இல்லை. விதி!

லெமூரியன்... said...

விளை நிலங்கள் இப்படி கட்டுமானத்திற்கு பயன்படுத்தபடுவதை பார்க்கும் போது வயிறெரிகிறது ..எங்க ஊர்லயும் இப்போ பயிர் செய்யாம ரெண்டு வருஷம் போட்டு தரிசுனு சொல்லி விவசாய நிலங்களை விக்க ஆரம்பிச்சிட்டாங்க...கைல காசிருந்தா நாமளே அவ்வளவு நிலத்தையும் வாங்கி விவசாயம் பாக்கலாமேனு மனசுக்குள்ள நினைச்சிக்குவேன்

ஆனா நெனைக்க மட்டும்தான் முடியுது

ஆற்று மணல் எல்லாம் மலையாள தேசத்துல நல்ல விலைக்கு விக்கிறாங்க...

எல்லாம் தமிழ்நாட்டு மண்..

தண்ணியும் மண்ணும் தாய்க்கு சமம் ..

மலையாளத்தான் எப்போவுமே விவரமானவர்கள்...கேரளாவுக்கு போகவிருந்த அணுமின் நிலைய திட்டத்தை(கூடங்குளம் ) ஆரம்பத்துலையே காய் நகர்த்தி சூதனமா தமிழகத்திற்கு தள்ளி விட்டுடாங்க ...

அவங்கள பொறுத்த வரைக்கும் அவங்க நாட்டுக்கு எந்த பிரச்சனையும் வர கூடாது ..

மத்த நாடு எப்டி போனாலும் கவலை இல்ல...

இந்திய மேல சைனா போர் தொடுத்தா எங்க மானிலத்த மட்டும் விற்றுங்கனு குட்டையன் (அந்தோணி ) ரகசிய ஒப்பந்தம் போட்டா கூட ஆசிரியம் இல்ல.

Guru said...

I am a tamilian but never lived in Tamilnadu. So, I am not sure if I am right or wrong. Anybody can correct me if I am wrong in my opinion. The problem I see with tamilnadu is that it is always trying to depend on rivers from other states. There are a number of rivers in tamilnadu itself which can be used in a better way to supply water for the entire state. For example, Thamiraibharani is a river which is within tamilnadu and doesn't have any dispute with any other states. I have heard that this river never dries down and is flowing throughout the year. However, I don't see any actions being taken by the govt to build dams and supply this to the other parts of the state. http://en.wikipedia.org/wiki/List_of_rivers_of_Tamil_Nadu is the list of rivers in Tamil Nadu. Why doesn't the government make use of these rivers instead of fighting with the neighbouring states over water ?

Anonymous said...


It seems, the THUGLAK, mAGAZINE HAS CHANGED ITS BASE FROM KALKI to KUMUDAM and printing and all allied disstribution works have been transferred to KUMUDAM WITH IMMEDIATE EFECT; ANYBODY GIVES MORE ON THIS ISSUE?

PS; " All the Jalras have cone under one roof"

Anonymous said...

பஸ் எரிப்பு மற்றும் எனய சொத்துகளை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் வர வேண்டும். இந்த எடுத்துகாட்டில், பாட்டாளி மக்கள் கட்சி எரிப்பினால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்ட வேண்டும்.

மரம் எரிப்பதை விட வேறு முட்டாள்தனம் வேறு ஏதுமில்லை