பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 12, 2013

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 6


விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு இயல்பான ஒன்று. நாடு, கலாச்சாரம் என்கிற பாகுபாடுகள் ஏதுமின்றி உலகில் உள்ள எல்லாக் குழந்தைகளும் விளையாட்டில் வெகு ஆர்வமாக இருக்கும்.உலகின் புராதன பொம்மைகள் களிமண், குச்சி, பாறைகளால் செய்யப் பட்டிருந்தன.சிந்து சமவெளிக் காலத்திலிருந்தே(கி.மு.3000-1500) குழந்தைகள் சிறிய தேர் பொம்மைகள், பறவைகள் வடிவில் செய்யப் பட்டிருந்த விசில், குரங்கு பொம்மைகளைக் கொண்டு விளையாடி இருப்பதாக அகழ்வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானதும் நன்மை பயப்பது என்பதையும் பெற்றோர்களாகிய நாம் உணர வேண்டும்.விளையாட்டில் குழந்தைகள், தங்களை பிஸியாகவும், களிப்புடனும் வைத்துக் கொள்கின்றனர்.நம் குழந்தைகள் சிரித்து, மகிழ்வுடன் விளையாடுவதைப் பார்க்கையில் நமக்கும் அளவற்ற மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படுகிறது.ஆனால், இந்த விளையாட்டுக்க்கள், குழந்தையின் வளர்ச்சியில் எத்தகைய இன்றியமையாத பங்கு வகிக்கின்றன என்பதை நாம் அறிவதேயில்லை.கடந்த முப்பது வருடங்களில், குழந்தைகள் விளையாட்டுக்கு செலவிடும் நேரம் வெகுவாகக் குறைந்து உள்ளதாக, குழந்தை நல அறிவியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


குழந்தையின் வளர்ச்சிக்கு விளையாட்டு ஒரு முக்கியக் காரணியாகும்.பல்வேறு வகையான திறன்களை (skills) வளர்த்துக் கொள்வதற்கும், பின்னாளில் அவைகளைத் திறம்படப் பயன்படுத்துவதற்கும் விளையாட்டு அவசியம். விளையாட்டின் மூலமே, குழந்தைகள் கற்கின்றன; இந்த உலகைப் புரிந்து கொள்கின்றன; தாம் இந்த உலகில் எவ்வாறு பொருந்துகிறோம்(fit) என்பதை உணர்கின்றன.
நகர்தல், பார்த்தல், தொடுதல், நகர்த்துதல், ருசி பார்த்தல், நுகர்ந்து பார்த்தல், கேட்டல் போன்ற செயல்பாடுகளின் மூலம் சிறு குழந்தைகள் நிறையக் கற்றுக் கொள்கின்றன. “விளையாட்டு” (play) என்பது, நன்றாக நடக்க, ஓடத் தெரிந்த குழந்தைகளுக்குத்தான் என்று நாம் நினைப்பது முற்றிலும் தவறு.பச்சிளம் குழந்தைப் பருவத்திலேயே, அவர்களுக்கு, அவர்களது செயலின் விளைவு பற்றித் (feedback) தெரிய ஆரம்பிக்கிறது. அழுதால் பால் கிடைப்பதும், ஈர ஜட்டி மாற்றப் படுவதும்,பந்தை எறிந்தால், பிடிக்க ஆள் வருவதும்,கிலுகிலுப்பையை அசைத்தால் சத்தம் வருவதும் அவர்களுக்கு என்று ஒரு சக்தி இருப்பதைப் பற்றியும், அவர்களால் செயலாற்ற முடியும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்கின்றனர்.
பின்னர், தவழ்ந்து, நகரத் துவங்கி, வீட்டின் எல்லா பகுதிகளையும் சுற்றிப் பார்த்து, ஆராய்கின்றனர்.சற்று வளர்ந்த குழந்தையானது, பெற்றோர்கள் மற்றும் மற்ற குழந்தைகளின் செயல்களை நடிப்பதில் (imitate) சமூகத் திறன்களைக் (social skills)கற்கிறது..

பள்ளியில் சேர்ந்தவுடன், விளையாட்டு என்பது சட்ட திட்டங்களுடன் ஒரு ஃப்ரேமுக்குள் இருக்கக் கூடிய , போட்டிகளுடன் கூடிய வேறு ஒரு வடிவம் எடுத்து விடுகிறது.விளையாட்டின் மூலமே பெரும்பாலும் அவர்கள் தங்கள் நண்பர்களை சந்திக்கவும், அவர்களுடன் பழகவும் வழி வகை செய்கிறது.

குழந்தைகளைச் சுற்றி, பல்வேறு விதமான பொம்மைகள் இருப்பது நல்லது..பொம்மைகளும், விளையாட்டு சாதனங்களும் விலையுயர்ந்தவைகளாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. புத்தகங்கள், க்ரேயான், பென்சில், பேப்பர், பில்டிங் ப்ளாக்ஸ் பொம்மைகள்,என்று என்னென்ன முடியுமோ, எல்லாவற்றையும் அவர்களுக்கு வாங்கிக் கொடுங்கள்.
விளையாட்டுகளில் பல்வேறு வகைகள் உண்டு. ஒவ்வொரு விளையாட்டுமே குழந்தை, கற்றுக் கொள்வதற்கு ஒரு வாய்ப்புதான். ஒவ்வொரு வயதிலும், குழந்தைகள் என்னென்ன விளையாட்டுகள் விளையாடுகின்றன, அவைகளை என்னென்ன விதமாக விளையாடுகின்றன, அவைகளின் மூலம் குழந்தைகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்று விளையாட்டுக்களைப் பற்றி பல்வேறு கோணங்களில் விரிவாகப் பார்க்கலாம்.

மொழி வளர்ச்சி மற்றும் குழந்தைப் பருவக் கற்றல்:

குழந்தைகளுக்கு மொழி வளர்ச்சி என்பது , ஏறக்குறைய இந்த வரிசையில் நடைபெறுகிறது.
• அழுவது,சத்தமிடுவது,தோராயமாக ஓசை எழுப்புவது
• உளறுவது, இரண்டு/ மூன்று முறை அதே ஒலியை திரும்பச் செய்வது-3 மாதங்கள்
• கவனிக்கும் திறன் – 8 மாதங்கள்
• வார்த்தைகளைப் புரிந்து கொள்வது -1 வயதில்
• ஒரு சொல் பேச்சு- 1 வயதில்
• இரண்டு வார்த்தைகளை / தந்தி வார்த்தைகளை சொல்வது – 2 வயதில்
• மொழி இலக்கணம் கற்றல்
மொழி வளர்ச்சிக்கும், குழந்தைப் பருவக் கற்றலை வளர்க்கவும் உதவும் விளையாட்டுகள்:

டெமோ டேப்: (வயது: 6 வாரங்களுக்கு மேல்)

குழந்தையின் சப்தங்களை தேதி வாரியிட்டு டேப் ரெகார்டரிலோ, செல் போனிலோ ரெகார்ட் செய்யவும்.
இது குழந்தையின் மொழி வளர்ச்சியின் முன்னேற்றங்களை நாம் எளிதில் உணர வகை செய்யும்.
மற்றவர் குரலை பின்பற்றுதல்: (வயது: 3 மாதங்களுக்கு மேல்)

உங்கள் குழந்தை ஒலி எழுப்புகையில், நீங்களும் அதே ஒலியை தொடர்ந்து எழுப்பவும்.பின்பு, நீங்கள் அதே ஒலியை மீண்டும் எழுப்பி, குழந்தை எதிர்வினை புரிய,ஒரு இடைவெளி தரவும்.இந்த செய்கையானது, குழந்தைகள் அடிப்படை மொழித் திறன்களைப் பழகவும்,ஒலியைக் கொண்டு மற்றவர்களுடன் உரையாடவும் இது கற்றுத் தருகிறது.
டெடி பொம்மை எங்கே? (வயது: 6 மாதங்களுக்கு மேல்)

குழந்தை நன்கறிந்த பந்து, மற்ற பொம்மைகள்,கரடி பொம்மை எல்லாவற்றையும் அவைகளைக் குறிப்பிட்டு, குழந்தையை அடையாளம் காணச் செய்யவும்.சரியாகக் காட்டியவுடன்,கை தட்டி உற்சாகப் படுத்தவும்.இந்த விளையாட்டில் இருந்து, தெரிந்த நபர்கள், பொருட்களை இனங்கண்டறிந்து அவைகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம், சமூக இணைப்புகள் (social ties) பற்றிக் கற்றுக் கொள்கின்றனர்.

குழல் வழியே பேசுதல் (வயது: 10 மாதங்களுக்கு மேல்
ஊதுபத்திக் குழல், அல்லது ட்யூப் போன்ற குழல் வழியாக சற்று பலமான மற்றும், மெதுவான ஒலியை எழுப்புதல்.
இதை கவனிப்பதன் மூலம், வெவ்வேறு வகையான ஒலிகளை எழுப்புவது மற்றும் ஒலியைப் பயன்படுத்துவதைப் பற்றியும் குழந்தை கற்றுக் கொள்கிறது

மூக்கு எங்க இருக்கு? கால் எங்க இருக்கு? (வயது: 10 மாதங்களுக்கு மேல்)
குழந்தையின் பல்வேறு உடல் பாகங்களான மூக்கு, கண், வாய், காது, கால் பற்றிக் கேட்கவும். குழந்தை பல்வேறு சொற்களைப் பற்றிக் கற்றுக் கொள்ளவும், சரியாக அடையாளம் சொல்வதால், அதன் சுய மதிப்பும் கூடி, இது போன்ற விளையாட்டுகளில் மேலும் ஆர்வம் அதிகரிக்க ஏதுவாகவும் இருக்கும்.

எடுத்து வைக்க உதவு: (வயது: 12 மாதங்களுக்கு மேல்)
கடைக்குப் போய் வாங்கி வந்த சாமான்களை, காய்கறிகளை ஒவ்வொன்றாக அவைகளின் பெயர்களைச் சொல்லி எடுத்து வைக்கவும்.பின் அந்த சாமான்களின் பெயரைச் சொல்லி, குழந்தையை சரியாக எடுத்து மீண்டும் பையில் போடச்சொல்லவும்.
இதன் மூலம் புதிய புதிய சாமான்களின் பெயர்களைக் கற்றுக் கொள்வதோடல்லாமல், குழந்தை,ஒரு செயலை இன்னொருவருடன் சேர்ந்து செய்யும் இயல்பு பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது.

விலங்குகள் மிமிக்ரி: (வயது: 12 மாதங்களுக்கு மேல்)

விலங்குகளின் படங்களைப் புத்தகத்திலோ அல்லது சார்ட்டிலோ காட்டி, அவைகளைப் போல சப்தமிடவும்.
குழந்தை இதை நன்கு ரசித்து மகிழ்வான். மொழியைக் கேளிக்கையாக (fun) கற்றுக் கொள்வது துவங்குகிறது
அப்புக் குட்டி சொல் புத்தகம்: (வயது: 12 மாதங்களுக்கு மேல்)
உங்கள் குழந்தை என்னென்ன சொற்களைச் சொல்கிறானோ, அதன் படங்களைக் கத்தரித்து ஒரு நோட்டில் ஒட்டவும். மீண்டும் மீண்டும் அந்தப் படங்களைக் காட்டி அவனை சொல்ல வைப்பது,அவனுக்குப் பயிற்சியையும், சரியாகச் சொல்வதால், மிகுந்த மன மகிழ்ச்சியையும் தரும்.

போட்டோ எக்ஸ்பீரியன்ஸ் புத்தகம்: (வயது: 18 மாதங்களுக்கு மேல்)
குழந்தையைப் பற்றிய ஒரு சிறு போட்டோ ஆல்பக் கதைப் புத்தகத்தை உருவாக்கவும்.உதாரணமாக, குழந்தையை பூங்காவிற்கு அழைத்துச் செல்கையில் ஒவ்வொரு விளையாட்டின் போதும் புகைப்படங்கள் எடுக்கவும்.அவைகளை ஒரு ஆல்பத்தில் / நோட்டில் ஓட்டி, குழந்தையை அருகில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு, அந்தப் படத்தைக் காட்டி அவ(ள்)ன் என்ன செயல் செய்கிறா(ள்)ன் என்று கதை போல சொல்லவும்.போட்டோவைக் காட்டி நீங்கள் கூறும் ஒவ்வொரு மொழி வளமும்,(vocabulary) குழந்தைக்கு மிகுந்த அர்த்தமுள்ளதாக விளங்கும்.ஏனென்றால், அவைகளை குழந்தையே உணர்ந்து அனுபவித்து இருக்கிறது.ஒவ்வொரு புகைப்படமும், குழந்தை ஏற்கெனவே செய்த செயலின் ஒரு அடையாளமாக இருக்கிறது.குழந்தைகளின் சுயமதிப்பு இதன் மூலம் கூடவும், அவர்கள் தங்களை புகைப்படத்தில் அடையாளப் படுத்திக் கொள்ளவும் முடிகிறது.வாசிப்பு அனுபவத்திற்கான மிகச்சிறந்த முன்னோட்டமாக இந்த விளையாட்டு திகழ்கிறது

சோஷியல் மற்றும் எமோஷனல் டெவலப்மெண்ட், ஃபைன் மோட்டார் மற்றும் க்ராஸ் மோட்டார் டெவலப்மெண்ட், சென்ஸரி டெவலப்மெண்ட்,காக்னிடிவ் டெவலப்மெண்ட் போன்ற பல்வேறு விதமான உடல் மற்றும் சிந்தனை வளர்ச்சிக்கான விளையாட்டுக்கள் பற்றி இனி வரும் வாரங்களில் பார்ப்போம்..

டாக்டர்.பிரகாஷ்
www.rprakash.in

இந்த வழிமுறை எல்லாம் டிவி இல்லாத வீட்டில் :-) டிவி இருக்கும் வீட்டில் சீரியல், சினிமா, வடிவேலு/விவேக் நகைச்சுவை என்று பல விஷயங்களை மறை முகமாக சொல்லித் தருகிறோம் .

7 Comments:

Prem said...

Thanks for the nice article Dr.Prakash. Sad to see there are no comments though everyone would have read it..

fotoart said...

Thanks Dr.Prakash. I am trying your suggestions to my 9 months old.

R. J. said...

பிரகாஷ் அவர்கள் கட்டுரையின் உள்ளடக்கம் மட்டுமன்றி எழுதும் நடையும் பிரமாதம். உண்மையிலேயே புது பெற்றோர்கள் இதை கண்டிப்பாகப் படிக்கவேண்டும். இந்த கட்டுரைகளை ஆங்கிலத்திலும் பிரகாஷ் எழுதுவாரா? என் பையனுக்கும், நாட்டுப்பெண்ணுக்கும் உடனே அனுப்புவேன். அவர்கள் 2,3 வாரத்திற்கு ஒருமுறை குழந்தையின் போட்டோ / விடியோ ஆல்பம் அனுப்புகிறார்கள். நல்ல பொம்மைகள், கீ போர்ட், புத்தகங்கள் என்று வாங்கிக்கொடுத்தும், வெளியில் பார்க், குழந்தைகள் கூடுமிடம், ம்யுசிக் கிளாஸ் (வாரம் ஒரு முறை) என்று அழைத்துச் செல்கிறார்கள். நான் என் பையன்களை வளர்த்ததைவிட சிறப்பாக என் பேத்தியை (வரும் மே 24, முதல் பிறந்த நாள்!) வளர்க்கிறார்கள் என் பையனும் அவன் மனைவியும். இருந்தும் இந்த கட்டுரைகள் அவர்களுக்கு உதவியாயிருக்கும் - ஆங்கிலத்தில் இருந்தால்! - ஜெ.

டாக்டர்.பிரகாஷ் said...

//இந்த கட்டுரைகளை ஆங்கிலத்திலும் பிரகாஷ் எழுதுவாரா? என் பையனுக்கும், நாட்டுப்பெண்ணுக்கும் உடனே அனுப்புவேன். //

அன்புள்ள R.J அவர்களுக்கு,
தங்கள் ஊக்கத்திற்கு நன்றி. milestogoprakash@gmail.com என்னும் எனது இமெயிலுக்குத் தொடர்பு கொள்ளவும். என்னாலான எல்லா உதவிகளையும் செய்கிறேன். நன்றி.

டாக்டர்.பிரகாஷ் said...

Thanks Prem and fotoart.

R. J. said...

Thak you Dr. Prakash. I had sent the link of this posting to my son already and he tried to get it translated by the Googletranslation and sent me a copy - which made hilarious reading! I am contacting him again and will he definitely will be in touch with you directly. He and his wife, 10 month old daughter are in San Francisco. Thanks again,

R. Jagannathan

Balaji Palamadai said...

இந்த தொடர் முடியும் பொழுது இதை E புத்தகமாக அதாவது PDF கொடுத்தால் எல்லோருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்