பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 10, 2013

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 10


குழந்தையின் வெவ்வேறு திறன்களை பல்வேறு வகையான விளையாட்டுக்கள், எப்படி மேம்படுத்துகின்றன என்று பார்த்தோம். சூப்பர் குழந்தைகளை உருவாக்குவதில் கதைகள் சொல்வதின் பங்கு பற்றி இனி பார்ப்போம்.


இன்று நேற்றல்ல, கதை சொல்வதென்பது பல ஆயிரம் ஆண்டுகளாக, எல்லா நாடுகளிலும் இருந்து வருகிற ஒரு நல்ல விஷயம். குழந்தை சிவாஜியும், மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியும் அவர்களது வீரத்தையும், சத்தியத்தையும் கதைகளின் மூலமே பெற்றார்கள். நான் குழந்தையாய் இருந்த போது பாட்டி எனக்குச் சொன்ன கதைகளுடனேயே பெரும்பாலும் எனது இரவு உறக்கம் துவங்கும்.அரக்கர் கதை, ராஜாக்கள் கதை, விலங்குகள், பறவைகள் பற்றின கதை என்று வற்றாத அமுதசுரபியைப் போல பாட்டியிடம் இருந்து கதைகள் வந்து கொண்டே இருக்கும். குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லும் பழக்கமே இப்போதெல்லாம் அருகி வருகிறது.வேலைக்குப் போகும் பெற்றோர்கள், குழந்தைகளுக்குக் கதை சொல்ல நேரம் இல்லாததால், குழந்தைகளுக்கான கார்ட்டூன் சேனல்களைப் போட்டு, அவர்களை உட்கார வைத்து விடுகின்றனர்.ஆயிரம் தொலைக்காட்சிச் சேனல்கள், ஒரு கதை சொல்லும் தாய்க்கு ஈடாகா. நாம் சொல்லும் கதைகள் குழந்தைகளின் மூளையை முடுக்கி விட்டு, சிந்திக்கும் திறன், யூகிக்கும் திறன், கேள்வி கேட்கும் திறன்,படைப்பூக்கம் ஆகியவைகளை வளர்க்கும். தொலைக்காட்சிச் சேனல்கள் மூளைத் திறனை மந்தமாக்கும். தொலைக்காட்சி, வீடியோ கேம் போன்றவைகளை, அதிக பட்சம் ஒரு நாளைக்கு அரை மணி நேரத்திற்கு மேல் பார்க்க அனுமதிக்க வேண்டாம்.தீராத பட்சத்தில், அம்மா அல்லது அப்பா, கூடவே இருந்து அவர்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் காட்சிகள் பற்றி விளக்கவும், கேள்விகள் கேட்கவும், அதனுடன் தொடர்புடைய விஷயங்களைப் பற்றிக் கூறவும் வேண்டும்.


கதை சொல்வதென்பது, குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களை, அவர்களுக்கு வாசித்துக் காட்டுவது, தம் நினைவில் இருந்து கதைகளை சொல்வது, பொம்மைகளைக் கொண்டு கதைகள் சொல்வது என்று இவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். கதைகளை விரும்பாத குழந்தைகளும் உண்டோ? குரங்கு குல்லா எடுத்த கதை, காக்காயிடம் இருந்து நரி வடை பறித்த கதை, சிங்கத்தை முயல் ஏமாற்றிய கதை இவையெல்லாம் என் குழந்தைக்கு மிகவும் பிடித்த கதைகள்.
பல பெற்றோர்கள் நினைப்பதைப் போல, கதை சொல்வதொன்றும் அவ்வளவு கடினமான வேலை இல்லை.குழந்தை சிறியதாக இருக்கும் போதே, சிறிய மிக எளிய கதைகளை சொல்லத் தொடங்கலாம். அவர்களுக்கு வயதேற ஏற, சற்றுப் பெரிய,சிக்கலான கதைகளைச் சொல்லலாம்.

எளிதான பயிற்சிகள் மூலம் சிறந்த கதை சொல்லியாக உங்களை வளர்த்துக் கொண்டு உங்கள் குழந்தையின் அறிவுத்திறனையும் வளர்க்கலாம்.கதை சொல்லும் முன், அந்தக் கதையை நன்கு தெரிந்து கொள்ளவும்.தேவையான புத்தகம், பொம்மைகள் அல்லது படக்கதையை எடுத்து வைத்துக் கொள்ளவும். கதையைஆரம்பிக்கையிலேயே ஒரு சஸ்பென்சோடு அல்லது எஃபெக்டோடு துவக்கவும்.உங்கள் குரலை சற்று சத்தமாக, ஏற்றத் தாழ்வுடன் ட்யூன் செய்து கொள்ளவும். குழந்தையை, உங்கள் அருகிலே அமர/படுக்கச் சொல்லி, கதை சொல்லவும்.நீங்கள் படித்த, பார்த்த கதையை மட்டுமல்ல, உங்களது வாழ்வில் நிகழ்ந்த சுவையான விஷயங்களையும், நீங்கள் கதைகளாகச் சொல்லலாம்.

கதை கேட்கும் குழந்தைகளின் கற்பனா சக்தி பெருகுகிறது.கவனிக்கும் திறன் வளர்கிறது.கதைகள் பெற்றோரையும் குழந்தைகளையும் இன்னமும் நெருக்கமாக்குகின்றன. எப்போதும் ஓடித் துள்ளித் திரிந்து கொண்டிருக்கும் குழந்தைகள், ஒரு இடத்தில் அமர்ந்து கதை கேட்கையில்,கவனிப்பதற்கும், அமைதியாக மனதை கதையில் ஈடுபடுத்தவும் பழகுகின்றனர்.
அன்பு, கருணை, ஒத்திசைவு, அழகு, அமைதி போன்றவற்றை அறிய உதவும் கருவிகளாக, கதைகள் விளங்குகின்றன. கதை கேட்பது,கற்றலுக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை அமைக்கிறது.புத்தகத்தில் பார்க்கும் படங்களையும், நாம் சொல்லும் கதையையும் தொடர்புப் படுத்த, குழந்தைகள் கற்கின்றனர்.இந்த விஷீவலைஸேசன் திறன், குழந்தைகளின் சிந்திக்கும் திறனை வளர்ப்பதோடு, அவர்களை மகிழ்விக்கவும், ஏமாற்றம், கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைக் குறைக்கவும் உதவுகிறது.
கதைகள் கேட்பது, கதைகளில் இன்னமும் ஆர்வத்தை அதிகப்படுத்தி, பின்பு புத்தக வாசிப்புப் பழக்கத்திற்கும் அடிப்படைத் தளம் அமைக்கிறது.

கதை சொல்கையிலேயே, அவர்களைக் கேள்விகள் கேட்டு, முந்தின நாள் பாதியில் அந்தக் கதையை எங்கே நிறுத்தினீர்கள் என்றெல்லாம் கேட்பது, அவர்களது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.கதையில் அடுத்து என்ன நிகழும், எவ்விதமாக முடியும்? என்று அவர்களைக் கேட்பது, அவர்களது யூகிக்கும் திறனை வளர்த்து, படைப்பூக்கத்திற்கு வழி வகுக்கும். புதிய இடங்கள், புதிய கதாபாத்திரங்கள், செயல்கள் என்று கதைகள், குழந்தைகளுக்குப் புதிய விஷயங்களை அறிமுகப் படுத்தி, அறிவை விரிவாக்குகின்றன.பெரும்பாலான கதைகளில் நல்லது மற்றும் தீயவை இடம் பெறுவதால், கடைப் பிடிக்க வேண்டிய மற்றும் விலக்க வேண்டியவைகளைப் பற்றி அறிகின்றனர்.நம் தலைமுறையிலிருந்து, நமது அடுத்த தலைமுறையினருக்கு, நம் பண்பாடு, கலாச்சாரம் போன்றவைகளைக் கடத்தும் சங்கிலியின் கண்ணிகளாகக் கதைகள் உள்ளன.புதிய வார்த்தைகள், உணர்ச்சிகளைக் கதைகளில் இருந்து பெறும் குழந்தை, அவைகளைப் பயன்படுத்த முற்படுவதால் மொழித் திறன் வளர்கிறது
கற்கும் நேரம், விளையாடும் நேரம் என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்ப்பது நாம் தான். குழந்தைகளுக்கு எல்லா நேரமும் விளையாட்டு நேரம் தான். எனவேதான், கதை சொல்லல் நிகழும் வேளையில் தான் அதிக பட்ச மொழியறிவை, குழந்தைகள் கற்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

குழந்தைகளுக்குக் கதை சொல்ல சில எளிய டிப்ஸ்:
• கதைகள் சொல்வதற்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். இரவு படுக்கைக்கு முன் என்பது சரியாக இருக்கலாம்.தினமும் அந்த நேரத்தில் கதை சொல்வதென்பது ஒரு பழக்கத்தையும் ஒழுங்கையும் கொண்டு வரும். நாளெல்லாம் ஓடி விளையாடிக் களைத்த குழந்தைக்கு அது ஒரு நல்ல புத்துணர்வூட்டும் நிகழ்வாக இருக்கும்.கதையில் ஒருமுகப் பட்டு அமைதியான குழந்தையை, ஒன்றிரண்டு தாலாட்டுப் பாடல்களால் உறங்க வைப்பதும் சுலபம்
• குரலை வெவ்வேறு அளவுகளில் வேறுபடுத்தி, உயிர்ப்புடன், மாடுலேஷன் செய்யுங்கள்.ஒரே விதமான குரல் ஒலி சலிப்பையூட்டி, கதையை போரடிக்கச் செய்து விடும்.கதையில் வரும் மிருகம், பறவை, மனிதரகள் போல உங்கள் குரலை மிமிக்ரி செய்ய முயற்சிக்கவும்.

• ஒரு பெரிய திருப்பத்திற்கு முன் கொஞ்சம் நிறுத்தவும் (pause).இது, குழந்தைகளின் எதிர்பார்ப்பைத் தூண்டி, கதையின் மேலிருக்கும் ஆவலை அதிகரிக்கும்.

• கதைகளில் வரும் உணர்ச்சிகளான கோபம், பயம், அமைதி, மகிழ்ச்சி, ஏமாற்றம் போன்றவைகளை உங்கள் முகத்தில் காண்பிக்கவும்.உங்கள் குரலும், முக பாவனைகளுமே, குழந்தைகளை, கதை உலகத்திற்கு அழைத்துச் சென்று கதையை உயிர்ப்பிக்கின்றன.

• கதாபாத்திரங்களின் உடையை, முகமூடியை அணியுங்கள். கரடிக் கதை சொல்கையில், கரடியின் முகமூடி இருந்தால் அதை அணிந்து கொண்டு சொல்லுங்கள்.

• கதையில் வரும் செயல்களை, முடிந்தவரையில் நடித்துக் காட்டுங்கள். காக்கா, வடையை எடுக்கப் பறந்து வந்தது என்று என் கைகளை சிறகுகளாகப் பறக்க வைக்கையில், என் குழந்தையின் கைகளும் சிறகைப் போல ஆடுவதைப் பார்த்திருக்கிறேன். குரங்கு குல்லாவை எடுத்த கதையில் குல்லாவை நான் போட்டுக் கொண்டு சொன்னால், பக்கத்திலிருந்த பிளாஸ்டின் பாத்திரத்தை குல்லா போல அவனும் போட்டுக் கொள்வான்.

• கடல் பற்றிய கதைகள் என்றால், கடலில் இருந்து எடுத்த முத்து, சிப்பி, சங்கு போன்றவைகளைக் காண்பிப்பது,சங்கின் ஒலியைக் கேட்க வைப்பது, கடலின் அலையோசையைக் கேட்க வைப்பது, உங்கள் கதைக்கு மேலும் உயிரோட்டமாக இருக்கும்.இரவு நேரத்தில் காட்டில் நிகழும் ஒரு கதை என்றால், இரவு விளக்கை மட்டும் போட்டு விட்டு, வனத்தில் கேட்கும் விலங்கு, பறவை சத்தங்களை ஒலிக்கும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களைக் கூடப் பயன்படுத்தலாம்.

• உண்மைக்கும், புனைவு கதைகளுக்கும் அதிகம் வித்தியாசம் தெரியாத சிறு குழந்தைகளிடம் பெரும்பாலும் உண்மையான கதைகளையே, அல்லது உண்மைக்கு ஒட்டி வருகின்ற நிகழ்வுகளையே சொல்வது நல்லது. குழந்தைகளின் மனோ மாதிரி (mental model)உண்மையை அடித்தளமாகக் கொண்டு வளர்வதே சிறந்தது. குழந்தையின் மனது ஒரு பெரிய உறிஞ்சும் ஸ்பாஞ்ச் போல. நாம் சொல்லும் அனைத்து விஷயங்களையும் எந்த வடிகட்டியும் இல்லாது உண்மையென்று நம்பி விடும்.எனவே, கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

• கூறிய கதைகளையே மீண்டும் கூறலாம். தவறில்லை; மேலும், “எந்தக் கதை சொல்ல?” என்று குழந்தைகளையே கூட கேட்கலாம்.

• கதையைக் கூறி முடித்த பின், ”இதனால் அறியப் படும் நீதி யாதெனில” என்றெல்லாம் சொல்லாமல், கதையின் படிப்பினையை அவர்களாகவே புரிந்து கொள்வதற்கு விட்டு விடவும்.
கதைகளைக் கேட்பது குழந்தைகளின் உரிமை. அதற்குத் தகுந்த நேரம் ஒதுக்கி, அவர்களுக்குக் கதைகள் சொல்வது, பெற்றோர்களாகிய நம் கடமை.

உங்க கதை என்ன?
டாக்டர் பிரகாஷ்
www.rprakash.in


4 Comments:

தயிர் வடை said...

ஏம்பா மொக்க டாக்டர். உமக்கு ஒண்டறதுக்கு ஒரு வாரம் இடம் கொடுத்தாரு இ.வ. இப்ப வாரா வாரம் இந்த மொக்க ப்ளேடு போடுறியப்பா. தாங்க முடியலேப்பா.. வுட்டுரு நைனா! இல்லேன்னா நானும் ‘சாதா தோசை to சூப்பர் தோசைன்னு’ தொடர் எழுதுவேன்.

Anonymous said...

ஏன் இந்தியாவில் குழந்தைகளே இல்லையா? எப்போ பார்த்தாலும் வெள்ளைக்கார குழந்தைகள் படமா போடறீங்களே?

Anonymous said...

ஆமா இந்திய குழைந்தைகளை போட்ட மட்டும் படிக்க போறிங்களா

கொடும்பாவி said...

எப்பாபாரு சோனியா, கலைஞர், ஜெ என்றே பழக்கப்பட்டவர்களுக்கு இது போல் சொன்னா சலிக்கத்தான் செய்யும்..
இவர் சிந்தை திருந்தி உய்ய குகனே உந்தன் திருவருள் புரியாயோ??