பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 19, 2013

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 7

Motor skills என்பது தசைகளின் செயல்திறன்களைக் குறிப்பதாகும். gross motor skills and fine motor skills என்று இவைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். Gross motor skills என்பவை புஜங்களின் அசைவுகள், கால், பாதம் அல்லது ஒட்டு மொத்த உடலின் அசைவைக் கொண்டவை. உடலின் பெரிய தசைகளின் ஒருங்கிணைப்பைக் கொண்டு நாம் செய்யும் செயல்களான ஓடுதல், ஊர்தல், நடத்தல், நீச்சலடித்தல், பேலன்ஸ் செய்தல்,பந்து எறிதல் போன்றவைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

fine motor skills எனப்படுபவை, துல்லியமாக - கைகள், மணிக்கட்டு, கை விரல்கள், பாதங்கள், உதடுகள், நாக்கு போன்றவற்றைக் கொண்டு செய்யப் படும் சிறிய நுண்ணிய அசைவுகள்/செயல்கள்… விரல்களைக் கொண்டு சிறு பொருட்களை எடுப்பது, ஸ்பூன், ஃபோர்க் உபயோகித்து உணவு உண்ணுதல்,பென்சில், பேனாவை உபயோகித்து எழுதுதல், வரைதல் போன்ற தினசரி செயல்களைச் சொல்லலாம்.குழந்தைகளிடம் இந்த இரண்டு மோட்டார் திறன்களும் ஒன்றிணைந்தே வளர்கின்றன. மற்றும் இவை இரண்டுக்கும் இடையில் ஒருங்கிணைப்பும் உள்ளது.


குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்திலும், இந்த இரண்டு திறன்களுமே படிப்படியாக வளர்ந்து, ஆறு முதல் 12 வயது வருகையில் குழந்தை ஏறக்குறைய இந்த எல்லா திறன்களிலும் தேர்ச்சி பெற்று விடுகிறது.
fine motor skills ஐ மேம்படுத்தும் விளையாட்டுக்கள்:

இரண்டு மாதக் குழந்தைகளுக்கு அருகில் கலர் கலரான கைக்குட்டைகளை பரப்பி வைத்தால், அதை கையினால் தொட்டு எடுக்க முயற்சிக்கையில் fine motor வளர்ச்சி ஏற்படுகிறது.குழந்தையின் கைக்கெட்டுமாறு சிறு சிறு பொம்மைகளைத் தொங்க விட்டு, அவைகளைத் தொட முயற்சிக்கையில், கைகளைக் கொண்டு ஆட்டுகையில், சத்தம் வருகையில் செயல்-விளைவுத் தத்துவத்தை குழந்தைகள் புரிந்து கொள்வதோடு, அவர்களின் காக்னிடிவ் வளர்ச்சியும் மேம்படுகிறது.

ஆறு மாதக் குழந்தை சப்தமிடும் பொம்மைகளை இயக்க முயற்சிப்பதன் மூலம் இத் திறன்களை வளர்த்துக் கொள்கிறது.
எட்டு மாதக் குழந்தையிடம் கீழே கிடக்கும் பொம்மைகளை அதற்குரிய பெட்டியில் போடச் சொல்வதன் மூலமும்,இரண்டு பொருள்களை ஒன்றுடன் ஒன்று மோதி சப்தமேற்படுத்த வைத்து (இரண்டு ஸ்பூன்கள், இரண்டு தட்டுக்கள்) கைகளைத் தட்டி ஓசை எழுப்பச் சொல்லியும் இத்திறனை வளர்க்கலாம்.

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தையிடம், பேப்பரைக் கிழித்துப் போடச் செய்யலாம். இதைச் செய்வதில் அவர்களுக்கு ஒரு அலாதி சுகம்தான்.

பதினெட்டு மாதக் குழந்தையிடம் ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு தண்ணீரை மாற்றச் சொல்லவும்.
இரண்டு வயதுக் குழந்தையானது ஒரு டம்ளரிலிருந்து இன்னொரு டம்ளருக்கு தண்ணீரை சிந்தாமல் முழுவதும் மாற்றி விட்டதென்றால், அதன் ஃபைன் மோட்டார்த் திறன்கள் நன்கு வளர்ச்சியடைந்து விட்டதாகக் கொள்ளலாம்.
என் பதினைந்து மாதக் குழந்தை ஸ்ரீவத்சனிடம் ஒரு தட்டில் கடலைப் பருப்பைக் கொடுத்து அதைக் கொஞ்சமாக எடுத்து ஒரு சிறு டபராவில் போடச் சொன்னோம். ஓரளவு முயற்சிக்குப் பின் கொஞ்சம் கடலைப் பருப்பு டபராவிலும், மீதி அவனது வாய்க்குள்ளும் போனது. கவனம்- இதனால் அவனுக்குக் கொஞ்சம் வயிற்று வலி வந்தும் சிரமப் பட்டான்.
Gross motor skills மேம்படுத்தும் விளையாட்டுக்கள்:

ஆறு மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் வண்ணங்களாலான பொம்மைகளை அருகில் வைத்து, அவர்கள் நகர்ந்து, தவழ்ந்து பொம்மையை நோக்கிச் செல்வதை ஊக்குவிக்கலாம்.

எட்டு மாதங்கள் ஆன குழந்தையை சேர், அல்லது அட்டைப் பெட்டிகளை சுரங்கம் போல வடிவமைத்து, அதற்குள் ஊருந்து வரச் செய்யலாம்.குட்டிக் குட்டி அட்டைப் பெட்டிகளை கயிற்றினால் ஒன்றன் பின் ஒன்றாகக் கட்டி, ட்ரெயின் போல அவைகளை இழுக்கச் செய்யலாம்.வித விதமான வண்ணங்களில் பந்துக்களைக் கொடுத்து அவர்கள் அதை எப்படிக் கையாளுகிறார்கள் (தள்ளுதல், உதைத்தல், எறிதல், உருட்டுதல்) என்று பார்த்து பயிற்சி கொடுக்கலாம்.

ஒரு வயதுக் குழந்தைகளுக்கு, கலர் கலரான பிளாஸ்டிக் வளையங்களைக் கொடுத்து, அவர்களை அதனுள், வெளியே, சுற்றி, வட்டமடித்து என்று பலவாறாக விளையாட வைக்கையில் பல க்ராஸ் மோட்டார் திறன்கள் மேம்படுகின்றன.இரண்டு வயதான குழந்தைகளை, பூங்காவில் இரும்புக் கம்பியைப் பிடித்துத் தொங்கப் பழக்கலாம்.மெத்தையிலோ, பார்க், மால் போன்ற இடங்களில் குவிக்கப் பட்டுள்ள பந்துக்களின் மேலோ குதிக்கச் செய்கையில் கால் தசைகளுக்கு நல்ல பயிற்சி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் பேலன்ஸ் செய்வதற்கும் கற்றுக் கொள்கின்றனர்.

குழந்தை வளர்ப்பில், இந்தத் திறன்கள் இன்றியமையாதவையாகும். குழந்தை, பிறந்தது முதல் தலை, கை, கால்களை ஆட்டி,அவைகளின் மீது கண்ட்ரோலைக் கொண்டு வந்து, பின்னர், கொஞ்சங் கொஞ்சமாக குட்டி விரல்களை இயக்கி எழுத, சிறிய பொருள்களை எடுக்கக் கற்றுக் கொள்கிறது. மேற்சொன்ன விளையாட்டுக்களை எவற்றை குழந்தை விரும்புகிறானோ அதை அடிக்கடி செய்யச் சொல்லி, பயிற்சி தரவும்.

ஒன்றுக்கு மேற்பட்ட விளையாட்டுக்களை விளையாடுகையில் சலிப்பு வருவதில்லை.
பள்ளிக்குச் செல்லும் முன்பே குழந்தைகளின் இவ்விதத் திறன்களை சரியாக மேம்படுத்தினால், பள்ளியில் அவர்கள் நன்கு செயல்புரிய ஏதுவாக இருக்கும்.புதிய செயல்களின் மூலம் புதிய மோட்டார்த் திறன்களைக் கற்கையில் அவர்களது மூளையில் புதிய புதிய நரம்புத் தொடர் இணைப்புகள் உருவாகி, அவைகள் பழக்கமாக வளர்கின்றன.

பொதுவாகவே, நகர்தலை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுகளை குழந்தைகள் நன்கு விரும்பிச் செய்கின்றன.
தற்போதைய சூழ்நிலையில், குழந்தைகள் செல்ஃபோன்கள், கம்ப்யூட்டர் வீடியோ கேம் போன்றவைகளையே அதிகம் விரும்புகின்றன. இவைகள் எல்லாம் ஃபைன் மோட்டார் இயக்கத்திற்குப் பயன்படும். ஆனால், இதற்கெல்லாம் முன்னோடியாக இருக்கும் பெரிய தசைகளை இயக்கி செயல்படுகிர க்ராஸ் மோட்டார் இயக்கங்களையும் அவர்கள் கற்றுத் தெளிய வேண்டும்.
தவழ்ந்து நடக்கத் துவங்கிய குழந்தை வீடெங்கும் சுற்றி, கைக்கு என்ன கிடைக்கிறதோ, அதை எடுத்து விளையாடப் பார்க்கும்.அதில் தவறேதுமில்லை. ஆனால், அபாயகரமான பொருட்களான, கத்தி, கூரான சமையல் பாத்திரங்களை அவர்கள் கைக்கு எட்டாமல் வைக்கவும். பெரிய பாத்திரத்தை எடுக்க முடியாமல் எடுத்து கீழே போடும் குழந்தை, நாளடைவில் அதை பேலன்ஸ் செய்யக் கற்றுக் கொள்கிறது.

நாம் அதை அவன் காலில் போடாமல் மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறு சிறு காய்கறிகளை எடுத்து வைத்தல் போன்ற குட்டிக் குட்டி வேலைகளை அவர்களை செய்யச் சொல்லவும். குடிநீர் கேனை அடிக்கடி திறந்து விட்டு நீரை வீணாக்கும் என் குழந்தைக்கு, வாட்டர் பாட்டிலை வைத்துக் கொண்டுதான் நீர்க் கேனைத் திறக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தோம். ஒவ்வொரு முறை நீர் நிரப்புகையிலும், வாட்டர் பாட்டிலை நாங்கள் பிடித்துக் கொண்டு, அவனை குமிழைத் திறக்கச் சொன்னோம். முக்கால் வாசி நிரம்பியவுடன் அவனயே மூடச் சொல்லிப் பழக்குகிறோம். இதில் அவனுக்கும் ஒரு சந்தோசம் , மற்றும், ஒரு புதிய செயலைக் கற்றுக் கொடுப்பதும் முடிகிறது. எனக்குத் தெரிந்த ஒருவர், நடக்கத் தெரிந்த தன் குழந்தை, தவறிப் போய்க் கீழே விழுந்து அடிபட்டு விடக் கூடாது என்கிற எண்ணத்தில், வீடு முழுவதும் கார்ப்பெட் போட்டுள்ளார். இது சரியான அணுகுமுறை அல்ல.அவரால் தெருவனைத்திற்கும், ஊர் முழுவதும் கார்ப்பெட் போட முடியுமா? பின் எப்போதுதான் அவர் குழந்தை விழுந்து எழுந்து மீண்டும் விழாமல் பேலன்ஸ் செய்யக் கற்றுக் கொள்ளும்?

எனவே, குழந்தைகளை ஓவராகப் பொத்திப் பொத்தி வளர்க்காமல் அவர்கள் இயல்பில் போய், அவர்களுக்கு நார்மலாக என்னென்ன அனுபவங்கள் கிட்டுமோ, அதையெல்லாம் கிடைக்கச் செய்யுங்கள்

பிகு: படங்களில் தோன்றுவது குழந்தை ஸ்ரீவத்சன்.

டாக்டர் பிரகாஷ்.
www.rprakash.in

குழந்தைக்கு சுத்திப் போடுங்க !

5 Comments:

தீஷு said...

அருமையான‌ தொட‌ர்.. த‌ற்பொழுது ஏழு வ‌ய‌தாகும் என் ம‌க‌ளுட‌ன், அவ‌ள் சிறு வ‌ய‌தில் இது போல் விளையாண்ட‌தை என் ப‌திவில் ப‌திவு செய்வ‌து வ‌ழ‌க்க‌ம். த‌ற்பொழுது சிறிது த‌ட‌ங்க‌ல் ஏற்ப‌ட்டுள்ள‌து. தொட‌ரும் ஆவ‌லை இத்தொட‌ர் தூண்டியுள்ள‌து. இந்த‌ அருமையான‌ தொட‌ருக்கு ந‌ன்றி டாக்ட‌ர்!!!

R. J. said...

பொதுவாக எல்லா பெற்றோர்களும் குழந்தைகளும் இதை செய்தாலும், ஏன், எதற்கு, எப்படி என்று தெரிந்து செய்தும் தேவையாக இருக்கிறது. அந்த வகையில் இந்தக்கட்டுரைகள் புதுப் பெற்றோர்களுக்கு ஒரு வரப் பிரசாதம்.

குழ்ந்தை ஸ்ரீவத்சனுக்கு ஆசிர்வாதங்கள்.

-ஜெ.

Anonymous said...

டாக்டர், இந்த கட்டுரை எழுத உங்க குழந்தையை பரிசோதனை எலி ஆக்கவில்லை தானே?
சந்தேகமா இருக்கு.
யாராவது இவ்வளவு சின்ன குழந்தைக்கு தட்டில் கடலைப் பருப்பை போட்டுக் கொடுப்பாங்களா ?
பொட்டுக் கடலைன்னு ஒரு சாதனம் இருக்கு தெரியமா? அது உட்கொண்டாலும் உடலுக்கு நல்லது. அதையே கூட இவ்வளவு சின்ன குழந்தை தனியே கையாள முழுதாக முழுங்க அனுமதிக்கலாமா என்பது சந்தேகமே.

இந்த அபத்த பரிசோதனையை செய்ததோடு அதை எழுதி வாசகர்களுக்கு பத்திரம் என்று எச்சரிக்கை வேறு. எப்படி பத்திரமா இருப்பதாம்? நம்மை விட குழந்தைங்க படு வேகம் (இந்த ஸ்கில் இயல்பானது) க்ஷணத்தில் வாயிலும் ஏன் மூக்கிலும் கூட போட்டுக் கொண்டு விடும்.

பொத்திப் பொத்தி வளர்ப்பது எவ்வளவு தப்போ அதே அளவு குழந்தைகளின் இயல்பான திறமைகளை என்னமோ நாம் வளர்ப்பதாக நினைத்துக் கொண்டு தப்பும் தவறும் ஆபத்துமான பயிற்சிகளை செய்விப்பதும் தவறு.

குழந்தையின் இயல்புகளை முதலில் அவதானிக்க வேண்டும். இயல்பாகவே அது தனக்கான விளையாட்டுப் பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். அடுப்படிக்கு வந்து பாத்திரம் கரண்டி என்று எடுத்து உரசியும் அடித்தும் சத்தமிட்டு ரசிக்கும். அப்போது நாம் செய்ய வேண்டியது சத்தம் காதை அடைக்குது என்று பிடுங்காமலும் அது ஆபத்தான முயற்சிகளை செய்யாமலும் பார்த்துக் கொள்ளுதல் தான்.

அந்த இடைவெளி உள்ள படிக்கட்டுகளில் குழந்தை தனியாக அமர்ந்து இருப்பது பார்க்கவே பயமா இருக்கிறது. நீங்கள் கூட இருந்திருக்கக் கூடும் தான். படத்தில் பார்க்க பயமாகத் தான் இருக்கு. கிழே விழுந்த பின் இந்த மாதிரி இடைவெளி உள்ள படிக்கட்டுகளில் தனியாக ஏறும் போது பத்திரம் என்று வாசகர்களுக்கு எழுதுவீங்களோ என்னமோ. அந்த படத்தை மாத்துங்க.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒருத் தனித்தன்மை இருக்கும் எல்லோருக்கும் ஒரே மாதிரி பயிற்சிகள் பொருந்தாது. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இன்று பெற்றோர்கள் குழந்தைக்கு நல்லது என்று யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே அதன் மேல் திணிக்க முயல்வதை திரும்பத் திரும்ப பார்க்க முடிகிறது

இட்லி வடை வாசகி

டாக்டர்.பிரகாஷ் said...

//இந்த கட்டுரை எழுத உங்க குழந்தையை பரிசோதனை எலி ஆக்கவில்லை தானே?
சந்தேகமா இருக்கு.
யாராவது இவ்வளவு சின்ன குழந்தைக்கு தட்டில் கடலைப் பருப்பை போட்டுக் கொடுப்பாங்களா ?
பொட்டுக் கடலைன்னு ஒரு சாதனம் இருக்கு தெரியமா? அது உட்கொண்டாலும் உடலுக்கு நல்லது. அதையே கூட இவ்வளவு சின்ன குழந்தை தனியே கையாள முழுதாக முழுங்க அனுமதிக்கலாமா என்பது சந்தேகமே.//

அன்புள்ள இட்லிவடை வாசகிக்கு,

உங்களது அக்கறைக்கு நன்றி. உங்களின் கருத்துக்கு உடன்படுகிறேன். கடலைப் பருப்புக்கு பதில் பொட்டுக் கடலையைக் கொடுத்திருக்கலாம். அன்று வீட்டில் பொட்டுக் கடலை இல்லாததால், க.ப. கொடுத்தோம். க.ப வோ, பொ.க வோ, இந்த வயதில் கண்டிப்பாக நாம் கூடவே இருக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து கிடையாது.
இடைவெளி உள்ள படிக்கட்டு, நவராத்திரி கொலு பொம்மைகள் வைப்பதற்கு முன் குழந்தையை தக்க பாதுகாப்போடு, கைக்கெட்டும் தூரத்தில் இருவர் இருந்து எடுத்த படம்.

//ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும்-//நிச்சயமாக. ஆனால் இதில் சொல்லப் பட்டிருக்கும் பயிற்சிகள் ஒரு பொதுவான உதாரணத்திற்காகவே.

இந்தக் கட்டுரை எழுத என் குழந்தையை பரிசோதனை எலி எல்லாம் ஆக்கவில்லை. அவன் தான் என்னைப் பரிசோதனை எலி ஆக்கி எழுத வைத்துக் கொண்டிருக்கிறான் ;) ;)

பிரகாஷ் said...

நன்றி தீஷீ அவர்களே.

R.J.சார்,

உங்களின் ஊக்கத்திற்கும், ஆசிகளுக்கும் மிக்க நன்றி